சென்னையில் நவம்பர் 13- 1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றி வந்த சமுதாயப் புரட்சிப் பணிகளால் ஏற்பட்டு வந்த மாற்றங்களைப் போற்றி அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவர் 'பெரியார்' என அழைக்கப்பட வேண்டுமென்று மாநில பெண்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்றவர்களால் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் மகளார்), மாநாட்டுக் கொடியினை ஏற்றி வைத்தவர் மீனாம்பாள் சிவராஜ், மாநாட்டு திறப்பாளர் பண்டிதை அ.நாராயணி அம்மாள், வரவேற்பு நல்கியவர் வ.பா.தாமரைக் கண்ணியார் (ஜலசாட்சி அம்மையார்). ஈ.வெ.ரா.நாகம்மையார் உருவப்படத்தினை திறந்து வைத்தார் பார்வதி அம்மையார். மாநாட்டு அமைப்பாளர்கள்: டாக்டர் எஸ்.தருமாம்பாள், மலர்முகத் தம்மையார் (புஷ்பவதி), மூவாலூர் ஆ.இராமாமிர்தம் அம்மையார். விளம்பரச் செயலாளர்: கலைமகளம்மையார் என முழுவதும் பெண்களே ஒருங்கிணைத்து, தமிழ்நாட் டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்து பெண்கள் பங்கேற்ற மாநாடு அது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
முதல் தீர்மானம்:
“இந்தியாவில் இதுவரை தோன்றின சீர்திருத்த தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமை யாலும், அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங் கும் போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள் கிறது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலம் முழுவதும் நிலைத்து நடைமுறையில் பெரியார் ஈ.வெ.ராமசாமி என மக்களால் பெரிதும் விரும்பி மதிப்புடன் அழைக்கப்படலானார். 1938 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அந்த அருஞ்சிறப்பு, பெரியார் என்றால் அவர்தான் என மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு, கடைப்பிடிக்கப்படும் விரும்பு நிலைக்கு வந்து, பின்னாளில் உலகப் பெரியார் (நிறீஷீதீணீறீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ) என மானுட சமுதாயத்தில் போற்றப்படும் நிலைகள் உருவாகின.
மாநாட்டு தீர்மான வரிகள் சம்பிரதாயம் சார்ந்த சொற்களை உள்ளடக்கியதாக இல்லாமல், கடுமையான சமுதாயப் பணி மற்றும் அதனை ஆற்றிவரும் தலைவர் பற்றிய உண்மை நிலையினை வெளிப் படுத்துவதாக இருந்தது. “இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய வியலாமற்போன வேலைகளைச் செய்த தலைவர் ... அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவர் இல்லை” என்பதையும் ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்து வழங்கப்பட்ட ‘பெரியார்’ என அழைக்கப்படும் சிறப்பு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறை யாக வேண்டும் என்றும் தொலைநோக்குடன் சிந்தித்து தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டினர் வழங்கியது சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாருக்கு நிலைத்த சிறப்பாக அமைந்துவிட்டது.
எண்ணம், சிந்தனை, அதன் வெளிப்பாடு, செயல் படுத்தும் திண்மை, அமைப்பு ரீதியாக பணியாற்றும் பாங்கு, தனது காலத்தில் துவக்கப்பட்ட சமுதாய மாற்றங்கள் பன்னெடுங்காலம் தேவைப்படும் எனக்கருதி அதற்கா கவே அமைப்பினை உருவாக்கி தனது காலத்திற்குப் பின்பும் புரட்சிக் கருத்துகள் சென்றடைய வேண்டும் என நினைத்து அடித்தளமிட்ட நடைமுறை, அறிவார்ந்த அணுகுமுறை - என இப்படி சமுதாயப் பணி ஆற்றுவதில் உள்ள பல்வேறு தளங்கள் மற்றும் கட்டங்கள் என வகைப்படுத்தி சமுதாய முன்னேற்றத்திற்கு வாழ்ந்த எந்தத் தலைவரையும் பெரியாரைப் போல பார்த்திடல் இயலாது. சுய சிந்தனையாளராக வாழ்ந்தவர். அவர்தம் சிந்தனை விளைத்த கொள்கையால் இன்றும் வாழ்ந்து வருபவர் பெரியார்.
சமுதாயப் பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்ததாக இருந்தாலும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடி வந்தாலும், உலகம் முழுவதும் உள்ள மானிடர் மேம்பாட்டுக்கு பொருந்துகின்ற வகையில் பகுத்தறிவு, சுயமரியாதை எனும் அடிப்படைக் கட்டுமானத்தில் தனது கொள்கைகள், மற்றும் அணுகு முறைகளை கட்டி எழுப்பினார் பெரியார்; ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பியவர் பெரியார்.
“நாதியிலார் நாதி பெற நாப்படைத்தார்
நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வு தரப் பிறந்து வந்தார்
பிறப்பினிலே பெரியாராய்த் தான் பிறந்தார்”
எனும் கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் காலம் முழுவதும் அழியாது நிலைத்திருக்கும் கல்வெட்டு கள்!
பெரியாரின் வானொலி பேட்டி கருத்துச் செறிவானது; சிறப்புப் பெருமை மிக்கது. பேட்டி தொடங்கும் பொழுது, பேட்டி எடுப்பவர் தந்தை பெரியாரை நோக்கி தமது கேள்வியினை ஆரம்பிக்கும் முன்பாக, முகவுரையாக பெரியாரைப் பற்றி ஒரு குறிப்பாக வெளிப்படுத்துகிறார்.
“அய்யா, நீங்க இந்த சமுதாயத்திற்கு - எவ்வளவோ கடுமையான பணிகளை - பேச்சில், எழுத்தில் சொல்லி முடிக்க முடியாத அரும்பணிகளைச் செய்திருக்கிறீங்க; இப்படிப்பட்ட சமுதாயப் பணியினை நீங்கள் செய்திருக் கின்றீர்கள் என குறிப்பிட்டுச் சொல்லுவதற்கே ஓரளவு சமுதாயப் பணி ஆற்றிய தகுதி வேண்டும். எல்லோராலும், ‘நீங்கள் சமுதாயப்பணி ஆற்றி வருகிறீர்கள்!’ என சொல்லி விட முடியாது; எங்களை போன்ற சாதாரணமானவர் களால் உங்களுடைய சமுதாய பணியினை பாராட்டிச் சொல்ல தகுதி கிடையாது” என ஆரம்பித்த வேளையில், தந்தை பெரியார் குறுக்கிட்டு, “அப்படி யெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! அய்யா என்றால் உங்க ளுக்கு எல்லாம் அளவு கடந்த அன்பு இருக்கிறது; அதனால்தான் இப்படிச் சொல்லுகிறீர்கள்!” என மிகவும் அடக்கமாக எளிமையாக பதிலளித்தார். பின்னர் பேட்டி தொடங்கிய தாம்.
தான் செய்த பணிகளுக்கு அங்கீகாரம் வேண்டாத, பாராட்டு விரும்பாத, மானுடப்பற்றை தவிர எந்தப் பற்றும் இல்லாத புரட்சியாளர் தந்தை பெரியார்.
கருத்திலே ஆழம், சிந்தனையில் தெளிவு, வெளிப்படுத்துவதில் எளிமை - இம்மூன்றும் கலந்த தலைமைப்பண்பு வாய்க்கப்பெற்றவர் பெரியார். பெண் உரிமை பற்றி விரிவாக பேசிய அறிஞர் பெருமக்கள் உண்டு; அதனை நடைமுறைப்படுத்த அவர்கள் ஆசைப் பட்டதும் உண்டு. ஆனால் கருத்தோடு நடைமுறைப்படுத் திடும் துணிச்சல், ஆற்றல் பெரியாரிடம் தான்இருந்தது. ஊருக்கு உரிமை பற்றி பேசிய தலைவர்களிடையே, பெண் விடுதலையில், விதவை மறுமணம் பற்றிப் பேசி தனது குடும்பத்திலேயே தனது குடும்பத்தார் எதிர்ப்பினையும் எதிர்பார்த்து மீறி, சரியான அணுமுமுறையினைக் கொண்டு சிறுவயதில் விதவையான தனது தங்கை மக ளுக்கு மறுமணம் செய்துவைத்த புரட்சியாளர் பெரியார்.
பெண்ணுக்கு என்னென்ன உரிமை வேண்டும்? என பெரியாரிடம் கேட்டு, பல உரிமைகளை விரிவாக எடுத்துரைப்பார் என கேட்டவர் எதிர்பார்த்த வேளையில் “பெண்ணுக்கு அதிகமாக உரிமை எதுவும் வேண்டாம்; ஆணுக்குள்ள உரிமைகள் மட்டும் போதும்” என எளிமை யாக, கடல் நீரையே ஒரு சங்குக்குள் அடைத்துவிடும் உறுதிப்பாட்டுடன் வெளிப்படுத்தியவிதம் உலகில் ஒப்பு வமை இல்லாதது.
சிறப்புப் பெயர் வழங்கப்பட்டோர் மிகப்பலருக்கும், அந்தச் சிறப்பு எண்ணிக்கையில் ஒன்றாக அடங்கிவிடும். ஒரு மொழி பேசும் மக்கள் மட்டுமே உச்சரிக்கும் தன்மை வாய்ந்ததாகக் குறுகிவிடும். ஆனால் பகுத்தறிவு பகலவ னுக்கு வழங்கப்பட்ட 'பெரியார்' எனும் சிறப்புப் பெயர், மொழிப்பகுதி, நிலப் பரப்பு, பண்பாட்டு எல்லைகளை தாண்டி அனைத்து மக்களாலும் எளிதில் உச்சரிக்கும் வகையில் - எப்படி பெரியாரது கொள்கைகள் இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையோ - உலகளாவிய நடைமுறை பயன்பாட்டுடன் எளிமையாகவும் இருப்பதால் ‘பெரியார்’ எனும் சிறப்புப் பெயருக்கு சிறப்புச் செய்வதாக விளங்குகிறது.
மண்டை சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
எனும் புரட்சிக் கவிஞரின் வரிகள் உலகப்பெரியாரது கொள்கை வீச்சுப் பரப்பின் பெருமையினை பறைசாற்று கிறது.
உலகளாவிய அமைப்பான அய்க்கிய நாடுகள் சங்கத்தின் அங்கமான யுனெஸ்கோ (UNESCO) அளித்த சிறப்புப் பட்டயத்தின் வரிகளான.....
“Periyar the prophet of New Age,
Socrates of South East Asia,
Father of the social Reform Movement,
and Arch enemy of ignorance, superstitions,
meaningless customs and base manners”
புதிய உலகின் தொலை நோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
அறியாமை, மூடநம்பிக்கை,
பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும்
கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி
பெரியாரது கருத்துகள் உலகம் தழுவியவை. உலக மக்கள் உயர்ந்திடப் பயன்படுபவை. மானுடம் போற்றிடும் மகத்துவத்திற்கு உரியவை என்பது முன்கூட்டியே கணிக் கப்பட்டது.
தொலைநோக்குடன் தமிழ்நாட்டுப் பெண்கள், 75 ஆண்டுகளுக்கு முன்னர் மாநாடு கூட்டி அய்யாவிற்கு வழங்கிய ‘பெரியார்’ எனும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்ட நாள் நவம்பர் 13; தந்தை பெரியாரது வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடை பெற்ற நாள்கள் கொள்கைப் பரவலுக்காக இயக்கத்தால் கொண்டாடப்பட்டு வருகின்றன. தந்தை பெரியாரது கொள்கைகள் உலகிற்கே உரிமையாகி பெரியார் உலகமயமாகி (Globalization of Periyar) வரும் வேளையில் ‘நவம்பர் 13’, உலகம் தழுவிய அளவில் கொள்கைப் பரவலுக்கான கொண்டாட்ட நாளாக கருதப்பட வேண்டும்; கருத்துப் பரவல் பலப்பட வேண்டும்; அதன் மூலம் மானுடம் உயர்ந்திட வேண்டும்.
- ஆய்வன்
-விடுதலை,12.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக