13.11.1948-குடி அரசிலிருந்து...
சென்றவாரத் தொடர்ச்சி
அதையொட்டித்தான் ராமன் அவ தாரம் ஏற்பட்டுச் சீதையை ராவணனுக்குப் பறிகொடுக்க வேண்டி ஏற்பட்டதாம். என்னே தெய்வத்தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப்பட்ட தெய்வத்தன்மைகள். ஆண் கள் தன்மை இப்படி என்றால், ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால் நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.
மற்றொரு கதை!
ராமாயணத்துக்கு கூறப்படும் மற்றொரு கதையைப் படித்தால் இன்னும் அசிங்கமாயிருக்கும். ஒரு நாள் நண்பகலில் மகாவிஷ்ணு தன் மனைவியான லட்சுமியிடம் கூடிக் கலவி செய்து கொண் டிருந்தாராம். அதைத் துரதிர்ஷ்டவசமாக துவாரபாலகர்கள் பார்க்க நேர்ந்து விட்டதாம். உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவர்களை அசுரர்களாகப் பிறக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சாபம் கொடுத்து விட்டாராம். இவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காக துவார பாலகர்களா தண்டனை அடைவது? அப்படித்தான் பகலில் கூடுவதாயிருந்தாலும் காவல்காரர்கள் வெளியில் இருக்கிறார்களே ஏதாவது அசந்தர்ப் பத்தில் வந்துவிடப் போகிறார்கள் என்று கதவையாவது மூடிக்கொண்டு இருக்க வேண்டாமா? அவ்வளவு அறிவு கூடவா இல்லை அந்த ஆரியக் கடவுள்களுக்கு? இவ்வளவு முட்டாளையா தெய்வமென்று கூறுவது, என்னே மடத்தனம்.
தசரத மகாராஜாவின் தர்பார்!
ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவி களா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர்பா ரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக்கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்கு பவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?
எவ்வளவு அயோக்கியத்தனம் செய் கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கை யைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத் திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத் தையே அப்பெண்ணுக்கு(கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.
இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண்டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார் களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்துவிடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோசலையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய்கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடைய இந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும்போது.
கம்பனின் கடைகெட்ட போக்கு!
இவ்வளவு வஞ்சக நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி, பரதனின் வேலைக்காரி இதில் தடையிடாதிருந்தால் பட்டம் சூட்டிக் கொண்டிருப்பானே ராமன். பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தினத் தன்று காலை தனக்குப் பட்டமில்லை என்று ராமன் அறிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு அழுகிறானே, இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகிறானே, விதி தவறுமா என்று அழுகிறானே, காட்டுக்கு விரைந்து சென்றுவிட்டால் பரதன் அழைத்ததும், பிறகு தந்திரமாகத் திரும்பி வந்துவிடலாம் என்று தாயாருடன் மறுபடியும் சூழ்ச்சி செய்கிறானே, இவ்வளவையும், கூலிக் காசுக்காகப் பாடிய கம்பன் மறைத்து விட்டானே. அரசு கிடையாது என்று கேட்டதும் அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா அவன் முகம் என்று பாடிவிட்டானே; கூலிக்காரக் கம்பன்; இனத்துரோகி கம்பன்.
மறுக்க முன்வரட்டுமே!
பார்ப்பனரின் பிச்சைக் காசுக்காக ராமாயணப் பிரசாரம் செய்யத் துவங்கிய தோழர்கள் துணிவிருந்தால் இவற்றை மறுக்கட்டுமே, பார்ப்போம். எதையாவது தவறு என்று காட்டட்டுமே நாங்கள் புத் தகங்களில் எழுதியிருக்கிறோமே, இவ் வுண்மைகளை விளக்கமாக ஏதோ ஒரு கம்ப பக்தன் கூட முன்வரக் காணோமே எங்கள் கூற்றை மறுக்க. மற்றொரு ஆரிய இதிகாசங்களாகிய பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார் இருக்க, ராமா யணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன். இடையில் குறள் வந்து குறுக்கிட்டது தானே குற ளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் தான் கம்பனுக்குக் கூலி கொடுத்து கவிபாடும்படி செய்துவிட்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.
- தொடரும்
- விடுதலை நாளேடு, 23.8 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக