வியாழன், 27 ஜூன், 2024

நமது இலக்கியம் அழிந்த விதம் – தந்தை பெரியார்

 

நமது இலக்கியம் அழிந்த விதம் – தந்தை பெரியார்

பெரியார் ஜனவரி 1-15, 2024

ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் இவைகள் தமிழில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்லாமல் இவற்றுள் ஒழுக்கமோ, தமிழர் உணர்ச்சியோ ஏதாவது இருக்கிறதாக சொல்ல முடியுமா? நமது சமயம் பண்டிகை உற்சவம், கடவுள், வாழ்வு நாள், கோள் எல்லாம் இவைகளில் அடங்கியவை அல்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறோமா? ஒரு நண்பர் சொன்னார்_ “இந்த நவராத்திரி பண்டிகையும், ஆடிப்பெருக்கு பண்டிகையும் பழைய இலக்கண இலக்கியங்களையும் கலைகளையும் ஒழிப்பதற்கும் பயன்பட்டு வந்திருக்கின்றன” என்று. நம் வீட்டில் உள்ள பழைய ஆதாரங்கள் எல்லாம் ஆடிப்பெருக்கில் வெள்ளத்தில் கிணற்றில் கொண்டு போய் போடுவதையும், நவராத்திரியில் வீடு சுத்தம் செய்வது என்னும் பேரால் பழையவைகளைக் குப்பையில் எறிந்து விடுவதையும் ஒரு காரியமாகக் கையாண்டு வந்திருக்கிறோம்.

புத்தகங்கள், அச்சுகள் இல்லாத பழங்காலத்தில் நம் கலைகளுக்கு, இலக்கியங்களுக்கு ஏதோ சிலரிடம்தான் ஏட்டு ஓலை ரூபமாக சில ஆதாரங்கள் இருந்திருக்கும். அவை அவர்கள் பிள்ளைகளுக்கு முக்கியமானவைகளாக இருந்திருக்காது. இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். அல்லது கேட்கும் வேறு ஒருவனுக்கு சுலபமாய் எடுத்துக் கொடுத்து விடுவான். அல்லது கரையான், பூச்சி, புழு அரித்துவிடும். கடைசியாக ஆடிப்பெருக்கத்தின்போது வெள்ளத்திற்கும், நவராத்திரியின்போது குப்பை மேட்டுக்கும் போய்ச் சேர்ந்துவிடும். இப்படியேதான் நம் இலக்கியங்கள் ஒழிந்து போய்விட்டன. இன்று நாம் காண நம் கண்ணெதிரிலேயே ஒன்று நடந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏட்டுப் பிரதியில் உள்ள தமிழ் இலக்கியங்கள் அவ்வளவும் அச்சுப் போடுவதாக தோழர் உ.வே. சாமிநாதய்யர் அரித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அச்சாகி வெளி வந்தவைகள் அவ்வளவும் அய்யர் இஷ்டப்படியாயும் அய்யர் இஷ்டப்பட்டதுமாகத்தான் வெளியாயிருக்குமே ஒழிய இயற்கை ரூபத்தில் வெளியாயிருக்க முடிந்திருக்குமா என்று பாருங்கள். இதுபோலவே நம் பழைய சமய, ஒழுக்க, வழக்க ஆதாரங்கள் ஒழிந்தே போய் விட்டன. பண்டிதர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் எழுதியுள்ள ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தில் ஆரியர்கள் வந்தவுடன் திராவிடர்களை வெற்றி பெற்று அடக்கி திராவிட ஆதாரங்களையெல்லாம் கைப்பற்றி, தங்களுக்கு ஏற்றபடி ஆரியத்தில் மொழிபெயர்த்து தங்களுடையது போல் வெளியிட்டார்கள். தங்கள் சமயங்களையும், கடவுள்களையும், பழக்க வழக்கங்களையும், தங்கள் உயர்வுக்கு ஏற்றபடி கற்பித்துக் கொண்ட கற்பனைகளையும் புகுத்தினார்கள். இவற்றை அறிஞர்கள் சிலர் மறுத்தாரென்றாலும் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டன என்று பொருள்பட துணிவுடன் எழுதி இருக்கிறார்.

மற்றும், இன்றைய பலஆராய்ச்சியாளரும், இன்று தமிழரிடையுள்ள சமயம், இலக்கியம், இதிகாசம் என்பவை ஆரியர்களுடையன என்றும், ஆரியர்களால் புகுத்தப்பட்டவை என்றும் விளக்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க நாம் இவைகள் தெரிந்த பின்பும் சமுதாயத்தில் இழிவாக்கப்பட்டு தீண்டாத மக்களாய்க் கருதப்பட்ட பின்பும் அவைகளைக் கொண்டாடலாமா என்று கேட்கிறேன்.

தோழர்களே! நாம் கொண்டாடும் பண்டிகைகள் எல்லாம்கூட ஆரிய பிரச்சாரத்திற்காகவே ஏற்பட்டவைகளாகும். அதுவும் பல நமது இழிவுக்காகவே பயன்படுவதாகவும் இருக்கின்றன. ஆரிய மதத்தையும் ஆரியக் கொள்கைகளையும் பின்பற்றும்படியும் வலியுறுத்துகின்றன.

நாம் ஆரிய வர்க்கம் அல்ல என்றும், ஆரிய சமயம் ஆரிய வர்ணாசிரமக் கொள்கை, ஆரியப் பழக்க வழக்கம் முதலியவைகளுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றும், நாம் திராவிடர்கள், தமிழர்கள் என்றும், நமக்கும் ஆரியர்களுக்கும் சமுதாயத் துறையில் ஒரு ஆட்சியின்கீழ் இருக்கும் குடிகள் என்பதைத் தவிர வேறு சம்பந்தம் ஒன்றும் இல்லையென்றும், நமது லட்சியம் வேறு; அவர்களது லட்சியம் வேறு என்றும் கருதி முடிவு பெற்றால்தான் நமக்கு இந்த நாட்டில் சமுதாயத் தொண்டுக்கும் அரசியல் தொண்டுக்கும் தனிப்பட்ட வேலை இருக்கின்றதே ஒழிய, மற்றபடி நாம் ஆரியத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால் நமக்கு எவ்வித பொறுப்பும் வேலையும் முயற்சியும் இல்லை என்பதுதான் எனது தாழ்மையான அபிப்பிராயம். இதில் நமது நிலை மிகத் தெளிவாய் இருக்க வேண்டும். வழவழ கொழ கொழா வெண்டைக்காய்த் தன்மை கண்டிப்பாய் உதவவே உதவாது. ஒரு தெளிவான முடிவுக்கு திராவிடர்கள் வராததாலேயே இந்த இருபதாவது நூற்றாண்டில் அய்ரோப்பியர் ஆட்சியில்கூட திராவிடன் ஆரியருக்கு “இழிபிறப்பாக” இருக்கிறான்.

சர்வத்திலும் விடுபட வேண்டும்

யாரோ இரண்டொருவர் அடிகளாகவும், சுவாமிகளாகவும், பண்டார சந்நதிகளாகவும், பெரியாராகவும், ராஜாவாகவும், மந்திரியாகவும், சர் ஆகவும் ஆக்கப்பட்டு விடுவதில் திராவிட சமுதாயமோ அல்லது இப்படி அழைக்கப்பட்ட ஆட்களோ உயர்ந்த பிறவி ஆகிவிட்டதாகக் கருதுவது முட்டாள்தனமேயாகும். எப்படி ஓர் ஒழுக்கங்கெட்ட அயோக்கியப் பார்ப்பானும் உயர்ந்த பிறவியாக மதிக்கப்படுகிறானோ அப்படியே எவ்வளவு உயர்ந்த பட்டம் பதவி பெற்ற ஒழுக்கமான திராவிடனும் கீழ்பிறவியாகத்தான் மதித்து நடத்தப்படுகிறான்.

ஆதலால், நாம் ஒரு சரிசமமான மனிதப்பிறவி என்கின்ற உரிமை பாராட்டிக் கொள்ள வேண்டுமானாலும், ஆரிய சர்வத்திலிருந்தும் விடுபட வேண்டும். ஏன் நான் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் சில விஷயங்களில் மாத்திரம் தங்களைத் திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்றும் சொல்லிக்கொண்டு வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொண்டால் இரண்டுங்-கெட்ட இழிநிலையைத்தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை. ஆதலால்தான் ஆரியப் பண்டிகைகளைப்பற்றியும், ஆரியக் கடவுள் தத்துவங்களைப்பற்றியும், அவைகள் சம்மந்தப்-பட்ட ஆதாரங்கள்பற்றியும் பேச வேண்டியதாயிருக்கிறது.

***

விக்கிரக ஆராதனை, கோவில்

திராவிடனுக்கு விக்கிரக ஆராதனை என்னும் உருவ வழிபாடும் ஆலயங்கள் என்னும் கோவில்களும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். உலகத்திலேயே இன்று ஆரியர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்தச் சமயத்துக்கும் மதத்துக்கும் சேர்ந்த கடவுள்களுக்கு எனக்குத் தெரிந்தவரை உருவம், பெண்டு பிள்ளைகள், பந்துமித்திரர்கள், உற்சவங்கள் கிடையவே கிடையாது. அதிலும் திராவிடனுக்கு இருந்த-தாகச் சொல்லவே முடியாது. திராவிடர்களுக்குக் கோவில்களே கிடையாது என்று பந்தயங்கட்டிக் கூறுவேன். ஆரிய செல்வாக்குப் பெற்ற தொல்காப்பியத்தில்கூட இந்தக் கோவில்கள் இல்லை என்றால் வேறு எதில் இருந்திருக்க முடியும்?
ஆலயம் என்பதற்குத் தமிழில் வார்த்தையே இல்லை. கோவில் என்றால் அரண்மனையே ஒழிய. ஆலயம் அல்ல. மலையாளத்தில் கோயில் என்பது அரண்மனைக்குத்தான் சொல்லப்படுகிறது. அங்கு அம்பலம் என்று சொல்லப்பட்டாலும், அம்பலம் என்பதற்கு வெளியிடம் என்றுதான் பொருளே ஒழிய. உள் இடம் அல்ல. வடமொழியில் உள்ள ஆலயம் என்பதுகூட கடவுள் வசிக்குமிடம் என்றோ, கடவுள் இருக்குமிடம் என்றோ பொருள் கொண்டது அல்ல. ஆலயம் என்பது கடவுள் இருக்குமிடமானால் தேவாலயம் என்று சொல்ல வேண்டியதில்லை. வடமொழியில் தேவஸ்தானம் என்று சொல்லப்படும் வார்த்தையும் இரட்டை வார்த்தையே ஒழிய ஒற்றை வார்த்தையல்ல. ஆகவே நமக்கு, கோவில்கள் கிடையவே கிடையாது என்பதோடு, கடவுள் இருக்கும் வீடு என்பதற்கு வார்த்தையும் கிடையாது.
அன்பும் ஒழுக்கமும் தொண்டும் கடவுள் தன்மை என்று சொல்லப்படுமானால் கல்_- உலோகம்_ – மரம்_ – சித்திரம் ரூபமாக கடவுள் இருக்க முடியுமா? இப்படி உள்ள கடவுள் தன்மையில் மேற்கண்ட உயரிய குணங்கள் இருக்குமா? உண்டாகுமா? என்று பாருங்கள்.

இந்தக் கோவில்கள், இந்த உருவங்கள் ஆகியவைகளில் திராவிடனுக்கு லாபமா? ஆரியனுக்கு லாபமா? இவற்றால் திராவிடன் செலவு செய்துவிட்டு இழிவையும் அடைகிறான். ஆரியன் லாபமும் பெற்றுவிட்டு மேன்மையையும் அடைகிறான்.

இதைச் சொன்னால் நமது பண்டிதர்கள் கடவுள் போச்சு, கோவில் போச்சு, கலைகள் போச்சு என்று மாய்மால அழுகை அழுகிறார்கள். இந்தப் பண்டிதர்களைவிட ஆரியர்கள் ஆயிரம் பங்கு மேல் என்று சொல்லலாம். நமது கோவில்கள் என்பவைகள் எல்லாம் திராவிடத்தில் ஆரிய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு ஏற்பட்டவைகளே தவிர, அதற்குமுன் ஏற்பட்டவைகள் அல்ல. இன்றுள்ள திராவிடர் செல்வவான்கள், திராவிட அறிஞர்கள், திராவிட பட்டம், பதவி வேட்டைகாரர்கள் பலர் எப்படி தன்மானமற்று ஆரியர்களுக்கு உதவியாகவும் உளவாளிகளாகவும் இருந்து வருகிறார்களோ, எப்படி ஆரியர்களுக்கு கோவிலும் சத்திரமும் வேதபாடசாலையும் தர்மப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்களோ அதுபோல்தான் திராவிட மன்னர்கள், திராவிட செல்வவான்கள் ஆரியர்களுக்கு அடிமை
யாகி அவர்கள் உயர்வுக்கும் சோம்பேறிப் பிழைப்புக்கும் ஆதாரமான அநேக காரியங்களைச் செய்தார்கள்.

இன்றுள்ள பண்டிதர்களில் சிலர் எப்படி ஆரியர்களுக்குக் கூலியாளாக இருந்துகொண்டு கொஞ்சம் நஞ்சம் பாக்கியுள்ள இலக்கண இலக்கியங்களைக்கூட ஆரியமயமாக்க உடந்தையாக இருக்கிறார்களோ, சர்க்காராரும் அப்படிப்பட்டவர்களையே திராவிட இலக்கியம் அமைக்க ஏற்படுத்துகிறார்களோ அது போலவேதான் அந்தக் காலத்திலும் பல பண்டிதர்கள் ஆரியர்களுக்கு அடிமையாகி அநேக இலக்கியங்களை ஆரிய சமயத்துக்கு ஆதாரமாக இயற்றிவிட்டுப் போய் விட்டார்கள். இவற்றை அடியோடு அழித்துத்தான் புதுப்பிக்க வேண்டியிருக்கிறதே ஒழிய, பழுதுபார்த்துச் சரி செய்யக் கூடியதாக ஏதும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. உருவ வணக்கம் முதலில் ஒழிக்கப்பட்டாக வேண்டும். கோவில் உற்சவம் முதலியவைகளுக்கு உள்ள ஆதிக்கங்கள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

அறிவுள்ள திராவிட மக்களையும் ஆரியத்திற்கு நிரந்தர அடிமைப்படுத்தினது சைவமும் வைணவமும் தானே ஒழிய வேறல்ல. ஏனெனில், திராவிடர்கள் வேதத்தையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் ஒழிக்கச் சம்மதித்தாலும் சைவ, வைணவ புராண சமயத்தையும் புராண மரியாதையையும் ஒழிக்கச் சம்மதிக்கவே மாட்டார்கள் போல் காணப்படுகிறது.

இராமாயணம், பாரதம், பாகவதம், பக்த விஜயம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலாகியவைகளை நீக்கி விட்டால்

திராவிடர்களுக்கு இப்படிப்பட்ட உருவக் கடவுள்கள் இருக்குமா என்று பாருங்கள். அப்புறம் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்கள் அல்லாத திராவிட மக்களுக்கும் பேதம் இருக்காது; பல வேற்றுமை உணர்ச்சிகளும் இருக்காது. திராவிட நாட்டில் 100-க்கு 3 பேர்களாயுள்ள ஆரியர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களும் நாமும் ஒன்று என்று எண்ணிக்கொண்டிருக்கிற உணர்ச்சியின் பயனாய் நமது வர்க்கத்தையே சேர்ந்த கிறிஸ்துவர், முஸ்லிம், ஆதிதிராவிடர் ஆகியவர்களை வேறாகவும் வேறுபட்ட வகுப்பார்களாகவும் கருதி விலக்கி வைத்திருக்கிறோம். அவர்களுடைய வெறுப்புக்கும் விரோதத்திற்கும் ஆளாகி இருக்கிறோம். அதனாலேயே நாம் பலம் குன்றிவிட்டோம்.

நமது பண்டிதர்கள் இதற்காக என்னவாவது செய்கிறார்களா? ஸ்தல புராணங்கள் விற்கவும், புராண இதிகாசங்களுக்குப் புதிய தத்துவார்த்தம் எழுதி அவைகளை நிலைக்க வைக்கவும், அவைகளைக்கொண்டு புண்ணிய காலட்சேபம் பண்ணவும் இவைகளை உபயோகித்துக் கொள்கிறார்களே தவிர, கண்டித்துப் பேசி மக்களுக்கு அறிவூட்டுகிறார்களா? இப்படியே இருந்தால் என்று திராவிடனின் விடுதலை நாள் வரக் கூடும்?

(13.10.1940 அன்று சென்னை சவுந்தர்ய மஹாலில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய பேருரையிலிருந்து)
‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 27.10.1940

சிந்தித்து முடிவெடுங்கள்!

 


2024 பெரியார் பேசுகிறார் ஜுன் 1-15 2024

ஜாதி முறைகள் என்பவை எல்லாம் இந்து
மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக் கடவுள்கள்
பெயராலும், சாஸ்திரங்கள் பெயராலுமேதான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன. பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர் என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் மத சாத்திரங்களுக்கும், இந்து மதத்திற்கும், வேதாந்தமும், தத்துவார்த்தமும் சொல்லி இதை ஏற்படுத்தினவர்களுக்கு நல்ல பிள்ளைகளாக ஆவதற்கு முயற்சிப்பார்கள். இந்த அறிவீனமும், மோசமும், தந்திரமும் ஆன காரியங்களால் தாங்கள் மாத்திரம் மரியாதையடையலாமே தவிர, சமுதாயத்தின் இழிநிலையைப் போக்க ஒரு கடுகளவும் பயன்படாது. ஆகையால், உங்களுக்கு முதலாவதாக நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் உங்களுடைய நிலையை சிறிதாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உண்மையாய் ஆசைப்படுவீர்களேயானால், இந்து மதம் என்பதையும் அது சம்பந்தப்பட்ட கடவுள், மத, புராண, சாத்திர, இதிகாசம் என்பவைகளையும் உதறித் தள்ளி அவற்றிலிருந்து வெளி வாருங்கள். அதைச் சொல்லவேதான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால் இனியும் ஓர் ஆயிரம் ஆண்டிற்குக்கூட நீங்கள் எப்படிப்பட்ட மாநாடுகளும், சங்கங்களும், பிரச்சாரங்களும், கிளர்ச்சிகளும் நடத்தினாலும், எவ்வளவுதான் அரசியல் சுதந்திரமும், பொருளாதார முன்னேற்றமும், பட்டம் பதவிகளும் பெற்றாலும் உங்கள் சமுதாயத்திற்குள்ள இழிவு நீங்கப்போவதில்லை, இது உறுதி, உறுதி. உங்களுக்குமுன் முயற்சித்தவர்கள் செய்த தவறுகளையே நீங்களும் செய்துகொண்டு இருந்தால், உங்கள் வாழ்நாள்களும் அவர்களைப் போலவே தவறு செய்யத்தான் முடியுமே ஒழிய திருத்தம் காண முடியவே முடியாது.

மலைக்காய்ச்சலை ஒழிக்க வேண்டுமானால் மலைக்காய்ச்சலுக்கு ஆதாரமான, அதை உற்பத்தி செய்கிற கொசுப்பூச்சிகள், விஷக்காற்றுகள் முதலியவைகளை ஒழிக்க வேண்டும். இவைகள் ஒழிக்கப்படவேண்டுமானால், மறுபடியும் அவைகள் உற்பத்தியாகாவண்ணம் கசுமாலங்களையும், குப்பைக் கூளங்களையும் நெருப்பு வைத்து எரித்து, அழுக்குத் தண்ணீர் குட்டைகளை மூடி ஆகவேண்டும். அது போலவேதான் நம் சமுதாய இழிவுக்குக் காரணங்களாய் இருக்கிற எப்படிப்பட்ட மதத்தையும், கடவுள்களையும், ஆதாரங்களையும் நாம் அடியோடு அறுத்தே தீர வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

இந்து மதத்தையோ, அது சம்பந்தமான கடவுள், மதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களையோ சீர்திருத்தி விடலாம் என்று நினைப்பது வெறும் கனவும், வீண்வேலையும், கடைந்து எடுத்த முட்டாள்தனமுமேயாகும்.
சரியான வழி – புத்திசாலித்தனமான வழி என்னவென்றால், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான். அதாவது, இந்து மதத்தைவிட்டு நாம் வெளியேறிவிட வேண்டியதுதான்.

அதாவது இந்துமதம் என்பதற்கு வேறு வார்த்தை சொல்ல வேண்டுமானால், ஆரியம் – பார்ப்பனியம் என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுக்குச் சந்தேகமிருந்தால் அகராதி புத்தகங்களையும், அறிஞர்களால், ஆராய்ச்சி நிபுணர்களால் எழுதப்பெற்ற ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் யாவரும் நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். ஆஷாடபூதிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள். புத்தர், சங்கரர், ராமாநுஜர் போன்றவர்களின் முயற்சிகள் என்ன ஆயின? புத்தரை ஒழிக்கவே, இராமன், கிருஷ்ணன், இராமாயணம், கீதை, புராணங்கள், அவை சம்பந்தப்பட்ட கோவில்கள் முதலியவை கற்பிக்கப்பட்டன. இராமாயணத்தையும், கீதையையும், பிற சாத்திரங்களையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவே சங்கரர், ராமாநுஜர்கள் முயன்று வந்தார்கள். அவர்களைப் பின்பற்றித்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும், எக்தர்களும், தாசர்களும், மகாத்மாக்களும், ஆனந்தாக்களும், சுவாமிகளும் தோன்றின. இதை உணர்ந்தவர்கள்தான் இன்று இந்நாட்டு மனித சமுதாய சீர்திருத்தத்திற்கு ஒரு கடுகளவாவது தகுதியுடையவர்களாவார்கள். சமீபத்தில் தோழர் அம்பேத்கர் அவர்கள்
சென்னைக்கு வந்திருந்தபோது என்னிடத்தில் இது சம்பந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்தும், பஞ்சாப், லாகூரிலிருந்து, ஜாத்பத் தோரக் மண்டலத் தலைவர் சாந்தராம் அவர்களும், முன்பு காரியதரிசியாய் இருந்த ஹரிபவன் அவர்களும் உங்களைப் பற்றி எனக்கு எழுதிய சில கடிதங்களிலிருந்தும், உங்கள் காரியதரிசி எழுதின சில குறிப்புகளிலிருந்தும் நீங்கள் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பொறுமையாய்க் கேட்கக் கூடியவர்களென்றும், நடுநிலைமையிலிருந்து கவலையாய் சீர்திருத்தக்கூடியவர்கள் என்றும் தெரிந்ததனால் இவ்வளவு ஆயிரம் பேர் கொண்ட இந்த மாபெரும் கூட்டத்தில் இதை நான் சொல்லுகிறேன். எங்கள் நாட்டில் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவனாய் இருந்த 1922ஆம் வருடத்திலேயே ஒரு பெரிய மாகாண காங்கிரஸ் மாநாட்டில், “இராமாயணம் கொளுத்தப்பட்டால் ஒழிய, தீண்டாமை ஒழியாது” என்று சொல்லி இருக்கிறேன். வெகு பேர்களுக்கு அன்று ஆத்திரமாய் இருந்தது. இன்று எங்கள் நாட்டில் இப்படிப் பேசுவதும், கொளுத்துவதும் சர்வசாதாரணமாய் ஆகிவிட்டது. இராமாயணத்தைக் கொளுத்த ஒரு கூட்டமும், அதை ஆதரிக்க ஒரு கூட்டமும் தினமும் பொதுக் கூட்டம் கூட்டிப் பேசி வருகிறார்கள்.

மற்றும், பதினாயிரக்கணக்கான சுயமரியாதைக்
காரர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறி
விட்டார்கள் என்றே சொல்லலாம். தங்கள் வடமொழிப் பெயர்களை எல்லாம் மாற்றிக் கொண்டார்கள். இந்து மத அறிகுறியாய் இருக்கிற சின்னங்களை எல்லாம் விட்டுவிட்டார்கள். உச்சிக்குடுமிகளை எல்லாம் தாங்கள் கத்தரித்துக் கொண்டதுமல்லாமல் பிறருக்கும் கத்தரித்துவிட்டார்கள். அநேகர் புராணப் பண்டிகைகளையும், உற்சவங்களையும் கொண்டாடுவதில்லை. இதற்கு முன்பு ஏழைகள் பணத்தை வஞ்சித்துக் கொள்ளை அடித்த பணக்காரர்கள் இதற்கு முன்பு கோயில் கட்டி வந்ததை நிறுத்திவிட்டு, பள்ளிக்கூடம் முதலிய காரியங்களில் செலவிட்டு வருகிறார்கள். சென்சசில் தாங்கள் இந்துக்கள் அல்லவென்று அநேகம் பேர் சொல்லிவிட்டார்கள். புராண நாடகங்களையும், சினிமாக்களையும், பஜனைப் பாட்டுகளையும் ஜனங்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். கூடிய சீக்கிரத்தில் பெரும் கிளர்ச்சிகள் செய்து ஜெயிலுக்கும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் போகத் தயாராய் இருக்கிறார்கள். எங்கள் நாட்டார் பலர் எங்கள் திராவிட நாடு, வடநாட்டு சம்பந்தத்திலிருந்து பிரிந்து தனியாக இருக்க விரும்பும் முக்கியக் காரணம்கூட, இந்துமதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் இழிவும் சுரண்டலும் ஒழிய வேண்டும் என்பதற்குமாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லாம், தாங்கள் இந்துமதஸ்தர்கள் அல்லவென்றும், தாங்கள் இந்துக்கள் அல்ல என்றும், தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வேண்டும் என்றும், 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள். “இந்து மதத்தை விட்டுவிட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது” என்று கேட்கலாம். உங்களுக்குத் துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரைச் சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும், இழிவும் அணுகாதோ அதைச் சொல்லுங்கள், அப்படி சொல்லிக் கொள்வதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் நீங்கள் திராவிடர்கள் என்றும், திராவிட சமயத்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

அதிலும் கஷ்டமிருந்தால் சமரச சமயத்தார், மனித சமுதாய ஜீவகாருண்ய சமயத்தார் என்று சொல்லிக்கொள்ளலாம். பொருள் இல்லாததும், பித்தலாட்டமானதும், இழிவையும் அந்நிய ஆதிக்கத்தையும் சுரண்டலையும் தருவதுமான ஒரு சுயநல கற்பனையான (இந்து) மதத்தின் பேரைச் சொல்லிக் கொள்வது என்பது வெட்கக் கேடான காரியமாகும். மதம் வேண்டுமானால் – மதம் வேண்டும் என்பவர்கள், மதத் தத்துவங்களையும், அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒரு மதத்தைத் தழுவுவது என்பது அறிவுடைமையாகும். அப்படி இல்லாமல் தான் ஒரு மதத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால் அது வருணாசிரம தர்மத்தை மற்றொரு முறையில் பின்பற்றுவதேயாகும்.

பகுத்தறிவுவாதி என்று சொல்வது எல்லா மதத்திற்கும் தாய் மதம் என்று சொல்லிக் கொள்வதை ஒக்கும், நீங்கள் திராவிடர்கள் என்பதை உணராவிட்டாலும் நீங்கள் ஆரியர்கள் அல்ல, ஆரிய சம்பிரதாயத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றும், ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் குடியேறி வந்த ஓர் அந்நிய இனத்தவர்கள் என்றும், அவர்களுடைய ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட கடவுள், மத, சாத்திர, புராண இதிகாசங்களைச் சுமந்து கொண்டிருக்கிறதன் பயனாகவே இந்த இழிநிலையில் இருக்கின்றீர்கள் என்றும் தெரிந்தால் எனக்கு அதுவே போதுமானதாகும்.
நான் சொன்ன இவற்றை நீங்கள் நன்கு ஆலோசனை
செய்துபார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

(29.12.1944, 30.12.1944, 31.12.1944 ஆகிய நாள்களில் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப் பட்ட (பார்ப்பனரல்லாதார்) இந்து வகுப்பார் சங்க மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் தலைமை உரையிலிருந்து)

‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 13.01.1945

தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி - தந்தை பெரியார்

 



 ஜுன் 16-30 2024

“ஆதிதிராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
உங்களுக்குள் சிலர் ராவ்பகதூர்களாயும், ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயும் இருக்கலாம்.

மற்றும் உள்ளூர் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எல்லாவற்றிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையேயாகும்.

ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக்கூடாதென்கிறார்கள். இப்பொழுது ஒரு சில இடங்களில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்றால், அது அரசாங்கத்தாரின் சட்ட பலத்தைக் கொண்டு. ஆனால், பொதுவாகத் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படுகிறார்களா என்பதையும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதை ஆதரிக்கிறார்களா என்பதையும் இது சமயம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆம், ஆதிதிராவிடர்களும் இந்துக்கள்தாமென ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின்வாங்குவதில்லை. பிறவியில் மிருகமாய்ப் பிறந்தும் ஜாதியில் நாய்

என்றழைக்கப்படுவதுமான, மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் வீட்டுக்குள் தாராளமாக விட்டுவிடும்போது, ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக்கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் ஒரு முனிசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும்விட மறுக்கப்படுவது என்ன கொடுமை?

இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய்ப் பிறந்துவிட்டார்கள். அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரம் இப்படிச் சொல்லுகிறது. வேதத்தின் கர்மகாண்டங்கள் அப்படிச் சொல்லுகின்றன என்று சாஸ்திரக் குப்பைகளின் மீது பழியைப் போடுவதோடு மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதரவாக்கிக் கொள்ளுகின்றார்கள்.

இவ்வாறு மதத்தின் பேராலும், சமய நூல்கள், சாஸ்திரங்கள், புராணங்களின் பேராலும் செய்யப்படும் கொடுமைகளுக்கு அளவில்லை.

ஆயிரக்கணக்கான வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திரப் புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமூகம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆதிதிராவிடர்களாகிய உங்களைவிட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப்படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை.

உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டுமென்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப்பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்களென்ற இழிபெயர்களும் இட்டழைக்கிறார்கள்.

இக்கேவலச் செயல்களுக்குக் கடவுளால் எழுதிவைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரம் என்கிறார்கள்.
நம் மக்களுக்குள் அநேகர் எவர் எப்படிச் செய்தாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக்கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்ப்போமென்று இழிவுக்கு இடங்கொடுத்துக் கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்கம் ஏற்படாது என்பது திண்ணம், கேளுங்கள்!

ஜாதிக் கொடுமைகளை ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.

உலகத்தில் அவன் உயர்ந்தவன்; இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக்கொண்டு, ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி, சமூக முன்னேற்றத்துக்கும் விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர, புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக்காரர்கள் தயாராகயிருக்கிறோம்.

கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும், கடவுளையும் ஒழிப்பதற்குப் பயந்தோமானால் நாம் நிரந்தரமாய் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்கு உட்பட்டுக் கேவலமாகத் தான் இருந்தாக வேண்டும்.

சம உரிமையில்லாது இருப்பதைவிட சாவதே மேலென்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாய் இருக்கமுடியாது. அதற்குத் தடையாயிருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கறையில்லை.

ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க நம் பெரியோர்கள் எவ்வளவோ பாடுபட்டு வந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கபிலர் காலத்திலும், திருவள்ளுவர் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஜாதியில்லை.
ஒழுக்கத்தினால்தான் உயர்வு தாழ்வு என்று எவ்வளவோ வற்புறுத்தப்பட்டு வந்தும் ஜாதிக் கொடுமைப் பேய்கள் ஒழிந்தபாடில்லை.

நம் பெரியார்கள் சொல்லியவை ஆயிரக்கணக்காகப் பிறரால் வாயளவில் பாராயணம் செய்யப்படுகின்றனவேயன்றி செய்கையில் அதனால் ஒரு பலனும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை.

இன்றைக்கும் ஜாதிக் கொடுமையினால் இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப்பட்டுவிடும். அவன் அந்தத் தெருவில் போனால் சாமி செத்துவிடுமென்ற அநியாயங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன.
இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கும் ஜாதி வித்தியாசம் இழிவுக்கு உட்பட்டு கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சமடைவதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானமென்று சொல்லுவேன்.

ஜாதிக் கொடுமையை ஒழித்து இங்கு சமத்துவத்தைக் கொடுக்காத சாமி அங்கு மோட்சத்தையும், ரம்பை, ஊர்வசி நடனத்தையும், தங்க மெத்தையையும், சுகபோகத்தையும் கொடுக்கிறதென்றும் அதை நம்புகிறவன் மடையனா என்று கேட்கிறேன்.

நம்முடைய உதவி வேண்டும்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நமது சுதந்திரத்தையும் உரிமையையும், கேட்டால் சாமி செத்துப் போகுமென்பதும் என்ன அயோக்கியத்தனமென்றுதான் கேட்கிறேன்.

தீண்டப்படாதார், தாழ்ந்தவர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டுத் துன்புறும் மக்களுக்கும் உயர்ந்த ஜாதியார் கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் குணத்தினாலும், உருவத்தினாலும், அறிவினாலும் ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா என்று கேட்கிறேன்.

இவ்வாறிருக்க, மக்களின் பெரும்பான்மையோரை ஜாதிக் கொடுமைகளுக்கும் இழிவுக்கும் உட்படுத்திவைக்க மதப் புரட்டுகளும், புராணப் புரட்டுகளும்தான் ஆதாரமாக இருக்கின்றன.

மக்கள் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாயிருக்கும் இந்த இந்து மதத்தையும் புராணங்களையும் ஒழிக்காமல் பின் என்ன செய்வது என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.”
சென்னை – ராயபுரத்தில் வாசகசாலை திறப்பு விழாவில்
ஈ.வெ.ரா. சொற்பொழிவு – (‘குடிஅரசு’ 06-01-1945)

திங்கள், 24 ஜூன், 2024

எல்லோருக்கும் படிப்பு எப்படிக் கிடைத்தது?


 டிசம்பர் 16-31, 2023 

நாம் மிகப் பெரிய சமுதாயம், நாம் எவ்வளவு முன்னுக்கு வரவேண்டியவர்கள். நாதியற்றுப்போய் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்? சொல்லுங்கள், வெளிநாட்டுக்காரனைப் பார், வெள்ளைக்காரனைப் பாரய்யா! நீ வேட்டி கட்டிக்கிட்டு இருந்தபோது, அவர்கள் ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் அம்மணமாக இருந்தவர்கள். நீ உன் பெண்டாட்டி, மகள், அக்காள் தங்கச்சி என்று முறை வைத்திருந்தபோது, அவர்களுக்கு அக்காள் தங்கச்சி முறை கிடையாது. அவ்வளவு காட்டுமிராண்டியாய் இருந்தவர்கள். இன்றைய தினம் அவர்கள், ஆகாசத்துக்கு அல்லவா பறக்கிறார்கள் _ -ஆகாசத்துக்கு மேலேயல்லவா போய்விட்டு வருகிறார்கள். சந்திரன் இருக்கிற இடத்திற்கு அல்லவா போய் உட்கார்ந்து விட்டு வருகிறார்கள்.

2 லட்சத்து 30 ஆயிரம் மைல்_ – ஒரு மணிக்கு 5000 மைல் வீதம் அல்லவா பறக்கிறார்கள். இன்னும் அவர்கள் செய்கிற அதிசய அற்புதங்களைப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்குப் புரியாதே!

அமெரிக்காவிற்குப் போய் ஆண் பிள்ளையுடைய இந்திரியம் கொண்டுக்கிட்டு வருகிறான். இங்கு சீனாவிலே, ஜப்பானில் போய் பொம்பளையுடைய இந்திரியம் கொண்டு வருகிறான். இரண்டையும் இங்கே கலக்கி, பிள்ளை ஆக்குகிறானே. இப்போது நேற்று முந்தாநாள் வந்த விஷயத்திலே, அவசரப்பட வேண்டியதில்லை, இரண்டு பேருடைய இந்திரியத்தையும் டப்பியிலே வாங்கி வைத்துக்கொள்ளலாம். நமக்கு வேண்டியபோது பிள்ளை உண்டாக்கிக் கொள்ளலாம். 10 வருஷத்திற்கு அப்புறம்; இன்றைக்கே பண்ணிக்க வேண்டியதில்லை. இப்படியாக அவன் பண்ணுகிற அதிசயம். ஏராளம். அமெரிக்காவிலே இருக்கிறான், 10 ஆயிரம் மைல்; நாம் இங்கே இருக்கிறோம். போனை எடுத்து இப்படி காதிலே வைத்தான் என்றால், ஹலோ என்றால், அப்போதே நமக்கு இங்கே காதில் கேட்கிறதே _அந்த உதடு ஒட்டுறதற்குள்ளே காதில் கேட்குதய்யா, 10 ஆயிரம் மைலிலிருந்து! அவர்களிலே அரைவாசிப் பேருக்குத்தான் கடவுள்; அரைவாசிப் பேருக்கு ஒரு கடவுள்; அதுவும் சந்தேகம். ஆனால் நம்பணும். (இங்கு), இந்த முட்டாள் பசங்களுக்கு 1000, 2000, 5000 கடவுள்_ – ஒரு காரியமும் பண்ண முடியவில்லை இந்தக் கடவுள்களாலே. காரியம் பண்ண முடியவில்லை என்றால், சும்மாவா இருக்கிறோம். அவைகளுக்கு எவ்வளவு கோவில், எத்தனை பெண்டாட்டி, வைப்பாட்டி, கல்யாணம், கருமாதி, செலவு? எத்தனை பேருக்குச் சோறு? எவ்வளவு பேருக்கு உற்சவம்?

அரசாங்கம் வரி வாங்குகிறது என்று சொல்கிறானே தவிர, மடப்பயல், இது குட்டிச் சுவராகப் போகிறதே இந்தப் பணம் என்று ஒரு பயல்கூட நினைக்கிறதில்லையே! கோவிலுக்குப் போகாமல் எவன் இருக்கிறான்? கோவிலுக்குப் போகணும், என்கிறான், குளிக்கிறான், முழுகுகிறான், பட்டுக் கட்டிக்கிறான், எட்டிக் குதித்துக்கிட்டுப் போகிறான், ஏன்டா என்றால், தீட்டாகிறது என்கிறான்.

ஆனால், கோவில் கிட்டே போனதும், டக்கென்று வெளியே நின்றுகொள்கிறானே, வாசற்படிக்கிட்டே! ஏன்டா, அங்கே நிற்கிறாய் என்றால், நான் சூத்திரன்; உள்ளே போகலாமா? என்கிறான். எப்போது? 1973 லே! நம்ம நாடு, நம்ம சமுதாயம், நமக்கு மானம், அவமானம் என்கிறது ஒன்று இருக்கிறது என்று சொல்லமுடியுமா? அது பெரிதில்லையே! அதற்காக யார் பாடுபடுகிறார்கள்? நாங்கள்தானே மூணே முக்கால் பேரு; மற்றவன் எல்லாம் வேற வேற கட்சி. ஒரு கட்சிக்காரன்கூட கடவுளைப்பற்றி பேசவே மாட்டான். ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான். அவனுக்கு முதல் வேலை கடவுளை ஒழித்தான், கோவிலை இடித்தான். பாதிரியை எல்லாம் வெட்டினான். இங்கே இருக்கிற கம்யூனிஸ்ட் என்ன பண்ணுகிறான்-? பொறுக்கித் தின்கிறான். மற்ற நாட்டுக்காரன் எல்லாம் என்ன பண்ணுகிறான்?
இங்கு மனுஷனைப்பற்றி எவனுமே பேசுறதில்லையே! சொன்னால் வரும்படியா? அதைத்தானே கேட்கிறான்; அதைத்தானே பண்ணுகிறான். நாங்கள் இவ்வளவு பண்ணினோம், இவ்வளவு பிரச்சாரம் பண்ணினோம்; இவ்வளவு மகாநாடு எல்லாம் நடத்தினோம். – எவன்யா எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே_ – ஆதரித்தால் ஓட்டுப் போய்விடுமே, ஆதரித்தால் அரசாங்கம் என்ன பண்ணுமோ என்று.

அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம். 500 வருஷம் இருக்கலாம்; இப்பொழுது இல்லையே, 52 வயசுதான் இருக்கிறோம். சராசரி எனக்கு இப்பொழுது எனக்கு 95; இன்னும் ஒரு பத்துப் பேர் இருப்பான் 100 வயசானவன். இருக்க முடியவில்லையே! வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே, அவன் வந்த அன்றைக்குக்கூட நமக்கு 10 வயது இல்லை _ 7 வயது இந்த நாட்டுக்குச் சராசரி. அவன் வந்ததற்கப்புறம், அவன் வைத்தியம், அவன் ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, அவனுடைய சுகாதாரம் இதெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம் இப்போது நாம் சராசரி 50 வருடம் இருக்கிறோம். மேல்நாட்டிலே 97 வயசு இருக்கிறான்; ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயசு இருக்கிறான். நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்; வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்குப் போய்விடுவான். இப்படியே நாளாக, நாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம். அதற்கு மேலே வேற என்ன வரணும்? இருக்கிறது ஒன்றும் கஷ்டமல்ல_சாகிறதுதான் கஷ்டம். அவ்வளவு வசதிகளை எல்லாம் பண்ணியிருக்கிறோம் இந்நாட்டிற்கு. அவ்வளவு அற்புத அதிசயங்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறோம். நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மக்களாய் இருந்ததினாலே.

நாங்கள் வராதிருந்தால் படிப்பு ஏது? சொல்லுங்கள். சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கிற போது, நாம் 100க்கு 10 பேருகூட படிக்கவில்லையே, 100-க்கு. அது வந்ததற்கு அப்புறம் ஆரம்பித்தோம், கடவுள் என்றால், அப்பா இல்லை,அம்மா இல்லை, உருவமில்லை. கண்ணுக்குத் தெரியாது; கைக்குச் சிக்காது அப்படியெல்லாம் சொல்லிவிட்டான். நிரந்தரமா அப்படியொரு உணர்வே எங்குமே இல்லையே. ஒன்றும் வேண்டாம் என்கிறான்; – ஆறு வேளை சோறு என்கிறான் கல்யாணம் என்கிறான்; வருஷா வருஷம் கல்யாணம்டா என்கிறான்¢; கல்யாணமிருந்தும் ஒரு வைப்பாட்டிடா என்கிறான். நம்மை ஏதாவது மனுஷன் என்று நினைத்து அவன் சொன்னானோ? சொன்னதைக் கேட்டுக்கோடா மடபயலே என்றான். சும்மா ஊட்டிவிட்டான். கடவுள் ரொம்ப அன்பானவர்; கருணையே வடிவானவர் அப்படி என்கிறான். கடவுளைப் போய்ப் பார்த்தால், அந்தக் கடவுள் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், ஈட்டி_கொலைகாரப் பயல்களுக்கு என்ன வேணுமோ அதுவெல்லாம் கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் கருணையே உடையவர்டா என்கிறான். எந்தக் கடவுள் மனுஷனைக் கொல்லாதவர். (கடவுள்) அசுரனைக் கொன்றார், ராட்சசனைக் கொன்றார், மனிதனைக் கொன்றார், மூன்று கோடி பேரைக் கொன்றார், 5 கோடி பேரைக் கொன்றார் என்று கசாப்புக் கடைக்காரன் மாதிரிப் பண்ணிப் போட்டு, அவரைக் கருணை உள்ளவர் என்றால் எப்படி? இப்படி எல்லாம் சொல்லி, நம்மைக் கழுதையாக்கிப் போட்டான். ஓர் உணர்ச்சியும் இல்லாதவனாக்கிப் போட்டான். கடவுள் என்றால் கல்லைக் கும்பிடவேண்டியது, பார்ப்பான் காலிலே விழ வேண்டியது. அவனுக்குக் காசு கொடுக்கவேண்டியது.

நாங்க வந்து, இந்தப் பிரச்சினையிலே, கடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லை. நன்றாக நினைச்சுக்குங்கோ, இந்தப் பிரச்சினையிலே, நாங்கள் கடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லை. கடவுளை இருக்கிறது என்று நினைக்காதீர்கள் என்று சொல்லவில்லை. கடவுள் என்றால் என்ன என்று சொல்லுங்கள் – _அவ்வளவுதான் நாங்கள் சொல்லுகிறோம். ஒன்றுமே இல்லாமல், எந்த முட்டாளாவது சொன்னான் என்றால், நினைத்ததெல்லாம்… அரச மரம் கடவுள், வேப்ப மரம் கடவுள், பல்லி கடவுள், முடக்கான் கடவுள், பாம்பு கடவுள், அப்புறம் நினைத்ததெல்லாம் கடவுள். அது கடவுள் சங்கதியா? அது முட்டாள்தனம், பைத்தியக்காரச் சங்கதியா? இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு நம் நேரம், நம் பணம், நம் அறிவு எவ்வளவு நாசமாகிறது. இவ்வளவும் பண்ணியும் தேவடியாள் மகன் என்கிற பட்டமல்லவா நம் தலைமேலே இருக்கிறது?

ஆகவேதான், எந்தச் சங்கதி எப்படி ஆனாலும், நாம் ஆரம்பித்துள்ள இழிவு ஒழிப்பு கிளர்ச்சி காரியம் மிகவும் நியாயமானது என்பதற்கு என்ன ஓர் உதாரணம் உங்களுக்கு வேண்டுமானால், இன்றைக்கு எத்தனை நாளாகிறது? எட்டாம் தேதி மாநாடு. இன்னைக்கு 10 நாளாகிறது. என்ன கவனிக்கணும். இரகசியமா இல்லை. பத்தாயிரம் பேருக்கு மேலே வந்தார்கள். 30 பத்திரிகைக்காரர்கள் வந்தார்கள். எல்லாத் தீர்மானத்தையும் அவரவர் பத்திரிகையில் போட்டார்கள். இந்தியா பூராவும் பரவிவிட்டது. அடுத்த நாளே பரவிவிட்டது. நான் சொல்கிறேன், கவனியுங்கள், இந்தப் பத்து நாளாவது ஒருவனாவது இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினானா? எந்தப் பத்திரிகையிலேயாவது செய்தி வந்ததா? ஏன் சொல்லுகிறேன்_ – நாம் பண்ணினது அவ்வளவு நேர்மையான காரியம். எவனாலேயும் ஆட்சேபிக்க முடியவில்லை. எவன் தைரியமா சொல்லுவான், நீ தேவடியாள் மகனாகத்தான் இருக்கணும் என்று. அவ்வளவு நேர்மையான காரியத்தை நாம் செய்திருக்கிறோம், பண்ணிப் போட்டோம். இதிலேயே நாம் வீரனாக மாட்டோம். நாளைக்கு இதற்குப் பரிகாரம் பண்றதுக்கு கிளர்ச்சி பண்ணுகிறோமே, அதிலேதான் நாம் யார் என்று காட்டிக்கொள்ளவேணும். பண்ணனும். நாளைக்கு கிளர்ச்சி பண்ணினால் அவன் பிடிப்பான்; பிடிக்கவில்லையானால் பண்ணிக்கொண்டு இருப்போம். பிடிக்க ஆரம்பித்து விட்டான் என்றால், 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று ஜெயிலுக்குப் போவோம். நாம் தயாராய் இருக்கிறோம். காரியம் முடிகிறவரைக்கும் ஜெயிலிலே வேணுமானாலும் இருக்கத் தயாராய் இருக்கிறோம் என்று நாம் காட்டணும். அப்புறம் அவன் பரிகாரத்திற்கு வரணும்; வரவில்லை என்றால், இந்தச் சாக்கை வைத்து, நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல், 1500 மைல் தூரத்திலே இருக்கிறே, உன் பேச்சு எனக்குப் புரியாது; என் பேச்சு உனக்குப் புரியாது. உன் பழக்கம் வேறே, உன் வழக்கம் வேறே, உடன் நடப்பு வேறே _ எனக்குப் புரியாது. மரியாதையாகப் போ, ரகளை வேணாம். என்னத்துக்காக இவ்வளவு தூரத்திலே இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாகணும்? நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்?

எங்களுக்கு என்ன உப்பு இல்லையா, தண்ணீர் இல்லையா, மலை இல்லையா, காடு இல்லையா, சமுத்திரம் இல்லையா? இல்லை நெல் விளைய
வில்லையா? கம்பு விளையவில்லையா? என்ன இல்லை எங்களுக்கு? உன்னாலே எனக்கு என்ன ஆகுது? தேவடியாள் மகன் என்னும் பட்டத்தைத் தவிர, நீ எங்களுக்குப் பண்ணின நன்மை என்ன? மரியாதையாகப் போ! அவ்வளவுதானய்யா நாம் கேட்கிறோம்! இது எப்படி அய்யா தப்பாகும்.
இதனாலே எப்படி நாம் கெட்டவனாவோம்; இதனாலே நாம் எப்படி அரசுக்கு விரோதமாவோம்? கவனியுங்கள், தாய்மார்களே! தோழர்களே! இந்த விஷயங்களையெல்லாம் முதலிலே சொன்னோம். இது நம்ம கடமை. 25ஆம் தேதி ஆரம்பிப்போம். மளமள மளவென்று வரணும்; என்ன சொல்கிறோமோ அதைச் செய்யணும். சட்டங்களை எரிக்கிறது முதற்கொண்டு, மறியல் பண்ணுறது முதற்கொண்டு இன்னமும் பல காரியங்கள் திட்டம் போட்டுச் செய்யணும்.
கலகத்துக்குப் போகமாட்டோம்; எவனையும் கையாலே தொடமாட்டோம். எவனாவது அடித்தாலும், பட்டுக் கொள்வோம், திருப்பி அடிக்க
மாட்டோம். ஞாபகத்திலே வைத்துக்கொள்ளுங்கள்! நான், நீ என்று மீசையை முறுக்கக்கூடாது. அடித்தால் பட்டுக்கணும். போலீஸ்காரன் இருப்பான், அதிகமாக அடிக்காமல் பார்த்துக் கொள்வான். அப்புறம் என்னத்துக்கு நாம் ஒருத்தனை அடிக்கப் போகணும்; நாம் யாரோடு சண்டை பிடிக்கிறோம்?

நான் தேவடியாள் மகனாக இருக்கக்கூடாது. உன் ஆட்சியிலே, உன் சட்டத்திலே இருக்கணும் என்றால், உன் ஆட்சி மாறும்; உன் சட்டத்தை நெருப்பு வைத்துக் கொளுத்துகிறேன். முன்னையே நான் கொளுத்தினவன்தான். ஆனதினாலே, தோழர்களே, பக்குவம் அடையணும் நாம். அதற்காக இங்கே நான் நாத்திகப் பிரச்சாரம் பண்ணவரவில்லை; கடவுள் இல்லை என்று உங்களுக்குச் சொல்வதற்காக வரவில்லை. அது வேறே, நாங்கள் பண்ணிக்கிறோம். அவனவன் நம்பட்டும், ஆராயட்டும், இருக்கட்டும். முட்டாள் தனமான காரியங்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்கள், மானத்துக்குக் கேடான காரியங்கள் செய்கிறதற்கு நாம் இடம் கொடுத்துக்கிட்டு, நாம் மனுஷனாக வாழணுமா?

(19.12.1973 அன்று சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை)


அறிவுக்கு முழு சுதந்திரம் தேவை



… தந்தை பெரியார் …

ஜாதி என்பது இன்றைக்கு நமது சமுதாயத்தில் இருந்து வருகிற ஒரு மாபெரும் கேடாகும். இது இன்று நேற்றிலிருந்து வரவில்லை. சுமார் 2000, 3000 ஆண்டுகாலம் தொடங்கி இருந்து வருகிறது. நமது நாட்டில் எத்தனையோ முனிவர்கள், மகான்கள், மகாத்மாக்கள் தோன்றி வந்திருக்கிறார்கள். அவர்கள் யாராலும் ஜாதி ஒழிக்கப்படவில்லை. ஆகவே, இனி ஒரு மகான் தோன்றி, ஜாதியை ஒழிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

ஜாதியின் காரணமாகத்தான் 100க்கு 97 பேராக உள்ள திராவிட இன மக்கள் கீழானவர்களாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கொடுமையை எதிர்த்து அழிக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. எனவே ஜாதி இருக்க வேண்டுமென்று அதன் மூலம் வசதி வாய்ப்புகளை அடையும் 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்கள்தான் சொல்லுவார்களே ஒழிய, அதனால் பாதிக்கப்பட்டுள்ள 97 பேராக உள்ள நாம் அப்படி நினைக்க முடியாது.

ஆகவே ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்துக்கு மாறுபட்ட கருத்து இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அதை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பதில் வேண்டுமானால் உங்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம்.

இந்த ஜாதிமுறை இத்தனை ஆண்டுகளாக இருப்பதற்குக் காரணம் இதனால் ஏற்படுகிற இழிவு நமக்குத் தெரிந்திருந்துங் கூட அதை எதிர்க்காமல் பலர் தூற்றுவார்களே, சிலருடைய வெறுப்புக்கு ஆளாக நேரிடுமே, பலகாலமாக நாம் கொண்டுவந்துள்ள எண்ணங்கள், கோட்பாடுகள் இவைகளை விட்டுவிட வேண்டுமே என்பதால் தான் அதைப்பற்றிச் சிந்திக்க மற்றவர் பயப்படுகிறார்கள்.

நான் இங்கு உங்களிடையே வந்து எனது கருத்தைக் கட்டாயமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று திணிக்க வந்திருப்பவன் அல்ல. நீங்கள் அறிவைப் பயன்படுத்தித்தான் எந்தக் காரியத்தையும் வாழ்க்கையில் செய்ய வேண்டும். அது எப்பேர்ப்பட்ட மேலான விஷயமாக
இருந்தாலும் அதற்கு அறிவு , பகுத்தறிவைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும்படியாக இருக்குமேயானால் அது நமக்குத் தேவையில்லை.
அறிவைச் சுதந்திரமாக எப்படியும் உபயோகப்படுத்தலாம் என்பதுதான் முக்கியமாகும்.

மற்ற சாதாரண விஷயங்களுக்கெல்லாம் நாம் அறிவைப் பயன்படுத்த ஆராய்ந்து பகுத்தறிந்து பார்க்கத் தவறுவதேயில்லை. உதாரணமாக ஒரு துணிக்கடைக்குப் போனால் அங்கு நாம் 2 கெஜம் துணி வாங்குவதற்கு முன் அது எப்படிப்பட்டது, தரம் எப்படி, சாயம் எப்படி, விலை எப்படி என்று பார்த்துத்தானே வாங்குகிறோம்? அதுபோலவே உணவிலும் மற்ற மற்ற அன்றாட நிகழ்ச்சிகளிலும் நாம் இருக்கிறோம்.

ஆனால், இது (ஜாதி) 2000, 3000 ஆண்டுகளாக இருந்து வருகிற கொடுமையை எதற்காக என்று சிந்தித்து ஆராய வேண்டுமானால் நாம் தயங்குகின்றோம், பயப்படுகிறோம், என்றால் இது சரியா?

ஜாதி இந்த நாட்டில் இத்தனை காலம் நீடித்து இருப்பதற்குக் காரணமே இந்த மூடநம்பிக்கையான அமைப்பைப்பற்றி ஆராய்ந்து அறிய யாரும் முன்வராததேயாகும்.

ஜாதியைக் கடவுள்தான் ஏற்படுத்தினார் என்று சிலர் சொல்லுகிறார்கள்! உலகத்திற்-கெல்லாம் ஒரே கடவுள்தான் என்றால் மற்ற நாடுகளில் உள்ள மக்களை எல்லோரும் சமத்துவமாக இருக்கும்படி செய்துவிட்டு நம் ஒரு நாட்டின் மக்களை மாத்திரம் சிலரை உயர்ந்த ஜாதிக்காரராகவும், சிலரைத் தாழ்ந்த ஜாதிக்காரராகவும் உண்டாக்கியிருப்பார் என்று சொல்லமுடியுமா? அப்படிக் கடவுள் செய்திருப்பாரா? செய்திருக்க முடியுமா என்பதுபற்றி நீங்கள் யோசிக்க வேண்டாமா?

ஜாதியை உண்டாக்கியது மதம்தான் என்று சொல்லுவோமேயானால் உலகில் எத்தனையோ மதங்கள் இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவைகள் இருக்கின்றனவே; அவைகள் மேல் ஜாதியையும், கீழ்ஜாதிகளையும் ஏன் உண்டாக்கவில்லை என்று நீங்கள் யோசிக்க வேண்டாமா?

ஆகவே மதமோ, கடவுளோ ஜாதியை உண்டாக்கி இருக்க முடியுமா வென்பது பற்றியும், உண்டாக்கியிருக்கின்றன வென்றால், அப்படிப்பட்ட மதம், கடவுள் சமுதாயத்திற்குத் தேவையா? என்பது பற்றியும் நீங்கள் ஆராயவேண்டியது அவசியம்.

ஜாதியை ஏற்படுத்தாத கடவுளையும், மதங்களையும், கொண்டுள்ள வேறு நாட்டுக்காரர்கள் எல்லாம் இன்று அறிவுத்துறையில் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள். தலைகீழ் மாற்றம் அடைந்து விட்டார்கள். நேற்று இருந்ததைவிட இன்று எவ்வளவோ பெரிய மாறுதல் என்று சொல்லும் வண்ணம் வேகமாக வளர்ந்து கொண்டே செல்லுகிறார்கள் – விஞ்ஞானத் துறைகளிலும் மற்றத் துறைகளிலும்!

சக்கிமுக்கிக் கல்லை உரசி அதன் மூலம் நெருப்பு உண்டாக்கிய மனிதன், இன்று படிப்படியாக, கைவிளக்கு, அரிக்கேன் விளக்கு, காஸ் விளக்கு, மின்சார விளக்கு, என்று படிப்படியாக உயர்ந்த நிலையில் ஆக்கப்பட்டிருக்கின்றான். 100 சிறி, 1000 சிறி இலட்சம், மிலியன் கேண்டல் பவர், பத்து மில்லியன் கேண்டல் பவர் போன்ற விளக்குகள் எரிகின்றன. எங்கிருந்தோ ஒரு பொத்தானை அழுத்தினால் அது இப்படி ஆயிரக்கணக்கான விளக்கு வெளிச்சத்தைத் தருகின்றது.

இந்த அறிவு வளர்ச்சி காரணமாக உலகம் கூப்பிடு தூரத்தில் வந்துவிட்டது. இங்கிருந்து டெலிஃபோனை எடுத்து ‘அலோ’ என்றால், பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்காவிலிருந்து ஏன்? என்று கேட்கிறான்.

கட்டை வண்டியில் மாடுகளையும், எருமைகளையும் கட்டிக் கொண்டு, மணிக்கு 3 மைல் வீதம் பிரயாணம் செய்துகொண்டிருந்த மனிதனுடைய அறிவு, படிப்படியாக வளர்ந்ததன் காரணமாகக் கட்டை வண்டியிலிருந்து இரயில்! இரயிலிலிருந்து மோட்டார் கார்! மோட்டார் காரிலிருந்து மணிக்கு 300, 400 மைல் வேகத்தில் பறக்கக்கூடிய ஆகாயக் கப்பல்! இப்படிப் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்து இன்றைக்கு அறிவுத் திறமை காரணமாகப் பற்பல அதிசயங்களையெல்லாம் செய்யக் கூடிய அளவு மனித அறிவு வளர்ந்து இருக்கிறது.

அந்தத் துறையில் மாறுதல் ஏற்பட்டிருக்-கும்போது மனப்பான்மை, கோட்பாடுகள் எல்லாம் 300 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளவைதான் இன்றும் இருக்கின்றன என்றால், இது எவ்வாறு பொருந்தும்? இன்றுள்ளவை ஜாதி போன்ற அமைப்பு நம்மை முன்னேறச் செய்வதற்குப் பதில் 3000 வருஷத்திற்கு முந்திய காலத்திற்குத்தான் நம்மை அழைத்துச் செல்லுகின்றனவேயொழிய முன்னேற்றத்துக்கு உதவி செய்யவில்லை.

உலகத்திலுள்ள பல மக்கள் இன்றைய தினம் முன்னேற்றம் அடைந்திருப்பவர்கள் பலரும் ஒரு காலத்தில் இன்று நாம் இருப்பதைவிட- இழிவான கேவலமான நிலையில் இருந்தவர்கள். ஆனால் அங்கெல்லாம் சீர்திருத்தவாதிகள் தோன்றி அறிவை ஊட்டியவுடன் அதை ஏற்றுத் திருந்திவிட்டார்கள். இங்கு இருப்பதைப்போல இந்த இழிவின் மூலமே, இந்தக் கீழ்ஜாதி, மேல்ஜாதிப் பிரிவை வைத்துப் பயன் பெற்று அதன் மூலம் பயன் அடைந்த ஒரு கூட்டம் இல்லாததனால், அது அங்கு சாத்தியமாயிற்று.

ஆனால், இங்கு இதன் மூலம் தங்களது வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டு சொகுசாக வாழுபவர்களுக்கு இது ஒழியக் கூடாது என்று எண்ணி, அதைப் பாதுகாக்கவும் இன்னும் பலமாகவும் முயற்சிகள் செய்கிறார்கள்.

ஜாதியால் பயனடைந்து சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மேல் ஜாதிக்காரர்களைப் பார்த்து ஜாதி ஒழிய வேண்டாமா என்று நாம் கேட்கவில்லை. ஜாதியால் கீழான மக்களாக்கப்பட்டுப் பிறவிலேயே தாழ்ந்த மக்களாகி உள்ள, அதனால் பெரும் அளவு பாதிக்கப்பட்டு உழன்று கொண்டுள்ள பெரும்பாலான மக்களைப் பார்த்துத்தான் ஜாதி ஒழியவேண்டாமா என்று நாம் கேட்கிறோம்.

ஜாதி காரணமாகப் பயனடைந்து வசதி வாய்ப்புகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வாழுபவர்களுக்கு இது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆனால்,
ஜாதியால் பிற்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு இதனால் ஏற்படுகிற நஷ்டம் (இழப்பு) எவ்வளவு என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்.

ஜாதியை ஒழிப்பதற்கு முன்பெல்லாம் இருந்ததைவிட இப்போது ஏற்ற சூழ்நிலை இருக்கின்றது. வயதானவர்கள் என்பவர்களால் இதில் ஒன்றும் செய்யமுடியாது. இளைஞர்-களாகிய உங்களுக்கு உணர்ச்சி வரவேண்டும். நீங்கள்தான் இந்தக் காரியத்தை எடுத்து அதில் தீவிர கவனம் செலுத்தி இந்த மாபெரும் கேடான ஜாதியை ஒழித்துக்கட்ட முன்வரவேண்டும். இந்த வேலையைச் செய்ய இன்றைக்கு இந் நாட்டில் ஒருவரும் இல்லை. இந்தப் பணி முழுக்க முழுக்க நமது தலைமீதுதான் விழுந்திருக்கிறது.

ஆகவே, நீங்கள் உங்களுடைய அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து, எதையும் அறிவை உபயோகப்படுத்திச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொண்டு, அதன்படி நடக்கும் உணர்ச்சியைப் பெறவேண்டும்.

நான் சொன்னவற்றை அப்படியே நம்பிவிடக்கூடாது. உங்கள் அறிவைப் பயன்படுத்தி அவை உங்களுக்குச் சரி என்று தோன்றுமேயானால் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வளவு நேரம் நீங்கள் பொறுமையாய் இருந்து என்னுடைய வார்த்தைகளைக் கேட்டதற்கு எனது அன்பான நன்றியை உங்களுக்கும், பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கும், இங்குக் கூடியுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(11.2.1959 அன்று லக்னோ பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு)
– ‘விடுதலை’, 20.2.1959


ஞாயிறு, 23 ஜூன், 2024

சரஸ்வதி பூஜை ஓர் அர்த்தமற்ற பூஜையே !


2023 அக்டோபர் 16-31, உண்மை Unmai

– தந்தை பெரியார்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்து விட்டு, நாம் அந்தச் சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே, அவர்கள் படித்து, பெரிய படிப்பாளியாகிக் கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்” என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண், பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு, அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல், பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஓர் ஆண் மான் உருவமெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவமெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக மீண்டும் சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக் கதை கூறுகிறது.

இரண்டாவது, ஒருவிதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின்போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி _அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேர்த்தியாகிறாள். எனவே, சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்கஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள்? என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம். அதாவது, சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழிலுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை _- ஆயுத பூஜை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூஜை செய்கின்றார்கள்.
இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்களையும், தராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவற்றையும், தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சேலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூஜை செய்கிறார்கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று, அதனால் வரும்படிகளும் போய் பூஜை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் செலவழித்து, போதாவிட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதை விட இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.

சரஸ்வதி பூஜை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக் கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்பிடுவார்களே தவிர, அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ தொழில்கள் தாராளமாய்க் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள். அதுபோலவே புத்தகங்களையும், கூளங் குப்பைகளையும் அள்ளி அவற்றிற்குப் பொட்டு வைத்துப் பூஜை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொள்கின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்கள் என்றுதான் உள்ளார்கள்.

இவ்வளவு ஆயுத பூஜை – சரஸ்வதி பூஜை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் 1,000 பேருக்கு 9 பேர் மட்டுமே
படித்து உள்ளார்கள். இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க் கற்பனையா? என்பவை யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

இவையாவும் சுத்த முட்டாள்தனமான கொள்கைகள் என்பதுதான் எனது அபிப்பிராயம். அயல்நாட்டானைப் பார்த்தால் அவனுக்கு சரஸ்வதி என்ற பேச்சோ கல்விச் செல்வம் என்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.
அன்றியும், நாம் காகிதத்தையும், எழுத்தையும் சரஸ்வதியாகக் கருதிக் கொண்டும், தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும் நமக்குக் கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும் வருகிறான். ஆனால், 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் இருக்கும் என்றால், பூஜை செய்பவர்களைத் தற்குறியாகவும், மலம் துடைப்பவர்களை அபார அறிவாளிகளாகவும், கல்விமான்களாகவும் செய்யுமா? என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால், அதைப் பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாது, சரஸ்வதி பூஜை செய்கின்றவர்களைப் பார்த்து, “முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது? என்று பாருங்கள்!

இராசாக்கள் கொலு இருப்பது, பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, அறிவுச் செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவாகின்றன? என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா? என்று கேட்கிறேன். ஒரு வருஷத்தில் இந்தப் பூஜையில், இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால், மற்றப் பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது _ 20.10.1929
‘குடிஅரசு’ இதழில் வெளியானது)


கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு விளக்கம்

பெரியார் பேசுகிறார்! – 

2023 அக்டோபர் 1 - 15, 2023 உண்மை Unmai

… தந்தை பெரியார் …

பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன்படியோ வணங்குவதே இல்லை. மற்றெப்படியென்றால், “கடவுளை” மனிதனாகவே கருதிக்கொண்டு, மனித குணங்களையே அதற்கு ஏற்றிக் கொண்டு, தான் எப்படி நடந்துகொண்டான், தான் எப்படி நடந்து கொள்கிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பனவாகியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், தான் நடந்துகொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ, பொருத்தமோ, விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர்நிலையே வேண்டுமென்கிற பேராசையுடனுந்தான் கடவுளை வணங்குகின்றான்.

இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லாவிட்டாலும், அறிவாளி என்று சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை, இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச் சொல்லவேண்டுமே ஒழிய, யோக்கியர்கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான, யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாவது தோன்ற முடிந்ததா? இருக்கமுடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழ முடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்கள் வீடு, வாசல், சொத்துகளாவது, மக்கள் பயமில்லாமல் வாழ முடிந்ததா? இது பொது விளக்கமாகும்.

இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன்மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடையர்கள் என்பதைப்பற்றி விளக்குகிறேன்.

நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன், நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர் கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன். ஏனெனில், எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத்தைத்தான், மாடு, குரங்கு, மீன்,
ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும் மிக மிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால், ஒரு தலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, அய்ந்து தலை, ஆறு தலை, ஆயிரம் தலையும் அவை போன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை- _ மனிதன்; உடல் _ மிருகம், தலை மிருகம்; உடல்  மனிதன் முதலிய உருவங்கள் கொண்ட சிலைகளையும் வணங்குகிறான் என்பதே.

கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும் ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப் பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள், காட்டுமிராண்டித்தனமா அல்லவா என்றுதான் கேட்கிறேன்.

மற்றும் கடவுளுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூஜை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதலி என்றெல்லாம் கதை கட்டி, அதை திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன்.

மற்றும் பலர் ஒருவேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த, தினம் அய்ந்து வேளை, ஆறு வேளை பொங்கல் அக்காரவடிசில் முதலியன படைத்தல்; பால், நெய், தேன், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் என்னும் பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால்  – இந்த முட்டாள்தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனர்க்கு அல்லாமல் மற்ற யாருக்கும் (முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா என்று
கேட்கிறேன்.

மேலும், இதற்காக ஏற்படும் பொருள் செலவு, நேரச் செலவு எவ்வளவு? இந்த நிலை ஒருபுறம் இருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.

– தந்தை பெரியார்
(உண்மை, 14.5.1970 தலையங்கம்)