வியாழன், 27 ஜூன், 2024

சிந்தித்து முடிவெடுங்கள்!

 


2024 பெரியார் பேசுகிறார் ஜுன் 1-15 2024

ஜாதி முறைகள் என்பவை எல்லாம் இந்து
மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக் கடவுள்கள்
பெயராலும், சாஸ்திரங்கள் பெயராலுமேதான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன. பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர் என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் மத சாத்திரங்களுக்கும், இந்து மதத்திற்கும், வேதாந்தமும், தத்துவார்த்தமும் சொல்லி இதை ஏற்படுத்தினவர்களுக்கு நல்ல பிள்ளைகளாக ஆவதற்கு முயற்சிப்பார்கள். இந்த அறிவீனமும், மோசமும், தந்திரமும் ஆன காரியங்களால் தாங்கள் மாத்திரம் மரியாதையடையலாமே தவிர, சமுதாயத்தின் இழிநிலையைப் போக்க ஒரு கடுகளவும் பயன்படாது. ஆகையால், உங்களுக்கு முதலாவதாக நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் உங்களுடைய நிலையை சிறிதாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உண்மையாய் ஆசைப்படுவீர்களேயானால், இந்து மதம் என்பதையும் அது சம்பந்தப்பட்ட கடவுள், மத, புராண, சாத்திர, இதிகாசம் என்பவைகளையும் உதறித் தள்ளி அவற்றிலிருந்து வெளி வாருங்கள். அதைச் சொல்லவேதான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால் இனியும் ஓர் ஆயிரம் ஆண்டிற்குக்கூட நீங்கள் எப்படிப்பட்ட மாநாடுகளும், சங்கங்களும், பிரச்சாரங்களும், கிளர்ச்சிகளும் நடத்தினாலும், எவ்வளவுதான் அரசியல் சுதந்திரமும், பொருளாதார முன்னேற்றமும், பட்டம் பதவிகளும் பெற்றாலும் உங்கள் சமுதாயத்திற்குள்ள இழிவு நீங்கப்போவதில்லை, இது உறுதி, உறுதி. உங்களுக்குமுன் முயற்சித்தவர்கள் செய்த தவறுகளையே நீங்களும் செய்துகொண்டு இருந்தால், உங்கள் வாழ்நாள்களும் அவர்களைப் போலவே தவறு செய்யத்தான் முடியுமே ஒழிய திருத்தம் காண முடியவே முடியாது.

மலைக்காய்ச்சலை ஒழிக்க வேண்டுமானால் மலைக்காய்ச்சலுக்கு ஆதாரமான, அதை உற்பத்தி செய்கிற கொசுப்பூச்சிகள், விஷக்காற்றுகள் முதலியவைகளை ஒழிக்க வேண்டும். இவைகள் ஒழிக்கப்படவேண்டுமானால், மறுபடியும் அவைகள் உற்பத்தியாகாவண்ணம் கசுமாலங்களையும், குப்பைக் கூளங்களையும் நெருப்பு வைத்து எரித்து, அழுக்குத் தண்ணீர் குட்டைகளை மூடி ஆகவேண்டும். அது போலவேதான் நம் சமுதாய இழிவுக்குக் காரணங்களாய் இருக்கிற எப்படிப்பட்ட மதத்தையும், கடவுள்களையும், ஆதாரங்களையும் நாம் அடியோடு அறுத்தே தீர வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

இந்து மதத்தையோ, அது சம்பந்தமான கடவுள், மதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களையோ சீர்திருத்தி விடலாம் என்று நினைப்பது வெறும் கனவும், வீண்வேலையும், கடைந்து எடுத்த முட்டாள்தனமுமேயாகும்.
சரியான வழி – புத்திசாலித்தனமான வழி என்னவென்றால், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான். அதாவது, இந்து மதத்தைவிட்டு நாம் வெளியேறிவிட வேண்டியதுதான்.

அதாவது இந்துமதம் என்பதற்கு வேறு வார்த்தை சொல்ல வேண்டுமானால், ஆரியம் – பார்ப்பனியம் என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுக்குச் சந்தேகமிருந்தால் அகராதி புத்தகங்களையும், அறிஞர்களால், ஆராய்ச்சி நிபுணர்களால் எழுதப்பெற்ற ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் யாவரும் நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். ஆஷாடபூதிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள். புத்தர், சங்கரர், ராமாநுஜர் போன்றவர்களின் முயற்சிகள் என்ன ஆயின? புத்தரை ஒழிக்கவே, இராமன், கிருஷ்ணன், இராமாயணம், கீதை, புராணங்கள், அவை சம்பந்தப்பட்ட கோவில்கள் முதலியவை கற்பிக்கப்பட்டன. இராமாயணத்தையும், கீதையையும், பிற சாத்திரங்களையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவே சங்கரர், ராமாநுஜர்கள் முயன்று வந்தார்கள். அவர்களைப் பின்பற்றித்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும், எக்தர்களும், தாசர்களும், மகாத்மாக்களும், ஆனந்தாக்களும், சுவாமிகளும் தோன்றின. இதை உணர்ந்தவர்கள்தான் இன்று இந்நாட்டு மனித சமுதாய சீர்திருத்தத்திற்கு ஒரு கடுகளவாவது தகுதியுடையவர்களாவார்கள். சமீபத்தில் தோழர் அம்பேத்கர் அவர்கள்
சென்னைக்கு வந்திருந்தபோது என்னிடத்தில் இது சம்பந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்தும், பஞ்சாப், லாகூரிலிருந்து, ஜாத்பத் தோரக் மண்டலத் தலைவர் சாந்தராம் அவர்களும், முன்பு காரியதரிசியாய் இருந்த ஹரிபவன் அவர்களும் உங்களைப் பற்றி எனக்கு எழுதிய சில கடிதங்களிலிருந்தும், உங்கள் காரியதரிசி எழுதின சில குறிப்புகளிலிருந்தும் நீங்கள் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பொறுமையாய்க் கேட்கக் கூடியவர்களென்றும், நடுநிலைமையிலிருந்து கவலையாய் சீர்திருத்தக்கூடியவர்கள் என்றும் தெரிந்ததனால் இவ்வளவு ஆயிரம் பேர் கொண்ட இந்த மாபெரும் கூட்டத்தில் இதை நான் சொல்லுகிறேன். எங்கள் நாட்டில் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவனாய் இருந்த 1922ஆம் வருடத்திலேயே ஒரு பெரிய மாகாண காங்கிரஸ் மாநாட்டில், “இராமாயணம் கொளுத்தப்பட்டால் ஒழிய, தீண்டாமை ஒழியாது” என்று சொல்லி இருக்கிறேன். வெகு பேர்களுக்கு அன்று ஆத்திரமாய் இருந்தது. இன்று எங்கள் நாட்டில் இப்படிப் பேசுவதும், கொளுத்துவதும் சர்வசாதாரணமாய் ஆகிவிட்டது. இராமாயணத்தைக் கொளுத்த ஒரு கூட்டமும், அதை ஆதரிக்க ஒரு கூட்டமும் தினமும் பொதுக் கூட்டம் கூட்டிப் பேசி வருகிறார்கள்.

மற்றும், பதினாயிரக்கணக்கான சுயமரியாதைக்
காரர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறி
விட்டார்கள் என்றே சொல்லலாம். தங்கள் வடமொழிப் பெயர்களை எல்லாம் மாற்றிக் கொண்டார்கள். இந்து மத அறிகுறியாய் இருக்கிற சின்னங்களை எல்லாம் விட்டுவிட்டார்கள். உச்சிக்குடுமிகளை எல்லாம் தாங்கள் கத்தரித்துக் கொண்டதுமல்லாமல் பிறருக்கும் கத்தரித்துவிட்டார்கள். அநேகர் புராணப் பண்டிகைகளையும், உற்சவங்களையும் கொண்டாடுவதில்லை. இதற்கு முன்பு ஏழைகள் பணத்தை வஞ்சித்துக் கொள்ளை அடித்த பணக்காரர்கள் இதற்கு முன்பு கோயில் கட்டி வந்ததை நிறுத்திவிட்டு, பள்ளிக்கூடம் முதலிய காரியங்களில் செலவிட்டு வருகிறார்கள். சென்சசில் தாங்கள் இந்துக்கள் அல்லவென்று அநேகம் பேர் சொல்லிவிட்டார்கள். புராண நாடகங்களையும், சினிமாக்களையும், பஜனைப் பாட்டுகளையும் ஜனங்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். கூடிய சீக்கிரத்தில் பெரும் கிளர்ச்சிகள் செய்து ஜெயிலுக்கும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் போகத் தயாராய் இருக்கிறார்கள். எங்கள் நாட்டார் பலர் எங்கள் திராவிட நாடு, வடநாட்டு சம்பந்தத்திலிருந்து பிரிந்து தனியாக இருக்க விரும்பும் முக்கியக் காரணம்கூட, இந்துமதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் இழிவும் சுரண்டலும் ஒழிய வேண்டும் என்பதற்குமாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லாம், தாங்கள் இந்துமதஸ்தர்கள் அல்லவென்றும், தாங்கள் இந்துக்கள் அல்ல என்றும், தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வேண்டும் என்றும், 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள். “இந்து மதத்தை விட்டுவிட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது” என்று கேட்கலாம். உங்களுக்குத் துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரைச் சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும், இழிவும் அணுகாதோ அதைச் சொல்லுங்கள், அப்படி சொல்லிக் கொள்வதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் நீங்கள் திராவிடர்கள் என்றும், திராவிட சமயத்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

அதிலும் கஷ்டமிருந்தால் சமரச சமயத்தார், மனித சமுதாய ஜீவகாருண்ய சமயத்தார் என்று சொல்லிக்கொள்ளலாம். பொருள் இல்லாததும், பித்தலாட்டமானதும், இழிவையும் அந்நிய ஆதிக்கத்தையும் சுரண்டலையும் தருவதுமான ஒரு சுயநல கற்பனையான (இந்து) மதத்தின் பேரைச் சொல்லிக் கொள்வது என்பது வெட்கக் கேடான காரியமாகும். மதம் வேண்டுமானால் – மதம் வேண்டும் என்பவர்கள், மதத் தத்துவங்களையும், அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒரு மதத்தைத் தழுவுவது என்பது அறிவுடைமையாகும். அப்படி இல்லாமல் தான் ஒரு மதத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால் அது வருணாசிரம தர்மத்தை மற்றொரு முறையில் பின்பற்றுவதேயாகும்.

பகுத்தறிவுவாதி என்று சொல்வது எல்லா மதத்திற்கும் தாய் மதம் என்று சொல்லிக் கொள்வதை ஒக்கும், நீங்கள் திராவிடர்கள் என்பதை உணராவிட்டாலும் நீங்கள் ஆரியர்கள் அல்ல, ஆரிய சம்பிரதாயத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றும், ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் குடியேறி வந்த ஓர் அந்நிய இனத்தவர்கள் என்றும், அவர்களுடைய ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட கடவுள், மத, சாத்திர, புராண இதிகாசங்களைச் சுமந்து கொண்டிருக்கிறதன் பயனாகவே இந்த இழிநிலையில் இருக்கின்றீர்கள் என்றும் தெரிந்தால் எனக்கு அதுவே போதுமானதாகும்.
நான் சொன்ன இவற்றை நீங்கள் நன்கு ஆலோசனை
செய்துபார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

(29.12.1944, 30.12.1944, 31.12.1944 ஆகிய நாள்களில் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப் பட்ட (பார்ப்பனரல்லாதார்) இந்து வகுப்பார் சங்க மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் தலைமை உரையிலிருந்து)

‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 13.01.1945

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக