வெள்ளி, 14 அக்டோபர், 2022

பகுத்தறிவுப் பாதைதான் மக்களை முன்னேற்றும்

 

பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவுப் பாதைதான் மக்களை முன்னேற்றும்

ஆகஸ்ட் 16-31,2021

தந்தை பெரியார்

தோழர்களே, தாய்மார்களே, இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி முறை நீண்ட நாள் நடப்புக்கு மாறாக நடப்பதினாலும், இம்மாதிரி மாற்றத்துக்கு நானும் காரணமானவன் ஆனபடியால் சிறிது விளக்கிப் பேச எண்ணுகிறேன்.

நம் நாட்டில் திருமணத்துக்கு வருகின்றவர்களை மகிழ்ச்சி அடைய வைக்கவோ, பெருமை சம்பாதிக்கவோ மேளவாத்தியம், சதிர், பாட்டுக் கச்சேரி முதலியவை ஏற்பாடு செய்து பொருள் விரயமும், நேரப் போக்கையும் உண்டாக்குவார்கள்.

இவற்றை நான் கண்டிப்பது போலவே சுயமரியாதைத் திருமணத்திலும் பொருள் அதிகம் செலவு செய்து ஆடம்பரமாக செய்யப்படும் திருமணங்களையும் வெறுக்கின்றேன்.

இப்போது நான் பேசப் போவதைச் சிந்திக்கும் முன்பு நான் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு பழுத்த நாஸ்திகன், நாஸ்திகன் என்ற வார்த்தையை, மக்கள் தவறாக உணர வேண்டும், வெறுக்க வேண்டும் என்ற கருத்தில், கடவுள் இல்லை என்பவன் என்று கூறி விட்டார்கள். அதுபற்றிக் கவலையில்லை.

எவன் ஒருவன் எந்த விஷயத்தையும் அறிவு கொண்டு சிந்தித்து, தன் புத்திக்குட்பட்டபடி நடக்க வேண்டும் என்று கூறுகிறானோ, அவன் நாஸ்திகன் என்றும், கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ அறிவு கொண்டு ஆராயாமல் அப்படியே நம்பி நடப்பவன் ஆஸ்திகன் என்றும் கூறி வருகின்றார்கள்.

இப்படி ஆஸ்திகத்தின் பேரால் நடைபெறும் நடப்புகள் மக்கள் சமுதாயத்தை மடையர்களாக ஆக்குவதோடு ஒழுக்கக் கேட்டையும், நாணயக் கேட்டையும் கூட ஏற்படுத்தி வருகின்றன. எவன் ஒருவன் அறிவைப் பயன்படுத்தி முன்னோர் முறையையும், சாஸ்திரங்களையும், கடவுளையும் ஆராய்கின்றானோ அவன் நாத்திகன். அவனை அரசன் நாட்டைவிட்டு விரட்ட வேண்டும். அவர்கள் கேடானவர்கள் என்றுதான் பாரதம், இராமாயணம், பாகவதம் முதலியனவும் கூறுகின்றன.

பகுத்தறிவு கொண்டு எந்தக் காரியத்தையும் சிந்தித்து உன் அறிவுக்குப்பட்டதை ஏற்றுக் கொள்க! உட்படாததைத் தள்ளிவிடு! என்று சொல்ல 2,000 ஆண்டுகளாக ஆளே இல்லை. ஏதோ 2,500 ஆண்டுகளுக்கு முன் புத்தர்தான் தோன்றி முதல் முதல் இப்படிப்பட்ட அறிவுப் பிரச்சாரம் செய்தார். அவர் காலத்தில் வெற்றி பெற்றாலும்கூட, அவருக்குப் பிறகு அவர் மறுத்தத்தை பார்ப்பனர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள். புத்த மார்க்கத்தை ஒழிக்கவேதான் அவதாரங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலியவர்கள் உண்டாக்கப்பட்டனர்.

பாரதம் உற்பத்திக்கே காரணம் புத்தனை ஒழிக்க என்று தேவி பாகவதம் கூறுகின்றது. காரணம், எல்லாம் அறிவு கொண்டு சிந்திக்கச் சொன்னார். சாஸ்திரப்படி, முன்னோர்கள் கூற்றுப்படி நடக்காதே. அறிவு கொண்டு அலசிப் பார்த்து ஏற்றுக்கொள் என்று கூறியதற்காகவே ஒழிக்கப்பட்டார்.

புத்தருக்குப் பிறகு நாங்கள்தான் அக்காரியத்தைச் செய்து வருகிறோம். எங்கள் பிரச்சாரமே கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றை ஒழிக்கப் பாடுபடுகின்றோம். இதன் காரணமாகவே எங்களையும் நாத்திகர்கள் என்று கூறுகின்றார்கள். நாங்கள் கவலைப்படவில்லை. கவுரவமாகவே ஏற்றுக் கொள்ளலாம்.

நாங்கள் தோன்றி எங்கள் அறிவுப் பிரச்சாரத்தினால் மக்களை ஆஸ்திகத் துறையின்று கை கழுவும்படி செய்து கொண்டு வருகின்றோம். எந்த ஆஸ்திகனும் என்னை ஒன்றும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூற முடியாது.

இந்த 1961ஆம் ஆண்டில் விஞ்ஞான அதிசய அற்புதக் காலத்தில் நாம் எவ்வளவோ மாறுதல்களை எல்லாம் அனுபவிக்கின்றோம், பார்க்கின்றோம். நாம் எந்த வகையிலாவது உணர்ந்து இருக்கின்றோமா என்றால் கிடையாது. நம்மை முட்டாளாக, மடையனாக ஆக்க ஏற்ற சாதனங்கள்தான் மிகுதியாக உள்ளன.

இவற்றை ஒழிப்பதுதான் எங்கள் தொண்டு. இதற்கான முயற்சியில் ஒன்றுதான் இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமண முறையுமாகும்.

நமது பழைய திருமண முறைகள் எல்லாம் நம்மை மானமற்றவர்களாக, மடையர்களாக ஆக்கவே நமது திருமண முறைகள் எல்லாம் இருந்து வருகின்றன.

தமிழன் தோன்றி எவ்வளவோ ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இப்படிப் பட்டவனுடைய சமுதாய வாழ்வுக்கு இப்படிப்பட்ட திருமணத்துக்கு என்ன முறை இருந்தது என்று கூற முடியுமா? கிடையாது. தொடர்ந்து பார்த்துக் கொண்டே போனால் முறை இருந்ததா என்பதே சந்தேகமாகத் தோன்றும்.

ஏதோ புராணங்கள், பிரபந்தங்களில் வரும் முறைகளைத்தான் கூறுவார்கள். சைவன், மீனாட்சி _ சொக்கன் திருமண முறைப்படி என்பான். வைணவன், இராமன் _ சீதை திருமணத்தை உதாரணம் காட்டுவான். புலவர்கள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி _ கோவலன் திருமணத்தைக் காட்டுவார்கள். இவற்றைத் தவிர வேறு காட்ட முடியாது. இவற்றை எல்லாம் தமிழர்களுடையது என்று சொல்லவும் முடியாது.

நம்மிடையே நடைபெற்று வரும் திருமண முறைகள் எல்லாம் ஜாதியையும், மதத்தையும் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதாகும். நாம் எதனால் கீழ்மக்கள் என்றால், இந்த ஜாதி மதத்தின் காரணமாகவேயாகும்.

தொல்காப்பியத்திலேயே ஆதியில் சூத்திரருக்கு திருமணம் கிடையாது.  பிற்காலத்தில்தான் மற்ற 3 வருணத்துக்காரர்களுக்கும் உண்டான திருமணமானது நம் வருணத்தாருக்கும் வந்தது என்று கூறப்பட்டு உள்ளது.

நம்மிடையே பார்ப்பனைக் கூப்பிட்டு திருமணம் செய்வது மிகவும் பிற்காலத்தில்தான் நடந்து வந்திருக்கிறது. எங்கள் பகுதியில் கொங்கு வேளாளர்களுக்கு பார்ப்பான் வந்து திருமணம் செய்து வைப்பது கிடையாது. அவர்கள் ஜாதியிலேயே அருமைக்காரர் என்ற ஓர் ஆள் இருப்பார். அவரும் பரிகாரியுமே சடங்குகள் செய்தார்கள்.

எங்கள் சுயமரியாதைத் திருமணத்துக்கு புறம்பான புரோகிதத் திருமணத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை. கல்யாணம் என்றாலே ஓர் ஆண் ஒரு பெண்ணை வீட்டு  வேலைக்காக அடிமை கொள்ளுதல் என்று தான் பொருள். கணவன் கொடுமைப் படுத்தினாலும், அடித்தாலும், உதைத்தாலும் ஏன் என்று கூட கேட்க முடியாது. சொத்து உரிமை, மணவிலக்கு உரிமை முதலியனவும் கிடையாது.

1929இல் நாங்கள் எங்கள் செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுடைய குறைபாடுகள் இன்ன இன்ன இதுகளுக்குப் பரிகாரம், இன்ன இன்ன வேண்டும் என்று எல்லாம் தீர்மானங்கள் போட்டோம். பெண்களுக்கு சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, மற்ற மற்ற துறைகளிலும் உரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்டு உள்ளோம். அதுகள் எல்லாம் இன்று சட்டமாக ஆகி வருகின்றதைப் பார்க்கின்றோம்.

தோழர்களே, நமக்கு எல்லாவிதமான வசதிகளும் உள்ளது. ஆனால், பகுத்தறிவினைப் பின்பற்றும்படியான எண்ணம் நம்மிடையே எத்தனை பேர்களுக்கு உள்ளது? எல்லோரும் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றைப் பற்றி நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, யாருக்குத் தெரியும்? கடவுள் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? சாஸ்திரம் என்றால் என்ன என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், எல்லோரும் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுகின்றார்களே ஒழிய, எவன் உள்ளபடியே நம்புகின்றான்?

இவற்றைப் பற்றி விளக்க நல்ல ஆட்களோ, சாதனங்களோ, நூல்களோ இல்லை. இந்த நாட்டில் இதுபற்றிப் பேசுகின்றவர்கள் பாடுபடுபவர்கள் நாங்கள்தான்.

பல துறைகளிலும் எங்கள் நாஸ்திகப் பிரச்சாரம் புகுந்ததன் காரணமாகத்தான் மாறுதல்கள் நல்லவண்ணம் ஏற்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தி அறிவுரையாற்றினார்.

(27.8.1961 அன்று ஆம்பூரில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – விடுதலை 6.9.1961.) 

பகுத்தறிவை நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள்!

 


ஆகஸ்ட் 1-15,2021

உலகத்திலே மனிதர்களைத்தான் ஆறறிவு கொண்டவர்கள் – பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். பிராணிகளைவிட மனிதன் ஒரு அளவில்தான் மேம்பட்டவன். அதனால்தான் அவனுக்குத் தனிச் சிறப்பு. இந்த அறிவை மனிதன் மனிதனிடம் நடந்து கொள்ளும் அன்புக்கும், உதவிக்கும் பயன்படுத்தாமல், இன்னொருவனுக்குக் கேடு செய்வதிலும், திருடுவதிலும், வஞ்சிப்பதிலும் செலுத்தக் கூடாது என்றுதான் சொல்லுகிறோம். ஏன், மேலும் மேலும் வற்புறுத்துகிறோம் என்றால் மனிதன் இந்தக் கேவலமான நிலைமையிலிருந்து மீண்டு, மனித சமுதாயத்திலே மனிதனாக மனிதனுக்கு மனிதன் தோழனாக வாழவேண்டுமென்றே ஆசைப்படுகிறதனால்தான். ஆகையால் நாங்கள் சொல்வது எல்லாம் பழைய மூடப் பழக்க வழக்கங்களையெல்லாம் விட்டொழியுங்கள். தங்கள் தங்கள் புத்தியைக் கொண்டு, அறிவைக் கொண்டு சுதந்திரமாய் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று கூறுகிறோம். எந்தக் கடவுளாலும், எந்த சாஸ்திரத்தினாலும், எந்த மதத்தினாலும், எந்த அரசாங்கத்தாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கமும், நேர்மையும் தானாக வந்துவிடாது. நான் அவற்றைக் குறை கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே அவை எல்லாம் நம் சமுதாயத்திற்கோ, நம் மக்களுக்கோ உகந்ததில்லை. அவ்வளவும் புரட்டும், பித்தலாட்டங்களும் நிறைந்திருக்கின்றன. அதைப் பின்பற்றக் கூடியவர்கள் எப்படி ஒழுங்காக வாழ முடியும்?

இதைப்போல்தான் இன்றைய அரசாங்கமும் இருக்கிறது. சும்மா சொல்லவில்லை. எனக்கு வயது 72 என்னுடைய 60 வருட அனுபவத்தைக் கொண்டு தான் சொல்லுகிறேன். ஆகவே, இன்றைய நிலைமையில் எந்த மனிதனும் யோக்கியமாக நடந்து கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எந்த ஸ்தானத்திலும், எந்தப் பதவியிலும் எவன் இருந்தாலும் லஞ்சம் வாங்கித்தான் தீரவேண்டுமென்ற மனப்பான்மை பரவி விட்டது.

இன்றைய நிலையில் நான் கூட ஒரு பதவியில் இருந்தால் வாங்கித்தான் ஆக வேண்டும். என் வரைக்கும் 100, 1,000 கணக்குக்கு ஆசையிருக்காது. காரணம்? இது எனக்கு மட்டமானது. ஆனால், லட்சக்கணக்கில் ரூபாய் வருமானால் நானும் ஒரு கை பார்க்கத்தான் செய்வேன். ஏன்? இதுதான் இன்றைய தின மக்கள் இயற்கை நிலைமை, மூடக் கொள்கை. ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், சர்க்காருக்காக, பாவ புண்ணியத்துக்காக நடந்து கொள்ள வேண்டும், சமுதாயத்திற்காக நடந்து கொள்ள வேண்டுமென்பதும் இனிமேல் முடியாத காரியம். நாம், இன்னொருவனுக்கு மோசம் செய்தால் அவனுடைய வயிறு எரிகிற மாதிரிதான் நமக்கும் இன்னொருவன் மோசம் செய்தால் வயிறு எரியும் என்று நினைக்க வேண்டும். ஆகவே, நாளுக்கு நாள் திருந்தி ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டுமானால் நாம் நல்ல காரியங்கள் செய்யாவிட்டாலும், கெட்ட காரியங்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென்ற தன்மை ஏற்படத்தக்க காரியங்கள் கண்டுபிடித்து அதற்கேற்ற காரியம் செய்ய வேண்டும். அதுதான் இனி மனிதத் தொண்டாக மாற வேண்டும். ஆகவே, இனியும் மக்கள் தொட்டதற்கெல்லாம் சட்டம் மீறுவதோ, இல்லாமல் அதிகாரிகளையும் சர்க்காரையும் எதற்கும் மீறும் உணர்ச்சி இல்லாமல், வரவேண்டுமென்று சொல்லுகிறேன். எதற்கும் பயந்து அல்ல! இதுதான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் அமைதிக்கும், நல்லாட்சிக்கும் பயனளிப்பதாகும். 

(24.8.1951 அன்று கள்ளக்குறிச்சி அருகே கிராமம் என்னும் ஊரில் வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் போர் தோழர்களுக்கு பாராட்டுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

வியாழன், 13 அக்டோபர், 2022

கடவுளின் நடவடிக்கை

 


      ஜுலை 16-31,2021

தந்தை பெரியார்

உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுள்  ஒருவர் இருக்கிறார். அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப் படுமானால், அவரை நடுநிலைமை யுடையவரென்று சொல்லுவதை விட, பாரபக்ஷம்  (ஒரு சார்பு) உடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.

அவரைக் கருணை உடையவர் என்று சொல்வதை விட, கருணையற்றவர் என்று சொல்வதற்கே ஏராளமான பிரத்தியக்ஷ (நடைமுறை) உதாரணங்கள் இருக்கின்றன.

அவரை நீதிவான் என்று சொல்வதை விட, அநீதிவான் என்று சொல்வதற்கே தாராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட, அவரால், அதிக தீமையே ஏற்படுகின்றது, என்று  சொல்வதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்ட யோக்கியர் என்று சொல்வதை விட, அயோக்கியர் என்று சொல்வதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கின்றாரென்பதை விட, தீமையே செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களிடம்  தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவரென்று சொல்வதை விட, அவர் காட்டுமிராண்டி என்று சொல்வதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதை விட, அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேகக் காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்து வதை விட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே!  ஆராய்ந்து பாருங்கள்!

– ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது. (‘குடிஅரசு’ 9.10.1930).

* * *

தேவஸ்தானச் செல்வங்களை

பொது நலத்திற்குப் பயன்படுத்தலாமே!

திரு.வி.வி.இராமசாமி அவர்கள் சுய மரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக் கேட்பது ஒரு நல்ல கேள்வியேயாகும்.

நான், சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4, 5 வருஷம் தேவஸ்தானக் கமிட்டியில் பிரசிடென்டாகவும், வைஸ் பிரசிடென்டாகவும் இருந்தேன். தேவஸ்தானச் செல்வங்களைப் பொதுநலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால் அது நல்ல வேலை தான். அங்கு போக வேண்டியதும் அவசியந்தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ்தானச் சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால், அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.

ஆகவே, நான் ராஜினாமா செய்தேன். எனது சகபாடிகள் எனது ராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும், ஆனால், பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன்னார்கள். ஆனாலும், நான் வேறு வேலையில் இந்தக் கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப் படுத்தலாம் என்பதும் ஓர் அளவுக்கு உண்மைதான். இராமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடென்ட் திரு.இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கிறார். அது கைகூடுவதற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற்சவங்களையும் நடத்திக் கொடுப்பதற்குச் சுயமரியாதைக்காரர் அங்கு போவது அவசியமற்ற காரியமாகும்.

ஆதலால், கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கவும், கோவில்களின் பேராலுள்ள செல்வங்களையெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங்களில் நமக்குச் சம்பந்தமில்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டால் அவர்களுக்கு நன்மையே யொழிய நட்டம் ஒன்றும் இல்லை. ஆகையால், இந்தவித அபிப்பிராயமுள்ள திரு.இராமசாமியைத் தெரிந்தெடுத்தவர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத்திருப்பார்கள். ஏனென்றால், திரு.வி.வி.இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்ததேயாகும். ஆதலால், அப்படிப் பட்டவர்களின் விருப்பத்திற்கு இணங்கிய திரு.இராமசாமி தனது கடமையைச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

– 6.7.1931, விருதுநகரில் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் விருந்து நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு (‘குடிஅரசு’ 19.7.1931).

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

பிள்ளையார் பிறப்புக்கு நான்கு வகைக் காரணம்: எது உண்மை? எல்லாமே பித்தலாட்டம்! - தந்தை பெரியார் விளக்குகிறார்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

பிள்ளை-யார்?

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

மதம் என்றால் என்ன, எது உண்மை மதம்

இது என்ன நியாயம்?