சனி, 5 செப்டம்பர், 2015

கொழும்புவில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா

அய்யாவின் அடிச்சுவட்டில் ... 136

பகலவன் பாருக்கே சொந்தம்
கொழும்புவில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள என்னை அழைக்கப்பெற்று அதில் நான் கலந்துகொண்டேன், விழாவானது.
கொழும்பு, பம்பலப்பட்டி சரஸ்வதி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த டாக்டர் கோவூர் அரங்கில் 24.9.1978 மாலையில் தந்தை பெரியாருக்கு, நூற்றாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனது முதல் பயணமும் (இன்றுவரை) இலங்கைக்குச் சென்ற இறுதிப் பயணமும் இதுதான்! முன்னதாகவே விமானம் மூலமாக கொழும்பு விமானநிலையம் வந்தடைந்த என்னை பெரியார் நூற்றாண்டு விழா குழுவினராகிய கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்களான தோழர்கள் நவசோதி எம்.ஏ., சந்திரசேகரன் பி.எஸ்.சி., எஸ்.பி. பாண்டியன், காசிநாதன், கவிஞர் சிவராசன், கம்பளைதாசன் மற்றும் தோழர்கள் வேலணை வீரசிங்கம், அழகுராசா, தியாகராசா உள்ளிட்ட தோழர்களும் மன்ற அமைப்பாளர் ப. சந்திரசேகரன் பி.எஸ்.சி., அவர்களும் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
மாலையில், இலங்கையின் பிரபல தினசரி இதழான வீரகேசரி நிருபர் பேட்டி கண்டார். திராவிடர் கழக பகுத்தறிவு மன்றத்தின் பொறுப்பாளரும் சங்கம் ஏட்டின் ஆசிரியருமான தோழர் மா.செ. அருள் என்னுடன் வந்தார். இலங்கை திராவிடர் கழகத்தலைவர் ஆ.பெ. முனுசாமி அவர்களும், ஆரம்ப கால இயக்க தோழர் இளஞ்செழியனும், அ.தி.மு.க இலங்கை அமைப்பாளர் தோழர் வித்தகன் ஆகியோரும் என்னைச் சந்தித்தனர்.
முதல் நாள் இரவு, திராவிடர் கழகத்தை இலங்கையில் வளர்த்து நிலைநிறுத்திய பெரியார் பெருந்தொண்டர் கு.யா.திராவிடக்கழல் அவர்கள் பல மாதங்களுக்கு முன் மறைந்தார். அவர் இல்லம் தேடிச்சென்று, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி திரும்பினோம். (வசதியற்ற எளிய சூழ்நிலையில் வாழ்ந்த பெருமகன்) பின்பு, கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் சார்பில் மிகச் சிறப்பாக தயாரித்து அச்சிட்ட பெரியார் நூற்றாண்டு விழா மலரை நான் வெளியிட்டு முதல் பிரதியை சுயமரியாதை வீராங்கனை ஞான செபஸ்தியான் (தற்போது இந்த 94 வயது இளைஞர், நமது பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர்), சீதக்காதி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். அடுத்தது, இந்தியப் பேரரசு வெளியிட்ட நூற்றாண்டு விழா அஞ்சல் தலை, மற்றும் குறிப்புகளை நான் வழங்க, மன்றத்தின் அமைப்பாளர் திரு.சந்திரசேகரன், வீரசிங்கம், அழகுராசா உள்ளிட்டத் தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.
பிறகு, விழாவில் உரையாற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள் தொண்டினை நினைவு கூர்ந்து நன்றிப் பெருக்குடன் அய்யாவுக்கு நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்புடன் நடத்தும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி, பாராட்டுத் தெரிவித்து, 1932ஆம் ஆண்டில் அக்டோபர் 17ஆம் தேதி பெரியார் அவர்கள் இலங்கையில் ஆற்றிய பேருரை குறித்தும், அய்யா அவர்கள் எப்படி ஒரு பகுத்தறிவுப் பகலவன் என்பதை விளக்கியும், பகலவன் பாருக்கே சொந்தம் ஒரு ஊருக்கல்ல, நாட்டுக்கு மட்டுமல்ல என்பதையும் பல ஆதாரங்களுடன் விளக்கி உரையாற்றினேன். அய்யா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறவிருப்பது பற்றி அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறு தொழில் அமைச்சரும் பிரபல தொழிற்சங்கத் தலைவருமான திரு. எஸ். கருணாகரத் தொண்டைமான் அவர்களை நான் சந்தித்து உரையாற்றினேன். அவர்களுக்கு அய்யா அஞ்சல் தலை, அய்யா வாழ்க்கை வரலாறு, இலங்கை பேருரை, வைக்கம் போராட்டம் பற்றிய நூல்களை வழங்கினேன்.
யாழ்ப்பாணம் பகுதிகளில் ஜாதிக்கொடுமைகள் உள்ளது. அங்கு உங்கள் பிரச்சாரம் மிகவும் அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். பிறகு நான் பத்திரிகையாளர்களுடன் கொழும்புவில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஒன்றான ஹாலிடே இன் (Holiday Inn) என்ற ஓட்டலின் முதல் மாடியில் இலங்கை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பிரபல வணிக வியாபாரியான வேலணை வீரசிங்கம் செய்த இந்த ஏற்பாட்டில், இலங்கையின் பிரபல நாளேடுகளான வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஈழநாடு, சுதந்திரன், சிந்தாமணி, கலாவல்லி ஆகிய நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அய்யா விழாவன்று, சுயமரியாதை காப்போம், ஜாதியைத் தகர்ப்போம் என மக்கள் கடல் உறுதி பூண்டனர். இந்நிகழ்ச்சியில் எனக்கு ஈடு இணையற்ற வரவேற்பையும் அனைத்து தரப்பும் உள்ள தமிழ்ப் பெருங்குடியினர் நல்கினர். பெருநகரில் நடந்த அந்த நூற்றாண்டு விழாவில் மக்கள் கடல் ஆர்வப் பெருக்குடன் பங்கேற்றது நினைவில் நீங்கா வடுவாக உள்ளது என்பதனை நினைவுப்படுத்துகிறேன்.
-உண்மை,16-.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக