ஞாயிறு, 8 அக்டோபர், 2017

தீபாவளி பண்டிகை


இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப் போகின்றீர்களா?  என்பதுதான் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவ மின்றி, சுயமரியாதை உணர்ச்சி யின்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களே யல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்ற தான வியாதிக்கு இடங்கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப் பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே அல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார் களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞான மற்று, மானமற்று, கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக் கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லா ருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள். இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனி தர்கள் புராணப் புரட்டை உணர்ந்த வர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!

இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள். எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய் தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்த வர்களாவீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிர யோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லி விட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப் பனரல்லாத மக்களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொது வாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண் டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற் கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ் வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்கு வதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவா கின்றது என்பதும், அதற்காகக் கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங் களொருபுறமிருந்தாலும், மற்றும் இவைகளுக்கெல் லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண் டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிது கூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்தி வாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத் தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்கமுடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங் கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ் விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக் கொண்டாய்விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ் வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வ தென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்திய பாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை யிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதா வது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண் டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென்றும், கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிர சண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளைமாடு கண்ணு (கன்றுக்குட்டி) போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டடத்தில் கட்டிப் பால் கறந்து வா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கிறோமேயொழிய காளை மாடு எப்படி கண்ணு போடும் என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரி யான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட,  பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும். பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங்களில் அதிகமாகவும். மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண் டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக. ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர் களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூடபக்தி யாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண் மூடி வழக் கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன் றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் கதாகாலட்சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக் கும் திராவிடர்களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பன ரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள், பணக்காரர்கள் உத்தி யோகஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத் தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரச்சாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திரா விடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின் றோம்.

'குடிஅரசு' - கட்டுரை - 16-10-1938

-விடுதலை, 8.10.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

தரணி போற்றும் தன்மானச் சூரியன் தந்தை பெரியார்!



அறியாமை, மூடநம்பிக்கை இவற்றின் காரணமாக பிறவி இழிவாளர்களாகக் கிடந்த நமது சமுதாயத்தைத் தட்டி யெழுப்பி, நீண்ட உறக்கத்திலிருந்து அதனை விழிப்புறச் செய்த பெருமை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளரும், புரட்சி மேதையுமான தந்தை பெரியார் அவர்களையே சாரும் என்பதை உணராத, ஒப்புக் கொள்ளாதவர்களே இல்லை எனலாம்.
தந்தை பெரியார் அவர்கள் உலகத்தின் ஒப்பற்ற சிந்தனையாளர் ஆவார்.

உலகின் மற்ற பெரும் பெரும் சிந்தனையாளர்கள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கல்வியை முன்னுரையாகக் கொண்டு, அடியெடுத்துக் கொடுக்கும் ஆதாரமாய்க் கொண்டுதான் தமது சிந்தனைகளை வளப்படுத்திக் கொண்டு, பிறகு அதனை மனிதகுலம் மேம்பாடு காணுவதற்காகப் பொதுச் சொத்தாக ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்களோ, மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்கியதில்லை. அதனால் வழக்கமான ஏட்டுச் சுரைக்காய் கல்வி பலரைக் கோழையாக்கியுள்ளதைப் போல, கண்ட கசுமாலங்களையும் குப்பைகளையும் போட்டு சிந்தனையின் சுதந்திர ஓட்டத்திற்குத் தடையேற்படுத்தும் அவல நிலை அய்யா அவர்களுக்கு ஏற்பட்டதில்லை.

காலஞ்சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு. ஏ.எஸ்.பி. அய்யர் அய்.சி.எஸ். அவர்கள், சென்னை சட்டக் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தவிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய முன்னுரையில்,

“கீழை நாடுகளைப்பற்றி பெர்ட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும்போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிடுவதில் மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன் வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்’’ என்று குறிப்பிட்டார்! 

2. மனித சமுதாயத் தொண்டு ஒன்றினையே மய்யமாகக் கொண்டு அதற்குத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டதோடு, அதற்காக தனது உடல், பொருள், உயிர் அத்தனையையும் இறுதிமூச்சுள்ளவரை ஒப்படைத்தவர் அய்யாவைத் தவிர வேறு எவர் உண்டு! 
எல்லா மக்களுக்கும் சுயமரியாதை வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்
நாங்கள் கல்லைத் தூக்கி எறிகிறவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. எங்களுடைய பணி நன்றி பாராட்டாத பணி. அதைவிட மிக முக்கியம் - எல்லா மக்களுக்கும் சுயமரியாதை வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

“மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்று சுட்டிக்காட்டிய தந்தை பெரியார், இந்த இயக்கப் பணியைச் செய்கின்றபொழுது நாங்கள் மானம் பாராத தொண்டர்கள் என்று  மகிழ்ச்சி கொண்டார்கள்.

உலகத்தில் வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத _ நன்றி பாராட்டாத பணி. புகழை எதிர்நோக்காத பணி _- மிக ஆழமான பணி. பெரியார் அவர்கள் ஒரு வித்தியாசமான தலைவர்.
ஆனால், அவர் தொண்டர்கள் நன்றி மிக்கவர்கள். எடுத்துக்காட்டாக:-_

கழகத் தோழர்களின் உணர்ச்சிபூர்வமான ஒரு கடிதம்!

திடீரென்று இரண்டு பேர் வந்திருந்தார்கள். தங்கமணி _- தனலட்சுமி ஆகியோர் 26 ஆண்டுகளாக வாழ்விணையர். அந்த அம்மையார் அரசாங்க அதிகாரியாக இருக்கிறார். ஒரு நாள் என்னுடைய அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தார்.

என்னம்மா, புறப்படுவதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா? என்று நான் அவர்களைப் பார்த்து கேட்டேன்.

இல்லீங்க அய்யா, எல்லாம் தயாராக இருக்கிறது. உங்களிடம் ஒரு கடிதத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக நிற்கிறோம் என்றார்கள்.

மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு சூழல். அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்தேன். அதில்,
“நாங்கள் ஜெர்மனி மாநாட்டிற்குச் செல்கிறோம். நாங்கள் மாநாட்டிற்குச் சென்றுவிட்டு வரும்பொழுது ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது எங்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எங்கள் சொத்து முழுவதும் இந்த இயக்கத் திற்கு நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம்’’ என்று இருந்தது.

பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதுதான் ஈரோட்டுப் பாதை.

சுயமரியாதை இயக்கத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்றால்,  ஈரோட்டுப் பாதையை வகுக்கிறார். பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதுதான் ஈரோட்டுப் பாதை. ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வகையில், அதனை அவர்கள் செய்து கொண்டு போகின்ற நேரத்தில், உலகளாவிய இயக்கமாக என்னுடைய இயக்கம் இருக்கும் என்று அவர்கள் நல்ல அளவிற்கு முன்னோட்டமாக மிக ஆழமாக சொல்லியிருக்கிறார்.

இங்கே ஒரு பகுதியை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு...

1930ஆம் ஆண்டில் ஈரோட்டில் தந்தை பெரியார் பேசியதைக் கேட்போம்.
“இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் புரட்டிப் போட்டு, ஏடு ஏடாய் புரட்டிப் பார்த்தாலும், அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையை சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.’’

இந்த வார்த்தையானது நமது நண்பர்களிலேயே, கொள்கையெல்லாம் நமக்குப் பிடிக்கிறது. ஆனால், சுயமரியாதை என்கிற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை என்று சொல்லும் மேதாவிகளுக்குத் தக்க பதிலாகும்.

பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட். சாதாரணக் கடைக்கும், சூப்பர் மார்க்கெட்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், சூப்பர் மார்க்கெட்டில் எல்லா பொருள்களும் கிடைக்கும். சாதாரண கடைகளில் எல்லா பொருள்களும் கிடைக்காது.

ஒரு சிலருக்கு சில பொருள்கள் பிடிக்கும்; அதனை சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவார்கள்; சில பொருள் பிடிக்காது, அதனை வேறொரு இடத்தில் வாங்குவார்கள். அது போன்று பெரியாருடைய கொள்கைகள் ஒரு பேரங்காடி. பிடித்தவர்கள் அதனை வாங்கட்டும். இது தரமானதாக இருக்கும்; போலியாக இருக்காது; சரக்கு மிகவும் வித்தி யாசமாக இருக்கும் என்று சொல்லக்கூடியது.
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு - அவர்தாம் பெரியார் பார் என்று சொன்னார்.

சுயமரியாதை இயக்கம் பேதத்தை ஒழிக்கின்ற இயக்கமாகும்

அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய அந்தச் சிந்தனையில் சொல்கிறார்,
இந்த இயக்கமானது, இன்றைய தினம் மதத்தையும், பார்ப்பனரையும், சாமியையும் (கடவுளையும்), பண்டிதர் களையும் வைது கொண்டு (எதிர்த்துக்கொண்டு), மூடப் பழக்கவழக்கங்களை எதிர்த்துக் கொண்டு, மக்களைப் பரிகாசம் செய்துகொண்டிருப்பது போலவே, என்றைக்கும் இருக்கும் என்றோ, அல்லது இவைகள் ஒழிந்தவுடன், இவ்வியக்கத்திற்கு வேலை இல்லாமல் போய்விடும் என்றோ யாரும் கருதக்கூடாது.

மேற்சொன்னவைகளில், ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில், ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கும் வரையில், ஒருவன் தினமும் ஒரு வேளை கஞ்சிக்கு வழியின்றி பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு, வயிற்றைத் தடவிக்கொண்டு, சாய்மான நாற்காலியில் சாய்ந்துகொண்டு இருக்கும் தன்மை இருக்கும் வரையிலும்,

ஒருவன் இடுப்புக்கு வேஷ்டியில்லாமல் திண்டாடு வதும், மற்றொருவன் மூன்று வேஷ்டிப் போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதுமாய் இருக்கின்ற நிலை உள்ள வரை,

பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதும், தங்கள் சுயவாழ்வுக்கே என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும். மேற்கொண்டவைகள்  தன்மைகள் ஒழியும் வரையில், இந்த இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது.

அதனால், பேதமற்ற வாழ்வே பெருவாழ்வு! அதனை அழகாகச் சொன்னார் பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் பேதத்தை ஒழிக்கின்ற இயக்கமாகும்.

குலதர்மத்திற்கு எதிரானது சமதர்மம்

சமதர்மம் என்றால் என்னவென்று கேட்டார்கள், இருப்பதை எல்லோரும் பகிர்ந்துகொள்வதுதான் சமதர்மம். குலதர்மத்திற்கு எதிரானது சமதர்மம் என்றார்.

இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள் இருக்கும்பொழுது, ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வை - ஒரு காதுக்கு மட்டும் கேட்கும் தன்மை, ஒரு கை மட்டும் இயங்கும் தன்மை, ஒரு கால் மட்டும் இயங்கினால் போதும் என்று நினைப்போமா?

அதுபோன்று, ஆண் - பெண் இருவரும் சரி சமமாக இயங்கினால்தான் உலகம் - அதுதான் சமூகம். ஒன்றைப் பயன்படுத்தி, இன்னொன்றை இயங்கக் கூடாத நிலையில் வைத்திருக் கிறார்களே. மக்களில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களை அடிமைகளாக வைத்திருக் கிறார்களே - அவர்களுக்குத் தடை போட்டு வைத்திருக்கிறார்களே! இதனைத் தட்டிக் கேட்டவர் தந்தை பெரியார்.

பெரியார் ஒருவர்தான், கடை விரித்தேன், கொள்ளும் வரை விடமாட்டேன் என்றார்.
இப்பொழுது அந்த சரக்கு ஏற்றுமதி ஆகிக்கொண்டி ருக்கிறது. இது நல்ல சரக்கு என்கிறார்கள். அமெரிக்காவில் இந்த சரக்கு - இப்பொழுது மிகவும் தேவையாய் இருக்கிறது. மற்ற இடங்களில் தேவை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறது என்றால், பெரியார் ஒரு தொலை நோக்காளர் என்று யுனெஸ்கோ சொன்னது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.

மானத்தை, மரியாதையை, உரிமையை வழங்கிய இயக்கம்

இதுபோன்ற ஓர் இயக்கத்தைக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? இந்த இயக்கம் அவர்களுக்குப் பதவி வழங்கவில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, மானத்தை, மரியாதையை, உரிமையை வழங்கிய இயக்கம்.

ஜெர்மனியில் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம். நேற்று நான் சொன்னேன், நிலவில் இறங்கிய மனிதன் சொன்னான், இது மனிதனுடைய காலடி என்று நினைக்காதீர்கள். மனித குலத்தின் பாய்ச்சல் என்று சொன்னார்கள். அதுபோல, இந்த மாநாடு இன்றைக்கு ஒரு சிறிய அறையில் நடைபெறுவதாக இருந்தாலும், நாளைக்கு இதுதான் பெரியார் கொள்கைகள் உலகம் முழுவதும் பாய்கின்ற பாய்ச்சலுக்கு முதல் பாய்ச்சல்.

வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை!
  - கி.வீரமணி

-உண்மை இதழ், 1.15.9.17