வெள்ளி, 30 அக்டோபர், 2015

கோர்ட்டில் பிரமாணம் - பெரியார்-சித்திரபுத்திரன்-


மேஜிஸ்ட்ரேட்: (சாட்சியைப் பார்த்து) உன் பேரன்ன?
சாட்சி: என் பேர் சின்னசாமிங்கோ.
மே: உன் தகப்பன் பேர் என்ன?
சா: என் தகப்பன் பேர் பெரியசாமிங்கோ.
மே: உன் வயது என்ன?
சா: என் வயசு 36ங்கோ.
மே: உன் மதம் என்ன?
சா: இந்து மதமுங்கோ.
மே: உன் ஜாதி என்ன?
சா: சாதியா?
மே: ஆமா.
சா: சாமி குடியான சாதிதாங்கோ.
மே: சரி, சத்தியமாய்ச் சொல்கிறேன் என்று சொல்லு.
சா: சத்தியமாச் சொல்றேனுங்கோ.
மே: நீ இப்ப சத்தியம் செய்திருக்கிறே, உண்மையைச் சொல்ல வேணும், எது உனக்கு நல்லா தெரியுமோ எதை நீ கண்ணில் பார்த்தாயோ அதைத்தான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை கிடைக்கும் தெரியுமா?
சா: சாமி அப்படியே ஆகட்டுங்கோ. நான் நேர்லே பார்த்ததைத்தான் சொல்லணுமே? காதுலே கேட்டதைக்கூட பெரியவங்க சொன்னதைக்கூட சொல்லக் கூடாதா சாமி?
மே: நேரில் பார்த்ததை மாத்திரம் சொல்லு தெரிந்ததா?
சா: தெரிஞ்சிகிட்டேஞ் சாமி. அப்பளையே (அப்பொழுதே) நாஞ் சொன்னதெயெல்லாம் அடிச்சுப் போடுங்கோ.
மே: எதை அடிக்கிறதுடா?
சா: சாமி பின்னே நாஞ் சொல்லல்லே, எம்பேரு எங்கப்பம் பேரு எம்பட வயசு அதல்லாந்தா.
மே: அதையெல்லாம் நான் எதற்காக அடிப்பது?
சா: எசமாங்கோ "நேர்லே பார்த்ததுதான் சொல்லணு, காதுலே கேட்டது சொல்லக் கூடாது, சத்தியம் பண்ணி இருக்கிறே, பாக்காதது சொன்னா தெண்டிச்சிப் போடுவே" எண்ணு சொன்ணீங்களே. நம்முளுக்கு எனத்துக்குங்கோ அந்த வம்பெல்லாம்.
எங்கப்பெ என்னைப் பெக்க பாடுபட்டதெ பாத்தனா? எங்கம்மாதா என்னைப் பெத்ததெ பாத்தனா? எம்பட வயசைத்தான் நானு எண்ணிகிட்டு வந்தெனா? நமக்கு நேர்லெ ஒணுந் தெரியாது சாமி. நானும் ஒரு எளவையும் பாக்கில்லை. அடீங்கோ! அடீங்கோ!! எளிதினதை எல்லாம் அடிங்கோ. அல்லாத்தையும் அடிங்கோ.
மே: அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் இல்லை. கேசைப் பற்றித்தான் கேட்கப் போகிறேன். அதைப் பற்றி நீ பார்த்ததைச் சொல்லு.
சா: அந்த எளவே நமக்கு வாண்டாம். நம்மொ பாக்காத சங்கதி நம்மாலெ ஒண்ணுஞ் சொல்ல முடியாது. அப்பறம் நாளைக்கு ஒருத்தெ கேப்பானுங்கோ, எதிரி வக்கீலு உனக் கெப்படி தெரியும் எம்பான். அப்பரம் கடசீலே எல்லாம் தகராரா வந்து சேரும். அடீங்கோ! அடீங்கோ!! நாஞ் சொன்னதை யெல்லாம் அடீங்கோ!!! இல்லாவிட்டா நாம் போறே வெளியிலே.
மே: டேய் என்ன? ரம்ப குறும்பு பண்ணுகிறாய். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, இல்லாவிட்டால் உன்னை தண்டித்து விடுவேன். நீ யென்ன பலே போக்கிரியாய் இருக்கிறயே.
சா: இல்லைங்க சாமி! நீங்கத்தானே பாத்ததெச் சொல்லூண்ணு சொன்னீங்கோ!
மே: உஸ். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.
சா: சரி கேளுங்க சாமி. நாம் பாத்ததையும் கேட்டதையும் சொல்லிப்புட்டு போறேன்.
மே: இந்தக் கேசில் உனக்கு என்ன தெரியும்?.
சா: நான் கடவீதிக்குப் போனே, போனனா? கருப்பன் சுப்பனெ அடிக்கப் போனான். அப்போ கருப்பந் தம்பி "அடிடா சுப்பனை வந்தது வரட்டும். மேசத்திரட்டு சுப்பய்யனுக்கு 100 ரூ கொடுத்தா பேசாத உட்டுடுறான்" எண்ணு சொன்னான். கருப்பந் தம்பி ரங்கன் "அடிடா பார்க்கலாம் மேசத்திரட்டு பொண்டாட்டி பாகிரதிகிட்டே 200 ரூ கொடுத்து உன்னை ஆறு மாசம் தண்டிக்கச் சொல்லி மண்ணு செமக்க வைக்கிறேம் பாரு. மின்ன எத்தனையோ தடவை கொடுத்து இருக்கிறேன்" எண்ணு சொன்னா.
பெரிய காத்தடிச்சது கண்ணுலெ மண்ணை ரப்ராப்லெ இருந்ததுங்கோ. கண்ணெ இருக்கி மூடிக்கிட்டே. அப்பறம் என்ன நடந்ததுண்ணு தெரியாதுங்கோ. இப்ப இரண்டு பேரும் பணத்தை வச்சிகிட்டு எசமாங்க ஊட்டுலே காத்து கிடக்கிறாங்களாம்! அம்புட்டுத்தா எனக்குத் தெரியுஞ் சாமி. இதை எளுதிக்கிங்கோ அப்பறம் என்னமோ பண்ணிக்கிங்கோ.
மே: என்ன உளறுகிறாய்?
சா: நானா உளர்ரே. ஊர்லெ சாமி அல்லாரும் அப்படித்தா பேசிக்கிறாங்கோ. என்ன பண்ணுனாலும் மேசத்திரட்டுக்கு பணம் கொடுத்தா உட்டுடுவாங்கோண்ணு கொஞ்சம் பேறா பேசராங்கோ. மேசத்திரட்டு பொண்டாட்டிகிட்டே பணங் கொடுத்தா ஆரையும் தண்டிக்கப் பண்ணலாமுண்ணு பேசராங்க. அம்புட்டுத்தான் நம்முளுக்குத் தெரியும். நா ஒண்ணும் ஔரலே.
கடைசியாக மேஜிஸ்ட்ரேட்டு ஒன்றையும் எழுதிக் கொள்ளாமல் சாட்சியை அதட்டினதற்கு ஆகவும் மரியாதை இல்லாமல் பேசினதற்கு ஆகவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கேசை ராஜி செய்துவிடும்படி கெஞ்சி சாட்சியை வீட்டிற்கு வரச் சொன்னார்.
(1.9.1935 குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய  சுவையான உரையாடல்)
-விடுதலை,29.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக