சனி, 21 பிப்ரவரி, 2015

வைக்கம் போராட்ட உண்மைகள்

ஜாதீயம் - பார்ப்பனீயம் இவற்றின் முதுகெலும்பை உடைத்தவர் பெரியார்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னை, பிப். 10- ஜாதீயம் - பார்ப்பனீயம் இவற்றின் முது கெலும்பை உடைத்தவர் பெரியார் தான் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
5.12.2014 அன்று சென்னை பல்கலைக் கழகத்தில் நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வரலாற்று பரிமாணங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மிகத் தேவையான காலகட்டத்தில், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு இவை மிகவும் அதிகமாகத் தேவைப் படுகின்ற ஒரு காலகட்டத்தில், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற, சிறீ நாராயணகுரு  அவர்களுடைய பெயரால் அந்தச் சமூகப் புரட்சியாளர் செய்த அமைதிப் புரட்சியினுடைய விளைவாக, ஏற்பட்ட மிகப்பெரிய சமூக மாற்றம், நம்முடைய இன்றைய தலைமுறையினருக்கும், இனி வரக்கூடிய தலைமுறை யினருக்கும் கொண்டு செல்லப்படவேண்டிய அற்புதமான வரலாற்று செய்தியாகும் என்பதை மனதிற்கொண்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, சென்னை பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற நாராயண குரு அறக்கட்டளையின் கருத்தரங்கத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய  வரவேற்புரையாற்றிய, இந்தத் துறையின் பொறுப்பாளர் அருமை அய்யா டாக்டர் எஸ்.குப்புசாமி அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அருமைப் பேராசிரியை திருமதி பானுமதி ரங்கராஜன் அவர்களே, இந்த நிகழ்ச்சியில், நமக்கு முன்பு, ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தியும், இந்த அறக்கட்டளையில், பயனுள்ள கருத்தரங் கமாக இக்கருத்தரங்கம் அமையவேண்டும் என்பதை வலி யுறுத்தியும், சிறந்த வரலாற்றுப் பேராசிரியராக விவேகானந்தா கல்லூரியில் இருந்து பணி ஓய்வு பெற்றவரும், திராவிட வரலாற்று ஆராய்ச்சி மய்யத்தினுடைய பொறுப்பாளர்களில் ஒருவருமான அன்பிற்குரிய அருமை நண்பர், பேராசிரியர் கருணானந்தம் அவர்களே, இந்த நிகழ்ச்சியில், வரவேற்புரை யாற்றிய அருமை நண்பர்கள் அய்யா டாக்டர் குப்புசாமி அவர் களே, மற்றும் இவ்வளவு சிறப்பான ஒரு அறக்கட்டளையை நிறுவி, அருமையான கருத்துகள், நாராயண குரு அவர்களு டைய பெயரால், அவருடைய சிந்தனைகளை ஒவ்வொரு முறையும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆண்டு தோறும் நினைவூட்டுவதற்கு, சென்னை பல்கலைக் கழகத்தில் ஒரு அருமையான ஏற்பாட்டினை செய்து, இந்த அறக் கட்டளையை நிறுவிய பாராட்டுதலுக்குரிய அய்யா வி.வி.வாசவன் அவர்களே, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்றியுரை கூறவிருக்கின்ற டாக்டர் எஸ்.எஸ்.சுந்தரம் அவர் களே, எதிரே அமர்ந்திருக்கக்கூடிய அறிஞர் பெருமக்களே, இந்தத் துறையில், கேரளாவில் அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய, முதன்மைச் செயலாளர்களில் ஒருவராக சிறப்பாகப் பணியாற்றிய, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணை யத்திலும், பழங்குடியினர் ஆதிதிராவிடர் நல ஆணையத்திலும் பொறுப்பு வகித்து, லேண்ட் ட்ரையினர் கமிஷனர் ஆப் கேரளா என்கிற அந்தப் பொறுப்பிலும் இருந்து, பிறகு ஓய்வு பெற்று, நாராயண குரு, ஜோதி பாபூலே, குமரன் ஆசான், பண்டை கருப்பன் ஆகியோர்களைப் பற்றியும் 12 புத்தகங் களை எழுதியுள்ள அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அய்யா ஜே.சுதாகரன் அய்.ஏ.எஸ். அவர்களே, மற்றும் இந்த நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்டிருக்கக்கூடிய அருமை மாண வத் தோழர்களே, தோழியர்களே, சான்றோர் பெருமக்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்கலைக் கழகங்களில் கருத்தரங்குகள் சடங்கு, சம்பிரதாயங்கள் போல ஆகிவிட்டன!
இங்கே விளக்கவுரையாற்றிய பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் சொன்னார்கள், நம் நாட்டில் ஏற்படுகிற ஒரு போக் கைக் குறிப்பிடுவதைப்போல, கோடிட்டுக் காட்டுவதைப்போல சொன்னார்கள். கருத்தரங்குகள், பல்கலைக் கழகங்களில் நடைபெறுவது, இப்பொழுது அதுகூட ஒரு சடங்கு, சம்பிர தாயங்கள் போல ஆகிவிட்டது. இந்தக் கருத்தரங்கிற்கு ஏராளமானோர் வந்திருக்கிறார்கள். பொதுவாக, அறக்கட்டளை சொற்பொழிவிற்கு எவ்வளவு பேர் வருவார்கள். அது ஒரு சடங்கு, ஆண்டு தவறாமல் நடத்திடவேண்டுமே என்பதற்காக, சில நேரங்களில் ஓராண்டு தவறிகூட, அடுத்தாண்டு நடத்துவ தென்பதெல்லாம், பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்கிற முறையில், எனக்கே கூட எங்களுடைய பல்கலைக் கழகத்தில் உடனடியாக நடத்திடவேண்டும் என்று நான் எங்கள் பல் கலைக் கழகத்தின் துணைவேந்தரிடம் வலியுறுத்துவது உண்டு.
ஆகவே, இந்த அற்புதமான ஒரு பணியை, மிகச் சிறப்பாக செய்ததினுடைய நோக்கம் என்னவென்றால், பலரை நாம் புரட்சிவாதிகளாகக் காட்டுகின்ற நேரத்தில், அவருடைய அரிய புரட்சிகரமான கருத்துகள், உண்மையிலேயே இளைஞர் களுக்குப் போய்ச் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், அவர்களுடைய பிம்பங்களை நாம் வழிபடுவதற்குரியதாக ஆக்குகிறோமே தவிர, பின்பற்றப்படுவதற்குரியதாக ஆக்குவதில்லை.
சிறந்த கருத்தரங்கமாக இன்றைக்கு அமைந்திருக்கிறது
தலைவர்கள் என்று சொல்லும்பொழுது, அவர்கள் வழிபடு வதற்காக அல்ல; சமூகப் புரட்சியாளர்கள் என்று சொல்லும் பொழுது, அவர்கள் பின்பற்றப்படுவதற்காக; அவர்கள் எந்த சமுதாய சமத்துவத்தை உருவாக்கவேண்டும் என்று விரும் பினார்களோ, எந்த மாற்றத்தை ஏற்படுத்தி, அதன்மூலமாக மேடுபள்ளம் அற்ற ஒரு சமூகநீதி, எல்லோருக்கும் எல்லாமும், அனைவருக்கும் அனைத்தும் என்று பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்பொழுது சொன்னார் களோ, அதே தத்துவத்தின் அடிப்படையில், அனைவருக்கும் கிடைப்பதற்காகப் பாடுபட்டவர்கள் என்றால், அந்தக் கருத்துகளை, இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்; புரிந்துகொள்ளவேண்டும்; முதலில் தெரிந்து கொள்வது; இரண்டாவது புரிந்துகொள்வது. ஆகவே, அந்த வகையில், இந்தக் கருத்தரங்கம் ஒரு நல்ல சிறந்த கருத் தரங்கமாக இன்றைக்கு அமைந்திருக்கிறது.
நெல்சன் மண்டேலா அவர்களுடைய நினைவு நாள் இன்று!
எதிர்பாராமல் நாம் நிகழ்ச்சி நடத்துகின்ற இந்த தேதி கூட, மிகப்பெரிய விடுதலை வீரரான நெல்சன் மண்டேலா அவர்களுடைய நினைவு நாளாகும். சமூகநீதியில், உலகளாவிய நிலையில், மனித உரிமைப் போரில், மறக்க முடியாத, உலகத் தவர்கள் அத்தனை பேரின் உள்ளத்திலும் உள்ளவர். அவரு டைய நினைவு நாள் இன்றாகும். மிகவும் பொருத்தமானது.
மனித உரிமைப்பற்றி பேசுகிறோம்; இந்த மனித உரிமைப் போரை, தன் கண்முன்னாலே தொடங்கி, அதற்காக 27 ஆண்டுகாலம் தனிமைச் சிறையில், ரோபன் தீவில் இருந்து; அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், உறுதி குலையாமல், தொடர்ந்து தன்னுடைய லட்சியத்தில் வெற்றி பெற்று, யார் இவரை அடக்குமுறைக்கு ஆளாக்கினார்களோ, அவர்களே இவருக்கு கைகொடுத்து வரவேற்று, சிம்மாசனத்தில் உட்காரக் கூடிய அளவிற்கு, அந்தக் கருத்துக்கு ஒரு பெரிய புரட்சியா ளராக, வெற்றி வீரராகத் திகழ்ந்தவர்; மனித உரிமைக் காவல ராக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றவர் நெல் சன் மண்டேலா அவர்கள். அவருடைய நினைவு நாள் இன்று.
அம்பேத்கர் நினைவு நாள்
நாளைய தினம், நம்முடைய சமூகப் புரட்சியாளராக இருந்து, மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரராகி, தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்கள், எந்த அளவிற்குப் பலருக்கும் பயன்பட்டிருக்கும் என்று சொல்வதற்கு, இதோ வைக்கம் சத்தியாக்கிரகம் எனக்கும் பயன்பட்டிருக்கிறது என்று சொல்லி, ஒரு வரலாற்றை உருவாக்கி, மிகப்பெரிய அளவில், மனித உரிமைப் போரில், எல்லையற்று தன்னுடைய கருத்துச் சுதந்திரத்தை எந்தக் காரணத்திற்காகவும் இழக்காமல், பதவிகள்கூட தன்னுடைய கொள்கைக்கு ஒத்துப்போனால் ஏற்போமே தவிர, இல்லையானால், எனக்கு அந்தப் பதவி துச்சமாக என்று காட்டி, பதவியை விட்டு வெளியே வந்து, ஒரு புரட்சியாளராக என்றைக்கும் திகழ்ந்து, வரலாற்றை உருவாக்கிய வராக ஜோதி பாபுலே அவர்களுக்குப் பின்னாலே திகழ்ந்தவர் பாபா சாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களா வார்கள். அவருடைய நினைவு நாள்தான் நாளை (டிச.6).
இந்திய வரலாற்றில் முதல் மனித உரிமைப் போராட்டம்
திட்டமிட்டு, சில தீய சக்திகள் அவருடைய நினைவு நாளை நினைவு நாளாக நினைக்கக்கூடாது, பாபர் மசூதி இடித்த நாளாக ஆக்கிவிடவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இல்லாத பாலத்தை இருப்பதாகச் சொல்லி, இருக்கின்ற மசூதியை இடித்துத் தள்ளி, மிகப்பெரிய அளவிற்கு நாட்டில் ஒரு ரத்த ஆறு  ஓடும்படியாகச் செய்த சூழ்நிலை களையெல்லாம் நாம் பார்த்தோம். எனவே, அந்த நாள்தான் நாளைக்கு. எனவே, இன்றும், நாளையும் மிகப்பெரிய அளவிற்கு, இரண்டு மிகப்பெரிய சமூகப் புரட்சியாளர்களின் நினைவு நாள்களாகும்.
இன்றைக்கு நாம், நாராயண குரு அவர்களுடைய ஒரு அற்புதமான, ஒரு சிறப்பான அவர்களுடைய பெயரால் அமைந்திருக்கின்ற அறக்கட்டளையில், இந்தியாவினுடைய வரலாற்றில், நடைபெற்ற முதல் சமூகநீதி போராட்டம்; முதல் மனித உரிமை போராட்டம்; வரலாற்று ஆசிரியர்களால் இதுவரை திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒரு போராட்டம் என்ற அளவில் சொல்லவேண்டுமானால், அதுதான் தந்தை பெரியார் அவர்கள் முன்னின்று நடத்தி, வைக்கம் வீரர் என்றே அந்த ஊரினுடைய பெயரும் தலைவருக்கு அமைந்தது என்று சொன்னால், அது தந்தை பெரியார் அவர்களுக்குத்தான் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்ற அந்த வைக்கம். அந்த வைக்கத்தைப்பற்றி இன்றைக்கு பேச அழைத்திருக்கிறீர்கள். அதுவும், பல்கலைக் கழகத்தினுடைய வரலாற்றுத் துறையில் அதைப் பேசுவது, அதைப்பற்றி மாலையில் விவாதிப்பது என்பதெல்லாம் ஒரு அரிய வாய்ப்பாகும்.
வெளிநாட்டினரால் ஜாதியை புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை
இதுவரையில், ஒரு கட்டத்தில் வைக்கத்தில் பெரியாருடைய பங்களிப்பு மறைக்கப்பட்டது. ஏன், வைக்கம் போராட்டமே மறைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்வார்கள், Passing Reference என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவர்களும் சென்றார்கள் என்று சொல்வதைப்போல, They also run என்று சொல்வதைப்போல, அவர்களும் ஓடினார்கள் என்று சொல் வதைப்போல, இவர்களும் செய்தார்கள் என்று சொல்லுவ தென்ற ஒரு நிலையில், அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் செய்தனர்.
இந்தியாவில், மனித உரிமைப் போர் என்று சொன்னால், இதற்கு ஈடாக, இணையாக, 1924 ஆம் ஆண்டு காலகட்டத்தில், என்னைப் போன்றவர்கள், உங்களில் பலர் அப்பொழுது பிறக்காதவர்கள். இங்கே இருப்பவர்களில் ஒரு சிலர் பிறந்திருக்கலாம்; ஆனால், 1924 ஆம் ஆண்டில், அவர்கள் தொடங்கிய போராட்டத்தைப்பற்றி நினைக்கும் நேரத்தில், நான் அண்மையில்கூட, பெரியார் அவர்களைப்பற்றி உரையாற்றும்பொழுது, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில், ஜாதி, சமூகம், ஜாதியத்தைப்பற்றி எடுத்துச் சொல்லவேண்டும் என்று முனைந்தபொழுது, பல வெளிநாட்டுக்காரர்கள் குழுமியிருக்கக்கூடிய, பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள் குழுமியிருக்கின்ற அந்தக் கூட்டத்தில், ஜாதி, தீண்டாமையை விளக்குவது என்பதும், அவர்களுக்குப் புரிய வைப்பது என்பது, அதுவே இப்பொழுது கடினமாக இருக்கிறது. ஏனென்றால், அந்த நாட்டில் பிறவிக் கொடுமை என்பது இல்லை; நம் நாட்டில் மட்டும்தான் உண்டு. அவர்களால்விளங்கிக் கொள்வதற்கே முடியவில்லை
நெருங்காமை, பார்க்காமை, தொடாமை
இதுவரையில், நம் நாட்டில் Untouchability தொடாமை என்பதைப்பற்றித்தான் ஒரு வார்த்தை இருக்கிறது. ஆனால், வைக்கம் போராட்டம் ஏன் அவசியப்பட்டது? ஏன் தேவைப்பட்டது? ஏன்? எதற்காக? அது உருவாகியது; இதுவரையில் மனித குலம் அவமானத்தால் தலைகுனிய வேண்டிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு தேசிய அவமானம். நெருங்காமை. அதென்ன மனிதர்களுக்குள்ளேயே நெருங் காமை. காட்டுமிருகங்களிடம் நெருங்காமை தேவைதான்.  அப்படி இல்லாமல், டில்லியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் நெருங்கியவருக்கு என்ன நேர்ந்தது? என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும்.  காட்டுமிருங்களிடம் நெருங்காமை என்று சொல்வது பாதுகாப்பு காரணமாகத்தான். ஆனால், ஆறறிவு உள்ள மனிதர்கள் என்று சொல்லும்பொழுது, நெருங்காமை, பார்க்காமை, தொடாமை இவைகளெல்லாம்.
Untouchability  என்பது மட்டுமல்ல, Unseeability, Possibility என்று வந்தால், இதைவிட ஒரு ஆதிகால காட்டுமிராண்டி சமுதாயம், வேறு உண்டா? இன்றைக்கும் அவமானப்படக் கூடிய அவலநிலை தொடருகிறதே, இதைவிட வேதனையான ஒரு சூழல் உலகத்தில் எங்காவது தேடிப்பார்த்தால்கூட இருக்குமா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
மண்டேலா அவர்கள் பாடுபட்டதுகூட, கருப்பர்கள் - வெள்ளையர்கள் என்ற நிறபேதம்தான்.
ஆனால், ஒரு கருப்பன், வெள்ளைக்காரனிடத்தில் நெருங்கி உட்கார்ந்தான்; அதற்காக வெள்ளைக்காரன் குளித்துவிட்டு வந்தான் என்ற செய்தி கிடையாது.
நிற பேதத்தைவிட வருணபேதம் கொடுமையானது!
அவன் தோல் நிறத்தைப் பார்த்தான், அவனுக்குத் தனி இடம் கொடுத்தான். ஆனால், இங்கே, நீ படிக்காதே, உனக்குப் படிப்பதற்கு தகுதியே கிடையாது; நீ படித்தால் குற்றம்; நீ படித்தால், உன் நாக்கை அறுக்கவேண்டும்; இந்த நாட்டினு டைய மிக முக்கியமான வேத நூலை படித்தால், காதிலே ஈயத் தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று எந்த வெள்ளைக் காரனும், எந்தக் கருப்பரையும் பார்த்து சொல்லவில்லை.
எனவேதான், அந்த நிற பேதம் என்பதைவிட, இந்த வருணபேதம் என்பதிருக்கிறதே, இது மிகவும் வித்தியாசனது; மிகவும் கொடுமையானது. மிகப்பெரிய அளவிற்க.
மின்சாரத்தில்கூட ஜாதி போகும்; தீண்டாமை போகும், நம் நாட்டில். மின்சாரத்தைக் கண்டு மனிதர்கள் ஒதுங்கிறார்கள், பயப்படுகிறார்கள்.
ஆனால், நம் நாட்டில் மின்சாரம்கூட, தீண்டாமையைக் கண்டு, அதன் வழியாக ஜாதி போகிறது.
யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால், விளக்கம் பெறவேண்டுமானால், பாபு ஜெகஜீவன்ராம் எவ்வளவு பெரிய அறிவாளி. 50 ஆண்டுகாலம் அவர் தொடாத துறையே இல்லை, அரசியலில். அவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர். பாகிஸ் தான் போரின்போது, ராணுவ அமைச்சராக இருந்து மிகப் பெரிய அளவிற்கு சாதனை செய்தவர். உணவுப் பிரச்சினை யைத் தீர்த்தவர். பொது அறிவில், பட்டறிவில் அவருக்கு இணையானவர் யாரும் கிடையாது. அப்படிப்பட்டவர், ராணுவ அமைச்சராக இருந்த நேரத்தில், அவரைவிட உயர்ந்த ஜாதிக்காரர் என்று சொல்லக்கூடிய ஒருவருடைய கற்சிலையை அல்லது உலோகச் சிலையை, உத்தரப்பிரதேசத்தில், அதுவும் புனித கங்கை ஓடுகின்ற கங்கைப் பகுதியில், திறந்து வைக்க முடியவில்லை, அவரால்.
செருப்புத் தைப்பவர்கள் எல்லாம் மந்திரிகளாகிவிட்டால், எங்கள் பூட்சுக்கு யார் பாலீசு போடுவது?
அவருடைய உருவத்திற்கு, அந்தச் சிலையைக் கட்டிப்பிடித்து அவர் ஒன்றும் திறக்கப் போவதில்லை; ஆரத் தழுவுவதுபோலவும் அவர் அந்தச் சிலையை திறக்கப் போவதில்லை. பிறகு எப்படி அந்தச் சிலையை திறப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். மின்சார பொத்தானை அழுத்துவார்கள். அப்படி மின்சார பொத்தானைத்தான் அழுத்தினார் பாபு ஜெக ஜீவன்ராம், சம்பூர்ணானந்த் சிலையைத் திறப்பதற்காக. இவர் காயஸ்தா வகுப்பைச் சேர்ந்தவர்.
பாபு ஜெகஜீவன்ராம் அவர்களைப் பேசவிடவில்லை. யார்? படிக்காத பாமரர்களா? இல்லை. மேல் பட்டதாரிகளான காசி இந்துப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பார்ப்பன உயர்ஜாதி மாணவர்கள்; கொச்சையாக, மனிதத்தன்மையற்ற முழக்கத்தை கொடுத்து, அவரை அவமானப்படுத்தினார்கள் திட்டமிட்டே!
செருப்புத் தைப்பவர்கள் எல்லாம் மந்திரிகளாகிவிட்டால், எங்கள் பூட்சுக்கு
யார் பாலீசு போடுவது? ஜெகஜீவன் ராமே திரும்பிப் போ! என்று முழக்கமிட்டனர்.
சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு என்றால், இந்தத் தேசம் உண்மையிலேயே சுதந்திரமடைந்து விட்டதா? மனிதத் தன்மை பெற்றுவிட்டதா? பெரியார் கருப்பு நாள் என்று சொன்னது நூற்றுக்கு நூறு நியாயம் என்பதை அது நிரூபிக்கவில்லையா? தயவு செய்து அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஜாதியத்தினுடைய முதுகெலும்பை, பார்ப்பனியத்தின் முதுகெலும்பை உடைத்தவர், முறித்தவர் தந்தை பெரியார்!
அப்படி அவர் அந்தப் பொத்தானை அழுத்தி, அந்தக சிலையைத் திறந்து வைத்துவிட்டு, சென்னைக்குத்தான் அடுத்த நாள் வந்தார்; மயிலாப்பூர் மாங்கொல்லையில் பேசினார்; அவருடைய குமுறலையெல்லாம் கொட்டினார். இந்தப் பெரியார் மண்ணிலேதான் என்னுடைய உள்ளக் குமுறலைக் கொட்ட முடியும். ஏனென்றால், இந்த ஜாதியத்தினுடைய முதுகெலும்பை, பார்ப்பனியத்தின் முதுகெலும்பை உடைத்தவர், முறித்தவர் தந்தை பெரியார், அதிலே வெற்றி பெற்றவர் என்று சொல்லி, இந்த ஜாதியத்தினால் அங்கே அவர் பெற்ற சங்கடத்தை இங்கே தான் வந்து குமுறினார்.
சிலையைத் திறப்பதற்காக அந்தப் பொத்தானைத்தான் அழுத்தினார். உடனே அங்கே இருந்த மாணவர்கள் ஓடிப்போய், 10 குடம் புனித கங்கா ஜலத்தை (கங்கை எவ்வளவு புனிதமானது என்பது நம்முடைய பட்ஜெட்டிற்கே தெரியும்; கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கிறார்களாம்; உலகத்திலேயே புனிதத்தைத் தூய்மைப்படுத்துகின்ற கதை நம்முடைய நாட்டில் மட்டும்தான் உண்டு. இந்தப் புனிதங்கள் என்பதே எவ்வளவு அழுக் கானவை என்பதற்கு, இதைவிட ஒரு நல்ல உதாரணம் இருக்க முடியாது. போலித்தனத்திற்குப் புனிதம் என்று பெயர் வைத் திருக்கிறார்கள். புனிதர்கள் எல்லாம் போலியானவர்கள். புனிதர்களைத் தூய்மைப்படுத்தவேண்டும்; நதியை மட்டுமல்ல, மனிதர்களையும்தான்) கொண்டுவந்து, அந்த சிலையின்மீது ஊற்றினார்கள். சம்பூர்ணானந்த் சிலையின்மீது ஊற்றினார்கள். இந்தியாவினுடைய ஒரே ஒரு பத்திரிகைதான் அதைப்பற்றி எழுதியது; அதுதான் விடுதலை ஏடாகும்.
5
குடம் தண்ணீரை, ஜெகஜீவன்ராம் தலைமேல் ஊற்றி, அவரை பிராமணராக்கி இருக்கக்கூடாதா?
அதிலே நாங்கள் கேட்ட ஒரு கேள்வி, அட அதிபுத்தி சாலிகளே, வருணாசிரமத்தைப் பாதுகாக்கக்கூடிய அதன் வாரிசுகளே, உங்களைப் பார்த்து, சந்தேகப்பட்டு ஒரு கேள்வி கேட்கிறோம்; கங்கை நீருக்குத் தீட்டைப் போக்குகிற சக்தி, இழிவைப் போக்குகிற சக்தி, 10 குடம் கங்கை நீருக்கு இருக்குமேயானால், அதை ஊற்றி, சம்பூர்ணானந்த் சிலையை தூய்மைப்படுத்திவிட முடியும்; புனிதப்படுத்திவிட முடியும்; தீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என்று நீங்கள் கருதியிருப்பீர்களோயானால், அந்த 10 குடம் தண்ணீரில், ஒரு 5 குடம் தண்ணீரை, ஜெகஜீவன்ராம் தலைமேல் ஊற்றி, அவரை பிராமணராக்கி இருக்கக்கூடாதா? அதனைச் செய் திருந்தால், நாட்டில் பிரச்சினையே இருக்காதே! அவருக்கே ஒரு புரோமோஷன் வாழ்நாளில் கிடைக்காத புரோமோஷன் கிடைத்திருக்குமே! அதுதானே மிக முக்கியம் என்று கேட்டோம். அதற்குப் பதிலை. அன்றைக்கு மட்டுமல்ல, இன்றுவரை அந்தக் கேள்விக்குப் பதில் கூற முடியவில்லை. ஏனென்றால், அப்படிப்பட்ட கொடுமை இந்த நாட்டில்.
The Battle was bought in minds of the people
மண்டல் அவர்கள் அழகாகச் சொன்னார். சுயமரியாதை இயக்கம் நடத்திய போர் இருக்கிறதே, பெரியார் நடத்திய போர் இருக்கிறதே, அது தெருக்களில் அல்ல. மக்கள் மனதில் என்று சொன்னார். The Battle was bought in minds of the people
என்று அழகாகச் சொன்னார். ஆகவே, அப்படிப்பட்ட ஒரு அற்புதமான ஒரு நிலையில், வைக்கத்தின் வரலாறு மறைக் கப்படுகிறது. வைக்கம் என்று சொன்னாலே, மறைத்தார்கள்; பிறகு வரலாறு வருகின்ற நேரத்தில், அதே ஏதோ காந்தியார் முடித்தார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, திலகருக்குப் பிறகு, காந்தியார் சகாப்தம்; பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் சகாப்தமாக வரலாற்றில் மாறியது என்பது ஒரு கட்டம். அது வேறு.
ஆனால், அதேநேரத்தில், அடிப்படையில் காந்தியாருக்கும், நாராயண குருஜி அவர்களுக்கும் மிகப்பெரிய அளவிற்கு வேறுபாடு உண்டு அடிப்படையில். ஜாதியை ஒழிக்கவேண்டும் என்பதுதான் நாராயண குருஜி அவர்களுடைய தத்துவம். தனியே தீண்டாமை என்பதைப்பற்றி அல்ல. தந்தை பெரியார் அவர்கள்கூட அதைத்தான் சொன்னார், தீண்டாமை என்கிற சொல்லை அரசியல் சட்டம் 17 ஆவது விதியில் எடுத்துவிட்டு, ஜாதி என்ற சொல்லை போட்டுவிட்டால், ஜாதி ஒழிந்துவிடும் என்றார்.
தீண்டாமை என்பது கிளை; ஜாதி என்பது வேர்
சட்டப்படி ஜாதி இருக்கமுடியாது; அதனை வேறு எந்த ரூபத்திலும் கடைபிடிக்க முடியாது. ஜாதியை வைத்துத்தான் தீண்டாமையே உருவாகிறது. தீண்டாமை என்பது கிளை; ஜாதி என்பது வேர். எனவே, அந்த வேரை வெட்டவேண்டும், அதுதான் மிக முக்கியமாகும்.
காந்தியார் அவர்களைப் பொறுத்தவரையில், தீண்டாமை யைப்பற்றி பேசினார், அதனை ஒழிக்கவேண்டும் என்ப தெல்லாம் ஒரு பக்கம். ஆனால், அதைவிட அதிகமாக, அவர் தீண்டாமையை, ஜாதியிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்தார். தீண்டாதவர்களுக்குச் சமத்துவத்தை மற்றவர்களைப்போல உருவாக்கவேண்டும். அவர்களுக்கு வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று சொல்லி, தீண்டாமை ஒழிப்பைப்பற்றி, அரிஜன சேவா சங்கம் என்று சொல்லி, அவர்களுக்கு வாய்ப்புகளை உண்டாக்கவேண்டும் என்று சொல்லி, அந்தப் வாய்ப்பைப் பெற்றார்களே தவிர, அவர்கள் ஜாதி என்று வரும்பொழுது, வருணதருமத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பதுதான் காந்தியினுடைய கொள்கை.
நான் வருணதருமத்தின்மேல் நம்பிக்கை உள்ளவன். வருணாசிரம தர்மா என்று தனியே கட்டுரை எழுதி, அது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
ஆக, அந்த நிலையில், வைக்கத்தைப் பொறுத்தவரையில், இரண்டு, மூன்று செய்திகளை குறுகிய நேரத்தில் சொல்கிறேன். மற்றபடி வரலாறு எல்லோருக்கும் தெரியும்.
வைக்கம் போராட்டத்தை தொடங்கியவர்கள் கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் 1924 ஆம் ஆண்டு மாதவன் என்ற வழக்குரைஞர் கோவிலைச் சுற்றியுள்ள தெருவில் நடக்கக்கூடாது; ஈழவர்கள், தீயர்கள், மற்றவர்கள் நடக்கக்கூடாது, தீட்டுப்பட்டுவிடும் என்பதை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இந்தப் போராட்டத்தைத் தொடக்கியது, முதலில் மனித உரிமை அடிப்படையில், இதனை ஒழிக்கவேண்டும். நெருங் காமை, பாராமை என்பது அநாகரிகம் என்றும், அதனை அழிக்கவேண்டும் என்று ஆரம்பித்தார்கள் என்றால், கேவசமேனன் அவர்களும், ஜார்ஜ் ஜோசப் அவர்களும்தான் அதனைத் தொடங்கியிருக்கிறார்கள்.
நான் இங்கே நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டுமானால், இதனைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், பல்வேறு நிலைகளுக்குப் பிறகு,
Vaikom Satyagraha and Gandhi
The Narayana Institute of Social Cultural Development, Trichur
முதன்முதலில், 1975 ஆம் ஆண்டிலேதான், மிகத் தெளிவாக, Vaikom Satyagraha and Gandhi,  Dr.T.K.Ravindran, Professor History, University of Kerala, Trivandrum  அவர்கள், பிறகு அவர் துணைவேந்தராகக் கூட வந்தவர். உங்களுக் கெல்லாம்கூட தெரியும்.
அந்த வகையில், T.K.Ravindran அவர்கள், முதன்முறை யாக, Vaikom Satyagraha and Gandhi என்ற தலைப்பில், அவர் ஆய்வு செய்து, அதில் பல செய்திகளை மிக அழகாக அதில் சுட்டிக்காட்டினார்.
அதிலேதான், ஆவணப்படுத்தப்பட்ட, இதுவரையில் இல்லாத சில கடிதங்கள் மற்றவைகள் எல்லாம்கூட, காந்தியா ருக்கும், ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கும், கேசவமேனன் அவர்களுக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துகள் அத்தனையும் மிகத் தெளிவாக அதில் இருக்கிறது. மிகப்பெரிய அளவில், இந்தக் கடிதப் போக்குவரத்துகள் வைக்கம் போராட்டம் நடந்து 25ஆம் ஆண்டு வெள்ளி விழா என்று சொல்லும்பொழுது மறைத்திருக்கிறார்கள். அந்த வைக்கம் போராட்டத்தைப்பற்றி இவற்றையெல்லாம் நான் படித்துவிட்டு மறைக்கப்பட்ட பல உண்மைகளை, கரை படிந்த அத்தியாயங்களும், காங்கிரஸ் வரலாறும் என்று நீண்ட நாள்களுக்கு முன்பு, ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். அந்த புத்தகம் 1986 ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நூலாகும். இதிலே வெளிவந்த கடிதங்கள், T.K.Ravindran அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கின்ற கடிதங்கள், அப்போது காந்தியாருக்கும், மற்றவர்களுக்கும் நடந்த உரையாடல்கள் ஆகியவற்றையெல்லாம் எடுத்து, ஆதாரப்பூர்வமாக அந்த நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
ஆய்வாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் எழுதிய புத்தகம்
அதேபோல, வைக்கம் போராட்டத்தைப்பற்றி ஒரு விளக்கம் என்று, நம்முடைய மறைந்தும் மறையாமலும், நம் நெஞ்சங் களில் இருக்கின்ற ஆய்வாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் எழுதிய புத்தகத்தினை நாங்கள் வெளியிட்டிருக் கிறோம். வைக்கம் போராட்டம் என்கிற சிறிய நூலாகும். இளைஞர்கள் தெரிந்துகொள்வதற்கான ஒரு நூலாகும்.
அதேபோல, இந்தச் செய்திகளை வைத்து வைக்கம் போராட்ட வரலாறு என்ற ஒரு நூல், தமிழில் மிகத் தெளிவாக, இந்தத் தகவல்கள் எல்லாம் இடம்பெற்று, கடிதப் போக்குவரத் தெல்லாம் எப்படி இருந்தன என்பதையெல்லாம் எடுத்து மிகத் தெளிவாக அந்நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இதனைப் பற்றி தீவிரமாக தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத் தால், அந்த நூல்களை வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
அதுபோலவே, நண்பர்களேஅறியப்படாத ஆளுமை ஜார்ஜ் ஜோசப் என்று பழ.அதியமான் எழுதிய ஒரு நூலாகும்.
(தொடரும்)
-விடுதலை,10.2.15,பக்4

நாயும் பூனையும் நடக்கலாம் - தாழ்த்தப்பட்டவர் நடக்கக்கூடாதா?
வைக்கத்தில் தந்தை பெரியார் எழுப்பிய வினா
தமிழர் தலைவர் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை, பிப். 10- நாயும் பூனையும் நடக்கலாம் - தாழ்த் தப்பட்டவன் நடக்கக்கூடாதா? என்ற வினாவை எழுப் பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
5.12.2014 அன்று சென்னை பல்கலைக் கழகத்தில் நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வரலாற்று பரிமாணங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
Baba Saheb Dr.Ambedkar Life and Mission
அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்பற்றி, Baba Saheb Dr.Ambedkar Life and Mission என்று தனஞ்செய்கீர் எழுதிய புத்தகம். அதனைப் பலர் படித்திருப்பீர்கள். உங்களுக்கு அறிமுகமான புத்தகம்தான். ஏனென்றால், இந்நூல்தான், அம்பேத்கர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை முழுமையாகக் கொண்டு வந்த, அதிகாரப்பூர்வமான பயாகிராபி என்று சொல்லக்கூடிய ஒரு வாழ்க்கை வரலாறு, அந்தக் காலகட்டத்தில்.
நான் சொல்லப்போகின்ற பல்வேறு கருத்துகளை, நேரத்தின் நெருக்கடி காரணமாக, தொட்டுத் தொட்டுக் காட்டிவிட்டு செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.
அந்த வகையிலே, நண்பர்களே, இங்கேசுட்டிக்காட்ட வேண்டிய செய்தி என்னவென்று சொன்னால்,
டி.கே.மாதவன் அவர்கள், தந்தை பெரியார் அவர் களிடத்தில் மிகவும் பற்றுள்ளவர். அவர்தான் வைக்கம் சத்தியாகிரகம் தொடங்குவதற்கு, தூண்டுகோலாக இருந்த அற்புதமான ஒரு இளைஞர். அவர்கள் ஜாதி ஒழிப்பு உணர்வுகள் வளர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு காலகட் டத்தில், ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தங்களுடைய உரிமைகளை உணரவேண்டும்; அவர்கள் கேவலமாக எப்படி நடத்தப்படுகிறார்கள்; தெருக்களில் அவர்கள் நடக் கக்கூட உரிமையில்லையே என்றெல்லாம் வந்த நேரத்தில் தான்அதிலே சிலர் மேல்ஜாதிக்காரர்களாக இருந்தாலும், மனிதநேய உணர்வு படைத்தவர்கள் என்கிற முறையில், நீலகண்ட நம்பூதிரிபாட்அவர்களெல்லாம் அதில் கலந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
கே.டி.கேசவமேனன் அவர்களும், ஜார்ஜ் ஜோசப் அவர்களும் மற்றவர்களும் இணைந்துதான், ஒரு கமிட்டி யைப் போட்டு, அந்தப் போராட்டத்தினை தொடங்கு கிறார்கள். அப்படி தொடங்குவதற்கு முன்பாக, காந்தியார், அதிகாரப்பூர்வமான தலைவராக இல்லாவிட்டாலும், தேசத்தலைவர் அவர், காங்கிரசினுடைய தலைவர் அவர் தான். காங்கிரசினுடைய எந்தத் திட்டங்களாக இருந்தாலும், அவரிடம் அனுமதி கோரி விட்டுத்தான் நடத்தவேண்டும். அதற்காக அவருடைய அனுமதியைப் பெறுவதற்காக, அவர்கள் பட்டபாடு இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல.
யங் இண்டியாவில் வெளிவந்திருக்கிறது!
எந்த அளவிற்கு இதை அவர்கள் ஊக்கப்படுத்தாமல் இருக்க முடியுமோ, அதைப்பற்றி அவர்கள் சொல்லியிருக் கிறார்கள். அந்தப் போராட்டம் வெற்றியடைகின்ற வரை யில், அதற்கு முன்பாக, எப்படிப்பட்ட கட்டம் வந்தது என் பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமானால், கொஞ்சம் ஆழமான, ஆராய்ச்சி உணர்வோடு நீங்கள் படிக்கவேண்டு மானால், வைக்கம் சத்தியாக்கிரகம் என்கிற தலைப்பில், மகாத்மா காந்தி தொகுப்பு நூல்கள் வந்திருக்கிறதல்லவா, அந்தத் தொகுப்பில், ஏழாவது தொகுதி; பக்கம் 234, 272 அதில், தனித்தனி கட்டுரைகளாக, யங் இண்டியாவில் வெளிவந்திருக்கிறது. அந்த யங் இண்டியா பத்திரிகைக்கு காந்தியார் அவர்கள் கைது செய்யப்பட்டநேரத்தில், ஆசிரியராக இருந்த பெருமை ஜார்ஜ் ஜோசப் அவர் களுக்கு உண்டு. அவ்வளவு ஆற்றல் அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட ஜார்ஜ் ஜோசப் அவர்கள் கேட்டும்கூட, காந்தியார் அவர்களுக்கு இருந்த அந்தத் தீண்டாமை அணுகுமுறையேகூட, அவர்களுக்கும், அண்ணல் அம் பேத்கர் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தீண்டாமை ஒழிப்பு அணுகுமுறைக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.
இந்து மதத்தை அழித்தாலொழிய தீண்டாமையை ஒழிக்கமுடியாது!
இந்து மதத்தைக் காப்பாற்ற தீண்டாமை ஒழியவேண்டும் - இது காந்தியாருடைய சிந்தனை.
தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய சிந்தனை என்னவென்றால், தீண்டாமை ஒழியவேண்டுமானால், இந்து மதத்தை அழித்தாலொழிய தீண்டாமையை ஒழிக்கமுடியாது. தீண்டாமையும், இந்து மதமும் அதனுடைய இருதயம் போன்றது.
ஜாதியை விலக்கிவிட்டு, ஜாதியைக் கழித்துவிட்டு மிஞ்சுவது இந்து மதத்தில் என்ன இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். அதனுடைய நூல்கள், அதனுடைய கடவுள்கள், அதனுடைய புராணங்கள், அதனுடைய மிச்ச எச்சங்கள் இவை அத்தனையையும் எடுத்துக்கொண்டாலே, ஜாதியைக் காப்பாற்றுவது; ஆகவே தான், தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொன்னால், அதனுடைய வேரை வெட்டவேண்டும் என்று சொன்ன நேரத்தில்,
இதை வைத்துக்கொண்டு எப்படி நாம் தீண்டாமையை ஒழிக்க முடியும். தீண்டாமை என்பதிருக்கிறதே, அது பிற வியினாலே, வருணதருமத்தின் ஒரு பகுதி. அதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது கர்மா; அதற்காகவே சொல்லப் பட்டது தர்மா. எனவேதான், வருணாசிரம தருமம் - அது ஏற்பட்டது எப்படியென்றால், ஏற்கெனவே ஏற்பட்ட கர்ம வினைப்பயன். அதுதான் மிக முக்கியம்.
ஏன் ஜாதியை ஒழிக்கமுடியவில்லை?
அந்தக் கருமத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் சதுர் வருணம் மயாசிருஷ்டம் ஆகும்.
ஏன் ஜாதியை ஒழிக்கமுடியவில்லை? மற்றவைகளை யெல்லாம் சுலபமாக ஒழிக்க முடிகிறது நம் நாட்டில். ஏன் ஜாதியை, புத்தர் காலத்தில் இருந்து, நாராயண குரு காலத்தில் இருந்து, பெரியார் காலத்தில் இருந்து, இன்னமும் ஜாதியை ஒழித்துவிட்டீர்களா? என்று நம்மிடம் சவால் விட்டுக் கேட்கக்கூடிய அளவிற்கு இன்றைக்கு இருக்கிறது என்று சொன்னால் நண்பர்களே, அதற்கு என்ன அடிப் படை என்றால், ஜாதியை மனிதன் உண்டாக்கினான் என்று சொன்னால், அதனை சுலபத்தில் ஒழித்திருப்பார்கள். கடவுள் உண்டாக்கினான் என்று சொன்னதினால்தான், அதனை நெருங்குவதற்கே பயப்படுகிறார்கள்.
வேறு எந்த நாட்டிலா வது இந்த அநீதிகளை கடவுள்கள் உண்டாக்கியிருக் கிறார்களா? நீங்கள் நினைத்துப் பாருங்கள், மற்றவர் களுக்கும் கடவுள்கள் இருக்கிறார்கள்; அதற்குப் பாதுகாப்பு அரண் கடவுள்களால் வைக்கப்பட்டிருக்கிறதா?
மனுதர்மத்தை ஆரம்பிக்கும்பொழுதே ஜாதியைப்பற்றி சொல்லும்பொழுதே எப்படி ஆரம்பிக்கிறான்.
அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தை காப்பற்றுவதற் காக முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றும் முறையே உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு ஜாதிகளை உருவாக்கினார்.
பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறானாம்;
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்
நான்கு வகை ஜாதிகளை நானே உண்டாக்கினேன். அந்த வருண தருமத்தை நானே விரும்பினாலும்கூட மாற்ற முடியாது என்று சொல்கிறானாம்.
எனவே, அந்தப் பார்வை இருக்கிறதே, அதில் வருகிற பொழுது, யங் இண்டியா பத்திரிகையில் 1, 2, என்று சொல்லி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பில் வெளி வந்திருக்கிறது.
மகாத்மா காந்தி தொகுப்பு நூல்
கடைசியில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்ற பிறகு, எழுதியிருக்கிறார்களே தவிர, அதற்கு முன்பு, வைக்கம் சத்தியாகிரகம் நியாயமானதா? வைக்கம் சத்தியாக்கிரகத்தில் நடந்தது என்ன? வைக்கம் சத்தியாக்கிரகத்தில் அவருடைய கருத்து என்ன? என்றெல்லாம் இதில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்ற நேரத்தில், இவை அத்தனையும் அந்த மகாத்கா காந்தி தொகுப்பு நூலில், பக்கம் 234-லிருந்து 272 ஆம் பக்கம் வரை இருக்கிறது.
இதனுடைய சாரத்தை மட்டும் நான் சொல்கிறேன். அது என்னவென்று சொன்னால், வைக்கம் சத்தியாகிரகத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று காந்தியாரிடம் கேட்கிறார்கள்.
உடனே காந்தியார் அவர்கள், இதை அங்கே இருக் கின்றவர்களே செய்யவேண்டுமே தவிர, வெளியாட்கள் யாரும் அதனை செய்யக்கூடாது என்று சொல்கிறார்.
அந்தப் போராட்டம் எதற்காக வந்தது?
நீதிமன்றம், நான்கு வீதிகளில் ஒன்றில் இருக்கிறது. அந்த நீதிமன்றத்திற்கு வழக்குரைஞராக ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் வாதாடுவதற்காகச் செல்கிறார்.
நீ சட்டம் படித்துவிட்டால், உன்னுடைய ஜாதி போய்விடுமா?
அவரை உயர்ஜாதிக்காரர்கள் தடுக்கிறார்கள். நீ ஈழவ ஜாதிக்காரன்; கீழ்ஜாதிக்காரன். நீ எப்படி இந்தத் தெருவில் வரலாம்; எண்ட மகாதேவர் கோவில் இருக்கிறது, சாமி தீட்டாகிவிடுமே; திருவிழா நடக்கப்போகிறதே, கொடி யேற்றி இருக்கிறார்களே என்று சொன்னவுடன்,
உடனே அந்த வழக்குரைஞர், அய்யா, நான் வழக் குரைஞர் என்று சொல்கிறார்.
நீ யாராக இருந்தால் எங்களுக்கு என்ன? நீ சட்டம் படித்துவிட்டால், உன்னுடைய ஜாதி போய்விடுமா? நீ போகக்கூடாது, திரும்பிப் போ என்று சொல்கிறார்கள். தகராறு ஏற்படுகிறது; உடனே அவரை அடிக்கிறார்கள். அதுதான் ஆரம்பம். அதிலிருந்துதான் சத்தியாகிரகத்தினு டைய உணர்வுகளே வருகின்றன.
சத்தியாகிரகத்தினுடைய உணர்வுகள் தளர்ந்துவிடவேண்டும் என்பதற்காக காந்தி யார் அவ்வாறு சொல்கிறார்.
உயர்ஜாதிக்காரர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்கிறார் காந்தியார்
உயர்ஜாதிக்காரர்கள் காந்தியாருக்கு கடிதம் எழுது கிறார்கள். அது தவறு என்று சொல்லி, அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய தலைவர் என்ன சொல்கிறார் என்றால்,
ஆமாம், அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறதே; திருவிதாங்கூர் முழுவதும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஆனால், அங்கேயெல்லாம் நடத்தாமல், ஏன் வைக்கத்தில் நடத்தவேண்டும் என்று கேட்கிறார். உயர்ஜாதிக்காரர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்கிறார்.
எந்த இடத்தில் பாதிப்பு இருக்கிறதோ, அங்கேதானே போராட்டத்தைத் தொடங்குவார்கள். அதன்மூலமாக அந்தப் பிரச்சினை எல்லா இடங்களிலும் இருக்கக்கூடாது என்பதுதான் போராட்டத்தினுடைய நோக்கமாகும்.
வைக்கம் போராட்டத்தை காந்தியார் விரும்பவில்லை
எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல முடியாது; அப்படி சொன்னால், பல செய்திகளை என்னால் சொல்ல முடியாது. இந்த விவரங்கள் எல்லாம் அந்த புத்தகத்தில் இருக்கின்றன; யாருக்காவது எங்களுடைய கருத்து தவறு என்றால், எழுதுங்கள், பேசுங்கள் மறுபடியும் நாங்கள் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். பல் வாய்ப்புகள் இருக்கிறது; இந்த அரங்கம் மட்டுமல்ல, பல அரங்கங்கள் இருக்கிறது. இது அறிவார்ந்த சபை. an Intellectual audience; Intellectual audience ஆக இருப்பது மட்டுமல்ல, Intellectual Honesty  இருக்கவேண்டும், அதுதான் மிக முக்கியம்.
நம்முடைய அறிவார்ந்த மக்கள், அறிவு நாணயத்தோடு இந்தப் பிரச்சினையைப் பார்க்கவேண்டும். நமக்கு விருப்பு, வெறுப்பு இருக்கக்கூடாது. ஒரு அறிவு, ஆய்வரங்கம் இது. அந்த ஆய்வரங்கத்தில், காந்தியார் அந்த காலகட்டத்தில், வருணாசிரமத்தைத் தூக்கிப் பிடித்ததினால், அவர் வைக்கம் போராட்டத்தையே விரும்பவில்லை. பிறகு அந்தப் போராட்டம் தவிர்க்க முடியாமல், தொடங்கி விடுகிறது.
வைக்கம் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல;
ஜார்ஜ் ஜோசப்பிற்கு எழுதிய கடிதத்தில் காந்தியார் சொல்கிறார், நீங்கள் கிறிஸ்தவர். அது இந்துப் பிரச்சினை என்று சொல்கிறார்.
நீங்கள் தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும். அது இந்துப் பிரச்சினையா? கோவிலுக்குள் நுழைவது என்றால், இந்துப் பிரச்சினை என்று சொல்லலாம். அது கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல; இன்றைக்குக்கூட படித்த வர்கள் மத்தியிலேயே ஒரு பெரிய குழப்பம் இருக்கிற பிரச்சினை எதுவென்றால், வைக்கம் போராட்டம் என்றால், கோவிலுக்குள் நுழைகின்ற தீண்டாமை ஒழிப்புப் போராட் டம் அல்ல; தெருக்களில் நடக்கக்கூடாது என்று சொன்ன நேரத்தில்தான், அந்தப் போராட்டம் நடைபெற்றது.
கை வீக்கம் குறைகின்றவரையில் நீங்கள் நூல் நூற்கவேண்டாம்!
தந்தை பெரியார் அவர்கள் காந்தியாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலுள்ள வரிகள் வரலாற்றில் வைர வரிகள் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், காந்தியாருடைய  அத்யந்த சீடர் பெரியார். காந்தியாரி டத்தில், மகாத்மா, மகாத்மா என்று அவர் கை வீங்கக்கூடிய அளவிற்கு, நூல் நூற்றுஅவர், உனக்கு கொஞ்ச நாள் களுக்கு விதிவிலக்கு; கை வீக்கம் குறைகின்றவரையில் நீங்கள் நூல் நூற்கவேண்டாம் என்று சொன்னார்.
எல்லாம் காந்தியாரிடம்தான்; காந்தி சொன்னார் என்ப தற்காக, இந்தி பிரச்சாரத்தையே வகுப்பு ஆரம்பித்தவர் 1926 ஆம் ஆண்டிலேயே பெரியார் அவர்கள்தான்.
பெரியாருடைய வாழ்க்கையைப் பார்த்தீர்களேயானால், வேடிக்கையாக இருக்கும். மகாத்மா, எல்லாமே மகாத்மா; வெற்றி பெற்ற நேரத்தில்கூட, மகாத்மா காந்திக்குத்தான் அந்தப் பெருமை என்றுதான் தன்னுடைய தலைவருக்கு அந்தப் பெருமை வரவேண்டும் என்று சொல்லித்தான் அதனை முடித்திருக்கிறார்.
நாய், பன்றி, கழுதை எப்பொழுது சத்தியாகிரகம் செய்து வெற்றி பெற்றன!
அப்படிப்பட்டவர் காந்தியாருக்கு ஒரு கடிதம் எழுதினார்:
மகாத்மா அவர்களே, நீங்கள் சொல்கிறீர்கள்; நான் இங்கே வந்து பார்க்கிறேன், அந்தத் தெருக்களில் நாயும், பன்றியும், கழுதையும் தாராளமாகப் போகிறது. ஆனால், மனிதன் வரக்கூடாது என்கிறானே? இந்த நாய், பன்றி, கழுதை எப்பொழுது சத்தியாகிரகம் செய்து வெற்றி பெற்றன என்று எனக்கு சந்தேகம் என்று கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.
பெரியார் அவர்களுடைய சிந்தனை, பளிச்சென்று தெரிகிற மாதிரி ஒரு கேள்வி கேட்டார்.
காந்தியாருக்கு அப்பொழுதுதான் பொறி தட்டியது; அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
நாய் போகுது, பன்றி போகுது, கழுதை போகுது மிக தாராளமாகப் போகிறது; ஆனால், மனிதன் போகக்கூடாது என்கிறானே! ஈழவ ஜாதி, தீண்டாத ஜாதி, ஒடுக்கப்பட்ட ஜாதி என்று. ஆறறிவு படைத்த மனிதன் போகக்கூடாது என்கிறானே! ஜாதியினுடைய கொடுமையை பாருங்கள், நாயைக் கொஞ்சுகிறான்; நம் சகோதரனைத் தொட்டால், உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை குளிக்கவேண்டும் என்று இன்னமும் சொல்கிறானே! மாசு என்பது என்ன? கரியமில வாயுவிலிருந்துதானே மாசு ஏற்படுகிறது. அதில்லாமல், தொட்டால் தீட்டு என்கிறான்; பார்த்தால் தீட்டு என்கிறான்; நெருங்கினால் தீட்டு என்கிறானே! இதை வைத்துத்தான் பெரியார் அவர்கள் கோபப்பட்டார்.
ஓநாயை எந்தக் காலத்தில் சைவமாக்க முடியும்?
காந்தியாருடைய அணுகுமுறைமீது சொல்கிறேன், இது ஒரு தவறான சிந்தனை அல்லவா!
கேசவமேனன் கருத்தை காந்தியார் ஏற்கவில்லை. நீங்களாக இப்பொழுது ஆரம்பிக்காதீர்கள். அவர்களோடு சேர்ந்து எல்லோருடைய ஆதரவுகளையும் பெற்றுவிட்டு ஆரம்பியுங்கள் என்றார்.
ஓநாயை சைவமாக்கிவிட்டு, அதற்குப் பிறகு, எல்லோ ரும் சைவப் பிரச்சாரம் செய்யுங்கள் என்று சொல்வதுபோல - ஓநாயை எந்தக் காலத்தில் சைவமாக்க முடியும்?
கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் போராட் டத்தை ஆரம்பித்து, இரண்டு பேரும் தண்டனை பெற்ற னர். அதன் பிறகு அந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நேரத்தில், தந்தை பெரியாருக்கு இரண்டு பேரும் சேர்ந்து கடிதம் எழுதுகின்றனர்.
குளித்தலை மாநாட்டில், பண்ணைபுரத்தில் இருக்கிறார் தந்தை பெரியார்; அந்தக் கடிதம் தந்தை பெரியாருக்குக் கிடைக்கின்றது. அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு, தன்னுடைய உடல்நலக் குறைவினைக்கூட பொருட் படுத்தாமல், அங்கே சென்று தன்னுடைய போராட்டத்தை நடத்துகிறார்.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் முதன்முதலாக நடை பெற்ற ஒரு மனித உரிமைப் போராட்டம் என்ற பெரு மையோ அதுபோலவே, தலைவர் வீட்டுப் பெண்கள் அதிலே கலந்துகொண்டார்கள் என்ற பெருமையும், பெண்கள் கலந்துகொண்டார்கள் என்ற பெருமையும் வைக்கம் போராட்டத்திற்கு உண்டு. அன்னை நாகம்மையார், தந்தை பெரியார் அவர்களுடைய தங்கை கண்ணம்மையார் ஆகியோர் 1924 ஆம் ஆண்டுகளில் பெண்களே வெளி யில் வரக்கூடாது என்றிருந்த காலகட்டத்தில், பெரியாருக் குப் பிறகு அந்தப் போராட்டம் தொடரவேண்டும் என்கிற அளவில், அவரை கைது செய்து சிறையில் வைத்த காலத்தில், நாகம்மையார், கண்ணம்மையார் ஆகியோர் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
கடுங்காவல் தண்டனை பெற்ற தந்தை பெரியார்
போராட்டத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் திருவிதாங்கூர் செல்கிறார். கைது செய்யவேண்டிய அர சாங்கத்தினர் அவருக்கு அரசு மரியாதையை கொடுக் கின்றனர். காரணம் என்னவென்றால், திருவிதாங்கூர் ராஜா அவர்கள், பெரியார் வீட்டில் தங்கியவர்.
உடனே பெரியார் அவர்கள், நான் போராடுவதற்காக வந்திருக்கிறேன்; அதனால், நீங்கள் செல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி விடுகிறார்.
அதனால்தான், முதல் தடவை அவருக்கு இரண்டு வாரம் தண்டனை கொடுக்கிறார்கள். மீண்டும் வெளியே வந்து போராட்டத்தைத் தொடர்ந்ததால், ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை கொடுக்கிறார்கள்.
வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுகிறது. அய்யாமுத்து போன்றவர்கள், இராமநாதன் போன்றவர்கள், பெரியாருடைய ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள். பாரதியார் பாட்டை பாடுகிறார்கள்.
இங்கு தீயர் புலயர்களுக்கும் விடுதலை
பறையர் இங்கு தீயர் புலயர்களுக்கும் விடுதலை
என்றெல்லாம் பாட்டுப் பாடி எல்லா இடங்களுக்கும் இந்தப் போராட்ட விளைவுகளை எடுத்துச் சென்றுகொண் டிருக்கின்ற காலகட்டத்தில்,
அப்பொழுது ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகியோர் சிறைச்சாலைக்குப் போய்விட்டனர். பெரியாரும் இரண்டா வது முறையாக சிறைச்சாலைக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை பெற்று உள்ளே சென்றுவிட்டார்.
சத்ரு சங்கார யாகத்தின் விளைவு!
இந்த காலகட்டத்தில் அரசாங்கத்தின் சார்பில் சத்ரு சங்கார யாகம் நடத்தினார்கள். சத்ரு என்றால் விரோதி; சங்காரம் என்றால் அழிப்பது; யாகம் என்றால், அதில் பூதம் வருமாம். யார் விரோதியோ அவர்களை அழிப்பதற்காக சத்ரு சங்கார யாகம் நடத்தினார்கள். பெரியாரை அழிப் பதற்காக அந்த யாகம் நடத்தப்பட்டது.
பெரியார் சிறைச்சாலையில் இருக்கும்பொழுது நடு இரவில் சங்கு ஊதம் சத்தம் கேட்டது; அங்கிருந்த காவ லரை அழைத்து, என்னப்பா சங்கு ஊதுகிறார்களே? என்றார்.
உடனே அந்தக் காவலர், ராஜா பின்நாடு இறந்து போய்ச்சு என்றான்.
ராஜா செத்துப் போய்விட்டார் என்பதை மலையாள மொழியில் சொல்லியுள்ளார்.
மூட நம்பிக்கை எப்படி திரும்பியது என்றால், பூதம் வந்து ராஜாவை அழித்துவிட்டது. ஆகையால், அவர்களை யெல்லாம் விடுதலை செய்துவிடுங்கள் என்று சொன்னார் கள். ராஜா இறந்து போனதும், ராணி பட்டத்திற்கு வந்தார்கள். பெரியார் விடுதலை செய்யப்பட்டார்.
ஜார்ஜ் ஜோசப் என்ன சொல்கிறார், நான் இதைப் பார்த்தவிதம், இது மனித உரிமைப் போர். இதில் மதத்திற்கு இடமில்லை. மதப் பிரச்சினையல்ல என்றார்.
இப்பொழுது தெருவில் நடப்பதற்கு அனுமதித்தால், கோவிலின் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்று கேட்பார்கள்.
பெரியாரைக் கேட்டார்கள், அய்யாவும், காந்தியாருக்கே அந்தப் பெருமை வரட்டும். கடைசியாக பேசும்பொழுது அவரே போகட்டும் என்றார்.
காந்தியார் கேட்டார், தெருவில் நடப்பதற்கு அனு மதித்தால் கோவிலின் உள்ளே செல்வதற்குக் கேட்பீர்களே, அதற்காக அவர்கள் உத்தரவாதம் கேட்கிறார்கள். கோவி லுக்குள் செல்வதற்காக கிளர்ச்சியை ஆரம்பிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தைக் கேட்கிறார்கள் என்றார்.
நிரந்தரமான ஒரு அடிமைச் சாசனத்தை எழுதித் தரமாட்டோம்!
அது எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும். தீண்டாமை ஒழியவேண்டும் என்று நாம் சொல்கிறோம். கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று அவர்கள் சொன்னால், அதற்கு எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும்? அடுத்ததடவை அந்தக் கட்டம் வரும்பொழுது, கிளர்ச்சி வராது என்று எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும்? இப்பொழுது திறந்து விடுங்கள், இந்தப் போராட்டம் முடிவுறும். அதற்கு மேலே அடுத்தபடியான கட்டம், இனிமேல் நாங்கள் கோவிலுக்குள் போகமாட்டோம் என்று நிரந்தரமான ஒரு அடிமைச் சாசனத்தை எழுதித் தரமாட்டோம் என்றார்கள்.
இது ஆரம்பித்ததினுடைய தாக்கம் நண்பர்களே, இந்தியா முழுவதும் இந்தத் தாக்கம் ஏற்பட்டது. எனவே, இதனை ஒரு மதப் பிரச்சினையாகப் பார்த்தார்கள்; உள்ளூர்க்காரர்கள் மட்டும் அந்தப் பிரச்சினையை பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். பெரியாரையே அழைத்து, திரும்பிப் போங்கள் என்று சொன்னார்கள்; நேரிடையாக காந்தியார் சொல்லவில்லை. ராஜகோபாலாச் சாரியாரைத்தான் முதலில் கேட்டார்கள், நீங்கள் அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கவேண்டும் என்று ஜார்ஜ் ஜோசப் கேட்கிறார்.
போராட்டத்திற்கு தலைமை தாங்க மறுத்த ராஜகோபாலாச்சாரியார் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், என்னுடைய உடல்நிலை சரியில்லை. நான் தலைமை தாங்கமாட்டேன் என்று மறுத்தார். அதற்குப் பிறகுதான் பெரியார் வருகிறார். சீனிவாச அய்யங்கார் அட்வகேட் ஜெனரலாக பின்னாளில் வந்து, நீதிபதியானவர். காங்கிரஸ்காரர்; மயிலாப்பூர்காரர். காந்தியாருக்கு மிக முக்கியமானவர். ஆவடி மாநாடு நடத்திய அம்புஜம் அம்மாளின் தந்தையார் அவர்.
கேரளாவிற்குச் சென்று நீங்கள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும்?
அப்படிப்பட்ட சீனிவாச அய்யங்காரை விட்டு, பெரியாரிடம் சொல்லச் சொல்கிறார் காந்தியார். நீங்கள் திரும்பி வாருங்கள்; நீங்கள் அங்கே சென்று ரகளை செய்யாதீர்கள். 15 நாள்களாக அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறீர்கள். அந்தப் போராட்டத்தை அவர் கள்தான் நடத்தவேண்டும். கேரளாவில் நடைபெறுகின்ற பிரச்சினைக்கு கேரளக்காரர்கள்தான் போராட்டம் நடத்தவேண்டுமே தவிர, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கின்ற நீங்கள் ஏன் நடத்தவேண்டும்? அதைத் தவறாக நினைக்கிறார்கள் என்றார்.
இதற்கு என்ன எல்லைக் கோடு! மனித உரிமைகளுக்கு என்ன எல்லைக் கோடு. அவர்கள் போராட்டம் நடத்தி, எல்லோரும் சிறைச்சாலைக்குப் போய்விட்டார்கள். எனக் குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நான் இந்த அக்கிர மத்தை சகித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். தீண்டாமை ஒழிக்கவேண்டும் என்று நாம் சொல்கிறோமே என்றார். இதிலிருந்துதான் காந்தியாருக் கும், பெரியாருக்கும் கூட கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பிரச்சினையில் கருத்து மாறுபாடு ஏற்பட்டது.
(தொடரும்)

-விடுதலை,11.2.15,பக்4



வைக்கம் போராட்டம் முடிவதற்கு முன்னதாகவே
தந்தை பெரியார் புறப்பட்டு ஈரோடு வந்தாரா?
பொய்யர்களுக்குத் தமிழர் தலைவர் பதிலடி

சென்னை, பிப். 12- வைக்கம் போராட்டம் முடிவதற்கு முன்னதாகவே பெரியார் புறப்பட்டு ஈரோடு வந்தாரா? என்ற பொய்யர்களுக்கு பதிலடி கொடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
5.12.2014 அன்று சென்னை பல்கலைக் கழகத்தில் நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வரலாற்று பரிமாணங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அரிஜன நல சேவா சங்கம்
தீண்டாமை ஒழிப்பு என்ற பிரச்சினையில்கூட, தந்தை பெரியாருடைய அணுகுமுறைக்கும், காந்தியாருடைய அணுகுமுறைக்கும் இரண்டு பேரும் தலைவர், சீடராக இருந்தாலும்; வேறுபாடு அதிலிருந்து முளைத்தது. எப்படி? அரிஜன நல சேவா சங்கம் என்று சொல்லி, அவர்களுக்குத் தனிக் கிணறு, தனிக் கோவில், தனி இடம்; மற்றவை எல்லாம் தனியாகத் தரவேண்டும் என்று காந்தியார் சொன்னார்.
பெரியார் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து நான் இந்தத் திட்டத்தை செய்வதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் என்னவென்றால், தனியாகக் கிணறு வெட்டினால், அதற்காக மானியம் கொடுத்தால், அது ஆதிதிராவிடர் கிணறு என்றுதான் ஆகுமே தவிர, பொதுக்கிணறு ஆகுமா? ஜாதியை ஒழிக்க முடியுமா? தீண்டாமையை ஒழிக்க முடியுமா? எல்லோரும் ஒரே கிணற்றில் தண்ணீர் எடுத்துக் குடித்தால், அவன் என்ன செத்துப் போய்விடுவானா? என்று கேட்டார் தந்தை பெரியார். ஆகவே, பொதுக்கிணறுதான் தேவை என்றார்.
இந்தப் பொதுப் பிரச்சினை, இதனுடைய தாக்கம் எந்த அளவிற்கு வந்தது என்று சொன்னால் நண்பர்களே, உடனடியாக சுசீந்திரத்தில் இந்தத் தாக்கம் ஏற்பட்டது. அதை, எனது நினைவுகள் என்ற பெயரால், நம்முடைய அய்யா முத்து அவர்கள் எழுதியிருக்கிறார் 1926 ஆம் ஆண்டு.
வைக்கம் சத்தியாக்கிரகம் முடிந்தவுடன், அடுத்தபடியாக, கன்னியாகுமரிக்குச் செல்கின்ற வழியில் சுசீந்திரம் இருக்கிறது. அந்த சுசீந்திரத்தில் மிக முக்கியமாக இருக்கின்ற கடவுள்களுக்குப் பெயர், தாணுமாலயன் என்று சொல் வார்கள். தாணு, மால், அயன் மூன்றையும் இணைத்திருக் கிறார்கள். தாணு - பிரம்மா; மால் - விஷ்ணு; அயன் - சிவன்.
அங்கேயும் இந்தப் போராட்டம் தெளிவாக வெளியே வந்திருக்கிறது. இதைத் தெளிவாகவே அய்யா முத்து அவர்கள், பெரியார் அவர்களோடு வைக்கம் போராட்டத் தில் இருந்ததுதான் காரணம்.
தாணுமாலயன் கோவிலிலும் போராட்டம்
அதற்கு ஒரு வாய்ப்பை சொல்கிறார், சுசீந்திரம் என்ற ஊரின் நடுவில், தாணுமால்அயன் கோவில் இருக்கிறது. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே மூர்த்தியாக அமர்ந்திருக்க, அரும்புகழ் பெற்ற ஆலயம் என சொல்லப் படுகிறது. இந்த மும்மூர்த்திகளின் சிருஷ்டிகளான மக்களில் சிலர், பறையர், புலையர், தீயர் எனப்படும் ஜாதியினரை, சுசீந்திரத்துப் பாதைகளில் நடமாடக் கூடாது எனத் தடை செய்திருந்தனர். அம்மக்கள் காளை மாட்டுவண்டிகளில் பாரம் ஏற்றிச் சென்றனர். ஊரின் வெளிப்புறத்தில் வண் டியை நிறுத்திவிடவேண்டும். உயர்ந்த ஜாதிக்காரனைத் தேடிப்பிடித்து, அவனுக்குக் கூலி கொடுத்து, வண்டியை ஊருக்குள் ஓட்டிச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது.
தாணுமாலயன் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள தெருக் களில், பன்றிகள், நாய்கள், கழுதைகள் போன்ற மிருகங்கள் நடமாடலாம்; மல, ஜலம் கழிக்கலாம். ஆனால், மனித குலத்தவர்களில் சிலர் அங்கு போகவோ, தாணுமால யனைத் தரிசிக்கவோ கூடாது என்று ஒரு சட்டம்; இந்து மதத்தை அப்படி ஒரு காலக்கேடு பற்றியிருந்தது. வைக்கம் போர் வெற்றிகரமாக முடிந்த பின், அந்த சுசீந்தரம் போர் தொடங்கப் பெற்றது. கோட்டாறு டாக்டர் எம்பெருமாள் நாயுடு அவர்களும், அவர்கள் சகாக்கள் பலரும் கூடி யோசித்து, சுசீந்திரத்துப் போரை ஆரம் பித்தார்கள் என்று எழுதியிருக்கிறார்.
எனவே, வைக்கம் போராட்டத்திற்குப் பெரியாரைப் போகக்கூடாது என்று சொன்னார்கள்; பெரியார் இரண்டு முறை சென்று அந்தப் போராட்டத்தை நடத்தினார். அதற்காக ஆறு மாத கடுங்காவல் தண்டனை பெற்றார். ராஜா இறந்த பின், பெரியார் விடுதலை செய்யப்பட்டார். காந்தியார்தான் கடைசியாக ராணியிடம் சென்று பேசு கிறார்; அந்தப் பெருமை தன்னுடைய தலைவருக்கு வர வேண்டும் என்பதற்காக, காந்தியாரை முன்னிலைப்படுத் தித்தான் அந்தப் போராட்டத்தைத் தந்தை பெரியார் முடித்தார். இதனுடைய தாக்கம் எந்த அளவிற்கு வந்தது என்றால், அந்த மாநிலத்தினுடைய இன்னொரு பகுதியுடன் நிற்கவில்லை.
ஏனென்றால், பல பேர் அதனை நினைத்துப் பார்க்க வில்லை. என்னுடைய கையில் இருப்பது நான் ஏற்கெனவே கூறியதைப்போல, பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்பற்றி Baba Saheb Dr.Ambedkar Life and Mission என்று தனஞ்செய்கீர் எழுதிய புத்தகம்.
அந்தப் புத்தகத்தின் 63 ஆம் பக்கத்தில் மிகத் தெளிவாக இருக்கின்ற ஒரு செய்தி:
The most outstanding event of the year, concerning the survey of the depress what you sathyagraha are you passive resistance sponsored by Ramasamy Naicker a non-brahmin leader at vaikkom in the trivam for indicating the rights of the untouchable rocks confident country. is moral pressure and spirit ............effect.
அதனுடைய தாக்கம், அதனுடைய அறவழிப்பட்ட தாக்கம் இருக்கிறதே, அது எவ்வளவு பெரிய தாக்கத்தை எவ்வளவு சிறப்பாக உருவாக்கி இருக்கிறது என்று சொன்னால், தனசெய்கீர் சொல்கிறார், மிகவும் ஆதாரப் பூர்வமாக சொல்கிறார். அம்பேத்கர் அப்பொழுதுதான் வந்திருக்கிறார். மனித உரிமைகளுக்கான அமைப்புகளை உருவாக்கி, ஒரு விழிப்புணர்வை உருவாக்கவேண்டும் ஒடுக்கப்பட்டோர் மத்தியில். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் எல்லாரையும் இணைக்கிறார். இணைத்து அவர் செய்கின்ற நேரத்தில், அவருக்கு சில சிந்தனைகள். அப்பொழுது அவர் நடத்திய பத்திரிகை, வாய் பேச முடியா தவர்களுடைய குரல் மகாராஷ்டிராவில், மூக் நாயக் என்ற பத்திரிகை. அந்தப் பத்திரிகையில் அவர் எழுதுகின்றார்,
Ambedkar was watching these developments very carefully; He referred to be a females later. very touching the in one of the editorials on view of magoth satyagraha.
அம்பேத்கருக்கு போராட்ட உணர்வை தூண்டிய தந்தை பெரியார்
மகாராஷ்டிராவில் உள்ள மகோத் என்கிற இடத்தில் குளத்தில் இறங்கக்கூடாது என்று சொன்னார்கள். நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் வாருங்கள் என்று அம்பேத்கர் அழைத்துச் சென்றார். அதற்காக அவர் மீது வழக்குப் போட்டார்கள். அது ஒரு வைக்கம் போரட்டத் தைப்போலவே, மகாராஷ்டிராவில், வடக்கே நடைபெற்ற மிகப்பெரிய ஒரு போராட்டம்; மனித உரிமைப் போராட் டங்களில், இந்த மகோத் குளம் போராட்டம் இருக்கிறதே, அந்தப் பகுதி மிக முக்கியமானதாகும்.
அந்தப் போராட்டத்திற்கு மிக அடித்தளம் அமைத்து, இப்படி ஒரு போராட்டத்தை மக்களை அழைத்துச் செய் யலாம் என்கிற எண்ணத்தை எங்கிருந்து பாபா சாகேப் அம்பேத்கர் பெற்றார் என்றால், வைக்கம் சத்தியாகிரகத்தி லிருந்து பெற்றார்; தந்தை பெரியார் அவர்களுடைய அந்தக் கருத்து, எப்படியெல்லாம் இந்தியா முழுவதும் மனித உரிமைப் போராட்டத்திற்கு அடித்தளம் வகுத்தது.
வைக்கம் வீரர் என்று பட்டம் கொடுத்தவர் திரு.வி.க.
எனவே, வைக்கம் சத்தியாகிரகத்துப் போராட்டம், அவர்களுக்கு மட்டும் உரிமையை வாங்கித் தரவில்லை. சுசீந்திரத்து மக்களுக்கு மட்டும் அது பரவவில்லை. அது இந்தியா முழுவதும் எதிரொலித்தது. அதனுடைய பலன் பூத்து, காய்த்து, கனிந்தது என்பதுதான் முக்கியம்.
அந்த அடிப்படையில் மிக அற்புதமான விளைவு களைத் தெளிவாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்களுக்கு, வைக்கம் வீரர் என்கிற பட்டத்தைக் கொடுத்தவர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்தான். நன்றியோடு பெரியாரை நினைக்கும் மலையாள மக்கள்
ஆனால், அப்படிப்பட்டவரை, திடீரென்று இந்த நாட்டிலுள்ள சில ஊடகங்கள், பெரியாருக்கும், வைக்கத் திற்கும் சம்பந்தமேயில்லை. இவர்கள் சும்மாவாவது வைக் கத்தைப்பற்றி பேசுகிறார்கள் என்றார்கள்.
ஆனால், இங்குள்ள சிலர் விஷமம் செய்தார்களே தவிர, கேரளத்து நண்பர்கள், மலையாளத்துப் பகுதியில் இன்றைக்கும் இருக்கின்ற நண்பர்கள் நன்றி உணர்ச்சி யோடு பெரியாரைப் பார்க்கிறார்கள்; பெரியார் இயக்கத்தை அவர்கள் நேசிக்கிறார்கள். பெரியார் கொள்கையால் நாங்கள் உரிமை பெற்றோம் என்று. அதற்கு என்ன அடையாளம் என்றால், மூன்று அடையாளங்களைச் சொல்கிறேன்.
பெரியார் அவர்கள் இருந்த காலத்தில், திடீரென்று ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த சங்கர் அவர்கள் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தார் கேரளத்தில்.
இங்கே காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டம். அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்தில்,
டி.கே.மாதவா மெமோரியல் காலேஜ்
திருச்சி பெரியார் மாளிகையில் நாங்கள் இருந்த பொழுது, நான்கு, அய்ந்து நண்பர்கள் பெரியாரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். டாக்டர் மதுசூதனன் என்ற நண் பருடன் மற்ற நண்பர்களும் சேர்ந்து வந்தார்கள். கேரளத்தில் உள்ள மாவல்லிக்கரை என்ற ஒரு பகுதியில், டி.கே.மாதவா மெமோரியல் காலேஜ் என்று சத்தியாகிர கத்தை முதலில் தொடங்கிய, அதற்கு அடித்தளமாக இருந்த டி.கே.மாதவன் பெயரில் மெமோரியல் கல்லூரியை வைத்திருக்கிறார்கள்; பள்ளிக்கூடங்களை வைத்திருக் கிறார்கள். அந்தக் கல்லூரி யில், புதிதாக ஒரு கூடத்தை பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட அந்த கூடத்தை திறக்க வேண்டும் என்று அய்யாவிடம் கேட்டார்கள்.
அவர்கள் அய்யாவிடம், அய்யா, வைக்கம் போராட் டத்தை நீங்கள் நடத்தும்பொழுது, நாங்கள் எல்லாம் சிறிய பிள்ளைகள். டி.கே.மாதவனை நீங்கள் அறிந்தவர்கள். ஆகையால், அந்தக் கூடத்தை நீங்கள் வந்துதான் திறந்து வைக்கவேண்டும். ஆகவேதான் நாங்கள் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறோம் என்றனர்.
பெரியார் அவர்கள் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு, கேரளாவில் உள்ள மாவல்லிக்கரையில் சென்று, டி.கே.மாதவா மெமோரியல் கல்லூரியில் உள்ள அந்தக் கூடத்தைத் திறந்து வைத்தார். இந்து பத்திரிகையில் வெளிவந்த செய்தி என்ன வென்றால், வைக்கம் சத்தியாக்கிரகம் நடைபெற்று ஓராண்டு கழித்து, வைக்கம் சத்தியாக்கிரக வெற்றி விழா என்று கொண்டாடினார்கள். அதற்கு யார் தலைமை தாங் கியது என்றால், மன்னத்துப் பத்மநாதபிள்ளை அவர்கள். கேளப்பன் நாயர் அவர்கள் எல்லோரும் பாராட்டினார்கள்.
பச்சை அட்டைக் குடிஅரசில் உள்ளன
திருவிதாங்கூர் மகாராணி அவர்கள் நமக்கு இப் பொழுது அளித்துள்ள சில சவுகரியங்கள், மறுபடியும் பிடுங்கிக்கொள்ளும்படி, தமிழ்நாட்டு பிராமணர்களை திவான் கைவசப்படுத்திக் கொண்டு சூழ்ச்சி செய்து வருகிறார் என்று சொல்லி, சி.கே.மாதவன் அந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். 29.11.1935 பச்சை அட்டைக் குடிஅரசில் இவை இருக்கின்றன.
அதுபோலவே, பெரியார் அவர்கள் அந்தக் கூட்டத்தில் பேசுகிறார்.
தனக்கும், தன் மனைவிக்கும் செய்த உபசாரத்திற்காக நன்றி செலுத்துவதோடு, சத்தியாகிரக இயக்கத்தின் வெற்றி பற்றியும், தோல்வியைப்பற்றியும் தெரிந்து கொள்ள அதற்குள் காலம் வந்துவிடவில்லை என்றும், தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களை, சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்பொழுது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன்வந்திருப்பதைப் பார்த்தால், சத்தியாகிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது விளங்கும் என்று சத்தியாகிரக ஆரம்பத்தில், பிராமண கட்சியிலிருந்தவர்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறார்கள் என்று பெரியார் பேசினார்.
அங்கேகூட, காந்தியாரை முன்னிலைப்படுத்திக் கொண்டுதான் சென்றார்கள் என்பது மிக முக்கியம்.
பெரியாரின் பங்களிப்பு இல்லையானால்...
எனவே, பெரியாருடைய பங்களிப்பு இல்லையானால், அந்த விழாவிற்கு, பெரியாரையும், நாகம்மையாரையும் அழைத்து, அவ்வளவு பெரிய வெற்றி விழாவை அடுத்த ஆண்டு, அதே திருவனந்தபுரத்திலேயே வைக்கம் பகுதியிலேயே சிறப்பாக நடத்தியிருக்கமாட்டார்கள். அடுத்தது, அந்த நன்றி உணர்ச்சியை பல ஆண்டுகாலம் நினைவில் வைத்துக்கொண்டு, பெரியாரை அழைத்து, சி.கே.மாதவ மெமொரியல் கல்லூரியில் ஒரு கூடத்தைத் திறக்கச் சொல்கிறார்கள்.
அதைவிட இன்னொரு ஆதாரம் என்னவென்று சொன்னால், 1974 ஆம் ஆண்டு வைக்கம் சத்தியாகிரகத் தினுடைய பொன்விழா ஆண்டு - 50 ஆம்  ஆண்டு விழாவைக் கொண்டாடும்பொழுது, ஒரு வாரம் அந்த விழா நடைபெற்றது. அந்த விழாவைத் தொடங்கி வைப்பதற்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரை அழைத்தார்கள்நிறைவு செய்வதற்கு அன்னை மணி யம்மையார் அவர்களை அழைத்தார்கள் என்பதை மகிழ்ச் சியோடு இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
வைக்கத்தைப் பார்க்கின்ற முதல் வாய்ப்பு கிடைத்தது எனக்கு!
எவ்வளவு நன்றி உணர்ச்சி உள்ளவர்கள் கேரளத்து மக்கள்; அதிலும் குறிப்பாக வைக்கத்துப் பெருமக்கள். அன்னை மணியம்மையார் அவர்களாடு நானும் சென் றிருந்தேன். அப்பொழுதுதான் வைக்கத்தைப் பார்க்கின்ற முதல் வாய்ப்பு கிடைத்தது.
அதில் எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய வியப்பு என்னவென்றால், வைக்கம் சத்தியாகிரகப் போராட் டத்தில் ஈடுபட்ட அத்தனை தலைவர்களுடைய பெய ராலும், பொதுவாக கேரளத்து நண்பர்கள் மிகவும் எளி மையானவர்கள்; ஆடம்பரத்தைப் பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை. இதை நாம் கற்றுக்கொள்ளத் தவறியது; கற்றுக்கொள்ளவேண்டியதாகும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், வைகுந்த்பட் என்ற நண்பர், அவர் சேர்மன் ஆஃப் தி  வைக்கம் முனிசிபா லிட்டி அவர் நமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அன்னை மணியம்மையாருக்கு வரவேற்பு கொடுக்கிறோம் என்று அழைத்துச் சென்றனர். ஊருக்குள் நுழையும்போதே, முதலில் பெரியார் ஈ.வி.ராமசாமி ஜெஸ் என்றுதான் போட்டிருந்தார்கள்.  முதலில் யாருக்கு மரியாதை செலுத் தினார்கள் என்றால், பெரியாருக்குத்தான் வளைவு போட்டு செய்திருந்தார்கள். பிறகு கேசவமேனன் அவர்களுக்கு, அடுத்து மற்றவர்களுக்கு.
பாரிஸ்டர் கேசவமேனன்
கேசவமேனன் அவர்கள் சோசியலிஸ்ட். தந்தை பெரியார் அவர்களிடத்தில் மிகவும் பாங்காக இருந்த வர்கள். பிறகு அவர் மலேசியாவிற்குச் சென்று பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். பிரபலமான வழக்குரைஞர் பாரிஸ்டர் கேசவமேனன் அவர்கள். அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை எழுதியிருக்கிறார். அதில் தான் பெரியார் அவர்களைப்பற்றி சொல்கிறார்,
நமக்காக பெரியார் அவர்கள் கைகளிலும், கால் களிலும் இரும்புச் சங்கிலியை மாட்டிக்கொண்டு, கல் உடைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கை எப்படிப் பட்டது? ஈரோட்டு ராமசாமி நாயக்கர் அவர்கள் நமக்காக அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் உருக்கமாக எழுதியிருக்கிறார்.
இன்னுங்கேட்டால், இதில் வேடிக்கை என்னவென் றால், பெரியார் கணக்குக் காட்டவில்லை என்றெல்லாம் அன்றைக்கு எழுதினார்கள்.
வைக்கத்திற்குச் சென்றதை கணக்குக் காட்டவில்லை பெரியார் என்றனர். பெரியார் அவர்கள் கைப்படவே எல்லா கணக்குகளையும் வைத்திருக்கிறார்கள். அய்யா அவர்கள் எவ்வளவு கவனத்தில் இருக்கிறார் என்பதை, நாங்கள் மலரில் எடுத்துப் போட்டுள்ளோம். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டிக்குக் கடிதம் எழுதி, என்னென்ன செலவு வகையறா என்பதை, பெரியார் வைத்த ஆவணம் இருக்கிறதே, இன்றைக்கும் பாதுகாப்பாக இருக்கிறது என் பதை உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டத்தை நடுவில் விட்டுவிட்டு வரவில்லை பெரியார்
இன்னொரு செய்தியையும் இங்கே சொல்கிறேன்.
முதலில் பெரியாருக்குப் பங்களிப்பு இல்லை என்றார்கள். பிறகு, ஆறு மாத சிறைத் தண்டனை பெற்று, நான்கு மாதத்திலேயே விடுதலை செய்துவிட்டார்கள். உடனே பெரியார் அவர்கள் போராட்டம் முடிவதற்கு முன்பாகவே, ஈரோட்டுக்கு வந்துவிட்டார் என்று சொன்னார்கள்.
இரண்டிற்கும் முரண்பாட்டைப் பாருங்கள். பங்களிப்பே இல்லை என்று சொன்னவர்கள், போராட்டத்தை நடுவில் விட்டுவிட்டு வந்துவிட்டார் என்று சொன்னால், என்ன அர்த்தம்? அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் என்றுத னே அர்த்தம்.
அந்தப் போராட்டத்தை நடுவில் விட்டுவிட்டு வர வில்லை தந்தை பெரியார் அவர்கள். அதைப்பற்றிய ஒரு செய்தியையும் கூட, கு.வெ.கி. ஆசான் அவர்கள் எழுதிய புத்தகத்தில், என்னுடைய புத்தகத்திலிருந்து எடுத்து பதிவு செய்துள்ளார். பெரியார் அவர்கள் வைக்கத்திலிருந்து ஈரோட் டுக்கு வந்ததும்; குருதேவதர்மம் என்ற பத்திரிகையில் தவறான செய்தி வந்திருப்பதை, அவர் மறுத்து சொல்லியிருக்கிறார்.
வைக்கம் போராட்டம் முடிவு பெறுவதற்கு முன்பே, பெரியார் தமிழகம் வந்துவிட்டார். அதன் பிறகு, பல மாதங் கள் கழித்துத்தான், வைக்கம் போராட்டமே முடிவிற்கு வந்தது. வைக்கம் போராட்டத்தை இடையிலே விட்டு விட்டு, மேற்கொண்டு அக்கறை காட்டாமல் பெரியார் இருந்துவிட்டார் என்ற தொனிக்கு உட்பொருளுக்கு இந்த வரிகள் இடம்தருவதால், இன்றியமையாத செய்திகள் சிலவற்றை சொல்லவேண்டி இருக்கிறது.
அரசு எதிர்ப்பு, கவிழ்ப்பு வெறுப்பு!
பெரியார் ஈரோட்டிற்கு வந்ததும், 1924 செப்டம்பர் 12 இல் காவலர்கள் அவரை கைது செய்து, சென்னைக்குக் கொண்டு சென்று, சில நாள்கள் சிறையில் வைத்திருந்து, அவர்மீதிருந்த வழக்கை நடத்தினர். பெரியார் வைக்கம் செல்லும்முன், கதர்ப் பிரச்சாரம் செய்து வந்தபொழுது, 8.3.1924 இல் சென்னை மயிலாப்பூர் மந்தைவெளியில் ஒரு சொற்பொழிவாற்றினார். அதற்காக அவர்மீது அரசு எதிர்ப்பு, கவிழ்ப்பு வெறுப்பு, கிளாஸ் ஸ்டேட்மெண்ட்  153-, 124-ஏ என்ற இரு பிரிவின்கீழ், சென்னை அரசு வழக்குத் தொடர்ந்தது.
வழக்குத் தொடர்ந்ததினால், பெரியார் வந்ததும், கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் அவர்கள் உடனடியாக ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
திரு.வி.க. அவர்கள் பெரியாரைப்பற்றி என்ன எழுதினார்?
திரு.வி.க. அவர்கள் எழுதிய ஒரு செய்தியை சொல்லு கிறேன்:
ராயப்பேட்டையில் பெரியார் தங்கினார். ஓரிரவு முகாந்த நிலையத்தில், அவர் ஒரு திண்ணையில் உறங் கினார். நான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். 11 மணிக்கு மழை தொடங்கியது. கண்கள் மூடியபடியே இருந்தன. 4 மணிக்கு மழை நின்றது; 6 மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். மழை பெய்தது தெரியுமா என்று கேட்டேன். மழையா? என்றார். ஈ.வெ.ரா.வைத் தீண்டியுள்ள பாம்பு, 124-, வழக்கு நடப்புக் காலம்; அந்த நிலையில், நண்பருக்குக் கவலையற்ற உறக்கம். அவர் மனம் பொன்னா? சஞ்சலம் அடைந்ததா என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன் என்று திரு.வி.க. சொல்கிறார்.
இந்த நேரத்தில் அன்னை நாகம்மையார் வெளியிட்ட அறிக்கை, சுயமரியாதை இயக்கத்தை பெரியார் வெளிப் படையாகத் தோற்றுவிப்பதற்கு முன்பே, அவர் உள்ளத்தில் அது உறுதியான நிலை பெற்றுவிட்டதை காட்டுகிறது.
வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல், அவருடைய துணைவர் ஈ.வெ.ராமசாமி, சென்னை அரசால் கைது செய்யப்பட்டிருந்தாலும், அதற்குத் தேவையான செயல்களிலும், உதவிகளிலும் மக்கள் தொடர்ந்து ஈடுபாடு கொள்ளவேண்டும் என்றும், அரசியல் செயல்பாட்டை விட, சமுதாய சீரமைப்பே அவருக்குப் பிடித்தமானதென்றும் அம்மையாரின் அறிக்கை சொல்லியது.
எனவே, கடைசி தொகுதியில், அவர் முடித்து வைக் கின்ற காலகட்டத்தில் இல்லை. அதைத் தவறாக திசை திருப்புவதற்கு முயற்சி செய்தார்கள். அது தவறானது என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், நாகம்மையார் அவர்கள் அறிக்கை விடுகிறார்கள்.
நாகம்மையாரின் அறிக்கையை திரு.வி.க. அவர்கள், 1924, செப்டம்பர் 12 ஆம் நாளிட்ட நவசக்தி இதழ் வெளியிட்டது. இது காங்கிரஸ் பத்திரிகையாகும்.
அன்னை நாகம்மையாரின் அறிக்கை
இது வரலாற்றில் இதுவரை பதிவாகாத ஒரு முக்கியமான செய்தியாகும்.
என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலை யானார். இன்று காலை 10 மணிக்கு (11.9.1924) மறுபடியும் ராஜ துரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு வருடத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனைக் கிடைக்கக்கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி, என்னிடம் விடைபெற்று புறப்பட்டுவிட்டார். அவர் திரும்பத் திரும்ப தேச ஒன்றியத்தைப் பொருட்டு, சிறைக்குப் போகவேண்டிய பாக்கியமே பெறவேண்டும் என்றும், அதற்காக அவர் ஆயுள் வளரவேண்டும் என்றும், கடவுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன். அவர் பாக்கியை வைத்துவிட்டுப் போவதாக, நினைத்துக் கொண்டு போகிற, வைக்கம் சத்தியாக்கிரகம் விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து, அது சரிவர அகிம்சா தர்மத்துடன் நடத்தி, அதனை அணுகூலமான முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமாறு, என் கணவரிடம் அபிமான மும், அன்பும் கொண்ட தலைவர்களையும், தொண்டர் களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
- நாகம்மாள்
ஆகவேதான், தந்தை பெரியாருடைய பங்களிப்பு, காந்தியாருடைய சிந்தனை, பாபா சாகேப் அவர்களுக்கு இந்தப் போராட்டத்தினால் ஏற்பட்ட தாக்கம், வரலாற்றில் ஏற்பட்ட மாறுதல்கள், யாகம் என்பது ஒரு பித்தலாட்டம், ஏமாற்று வேலை, அதற்கு எந்தப் பலனும் கிடையாது; அதனால் எதிர்விளைவுகள் இருக்கலாமே தவிர, ஒன்றுமில்லை என்பது நாம் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை. இவை அத்தனையையும் இந்த வைக்கம் போராட்டம் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது.
மேலும் தெரிந்துகொள்ள, மேலும் படியுங்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, இந்தக் கருத்தில் மாற்றங்கள் இருந்தால், தெளிவுபடுத்தச் சொல் லுங்கள், இன்னும் ஆதாரங்களைக் கொடுக்கிறோம் என்று சொல்லி, வரலாற்றில் பதிவு செய்யுங்கள்; வரலாறாகவே பதிவு செய்யுங்கள்; புராணங்கள் வரலாறுகள் அல்ல; புராணங்கள், இதிகாசங்கள் வரலாறுகள் அல்ல. நிகழ்வுகள்தான் வரலாறு. நிகழ்வுகளை விட்டுவிட்டு, புராணங்களைப் புதுப்பிக்கின்ற போக்கு இருக்கக்கூடாது. இன்னும் புதுப்பிக்கவேண்டிய, இடம்பெறவேண்டிய நிகழ்வுகளே ஏராளம் வரலாற்றில் இருக்கும்பொழுது, வெறும் குப்பைகளைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு பக்கத்தில் வைரங்கள் கொட்டிக் கிடக்கின்றன; இன்னொரு பக்கத்தில் கோமேதகக்ஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் வைரங்களைத் தேடுங்கள்; குப்பைகளைப் போய் ஆராயாதீர்கள்; குப்பைகளைக் கொட்டவேண்டிய இடத்தில் கொட்டுங்கள், அதுதான் மிக முக்கியம் என்று கேட்டு விடைபெறுகிறேன், வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை,12.2.15,பக்4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக