சனி, 15 செப்டம்பர், 2018

கிறிஸ்தவ மதத்தில் ஜாதியுண்டா?



31. 01. 1932 - குடிஅரசிலிருந்து..

இந்து மதத்தில்தான், சாஸ்திர சம்பந்த மாகவும், தெய்வ சம்பந்தமாகவும், பலர் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளியேறினா லொழிய மனிதத்தன்மை பெறமுடியாதவர் களாய் கோடிக்கணக்கான மக்கள் இருப்ப தாக உலகம் முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும் நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக - சகோதரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வரும் கிறிஸ்தவ மதத்தில் இத்தகைய ஜாதிக் கொடுமை இல்லை என்று பறைசாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத்தின்படி - அந்த மத கர்த்தாவான யேசுநாதரின் கொள்கைப்படி அந்த மதத்தில், ஜாதி வித்தியாசம் பாராட்டவோ, ஜாதி வித்தியாசம் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தி வைத்திருக் கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.

இத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியா சங்களும், கொடுமைகளும் நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்த நிலையிலிருக்கிறது என்றுப் பார்த்தால், இந்து மதத்தில் அண்ணனாகவோ, அப்ப னாகவோ, பாட்டனாகவோதான் இருந்து வருகின்றதென்று கூறலாம். இந்து மதக்கோயில்களில் எப்படி ஜாதிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதோ அது போலவே கிறிஸ்தவ மதக் கோயில்களிலும் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டுத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவாம். ஆனால் அரசாங்கக் கணக்கில் கிறிஸ் தவர்களுக்கு ஜாதி வாரிக்கணக்குப் போடாமல் எல்லாக் கிறிஸ்தவர்களையும் பொதுவாகக் கிறிஸ்தவர்கள் என்ற தொகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. இக்காரணத்தால், தீண்டாத ஜாதியினராகக் கருதப்படும் கிறிஸ்தவர்கள் பொது ஸ்தாபனங்களில் ஒருவித உரிமையும் பெறமுடியாமல், எல்லா உரிமைகளையும் உயர்ந்த ஜாதியாராக இருந்து கொண்டி ருக்கும் கிறிஸ்தவர்களே அடைந்து வரு கிறார்கள்.

எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள ஜாதிக்காரர்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந் துள்ளவர்களும், நாயுடு, முதலியார், பிள்ளை, அய்யர், முதலிய ஜாதி வித்தியாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்று மைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.

ஆகவே இதுவரையிலும் பொறுமை யோடு கொடுமைகளை அனுபவித்து வந்த தீண்டாத வகுப்புக் கிறிஸ்தவர்கள் இப் பொழுது கண்விழித்துக் கொண்டு அதிக ஊக்கத்துடன் கிளர்ச்சி செய்வதைக் கண்டு நாம் பாராட்டுகின்றோம். இதற்கு உதாரண மாகச் சென்ற 23. 01. 1932இல் லால்குடியில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் மகாநாடு கூடியிருப்பதைக் கூறலாம். அம்மகாநாட்டுத் தலைவர் திரு. ஞானப் பிரகாசம் அவர்களும், திறப்பாளர் திருமதி நீலாவதி ராமசுப்பிரமணியம் அவர்களும், வரவேற்புக் குழுத்தலைவர் திரு ஆரோக்கிய சாமி அவர்களும் மற்றும் உள்ள உபந்யா சகர்களான திருவாளர்கள் டி.வி.சோம சுந்தரம், டி. பி. வேதாசலம், வி. அய். முனி சாமிப்பிள்ளை முதலிய பலரும் தீண்டப் படாத கிறிஸ்தவருக்குள்ள குறைகளை எல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகையால் இனியாவது அம்மத குருமார்கள் தீண்டாதவர்க்குள்ள குறை களை நீக்கி மதக் கொள்கைப்படி யாதொரு வேற்றுமையையும் பாராட்டாமல் அவர் களையும் நடத்துதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லது அரசாங்கத்தார் அவர்கள் விரும்புகிறபடி தீண்டப்படாத கிறிஸ்தவர்களும் மற்ற ஆதிதிராவிடர் களுக்குக் காட்டுவதைப்போல தனிச்சலுகை காட்ட முன் வரவேண்டும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

கடைசியாக, தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறோம், தீண்டப்படாத கிறிஸ்தவர் களின் குறைகள் நீங்காவிட்டால் அம்மதத் திலுள்ளவர்கள் நீக்க முற்படா விட்டால் இந்து மத ஆதிதிராவிடர்களை எந்த வகையில் தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மதக் கொடுமைகளையும் ஜாதிக் கொடுமை களையும் நீக்கிக் கொள்ள விரும்புகிறார் களோ, அந்த வகையிலேயே தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ள முயலுவதே சமத்துவம் பெறுவதற்கு ஏற்ற வழியாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- விடுதலை நாளேடு, 15.9.18

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை: சித்திரபுத்திரன்



16. 03. 1930 - குடிஅரசிலிருந்து...

மகா விஷ்ணுவான சிறீரங்கம் ரங்கநாதர்:- அடி என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் உள்ள வர்களுக் கெல்லாம் அய்வரியம் கொடுத்து வரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?

லட்சுமியான சிறீரங்கநாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்ன மும் எத்த னையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தயிரும் சாப்பிட் டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல் லாம்கூட கைவைத்துவிட்டீர். இப்படிப்பட்ட உம்மைச் சாப்பாட்டுக்கே லாட்டரி போடும் படியாக ஏன் செய்யக்கூடாது?

விஷ்ணு:- அய்யய்யோ! அதனாலா இப்படிச் செய்துவிட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படிச் செய்வதும் ஒரு லட்சுமி கடாட்சம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்குக் கோப மாயிருந்தால் நாளைய தினமே அவர்களை யெல்லாம் விரட்டி அடித்து விடுகிறேன்.

லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

விஷ்ணு:- பின்னையேன் லாட்டரி சீட்டு போடச்செய்தாய்?

லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப் பதற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தைச் சேர்ப்பதற்கு இப்படிச் செய்யச் சொன்னேன்.

விஷ்ணு:- அப்படியானால் அது எனக் கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் சிறீரங்கம் ரங்கநாதர் லாட்டரி சீட்டு, ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்று அல் லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?

லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசியென்று பெயரும் செய்து கண்டகண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே, அதிலில்லாத அவமானம் தானா  உமக்கு லாட்டரி சீட்டில் வந்துவிட்டது? பக்தர்களின் பெண்களைத் தாங்கள் கைப்பற்றுவதும், தங்கள் தாசிகளைப் பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள பந்துத்துவ மாகும்.

விஷ்ணு:- அதெல்லாம்தான் இப்போது நமது உண்மை பக்தர்களாகிய சுயமரியாதைக் காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும், குடியரசு மூலமும் நிறுத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அப்புறம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிர மங்கள் நடக்காது.

லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்தக் காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்குச் சோறுபோடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டுவிடும் கவலைப்படாதீர்கள், இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டி ருந்தால் போதும்.



- விடுதலை நாளேடு, 14.9.18

புதன், 12 செப்டம்பர், 2018

ஆதி பட்டம்

25.10.1931 - குடிஅரசிலிருந்து...

நாம் தானே இந்நாட்டின் பழம் பெரும் குடிமக்கள் என்று ஆதாரம் இருக்கின்றது. நமக்குத்தானே ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்னாடகர் என்கின்ற பெயர்கள் வழங்குகின்றன. இந்த ஆதி பட்டமெல்லாம் நாம் என்றும் சிலையாய், அடிமையாய், தீண்டாதாரராய் இருப்பதற்கு அனு கூலமாக கொடுக்கப் பட்டதேயொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக்கடையச் செய்விப்பதற்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாட்டிற்கு எவ்வித சுதந்திரமிருந்தாலும் - பூரண சுயேச்சை இருந்தாலும்- சுயராஜ்ஜியமிருந்தாலும் அந்நாட்டிலுள்ள 3இல் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும் பாடுபட்டு உழைத்து, மற்றவர்களுக்கே போட்டு விட்டு,தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர் மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிரார உண்ணமுடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும்  இருக்கும்படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் அந்த நாடு கொடுங்கோன்மை ஆட்சி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல் அதற்கு ஏதாவது மேற்கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

- விடுதலை நாளேடு, 7.9.18

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

பிள்ளையாரின் கதை!

தந்தை பெரியார்
இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் "எண்ணிக்கை எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது", என்பதுபோல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டு இருப்பதும், அத்தனைக் கடவுளுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை பாட்டு  முதலியதுகள் ஏற்படுத்தி இருப்பவை - அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெருமானமுள்ள நேரங்களும், பலகோடி பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக்கூடிய காரியமல்ல.
இக்கடவுள்களின் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொண்டு வணங்கப் படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது.இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், பிள்ளையார் என்றும், விக்னேஸ்வரன் என்றும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.
நிற்க. இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தாங்களுடைய எந்த காரியத்திற்கும் முதன் மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக இப்போது அமுலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புகொள்ள கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப்பற்றி சற்று கவனிப்போம்.
ஏனெனில், கடவுள்களின் சங்கதி தெரிய வேண்டு மானால் முதல் முதலாக முதற் கடவுளைப்பற்றி தெரிந்து கொள்வதுதான் நன்மையானதாகும், தவிர, முதல் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்னமாதிரி என்பதாக தெரிந்தால், மற்ற கடவுள்களின் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாக இருக்கலாம்.
ஒரு காரியத்தை ஆரம்பித்தால் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுளின் கதைகளைப் பற்றி விளக்கப்போவதில் முதல் கடவுள்பற்றி ஆரம்பிக்க வேண்டியது முறையாகுமன்றோ! இல்லாவிட்டால், அக் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும். அன்றியும் சமீபத்தில் அக்கடவுளின் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்றும் வரப்போவதால் இந்த சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குதும்.
பிள்ளையார் பிறப்பு
1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்கு மிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும் படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அது ஒரு ஆண்குழந்தையாகும்படி கீழே போட்டதும் அது ஆண் குழந்தையாகி விட்ட தாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து  நான் குளித்துவிட்டு வரும்வரையில் வேறு யாரையும் உள்ளே விடாதே! என்று சொல்லி அதை வாயிற்படியில் உட்காரவைத்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருசனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து, பார்வதி குளித்துக்கொண்டு இருப்பதால் உள்ளேப் போகக்கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கும் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்த பிள்ளையார் தலையை கீழேத் தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்கு போனதாகவும், பார்வதி சிவனைப்பார்த்து, காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்? என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கிய குழந்தை வெட்டுண்டதற்காக புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியை திருப்தி செய்த தாகவும் கதை சொல்லப்படுகிறது, இக்கதைக்கு சிவபுராணத் திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.
2. ஒரு காட்டில் ஆண்  பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டு கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்று இருக்கையில் ஒரு அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாக புகுந்து அக்கருசிசுவின் தலையை வெட்டிவிட்டதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பிய தாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகிறது, இது தக்காயகபரணி என்னும் புத்தகத்தில் இருக்கிறதாம்.
இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளையாரின் மற்ற கதைகளை பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.
பிள்ளையார் விசர்ஜன்
பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்த பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படி பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவை களிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப் பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படு வதுமானதாயிருந்ததால், மற்றக் கடவுள்கள் சங்கதிபற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க.
ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்த தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளை பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புகொள்ள முடியும்? ஆகவே, இந்த கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. இதனை பின்னால் கவனிக்கலாம்)
கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் "கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண் டானவர்" என்று சொல்லுவதும், மற்றும்  "அது ஒரு சக்தி" என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களை கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து, அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும், வணங் கவும், பூசை செய்யவும், உற்சவம் முத லியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.
உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம், சிதம்பரம் கோயிலில் யானை முகம் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக் கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக்காட்சியை யாவ ருக்கும் தெரியும்படியாக செய்திருப்ப துடன், இந்த காட்சிக்கு தினமும் முறைப் படி பூசையும் நடந்து வருகின்றது, பல ஆண்  பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகிறார்கள்.
சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில்  புகுத்தி அப்பெண்ணை தூக்கிகொண்டு இருப்பது போல வும், அந்த பெண் காலை அகட்டியவாறே அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப் பட்டு இருக்கின்றது. இவை களைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்ற ஒரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் அசுரர்களை எல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவுக்கு அசுரர்கள் (வல்லபை) என்னும் அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டு வருவது போல பல லட்சக் கணக்கான அசுரர்கள் வந்துகொண்டே இருந்த தாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், தனது தும்பிக்கையை அந்த அசுரப் பெண்ணின் பெண்குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் அப்படியே ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாக சொல்லப் படுகின்றது. எனவே, இம்மாதிரி காட்டுமிராண்டித்தன்மை யான ஆபாசங்களுக்கு, கண்ட வைகளை எல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.
"எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்" என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினம் அவ்வெழுத்துகொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாக தோன்றவில்லையா? இதை "எவனோ ஒருவன் செய்துவிட்டான்" என்று சொல்வதனால், இவைகளுக்கு தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்காமல் நின்றுவிட்டதா? யோசித்து பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்கின்றோம்.
சீர்திருத்தக்காரர்கள் அப்படி இருக்க வேண்டும், "இப்படி இருக்க வேண்டும்" என்றும், "மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து; கடவுளுக்கு ஆபத்து" என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும், கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் "வக்காலத்து பெற்று" மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட் கின்றோம்.
இவற்றை எல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணி களுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் ஆராய்ச்சி குறைவதில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாச சங்கங்களை எல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வா பாசங்களைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுள்களையும் எந்த சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல் லுவோம்.
- 'குடியரசு'  26.08.1928
-விடுதலை நாளேடு, 9.9.18 

திங்கள், 3 செப்டம்பர், 2018

வகுப்புரிமை மீட்புப் போராட்டமும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பும்

தந்தை பெரியார்




"கட்டாய இந்தி ஒழிந்ததுபற்றி நாம் மகிழ்ச்சி கொண் டாடுகிற நேரத்திலேயே மற்றொரு துக்ககரமான சம்பவம் அதாவது வகுப்புவாரி உரிமை இந்திய அரசியல் சட்டத் திற்கு விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஏற்பட்டுவிட்டதால், மற்றொரு கிளர்ச்சி துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இயற்கை நமக்கு ஓய்வு தருவதில்லை.

வகுப்புவாரி உரிமைக்கு ஆகவேதான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. அதாவது பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக் காக, அவர்களுக்கும் உத்தியோகத் துறையிலும், கல்வித் துறையிலும் அவர்களுக்கான விகிதாசாரம் கொடுத்து நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. நானும் காங்கிரசில் இருந்த காலம் முதற்கொண்டே வகுப்புவாரி உரிமைக்கு ஆகவே பாடு பட்டு, அதன் காரணமாகவே, அதாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானத்தை நான் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிற்குக் கொண்டு போனபோது, அந்தத் தீர்மான மானது காங்கிரசின் கொள்கைகளுக்கு விரோதமாய் இருக்கிறது என்று கூறப்பட்டு என்னுடைய தீர்மானம் தள் ளப்பட்டு விட்டதால் நான் காங்கிரசிலிருந்து அதற்காகவே விலகினேன்.

பின்னர் சுயேச்சை அமைச்சர்கள் பதவிக்கு வந்தபோது வகுப்புவாரி உரிமைத் திட்டம் சட்டமாக்கப்பட்டு, எவ் வளவோ எதிர்ப்புகளுக்கு இடையில் அமல் நடத்தப்பட்டு வந்தது. அந்த சட்டமும் சரியானபடி, மக்களின் விகிதாசாரக் கணக்குப்படி அவர்களுக்குப் பங்கு அளித்தது என்று கூற முடியாது. ஆனாலும், நம்மவர்கள் - பல தொல்லைகள், சங்கடங்கள் இருந்தபோதிலும், வகுப்புவாரி உரிமையின் பயனாய் ஓரளவுக்கு முன்னுக்கு வந்தார்கள். குறிப்பாக போலீஸ் இலாகாவிலும், டிப்டி கலெக்டர்களிலும் நம்ம வர்கள் கணிசமான அளவில் முன்னேறினார்கள். நம்மவர் களுக்கு மேல் உத்யோகஸ்தர்களாய் பார்ப்பன அதிகாரிகள் இருந்ததால் அவர்கள் நம் உத்தியோகஸ்தர்கள் மேலுக்குவர முடியாமல் அழுத்தி தங்கள் வர்க்கத்தாருக்கே சலுகை காட்டி, அவர்களின் கொள்ளைக்கும் வழி செய்து கொடுத்து வந்தார்கள்.

நமது முன்னாள் முதல் மந்திரி ஓ.பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள் காலத்திலேதான்  வகுப்பு வாரி உரிமையின்படி, கல்லூரிகளில் மாணவர் களைச் சேர்ப்பது என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

அதிலும், அடுத்த ஆண்டில் அப்போது கல்வி மந்திரியாய் இருந்த தோழர் அவினாசிலிங்கம் அவர்கள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது தகுதி, திறமை என்பவை களின் பேரால் 20, 30 சதவிகிதம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், அந்தப்படி 'தகுதி', 'திறமை' என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்குப் போக மீதி இருக்கும் இடத்திற்குத்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை கையாளப்படும் என்றும் ஆக்கி வைத்தார்கள்.

இந்தப்படியாக சரியானபடி விகிதாசாரம் கொடுக்கப்படாமலும், பார்ப்பனர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு மேற்பட்டு 8, 10 மடங்கு என்று கொடுக்கப்பட்டு, நமக்கு மிகக் குறைந்த அளவுக்கே பங்கு கொடுக்கப்பட்ட வகுப்புவாரி உத்தரவும் இனிமேல் செல்லுபடி யாகாது என்று தீர்ப்பு கூறப்பட்டு விட்டது.

ஆகவே, இனிமேல் இதுவரை அனுஷ்டிக் கப்பட்டு வந்த வகுப்புவாரி திட்டமானது 1950இல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒழிக் கப்பட்டுவிட்டது. நாமும் இந்த வகுப்புவாரி திட்டம் போதாததாய் இருப்பதால், இது ஒழிக்கப்படவேண்டும் என்கிறோம். ஏன்? இது சரியானபடி மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாசாரத்தை பிரதிபலிக்க வில்லை, எனவே, இந்தத் திட்டம் ஒழிக்கப்பட்டு அந்த மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த ரீதியில், அதாவது இந்த நாட்டு ஜனசமுதா யத்தில் 100-க்கு 3 பேராக இருக்கும் பார்ப் பனர்களுக்கு 3 ஸ்தானமும், அதேபோல் மற்ற வகுப்பார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மாதிரியில் அவரவர்களுக்கு விகிதாசாரப்படி பங்கு வழங்கும் புதிய திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறோம்.

இன்றைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இனிமேல் தகுதி, திறமை என்பவைகளின் பேரால்தான் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இப்போது கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதி, திறமையாக வைத்திருப்பது மார்க் ஒன்றுதான் ஆகும். இந்த மார்க்கை பார்ப்பனப் பிள்ளைகள்தான் அதிகமாக வாங்கத் தக்கபடி கல்வியில் சூழ்ச்சி இருக்கிறது. அதிக மார்க் எப்படி வாங்குவது என்ற வழியைப் பார்ப்பனர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்பதோடு, மார்க் அவர்கள் காலடியிலேயே போய் விழுகிற மாதிரியில் இன்று கல்வித் துறையில் அவர்களுக்கு வாய்க்கால் வெட்டிவிடப் பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, அவர்கள் பரம்பரையாக விஷயங் களின் கருத்தைப்பற்றி கவலை இல்லாமல் சொற்களை உருப்போட்டு படிக்கப்பட்ட பரம்பரையில் உதித்தவர்கள். ஆகவே, படித்ததை நெட்டுருப் பண்ணி பரீட்சையில் வாந்தி எடுப்பது அவர்களுக்கு சுலபமான காரியமாகும்.

நம்மவர்களுக்கு இரண்டுமே கிடையாது. கருத்தை உட்கொண்டு அறிவு பெறுவது வழக்கம். அந்தப்படி இருக்கும்போது நம் பிள்ளைகள் எப்படி இன்று கல்லூரியில் சேருவதற்கு 'தர்மாமீட்டராய்' இருக்கும் தகுதியையும், திறமையையும் பெற முடியும்? எனவே, இவர்கள் சொல்லுகிற தகுதியையும், திறமையையும் பெற்று நம்முடைய பிள்ளைகள் படிக்க முடியாது. படிக்காத காரணத்தினால் உத்தியோகமும் வகிக்க முடியாது. பழைய வேலைக்குத்தான், அதாவது மனு (அ) தர்ம காலத்துக்குத்தான், பார்ப்பானுக்கு சேவை - பூஜை செய்து அவன் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பதால் நற்பதவி கிட்டும் என்ற தன்மைக்குப் போகவேண்டும். இதைத்தான் பார்ப்பனர்களும் விரும்புகிறார்கள்.

ஏனென்றால், நாமும் படித்து உத்தி யோகம் வகித்து பார்ப்பனர்களோடு சரிசம மாகப் போட்டியிட தலைப்பட்டால், 'சூத் திரர்கள்' செய்யவேண்டிய வேலைகள் என்று தர்ம சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டு 'ரிசர்வ்' செய்யப்பட்டிருக்கிறதே, ஏர் உழுவது, துணி வெளுப்பது, சிரைப்பது, செருப்புத் தைப்பது, வண்டி இழுப்பது, மூட்டை தூக்குவது, கக்கூஸ் எடுப்பது போன்ற காரியங்களுக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். பார்ப்பனர் களுக்கும் முகத்தில் பிறந்தவர்கள் என்ற மரியாதையோ, உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்ற பெருமையும் இல்லாமல் அவர்களும் சாதாரண மனிதர்களாவதுடன், எல்லா வேலை களையும் அவர்களும் சேர்ந்து செய்யவேண்டிய நிலைமை வந்துவிடுமே என்பதற்காகத்தான் அடிப்படையிலேயே, அதாவது நம் மக்கள் படித்து, மான உணர்ச்சியோ, மனிதத் தன் மையோ அடைந்துவிடக் கூடாது என்பதற்காக நம்மை படிக்கவொட்டாமலேயே அடிப்பது என்ற முயற்சி செய்து தற்காலிகமான வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

இந்தக் காரியத்தில் நாம் சற்று அலட்சிய மாகவோ, அஜாக்கிரதையாகவோ, கவலை யற்றோ இருந்தோமேயானால், நிச்சயமாய் இன்று பார்ப்பனர்கள் பெற்றிருக்கிற இந்த தற்காலிக வெற்றியானது சாசுவத வெற்றியாகி நாமெல்லாம் என்றும் மீளா அடிமையில், படுகுழியிலேதான் அழுந்திக் கிடக்க நேரிடும்.

எனவே, இதை இப்படியே விட்டுவிடாமல் நம்முடைய இன நலத்தைக் கருதி, நம்முடைய பிற்கால சந்ததிகளின் நன்மையைக் கருதி, நம்முடைய பிள்ளைகள் மாடு மேய்ப்பதற்கே தகுதியுடையவர்களாக ஆகாமல், மனிதத் தன்மை யுடையவர்களாக வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டு இதிலே நாம் பெருத்த கிளர்ச்சி செய்யவேண்டும்.

இந்தக் காரியத்திலே ஏமாந்துவிட்டுவிட்டோமானால், நம்முடைய வாழ்வு மனுக்காலத் தன்மைக்குத்தான் போய்விடும். எனவே, இதில் முழு மூச்சோடு 'இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது' என்ற முடிவோடு நீங்கள் இருக்கவேண்டும்.

இந்தக் காரியத்தில் கிளர்ச்சி துவக்குவதற்காக அடுத்த மாதத்தில் சென்னையிலாவது, திருச்சியிலாவது ஒரு பொது மாநாடு கூட்ட இருக்கிறேன். அதற்காக முன்னேற்பாடு கூட்டம் ஒன்று அடுத்தவாரம் கூட்டுவேன். மாநாட்டில் இனிமேல் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்வது என்பதுபற்றி யோசித்துக் கூறுகிறேன். அதற்குப் பின்னர் நாம் பெருத்த முறையில் கிளர்ச்சி செய்யவேண்டும். அத்தகைய கிளர்ச்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, பெருவாரியாக மக்கள் அனைவரும் வரப் போகும் வகுப்புரிமைக் கிளர்ச்சியிலே பங்குகொண்டு, நம் உரிமைக்காகப் போராட வேண்டும்".

(24.8.1950 அன்று ஈரோட்டில் நடைபெற்ற

பொதுக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை)

(உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி - 3)

- விடுதலை நாளேடு, 26.8.18