ஞாயிறு, 25 ஜனவரி, 2015

ஒழிக்கப்பட வேண்டியவை எவை?


தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள்நன்மை - தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும். முதலாவதாக மேல்ஜாதி, கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான் - கடவுளுக்குச் சமமானவன்; அவன் சாமி, பிராமணன் என அழைக்கப்படவேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள்.
மனிதனில்  எதற்கு மேல்ஜாதி... கீழ் ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில் லையே! மேல்ஜாதி என்பது பாடுபடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி. பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது. இரண்டாவதாக, பணக்காரன் - ஏழை. இது எதற்காக? பணக்காரன்  ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை - பாடு பட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவ சியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்னபாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?
மூன்றாவதாக, ஆண் - எஜமானன்! பெண் - அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி, பெண் அடிமை தான்! சில நிர்பந்தம்,அடக்குமுறை ஆண் களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவை களுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் - எசமான்; பெண் - அடிமை; இந்த வேறு பாடு தேவையில்லாதது. அக்கிரமமானதுங் கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.
இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97 பேர் கீழ்ஜாதி!அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97 பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மை யினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.
காரணம்: 1. கடவுள், 2. மதம், சாஸ்திரம், 3. அரசாங்கம்.
கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால், மதம் - சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல் லாம்நினைக்கிறார்கள் திராவிடர் கழகத் தைத் தவிர?           (12.11.1958 அன்று மேலவாளாடியில் பெரியார்  சொற்பொழிவு - விடுதலை 07.01.1959)
பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா?
எது சரி?
நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக் கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பதுபோல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன்திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுத் தனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான்பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப் பாடுபடு கிறேன்.
(31.08.1959 சிதம்பரத்தை அடுத்த
கண்ணன்குடியில் பெரியார்  சொற்பொழிவு. விடுதலை11.09.1959)
நமக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள வேறுபாடு?
நமக்கும் பார்ப்பனர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்ன வித்தியாசமென்றால், பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடான ஒற்றுமை இருக்கிறது. காஷ்மீர் பார்ப்பானுக்குத் தேள் கொட் டினால் கன்னியாகுமரியிலே இருக்கிற பார்ப்பானுக்கு நெறிஏறும். அவ்வளவு தூரம் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடு இருக்கிறது.
ஒரு பார்ப்பான் அவன் எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும் அவன்கூட ஒருக்காலமும் தன்னுடைய இனத்துக்கு, அதன் நலத்துக்கு, சவுகரியத் துக்கு, விரோதமான காரியம் செய்யமாட் டான். தன்னுடைய இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். காட்டிக்கொடுக்க மாட்டான்.
ஆனால், நம்முடைய திராவிட  ஆட்கள் என்பவர்களோஅதற்கு நேர் மாறான குணம் படைத்தவர்கள். தன் வாழ்வுக்கு ,தன் சவுகரியத்துக்காகத் தன்னுடைய இனத்தை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கத் தயங்கவே மாட்டான் திராவிடன். இனத் தைக் காட்டிக் கொடுப்பதிலேயே தன்னு டைய வாழ்வை அமைத்துக் கொள்ளும் விபீஷணர்கள், அனுமார்கள்தான் அதிக மாய் இருக்கிறார்கள். ஆனதால் நாம் பார்ப்பனர்களை எதிர்ப்பதோடு, இந்த இனத்துரோக வீபிஷண, அனுமார் களையும் சேர்த்து எதிர்த்து வெற்றி பெற வேண்டியிருக்கிறது.
(
விடுதலை, 8.9.1953)
எதிர்காலம் எப்படி இருக்கும்?
நான் இறந்தாலும், ஏனைய திராவிடத் தோழர்கள் ஓய்ந்துவிட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது. நமது கொள்கைகள் ஓரளவுக்குப் பொதுமக்களின் செல்வாக் கைப் பெற்றுவிட்டன. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம்போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடங்கொடுக்காது.
நம் இஷ்டப்படி நடக்காத கட்சியின் மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரம் ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக மாறவேண்டும.
(
தூத்துக்குடி மாகாண மாநாட்டில்
குடிஅரசு - 05.06.1948)
(தொகுப்பு: வ. மாரிமுத்து - பழனி)

நல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது



- தந்தை பெரியார்

அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர் டி.சண்முகம் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இன்று சென்னைக்கு ஆஸ்பத்திரியில் சேருவ தற்காக வந்தேன். இங்கு என்னால் அதிகநேரம் நிற்கவோ பேசவோ முடியாது. தலைவர் சில வார்த்தைகள் கூறுமாறு சொன்னார். நான் சொல்லுவது உங்களுக்கு இனிப்பாயிருக்காது. ஆனால், என் இயற்கைக் குணம் உங்களுக்குத் தெரியும். தோழர்கள் டி.சண்முகம், கயப்பாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கம் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். அவர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பாராட்டுதலை எனக்கு ஏற்பட்டதைப் போலவே கருதுகிறேன். என் விஷயத்தில் அவர்களுக்கு மிக மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அவர்கள் விஷயத்தில் எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. அவர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுவது என்னையே பாராட்டிக் கொள்வதாகு மென்று கருதுகிறேன்.
அவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் இயற்கை யில் வீரர்கள் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். தாழ்த் தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக் கும் நண்பர்கள். பொது வாழ்வில் அடியோடு சுயநலத்தைச் சம்பந்தப்படுத் தாதவர்கள். அவர்களைப் பற்றிய வார்த்தைகளை இவ்வளவோடு விட்டு விட்டு, என்னுடைய கொள்கைகளையும், அனுபவத்தையும் ஒட்டிச் சில யோசனை களை அவர் களுக்குச் சொல்லுகிறேன்.
அதன்படி அவர்கள் சிந்தித்துச் சரி யென்று பட்டதைச் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.
தோழர்களே! நானும் எனது நண்பர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் ஏதாவது ஒரு வகையில் ஒத்துப்போய் இந்த மாகாண அரசியலைக் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டிருந்தால், உண்மை யில் இந்த ஜில்லா போர்டு, முனிசிபா லிட்டி முதலியவைகளைக் கலைத்தே இருப் போம். அல்லது பொப்பிலி ஆட்சி இதுவரையில் இருந்திருக்குமானால் - இந்த ஜில்லா போர்டுகளின் அதிகாரங் களை வெகுவாகக் குறைக்கப்படவே, அதிகாரங்களைக் குறைக்கவே செய் திருப்பேன்.
தாலுகா போர்டைக் கலைக்காமல் இருந்தால் நன்றாயிருக்குமென்று தலை வர் குமாரராஜா அவர்கள் சொன் னார்கள். தாலுகா போர்டை எடுப்ப தற்குத் தூண்டுதல் செய்து கொண்டி ருந்தவன் நான்தான். இது டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கும் தோழர் ராஜகோ பாலாச்சாரி அவர்களுக்கும் தெரியும்.
கட்சி காரியத்திற்காக இந்த ஸ்தா பனங்கள் வேண்டுமென்பது சிலருடைய அபிப்பிராயம். ஜில்லா போர்டைக் கலைத்து விட வேண்டுமென்று சொன்ன ஆச்சாரியார் அவர்களும் அரசியலைக் கைப்பற்றின பிறகு, அவற்றைக் கலைக் காமற் போனதற்குக் காரணம், அவர் கட்சிக்கு அவை பயன்படவேண்டுமென் னும் எண்ணத்தினாலேயே யாகும்.
கட்சிகள் இந்த நாட்டில் பெரும் பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவை களாக இருப்பதால், பொது மக்கள் நலத்தை விட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது. இந்த மாதிரியே 2 கட்சிகள் இருக்கிற வரை யிலும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கும்.
எதிரியிடத்திலிருந்து தப்புவதே நம் நோக்கமாயிருப்பதால், மக்கள் நலம் சரிவரக் கவனிக்கப்பட முடிவதில்லை. இது இயற்கையே. ஆனால், சீக்கிரத்தில் ஒரு காலம் வரும்.
இப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்கவேண்டியவர்கள் முக்கியமாக மனத்தில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, பொது ஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த மாதிரியான ஸ்தாபனங் களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்க கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.
நான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு, தேவஸ் தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலிய வைகளுக்குத் தலைவனாக இருந்திருக் கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந் திருக்கிறேன். வேறு சில ஸ்தாபனங் களுக்கும் சர்வாதிகாரியாகவும், தலை வனாகவும் இருக்கிறேன். இவை  ஒன்றி லாவது பொது ஜனங்களிடமோ, நம்மை அனுசரித்துப் பின்பற்றுகிற வர்களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.
பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாத வர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு எது? தங்கள் ஜாதி - இனம் என்ன? என்பவற்றையே உணராத வர்கள். மீதி யுள்ளவர்களில் 14 பேர்கள் சுயநலக் காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக் கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக் கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக் கும் அவ்வளவு புத்திசாலிகள். இந்தமாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மை யான பொதுத் தொண்டு ஆகுமா? அந்த நல்ல பேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?
இவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங்களும், அயோக் கியத் தனங்களும், ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால் தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற் சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்ற வனாவான் என்று சொல்லி வருகிறேன்.
மற்றப்படி, நான் என்ன செய்ய வேண் டுமென்று சொல்லு கிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடு நிலையிலிருந்து ஆலோ சித்து முடிவு கட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதா யிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.
பொதுஜனங்கள் தயவால் மறுபடியும் நாம் இந்த ஸ்தானத்துக்கு வரவேண் டுமே என்று கருதவே கூடாது.
தோழர். டி. சண்முகம் அவர்கள் ஜில்லா போர்டில் எவ்வளவு ரூபாய் வேண்டுமா னாலும் கொள்ளையடித்துக் கொண்டு, இரண்டொரு கோயில் களைக் கட்டிப் பார்ப்பனர்களுக்குச் சமாராதனை முதலிய வைகளை அடிக்கடி கொடுத்து பல சோம்பேறிகளுக்கும் பரதேசிகளுக்கும் பப்ளிக் ரோட்டில் பொங்கிப்போட்டு சில பத்திரிகைக் காரர்களுக்கு 5,10 என்று பிச்சைக்காசு எறிந்து விடுவார்களானால், தோழர் சண்முகம் பிள்ளை அவர்கள் பெரிய பிரபு ஆகவும், மகா கெட்டிக்கார நிர்வாகி ஆகவும், மகா நாணயஸ்தராகவும், சாகும்வரையில் அவரே அந்த ஸ்தானத் தில் இருக்க வேண்டுமென்று பொது மக்களால் பிரார்த்திக்கப்படுபவராகவும் ஆகிவிடுவார். இது வரையிலும் சற்றேறக் குறைய இந்த முறைதான் - இப்படிப்பட்ட ஸ்தாபனங்களுக்கு இருந்து வந்திருக்கிறது.
பாமர மக்களையும் சுய நலக் காரரையும் திருப்திப்படுத்துவதுதான் பொது நலத் தொண்டு என்று எண்ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்றுபட்டதைத் தைரியமாகச் செய்துகொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற்றப் படாவிட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப் படத்தக்கவையாக இருக்கும்.
முன்னோர்கள் செய்துவைத்ததை மாற்றக்கூடாதே என்று கவலைப்படு கிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளே யாவோம். நம்மை விட நமக்குப் பின்னால் வருகிற வர்கள் இன்னும் அனுபவசாலிகளே யாவார்கள். 5 வயதுப் பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சவுகரி யங்களும் சாதனங்களும் இருக்கின் றனவோ, அது போலவே, முன்காலத் தைவிட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சவுகரி யங்களும் சாதனங்களும் இருக்கின்றன. அது போலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத் திற்கும், நாம் செய்ய வேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரிய வேண்டுமானால், அவர்கள் யார்? நாம் யார்? அவர்கள் லட்சியம் என்ன? நம் லட்சியம் என்ன? என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரி யத்தைச் செய்ய வேண்டும்.
உதாரணமாக, காந்தி ஆசிரமத்துக்கு காந்தியாருக்குப் பிறகு நான் தலை வனாகப் போனால், அந்தக் குளிர் நாட்டில் காலையில் 5 மணிக்கு எழுந்து அங்குள்ள குழந்தைகளை, வாலிபர் களைத் தண்ணீரில் முழுகவைத்து இராமபஜனை செய்யச் சொல்ல முடியமா? செய்வேனா? அது போலவே, இன்னும் அனேக மகான்கள் என்பவர் களுடைய காரியங்களெல்லாம் இந்தக் காலத்து மகான்கள் - பெரியார்கள் என்பவர்களுக்குப் பொருத்தமாயிருக்க முடியுமா?
ஆகவே, காலத்தையும், எதிர்காலத் தையும்,மக்கள் நிலைமையையும் கவ னிக்க வேண்டும். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அதுதான் பொதுநலத் தொண்டு செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும். அப்படிப்பட்ட வர்கள் நம் இடையில் தோழர்கள் டி. சண்முகம், சவுந்திரபாண் டியன் முதலிய வெகுசிலர் தாம் நம் கூட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தைக் கருதாத வர்கள். அதனாலேயே இப்படிப்பட்டவர் களிடத்தில் எனக்கு அதிக மதிப்புண்டு.
இப்பொழுது நாட்டில் நம் எதிரிகள் ஒரு கிளர்ச்சி துவக்கியிருக்கின்றார்கள். அதாவது சர்க்காரார் மதுபானத்தைப் புகுத்துகிறார்கள் என்றும் அதை நான் ஆதரிக்கின்றேன் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் பயப்படவில்லை. சர்க்கார் உத்தரவை நான் வரவேற்கிறேன். இந்த உத்தரவு போடவேண்டுமென்று 3,4 வருட காலமாகவே, வைஸ்ராயிடத்திலும் நம் கவர்னரிடத்திலும் நேரில் பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆதலால், நான் அந்தக் குற்றச்சாட்டு என்பதிலிருந்து மறைந்து கொள்ள ஆசைப்படவில்லை. பேசுகிறவர்களுக்கு மதுவைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்குமென்றோ, அல்லது தெரிந்தவர்கள் நாணயமாய் பேசுகின்றார்களென்றோ நான் கருத வில்லை. இந்த உத்தரவை நம் எதிரிகள் சர்க்காரை வையவும், என்னைக் குறைகூறவும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சர்க்காருக்குத் தெரியும். என் குறைபாடுகளைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை.
உண்மையான மதுவிலக்கு எப்படி என்பது எனக்குத் தெரியும். நான் மதுவினால் ஏற்படும் கெடுதியை நீக்க வேண்டுமென்று சொல்பவனே தவிர, அடியோடு மதுவே கூடாது என்கிற வர்ணாசிரமக்காரனல்ல. சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக் கூடாது என்பதே வருணாசிரமம். பிறவி யைக் கவனிக் காமல் சுத்தமாயிருப்ப வனைத் தொட லாமென்பதும், அசுத்தமா யிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத் தக்கவனாக ஆக்கிக் கொள்ளலா மென்பதும் எனது கொள்கை.
இந்த மேடையை அரசியல் மேடை யாக ஆக்கிக் கொள்ள எனக்கு இஷ்ட மில்லை. இதற்காக வேறு கூட்டம் ஏற் பாடு செய்து. காயலாவோடே ஆஸ்பத் திரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வந்து ஒரு நாளைக்குப் பேசலாமென்றி ருக்கிறேன். பின் ஏன் இங்கு இதைச் சொன்னேன் என்றால், நான் பாமரப் பொதுஜன அபிப்பிராயத்துக்கோ, சுய நலக் கூலிப் பத்திரிகைகளின் கூப் பாடுகளுக்கோ செவிசாய்ப்பதில்லை எனத் தெரியப்படுத்திக் கொள்ள வேயாகும்.
(04.12.1943  அன்று சென்னை, திரு வொற்றியூரில் மாலை திருவொற் றியூர் பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் காம்ப வுண்டில், செங்கற்பட்டு ஜில்லா போர்டு தலைவர் தோழர் டி. சண்முகம் அவர்களுக்கும், உபதலைவர் கயப் பாக்கம் ஜமீன்தார் தோழர் கே. முத்துலிங்கம் அவர்களுக்கும் நடத்தப் பட்ட தேநீர் விருந்தின் போது தமிழரின் தனிப்பெருந் தலைவர் பெரியார். ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 18.12.1943

 -விடுதலை- 25.1.15பக்2
-

புதன், 7 ஜனவரி, 2015

சிந்தனை - ஜாதிக் கொடுமை



ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதின றாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினறாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண ஜாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.
மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சில் சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம்: ஜாதிகளின பொய்த் தோற்றம் என்ற நூல், பக்கம் 108   யாரால் அனுப்பப்பட்டார்கள்? ஆழ்வார்கள், அவதார புருஷர்கள், நாயன்மார்கள், நபி கள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர் கள், திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?

- (குடிஅரசு, 27.8.1949)

சிந்தனைப் பூக்கள்-முதலில் நாங்கள் மனிதர்கள்




நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ் டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளு கின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.
மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென் கின்றோம்.
பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.
அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்
விடுதலை,3.10.14

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு



பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு  - தந்தை பெரியார்


- தந்தை பெரியார்


தி.மு.கழகம் சமுதாயத்தோடு நில்லாமல் அரசியலிலும் ஈடுபட வேண்டி இருப்ப தால், தங்களது கொள்கையை மறைத்துக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக் காரியத்தைச் செய்ய நாங்களிருக்கிறோம். எங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்றால், நாங்கள் பதவிக்குப் போவ தில்லை; மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்பது கிடையாது. எனவே, மக்களின் தயவு எங்களுக்குத் தேவை இல்லை யானதால், மக்களிடையே இருக்கிற குறை பாடுகளை- மூடத்தனமான முட்டாள்தன நம்பிக்கைகளை எங்களால் எடுத்துச் சொல்ல முடிகிறது.
தங்களது தோல்விக்கு அரசியல் வாதிகள் காரணங்களைத் தேடி எதை யாவது சொல்லித் தங்களுடைய தோல்வி களை மறைத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். நான் அப்படியல்லவே!
தேர்தல் நடக்கிற அன்று இரவுவரை திமுகவை எதிர்த்தேன். அது வெற்றி பெற்றது என்று செய்தி வெளிவந்ததும் ஓர் அறிக்கை விட்டேன். அதில் நான் தோற்று விட்டேன்; பார்ப்பான் ஜெயித்து விட்டான். இதற்கு முன் இரு முறை அவனை நான் ஒழித்து இருக்கின் றேன்; எப்படி ஒழிப்பது என்பது எனக்குத் தெரியும். என்னிடம் அந்தப் பொறுப்பை விட்டு விடுங்கள் என்று குறிப்பிட்டி ருந்தேன்.
மாணவர்களுக்குச் சில சொல்ல வேண்டும்; நம் நாட்டு அரசியல், காந்தி வந்ததும் கழுதை புரண்டகளமாகி விட்டது. வெள்ளைக்காரன் இருந்த வரை ஒரு அத்து இருந்தது. அவன் போனதும்- பார்ப்பான் கைக்கு ஆட்சி வந்ததும், அவன் கட்டுப் பாட்டிற்கு மக்கள் வர மறுத்ததால் அரசாங் கத்திற்கு எதிராகக் காலித்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும், வேலை நிறுத்தம், பட்டினி கிடப்பது போன்ற கீழ்த் தரமான காரியங்களையும் தூண்டிவிட்டு விட்டான்.
இக்காரியங்களைக் காந்தி தான் ஆரம் பித்தார். தலைவன் என்கின்ற முறையில் அவர் ஆரம்பித்ததும், பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பான் கையிலிருந்ததால் அதற்கு விளம்பரம் கொடுத்துப் பெரிதாக்கி விட்டார்கள். இப்போது மற்ற மக்களும் அதைக் கையாள ஆரம்பித்து விட்டனர்.
தற்போது சில மாணவர்கள் கைக்கு அந்தக் காலித்தனம் வந்துவிட்டது. நாங்கள் தோன்றும் போதும் மாணவர்கள் நிலை எப்படி இருந்தது? நம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்குப் படிப்பு வராது என்று கருதினார்கள். 1916-இல் பார்ப்பனரிரல்லாத இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் நம் மக்கள் 100க்கு 5 பேர் தான் படித்தவர்கள் பார்ப்பனர்கள் 100க்கு 100 பேரும் படித்த வர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்த நிலை 1925 வரை இருந்தது. அதன் பின் ஜஸ்டிஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் போய் ஆட்சி செய்து 100க்கு 7 பேரைப் படித்தவர்கள் ஆக்கினார்கள். அந்த ஆட்சி யின் மேல் பொய்யையும், புளுகையும் கூறி மக்களை நம்பச் செய்து அதை ஒழித்து, 1938-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனை பேர் படித்திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 7 பேர் படித்திருக் கிறார்கள் என்று தெரிந்ததும் 2500 பள்ளிக் கூடங்களை மூடியது.
நாளைக்குக் காங்கிரஸ் வந்தாலும் இந்தக் கதி தான் ஏற்படும். காமராஜர் இல்லையா என்று கேட்பீர்கள்? அவரால் ஒன்றும் முடியாது. காமராஜருக்குக் கையாக இருப்பது சுதந்திராக் கட்சி; காலாக இருப்பது ஜனசங்கம். இந்த இரண்டின்படி தான் அவர் நடக்க முடியுமே தவிர, தானாக எதையும் செய்ய முடியாது.
ஜனசங்கம் முழுக்க முழுக்கப் பார்ப்பானுடையது. சுதந்திரா விலாவது பார்ப்பானும்ஒரு சில நம்மைக் காட்டிக் கொடுக்கிற துரோகிகளும் இருக்கிறார்கள். இது (ஜனசங்கம்) பச்சைப் பார்ப்பான் கட்சி. இவர்கள் இரண்டு பேரும் சொல்லுகிறபடி தான் காமராஜர் கேட்டு நடக்க வேண்டிய வராகி விட்டார். எனவே அவரால் இனிப் பார்ப்பனருக்கு பயன் ஏற்படுமே தவிர நமக்குப் பயன் ஏற்படும் என்று நம்புவதற்கு வழியில்லாமல் போய்விட்டது
1952-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனைபேர் படித் திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 9 பேர் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் இனி இதை வளர விட்டால் பார்ப்பனர்கள் கையில் தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு போக வேண் டிய நிலை ஏற்பட்டு விடும் என்று பயந்து, 6000 கிராமப் பள்ளிக்கூடங்களை மூடி னார்கள். மூடினதோடு விடவில்லையே! மாணவர்கள் ஒரு நேரம் தங்கள் ஜாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதை எதிர்த்து நாம் தான் போராடி அவரை ஒழித்துக் காமராசரைக் கொண்டு வந்தோம். அவர் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று நம்மிடம் கேட்டார். இராஜாஜி மூடிய பள்ளிகளை எல்லாம் திறக்க வேண்டும் என்று சொன்னதும் அதன்படி செய்ததோடு, மேலும் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அப்போது திரு. சுந்தர வடிவேலு டைரக்டராக இருந்தார். எங்கெங்கு அவர் பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்று சொன்னாரோ அதன்படிக் காமராசர் செய்தார். மக்களிடையே ஆதரவு பெருகியது.
அவர் போய் இவர்கள் ஆட்சி வந்ததும், நம்மக்களின் கல்வியில் நிறைய கவனம் செலுத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியில் நம் மக்கள் 100க்கு 50க்கு மேல் படித்த வர்கள் ஆனதோடு, நம் மக்கள் நினைக் கவே முடியாத பதவி உத்தியோகங்களை எல்லாம் அனுபவிக்கும்படியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமுதாயத் துறையிலும் இதுவரை வேறு எவரும் நினைக்காத அளவிற்குக் காரியங்கள் நடை பெற்று வருகின்றன.
நம் இளைஞர்கள் எல்லாம் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மாண வர்கள் தாங்கள் செய்யும் ரகளையைப் பற்றி அதன்பின் விளைவைப் பற்றி சிந்திப்பது கிடையாது. அதைத் தான் எதிரிகள் பயன் படுத்திக் கொள்வார்கள். தற்போது காம ராஜர் இந்த ஆட்சியை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்கின்ற எண் ணத்தில் மாணவர்களைப் பிடித்து ரகளை செய்யச் சொல்லி, அதன் மூலம் இந்த ஆட் சியைக் கவிழ்த்து விடலாம் என்று பார்க் கிறார். அதற்கு நீங்கள் பலியாகக் கூடாது.
என்னைப் பொறுத்த வரை எவன் ஆட்சிக்கு வந்தாலும் அவனை நான் சரி செய்து கொள்வேன்; என் தயவு எவனுக்கும் வேண்டும். நான் எவனையும், எவன் ஓட்டையும் எதிர் பார்க்க வில்லையே!
இன்றைக்கு முன்னேற்றக் கழகத் திற்குள்ள கேடு எதிர்க் கட்சிகளால் அல்ல; அவர்களுக்குள் இருக்கிற  உட்பூசல் களாலேயே ஆகும். உட்பூசல்  வந்தால் எந்தக் கட்சியும் வாழ முடியாது; உட்பூசல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களை நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, இந்த ஆட்சிக்கு எந்த கேடும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ரொம்ப அபாயகரமான காலம். நாம் சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த ஆட்சி மாறினால் நம் வாழ்வு - பொதுமக்கள் வாழ்வு ஒழிந்தது. இந்த நிலைமையை அடியோடு தலைகீழாக மாற்றி விடுவார்கள். மனுதர்மப்படி தான் ஆட்சி நடக்கும்.
இன்று நம் இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும் பதவிகளில்- உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.
உத்தியோகங்களால் நாம் வாழ்ந்து விட்டோம் என்று சொல்வதற்கு இல்லா விட்டாலும் இதனால் நம் இழிவு ஒழிகிறதே!
இது நம் நாடு- நம் முன்னோர்கள் வாழ்ந்த நாடு. இந்த பார்ப்பான் எல்லாம் பொறுக்கித் தின்ன, பிச்சை எடுக்க வந்த வன். ஆடு, மாடுகளை மேய்க்க வந்தவன். அவன் இன்று நம் தலையில் பெரிய கல்லை வைத்து இருக்கின்றான். அதைத் தள்ளி விட்டு நாம் முன்னேற வேண்டும். நாம் எதற்காகப் படிக்கிறோம்? நாட்டிற்குத் தொண்டு செய்ய வேண்டும்- உத்தியோகங் களுக்குச் செல்ல வேண்டும் என்பதற் காகவே ஆகும். அதை ஒவ்வொரு மாண வரும் எண்ணிப் பார்த்து இன்றைய ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

22-11-1970 அன்று காரைக்குடியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 6.1.1971).