திங்கள், 19 நவம்பர், 2018

கார்த்திகை தீபம்



மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப் பண்டிகைகளில் உள்ள அபிம னமும், மூட நம்பிக்கையும் ஒழிந்தபாடில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல், அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்படுத்தி வருவ தனால், நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம். சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியிருந்தோம்.

அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டி கையால் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுங்கிப் புகையும் கரியுமாக ஆகிய வகையிலும் செலவாகியிருக்கும் என்பது மட்டுமல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி, ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூடநம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடி புகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரம் அல்ல, தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்களின் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்மடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

தீபாவளிக்கு முன் சில நாட்களும் தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட் டுகளிலும் வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத் தால், அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.

இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்விகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது.

இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த் திகைத் தீபம் என்பதுதான்.

இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்விகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.

சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்தி கைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன் கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?

இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!

கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப் பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண் ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!

கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!

இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக் கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதை இரண்டு. அவைகளில் ஒன்று:

ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதையறிந்த அவன் மனைவி சுவாகா தேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப் படுவான் என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைகள்தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவ தாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதை யெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை.

இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள். பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபச்சாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்விகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று. ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.

இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது: ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம். உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம். அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டி ருக்கிறாய்? என்று கேட்க, அது, நான் பரம சிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங் களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.

உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல் லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.

அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம். பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம்.

இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை. இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாசகங்களும், தோத்திரங்களும் இல்லை.

இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக் கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக் குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறிய லாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அநேக செய்திகள் அமைந்திருப் பதைக் காணலாம்.

இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகை யினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?

இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண் டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்க வில்லை. வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப் பார்களா?

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாதது தானே கடவுள் என்னும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும் போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள்,அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடா விட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டி ருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.

ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர் களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சி யெடுத்துக் கொண்டார்களா?

இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங் களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங் களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

"குடிஅரசு" 22-11-1931

- விடுதலை நாளேடு, 18.11.18

வெள்ளி, 16 நவம்பர், 2018

தீண்டாமையை ஒழிக்க இடம் தராத இந்து மதம்!



27.03.1932 - குடிஅரசிலிருந்து...

தீண்டாமையை ஒழிக்க இடந்தரவில்லை என் பதைப்பற்றி நாம் அதிகமாக ஒன்றும் கூறவேண்டிய அவசியமில்லை பெரிய புராணத்திலுள்ள நந்தனார் கதை ஒன்றே போதுமானதாகும். நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளிடத்தில் பக்தியுள்ளவ ராகிக் கோயிலுக்குள் செல்ல விரும்பிய தீண்டா தாராகிய நந்தனாரை அந்த உடம்புடன் கோயிலுக் குள் வந்து தன்னை வணங்குவதற்கு அந்த நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளே சம்மதிக்காமல் நெருப்பில் மூழ்கி இறந்து பார்ப்பன சரீரத்தைப் பெற்றுக் கொண்டபின் கோயிலுக்குள் வர வேண்டு மென்று சொல்லி அவ்வாறே நந்தனாரும் நெருப்பில் மூழ்கிப் பார்ப்பன உடம்பு பெற்றுக் கொண்டு

கோயிலுக்குள் போனதாகத்தானே பெரிய புராணத் தில் சொல்லப்படுகின்றது?

தீண்டாமை விலக்குக்கும் சமத்துவத்துக்கும் இடமிருப்பதாகச் சொல்லப்படும் பெரியபுராணம் என்பதே இவ்வளவு கொடுமையாக இருக்குமானால் மற்ற சின்ன புராணங்களைப் பற்றிச்சொல்லவும் வேண்டுமா?

இனி, சங்கராச்சாரியார் என்பவர் தீண்டாமையை ஒழிக்கப் போதனை செய்தார் என்று கதை சொல்லுகிறார்கள். அவர் ஒருநாள் கங்கையில் ஸ்நானம் பண்ணிவிட்டு வரும்போது எதிரில் வந்த ஒரு தீண்டாதானைக் கண்டு விலகியதாகவும், உடனே அத்தீண்டாதான் சங்கரரை நோக்கி  ஆத் மாவில் என்ன வித்தியாசம்? என்று கேட்டதாகவும், பிறகு சங்கராச்சாரியார் ஆத்ம சமத்துவத்தையறிந்து அவனைக் கட்டித்தழுவிக் கொண்ட தாகவும், அவனுடைய ஆத்ம ஞானத்தைப் பாராட்டியதாகவும், அதற்காக சங்கராச் சாரியார் பஞ்சதசி என்ற நூலைச் செய்ததாகவும் அவருடைய கதையில் சொல்லப் படுகிறது. இந்தக் கதையும் ஆத்ம சமத்துவத்தைச் சொல்ல வந்ததே ஒழிய சரீர சமத்துவத்தைச் சொல்ல வரவில்லையே! ஆகையால் இந்தக் கதையினால் பிறப்பு வித்தியாசமும், தீண்டாமையும் இருப்பதைக் காணலாம்.

மேற்கூறிய காரணங்களிலிருந்து தீண்டாமை நமது நாட்டில் தோன்றி நிலைத்திருப்பதற்கு இந்து மதமும், இந்து மத சாத்திரங்களும் அவைகளின் மூலம் உண்டான மூட நம்பிக்கைகளும், குருட்டுப் பழக்க வழக்கங்களுமே என்பதை அறியலாம்.

- விடுதலை நாளேடு, 16.11.18

வியாழன், 15 நவம்பர், 2018

தீபாவளிப் பண்டிகை



வருகுதப்பா தீபாவளி - வழமைபோல். நீ என்ன செய்யப் போகிறாய்.

தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்-தான் அல்லது அது அசைக்கப்பட்டால்தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால்தான் திருந்தும்.

ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது.

* * *

ஆகையால், கடவுள் சொன்னது - சாஸ்திரம் என்பதை கட்டி வைத்துவிட்டு உன் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி தீபாவளியைப் பற்றி யோசித்துப்பார் அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பீ!

கோபம் செய்தாலெமன் கொண்டோடிப் போவான் என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால் நீ ஏமாந்து போவாய் என்று நான் கூறுகிறேன். ஆகவே அறிவுக் கண்ணுடன் நாடு, இனம், மானம் ஆகியவைகளின்மீது பற்று வைத்து தீபாவளிபற்றி சிறிது சிந்தித்துப் பார்!

தீபாவளி கதை

தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை. என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.

மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு ராட்சதர்-களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்று விட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.

இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில்ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.

என்னவென்றால் விஷ்ணு பலஅவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.

விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்-பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.

மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார். இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவது தான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரமிருந்-திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதின-தல்லாமல்  வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வருமுன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?

ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லாவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனை கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள். சித்திர புத்திரன் எனும் பெயரில் எழுதிய கட்டுரை.

- ‘குடிஅரசு’ - கட்டுரை -  07.10.1944

- தந்தை பெரியார்

-  உண்மை இதழ், 1-15.11.18