சனி, 13 பிப்ரவரி, 2016

மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே!


‘இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது. எல்லா மதங்களும் செத்துப் போய்விட்டன.
செத்த பிணங்களே சடங்கு ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியைக் கொடுத்ததுடன், அதைப் பெருக்கிக் கொண்டே வருகிறது.
உண்மையில் எந்த மதக்காரனும் அந்தந்த மதக் கட்டளைப் படி  நடந்து கொள்ளுவதில்லை; நடந்து கொள்ள முடிவதில்லை.
உதாரணமாக, பவுத்தர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லா மியர்கள், இந்துக்கள் என்பவர்களான சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனைக் காணமுடிகின்றதா? முதலாவதாக, வேஷத்திலும் சடங்கிலுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை.
மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும், வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் கூட நிர்ணயத்துடன் நடக்கவோ, ஆசைப்படவோ கூட முடிகின்றவர் காணப்படுவது இல்லை.
இந்த நிலையில் உள்ள மக்களேதான் இன்று தங்கள் ‘மதங்களைக் காப்பாற்ற வேண்டும்,’ ‘மதத்திற்கு ஆபத்துவந்து விட்டது; தவிர்க்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டு குழிதோண்டிப் புதைக்காமல், நாற்றத்தில் அழுந்திக் கொண்டிருக்கிறார்கள்.
மலத்தில் இருக்கிற புழுக்கள் எப்படி மலத்தின் நாற்றத்தை வெறுக்க முடியாமலும், உடலிலுள்ள மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அதே போல் எல்லா மனிதர்களுமே மதப் பிண நாற்றத்தில் புரளுகின்றனர்.
இதனால் உண்மை உணரமுடியாமல் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.
- தந்தை பெரியார்


மெய்ஞானம் எது? பகுத்தறிவு எது?

ஞானம் - மெய்ஞானம் என்றிடில் கடவுளைப் பற்றிய அறிவு என்றும், மோட்சம் அடைவதற்கான வழிகளை அறிதல் என்றும் கூறுவர் மதத்தினர்.
அதாவது, உலக நல்வாழ்வுக்கல்லாததும், இல்லாத ஒன்றிற்கான அறிவு பெறுதல் என்பர்.
இல்லாததைப்பற்றி அறிந்து கொள்வதால் நற்பயன் பயக்குமோ? பலனுக்காகாத கற்பனை கனவு போன்றில்லையா இக்கூற்று? மெய்ஞானம் - பலன் பயக்கும் உண்மையறிவு எது என்று திருத்தக்கத் தேவர் சிந்தாமணியில் விளக்குகிறார்;
‘மெய்வழி தெரிதல் ஞானம்
விளங்கிய பொருள்கள் தம்மை
பொய்வகையின்றித் தேறல் காட்சி
அய்ம்பொறியும் வாட்டி
உய்வகை உயிரை தேயாதொழுகுதல்
ஒழுக்கம் மூன்றாம்’
நல்லது கெட்டதைப் பகுத்தறியும் உண்மை வழியைக் கண்டறிதலே ஞானம் (உண்மை - நல்லறிவு).
பொருள்களின் உண்மையை பொய் வகையில்லாத வகையில் கண்டறிதலே நற்காட்சி. அதாவது, ஒரு பொருளை நல்லதா கெட்டதா என்று தெளிந்து அறிதலே அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியும் காட்சிப் பிரமாண மாகும். தகாத வழிகளில் வாழ்த்தும் உடலின் அய்ம்பொறி களையும் (பட்டினியால் தவத்தால்) வாட்டி,
வாழ்க்கைச் சக்தியான உயிரைச் சிறுகச் சிறுக நலிவிக்காமல், உயிரையும் அவ்வழி உடலையும் பேணி வாழ்தலே நல்லொழுக்கமாகும். அதாவது, தகாத முறைகளை விடுத்து, நல்ல முறைகளில் சம்பாதித்து வாழ்தலே நல்லொழுக்கம் (நற்சீலம்)ஆகும்.
கடவுள் என்பதன் அருளைப் பெற என்று கூறிக் கொண்டு தவம் செய்தலையும், உண்ணா விரதமிருப்பதையும், கண்டிக்கிறார்.
இவை பயனற்றவை. உயிரையும் உடலையும் சிறுகச் சிறுக நலிவித்து விரைவில் சாவைத் தேடிக் கொள்ளும் இயற்கை முரண் செயல் இவை என்பதே இதன் தெளி பொருள்.
ஊன் வாட, உயிர் வாட மெய்க் காவலிட்டு தான் வாட வாட தவம் செய்ய வேண்டாம் என்று திருமங்கையாழ்வாரும் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.
மெய்ஞானம் (நல்லறிவு, பகுத்தறிவு), நற்காட்சி (நல்ல பொருள்களைக் கண்டறிதல்), நல்லொழுக்கம் ஆகிய மூன்றுமே மக்கள் நல்வாழ்வு - இன்ப சுகவாழ்வு எய்துவதற்கு முக்கிய மூன்று பண்புகள். இவற்றை புத்தர் முத்திரையம் என்றும், சமணர் ரத்தினத்திரையும் என்றும் கூறுவர்.
இந்தப் பகுத்தறிவு மெய்ஞானத்தை நன்ஞானம், மதி ஞானம், சுருதி ஞானம், அவதி ஞானம், மன மெய்ஞானம், கேவல ஞானம் என்று அய்ந்தாக விரித்துக் கூறுவர்.
அதாவது, பொதுப்படையான நல்லறிவு (பகுத்தறிவு) புத்தியைக் கொண்டு, நல்லது கெட்டதைத் தெளிந்தறியும் ஆககம் அறிவு - தெளிந்த மதிநுட்பம் ஒரு பொருளோ, விஷயமோ பொருந்துமா, பொருந்தாதா என்று கண்டறியும் அறிவுத் தொல்லைகளை - கெடுதிகளைக் கண்டறியும் அறிவு - மனதால் உண்மையைக் கண்டறியும் சிந்தனை அறிவு (சிந்தனைச் சக்தி) இழித்தன்மையைக் கண்டறியும் அறிவு என்பவனவாம்.
இதன் ரத்தினச் சுருக்கக் கருப் பொருள்; பகுத் தறிவு பெறு என்ற தந்தை பெரியார் அவர்களின் நல்லுரை யேயாகும் - பகுத்தறிவே நல்வாழ்வளிக்கும் என்பதாகும்.
- விசித்திர சித்தன்.
-விடுதலை,11.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக