வியாழன், 29 ஆகஸ்ட், 2019

ஒரு யுக்தி ஆராய்ச்சி

01.07.1944  குடி அரசிலிருந்து...

மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூல மாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப் பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகா சங்கள் முதலியவைகளும் தேவார திருவா சகங்கள், பிரபந்தங்களும் ஆகியவைகளும் ஆகும் என்பது எமது கருத்து. இந்தக் கருத்துக்கு உதாரணங்கள் அவைகளிலேயே இருக்கின்றன.

அவதாரம்

விஷ்ணு அவதாரங்கள் அத்தனையும் ஆரி யர்களின் எதிரிகளை அதாவது மனுதர்மத்திற்கு விரோதமாயும், ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்கவும், தடுக்கவும் முயற்சித்தவர்களைக் கொல்லவும், அழிக்கவும் சதி செய்யவும் ஏற்பட்டவைகள். அது போலவே சிவன் அவதாரமான சுப்பிர மணியனும் மற்றவர்களும். அதுபோலவே ஆரியரின் எதிரிகளை அழிக்க ஏற்பட்டவைகள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சூரர், அசுரர், அரக்கர், இராட்சதர் என்கின்றவர் களைக் கொல்ல அழிக்க வந்தவர்கள் என்றே சொல்லலாம். ஆரியர்களின் தனிக்கடவுள் உற்பத்திகளில் சிவன் முதற்கடவுள். அதாவது, முதலில் சிருஷ்டிக்கப்பட்ட கடவுளாகவும், ஸ்கந்தம் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட புராணம் ஆகவும் இருக்க வேண்டும். இவை விஷ்ணு வுக்கும், இராமாயணத்துக்கும் முந்திய தாயும் இருக்க வேண்டும். இராமாயணம் சமீப காலத்தில் கந்தபுராணத்தைப் பார்த்து சற்று திருந்திய காலத்திருத்தத்தோடு எழுதியதென்றே சொல்லலாம். பாரதம்கூட இராமாயணத்திற்கு முந்தியதாகவே இருக்க வேண்டும்.

எப்படி ஆயுதங்களில் கல், கவண், ஈட்டி, (வேல்)வில், துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டு, விஷப்புகை ஆகியவை ஒன்றிற்குப் பின் ஒன்று வரிசைக்கிரமமோ அதுபோல்தான்.

முதலில் சிவன், கந்தபுராணம், பிறகு விஷ்ணு சம்பந்தமான புராணங்கள், பாரதம், இரா மாயணம் ஆகியவை என்று சொல்ல வேண்டும். சுரர், அசுரர் என்பவை எல்லாம் ஆரியர் - ஆரியர் அல்லாதவர் என்பதற்கு முதலில் ஏற்படுத்திக் கொண்ட (இட்ட) பெயர்களாகவும் தேவர்கள், இராட்சதர்கள் என்பவை பின்னால் ஏற் படுத்திக் கொண்ட பெயர்களாகவும் தெரிகின் றன. சிவன் முதற்கடவுள் என்பதற்கும் கந்த புராணம் முதல் புராணம் என்பதற்கும் உதாரணம் என்னவென்றால்,

சிவன் கற்பிதம்

சிவன் கற்பிதம் மிக்க பழமையான காட்டுமி ராண்டி காலத்தியதாக இருக்கிறது. அதாவது தலை - சடையாகவும், ஆடை - மிருகத்தின் தோலாகவும், அணி (நகை) - பாம்புகள், எலும்புகளாகவும், புஷ்பம் - கொன்றை எருக்கம் பூக்களாகவும், பாத்திரம் - மண்டை ஓடு, ஆகாரம் - தேன், தினைமாவு கொழுக்கட்டையாகவும், ஆயுதம் - 1வது மழு, 2வது சூலம், இடம் - மலை, விளையாடுவது - சுடலை, பூசிக்கொள்வது - சாம்பல், ரூபம் (சாயல்) - அகோரம், வாகனம் - மாடு, குணம் - வெளிப்படையான இம்சை, நட னம் - காட்டுமிராண்டி ஆட்டம், சங்கீதக்கருவி - உடுக்கை, பெண் ஜாதி இதுபோன்றே, கோர ரூபமுள்ள காளி, அவள் வாகனம் - சிங்கம்; பிள் ளைகள் ஒன்றுக்கு ஆறுமுகம், மற்றொன்றுக்கு யானைத்தலை விகார ரூபம். இந்தமாதிரியாக காட்டுமிராண்டித் தன் மைக்கு ஏற்றபடியாகவும், காட்டுமிராண்டி காலத்திய எண்ணங்களின்படி யாகவும் கற்பிக் கப்பட்டிருக்கிறபடியால் சிவன் தான் முதலாவ தாக சித்திரிக்கப்பட்ட கடவு ளாக இருக்க வேண்டும் என்பது விளங்கும்.

கந்த புராணம்

அதுபோலவே கந்த புராணம் என்பதும் வைணவ புராணங்களைவிட முந்தியதாகவே இருக்க வேண்டும். ஏனெனில் கந்தனின் உற்பத்தியை ஆபாசமான முறையில் கற்பிக்கப் பட்டிருக்கிருக்கிறது.

ஆயிரம் தேவ வருஷம் (அதாவது பல யுக காலம்) சிவன் புணர்ந்ததால் ஏற்பட்டான் என்றும், இந்திரியத்தை ஆற்றில் விட்டதால் ஏற்பட்டான் என்றும், அந்த... மிஞ்சின இந்திரியம்தான் என்றும், நெற்றிப் பொறியில் தோன்றினான் என்றும் மற்றும் பலவித ஆபாச மானதும் அசம்பாவிதமானதும் சிறிதும் அறி வற்றதுமான வழியில் உற்பத்தியானதாக சித் திரிக்கப்பட்டிருக்கிறது. கந்த புராணத்தில் பாத்திரங்கள் அக்கினிமுகன், சிங்கமுகன், ஆட் டுமுகன் முதலிய இயற்கைக்கு மாறுபட்ட வைகள். யுத்த முறை இந்திரன் குயிலாக மாறி னான். சூரன் சக்ரவாகப்புள் குருவியாக மாறி னான். இந்திரன் மயிலாக வந்தான். தீ, காற்று முதலிய உருவுடன் தோன்றினான், வேலால் குத்துதல், சேவலாக ஆகிவிடுதல் முதலியவை எல்லாம் காட்டுமிராண்டி காலத்திய கற்பனை யேயாகும். இந்திரனுடைய நிலைமையும், இரா மாயணத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்திர னைவிட காட்டுமிராண்டித் தன்மை கொண்ட தாகவும் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது.

- விடுதலை நாளேடு 23.8. 19

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! (3)

13.11.1948-குடி அரசிலிருந்து...

சென்றவாரத் தொடர்ச்சி

அதையொட்டித்தான் ராமன் அவ தாரம் ஏற்பட்டுச் சீதையை ராவணனுக்குப் பறிகொடுக்க வேண்டி ஏற்பட்டதாம். என்னே தெய்வத்தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப்பட்ட தெய்வத்தன்மைகள். ஆண் கள் தன்மை இப்படி என்றால், ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால் நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.

மற்றொரு கதை!

ராமாயணத்துக்கு கூறப்படும் மற்றொரு கதையைப் படித்தால் இன்னும் அசிங்கமாயிருக்கும். ஒரு நாள் நண்பகலில் மகாவிஷ்ணு தன் மனைவியான லட்சுமியிடம் கூடிக் கலவி செய்து கொண் டிருந்தாராம். அதைத் துரதிர்ஷ்டவசமாக துவாரபாலகர்கள் பார்க்க நேர்ந்து விட்டதாம். உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவர்களை அசுரர்களாகப் பிறக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சாபம் கொடுத்து விட்டாராம். இவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காக துவார பாலகர்களா தண்டனை அடைவது? அப்படித்தான் பகலில் கூடுவதாயிருந்தாலும் காவல்காரர்கள் வெளியில் இருக்கிறார்களே ஏதாவது அசந்தர்ப் பத்தில் வந்துவிடப் போகிறார்கள் என்று கதவையாவது மூடிக்கொண்டு இருக்க வேண்டாமா? அவ்வளவு அறிவு கூடவா இல்லை அந்த ஆரியக் கடவுள்களுக்கு? இவ்வளவு முட்டாளையா தெய்வமென்று கூறுவது, என்னே மடத்தனம்.

தசரத மகாராஜாவின் தர்பார்!

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவி களா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர்பா ரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக்கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்கு பவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?

எவ்வளவு அயோக்கியத்தனம் செய் கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கை யைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத் திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத் தையே அப்பெண்ணுக்கு(கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.

இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண்டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார் களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்துவிடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோசலையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய்கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடைய இந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும்போது.

கம்பனின் கடைகெட்ட போக்கு!

இவ்வளவு வஞ்சக நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி, பரதனின் வேலைக்காரி இதில் தடையிடாதிருந்தால் பட்டம் சூட்டிக் கொண்டிருப்பானே ராமன். பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தினத் தன்று காலை தனக்குப் பட்டமில்லை என்று ராமன் அறிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு அழுகிறானே, இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகிறானே, விதி தவறுமா என்று அழுகிறானே, காட்டுக்கு விரைந்து சென்றுவிட்டால் பரதன் அழைத்ததும், பிறகு தந்திரமாகத் திரும்பி வந்துவிடலாம் என்று தாயாருடன் மறுபடியும் சூழ்ச்சி செய்கிறானே, இவ்வளவையும், கூலிக் காசுக்காகப் பாடிய கம்பன் மறைத்து விட்டானே. அரசு கிடையாது என்று கேட்டதும் அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா அவன் முகம் என்று பாடிவிட்டானே; கூலிக்காரக் கம்பன்; இனத்துரோகி கம்பன்.

மறுக்க முன்வரட்டுமே!

பார்ப்பனரின் பிச்சைக் காசுக்காக ராமாயணப் பிரசாரம் செய்யத் துவங்கிய தோழர்கள் துணிவிருந்தால் இவற்றை மறுக்கட்டுமே, பார்ப்போம். எதையாவது தவறு என்று காட்டட்டுமே நாங்கள் புத் தகங்களில் எழுதியிருக்கிறோமே, இவ் வுண்மைகளை விளக்கமாக ஏதோ ஒரு கம்ப பக்தன் கூட முன்வரக் காணோமே எங்கள் கூற்றை மறுக்க. மற்றொரு ஆரிய இதிகாசங்களாகிய பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார் இருக்க, ராமா யணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன். இடையில் குறள் வந்து குறுக்கிட்டது தானே குற ளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் தான் கம்பனுக்குக் கூலி கொடுத்து கவிபாடும்படி செய்துவிட்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.

- தொடரும்
- விடுதலை நாளேடு, 23.8 .19
 

சனி, 24 ஆகஸ்ட், 2019

பெரியார் பேசுகிறார்: இது என்ன நியாயம்?


தந்தை பெரியார்




தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து  கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?

இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள்  மனதில் முடிவு கொண்டு அந்த மனுதர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள் முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ, அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார்.

இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின்  மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு  செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.

இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய  எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் -ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் _- கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக  நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று  எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக்காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசிபாலிட்டிகளும்  கிராமப் பஞ்சாயத்துக்களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்றவர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப்பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர்.

உள்ளபடியே ஜனநாயகத்தின் பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன்.  இந்த வருடம் கிராமத்தில்தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்தவருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?

என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள், சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.

இந்தக் கல்வித் திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத்தினுடைய அடிப்படை  என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத்  திட்டமா அல்லவா? அதாவது  இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு  வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லுகிறது.

ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பள்ளியாண்டியன் மகன் பன்றி மேய்ப்பது ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும்  செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.

என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது  வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்கமாக, சுதந்திரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயணமாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப்படுகிறது. இதுவா முறை? மக்கள்  யோசித்துப் பார்க்க வேண்டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய  ஆட்சியும்!

தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர்களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரியாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.

தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடுபடுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு  விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச்சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய  இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக  முயற்சி செய்கிறார். 

நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய  பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான்  ஏற்பட முடியும். அதனால்தான் அவர் இந்தப்படி செய்கிறார்.

ஆனால், அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால்தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்குபவர்களாக  இருக்கிறோம்.

(15.11.1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு)

- ’விடுதலை’, 17.11.1953

-  உண்மை இதழ், 1-15.7.19

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

ஹிந்து மதப் போக்கு கடவுள்களுக்கு மனைவிகள் ஏன்? ஆலயங்கள் ஏன்? நகைகள் ஏன்?

நாமக்கல் கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேச்சு
(வாசக நேயர்களே,
ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.
இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.
திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)
நமது கடவுள்கள்
இந்த விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுள்களைப் பற்றியும் அவைகளின் திருவிளையாடல் களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டு மிராண்டித்தனமேயாகும் என்றாலும் நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்வித குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால் நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரசாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.
கடவுள் தன்மை
கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழையகால அதாவது காட்டு மனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும் முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதது என்றும் அது பெயரும் குணமும் உருவமும் இணையும் இல்லாதது என்றும் மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக்கூடியது என்றும் சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேசவேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந் திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும் நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும் அது சமுதாய வாழ்விற்கு மிக்க பயனளிக்கும் என்றும் பல அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால் இன்றைய தினம் இந்துக்கள் என்பார்களுடைய சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன பாருங்கள். மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலிய வைகளும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன. காசியில் ஒரு கோவிலில் 2 உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவைகளுக்கும் பூசை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்வள வோடு இல்லாமல் இக்கடவுள்களுக்கு பெண்டு பிள்ளைகள் வைப்பாட்டி, தாசி விபசாரித்தனம், ஆகாரம், உறக்கம், புணர்ச்சி முதலியவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும் இக்கடவுள்களுக்கு கல்யாணம், சாவு முதலியனவும் கூட கற்பிக்கப்படுகின்றன.
திருவிழா ஆபாசம்
கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை. செய்கையில் செய்து காட்டி அதாவது கடவுள் விபசாரிதனம் செய்வதாகவும், தாசிவீட்டுக்குப் போவதாகவும் மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவ தாகவும் உற்சவங்கள் செய்துகாட்டி அவைகளுக்காக பல கோடிக்கணக்கான ரூபாய்களும் மனிதனின் விலை உயர்ந்த நேரமும் ஊக்கமும் உணர்ச்சியும் பாழாக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20ஆவது நூற்றாண்டில் செய்யக் கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக்கொண்டு அவைகள் மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்ததாக புராணங்களையும் இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக்கடவுளாவது ஏற்றுக்கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும் சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் 3 தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண்ஜாதி வேண்டியிருந்தால் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று? என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா? அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா? அல்லது ஓடிப்போய்விட்டதா? அல்லது முடிவெய்தி விட்டதா? என்று கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக் கல்யாணத்துக்கு கொட்டு முழக்கு ஆடம்பரம், பணச்செலவு ஏன்? சாமி கல்யாண சமாராதனை சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப்படி வருஷம் எத்தனை உற்சவம் ? எங்கெங்கு உற்சவம்? இவைகளால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100க்கு 95 பேர்கள் தற்குறி, நமது உலகத் திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒரு மனிதனுக்கு தினம் சராசரி 2 அணா படி கூட இல்லை என்று சொல்லு கிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா?
படையல் யார் வயிற்றில் போகிறது?
ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள் ? இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று புறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப் படுவதென்றால் யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும் ஆருத்திரா தரிசனத்துக்கும் தை பூசத்துக்கும் கார்த்திகை தீபத்துக்கும் திருப்பதிக் குடைக்கும் திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்து செலவு, மெனக்கேடு செலவு, உடல் கேடு, ஒழுக்கக்கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இக்கடவுள் களால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்று கேட் கின்றேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்கு பயன்படுத்த முயற்சி செய்தால் வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களை கைப்பற்றி தொழில் சாலைகள் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினால் வேலை இல்லாத் திண்டாட்டமும் தற்குறித் தன்மையும் அந்நிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டு தலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். ஏதோ ஒரு கூட்டம் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டு தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுவதா? என்று கேட்கின்றேன்.
மற்றும் கடவுள் பேரைச் சொல்லிக்கொண்டு பக்தியின் காரணம் காட்டிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுகிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மஞ்சள் துணி கட்டிக்கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும் மொட்டை அடித்துக்கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும் சாம்பலையும் அடித்துக் கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக் கொள்ளு வதும் அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆனகாரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா?
கோவில்கள் எதற்கு?
மற்றும் மக்கள் சாப்பிடக்கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவைகளை கல்லின் தலையில் குடம் குடமாய் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பர துணிகள் எதற்கு ? லக்ஷம் 10 லக்ஷம் கோடி பெறும்படியான ஆறு மதில் ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள் கட்டிடங்கள் கோபுரங்கள் எதற்கு? தங்கம் வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவைகள் எல்லாம் நாட்டு பொது செல்வங்கள் அல்லவா? இவைகளை கல்லுகளுக்கு அழுது விட்டு சோம்பேறி சூழ்ச்சிக்கான பார்ப்பன வயிற்றை நிரப்பி அவன் மக்களை அய்.சி.எஸ்., ஹைகோர்ட் ஜட்ஜ் திவான் களாக ஆக்கி விட்டு இதுதான் கடவுள் தொண்டு என்றால் இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டு களையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளு கிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக் கொள்ளு கிறார்களா? என்று கேட்கிறேன்.
உண்மை பேசுகிறவன் நாஸ்திகனா?
இனி எப்பொழுது தான் நமக்கு புத்தி வருவது. இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும் அவனது எச்சிலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக்கொண்டு முட்டாள் ஜனங்கள் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடு கிறார்கள். அப்படியானால் இந்த கடவுள்களை ஒப்புக் கொண்டு இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமாய் கூத்தாடுவது தானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகரா? அப்படி யானால் அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப் பற்றி எங்களுக்கு சிறிதும் கவலையில்லை. அந்தப் பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்படமாட்டோம். ஏதோ எங்களுக்கு தோன்றியதை - நாங்கள் சரி என்று நம்புவதை அதாவது நம் நாட்டுக்கு மேற்கூறிய மதமும் கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றனவென்றும் இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும் ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப் பித்துக்கொள்ளு கிறோம். பொறுமையாய் கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்று தான் சொல்லுகிறோமே ஒழிய பார்ப்பனர்கள் போல் நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ நம்பினால்தான் மோக்ஷம். நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை என்பதாக பேசிவிட்டு காங்கிரஸ் அரசியல் திருவிளையாடல்களைப்பற்றி பேசினார்.
- விடுதலை 18.12.1937
- விடுதலை நாளேடு, 16.8.19

கடவுளும் - மதமும்

தந்தை பெரியார்
இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும்  மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்றுச் சொல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குத் தானாகவே ஒருவித குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை உணர்கின்றோமாதலினாலேயாம். அதோடுகூட பார்ப் பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல், தேசியம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர் களும், சமயம் புராணப் பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப் புக்காரர்களும், இவ்வியக்கத்தை எதிர்க்கக் கடவுளையும் மதத்தையும் பற்றிய பொதுமக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக் கொண்டும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதானாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக் கொண்ட உண்மை நண்பர்களில் சிலர் இவ்விஷமப் பிரச்சாரத்தைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சிலர் பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத் துடிப்புக் கொள்வதாலும் நமது நிலையையும், கடவுள் மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கிவிட வேண்டு மென்பதாகக் கருதி இத்தலைப்புக் கொடுத்து எழுதப் புகுந்தோம். இவைகளைப் பற்றி இதற்கு முன்னும் பலதடவை எழுதியுள்ளோம் ஆயினும் அவை களையும்விட இது சற்றுத் தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம். வாசகர்கள் தயவு செய்து இதைச் சற்று நிதானமாகவும் கவனமாகவும் படித்துப்பார்க்கும் படி வேண்டுகின்றோம். இக்கட்டுரை யானது இதே தலைப்பின் கீழ் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரை யின்போது நம்மால் எடுத்துச் சொல்லப்பட்டதை அனு சரித்தும் சில நண்பர்கள் அதை விளக்கித் தலையங்கமாக எழுதும் படி சொன்னதை அனுசரித்தும் எழுதப்பட்டதாகும்.
முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்க அவர்களுக்கு அறிவு, ஆற்றல் இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின் றோம். அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும் மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால் தான் நாம் அதைப் பற்றி கவலையில்லை என்று சொல்ல வேண்டிய தாயிற்றே யொழிய உண்மையில் கடவுளை யும் மதத்தையும் பற்றி பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை. அதுபோலவேதான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம். எப்படி எனில், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் நமக்கு எதிராக தம்மால் கூடிய சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்தும் ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும், சமயப் பெரியார் என்றும் கூறிக் கொண்டு அவ்வார்த் தைகளையே தமது ஆயுதமாகவும், சமய சம்பந்தமான சில பைத்தியக்காரர்களைத் தமக்குப் படையாகவும் வைத்துக் கொண்டு அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப் போர் தொடுக்க ஆரம்பித்ததன் பலனாய் சைவசமயம் என்பதும் சமயாச்சாரியார்கள் என்பவர்களும் சந்திக்கு வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டது. எனவே இன்றைய தினம் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், ராமாயணம், பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம், பூஜை, உற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும் சமயப் பற்றும் கொண்டவன் என்றும் மற்றவர்கள் நாத்திகர்கள், சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டது. இது எப்படி இருந்தபோதிலும், கடவுள் மதம் என்பது என்னவென்பது பற்றியும், இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும் இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது அறியாமையினா லுண்டாக்கினார்களா? என்பவைகளைப் பற்றியும் இவற்றில் நமது அதாவது மக்கள் கடமை என்ன என்பதுபற்றியும் சற்று ஆலோசித்து பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
முதலாவதாக, இங்கு, குணம், உருவம் பெயரற்ற தன்மையுடைய கடவுள் என்பதைப் பற்றியும் மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமே, இங்கு விவரிக்கக் கருதியுள்ளோமே தவிர மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும், மதப்பிரிவுகளான கிறிஸ்து, மகமதியம், ஜைனம், பௌத்த சீக்கிய, சைவ, வைணவ, நிரீச் சுரவாத, உலகாயுத, சாக்கிய, வாம முதலிய பல உள் மதங் களைப் பற்றியும் நாம் இங்கு தனித்தனியாக பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை ஏனெனில் அவற்றிற்கு ஏற்கனவே மறுப்புகள் தாராளமாய் வெளிப்பட்டு ஒருவருக் கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்ததும் நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்பந்தத்திற்குள் புகுந்துமே தான் ஒவ்வொரு வர்களும் அவரவர்கள் கடவுளையோ, கடவுள் தூதர் களையோ, அவதாரங் களையோ, சமயங்களையோ சமயாச் சாரியார்களையோ காப்பாற்றிக் கொள்ள முடிந்ததே ஒழிய அறிவின் மீதோ ஆராய்ச்சியின் மீதோ, நியாயத்தின் மீதோ, நிலை நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலக மறிந்ததாகும். ஆதலால் இத்தலையங்கத்தில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.
முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவ தில்லை. எப்படி எனில் சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ வஸ்துவையோ காட்டி, சாமி! என்றும் அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்கவேண்டும். அது எப்படி என்றும் எப்போ தென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ் சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ் வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படு மானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன் - அல்லா, காட் என்று சொல்லப்படு கின்றதென்று சொல்வதானா லும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்க தாயிருக்கின்றது. ஆகவே அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும் அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படி யிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டுமானால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாய் உணர முடியும். அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவை யென்றால் பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், அவை தீர்க்க வேண்டி யவைகள் முதலிய அநேக விஷயங்கள் கடவுளாகக் கருதப் படுகின்றது, இவைகளெல்லாம் இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள்ளப்பட்டவைகள், அதிலும் இமயமலையே கைலையங்கிரியாகவும் அதுவும் வெள்ளிமலையாகவும் அங்கு கடவுள் இருப்பதாக வும் அங்கிருந்து வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிருந்து வருவதாகவும் கருதப்பட்டு இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டு பிடிக்க முடியாதிருந்ததும், மேல்நாட்டை மேல்லோகமென் றும், கீழ்நாட்டை பாதாள லோகம், நரகலோகம் என்றும் இப்படி பலவாறாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும்போது அவற்றின் உண் மையை அறிய முடியாததாலேயே அவை கடவுளென்றும் அவற்றின் இயங்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற்பட்டது. இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவை களுக்கே கடவுள் சக்தி என்று சொல்லிவிடுகின்றான். உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக் காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.
எனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக சூரிய, சந்திரகிரணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து  சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டு பிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங் கிருந்து எப்படி தண்ணீர் வருகின்ற தென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன. அது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார, உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டுபிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயலென்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவைகளும் நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும். மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள் மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன் றப்படாம லிருப்பதையும் பார்க்கின்றோம் அது அவ்விருவ ருடைய அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமேயாகும்.
இப்போது நம் மனத்திற்கு எட்டாத, காரியங்களை மேனாட்டார் செய்யும் போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோமென்றாலும் நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும், வாழ்க்கையின் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயுமிருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும் ஈடு செய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும், கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான். ஆறுதலையும் திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்ய முடியாத இடத் திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டு, தான் திருப்தி அடைகின்றார்கள். அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித் தீர வேண்டியவர்களாக இருக் கின்றார்கள். ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள் எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும் தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதி திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே சாதாரண மக்கள் கடவுளுக்கும் சற்று அறிவுடைய மக்கள் கடவுளுக்கும் ஆராய்ச்சிக்காரர்கள் கடவுளுக்கும் பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாச முண்டு. ஒருவொருக் கொருவர்  கடவுள் வணக்கத்திலும், கடவுள்மீது சுமத்தும் பொறுப்பிலும் அநேக வித்தியாச முண்டு.
- 'குடிஅரசு' - தலையங்கம் - 28.07.1929
 - விடுதலை நாளேடு, 18.8.19