விடுதலை,வெள்ளி, 14 பிப்ரவரி 2014
கேள்வி: ஒரு பசு மாடு என்ன போட்டால் கறக்கும்?
உண்மை: கறக்காது!...கறக்காது!!... கன்று போட்டால் தான் கறக்கும்! அதாவது கன்றீனாதது எதுவும் பால் கறக்காது! இதுவே உண்மை நிலை.
அப்படியானால், உண்ணாமுலைகளைச் சுமந்ததாகக் கூறப்படும் பார்வதியின் முலைகள் மட்டும் எப்படிச் சுரந்தன? என்ற கேள்வி எழுவது சகஜமே!
பார்வதிக்கு இரு குமாரர்கள் என்பது புராணக்கூற்று. இரண்டும் கர்ப்பத்திலிருந்து பிறவாதவை ஒன்று பார்வதி தம் உடலழுக்கை உருட்டித் திரட்டிப் பிடித்து வைத்ததே பிள்ளையார்! ஆனை முகன்! ஆனை வாய் உண்ணாமுலை! மற்றது பரமசிவனது விந்து தெரித்து அதாவது பார்வதியின் கர்ப்பத்தில் ஊறாமல் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுமுகங்களுடன் பிறந்தது!
அதற்கும் ஆறு கிருத்திகைக் கன்னியர்கள் தான் பாலூட்டியதாகப் புராணமேயொழிய பார்வதி பாலூட்டினாள் என்பதாக இல்லை! ஆறுமுகமும் உண்ணாமுலை! ஆக, இங்ஙனம் அவதரித்த இரு குமாரர்களும் உண்ணாத முலைகளை யுடைய பார்வதிக்கு உண்ணா முலை என்ற ஒரு பெயரும் வந்தது போலும்!
இவ்விருவருக்கும் ஊட்டக் கிடைக்காத முலைப்பால் பாப்பாரச் சம்பந்தனுக்கு மட்டும் ஞானப் பாலாக ஊட்ட எப்படிச் சுரந்தது? சவுண்டி சம்பந்தன், ஞான சம்பந்தன் ஆனது எங்ஙனம்? தேவாரம் பாடியதும் எங்ஙனம்? ஞானப்பால் உண்டதால் பாடினான் என்றால் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எப்பால் உண்டு தேவாரங்கள் பாடினார்கள்? என்பன போன்ற பகுத்தறிவுக் கேள்வி களுக்கு என்ன சமாதனம்?
இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், வயிற்றுப் பிழைப்பாகக் காலட்சேபம் செய்யும் பண்டாரங்கள் ஞானப்பால் உண்டால் பக்திப் பாடல் பாடலாம்; புட்டிப் பால் உண்டால் டப்பா பாட்டுத்தான் பாடலாம்; இக்காலத் தாய்மார்களுக்கு பால் சுரப்பில்லை யென்றும், தாய்க்குலத்திற்கு இழிவையூட்டும் வகையில் உளறித் திரிவதென்றால் எவ்வளவு நெஞ்சுத் திமிர் இருக்கும்? மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக் களைச் சொன்னால் பயனுள்ளதாகவும், நாடு முன்னேறு வதாகவும் அமையும். பண்டாரங்கள் இனியேனும் அறிவு பெற்றுத் திருந்தட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக