எங்கள் கவலையெல்லாம் மக்களிடத்தில் ஒரு புதிய உணர்ச்சி ஏற்படவேண்டும். மாறுதல் வேண்டும். மக்களிடத்தில் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றில் காட்டுமிராண்டித்தனமான புத்தி இருக்கிறது. இது மாற வேண்டும் என்று கருதி அதற்காகப் பாடுபடுகிறோம். எங்கள் கட்சிக்குப் பெயர் தமிழர் கட்சியாகும். தமிழர் கட்சியின் லட்சியம் தமிழர் நலன் பற்றியதேதான். மற்ற எந்தக் கட்சிக்கும் தமிழர் நலன் பற்றிக் கவலையில்லை.
காங்கிரஸ்காரர்களைக் கேட்டால் தமிழ் -தமிழ்நாடு - தமிழர்கள் என்று பிரித்துப் பேசாதே. எல்லோரும் அண்ணன் தம்பிகள் -_- எல்லோரும் சமம் - பிரிக்கக்கூடாது என்பான். இங்குள்ள காங்கிரஸ்காரர் அல்ல,- காங்கிரசை ஏற்படுத்தியவனே செய்த ஏற்பாடு எல்லோரும் பாரதமாதா புத்திரர்கள் என்று. பாரதமாதாவுக்கு எத்தனை புருஷர்கள்? துலுக்கன், கிறிஸ்துவன், தமிழன் என்று கூறிக்கொண்டேதான் போக வேண்டும். பாரதமாதா என்று மகாத்மாகாந்தி ஆரம்பித்ததே பித்தலாட்டம். மக்களுக்கு உணர்ச்சி ஏற்பட்டு தங்களை முன்னேற்றிக்கொள்ள இருப்பதைத் தடுக்கவே பாரதமாதா ஏற்பட்டது. இந்தக் கருத்தை நான் 30 ஆண்டுகளாகக் கூறிவந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கும் பாரதத்திற்கும் சம்பந்தம் என்ன என்று கேட்டால் இதை ஒரு பத்திரிகைக்காரன்கூட எழுதமாட்டான். எல்லா பத்திரிகைக்காரர்களும் வயிற்றுப் பிழைப்பைக் கருதி பித்தலாட்டம் அயோக்கியத்தனம் செய்பவர்கள்தான். ஒருவனுக்குக் கூட, நாம் தமிழர்கள் நலன்பற்றி பாடுபடணும், எழுதணும் என்ற கவலையே சிறிதுகூட இல்லை. அம்மாதிரி கருதி எழுதக்கூடிய பத்திரிகையே கிடையாது.
நாங்கள் கடவுள் இல்லை என்று கூற உங்களிடையே வரவில்லை. கடவுள் இல்லை என்று கூற அறிவுள்ளவனால்தான் முடியும். அந்த அறிவு உங்களுக்கு வருகிறவரையில் ஏதோ கடவுளை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அது தமிழன் கடவுளாக இருக்கட்டும். பார்ப்பான் கடவுள் வேண்டாம். இப்போதிருக்கிற கடவுள்களில் ஏதாவது தமிழன் கடவுள் உண்டா என்றால் இல்லை, எல்லாம் பார்ப்பனக் கடவுள்களேயாகும்.
அதுபோலவேதான் மதமும். தமிழனுக்கு தமிழன் மதமும் கிடையாது. மற்ற நாட்டில் எல்லாம் அந்தந்த நாட்டின் பெயர் அந்நாட்டின் மொழியின் அடிப்படையில் இருக்கிறது. ஜப்பான் மொழியைக்கொண்ட நாடு ஜப்பான் என்று உள்ளது. ஃபிரான்சு மொழியைக் கொண்ட நாடு ஃபிரான்சு நாடு என வழங்குகிறது. இப்படியே எல்லாமும். ஆனால் தமிழ்மொழியைக்கொண்ட நம் நாட்டிற்கு என்ன பெயர் - இந்தியநாடு. இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் எவ்வளவு சம்பந்தமோ அப்படித்தான் இதற்கும். இந்த எண்ணம் எங்களைத்தவிர வேறு யாருக்காவது ஏற்பட்டு உண்மையில் பாடுபடுகிறார்களா என்றால் கிடையாது.
சேத்தியாதோப்பில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு, (விடுதலை 10.7.1961)
வெளிநாடுகளில் மதம் என்றால் அவர்கள் என்னவென்று புரிந்து கொள்வார்கள். அதைப்பற்றி அவர்களுக்குத் தெரியும். நம் நாட்டில் யாருக்குத் தெரியும்? பொட்டு வைப்பது மதம், நாமம் போடுவது மதம், சேலை கட்டுவது மதம், இந்த வகையான சோறு தின்பது மதம் என்பதுபோன்றுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத நம்பிக்கை கொண்ட பைத்தியக்கார நாடு நம் நாட்டைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மதத்திலேயே வைணவம், சைவம், காளிமதம் என்கிறான். இன்னும் போனால் பேய் மதம் என்றுகூட வைத்துக் கொள்வான்; மனிதனுக்கு அறிவு கொடுக்க வேண்டியது கடவுள். மதம், சாஸ்திரம்தான். இங்கு அப்படி இல்லையே.
வெளிநாடுகளில் மதம் என்றால் அவர்கள் என்னவென்று புரிந்து கொள்வார்கள். அதைப்பற்றி அவர்களுக்குத் தெரியும். நம் நாட்டில் யாருக்குத் தெரியும்? பொட்டு வைப்பது மதம், நாமம் போடுவது மதம், சேலை கட்டுவது மதம், இந்த வகையான சோறு தின்பது மதம் என்பதுபோன்றுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத நம்பிக்கை கொண்ட பைத்தியக்கார நாடு நம் நாட்டைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மதத்திலேயே வைணவம், சைவம், காளிமதம் என்கிறான். இன்னும் போனால் பேய் மதம் என்றுகூட வைத்துக் கொள்வான்; மனிதனுக்கு அறிவு கொடுக்க வேண்டியது கடவுள். மதம், சாஸ்திரம்தான். இங்கு அப்படி இல்லையே.
எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அயோக்கியக் கடவுளாகத்தான் இருக்கின்றன. விரோதிகளைக் கொன்று குவிப்பதும், பெண்ணை அடித்துக் கொண்டு போவதும், பெண்டாட்டி, பிள்ளைகளை வைத்துக் கொள்வதும்தான் நம் கடவுள். ஒவ்வொருவனும் தனக்கு ஏற்றாற்போல், சிவன், பரமன், சக்தி, குமரன் என்று வைத்துக் கொள்ளுகிறான். இவர்கள் எல்லாம் யார்? அப்படி எவனாவது இருந்தானா? அல்லது இருக்கிறானா? என்ன வெங்காயமோ தெரியவில்லை. அப்படி கடவுள் இருப்பதாகக் கூறினான். அவன் எங்கே போய் விட்டான்? கடவுள் கண்ணுக்குத் தெரியாது என்றால் அதற்கு ஏன் பெண்டாட்டி, வைப்பாட்டி, பிள்ளை, ஆறுவேளை சோறு? இவையெல்லாம் எவ்வளவு முட்டாள்தனம்? அடிக்கடி மக்களிடம் வந்துபோன கடவுள் இன்று ஏன் வரக்கூடாது? நாம் அவ்வளவு பாதகர்களா?
சாஸ்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், எவனுக்கு சாஸ்திரம் என்றால் என்ன என்று தெரியும். அதில் அவனைப் பற்றிய மரியாதை என்ன? இதையெல்லாம் யோசிக்கத் தெரியாதா? மதத்தில் ஒரு வேத மதம், என்ன வெங்காய வேத மதம். அதைப்பற்றி யாருக்கு என்ன தெரியும்? அதன் கருத்துகள் படித்தால் சிரிப்பை மூட்டுகின்றன. இவையெல்லாம் விளையாட்டுத்தனமாகவே இருக்கின்றன.
கடவுளிடம் பேசினார் என்கிறான் ஒருவன். இவர் கடவுளைப் பார்த்தார் என்கிறான் இன்னொருவன். அப்படிக் கூறுகிறவன் எதைக் கடவுள் என்கின்றான். எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும், மனிதனைத்தான் சித்தரித்துக் காட்டுகிறார்கள்.
மனிதனுக்கு இருப்பது போன்ற உடலமைப்புகள், உருவமெல்லாம் உணர்ச்சி குணங்கள். கடவுள் மனிதனைப் போன்று ஏன் இருக்க வேண்டுமென்று கேட்க ஆள் இல்லையே? மூட நம்பிக்கைகளை ஒழித்தால்தான் நம்மக்களுக்கு அறிவு வரும். கடவுள் இருக்க வேண்டுமென்றால் யோக்கிய உணர்ச்சிக்கு இருந்துவிட்டுப் போகட்டும். அப்படியில்லாத நிலையில் நீண்ட நாளாக இந்த மூட நம்பிக்கைகள்தானே தலைவிரித்தாடுகின்றன. நம் மக்களுக்கு அறிவு உணர்ச்சி, மான உணர்ச்சி வரவேண்டும் என்பதற்காகப் பாடுபடாமல் சும்மா ஏதோ பேசி காலத்தைக் கழிப்பதால் என்ன நன்மை? அப்படிக் காலத்தை வீணாக்கினால் எப்போது நாம் முன்னுக்கு வருவது?
19.10.1963 அன்று எழும்பூர் பெரியார் திடலில் தந்தை பெரியாரின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தந்தை பெரியார் சொற்பொழிவு, (விடுதலை, 25.10.1963)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக