வெள்ளி, 14 மார்ச், 2025

இதுவும் “கடவுள் சித்த”மோ? (பொருளாதார சிந்தனை)

 


விடுதலை நாளேடு
பகுத்தறிவுக் களஞ்சியம்

விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் "கடவுள் சித்தமாக" இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய்ப் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால் இது யாருடையது செயல் என்று ஆஸ்திகர்கள் சொல்ல வார்களோ தெரியவில்லை!

பொருளாதார நிபுணர்கள் அடங்கிய நாடாகவும், உலக பொருளாதார சாஸ்திரம் கற்பிக்கின்றவர்களைக் கொண்ட நாடாகவும் உள்ள அய்ரோப்பா, அமெரிக்கா நாடுகள் இன்று மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவது ஒரு பக்கமும், போதிய ஆதாரமில்லாமல் பட்டினி கிடப்பது என்பது மற்றொரு பக்கமாக இருந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்தப்படி இவர் கஷ்டப்படுவது ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில் மக்கள் உணவுக்கேற்ற விளை பொருட்களை நெருப்பிலும், பூமியிலும், சமுத்திரத்திலும் கொட்டி நாசமாக்கி வருகிறார்களாம். இதைப் பற்றி “தமிழ்நேசன்” என்னும் பத்திரிகையில் சில குறிப்புகள் காணப்படுவதைக் கீழே குறிப்பிடுகின்றோம்:

நாட்டில் ஏராளமான உணவுப் பொருட்கள் மலிந்து கிடக்கையில் அநேகர் பட்டினியால் வாடுவதேன்? வேலை யின்றித் தவிப்பதேன்? பெரிய செல்வாதார நிபுணர்களடங்கிய இங்கிலாந்தில் அரசாங்கத்தாரிடம் பிச்சை வாங்கிப் பிழைக்க லட்சக்கணக்கான மக்கள் இருக்க வேண்டுவதேன்?

அதிகமான உற்பத்தி உள்ளது. ஜனங்களுடைய தேவைக்கு மேல் ஆகாரப் பொருட்கள் அதிகமாய்க் குவிந்து கிடக்கையில் அவற்றிற்கெதிரில் கணக்கில்லா ஜனங்கள் ஆகாரத்தைப் பார்த்துக் கொண்டே பட்டினியால் வாடு கின்றனர்.

இது மாத்திரமா? இந்தப் பொருட்கள் அதிகமாய் விளைந்து விட்டனவென்று அவற்றை அழிக்கவும் செய்கிறார்கள். ஏன்? அவற்றை உற்பத்தி செய்தவர் கட்குப் போதிய விலை கிடைக்கவில்லை.

“கடவுளால்” அளிக்கப்பட்ட விளை பொருட்களை அழிக்க முற்படுவது என்றால், மனிதரின் போக்கை என்னவென்று சொல்வது? முதலாளிமார்கள் தங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. அவ்வாறு அழித்து வந்திருப்பதன் கணக்கைப் பாருங்கள்.

அமெரிக்காவில் (அய்க்கிய நாடுகள்)

புளோரிடாப் பகுதியில் காரட் கிழங்கு உற்பத்தி முழுவதையும் பூமியில் புதைத்து விட்டனர்.
ஆண் பன்றிகள் 6,200,000, பெண் பன்றிகள் 20,000 ஆகிய இவைகளை அழித்து விட்டனர்.
ஈஜிப்ட் என்னும் எகிப்து தேசத்தில் ஏராளமான பருத்தியை அழித்து விட்டார்கள்.
கனடாவில் ஏராளமான கோதுமையை அடுப்பெரித்து விட்டனர்.
பிரேசிலில் 270 லட்சம் மூட்டை காப்பியை அழித்து விட்டனர்.

சிலியில் 225,000 ஆடுகள், டச்சு – கிழக்கிந்திய நாடுகளில் பல நூறு டன் கறுவாச் சாமான் அழித்து விட்டார்கள்.
அலாஸ்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் முதலிய நாடுகளில் பிடிக்கப்பட்ட மீன்களை மறுபடியும் கடலில் போட்டு விட்டனர்.

இவற்றை ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் கொடுத்துத வலகாதா?

அமெரிக்காவில் விவசாயப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமென்று ஏராளமான காணிக்காரர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்துப் பயிர் செய்யாது அமெரிக்க அரசாங்கத்தார் செய்திருக்கிறார்கள்.

பிரான்ஸ் தேசத்தில் நூல் நூற்கும் தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைவதற்காக 40,000 கதிர்களை அரசாங்கத்தார் தீயிலிட்டுள்ளனர்.
செல்வ நூல் சாஸ்திரத்தின் பேரால் சொல்லிய அக்கிரமங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆகாரச் சாமான்களை அழிக்கக் கூடாதென்று பிரஞ்சுப் பார்லிமெண்டு சபை 1932-ம் வருஷம் ஜனவரி மாதம் 19-ந் தேதி கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்றுப் போயிற்று. எனவே, இவ்விதக் காரியங்களுக்கெல்லாம் காரணம் யார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
ஆனால், பஞ்சமும், பட்டினியும் கடவுளால் ஏற்படுகின்றன என்று மதக் குருக்கள் மக்களுக்குப் போதிக்கிறார்கள். இதில் இருக்கும் நாணயத்தை உணரவே விடுகின்றோம்.

('நாஸ்திகன்' என்ற
தந்தை பெரியார் எழுதியது,
'குடிஅரசு' 27.1.1935)

செவ்வாய், 4 மார்ச், 2025

எழுத்தாளர் சாவியும் , மணியனும் ஆனந்தவிகடனுக்காகப் பெரியாரைக் கண்ட நேர்காணல்.

#மீள்பதிவு

⚖️👇👇👇👇⚖️

இது எழுத்தாளர் #சாவியும் , 
#மணியனும் 
#ஆனந்தவிகடனுக்காகப்
 #பெரியாரைக்
 கண்ட  நேர்காணல்.

சற்றே நீண்ட பதிவு.
ஆனால் மிக விரிவான 
நிகழ்வுகளைப் பெரியார் 
நினைவுகூர்கிறார்
                ☆☆☆☆☆

+#பெரியார் #பேசுகிறார்
"சாவி"

+திருச்சி #பெரியார் #மாளிகைக்குள் 
காலடி எடுத்துவைக்கும்போதே, 
எங்கள் பார்வையில் 
பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், 
''ஐயா உள்ளேதான் இருக்கார். 
நீங்க வரப்போறீங்கனு 
சொல்லியிருக்கேன். உள்ளே போங்க'' 
என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.

+உள்ளே... கட்டிலின் மீது சம்மணமிட்டு 
அமர்ந்திருந்த #பெரியாரைப் பார்த்ததும், 
''வணக்கம் ஐயா!'' என்று கும்பிடுகிறோம்.
''வாங்க... வாங்க, ரொம்ப சந்தோசம்...'' 
எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே ''இப்படி உட்காருங்க'' என்கிறார்.

+சாதாரண வெள்ளைப் பனியன். 
நாலு முழம் வேட்டி. வயிற்றின் 
நடுப் பாதியில் வேட்டியின் இரு 
முனைகளையும் பனியனுக்கு 
மேல் கட்டியிருக்கிறார். 

+அந்த முனைகள் இரண்டும் 
அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் 
கைகள் தாமாகவே அவற்றை 
இறுக்கிவிடுகின்றன. 

+நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே 
குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, 
சிற்சில சமயங்களில் பலமாகக் 
குரைத்து வீட்டையே அதிரவைக்கிறது. 

+ #பெரியாரின் பேச்சு எதனாலும் 
தடைபடவே இல்லை.
''#ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.''
''தெரியுமே. #வாசன் #அவங்களை 
எனக்கு ரொம்பக் காலமாத் தெரியும். 
நான் ' #குடியரசு’ பத்திரிகை 
ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி 
சந்திச்சுக்குவோம். 

+' #கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் 
என்கிட்டேதான் கதர் போர்டிலே 
#கிளார்க்கா இருந்தார். ரொம்ப 
#யோக்யமானவரு. 
கதர் போர்டு ஆட்டம் கொடுத்ததும், 
நான்தான் #திருவிக-வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன். 

+' #நவசக்தி’யிலே சேர்ந்து 
கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. 
அப்புறம்தான் விகடன்லே சேர்ந்துட்டார்.''

+'' #ராஜாஜியோடு தங்களுக்குப் 
பழக்கம் ஏற்பட்டது எப்போது?''

+''அதுவா? அந்தக் காலத்துலே 
ஈரோட்லே பி.வி. #நரசிம்மய்யர்னு 
எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் 
ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே 
நான் சேர்மனா இருந்தப்போ, 
குடியானவங்க வழக்கெல்லாம் 
என்கிட்டே நிறைய வரும். 
அந்த கேஸ் எல்லாம் அவருக்கு 
அனுப்புவேன். #யாருக்கு? 
#நரசிம்மய்யருக்கு. 

+நான் சேர்மனா வர்றது சில 
பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே 
எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. 

+சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி 
எலெக்ஷன்ல #ஜெயிச்சதும் 
நேராப் போயி #சேர்ல #உட்கார்ந்துட 
#முடியாது. #கலெக்டர் சிபாரிசு 
செய்யணும்னு வெச்சிருந்தாங்க. 

+அந்தச் சமயத்துலே #சர் #பி. #ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் 
பத்தி நல்லாத் தெரியுமானதாலே, 
பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை #சேர்மனாக்கிட்டார்.''

+''ஆமாம். அந்த மாதிரி உங்களைப் 
பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் 
போட்ட ஆசாமி யார்?''

+'' #சீனிவாச #முதலின்னு ஒரு வக்கீல். 
ஒரு #நான்பிராமின் வக்கீலாயிருக்காரே, 
முன்னுக்குக் கொண்டாருவோம்னு 
நான்தான் அவரை முன்னுக்குக் 
கொண்டுவந்தேன். 

+ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டுவந்தார். 

+அப்ப #ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி )
சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார 
வக்கீல்னு சொல்வாங்க. 

+அதனாலே என்கிட்டே வர்ற 
கேஸெல்லாம் அவருக்கு அனுப்பிவைப்பேன். 
அந்தப் பழக்கத்துலே அவர் வரப்போக 
இருந்தாரு. எங்க வூட்டுக்கு அடிக்கடி வ
ருவார். அவரும் அப்ப #சேலத்துலே #சேர்மன்.''

+''எந்த வருஷம். அது?''

+'' *தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு (1919) ஞாபகம்...''

+'' #வரதராஜுலு #நாயுடு கேஸ் 
சம்பந்தமா அவர் மதுரைக்குப் 
போறப்ப நீங்களும் கூடப் போறது 
உண்டு இல்லையா?''

+''ஆமா; போயிருக்கேன்.
 'நீ சேர்மன் பதவியை விட்டுட்டு 
காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் 
விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து 
பொதுப் பணி செய்யலாம்’னார்.  #வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு விட்டுட்டேன். 

+அப்ப காங்கிரஸ் #சத்தியமூர்த்தி 'குரூப்’ 
கையிலே இருந்தது. அமிர்தசரஸ் 
காங்கிரஸின்போது காங்கிரஸ் 
பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப் 
பிரிஞ்சுட்டது. 

+சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், 
திலகர் இவங்க ஒரு 'குரூப்’... காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு 'குரூப்’.

+நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே 
அமிர்தசரஸ் காங்கிரஸுக்கு 
அப்புறம்தான். அதுவரைக்கும் 
ராஜகோபாலச்சாரியும் நானும் 
நண்பர்கள்தான். அப்புறம்தான் 
சேர்ந்து வேலை செஞ்சோம்.''

+''அதுக்கப்புறம் என்ன ஆச்சு?''

+''எங்க நட்பு வளர்ந்தது. 
காங்கிரஸும் வளர்ந்தது. எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். 
நான் கோவை ஜில்லா 
காங்கிரஸ் காரியதரிசி. 
அப்பவெல்லாம் செகரெட்டரிதான்;
 பிரசிடென்ட் கிடையாது. 

+தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வந்தது. 
அப்பவும் நான்தான் செகரெட்டரி.''

+''ஆமாம்; ராஜாஜி உங்களை 
எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?''

+'' #ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.''

+''உங்களோடு வேறு யாரும் இல்லையா?''

+''இருந்தாங்க... 
#திரு.வி.க-வும் #வரதராஜுலு 
நாயுடுவும் இருந்தாங்க. 
எங்க மூணு பேரையும்தான் 
எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே 
பேச விடுவாங்க. 

+வரதராஜுலு நாயுடு பேச்சில் #வசவு 
இருக்கும். 
#திரு.வி.க. பேச்சு #தித்திப்பா 
இருக்கும். #நல்ல #தமிழ் பேசுவார். 
என் பேச்சில் #பாயின்ட் இருக்கும். 
பாயின்ட்டாப் பேசி #கன்வின்ஸ் பண்ணுவேன். 

+நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி 
எல்லாம் எழுந்து பேசுவாங்க...''

+''இந்த '#பிராமின் - #நான்பிராமின்’ 
தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?''

+''எப்படி வந்தது வினைன்னா - 
#வவேசு.#ஐயரால் வந்தது. 
சேரன்மாதேவியில் 'நேஷனல் 
காலேஜ்’னு ஒண்ணு ஆரம்பிச்சு, 
வீரர்களை உற்பத்தி செய்யப்போறதாச்
 சொன்னாங்க. 

+பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ 
அதுக்குப் பேர். அந்த #குருகுலத்துக்கு 
எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. 

+சிங்கப்பூர், மலேயாவில் 
இருந்தெல்லாம்
 பணம் வசூல் செஞ்சாங்க. 
"தமிழ்நாடு காங்கிரஸ் 
கமிட்டியிலேருந்தும் பணம் கேட்டாங்க. 

+நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் 
கமிட்டி செகரெட்டரி. 
ராஜாஜி 'நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். 
வ.வே.சு.ஐயர் வந்து உட்கார்ந்துக்கிட்டு 
இருபதாயிரம் வேணும்னார். 

+நான், 'முதல்லே பத்தாயிரம் 
இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு 
சொன்னேன். ராஜாஜி சரின்னுட்டார்.''
வ.வே.சு.ஐயர் அன்னிக்கு சாயந்திரமே 
பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்...''

+''பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங்களே...''

+''ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா, எனக்கென்னவோ சரியாப் படலே, அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட்டதுக்குத் தகுந்தாப்பலேயே 
காரியம் நடந்துட்டுதே!''

+''என்ன ஆச்சு?''

+''முதல் மந்திரியாயிருந்தாரே 
#ஓபிஆர். #ரெட்டியார்...''

+''ஆமாம்...''

+''அவர் #மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான். அடுத்த மாசமே 
அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். 'என்னடா?’னு கேட்டோம்.
 'குருகுலத்துலே #பார்ப்பனப் 
பிள்ளைங்களையும் #எங்களையும் 
#வித்தியாசமா நடத்துறாங்க. 
அவங்களுக்கு #இலைபோட்டு சாப்பாடு. 
எங்களுக்கு #பிளேட். 

+அவங்களுக்கு #உப்புமா, எங்களுக்கு 
#பழையசோறு. அவங்க #உள்ளே 
படுக்கணும். நாங்க #வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. 
எங்களுக்கு ஒரு பிரார்த்தனை’னான். 

+அவ்வளவுதான். #ஜாதிவேற்றுமையை 
வளர்க்கிற குருகுலத்துக்கு 
இனி பணம் கிடையாதுன்னுட்டேன். 
அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி ராஜகோபாலாச்சாரிக்குத் 
தெரியப்படுத்தினேன். 

+அவர் உடனே வ.வே.சு.ஐயரைக் 
கூப்பிட்டு விசாரிச்சாரு. 
'என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா? தேசாபிமானமா? கொஞ்சம்கூட 
நல்லாயில்லே’னு கோபிச்சுக்கிட்டார்.''

+''வ.வே.சு.ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?''

+''என்ன சொன்னாரு! 
'நான் என்ன செய்யட்டும்? குருகுலம் ஆரம்பிச்சிருக்கிற இடம் 
ஒரு #வைதீகசென்டர். அதனாலே 
அந்த இடத்துல அப்படி நடக்க 
வேண்டி வந்துட்டுது’னு சமாதானம் சொன்னார். 

+அப்ப ரெண்டு ஜாயின்ட் 
செகரெட்டரிங்க. 
கே.எஸ்.சுப்பிரமணியம்னு 
கடையத்துக்காரர் ஒருத்தர். 
அவர் ஒரு செகரெட்டரி. 

+வ.வே.சு.ஐயர், எனக்குத் 
தெரியாம அவர்கிட்டே போய் இன்னொரு ஐயாயிரத்துக்கு செக்கை 
வாங்கிட்டுப் போயிட்டார். 

+அதுக்குப் பின்னாலே ஒரு மாசம் 
கழிச்சுத்தான் இந்த சங்கதி 
அம்பலத்துக்கு வந்தது.''

+''கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?''

+''செகரெட்டரி டு சைன்’ங்கிறது ரெசல்யூஷன். கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால, அவர்கிட்டே #தந்திரமா கையெழுத்து 
வாங்கிட்டுப் போயிட்டார்.''

+''அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு..?''

+''அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம்தான். 
அப்புறம் எங்கே போனாரோ? 
ஆசாமி திரும்பி வரலே.
ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் 
புரிஞ்சுபோச்சு, கோளாறு வந்துட்டுதுன்னு. 

+அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? 
அந்த விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு #சேரன்மாதேவி #குருகுலப் #போராட்டம்னு பேர். 

+டாக்டர் வரதராஜலு நாயுடு, 
திரு.வி.க. இவங்க ரெண்டு பேரும் 
எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. 
வரதராஜுலு நாயுடுவே இந்தப் போராட்டத்தை நடத்தினார். குருகுலம் ஒழிஞ்சது.''

+''ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந்தாரா?''

+''சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க... 
#வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் 
கொள்கைக்கு விரோதமா 
#வகுப்புஉணர்ச்சியைத் தூண்டுற 
மாதிரி நடந்துக்கிறார்னு 
அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி 
ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். 

+எனக்கு அது சரியாப் படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல் ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு #ராஜாஜி #தீர்மானத்தைத் #தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார். என்.எஸ்.வரதாச்சாரி, சாமிநாத சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே.சந்தானம், ஹாலாஸ்யம் இவங்களெல்லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. 

+நான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டுது...''

(''க்ளிக்!'' - போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.
இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி, காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார்.
நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்)

+''சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?'' - இவ்வாறு நான் (சாவி) கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.

+''வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். #புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!'' -
(உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன)

+''அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு #ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? 

+கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. 

+அந்த #மோர், அந்தத் #தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?'' - சிரிக்கிறார் பெரியார்.

( இதற்குப் பின் பதிவு இல்லை).

ஒளிவுமறைவற்ற நடுநிலயான இந்தப்பதிவில் நுணுக்கமான செய்தி என்னவென்றால்.
1. பிராமணர்கள் பலர் பெரியாரின் நண்பர்கள்.
2. அவர் வெறுத்தது "பிராமணீயத்தை" பிராமணர்களை அல்ல.
3.பிராமணரல்லாதவர்கள் (சீனிவாச முதலி, கடையம் கே.எஸ் சுப்பிரமணியம் ) இவருக்கு எதிராகச் செயல்பட்டிருக்கின்றனர்.

+பெரியாரின் நேர்மையை வாழ்த்தி வணங்குவோம்.

                 ✍️ #தொகுப்புப் பதிவு✍️

⚖️ #துலாக்கோல்/17.01.2025⚖️

இந்து என்றால் என்ன? – தந்தை பெரியார்

 

இந்து என்றால் என்ன? – தந்தை பெரியார்

விடுதலை நாளேடு
தந்தை பெரியார்

பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த நாள் கொண் டாடினார்கள் – அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!

கடவுளுக்கு இலக்கணம் கூறியவர்கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் – சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமி யில் பிறந்தான்; கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந்தான் என்று கூறி விழாக்கள் – உற்சவங்கள் கொண்டாடினார்கள்.

பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளை யும், செய்யாத சங்கதிகளையும் புகுத்தி விழாக் கொண்டாடி னார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.
இவை எல்லாம் மக்களை முட்டாளாக் குவதற்கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.
பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர் களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்க ளுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.
இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படு கின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் – பரப்பவுமே செய்யப்படுகின்றன.

அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனுமதிக்கிறேன். மக்களும் எனது தொண்டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகையில் பணம் பல பொருள்கள் முதலி யனவும் அளிக்கின்றீர்கள்.

நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக் கூடாது என்பதைக் கொள்கையாகத் திட்டமாகக் கொண்டவர்கள்.

நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள் கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.
எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.
இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன் னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டு களைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.

இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத்திரன் என்று எண்ணிக் கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.
முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது. ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரி களிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.

நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே – எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளு கின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின்றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் தானே!

அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு அத் துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை – எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.

இன்றைக்கு அரசியல் துறையிலாகட்டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த் தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.
இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப் பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.

இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல்லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.

இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள் உண்டு. பார்ப்பனர் அல்லா தாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள் என்பது தானே.

இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.

அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின் றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.

அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே – எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின்றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!

உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக – சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.

இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.
அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!
தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?
இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள் ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கடவுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.

அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத்தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.

மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.
தோழர்களே! இன்று மானமுள்ள – யோக்கிய முடைய மக்களுக்கு நடக்கக் கூடாத எல்லாம் இன்றைக்கு அரசியல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே – பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.

தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று கூறப்பட்டதோ அன் றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன் னது செய்ய வில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே, ஒழியவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லையே.

காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன – நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.

நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாச வேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.

தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன்றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக்களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.

இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் – பார்ப்பனர் அல்லாதவர்களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.
இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட்ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார்களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.

பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளிலும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.

இன்றைக்கு அந்த நிலை இருக்கின்றதா? அடி யோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.

இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?

29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973
அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 12.6.1973).


குற்றங்கள் நீங்க முன்னோர்கள் பாடுபட்டது இன்றா, நேற்றா? அனுபவத்தில் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது?

 

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம்

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை

பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக் காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கித் ததும்பிக்கொண்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்சியைக் கண்டு நாம் மிகுதியும் மகிழ்ச்சி உறுகிறோம். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை யும், மதுரை அருணாசலமும் விண்ணப்பமும் வேண்டுகோளும் விடுத்த பிறகு பல வாலிபர்கள் தங்கள் தங்கள் பெயர்களைக் கொடுத்து சத்தியாக்கிர கத்தைச் சடுதியில் ஆரம்பிக்கும்படியாகச் சொல்லி தங்கள் உற்சாகத்தைக் காட்டி வருகிறார்கள், தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பயனுள்ள வேலை செய்யவேண்டுமானால் அது சத்தியாக்கிரகத்தைத் தவிர வேறில்லை என்பதை நாம் மனப் பூர்த்தியாக ஒப்புக்கொள்கிறோம். நமது நாட்டில் ஆசார சீர்த்திருத்தமும் அரசியல் சீர்திருத்தமும் ஆரம்பித்து எவ்வளவு காலமாய் நடைபெற்று வருகிறது? இவ்விரண்டிற்காக நமது மக்கள் செலவழித்த காலம், பொருள் எவ்வளவு?

நாடு அடைந்த பலன் என்ன?
இவ்வளவு ஆகியும் இதன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தலைவர் என்போரும் மக்களை ஏமாற்றித் தன்தன் சுயநலத்திற்கு வழி தேடிக் கொண்டார்களேயல்லது நாடு அடைந்த பலன் என்ன? நாட்டில் மதிக்கத்தகுந்த ஒவ்வொரு பெரியாரும் ஆசாரத் திருத்தம் ஏற்படவேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் யாவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும், வைதிகப்பிடிவாதங்கள் ஒழிய வேண்டும் அதில்லாவிட்டால் விடுதலையில்லை, சுயராஜ்ய மில்லை என்பதாக பேசியும், எழுதியும் இருக்கிறார்கள், இதை நாடு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் குறிப்பு காட்டி இருக்கிறார்கள். அநேக மகாநாடுகளில் இதைப்பற்றிய தீர்மானங்களை ஏகமனதாய் நிறைவேற்றியும் இருக்கிறார்கள் இவற்றைச் செய்த பெரியார்கள் மக்களால் மதிக்கப்பட்டும் வருகிறார்கள்.

ஆனால் அனுபவத்தில் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது?
இன்றுவரை ஒரு காரியமும் இல்லையே, இக்குற்றங்கள் நீங்க முன்னோர்கள் பாடுபட்டது இன்றா, நேற்றா? ஆயிரக்கணக்கான வருஷங்களாய்பாடுபட்டு வந்திருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருந்து வருகிறது. அவ்வாதாரங்கள் எல்லாம் மதிக்கப் படுகிறது, பூஜிக்கப்படுகிறது. ஆனால் பலன் என்ன? என்று மறுபடியும் கேட்கிறோம்.
ராமாயணத்தில் குகனுடன் ராமர் சரிசமமாய் உட்கார்ந்திருந்தார் என்கிறார்கள்,
பாரதத்தில் விதுரன் வீட்டில் கிருஷ்ணன் சாப் பிட்டார் என்கிறார்கள்.
பாகவதத்தில் திருப்பாணர் ஆழ்வாரானார் என்கிறார்கள்.
திருவிளையாடல் புராணத்தில் நந்தனார் அறுபத்தி மூவரில் ஒருவராகி நாயனாராயிருக்கிறார் என்கிறார்கள்.
இவ்விருவரும் கோயில்களில் பூஜிக்கப்படு கிறார்கள் என்கிறார்கள். பெரிய புராணத்தில் ஜாதி யில்லை என்று சொல்லி இருக்கிறது என்கிறார்கள்.

உமாபதி சிவம் பெத்தான் சாம்பானுக்கு முக்தி கொடுத்ததாய் சொல்லுகிறார்கள்.
கபிலர், பார்ப்பனனுக்கும் பறையனுக்கும் வித்தி யாசமில்லை என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.
அவ்வை ‘ஜாதி யிரண்டொழிய வேறில்லை’ என்று சொன்னார் என்கிறார்கள்.
திருவள்ளுவர் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்னதாகச் சொல்லுகிறார்கள்.
இராமலிங்க சுவாமிகள் ‘ஜாதி குலம் பேசும் சகடர்கள்’ என்று பாடியதாகச் சொல்லுகிறார்கள்.
திருநாவுக்கரசு நாயனார் “சாத்திரம் பல பேசும் சளுக்கர்காள், கோத்திரமும் குலமுங்கொண்டென் செய்வீர்கள்” என்று கேட்டதாகச் சொல்கிறார்கள்.
இவைகளுக்கெல்லாம் ஆதாரமும் காட்டுகிறார்கள்.

மதாச்சாரியார்கள் என்போர்களான ராமானுஜர், ஜாதி வித்தியாசமில்லை என்று சொல்லி பறையர்களை யெல்லாம் பிடித்து, நாமம்போட்டு, பூணூல் போட்டு பஞ்சகச்சம் கட்டச்செய்து அய்யராக்கினதாகச் சொல்லுகிறார்கள்.
சங்கராச்சாரியார் தீண்டாமை இல்லை என்று சொன்னதோடு பறையனது காலில் விழுந்து மன் னிப்புக் கேட்டுக்கொண்டதாக சொல்லுகிறார்கள்.
இந்து மதத்திலேயே தீண்டாமை இல்லை என் கிறார்கள்
மகமதியம், கிறிஸ்தவம், பவுத்தம், சமணம், பாரசீகம், சீக்கியம், ஆரிய சமாஜம் பிரமசமாஜம் முதலிய மதங்களிலெல்லாம் தீண்டாமை இல்லை என்கிறார்கள்.
அறிவாளிகளான தயானந்த சரஸ்வதி ராஜாராம் மோகன்ராய்,, விவேகானந்தா, ராமதீர்த்தா, ராம கிருஷ்ண பரம அம்சர், ஜோதிராவ் பூலே,. ரவிந்தரநாத் டாகூர், காந்தி முதலிய மகாத்மாக்கள் தீண்டாமை இல்லை என்று சொன்னதாகச் சொல்லுகிறார்கள் எங்கும், எதிலும் தீண்டாமையே!

இவைகள் தவிர வேதத்தில் தீண்டாமை இல்லை, கீதையில் தீண்டாமை இல்லை சைவத்தில் தீண்டாமை இல்லை, வைணவத்தில் தீண்டாமை இல்லை என்றும் சொல்கிறார்கள் இவ்வளவு மதங்களும், இவ்வளவு மதாச்சாரியர்களும், இவ்வளவு பெரியார்களும், இவ்வளவு ஆதாரங்களும் தீண்டாமை இல்லை என்று சொல்லியும், எழுதியுமிருந்தும் நமது நாட்டில் மாத்திரம் பிரத்தியட்சத்தில் தீண்டாமைப் பேய் இருக்கிறதா இல்லையா? என்று பாருங்கள். தீண்டாமை மாத்திரம் என்று சொல்லமுடியுமா? தீண்டாமை, பேசாமை, நடக்காமை, நிழல் மேலே படாமை, கண்ணில் தென்படாமை முதலியவைகள் இருக்கிறதா இல் லையா? அதுவும் கோவில், குளம், பள்ளிக்கூடம், தெரு முதலிய இடங்களிலும் பூச்சி, புழு, நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம் முதலியவைகள் இருப்பதற்கும், நடப்பதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் ஆட்சேபணையில்லாததுமான இடங்களில் எல்லாம் கூட தீண்டாமை பேய் இருக்கிறதா இல்லையா? சோத்துக்கடை, காப்பிக் கடை, இரயில் வண்டி முதலிய இடங்களில் இருக்கிறதா இல்லையா? இதற்காக எத்தனையோ காலமாய் எத்தனையோ பேர் பாடுபட்டும் முடியாமலிருக்கிறதா இல்லையா?

ஏன் இப்படி இருக்கிறது என்பவைகளை யோசித்துப்பாருங்கள். வாலிபர்களே உங்களைத்தான் கேட்கிறோம், தயவுசெய்து யோசித்துப் பாருங்கள், இவற்றைப் போக்கடிக்க யோக்கியமான முறையில் சரியான விலை கொடுக்க முன்வந்து நீங்கள் யாரும் இதுவரை முயற்சிக்கவேயில்லை என்பதும், அதனால்தான் அது (தீண்டாமை) இன்னமும் நமது நாட்டில் நமது உருவமாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியவரும். எனவே, இதைப் போக் கடிக்க வேண்டாமா? வேண்டுமென்பீர்களானால் உங்கள் கையில் புஸ்தகம் கூடாது, நீங்கள் இது முடியும் பரியந்தம் படிக்கக்கூடாது, பள்ளிக்குப் போகக்கூடாது கோவிலுக்குப் போகக்கூடாது ஏன் என்று கேட்பீர்களானால் நீங்கள் எவ்வளவு படித்தும், எவ்வளவு உத்தியோகம் பார்த்தும் எவ்வளவு பெரியமனிதனாகி எவ்வளவு பக்திமானாகி கடவுளோடு கடவுளாய் உறைந்துக்கொண்டிருந்தாலும் தீண்டாமையென்பது ஒருக்காலும் உங்களை விட்டுப்போய்விடாது.

பிள்ளைகளும் அப்படிதான் சாகுமா?
ஜஸ்டிஸ் கிருஷ்ணன் அய்கோர்ட் ஜட்ஜ் வேலை பார்த்தும் தீண்டாதவராய்த் தான் செத்தார். அவர் பிள்ளைக்குட்டிகள் இன்னமும் தீண்டாதவர்களாய்த்தான் இருக் கிறார்கள். மந்திரி முதலிய பெரிய உத்தியோகம் பார்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது தீண்டாதார்களாகிய சூத்திரர்களாகத்தானிருக்கிறார்கள். பார்ப் பனரல்லாத மடாதிபதிகள், தம்பிரான்கள் எல்லாம் என்னதான் ஸ்ரீலஸ்ரீ பட்டமிருந்தாலும் சூத்திரர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள், மைசூர், புதுக்கோட்டை மகாராஜாக்களெல்லாம் சூத்திரர்களாய்தான் இருக்கிறார்கள். மகாத்மா காந்தியை உலகமெல்லாம் போற்றினாலும் அவரும் தீண்டாதார் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த நிலையில் நீங்கள் படித்து என்ன செய்யப் போகிறீர்கள் ? யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்? நீங்கள் பாசானதாகவே வைத்துக் கொள்ளுங்கள். பெரிய உத்தியோகம் பார்த்துப் பணம் சம்பாதித்து அரசபோகம் அனுபவித்ததாகவே வைத்துக்கொள்ளுங்கள். சாகும்போது யாராய்ச் சாவீர்கள் என்பதைச் சற்று யோசித்துப்பாருங்கள். குற்றமற்ற மனிதனாய்ப் பிறந்து இருந்தும், சூத்திரர்களாய் தீண்டாதவர்களாய் பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்களாய் மிருகத்திலும் தாழ்ந்தவர்களாய் மனிதத் தன்மை அற்றவர்களாய், சுயமரியாதை இல்லாமல்தான் சாவீர்களா அல்லது வேறு விதமாய் சாவீர்களா? என்பதை நினைப்புக்குக் கொண்டுவாருங்கள். நீங்கள் எவ்வளவு பணந்தேடி வைத்திருந்தாலும் உங்கள் பிள்ளைகளும் குட்டிகளும் அப்படிதான் சாகுமா? வேறுவிதமாய்ச் சாகுமா?

என்பதை யோசித்துப் பாருங்கள்
எனவே, உங்கள் போக போக்கியமும், வாழ்வும், பணமும், பதவியும், பட்டமும் என்ன செய்வதற்கு ஒரு நாய்க்கு இருக்கிற யோக்கியதை உங்களுக்கு இல்லையென்று ஒப்புக்கொள்ளுகிற நீங்கள், ஒரு பன்றிக்கிருக்கிற யோக்கியதை உங்களுக்கில்லை யென்று ஒப்புக்கொள்கிற நீங்கள் இதைப் பெறாமல் எதற்காக இருக்கிறீர்கள் என்பதற்காகத்தான் படிப்பைவிட இதை முக்கியமாய்க் கவனியுங்கள் என்கிறோமேயொழிய வேறில்லை. முதலில் தீண்டாமையைவிட இழிவான சூத்திரத்தன்மையை ஒழிக்க முயலுங்கள், அதற்குத் தக்க விலை கொடுங்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்துவரும் அக்கிரமத்தை மேடைப் பேச்சினாலும், பத்திரிகைப் பிரசுரத்தினாலும், புராண உபதேசத்திலும் தீர்த்து விடலாம் என்று எண்ணுவது அறியாமையாகும். அதனால்தான் மேல்கண்ட இந்தப் பெரியோர்களின் உபதேசமும், கட்டளையும், பாடல்களும், படிப்பினைகளும் ஆதாரமும் ஒரு கூட்டத்தாரின் வயிறுவளர்ப்புக்கு உதவுகிற தேயல்லாமல் தீண்டாமையை அசைக்கக்கூட முடியவில்லை. தீண்டாமையிலிருந்து விலகுவதுதான் சுயராஜ்யம், அதுவேதான் விடுதலை. அதுவேதான் உரிமை. அதுவேதான் சுய மரியாதை என்பதை உணருங்கள்.

தியாகத்திற்குத் தயாராயிருங்கள்
விடுதலை சும்மா கிடைக்காது. உயிரைவிட வேண்டும். இரத்தம் சிந்தவேண்டும், வெட்டுப்பட வேண்டும். குத்துப்படவேண்டும். சுட்டுக் கொல்லப்பட வேண்டும், ஜெயிலில் சாகவேண்டும் இம்மாதிரி காரியமில்லாமல் உண்மையில் விடுதலை பெற்ற நாடு எது? ஜாதி எது? சுயமரியாதை பெற்ற சமுகம் எது? என்பதை யோசியுங்கள். இதற்குத் தயாரா யிருக்கிறீர்களா? இருக்கமுடியுமா என்று உங்கள் வீரமுள்ள பரிசுத்தமான மனதைக்கேளுங்கள், அது சம்மதங்கொடுத்தால் உடனே உங்கள் புஸ்தகத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு சத்தியாக்கிரகத்தை நடத்த வாருங்கள். நாங்கள் வரத்தயாராயிருக்கிறோம் என்று எழுதுங்கள். இப்படி செய்வீர்களானால் இங்கு மாத்திரமல்லாமல், எங்குமே தீண்டாமை என்கிற வார்த்தையே இல்லாமல் செய்து விடுவீர்கள். சூத்திரத் தன்மை ஒழித்தவர்களா வீர்கள். வாலிபர் களாகிய உங்களால்தான் இந்த பெரிய காரியம் செய்ய முடியும். வாலிபர்களாகிய நீங்கள் தான் கோடிக்கணக்கான மக்களுக்கு மனிதத்தன்மை யையும், சுயமரியாதையையும், விடுதலையையும் சம்பாதித்துக் கொடுக்க யோக் கியதையுடையவர்கள். எனவே, தியாகத்திற்கு அஹிம்சையும், குரோதமும் துவேஷமுமற்ற தியாகத்திற்குத் தயாராகுங்கள்.

– குடிஅரசு – தலையங்கம் – 25.9.1927

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம்

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப் போவதாய் சிறீமான் தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் தெரிவித்துக் கொண்டதற்கு இணங்கவும், நாமும் விண்ணப்பித்துக் கொண்ட தற்கு இணங்கவும் இதுவரை அநேக ஆதரவுகள் கிடைத்துவந்திருக்கின்றன. அதாவது பல இடங்களில் ‘சூத்திராள்’ என்று போடப்பட்டிருந்த விளம்பரங்கள் எடுபட்டு விட்டதாகவும், பல மகாநாடுகளில் சுயமரியாதை சத்தியாக்கிரகத்தை ஆதரித்தும் அதற்கு உதவி செய்வதாகவும் தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.
பல தனிப்பட்ட வாலிபர்களும், பெரியோர்களும் தங்களைச் சத்தியாக்கிரகிகளாய்ப் பதிந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டும் தெரிவித்து மிருக்கிறார்கள். சில பிரபுக்கள் தங்களால் கூடிய உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே தக்கபடி பொறுப்புள்ள மக்கள் கூடி யோசித்து அதை எப்பொழுது எங்கு ஆரம்பிப்பது என்பதே இப்பொழுது கேள்வியா யிருக்கின்றது.
மிகுதியும் சந்தோஷமே!
சமீபத்தில் சிறீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் சென்னையில் இதைப்பற்றி சில கனவான்களிடத்தில் கலந்து பேசப் போவதாகவும் சமீபத்தில் அதாவது 22, 23 தேதிகளில் சென்னையில் நடக்கும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டில் யோசிப்பதாகவும் ஒரு கனவானால் கேள்விப்பட்டு மிகுதியும் சந்தோஷப்படுகின்றோம்.
ஆதலால் அப்படி ஏதாவது ஆலோசித்து முடிவு செய்ய ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படுமானால் மற்ற வெளியூர்களில் உள்ள பிரமுகர்களும் தொண்டர்களும் அவசியம் வந்து இதற்கு வேண்டிய ஆலோசனை சொல்லி உதவி செய்யவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். ஒரு படகோட்டி தன்னை தாழ்ந்த ஜாதியென்று நினைக்கின்ற ஒருவனுக்கு தனது படகை ஓட்ட மாட்டேனென்று சொல்லி பட்டினியிருக்கத் தயாராய் இருக்கும் போது மற்றபடி பெரியோர்கள், பிரபுக்கள், சுயமரியாதை நமது பிறப்புரிமை என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்குப் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லாமலிருக்கும்போதே இதற்குத் தக்க முயற்சி செய்யத் தகுந்த உணர்ச்சி இல்லையா என்று கேட்கின்றோம்.
– குடிஅரசு – கட்டுரை – 16.10.1927

வியாழன், 27 பிப்ரவரி, 2025

‘‘ராமராஜ்ஜியம்’’ எப்படி இருக்கும்? – தந்தை பெரியார்


விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை, தந்தை பெரியார்

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை லயோலா காலேஜ் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பெருக்கொன்றில் “எனக்கு அதிகாரம் வந்தால் – நான் சர்வாதிகாரியானால் சமஸ்கிருத பாஷையை இந்தியர்கள் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று, சட்டம் செய்வேன்” என்று கூறி இருப்பதோடு சீக்கிரம் ராமராஜ்ஜியத்தையும் ஏற்படுத்திவிடுவேன் என்பது பொருளாகப் பேசியிருந்ததை சுதேச மித்திரனில் உள்ளபடி ஜூலை 30ஆம் தேதி குடிஅரசில் எடுத்து எழுதி அதைப்பற்றிய நமது கருத்தையும் வெளியிட்டிருந்தோம். அதன் அடுத்த வாரத்தில் (6.8.1939) தோழர் சத்தியமூர்த்தியார் ஸ்தாபிக்க முயற்சிக்கும் ராம ராஜ்ஜியம் என்றால் என்ன? அதன் கால ஒழுக்கம் என்ன? நீதி என்ன? என்பவைகளைப் பற்றியும் எழுதிவிட்டு அத்தலை யங்கத்தின் முடிவில் அவைகளுக்கு ஆதாரமாக வால்மீகி ராமாயணத்தில் உள்ள வாசகங்களைப் பின்னால் எடுத்துக்காட்டுவோம் என்றும் எழுதி இருந்தோம்.

அது பல காரணங்களால் சென்ற வாரம் எழுதத் தவறிவிட்டதால் பல தோழர்கள் எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்ததாக எழுதி இவ்வாரம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனதுபற்றி சிலவற்றை மாத்திரம் இவ்வாரம் குறிப்பிடுகிறோம்.

ராமன் பிறப்புக்குக் காரணங்கள்
ராமாயண ஆரம்பத்திற்குக் காரணம் காட்டும் போதே ராவணேஸ்வரனால் துன்பமடைந்த தேவர்கள் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்ததாகவும், மகாவிஷ்ணு அத்தவத்திற்கு இரங்கி, தான் தசரத ராஜனுக்கு மகனாகப் பிறந்து ராவணனைக் கொன்று பதினோராயிரம் வருஷம் அரசாண்டுவிட்டு, பிறகு தேவலோகத்திற்கு வருவதாக வாக்களித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மகாவிஷ்ணு அவதாரமெடுத்தற்குக் காரணம் ராவணனைக் கொல்வதற்கு மாத்திரம்தான் என்று இருக்குமானால் ராவணனை ஏன் கொல்லவேண்டும்? ராவணன் என்ன குற்றம் செய்தான்? என்பவைகளைப் பற்றி முதலில் ஆராயவேண்டியது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், மகாவிஷ்ணு ராமனாகப் பிறப்பதற்குக் காரணம் மற்றொன்று கூறப்பட்டிருக்கிறது. அதுதான் ராமாயண ஒழுக்கத்திற்குப் பொன்மதில் அரண் என்று சொல்லத்தக்கதாக இருக்கிறது.

அது என்னவெனில், மகாவிஷ்ணு வானவர் ஒருகாலத்தில் பிருகு மகரிஷியின் பத்தினியைக் கொன்று விட்டாராம். அதற்காக அந்த ரிஷி கோபித்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கி, “நீ என் மனைவியைக் கொன்றுவிட்ட கொலை பாதகனானதால் நீ ஒரு மனிதனாகப் பிறந்து உன் மனைவியை இழந்து சீரழிய வேண்டியது” என்று சபித்து விட்டாராம். அதனால் விஷ்ணு ராமனாகப் பிறந்து தனது மனைவியை இழந்து துன்பப்பட்டாராம். இது வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 51ஆம் சருக்கத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு மனிதனாகப் பிறந்தது மனைவியைப் பறிகொடுத்துத் தவித்ததற்கு ராமாயணத்தைவிடப் பழைமையானதும் முக்கியமானதுமென்று கருதப் படுவதாகிய கந்த புராணத்தில் மற்றொரு காரணம் கூறப்பட்டிருக்கிறது. அது என்னவெனில் மகாவிஷ்ணு வானவர் சலந்தராசுரன் மனைவியாகிய பிருந்தை என்பவள் சற்று அழகுடையவளாக இருந்ததால் அவளை எப்படியாவது சேரவேண்டுமென்று கருதிச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாராம். ஆனால், அவ்வசுரன் இடம் கொடுக்காமல் காவல் இருந்ததால் முடியாமல் போய்க் கடைசியாக அவ்வசுரன் சாகும் படியாக ஆன பின்பு அவ்வசுரனுடைய உடலுக்குள் புகுந்துகொண்டு புருஷன் மாதிரியாகவே இருந்து பிருந்தையை அனுபவித்து வந்தாராம். சில நாட்கள் விஷ்ணுவிடம் அனுபவித்த பின்பே அந்த கற்புக்கரசி யாகிய பிருந்தை இவன் தன் புருஷனல்ல, மகாவிஷ்ணு என்று அறிந்து உடனே மகாவிஷ்ணுவை “ஓ விஷ் ணுவே! நீ என்னை எனது இஷ்டமில்லாமல் ஏமாற்றி வஞ்சித்துப் புணர்ந்துவிட்டதால் உன் மனைவியை ஒருவன் வஞ்சனையால் எடுத்துப் போகக்கடவது” என்று சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாய் மனிதராகப் பிறந்து மனைவியை இழந்து துன்பப் பட்டார் என்றும் மேல்படி கந்த புராணம் தக்க காண்டம் 23ஆம் அத்தியாயத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு ராமனாகப் பிறந்த பெருமைக்குக் காரணம் மேற்கண்ட இரண்டு மாத்திரமல்லாமல் 3ஆம் காரணமும் ஒன்று இருக்கிறது.

அதாவது, ஒரு பொல்லாத வேளையில் மகா விஷ்ணு மனித உடம்போடு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும், அதுசமயம் பிருகு ரிஷி முதலியவர்கள் அவரைக் காணச் சென்றதாகவும், வேறு சிலர் தன்னைப் பார்க்க வந்த சமயத்தில்கூட தான் புணர்ச்சியை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே அவர்களுடன் பேசியதாகவும், அதற்கு அவர்கள் கோபித்து விஷ்ணுவைப் பார்த்து “ஓ மானம், வெட்கம் இல்லாத விஷ்ணுவே! நீ இம்மாதிரி இழிவான காரியம் செய்ததற்காக நீ உன் மனைவியை இழந்து வருந்தக்கடவை” என்று சபித்ததாகவும் சொல்லப் படுகிறது.

இந்த உண்மை சிவரகசியம் மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலும், அது மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.

ஆகவே, ராமராஜ்ஜியத்தின் மூலபுருஷரும் கடவுள் அவதாரமாக வந்தவருமான ராமனின் பிறப் புக்கே இம்மாதிரியான காரணங்கள் இருக்குமானால் இந்த இப்படிப்பட்ட ராமனுடைய அல்லது கடவுளி னுடைய ஆட்சி ராஜ்ஜிய பாரம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்கூற வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ரிஷி ஜாதிகள் யோக்கியதை
ரிஷிகள் மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் அசுரர்களுடைய மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் எடுத்துக் காட்டப்பட்டதில் இருந்தே ரிஷி ஜாதிகளின் யோக்கியதையும், அசுரர் ஜாதியினுடைய யோக்கியதையும் நன்றாய்த் தெரிவதோடு கடவுள் ஜாதிகளுடைய யோக்கியதையும் பளிங்குபோல் விளங்குகின்றது.

என்னவெனில், ரிஷி பத்தினியை அவள் புருஷ னுக்குத் தெரியாமல் மாத்திரம்தான் கலந்ததாகவும், ஆனால் ரிஷிபத்தினிகள் சம்மதித்து விஷ்ணுவுடன் கலந்து இன்பம் அனுபவித்ததாகவும் விளங்கும்படியாக இருக்கிறது. அசுரர்களு டைய மனைவிகளிடத்தில் அந்த ஜபம் செல்லவில்லை. புருஷன் சாகும்படியாக ஆனபின்பே அதுவும் புருஷன் போல் வேஷம் போட்டு அசுர ஸ்திரீயை ஏமாற்றித்தான் சேர முடிந்ததே ஒழிய மற்றபடி ரிஷி பத்தினிகள் மாதிரி சம்மதம் பெற்றுச் சேர முடியவில்லை. அன்றியும் ரிஷி பத்தினிகள் கற்பழிக் கப்பட்டதற்கு ரிஷிகளால் தான் மகாவிஷ்ணுக்கு சாபம் கொடுக்கப்பட்டதே தவிர, ரிஷி பத்தினியால் சாபம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அசுர ஸ்திரீகளோ வென்றால் தாங்களே விஷயம் தெரிந்த உடனே சாபம் கொடுத்து தண்டிக்கத் தக்க சக்தி உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அன்றியும் கடவுள்ஜாதி ஸ்திரீயான திருமகள் அந்நிய புருஷர்கள் வந்து பார்க்கும்போதுகூட கலவி யில் இருந்து நீங்காமல் கலவிசெய்துகொண்டே இருக்கச் சம்மதித்து இருந் தாள் என்றால் அவர்களது தைரியத்தை மெச்ச வேண் டியதென்றாலும் அந்த ஜாதி எவ்வளவு இழிவுக்கும் சம் பந்தப்படக்கூடியது என்பது விளங்காமல் போகாது.

புராணப் பொய்கள்
இந்த உண்மைகள் இயற்கைக்கு மாறானவை என்றாலும் எப்படியோ இருக்கட்டும் நடந்தததா இல்லையா என்பதைப் பற்றி இப்போது நாம் விவகரிக்க வரவில்லை.

பொதுவாகவே இராமா யணம் மாத்திரமல்லாமல் மற்றும் அதுபோன்ற – கடவுள் சம்பந்தமான சைவ, வைணவ புராணங்கள் பொய்யென்றும், அறிவுக்குப் பொருத்தமில்லாத இழிவான ஒழுக்க ஈனமான விஷ யங்கள் கொண்ட காட்டு மிராண்டிக் காலத்து கட்டுக் கதைகள் என்றும் சொல்லி வருகிறோம். ஆனதால் அவற்றின் உண்மையைப் பற்றியும் வாதாட விரும்ப வில்லை.

ஆனால், தோழர் சத்தியமூர்த்தியார் இப்படிப் பட்ட கதையில் உள்ள இப்படிப்பட்ட சம்பவங்களில் சிக்குண்டவனாகக் காட்டப்பட்டுள்ள ஒரு பாத்திர மாகிய ராமன் என்பவனுடைய பெயரால் இருந்து வரும் கதையில் உள்ள ஒழுக்கங்களையும், நீதி களையும் கொண்ட ஒரு ராஜ்ஜிய பாரத்தை – ராஜ நீதியை இந்தியர்களுக்கு என்பதில் வடநாட்டாருக்குச் சொல்வதைப் பற்றி நமக்கு இப்போது கவலை இல்லை. தென்னாட்டாருக்கு – திராவிடர்களுக்கு – தமிழ் நாட்ட வருக்கு – தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்போவதாகக் கூறுவதும் அதற்காகவே இந்தியையும் – சமஸ் கிருதத்தையும் தமிழ் மக்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதும் இந்தக் காரியத்திற்காகவே தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்திய அரசாட்சிக்கு சர்வாதிகாரியாக ஆகவேண்டும் என்றும் ஆசைப் படுவதாகச் சொல்வதுமாயிருந்தால் அதைத் தமிழ் மக்கள் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறோம்.

ஆரியர் வேறு தமிழர் வேறு என்பதற்கும்; ஆரியநாடு வேறு தமிழ்நாடு வேறு என்பதற்கும் இந்த புராண இதிகாசக் கலைகளே போதாதா என்று கேட்கின்றோம்.

இந்தியாவென்பது எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தேசத்தையோ, ஒரு நாட்டையோ குறிப்பிடும் பெயராகாது என்று முன்னம் பல முறை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். குறிப்பாக இந்த நாட்டுக்குப் பரத கண்டம் என்றோ, பாரததேசம் என்றோ, பாரதத்தாய் என்றோ சொல்லுவது சிறிதும் பொருத்தமற்றது என்பதோடு ஒரு தமிழ் மகன் வாயில் தமிழ் நாட்டைப் பாரதநாடு அல்லது பாரததேசம் என்று சொல்லப் படுமானால், “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் அய்யப்படும்” என்ற திருவள்ளுவரின் திருவாக்குப்படி அப்படிப்பட்டவரது குலத்தைப்பற்றிச் சந்தேகப்பட வேண்டியதைத் தவிர வேறு பரிகாரமில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்மக்கள் திராவிட மக்கள் ஆண்ட நம் தமிழ் – திராவிட நாட்டை என்ன காரணத் திற்கு ஆக ஒருவன் பரதன் (ஆரியன்) ஆண்டதாகச் சொல்லி இதை பரதநாடு என்று சொல்லவேண்டும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி ஒவ்வொரு தமிழ் மகனையும் வேண்டிக்கொள்கிறோம்.

நந்தன் தேசம்
தமிழ் நாட்டை ஏன் ஒரு தமிழ் மன்னன் அல்லது ஒரு தமிழன், திராவிடன், ஆட்சியின்பேரால் அழைக்கக்கூடாது என்று கேட்கின்றோம். இந்த தமிழ் நாட்டிற்கு ஒரு ஆட்சி வேண்டுமானால் ஒரு பழங்காலத்து மூவேந்தர்கள் ஆட்சியை ஸ்தாபிக்கப் பாடுபடுகிறோம் என்றோ அல்லது மூவேந்தர்களாலும் கைவிடும்படி செய்யப்பட்ட பிறகு ஒரு நாயக்கர் ஆட்சி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மைச் சரித்திரமானால் அந்த நாயக்கர் ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ அல்லது முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்லப்படுவதில் நேர்மையாக, நீதியாக அரசாட்சி செய்த ஒரு முஸ்லிம் மன்னன் பெயரைச் சொல்லி அவன் ஆட்சியை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறோம் என்றோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் சமுகத்தைச் சேர்ந்த நந்தன் முதலிய அரசர் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படும் சரித்திரம் உண்மையாய் இருக்குமானால் அந்த ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ சொல்லாமல், அவர்கள் பேரால் இந்த நாட்டை அழைக்காமல் பரத தேசமென்றும், ராமராஜ்ஜியம் என்றும், இந்தப் பார்ப்பனர் சொல்லுவதின் அர்த்தம் என்ன என்றும் அதைச் சில தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு பின்தாளம் போடும் இழிதன்மைக்குக் காரணம் என்னவென்றும் கேட்பதோடு இன்று நிறுத்திக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு – தலையங்கம் – 20.08.1939

திங்கள், 24 பிப்ரவரி, 2025

தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா!

 

சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவரின் எழுச்சியுரை

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா!

டிசம்பர் 14 & 15 ஆகிய இருநாள்களும் தெலங்கானா – ஆந்திரா மாநிலங்களில் பரந்துபட்டு செயல்படும் மானவ விகாச வேதிகா எனும் மனித மேம்பாட்டு மன்றத்தின் 20-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. முதல் நாளான டிசம்பர் 14 அன்று மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் தந்தை பெரியாரின் சிலையினைக் காணொலி வாயிலாகத் தமிழர் தலைவர் திறந்து வைத்து இரண்டு நாள் நிகழ்ச்சியின் தொடக்கவுரையினை ஆற்றினார்.

தெலங்கானா – ஆந்திர மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முன்னோடி பகுத்தறிவாளர் மன்றங்களுள் மானவ விகாச வேதிகா ஓர் அமைப்பாகும். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தோடு பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து இணைந்து பல பணிகளைச் செய்து வரும் அமைப்பு இது. அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறது.

அய்தராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் பாட சிங்காரம் பகுதியில் மானவ விகாச வேதிகா அமைப்பின் திறந்த வெளி அரங்கம் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அத்துடன் உள் அரங்கமும் அலுவலகமும் கட்டப்பட்டு அந்த வளாகத்தில் சமூகப் புரட்சியாளர்களான புத்தர், மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, பாபாசாகிப் பி.ஆர். அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது சிலைகளுடன் தந்தை பெரியாரின் மார்பளவுச் சிலையும் நிறுவப்பட்டு அந்த ஆறு சிலைகளும் 20-ஆம் ஆண்டு விழாவின் தொடக்கநாள் நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டன.

தெலங்கானா மாநிலத்தில் முதன்முதலாக
திறந்து வைக்கப்படும் தந்தை பெரியாரின் சிலை

ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தில் 2006–ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தின் கடற்கரை சாலையில் தந்தை பெரியாரின் முதல் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைத்திட ஆந்திர மாநில அரசின் அமைச்சர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். ஆந்திர நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) முன்னெடுப்பில் நிறுவப்பட்டது அந்தச் சிலை. பின்னர் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்குப் பின் தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்ட தந்தை பெரியாரின் முதல் சிலை திறப்பு விழா இதுவாகும். மானவ விகாச வேதிகா அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

திராவிடர் கழகம்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளில் அவருடைய சிலையினை திறக்க முடிவாகியிருந்தது. இந்த ஆண்டு தந்தை பெரியாரின் 146-ஆம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிட ஜப்பான் நாட்டு டோக்கியோ நகருக்கு தமிழர் தலைவர் சென்றதாலும், அந்த சமயம் அய்தராபாத் நகரில் பெய்த பெரும் மழையினாலும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பின்னர் தமிழர் தலைவரின் ஒப்புதல் பெற்று டிசம்பர் 14 – ஆம் நாளில் சிலை திறப்பு நிகழ்ச்சியினை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் டிசம்பர் 12 – ஆம் நாளன்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவினை வெகு விமரிசையாக தமிழ்நாடு அரசும், கேரள அரசும் வைக்கம் நகரில் ஏற்பாடு செய்திருந்தன. தந்தை பெரியாரின் கொள்கை வழித்தோன்றலான தமிழர் தலைவர் அவர்கள் அந்த நூற்றாண்டு விழாவில் முன்னிலை – சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிலையில் அய்தராபாத் நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தந்தை பெரியாரின் சிலை திறப்பு கூறியபடி நடந்தேறிட வேண்டும் எனக் கருதி காணொலி வாயிலாக சிலையினைத் திறந்து உரையாற்றிட இருப்பதை தெரிவித்து, அவ்விழாவிற்கு மானவ விகாச வேதிகா அமைப்பினரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். திராவிடர் கழகத்தின் சார்பாக பொருளாளர் வீ. குமரேசன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் இரா.மோகன் ஆகியோர் தந்தை பெரியார் சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்ச்சி

திராவிடர் கழகம்

இரண்டு நாள் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக பகுத்தறிவு, சமூகநீதி கருத்துகள் அடங்கிய பாடல்களை ஆந்திரா கலைக்குழுவினர் எழுச்சியுடன் பாடினார்கள்.

மானவ விகாச வேதிகா அமைப்பின் தெலுங்கு மாத இதழான ‘ஸ்வேதாலோசனா’ வின் இணை ஆசிரியர் அனுமந்தராவ் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மானவ விகாச வேதிகா மத்திய கமிட்டியின் தலைவர் சீனிவாசராவ் உரையாற்றினார். பின்னர் ஆறு சமூக புரட்சியாளர்களான புத்தர், மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

தந்தை பெரியாரின் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவரின் உரை

மானவ விகாச வேதிகா என்ற பெயரில் அய்தராபாத்தில் இயங்கி வரும் ஒரு அமைப்பு முழுக்க முழுக்க நம் பகுத்தறிவுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. டிசம்பர் 14 ஆம் நாளன்று இவர்கள் தங்கள் அமைப்பின் இருபதாம் ஆண்டு நிறைவை கொண்டாடினர். இந்த இரண்டு நாள் மாநாட்டின் போது தந்தை பெரியாரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஆசிரியரின் சார்பில் பொருளாளர்

வீ. குமரேசன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். காணொலி மூலம் வாழ்த்து தெரிவித்து ஆசிரியர் ஆற்றிய உரை இது:
அனைவருக்கும் வணக்கம். மானவ விகாச வேதிகா இயக்கத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள். என் உடல்நிலை காரணமாக என்னால் நேரில் கலந்துக்கொள்ள இயலவில்லை. ஆனாலும் என் மனம் தற்போது அங்கேதான் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரே கொள்கைக் குடும்பம்தான். நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். பல போராட்டங்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வந்துள்ள அமைப்பு உங்களுடையது. உங்கள் சாதனைகளைப் பாராட்ட வார்த்தைகள் போதாது. உங்களது சீரிய பணி தொடர வாழ்த்துகிறேன்.

200 ஆண்டுகளுக்கு முன் ஜோதிராவ் ஃபூலே புரட்சிகரமான இயக்கத்தை துவக்கினார். அதன்பின் பாபா சாகேப் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை மிகப்பெரிய அளவில் மக்களிடையே பரவச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களின் அடிச்சுவட்டில் நாமெல்லாம் அவர்களுடைய பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

எதிர் நீச்சல்

கொந்தளிக்கும் போராட்டக் கடலில் எதிர் நீச்சல் போட்ட தந்தை பெரியாரின் சிலையை அங்கே நீங்கள் திறந்து வைப்பது குறித்து அளவற்ற மகிழ்ச்சி. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு தன் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. சமூகத் தில் பிற்போக்குத்தனமும், காலாவதியான கோட்பாடுகளும், ஜாதி மத பேதங்களும் நிறைந் திருந்த காலக்கட்டத்தில் பெரியார் துவக்கிய இயக்கம் அது. உலகில் வேறு எங்கேனும் நம் நாட்டில் நிலவுவது போன்ற ஜாதிபாகுபாடு சார்ந்த கொடுமைகள் நடப்பதுண்டா? தகுதியையும், சாதனைகளையும் பொறுத்து மனிதர்கள் மதிக்கப் படாமல், பிறப்பு சார்ந்த பேதங்களால் அவர்கள் இழிவுப் படுத்தப்பட்டு வந்த காலத்தில் பெரியார் சுயமரியாதை இயக் கத்தைத் துவக்கினார். ஜாதி அமைப்பு என்பதே மானுட ஒற்றுமைக்கும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கும் எதிரானது என்பதே உண்மை.

மனித உரிமை

ஜாதிகள் மக்களின் மானுடத்தன்மையை அழிக்கின்றன. இந்தக் கொடுமையை எதிர்த்து பெரியார் நூறு ஆண்டுகளுக்கும் முன்பே, சுயமரியாதை இயக்கம் துவங்கியதற்கு முன்பிருந்தே போராடி வந்துள்ளார். காங்கிரசுடன் அவர் இணைந்திருந்த காலக்கட்டத்திலேயே தீவிரமாக போராடிக் கொண்டிருந்தார். வைக்கம் போராட்டத்தை எவரால் மறக்க முடியும்? மகாதேவர் ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த வீதிகளில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் நடந்துச் செல்லும் உரிமையே பறிக்கப்பட்டிருந்தது. எப்படிப்பட்ட சமூக அநீதி அது! எத்தகைய கொடுமை அந்த உரிமை மறுப்பு! பெரியார் காந்தியாருக்கு கடிதம் எழுதி – “எங்கே போயிற்று மனித உரிமை?” என்று வினா எழுப்பியிருந்தார். “வைக்கம் தெருக்களில் நாய்களும், பன்றிகளும் கூட சுதந்திரமாக உலவும்போது நம் சகோதர சகோதரிகள், ஈழவ, புலையர் பிரிவைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மனிதர்களுக்கு அங்கே நடந்துச் செல்ல உரிமை இல்லையா?” என்று காந்தியாரைக் கேட்டார் பெரியார். தீண்டத்தகாதவர்களாக புறக்கணிக்கப்பட்ட மக்களை எவரும் பார்க்கவும் கூடாது, நெருங்கவும் கூடாது என்ற அவலநிலை வைக்கத்தில் 1924 ஆம் ஆண்டில் நிலவியது வரலாற்று உண்மை. இப்படிப்பட்ட சமூக அநீதி எங்காவது நிலவியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா நண்பர்களே? மானுடத்தை சீர்குலைப்பதல்லவா இப்படிப்பட்ட கொடுமை?

தாழ்த்தப்பட்ட பிரிவினர் மிருகங்களைவிட மோசமாக நடத்தப்பட்டனர். உயர்ஜாதியினர் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை அன்போடு அணைத்துக் கொண்டு முத்தமிட்டுக் கொஞ்சி வந்தனர். ஆனால் தப்பித்தவறி தாழ்ந்த ஜாதி மனிதனைத் தொட்டுவிட நேர்ந்தால் கூட உடனே குளித்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வார்களாம். எத்தகைய கொடுமை இது உச்சி முதல் பாதம் வரை நீர் ஊற்றிக்கொண்டால்தான் ‘தீட்டு’ போகும் என்பார்களாம் அந்த உயர் ஜாதி வெறியர்கள். இதையெல்லாம் எதிர்த்து, மனிதர்களை மனிதர்களாக அனைவரையும் மதிக்க வைப்பதே எங்கள் பணி.

சமூக அநீதி

உருவத்தால் மட்டுமே மக்கள் மனிதர்களாக உள்ளனர். அவர்களுடைய அன்றாட வாழ்வில் எல்லாவிதத்திலும் இழிவு! அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வதால் என்ன பயன்? கல்வி கற்கவும் உரிமை மறுக்கப்படுவது சமூக அநீதியல்லவா? சுதந்திரம் பறிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் அன்றாடம் நிகழும் அராஜகம். சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த புதிய சமூகத்தை உருவாக்கவே நாங்கள் போராடி வருகிறோம். ஜாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் லட்சியம்.
தனி மரம் தோப்பாகாது என்பார்கள். ஓர் ஆங்கிலப் புதினத்தில் ராபின்சன் க்ரூஸோ தீவு பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அப்படிப்பட்ட ஆள் அரவமற்ற தனித் தீவிலா நாம் வாழ்கிறோம்? நாம் ஒரு சமூகத்தின் அங்கத்தினர்களாக ஒன்றுபட்டு, ஒரே குடும்பம் போல் வாழ்பவர்கள் அல்லவா? உறவினர்கள், நண்பர்கள் என்று மனிதர்கள் சூழ வாழ்ந்து வருகிறோம். எனவே சமத்துவம் நமக்கு இன்றியமையாத ஒன்று. சமமான வாய்ப்புகள் நம் அனைவருக்கும் கட்டாயத் தேவை. எனவே நாம் எல்லோருமே சமூகப் போராளிகளாக மாற வேண்டியது அவசியம்.

சமுதாய மாற்றம்

அதிகாரங்கள் இடம் மாறிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில் சமுதாய மாற்றங்களைக் காண முடியவில்லை. மறுமலர்ச்சி இன்றுவரை ஏற்படவில்லை. எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும் நிலை உருவாக, முழுமையான சமத்துவம் மலர – ஜாதிகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். இதைத்தான் தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் உட்பட பல முற்போக்குவாதத் தலைவர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். அவர்களையெல்லாம் கவுரவிக்கும் விதமாகத்தான் இன்று நீங்கள் சிறப்பாக விழா நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே பெருமிதமாக உள்ளது. பெரியாரின் உருவச் சிலையை நீங்கள் திறந்து வைப்பது எங்களுக்கு ஈடு இணையற்ற பெருமை. ஆனால் நாம் என்ன பயனை அடைந்து விட்டோம் என்றே கேட்கத் தோன்றுகிறது. ஏன் இன்னும் நம் துயரம் நீங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடை நமக்கு கிடைத்தே ஆகவேண்டும். முன்னோடியாக விளங்கிய தலைவர்களுக்குச் சிலைகள் எழுப்புவதும், மாலைகள் அணிவிப்பதும் மட்டும் போதாது. அவர்களுடைய சிந்தனைகள் மக்களைச் சென்றடையச் செய்வதே மிகவும் முக்கியம். நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் அந்தப் போராளிகளின் கொள்கைகள் பரவிப்படர நாம் செயலாற்றவேண்டும். அப்போதுதான் புதிய சமூகத்தை நம்மால் உருவாக்க இயலும். இதற்குத் தேவை அறிவியல் மனப்பான்மை. அறிவியல் கண்ணோட்டம் அவசியம் மட்டுமல்ல – அவசரமும் கூட.

அறிவியல் மனப்பான்மை

ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் முதல் குடியரசுத்தலைவர் வரை அனைவரும் அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் – “நாங்கள் அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வோம்” என்று.

அரசமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு சமீபத்தில் கொண்டாடப்பட்டபோது, அதன் முகவுரை வாசிக்கப்பட்டது. இது வெறும் ஓர் அரசியல் நிகழ்வாகவோ அரசியல் சார்ந்த சடங்காகவோ இருந்து விட்டால் போதுமா? அதற்கு ஓர் சமூக நோக்கம் தேவையல்லவா? அது என்னவாக இருக்கவேண்டும்? சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் முழுமையாக மலரச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்ட முகவுரை மூலம் நாம் உணரவேண்டும். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும் – சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி இதில் அடங்கும். இவை மூன்று வகையான நீதிகள். ஒன்றோடு மற்றொன்றை இணைத்து நாம் குழப்பிக்கொள்வதும் சரியல்ல. பொருளாதார நீதியிலிருந்து வேறுபட்டது சமூக நீதி. இவை இரண்டிலிருந்தும் மாறு பட்டது அரசியல் நீதி. அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் மட்டும் குறிப்பிடப்படவில்லை – நம் அடிப்படை கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. 51-A என்ற பிரிவு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை கொண்டு கேள்வி கேட்கும் துணிவுடனும், மனித நேய உணர்வுடனும், சீர்திருத்த நோக்கத்துடனும் வாழவேண்டும் என்பதை இந்த 51A பிரிவு வலியுறுத்தியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் இந்தக் குறிப்பிட்ட பிரிவில் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் கடந்த 75 ஆண்டு காலத்தில் எந்த அள வுக்கு இது நிறைவேறியுள்ளது என்றே கேட்கத் தோன்றுகிறது. வலியுறுத்தப்பட்ட கடமை களின்படி செயலாற்றி சிறந்த சமூகத்தை நம்மால் உருவாக்க முடிந்ததா? விடை காண முடியாத கேள்வியாகவே இது இன்றும் உள்ளது.

ஒன்றிணைந்து போராட வேண்டும்

மனிதர்கள் வருவார்கள், போவார்கள். பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் மாறி மாறி பதவி ஏற்பார்கள், விலகுவார்கள். ஆனால் நாம் காணும் மாறுதல்கள் என்ன? விளைவுகள் என்ன? நிலைமையில் மாற்றம் உண்டா? எதுவுமே இல்லை என்பதே கசப்பான உண்மையாக உள்ளது. இப்படிப்பட்ட அவலநிலையை உலகில் வேறு எங்காவது நம்மால் பார்க்க முடியுமா? எந்த ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட துயரம் உள்ளது? மனிதர்களை பார்க்கக்கூடாது, நெருங்கக் கூடாது, தீண்டக் கூடாது என்றெல்லாம் தடை விதிக்கும் நாடு உலகில் உண்டா? நாம் தான் இந்தக் கொடுமையை இன்றுவரை சகித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் முடிவு கட்டப்படவேண்டும். இந்தச் சமூக அநீதி அறவே அழிய வேண்டும். இதற்காக நாம் அனைவருமே ஒன்றிணைந்து போராட வேண்டும். இதற்கான போர் நம் மக்களின் மனங்களில் நடக்க வேண்டும்.

சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் – இம்மூன்றும் நிறைந்த சமூகம் உருவாக நாம் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.
நீங்கள் தெலங்கானாவிலும் நாங்கள் தமிழ்நாட்டிலும் இருப்பது போலவே நாட்டு மக்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் நம்நாடு ஒன்றுதான். நமக்குள் பிரிவினைகள் இல்லை. தனித்தன்மைகொண்ட நம் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒற்றுமையும், சமச்சீர் நிலையும் ஒன்றல்ல. இரண்டையும் சேர்த்து நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது. மாறுபட்ட இரண்டு அம்சங்களுமே நமக்குத் தேவை. நம்முடைய பகுத்தறிவுக் கண்ணோட்டம் மாறுபடக் கூடாது. இந்தப் பண்பு பாதுகாக்கப்பட வேண்டும். அறிவியல் பார்வை மேலும் தீவிரமடைய வேண்டும். இனவெறி, ஜாதிவெறி, மதவெறி – இவை மூன்றுமே அடியோடு அழிய வேண்டும்.

உயிர்த் தியாகம்

தபோல்கர் போன்ற சமூகப் போராளிகளும் வேறு பல புரட்சியாளர்களும் எதற்காக உயிர்த்தியாகம் செய்தார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் சமூக விரோதிகள் அல்லர். அவர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. தேசவிரோதச் செயல் எதிலும் அவர்கள் ஈடுபடவில்லை. மக்கள் சுதந்திரமாக சுயமாகச் சிந்திக்க வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. எவருடைய கட்டுப்பாடும் இன்றி மக்கள் செயல்படவேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். ஆனால் மக்கள் அப்படி வாழ முடியாத நிலையை சில தீயசக்திகள் ஏற்படுத்திவிட்டன. இதை உணரவும் விழிப்புணர்வு அடையவும் நம் மக்கள் தவறிவிட்டனர். இந்தத் தவறுக்கு விலையாக நாம் தரப்போவது என்ன என்ற கேள்வி இத்தருணத்தில் எழுகிறது.

மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் சுதந்திரமாக சிந்திக்கவேண்டும். இந்த நோக்கம் நிறைவேற உங்களைப் போன்ற அமைப்புகள் போராடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பகுத்தறிவே நம் வாழ்வின் அடிப்படைத் தத்துவமாக இருக்க வேண்டும். ஆறறிவுள்ள மனிதனால் மட்டுமே பகுத்தறிய முடியும். எனவே அதற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அறிவியல் கண்ணோட்டமும் அறிவியலின் வளர்ச்சிக்காக அல்ல – நம் வளர்ச்சிக்காகவே.

நம்முடைய கொள்கைகளையும் திட்டங்களையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எடுத்துச் சென்று நாம் சேர்க்கவேண்டும். அவை மக்களைச் சென்றடைய வேண்டும். மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. புதிய தலைமுறையினரை விழிப்படையச் செய்ய வேண்டும். அவர்கள் வருங்காலத்தின் தூண்கள். கடுமையாக உழைக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தி நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மூடநம்பிக்கை ஒழிப்பு

நாம் வாழ்வது செயற்கை நுண்ணறிவு யுகத்தில். இருந்தாலும் தொலைகாட்சி ஒளிபரப்புகளிலும், சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறையவே இல்லை. ஜோதிடம், வாஸ்து, ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற மூட நம்பிக்கைகள் இவற் றின் மூலம் இன்றும் பரவி வருவது நம் நோக் கத்திற்கு பெரும் தடையாக உள்ளது. இந்த மடமைகளுக்கெல்லாம் எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் கிடையாது. இவற்றை யெல்லாம் ஒழிக்க நாம் போராட வேண்டும்.

அரசியல் விவாதங்களோடு நாம் நின்றுவிடக் கூடாது. பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பெண்களின் முன்னேற்றம், சமூகநீதி, ஜாதி ஒழிப்பு – இப்படி பல சவால்கள் உள்ளன. ஜாதிகளின் படிநிலையமைப்பு மிகப்பெரிய கொடுமை. உலகின் எல்லா சமூகங்களிலும் சமத்துவம் நிலவுகிறது. நம் நாட்டில் சமத்துவமின்மை மட்டுமல்ல – படிநிலை அமைப்பில் சமத்துவமின்மையும் ஏணிப்படிகள் போல் நிலவி வருகிறது. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று பிரிக்கப்பட்டு நம் மக்கள் வாழும் துயரநிலை எப்போது மாறும்? ஜாதிகள் எப்பொழுது அடியோடு ஒழியும்? நம்முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி இதுதான். ஜாதிகளின் படி நிலையமைப்பே எல்லா கொடுமைகளுக்கும் மூலகாரணம் என்று டாக்டர் அம்பேத்கரும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சமூகம் உருவாக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவோம். மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வாழ்நாள் முழுவதும் அதைத்தான் செய்து வந்தார் பெரியார். எங்கள் திராவிடர் கழகம் தமிழ்நாட்டை பெரியார் மண்ணாக, சமூகநீதி மாநிலமாக மதித்து வருகிறது. பகுத்தறிவு பரவிப் படர போராடி வருகிறோம். மனித நேயம் தழைக்க எங்களால் இயன்றதைச் செய்து வருகிறோம். மக்களை விழிப்படையச் செய்ய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தப் பணியில் உங்கள் கரங்களைப் பலப்படுத்த நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.

‘‘விடுதலை’’

எங்களுடையது மக்கள் இயக்கம். எந்தவிதமான அரசியல் ஆதாயமும் தேடாதவர்கள் நாங்கள். தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் இயங்கி வருகிறோம். எங்கள் கொள்கைகளை பரவிப்படரச் செய்ய ‘விடுதலை’ என்ற பெயரில் நாளிதழ் வெளியிட்டு வருகிறோம். மாத இதழ்களும், மாதமிருமுறை இதழ்களும் கூட கொள்கைப் பரப்புக் கருவிகளாக வெளியிட்டு வருகிறோம். எங்கள் பத்திரிகைகள் தொழில் அல்ல – அவை யாவும் எங்கள் லட்சியம் – எங்கள் உயர்ந்த நோக்கம் – எங்கள் இலக்கு.

உங்கள் பணிகளும் நல்ல பயன்களை அளிக்க என் வாழ்த்துகள். “அந்தரிகீ வந்தனம்” என்று தெலுங்கில் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் சமச்சீர் அமைப்புகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒன்றுபட்ட அமைப்புகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் போதும். எங்கள் ஒத்துழைப்பு உங்கள் அமைப்பிற்கு எப்போதும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். அன்புச் சகோதர, சகோதரிகளே, ஒரு நல்ல பொதுநோக்கத்திற்காக நீங்களும் எங்களுடன் எப்போதும் இணைந்து ஒத்துழைப்பு அளியுங்கள். நம் அனைவரின் இலக்கும் ஒன்றாக இருக்கட்டும். பழமைகளை உணவாக அல்ல – உரமாக்கிக் கொண்டு புதிய சமூகத்தை வளர்ப்போம். மூடநம்பிக்கைகளை ஒழிப்போம். எல்லாவிதமான மடமைகளையும் அழிப்போம். பகுத்தறிவு செழிக்க மேலும் தீவிரமாகப் போராடுவோம்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அமைப்பைச் சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். தமிழ்நாட்டிற்கு வருகை புரியுங்கள். சென்னைக்கு வந்து எங்களை நேரில் சந்தியுங்கள். எங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள். எங்களுடன் கலந்துரையாடி உங்களுக்குச் சரியென்று படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

பொது மக்களின் இயக்கம்

ஒருசில மேதைகளும், அறிஞர்களும் மட்டுமே நிறைந்ததாக எந்த ஒரு இயக்கமும் குறுகலான வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் பொதுமக்களின் இயக்கமாக அது இருக்கவேண்டும். அப்படித்தான் எங்கள் திராவிடர் கழகம் உள்ளது. உங்கள் இயக்கமும் மக்கள் இயக்கமாக மேலும் மேலும் செழித்தோங்க என் வாழ்த்துகள். மக்களை உங்கள் இயக்கம் சென்றடையச் செய்யுங்கள் என்பதே என் பணிவான வேண்டுகோள். வாழ்க பகுத்தறிவு! வாழ்க சமூகநீதி! வாழ்க சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம்! விடை பெறுகிறேன். நன்றி.
தமிழர் தலைவரின் ஆங்கில உரையினை மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோர் பார்த்து செவிமெடுத்தனர். தமிழர் தலைவரின் எழுச்சிமிகு உரை தமிழர் தலைவரின் நிகழ்ச்சியில் முத்திரை பதிவாக விளங்கியது. ஆங்கில உரையின் தெலுங்கு மொழியாக்கத்தை மானவ விகாச வேதிகா அமைப்பின் தோழர் ஒருவார் வாசித்தார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆற்றிய
உரையின் சுருக்கம்:

கருத்துச் செறிவுமிக்க தமிழர் தலைவரது உரைக்குப் பின்னர் உரையாற்றுவது சற்று கடினம். சுருக்கமாக ஒரே ஒரு கருத்தினை மட்டும் எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன்.

தந்தை பெரியாரின் கொள்கையின் சாரம் – மனிதர் அனைவரும் சமமானவர்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட வேண்டும். இந்த கொள்கை நடைமுறைக்கு தடையாக எதுவந்தாலும், எத்தகைய பெரிய சக்தி என்று நினைக்கப்படுவது இருந்தாலும் அவையனைத்தும் தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் வாழ்வும் பணியும். மனித சமத்துவத்திற்கு எதிராக ‘கடவுள் சொன்னார்’ என்று வந்தாலும் ‘கடவுளும்’ மறுக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல; எதிர்க்கப்பட வேண்டியவர். இந்த அடிப்படையில்தான் மற்ற புரட்சியாளர்களிடமிருந்து தந்தை பெரியாரின் கொள்கையும், நடைமுறையும் வேறுபடுகிறது. மானுடம் மேம்பட முழுமையாக பயன்படுகிறது.

அண்மையில் கேரளாவில் வைக்கம் நகரில் 1924 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சத்யாக்கிரகத்தின் வெற்றி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. கோவிலில் அனைவருக்கும் நுழைவு; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சராகும் உரிமை என்று முற்போக்கு நிலவிடும் தற்போதைய நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்து செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. தீண்டாமையால் (untouchability) – தெருக்களில் நடந்து செல்லும் உரிமை மறுப்பு தாண்டவமாடியது. இதனை எதிர்த்து கேரளத்து முற்போக்கான தலைவர்கள் போராட்டத்தினை தொடங்குகிறார்கள். முதல் வாரத்திற்குள் அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுகின்றனர். போராட்டம் தோல்வி அடைந்து விடும் என்ற நிலையில் சிறையிலிருந்த தலைவர்கள் அன்றைய தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவர் பெரியாருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். வைக்கம் வந்து போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டுகின்றனர்.

முதல் போராட்டம்

உடனே பெரியாரும் வைக்கம் நகருக்கு வந்து சுற்றியுள்ள பகுதிகளிலெல்லாம் தனது எழுச்சிப் பேச்சால் மக்களைத் தட்டி எழுப்பி தொய்வடைந்த போராட்டத்தை மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்றுகிறார். இரண்டு முறை கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார். அரசியல் கைதியாக அல்லாமல் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாகிறார். இறுதியில் தெருக்களில் நடக்கும் உரிமை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கிறது. வைக்கம் போராட்ட வெற்றி விழாவில் தந்தை பெரியார் பங்கேற்கிறார். இந்தியாவில் மனித உரிமைக்கான முதல் போராட்டமாக வைக்கம் போராட்டம் இடம் பெற்றது.

அந்த எழுச்சிமிகு வைக்கம் போராட்டம்தான் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களுக்கு மகாராஷ்டிரம் – ‘மகத்’ பொதுக்குளத்தில் குடிதண்ணீர் எடுக்கும் போராட்டத்தினை நடத்திட உந்து சக்தியாக விளங்கியது. இதனை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் பதிவு செய்கிறார். அந்த வரலாற்று நூலுக்கு ஒரு பெருமை உண்டு. டாக்டர் அம்பேத்கர் உயிருடன் வாழ்ந்தபொழுது அவர் படித்து ஒப்புதல் அளித்த வரலாறு நூல் தனஞ்செய் கீர் அவர்களுடையது மட்டும்தான்.

தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் இன்று நூற்றாண்டு விழாவாக உலகெங்கும் பேசப்படுகின்றது. அன்றைய அரசு பெரியாரைக் கைது செய்தது. இன்றைய அரசுகள் தந்தை பெரியாரைப் போற்றி விழா எடுக்கின்றன. இதுதான் உண்மையான புரட்சியின் வெற்றி.
இவ்வாறு கழகப் பொருளாளர் உரையாற்றினார்.

மானவ விகாச வேதிகா நிகழ்ச்சியில் விஜயவாடா நாத்திக மய்யத்தின் தலைவர் டாக்டர் சமரம், நியாந்தா மற்றும் ராஸ்மி, அனைத்து இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், செயலாளர் பேராசிரியர் முனைவர் சுதீஷ் கோடேராவ் மற்றும் பல்வேறு பகுத்தறிவாளர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மானவ விகாச வேதிகா அமைப்பின் தலைவர் சீனிவாசராவ் செயலாளர் மூர்த்தி மற்றும் அந்த அமைப்பின் தோழர்கள் வெகு சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்.

இன்றைய தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் முதல் சிலை திறப்பு நிகழ்வு என்ற நிலையில் தமிழ்நாட்டையும் கடந்து தந்தை பெரியாரின் கொள்கைகள் ஆழமாக வேர் பிடித்து பரவி வருகின்றன என்பதன் அடையாளமாகவே மானவ விகாச வேதிகா அமைப்பினர் நடத்திய நிகழ்வு அமைந்தது. உலகம் பெரியார் மயம்! பெரியார் உலக மயம் என்பதன் எதிரொலியாக – நடைமுறையாக தெலங்கானா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொகுப்பு: வீ. குமரேசன்

தந்தை பெரியாரின் சிலை நன்கொடை

விடுதலை நாளேடு

நன்கொடை

அய்தராபாத் – ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் உள்ள மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். தென்காசி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும் – தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான வி. ஜெயபாலன் அவர்கள் தந்தை பெரியாரின் சிலையினை வடிவமைத்திட ஆவன செய்து – அந்தச் சிலையினை மானவ விகாச வேதிகா அமைப்பினர் நிறுவிட நன்கொடையாக வழங்கினார். நன்கொடை அளித்த விவரங்கள் பற்றிய குறிப்பு சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் சிலையினை நன்கொடையாக வழங்கிய வி. ஜெயபாலன் அவர்களுக்கு நிகழ்ச்சியில் மானவ விகாச வேதிகா அமைப்பினர் நன்றியினைத் தெரிவித்தனர்.