வெள்ளி, 6 அக்டோபர், 2017

தரணி போற்றும் தன்மானச் சூரியன் தந்தை பெரியார்!



அறியாமை, மூடநம்பிக்கை இவற்றின் காரணமாக பிறவி இழிவாளர்களாகக் கிடந்த நமது சமுதாயத்தைத் தட்டி யெழுப்பி, நீண்ட உறக்கத்திலிருந்து அதனை விழிப்புறச் செய்த பெருமை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளரும், புரட்சி மேதையுமான தந்தை பெரியார் அவர்களையே சாரும் என்பதை உணராத, ஒப்புக் கொள்ளாதவர்களே இல்லை எனலாம்.
தந்தை பெரியார் அவர்கள் உலகத்தின் ஒப்பற்ற சிந்தனையாளர் ஆவார்.

உலகின் மற்ற பெரும் பெரும் சிந்தனையாளர்கள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கல்வியை முன்னுரையாகக் கொண்டு, அடியெடுத்துக் கொடுக்கும் ஆதாரமாய்க் கொண்டுதான் தமது சிந்தனைகளை வளப்படுத்திக் கொண்டு, பிறகு அதனை மனிதகுலம் மேம்பாடு காணுவதற்காகப் பொதுச் சொத்தாக ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்களோ, மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்கியதில்லை. அதனால் வழக்கமான ஏட்டுச் சுரைக்காய் கல்வி பலரைக் கோழையாக்கியுள்ளதைப் போல, கண்ட கசுமாலங்களையும் குப்பைகளையும் போட்டு சிந்தனையின் சுதந்திர ஓட்டத்திற்குத் தடையேற்படுத்தும் அவல நிலை அய்யா அவர்களுக்கு ஏற்பட்டதில்லை.

காலஞ்சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு. ஏ.எஸ்.பி. அய்யர் அய்.சி.எஸ். அவர்கள், சென்னை சட்டக் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தவிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய முன்னுரையில்,

“கீழை நாடுகளைப்பற்றி பெர்ட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும்போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிடுவதில் மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன் வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்’’ என்று குறிப்பிட்டார்! 

2. மனித சமுதாயத் தொண்டு ஒன்றினையே மய்யமாகக் கொண்டு அதற்குத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டதோடு, அதற்காக தனது உடல், பொருள், உயிர் அத்தனையையும் இறுதிமூச்சுள்ளவரை ஒப்படைத்தவர் அய்யாவைத் தவிர வேறு எவர் உண்டு! 
எல்லா மக்களுக்கும் சுயமரியாதை வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்
நாங்கள் கல்லைத் தூக்கி எறிகிறவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. எங்களுடைய பணி நன்றி பாராட்டாத பணி. அதைவிட மிக முக்கியம் - எல்லா மக்களுக்கும் சுயமரியாதை வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

“மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்று சுட்டிக்காட்டிய தந்தை பெரியார், இந்த இயக்கப் பணியைச் செய்கின்றபொழுது நாங்கள் மானம் பாராத தொண்டர்கள் என்று  மகிழ்ச்சி கொண்டார்கள்.

உலகத்தில் வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத _ நன்றி பாராட்டாத பணி. புகழை எதிர்நோக்காத பணி _- மிக ஆழமான பணி. பெரியார் அவர்கள் ஒரு வித்தியாசமான தலைவர்.
ஆனால், அவர் தொண்டர்கள் நன்றி மிக்கவர்கள். எடுத்துக்காட்டாக:-_

கழகத் தோழர்களின் உணர்ச்சிபூர்வமான ஒரு கடிதம்!

திடீரென்று இரண்டு பேர் வந்திருந்தார்கள். தங்கமணி _- தனலட்சுமி ஆகியோர் 26 ஆண்டுகளாக வாழ்விணையர். அந்த அம்மையார் அரசாங்க அதிகாரியாக இருக்கிறார். ஒரு நாள் என்னுடைய அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தார்.

என்னம்மா, புறப்படுவதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா? என்று நான் அவர்களைப் பார்த்து கேட்டேன்.

இல்லீங்க அய்யா, எல்லாம் தயாராக இருக்கிறது. உங்களிடம் ஒரு கடிதத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக நிற்கிறோம் என்றார்கள்.

மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு சூழல். அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்தேன். அதில்,
“நாங்கள் ஜெர்மனி மாநாட்டிற்குச் செல்கிறோம். நாங்கள் மாநாட்டிற்குச் சென்றுவிட்டு வரும்பொழுது ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது எங்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எங்கள் சொத்து முழுவதும் இந்த இயக்கத் திற்கு நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம்’’ என்று இருந்தது.

பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதுதான் ஈரோட்டுப் பாதை.

சுயமரியாதை இயக்கத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்றால்,  ஈரோட்டுப் பாதையை வகுக்கிறார். பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதுதான் ஈரோட்டுப் பாதை. ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வகையில், அதனை அவர்கள் செய்து கொண்டு போகின்ற நேரத்தில், உலகளாவிய இயக்கமாக என்னுடைய இயக்கம் இருக்கும் என்று அவர்கள் நல்ல அளவிற்கு முன்னோட்டமாக மிக ஆழமாக சொல்லியிருக்கிறார்.

இங்கே ஒரு பகுதியை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு...

1930ஆம் ஆண்டில் ஈரோட்டில் தந்தை பெரியார் பேசியதைக் கேட்போம்.
“இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் புரட்டிப் போட்டு, ஏடு ஏடாய் புரட்டிப் பார்த்தாலும், அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையை சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.’’

இந்த வார்த்தையானது நமது நண்பர்களிலேயே, கொள்கையெல்லாம் நமக்குப் பிடிக்கிறது. ஆனால், சுயமரியாதை என்கிற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை என்று சொல்லும் மேதாவிகளுக்குத் தக்க பதிலாகும்.

பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட். சாதாரணக் கடைக்கும், சூப்பர் மார்க்கெட்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், சூப்பர் மார்க்கெட்டில் எல்லா பொருள்களும் கிடைக்கும். சாதாரண கடைகளில் எல்லா பொருள்களும் கிடைக்காது.

ஒரு சிலருக்கு சில பொருள்கள் பிடிக்கும்; அதனை சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவார்கள்; சில பொருள் பிடிக்காது, அதனை வேறொரு இடத்தில் வாங்குவார்கள். அது போன்று பெரியாருடைய கொள்கைகள் ஒரு பேரங்காடி. பிடித்தவர்கள் அதனை வாங்கட்டும். இது தரமானதாக இருக்கும்; போலியாக இருக்காது; சரக்கு மிகவும் வித்தி யாசமாக இருக்கும் என்று சொல்லக்கூடியது.
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு - அவர்தாம் பெரியார் பார் என்று சொன்னார்.

சுயமரியாதை இயக்கம் பேதத்தை ஒழிக்கின்ற இயக்கமாகும்

அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய அந்தச் சிந்தனையில் சொல்கிறார்,
இந்த இயக்கமானது, இன்றைய தினம் மதத்தையும், பார்ப்பனரையும், சாமியையும் (கடவுளையும்), பண்டிதர் களையும் வைது கொண்டு (எதிர்த்துக்கொண்டு), மூடப் பழக்கவழக்கங்களை எதிர்த்துக் கொண்டு, மக்களைப் பரிகாசம் செய்துகொண்டிருப்பது போலவே, என்றைக்கும் இருக்கும் என்றோ, அல்லது இவைகள் ஒழிந்தவுடன், இவ்வியக்கத்திற்கு வேலை இல்லாமல் போய்விடும் என்றோ யாரும் கருதக்கூடாது.

மேற்சொன்னவைகளில், ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில், ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கும் வரையில், ஒருவன் தினமும் ஒரு வேளை கஞ்சிக்கு வழியின்றி பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு, வயிற்றைத் தடவிக்கொண்டு, சாய்மான நாற்காலியில் சாய்ந்துகொண்டு இருக்கும் தன்மை இருக்கும் வரையிலும்,

ஒருவன் இடுப்புக்கு வேஷ்டியில்லாமல் திண்டாடு வதும், மற்றொருவன் மூன்று வேஷ்டிப் போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதுமாய் இருக்கின்ற நிலை உள்ள வரை,

பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதும், தங்கள் சுயவாழ்வுக்கே என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும். மேற்கொண்டவைகள்  தன்மைகள் ஒழியும் வரையில், இந்த இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது.

அதனால், பேதமற்ற வாழ்வே பெருவாழ்வு! அதனை அழகாகச் சொன்னார் பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் பேதத்தை ஒழிக்கின்ற இயக்கமாகும்.

குலதர்மத்திற்கு எதிரானது சமதர்மம்

சமதர்மம் என்றால் என்னவென்று கேட்டார்கள், இருப்பதை எல்லோரும் பகிர்ந்துகொள்வதுதான் சமதர்மம். குலதர்மத்திற்கு எதிரானது சமதர்மம் என்றார்.

இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள் இருக்கும்பொழுது, ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வை - ஒரு காதுக்கு மட்டும் கேட்கும் தன்மை, ஒரு கை மட்டும் இயங்கும் தன்மை, ஒரு கால் மட்டும் இயங்கினால் போதும் என்று நினைப்போமா?

அதுபோன்று, ஆண் - பெண் இருவரும் சரி சமமாக இயங்கினால்தான் உலகம் - அதுதான் சமூகம். ஒன்றைப் பயன்படுத்தி, இன்னொன்றை இயங்கக் கூடாத நிலையில் வைத்திருக் கிறார்களே. மக்களில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களை அடிமைகளாக வைத்திருக் கிறார்களே - அவர்களுக்குத் தடை போட்டு வைத்திருக்கிறார்களே! இதனைத் தட்டிக் கேட்டவர் தந்தை பெரியார்.

பெரியார் ஒருவர்தான், கடை விரித்தேன், கொள்ளும் வரை விடமாட்டேன் என்றார்.
இப்பொழுது அந்த சரக்கு ஏற்றுமதி ஆகிக்கொண்டி ருக்கிறது. இது நல்ல சரக்கு என்கிறார்கள். அமெரிக்காவில் இந்த சரக்கு - இப்பொழுது மிகவும் தேவையாய் இருக்கிறது. மற்ற இடங்களில் தேவை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறது என்றால், பெரியார் ஒரு தொலை நோக்காளர் என்று யுனெஸ்கோ சொன்னது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.

மானத்தை, மரியாதையை, உரிமையை வழங்கிய இயக்கம்

இதுபோன்ற ஓர் இயக்கத்தைக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? இந்த இயக்கம் அவர்களுக்குப் பதவி வழங்கவில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, மானத்தை, மரியாதையை, உரிமையை வழங்கிய இயக்கம்.

ஜெர்மனியில் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம். நேற்று நான் சொன்னேன், நிலவில் இறங்கிய மனிதன் சொன்னான், இது மனிதனுடைய காலடி என்று நினைக்காதீர்கள். மனித குலத்தின் பாய்ச்சல் என்று சொன்னார்கள். அதுபோல, இந்த மாநாடு இன்றைக்கு ஒரு சிறிய அறையில் நடைபெறுவதாக இருந்தாலும், நாளைக்கு இதுதான் பெரியார் கொள்கைகள் உலகம் முழுவதும் பாய்கின்ற பாய்ச்சலுக்கு முதல் பாய்ச்சல்.

வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை!
  - கி.வீரமணி

-உண்மை இதழ், 1.15.9.17

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக