வெள்ளி, 23 டிசம்பர், 2016

விதவைத் திருமணம் ஒன்றும் தியாகம் அல்ல!

28.9.1930, குடிஅரசிலிருந்து..

திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களில் ஓர் அம்சமாகிய மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென்பதற்கு முக்கியமாய் வேண்டியது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்துவமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ, அதுபோலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் படவேண்டிய தில்லை.

ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ மனைவியாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ வைப்பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனுபவித்துக் கொண்டிருக் கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வருகின்றதோ அது போலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லு கின்றோமே தவிர மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும் பான்மையான மக்களின் நடப்புக்கு விரோதமான தத்துவங்கள் எதுவும் அதிலில்லை.

நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கமாகும். மற்றொரு வர் அனுபவித்த பெண்ணை அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசைப்படு கிறான்.

அவற்றில் சிலது அனுபவிக்க கிடைத்துவிட்டால் சிலசமயங்களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுபவித்ததாக மகிழ்ச்சிய டைவதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமை யையும் உற்சாகத்தையும் அடைகின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு அளவே இல்லை.

ஆகவே இம்மாதிரி தற்கால அவசியமாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத்தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான்மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை. ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திருமண விஷயத்தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண் ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய் தோன்றாது.

பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவைத் தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்களுக்குச் சுதந் திரம் ஏற்பட்டுவிட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய் விடும். உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை அவர்களுக்குள்ள சுதந்திரத்தினால் தங்களின் அப்படிப்பட்ட ஒரு நிலையைக் காட்ட ஒருபெயரை பழக் கத்தில் கொண்டு வருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள்.

சாதாரணமாக, கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புருஷனை விதவன் என்று கூப்பிட வேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் (Widow Widower) என்கின்ற பதங்கள் இருக்கின்றன. இந்த விடோ என்பதும் விதவை என்பதும் ஒரு சொல் மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வடமொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தை களுக்குள்ள சம்பந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமது புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாததால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூழ்ச்சிதான் விதவைத் தன்மைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம் பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமை யோ ஒன்றுமில்லை.

அன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக்கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ள வர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன்றும்.

தவிரவும் பெண்ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச்சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000ரூ பெறுமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும். தவிரவும் இம்மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.

சாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திர மல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம்கூட சில வகுப்புகளில் இருந்து வருகிறது.

எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம்படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டிமார்கள் சில வகுப்புப் பண்டாரங்கள் என்பவர்கள் சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங் கர்கள், செங்குந்தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத்தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய வகுப்புகளில் சிலவற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன.

ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருதுகின்றார்கள் என்று தெரிந்து விசனிக் கிறேன். சில இடங்களில் அனுபவத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜா நாயுடு என்பது போன்றவைகளில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதை கவனியாமல் இப்போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கிறது. எனது தங்கைப் பெண்ணுக்கு விதவை மணம் செய்யப்பட்டிருக்கின்றது.

ஆகவே இம்மாதிரி மணம் புதியதென்று சொல்லு வதற்கோ, அல்லது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமான தென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதை ஆட்சேபிப்பவர்களை நான் மனிதர்கள் என்றே ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சுயமரியாதை இருக்கும் என்றும் நான் கருதமாட்டேன்.
-விடுதலை,23,12.16

வியாழன், 22 டிசம்பர், 2016

நவம்பர் 13 (பகுத்தறிவுப் பகலவன் 'பெரியார்' என போற்றிடத் தலைப்பட்ட நாள்)


சென்னையில் நவம்பர் 13- 1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றி வந்த சமுதாயப் புரட்சிப் பணிகளால் ஏற்பட்டு வந்த மாற்றங்களைப் போற்றி அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவர் 'பெரியார்' என அழைக்கப்பட வேண்டுமென்று  மாநில பெண்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்றவர்களால் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் மகளார்), மாநாட்டுக் கொடியினை ஏற்றி வைத்தவர் மீனாம்பாள் சிவராஜ், மாநாட்டு திறப்பாளர் பண்டிதை அ.நாராயணி அம்மாள், வரவேற்பு நல்கியவர் வ.பா.தாமரைக் கண்ணியார் (ஜலசாட்சி அம்மையார்). ஈ.வெ.ரா.நாகம்மையார் உருவப்படத்தினை திறந்து வைத்தார் பார்வதி அம்மையார். மாநாட்டு அமைப்பாளர்கள்: டாக்டர் எஸ்.தருமாம்பாள், மலர்முகத் தம்மையார் (புஷ்பவதி), மூவாலூர் ஆ.இராமாமிர்தம் அம்மையார். விளம்பரச் செயலாளர்:  கலைமகளம்மையார் என முழுவதும் பெண்களே ஒருங்கிணைத்து, தமிழ்நாட் டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்து பெண்கள் பங்கேற்ற மாநாடு அது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட

முதல் தீர்மானம்:

“இந்தியாவில் இதுவரை தோன்றின சீர்திருத்த தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமை யாலும், அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங் கும் போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள் கிறது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலம் முழுவதும் நிலைத்து நடைமுறையில் பெரியார் ஈ.வெ.ராமசாமி என மக்களால் பெரிதும் விரும்பி மதிப்புடன் அழைக்கப்படலானார். 1938 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அந்த அருஞ்சிறப்பு, பெரியார் என்றால் அவர்தான் என மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு, கடைப்பிடிக்கப்படும் விரும்பு நிலைக்கு வந்து, பின்னாளில் உலகப் பெரியார் (நிறீஷீதீணீறீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ) என மானுட சமுதாயத்தில் போற்றப்படும் நிலைகள் உருவாகின.

மாநாட்டு தீர்மான வரிகள் சம்பிரதாயம் சார்ந்த சொற்களை உள்ளடக்கியதாக இல்லாமல், கடுமையான சமுதாயப் பணி மற்றும் அதனை ஆற்றிவரும் தலைவர் பற்றிய உண்மை நிலையினை வெளிப் படுத்துவதாக இருந்தது. “இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய வியலாமற்போன வேலைகளைச் செய்த தலைவர் ... அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவர் இல்லை” என்பதையும் ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்து வழங்கப்பட்ட ‘பெரியார்’ என அழைக்கப்படும் சிறப்பு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறை யாக வேண்டும் என்றும் தொலைநோக்குடன் சிந்தித்து தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டினர் வழங்கியது சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாருக்கு  நிலைத்த சிறப்பாக அமைந்துவிட்டது.

எண்ணம், சிந்தனை, அதன் வெளிப்பாடு, செயல் படுத்தும் திண்மை, அமைப்பு ரீதியாக பணியாற்றும் பாங்கு, தனது காலத்தில் துவக்கப்பட்ட சமுதாய மாற்றங்கள் பன்னெடுங்காலம் தேவைப்படும் எனக்கருதி அதற்கா கவே அமைப்பினை உருவாக்கி தனது காலத்திற்குப் பின்பும் புரட்சிக் கருத்துகள் சென்றடைய வேண்டும் என நினைத்து அடித்தளமிட்ட நடைமுறை, அறிவார்ந்த அணுகுமுறை - என இப்படி சமுதாயப் பணி ஆற்றுவதில் உள்ள பல்வேறு தளங்கள் மற்றும் கட்டங்கள் என வகைப்படுத்தி சமுதாய முன்னேற்றத்திற்கு வாழ்ந்த  எந்தத் தலைவரையும் பெரியாரைப் போல பார்த்திடல் இயலாது. சுய சிந்தனையாளராக வாழ்ந்தவர். அவர்தம் சிந்தனை விளைத்த கொள்கையால் இன்றும் வாழ்ந்து வருபவர் பெரியார்.

சமுதாயப் பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்ததாக இருந்தாலும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடி வந்தாலும், உலகம் முழுவதும் உள்ள மானிடர் மேம்பாட்டுக்கு பொருந்துகின்ற வகையில் பகுத்தறிவு,  சுயமரியாதை எனும் அடிப்படைக் கட்டுமானத்தில் தனது கொள்கைகள், மற்றும் அணுகு முறைகளை கட்டி எழுப்பினார் பெரியார்; ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பியவர் பெரியார்.

“நாதியிலார் நாதி பெற நாப்படைத்தார்
நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வு தரப் பிறந்து வந்தார்
பிறப்பினிலே பெரியாராய்த் தான் பிறந்தார்”

எனும் கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் காலம் முழுவதும் அழியாது நிலைத்திருக்கும் கல்வெட்டு கள்!

பெரியாரின் வானொலி பேட்டி கருத்துச் செறிவானது; சிறப்புப் பெருமை மிக்கது. பேட்டி தொடங்கும் பொழுது, பேட்டி எடுப்பவர் தந்தை பெரியாரை நோக்கி தமது கேள்வியினை ஆரம்பிக்கும் முன்பாக, முகவுரையாக பெரியாரைப் பற்றி ஒரு குறிப்பாக வெளிப்படுத்துகிறார்.

“அய்யா, நீங்க இந்த சமுதாயத்திற்கு - எவ்வளவோ கடுமையான பணிகளை - பேச்சில், எழுத்தில் சொல்லி முடிக்க முடியாத அரும்பணிகளைச் செய்திருக்கிறீங்க; இப்படிப்பட்ட சமுதாயப் பணியினை நீங்கள் செய்திருக் கின்றீர்கள் என குறிப்பிட்டுச் சொல்லுவதற்கே ஓரளவு சமுதாயப் பணி ஆற்றிய தகுதி வேண்டும். எல்லோராலும், ‘நீங்கள் சமுதாயப்பணி ஆற்றி வருகிறீர்கள்!’ என சொல்லி விட முடியாது; எங்களை போன்ற சாதாரணமானவர் களால் உங்களுடைய சமுதாய பணியினை பாராட்டிச் சொல்ல தகுதி கிடையாது” என ஆரம்பித்த வேளையில், தந்தை பெரியார் குறுக்கிட்டு, “அப்படி யெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! அய்யா என்றால் உங்க ளுக்கு எல்லாம் அளவு கடந்த அன்பு இருக்கிறது; அதனால்தான் இப்படிச் சொல்லுகிறீர்கள்!” என மிகவும் அடக்கமாக எளிமையாக பதிலளித்தார். பின்னர் பேட்டி தொடங்கிய தாம்.

தான் செய்த பணிகளுக்கு அங்கீகாரம் வேண்டாத, பாராட்டு விரும்பாத, மானுடப்பற்றை தவிர எந்தப் பற்றும் இல்லாத புரட்சியாளர் தந்தை பெரியார்.

கருத்திலே ஆழம், சிந்தனையில் தெளிவு, வெளிப்படுத்துவதில் எளிமை - இம்மூன்றும் கலந்த தலைமைப்பண்பு வாய்க்கப்பெற்றவர் பெரியார். பெண் உரிமை பற்றி விரிவாக பேசிய அறிஞர் பெருமக்கள் உண்டு; அதனை நடைமுறைப்படுத்த அவர்கள் ஆசைப் பட்டதும் உண்டு. ஆனால் கருத்தோடு நடைமுறைப்படுத் திடும் துணிச்சல், ஆற்றல் பெரியாரிடம் தான்இருந்தது. ஊருக்கு உரிமை பற்றி பேசிய தலைவர்களிடையே, பெண் விடுதலையில், விதவை மறுமணம் பற்றிப் பேசி தனது குடும்பத்திலேயே தனது குடும்பத்தார் எதிர்ப்பினையும் எதிர்பார்த்து மீறி, சரியான அணுமுமுறையினைக் கொண்டு சிறுவயதில் விதவையான தனது தங்கை மக ளுக்கு மறுமணம் செய்துவைத்த புரட்சியாளர் பெரியார்.

பெண்ணுக்கு என்னென்ன உரிமை வேண்டும்? என பெரியாரிடம் கேட்டு, பல உரிமைகளை விரிவாக எடுத்துரைப்பார் என கேட்டவர் எதிர்பார்த்த வேளையில் “பெண்ணுக்கு அதிகமாக உரிமை எதுவும் வேண்டாம்; ஆணுக்குள்ள உரிமைகள் மட்டும் போதும்” என எளிமை யாக, கடல் நீரையே ஒரு சங்குக்குள் அடைத்துவிடும் உறுதிப்பாட்டுடன் வெளிப்படுத்தியவிதம் உலகில் ஒப்பு வமை இல்லாதது.

சிறப்புப் பெயர் வழங்கப்பட்டோர் மிகப்பலருக்கும், அந்தச் சிறப்பு எண்ணிக்கையில் ஒன்றாக அடங்கிவிடும். ஒரு மொழி பேசும் மக்கள் மட்டுமே உச்சரிக்கும் தன்மை வாய்ந்ததாகக் குறுகிவிடும். ஆனால் பகுத்தறிவு பகலவ னுக்கு வழங்கப்பட்ட 'பெரியார்' எனும் சிறப்புப் பெயர், மொழிப்பகுதி, நிலப் பரப்பு, பண்பாட்டு எல்லைகளை தாண்டி அனைத்து மக்களாலும் எளிதில் உச்சரிக்கும் வகையில் - எப்படி பெரியாரது கொள்கைகள் இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையோ - உலகளாவிய நடைமுறை பயன்பாட்டுடன் எளிமையாகவும் இருப்பதால் ‘பெரியார்’ எனும் சிறப்புப் பெயருக்கு சிறப்புச் செய்வதாக விளங்குகிறது.

மண்டை சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்

எனும் புரட்சிக் கவிஞரின் வரிகள் உலகப்பெரியாரது கொள்கை வீச்சுப் பரப்பின் பெருமையினை பறைசாற்று கிறது.
உலகளாவிய அமைப்பான அய்க்கிய நாடுகள் சங்கத்தின் அங்கமான யுனெஸ்கோ (UNESCO) அளித்த சிறப்புப் பட்டயத்தின் வரிகளான.....

“Periyar the prophet of New Age,
Socrates of South East Asia,
Father of the social Reform Movement,
and Arch enemy of ignorance, superstitions,
meaningless customs and base manners”

புதிய உலகின் தொலை நோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
அறியாமை, மூடநம்பிக்கை,
பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும்
கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி

பெரியாரது கருத்துகள் உலகம் தழுவியவை. உலக மக்கள் உயர்ந்திடப் பயன்படுபவை. மானுடம் போற்றிடும் மகத்துவத்திற்கு உரியவை என்பது முன்கூட்டியே கணிக் கப்பட்டது.

தொலைநோக்குடன் தமிழ்நாட்டுப் பெண்கள், 75 ஆண்டுகளுக்கு முன்னர் மாநாடு கூட்டி அய்யாவிற்கு வழங்கிய ‘பெரியார்’ எனும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்ட நாள் நவம்பர் 13; தந்தை பெரியாரது வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடை பெற்ற நாள்கள் கொள்கைப் பரவலுக்காக இயக்கத்தால் கொண்டாடப்பட்டு வருகின்றன. தந்தை பெரியாரது கொள்கைகள் உலகிற்கே உரிமையாகி பெரியார் உலகமயமாகி (Globalization of Periyar) வரும் வேளையில் ‘நவம்பர் 13’, உலகம் தழுவிய அளவில் கொள்கைப் பரவலுக்கான கொண்டாட்ட நாளாக  கருதப்பட வேண்டும்; கருத்துப் பரவல் பலப்பட வேண்டும்; அதன் மூலம் மானுடம் உயர்ந்திட வேண்டும்.
- ஆய்வன்
-விடுதலை,12.11.16

புதன், 21 டிசம்பர், 2016

குடிஅரசும் - திராவிட நாடும்


- தந்தை பெரியார்


"குடிஅரசு" பத்திரிகைக்கு இது இரண்டாவது வாரம், வயதோ பதினெட்டாவது - மக்களோ வெகு ஆவலாய் வரவேற்கிறார்கள். மத்தியில் இரண்டு வருஷ காலம் குடிஅரசு நிறுத்தப்பட்டுப் போனதைப் பற்றிப் பெரியாரைக் குறை கூறாத தமிழ் மக்கள் நாட்டில் இல்லை. சென்ற வாரம் அனுப்பிய முதல் இதழைப் பெற்ற உடன் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்தினவர்களும், போற்றினவர் களும், ஆனந்தக் கூத்தாடினவர்களும், புது சந்தா சேர்த்து தாங்களாகவே பணம் அனுப்பிவிட்டு, இன்ன இன்னாருக்கு ஒரு வருஷத்துக்கு ஆறுமாதத்திற்கு பத்திரிகை அனுப் புங்கள் என்று எழுதினவர்களும் ஏஜெண்டுகளில் மறுபடியும் இதே வாரக் காப்பி 100 அனுப்புங்கள், 60 காப்பி அனுப்புங்கள், 10 காப்பி அனுங்கள், 4 காப்பி அனுப்புங்கள் என்று எழுதினவர்களும், "குடிஅரசு" வெளியான சேதி அறிந்து தந்தி மணியார்டர் அனுப்பியவர்களும் ஆன தமிழ்மக்களின் எண்ணிக்கையையும் பெயரையும் வெளிப் படுத்தினால் மிகைப்படுத்திக் கூறுவதாகவே சில மக்கள் கருதுவார்கள். அவர்கள் எப்படியோ கருதிக்கொண்டு போகட்டும்.

"குடிஅரசு"க்கு இத்தனை வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏன்? எதற்கு ஆக? அதன் பாஷைக்கு ஆகவா? எழுத் துக்கு ஆகவா? இலக்கணப் பிழையற்ற தமிழுக்கு ஆகவா? யாரையும் குற்றம் குறை கூறாமல், துவேஷம் வெறுப்பு இல்லாத சாந்த குணத்தோடு வெளிவருவதற்கு ஆகவா? அல்லது பல பேர் அதைப் பற்றி விளம்பரம் செய்து ஆதரிக்கும் தன்மைக்கு ஆகவா? அல்லது நம்மிடம் இருக்கும் நல்ல எண்ணத்திற்கு ஆகவா? இவைகளில் ஒன்றும் இல்லை என்பது நமக்கு நன்றாத் தெரியும். 

தனித்தமிழ் பாஷைக்குக் "குடிஅரசு" போராடுகிறது. ஆனால், "குடிஅரசு" போல் "பாஷா மாலிகை" உள்ள பத்திரிகையை நாம் பார்த்ததில்லை. "சுதேசமித்திரன்" தமிழ் நம்மைவிட எத்தனையோ பங்கு மேலான தமிழ் என்றே சொல்லலாம். ஏன் எனில் அதற்கு வடமொழியைப் புகுத்துவதில்தான் கவலை. இலக்கணத்தைப் பற்றியோ வென்றால், "இலக்கணக்காரர்களுக்கு இங்கு வேலை இல்லை" என்பதுதான் "குடிஅரசி"ன் "மோட்டோ", சேதி களோ பெரும்பாலோர் காதுக்கு வேதனையைக் கொடுக் கும் குடைச்சல் உள்ளது. இப்படி இன்னும் பல குற்றங் களுடன் நடைபெற்ற, நடைபெறுகிற, நடக்கப்போகிற "குடிஅரசு"க்கு இவ்வளவு கிராக்கி என்னவென்றால், மேற்கூறிய இத்தனை குறைகளையும் லட்சியம் செய்யாமல் "குடிஅரசில் வரும் சேதி உண்மையானது. ஆதாரத்தோடு கூடியது" என்கின்ற நம்பிக்கையும் நாணயமும்தான். அதோடு உலகம் "குடிஅரசை" எதிர்பார்க்கிறது. அதாவது தமிழ் உலகம் புரட்சியை நோக்குகிறது. புரட்சிப்பக்கம் திரும்பி விட்டது. அதனால் "குடிஅரசி"ல் என்ன குற்றம் இருந்தாலும் வெளியில் சொல்ல தைரியமில்லை. ஏன் குற்றம் சொன்னால் உண்மையாகி விடுமே என்கின்ற பயம். சிலருக்கு அதில் உள்ள ஆவலினால் குற்றம் தெரிவதே இல்லை. வாலிப உலகம் "குடிஅரசி"ன் மீது கள்ளக் காதல் கொண்டு விட்டது; பெற்றோர் உலகத்தால் அடக்க முடியாத காதல் வாலிபர் உள்ளத்தில் ஊன்றி விட்டது. நமக்கு வேண்டியது இவ்வளவுதான். நம் உழைப்புக்குக் கூலியும் இவ்வளவே போதும். 

"குடிஅரசு" நின்றிருந்த காலத்தில் (அது நிற்கவில்லை வேறு பெயரோடு இருக்கிறேன்என்று கர்ஜித்து மார்பு தட்டி துணிச்சலோடு) "குடிஅரசி"ன் தொண்டை ஆற்றி வந்தது "திராவிட நாடு" பத்திரிகையாகும்.

"குடிஅரசு" ஆரம்பமானவுடன், இன்று அதன் தொண் டுக்கு அதாவது சுயமரியாதை இயக்கத்துக்கு "குடிஅரசு", "திராவிட நாடு" என்கின்ற இரண்டு பத்திரிகைகள் இரட்டையர்கள்போல் ஆகிவிட்டன.

தமிழ்நாடு இந்தத் தொண்டு செய்யும், அதாவது சுயமரி யாதைத் தொண்டு செய்யும் இரண்டு பத்திரிக்கைகளை அதுவும் இரண்டு வாரப் பத்திரிகைகளைத் தாங்க முடியாது என்று யாராலும் சொல்லமுடியாது. தமிழர்களும் இன்று உள்ள நிலையில் இந்த இரண்டு பத்திரிக்கைகளை ஆத ரிக்க முடியாது என்றும் சொல்லி விட முடியாது. அப்படி யாராவது முடியாது என்று சொல்லுவாரானால், அப்படிப் பட்டவரால் எதுவும் முடியாது என்றுதான் அருத்தமாகும். 

இரண்டுக்கும் குறுக்கே இருக்கும், அல்லது இரண்டி னாலும் வயிறுவளர்க்கப் பார்க்கும் தானாவதிகள், விஷமத் தனம் செய்யாமல் இருக்கவேண்டியதும் அப்படிப்பட்டவர்க ளுக்கு இரு பத்திரிகைக்காரர்களும், வாசகர்களும் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டியதும் முக்கியமான காரிய மாகும். அதோடு, அப்படிப்பட்டவர்கள் விஷமத்தனத்துக்கு பொது மக்களும் காது கொடுக்காமல் இருக்கவேண்டியது அதைவிட முக்கியமான காரியமாகும். 

தமிழ்நாட்டில் இச்சுயமரியாதைக் கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட அநேக பத்திரிகைகள், எவ்வளவோ பண உதவி பெற்றும் கஷ்டப்பட நேர்ந்தன. பல நின்றே போய் விட்டன. ஈரோட்டில் மாத்திரம் 3,4 பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு நின்று போய் விட்டன. மற்றபடியும் பல ஊர்களிலும் அப்படியே ஆயின. இனி, சுயமரியாதைப் பத்திரிகைகள் பெருகியே ஆகவேண்டும். தமிழ்நாடு நன்றாக பண்பட்டிருக்கிறது. இதில் முளைக்கும் சுயமரி யாதைப்பயிரை இனிக் காயவிடக்கூடாது என்பது நமது எல்லையற்ற ஆசை. இனி பத்திரிகை துவக்குகிறவர்களும் கவலையோடும், நாணயத்தோடும், உண்மையான உணர்ச்சியோடும், தகுந்த அஸதிவாரத்தோடும் துவக்க வேண்டும். ஜீவனத்துக்கும், பண வசூலுக்கும், மக்களை ஏய்ப்பதற்கும் பத்திரிகை துவக்குவது இயக்கத்திற்குக் கேடு செய்வதாகும். தங்கள் ஜீவனமே பெரிதென்பவர்கள் தயவு செய்து வேறு வேலையை வேறு இயக்கத்தின் பேரால் செய்யப்படும். இவை சம்மந்தப்பட்ட ஏஜண்டுகளும் சற்று கவலையுடன் யோக்கியமாய் நடந்து கொள்ளவேண்டும். ஒன்றை ஒன்று குறைகூறும் படியான வழியில் நடந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

ஏஜண்டுகள் "குடிஅரசை" வலுக்கட்டாயத்தின்மீது "திராவிடநாடு" சந்தாதாரர்களுக்குப் போடக் கூடாது. இரண்டையும் ஆதரிக்கச் சக்தி உள்ள வாசகர்கள் கண்டிப்பாய் இரண்டையும் ஆதரிக்க வேண்டியது தமிழ் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமையான தொண்டு ஆகும். இந்தப் பத்திரிகைகள் இரண்டும் இல்லாவிட்டால் இன்று தமிழர்களுக்கு சமுதாயத் துறையிலோ, அரசியல் துறையிலோ வேறு வேலை என்ன இருக்கிறது? தமிழர் களுக்கு இந்த இரண்டு பத்திரிகையையும் ஆதரிப்பதைவிட அவர்கள செய்யும் வேறு வேலைதான் என்ன? என்றும் கேட்கிறோம். பண உதவி செய்துவிடுவதே போதுமானதாகி விடாது. ஒவ்வொரு ஊரிலும், கிராமத்திலும் இந்தப் பத்திரிகைகள் வருகிறதா? படிக்கப்படுகிறதா? என்பது தான் மிக மிக முக்கியமானது. ஆகையால் பணக்காரர்களும், முக்கியஸ்தர்களும் அதை முதலில் கவனித்து பிறகு கூடுமான பண உதவி செய்யட்டும். 

அரசியலில் பதவி பெற மோகமுள்ளவர்கள் இப்பத்திரி கைகளை அலட்சியமாய்க் கருதுவார்கள் என்பதும், இதை கேவலமாய்ப் பேசுவார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இப்படி எத்தனையோபேர்களும், அவர்களது கூலிகளும் பேசி ஆய்விட்டது. இனி பேசுகிறவர்கள் லட்சத்து ஒண்ணாவது பேர்களிலேதான் சேருவார்கள. தாசிகளும், வேசிகளும், பதவி மோகக்காரர்களும் ஒன்று என்பதே நமது அபிப் பிராயம். அப்படிப்பட்ட அவர்களது அன்புக்கும் வெறுப் புக்கும் அர்த்தமே இல்லை.

நம்மவர்களைப் பிடித்த பதவி மோகம்தான் நம் சமு தாயத்தை இன்னமும் சூத்திரனாக, தாசி வேசி மகனாக, கீழ்ஜாதியாக வைத்து இருப்பதோடு நம்மவர்களில் அநேகரைத் திருட்டுத்தனமாகவாவது பார்ப்பனர்களின் கால் பெருவிரலை சப்பும்படி செய்து வருகிறது. அது தமிழனில் ஒரு கூட்டத்துக்கு பிறவிக்குணமாக வெகு காலமாக இருந்து வருகிறது. அதை நம் காலத்திலேயே மாற்ற வேண்டும்; அதற்கு வ்ணடிய அளவு துணிவும் நமக்கு வேண்டும். அத்துணிவு வரவேண்டுமானால் நம்மிலாவது ஒற்றுமை வேண்டும். இதை அறிந்து நடந்து கொள்வேண்டியது  நம்முடையவும் ஏஜண்டுகளுடையவும் மற்றும் ஆங்காங்குள்ள நம் தொண்டர்களுடையவும் முக்கிய கடமை என்பனவற்றைத்தெரிவித்துக் கொண்டு, தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இந்த இரண்டு பத்திரிகை களையும் அவசியம் ஆதரிக்க வேண்டுமென்று மறுபடியும் வேண்டிக் கொள்ளுகிறோம். 
குடிஅரசு - தலையங்கம் - 23-10-1943

-விடுதலை,26.6.16