புதன், 12 செப்டம்பர், 2018

ஆதி பட்டம்

25.10.1931 - குடிஅரசிலிருந்து...

நாம் தானே இந்நாட்டின் பழம் பெரும் குடிமக்கள் என்று ஆதாரம் இருக்கின்றது. நமக்குத்தானே ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்னாடகர் என்கின்ற பெயர்கள் வழங்குகின்றன. இந்த ஆதி பட்டமெல்லாம் நாம் என்றும் சிலையாய், அடிமையாய், தீண்டாதாரராய் இருப்பதற்கு அனு கூலமாக கொடுக்கப் பட்டதேயொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக்கடையச் செய்விப்பதற்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாட்டிற்கு எவ்வித சுதந்திரமிருந்தாலும் - பூரண சுயேச்சை இருந்தாலும்- சுயராஜ்ஜியமிருந்தாலும் அந்நாட்டிலுள்ள 3இல் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும் பாடுபட்டு உழைத்து, மற்றவர்களுக்கே போட்டு விட்டு,தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர் மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிரார உண்ணமுடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும்  இருக்கும்படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் அந்த நாடு கொடுங்கோன்மை ஆட்சி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல் அதற்கு ஏதாவது மேற்கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

- விடுதலை நாளேடு, 7.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக