வெள்ளி, 15 டிசம்பர், 2017

நம் மக்கள் கட்டிய கோயில்களில் அவர்கள் உரிமையோடு செல்ல முடியாமல் பார்ப்பான் தடுப்பதா?

தந்தை பெரியார்

 

தந்தை பெரியாரவர்கள் 21.7.1969 அன்று சிதம்பரத்தில் அறிவுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

எந்த நிலையில் பேசுகிறேன் என்றால் நீங்களெல்லாம் காலையிலிருந்து உட்கார்ந்து மிகச் சலிப்படைந்திருக் கிறீர்கள். என்னுடைய உடல் நலமானது மிக மோசமான நிலையிலிருப்பதோடு மிக வேதனையோடு இருக்கிறேன்; ஆஸ்பத்திரியில் இருந்து இந்நிகழ்ச்சிக்காகவே வந்திருக் கின்றேன்; முடிந்ததும் நேராக ஆஸ்பத்திரிக்குப் போக இருக்கின்றேன்; இது மாநாடு, என்றாலும் மாநாட்டிற்கு வரும் அளவிற்கு  மக்கள் வரவில்லை. நாளைக்கு நான் தலைமை வகிக்கும் படியான வாய்ப்பு இருப்பதால் நாளைக்கு நிறையப் பேச இருக்கின்றேன். நான் பேச வேண்டியது ஒன்றும் பாக்கியில்லை. நீங்களும் கேட்க வேண்டிய அளவிற்குக் கேட்டிருக்கின்றீர்கள். இனி பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை, செயல் முறையில் ஈடுபட வேண்டும். அதற்கு உங்களை எல்லாம் உற்சாகப் படுத்தவே, இது போன்ற மாநாடுகள் கூட்டுக்கின்றோம். அது தான் இம்மாநாடு கூட்டுவதன் இலட்சியமாகும்.

திராவிடர் கழகம் என்றால் என்ன? அதன் கொள்ளை என்ன? அதனால் மக்கள் அடைந்த பலன் என்ன? அது எப்போது எதற்காகத் துவக்கப்பட்டது? என்பது பலருக்குத் தெரியாது. அதை முதலில் விளக்க வேண்டும். 1916-இல் முதன் முதல் தியாகராய செட்டியார், டி எம் நாயர் என்கின்ற இரு கனவான்களால் ஆரம்பிக்கப்பட்டது. காங்கிரஸ், பார்ப் பனர்களின் ஸ்தாபனமாக இருந்து வெள்ளையனுக்குத் துதி பாடியதால் அரசாங்கத்தில் பார்ப்பனர்களுக்கே, பதவி உத்தியோகங்களில் பங்கு பெறுவதைப் பார்த்துப் பார்ப்பன ரல்லாதாரும் உரிமைப் பெற வேண்டும் என்பதற்காக, பார்ப்பனரல்லாதார் இயக்கமாக ஆரம்பிக்கப் பட்டது. இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, பார்ப்பனர் அல்லாதாருக்கு, அரசாங்கம் பதவி உத்தியோகங்களில் பங்கு பெற ஆரம் பித்ததும், காங்கிரஸ் தாங்கள் மக்களின் நல்வாழ்விற்காகத் தொண்டு செய்வதற்காகப் பாடுபடுவதாகவும், பார்ப்பனரல் லாதார் கட்சி - ஜஸ்டிஸ் கட்சி பதவி வேட்டைக்காக உள்ள கட்சியாகும் என்றும், மக்களிடையே பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் பலனாக காங்கிரசிற்குச் செல்வாக்கு ஏற்பட்டது. அப்போது நானும், சிலரும் அதன் நிர்மாணத் திட்டங்களை நம்பிக் காங்கிரசில் சேர்ந்து பிரசாரம் செய்து கொண்டிருந்தோம்: மக்களின் செல்வாக்கு அதிக மானதும் அதுவரை தேர்தலுக்கு நிற்பதில்லை என்றி ருந்த, காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தது.  நான் அதை எதிர்த்தேன். என் எதிர்ப்பை இலட்சியம் செய்யாமல் நிற்பது என்று தீர்மானித் தார்கள். அப்போது நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நான் உடனே அதை விட்டு விலகி வெறியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து, மக்களின் பகுத்தறிவற்ற தன்மைக்கும், மூட நம்பிக்கை - முட்டாள் தனத்திற்கும், இழிவிற்கும் அடிப்படையாக இருந்த கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பான், காங்கிரஸ் - காந்தி ஆகியவை ஒழிய வேண்டும் என்று பிரசாரம் செய்த தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கமான ஜஸ்டிஸ் கட்சியையும், ஆதரித்துப் பிர சாரம் செய்தேன். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வந்தது.

பிறகு நடைபெற்ற தேர்தலில் காங் கிரஸ்  வெற்றி பெற்று 1937-இல்  பதவிக்கு வந்ததும், 2000 பள்ளிக்கூடங்களை மூடியதோடு, இந்தியைக் கட்டாயப் பாடமாகிற்று; அத் தோடு நில்லாமல் ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்தவர்களின் ஜமீனில் சென்று தொல்லை கொடுத்தார்கள்; தொழில் செய்து கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களின், தொழிலாளர் களைத் தூண்டிவிட்டு ரகளை செய்யும் படிச் செய்தார்கள். ஜமீனுக்கு வரி செலுத் தக்கூடாது என்று விவசாயிகளிடையே பிரசாரம் செய்தார்கள்; இப்படிப்  பல வகையில் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும்,  ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த, பலர் அதை விட்டு விலக ஆரம்பித் தார்கள்; இப்படியே ஒவ்வொருவராக விலகிக் கொண்டி ருந்தால், கடைசியில் கட்சியே அழிந்து விட்டது என்றாகி விடும். இதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொப்பிலி முதலி யவர்கள் யோசித்து, தலைமைப் பதவியை என்னிடம் கொடுத் தால் கட்சி அழியாமல் நான் பார்த்துக் கொள்வேன் என்று தீர்மானித்து, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் காரணமாக நான் ஜெயிலிலிருந்து கொண்டி ருக்கும் போதே, என்னை ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

அதன்பின் 1944- இல் வெள்ளைக்காரன் ஆட்சி இருக்கும் போதே சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நான், ஜஸ்டிஸ் கட்சி தேர்தலில் நிற்பது கூடாது, அரசாங்கப் பதவி- பட்டங்களை ஜஸ்டிஸ் கட்சியை சார்ந்தவர்கள் ஏற்கக்கூடாது என்கின்ற திட்டத்தைக் கொண்டு வருவது என்றிருந்தேன். இதைத் தெரிந்த படித்த பதவி ஆசை கொண்டவர்கள், எனக்குக் எதிராக கிளம்பி அந்த மாநாட்டிற்கு வேறு தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானித்து, எனக்கு எதிராக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருந் தார்கள். இது எனக்குத் தெரிந்ததும் நான் மாநாட்டிற்குப் போவதில்லை என்று தீர்மானித்து  ஈரோட்டிலேயே தங்கி விட்டேன். அப்போது அண்ணாதுரை அவர்கள் என்னிடம் வந்து, மாநட்டிற்கு நான் அவசியம் வர வேண்டுமென்று கேட்டார். நான் அங்குள்ள நிலைமைகளை விளக்கி என் திட்டங்களையும் சொல்லி, இவற்றை மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு வருவதாக இருந்தால் நான் வருகிறேன், என்று சொன்னேன். அவர் ஒத்துக்கொண்டு வெளியூர் தோழர்கள் யாவரிடமும்  தீர்மானங்களை அனுப்பி அவர்கள் ஆதரவைப் பெற்ற தோடு, பல்லாயிரக்கணக்கான தோழர்களைச் சேர்த்து விட்டார். மாநாடு நடைபெறுகின்ற அன்று எதிரிகளைப் போல 4, 5 மடங்கு களுக்கு மேல் நம்மவர்கள் கூடிவிட் டார்கள்.  இதைக் கண்டதும் வரவேற்புக்குழுத் தலைவர் நம் பக்கம் திரும்பிவிட்டார்.  மாநாட்டுப் பந்தலில் டிக்கெட் இல்லாமலே எல்லோரும் நுழைந்து, எதிரிகளுக்கு ஒரு சிறுவாய்ப்பும் இல்லாமல் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததோடு என் தீர்மானங்கள் யாவற்றையும் அண்ணா துரை தீர் மானங்கள் என்கின்ற பெயரில் எதிர்ப் பில்லாமல் நிறைவேற்றினார்கள்.

அந்த மாநாட்டில் தான் இயக்கத்தின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றினார்கள்; அந்தத் திராவிடர் கழகத் தின் மாநாடுதான் அதாவது ஆதி ஜஸ்டிஸ் கட்சியின் பார்ப்பனரல்லாதாரின் மாநாடு தான் இதுவாகும்: இந்தக் கருத்துகளை 40 ஆண்டுக் காலமாக மக்களிடையே பிர சாரம் செய்ததன் காரணமாக, மக்களி டையே செல்வாக்கு அதிகரித்ததும், இதில் இருந்த சிலர் எத்தனை நாளைக்குப் பிரசாரத்தோடு மட்டும் நிற்பது, தேர்தலில் ஈடுபட்டுப் பதவிக்குப் போக வேண்டும் என்று கருதி, நம்மைப் பின்னேற்றம் என்றும், அவர்களை முன்னேற்றம் என்றும் சொல்லிக் கொண்டு, நம்மை விட்டு விலகிச் சென்றார்கள். நாம் அவர்களைக் கடுமையாக எதிர்த்தும் கூட பார்ப் பானின் முட் டுக்கட்டையால், வெற்றி பெற்றனர். காங்கிர சிலிருந்து, பார்ப்பானை வெளியேற்றி னாலும், பார்ப் பானைப் போலக் கருத்துள்ள பக்தவத்சலம், காமராசருக்குப் பின் ஆட்சிக்குவந்து காமராசர் செய்த நன்மைகள் எல்லாம் கேடாக நடந்து கொண்டதால்,  நாம் பக்தவத்சலம் ஒழிக  என்று ஒரு பக்கமும், தி.மு.கழகம் ஒழிய வேண்டும் என்றும் பிரசாரம் செய்ததால் இரண்டையும் கேட்ட மக்கள் தி.மு.கழகத்திற்கே ஓட்டுப் போட்டு அவர்களை வெற்றி பெறச் செய்து விட்டார்கள்.

வெற்றி பெற்றதும் தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நம்மைக் கேட்டுக் கொண்டார்கள்; அப்போது நாம் அவர் களை ஆதரிக்க வில்லை என்றால், அவர்கள் பார்ப்பனர்களிடமே சென்று விடுவர்; எனவே, நாம் அவர்களை ஆதரித்து வருகின் றோம். அதனால் பல நன்மைகளை நம் மக்கள் அடைந்து வருகின்றனர்.

நாமடைய வேண்டியதை நம் எண்ணிக்கைப்படி அடைய வேண்டும். பார்ப்பான் 100க்கு 3 பேர்கள்- அவர்கள் 100க்கு 100 பேர்களும் படித்திருக்கின்றார்கள்.  100க்கு 97 பேர்களாக இருக்கிற நாமும் 100க்கு 100 பேர்களும் படித்தவர்களாக வேண்டும், பதவி- உத்தியோகங்களில் நம் விகிதாசாரப் படி உரிமை பெற வேண்டும்.  100க்கு 3 பேர்களாக இருக்கிற பார்ப்பனர் தன் விகிதாசாரத்தைப் போல் 10, 15 பங்குக்கு மேல் அனுபவித்துக் கொண்டிருக்கின் றார்கள். நாம் நமக்குரிய பங்கையே இன்னமும்  பெற வில்லை, இந்த ஆட்சியின் மூலம் அதைப்பெற வேண்டும்.

கிராமம், நகரம் என்ற பிரிவு இருக்கக் கூடாது; நகரத்தைப் போலவே கிராமமு மிருக்க வேண்டும். நகரத் திலிருக்கிற வசதிகள் அத்தனையும் கிராமத்திலும் இருக்க வேண்டும். முதலாளி, தொழிலாளி என்பது தொழிலில் இருக்க வேண்டுமே தவிர, பொதுவில் இருவருக்கும் பேதம் இருக்கக்கூடாது. இருவருக்கும் சரிசமமான உரிமை இருக்க வேண்டும்.

காந்திக்குப் பின் நாட்டில் ஒழுக்கம், நாணயம், நேர்மை இவை எல்லாம் கெட்டு விட்டது. இப்போது தஞ்சாவூர் ஜில்லாவிலே கம்யூனிஸ்ட்கள் டிராக்டரைக் கொண்டு உழுவதைத் தடுக்கின்றனர்.

ஒருத்தன் சொத்திலே ஒருத்தன் போய்ப் புகுவதை அனுமதிக்கின்றான். நமக்கு உரிமையுள்ளதில் போய்ப் புகுவதில் என்ன தவறு? இந்தக் கோயிலைக் கட்டியது நாம்; அதற்கு வேண்டியவை அத்தனையையும் கொடுப்பது நாம். நமக்கு உரிமையான கோயிலுக்குள் நாம் போவது எப்படித் தவறாகும்?  நமக்கும் - கோயிலுக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத பார்ப்பான், உள்ளே இருந்து கொண்டு நம்மை வெளியே நில் நீ சூத்திரன் என்கின்றான். உள்ளே  வந்தால் சாமி தீட்டாகிவிடும் என்கின்றான். இன்னும் எத்தனை நாளைக்கு, நாம் இந்த இழிவைப் பொறுத்துக் கொண்டு சூத்திரனாக இருப்பது? நாம் இதை நீக்காமல் போனால் வேறு யார் வந்து நீக்குவார்கள் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

திராவிடர் கழகத்தின் இலட்சியம் மனிதன் மனிதத் தன்மையைப் பெற்று மனிதனாக வாழ வேண்டும் என்பது தானாகும். அதற்கு எதிராக உள்ள கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சாதி ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.

நம் இழிவு பூரணமாக நீக்கப்பட்டு, மற்ற உலக மக்களைப்போல் நாமும் வாழ வேண்டுமானால்,  நாம் நம் நாட்டைப் பிரித்துக் கொள்ள வேண்டும். டில்லிக்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்று பிரிந்து கொள்ள வேண்டும். பிரிந்தால் நம் பிள்ளைகளும் நாளைக்குச் சந்திரனுக்குப் போவார்கள், நம் நாடும் மற்ற, நாடுகளைப் போல பல அதிசய, அற்புதங்களைச் செய்ய முடியும். மற்ற உலக நாடுகளைப் போல முன்னணியில் நிற்க முடியும்.  பிரிந்தால் எப்படி வாழ முடியும் என்று பயப்பட வேண்டிய தேவை இல்லை. துலுக்கன் 100க்கு 5 பேர்; அவன் தன் நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொண்டு வாழ்கின் றான், அவனுக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடவில்லையே! இப்படி நமக்குப் பல இலட்சியங்கள் இருப்பதால் நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அன் போடு நண்பர்களாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர், நட்போடு  பழக வேண்டும்.

நாமெல்லாம், ஒருவர் என்கின்ற இன உணர்ச்சி பெற வேண்டும். நாய், நல்ல விசுவாசமுள்ள பிராணிதான் என்றாலும், அது அதை (நன்றியை) மனிதனிடம்தான் காட்டுகிறதே ஒழிய, தன் இனத்தைச் சார்ந்த வேறொரு நாயைக் கண்டால் குலைக்கும். அது போல் தான் நம் தமிழர்கள் நிலை இருக்கிறது. தங்கள் இனத்தை மாற்றானுக் குக் காட்டிக்கொடுப்பதும், தங்கள் இனத் திற்குத் துரோகம் செய்வதையுமே, கடமையாகக் கருதிக் கொண்டிருக் கின்றனர். இந்த நிலை ஒழிந்து மாற்றானுக்கு - பார்ப் பானுக்கு இருக்கிற இன உணர்ச்சியை நம் மக்கள் பெற வேண்டும். என்ன செய்தும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்தாலும் இது நம் ஆட்சி என்கின்ற உணர்ச்சி நம் மக்களுக்கு ஏற்பட வேண்டும்: இந்த ஆட்சி நம் இனத் தவர்கள் ஆட்சி, கண்டிப்பாய்ச் சொல்கிறேன், இவர்கள் காலத்திலேயே இந்தக் கோயில்களை எல்லாம் இடிக்கலாம். இன்னும் 10 வருஷம் இந்த ஆட்சி இருந்தால் நிச்சயம் ஒரு பார்ப்பான் இருக்க மாட்டான்; இருக்க நேர்ந்தால் பூணூலையும், குடுமியையும் வெட்டிவிட்டுக் கையிலே மண்வெட்டியோடு வந்துவிடுவானே!

பெண்களுக்கு, உரிமை கொடுக்க வேண்டுமென்று சொல்கிற, நான் ஒரு விஷயத்தில் பெண்களை ஆண்கள் கண்டிக்க வேண்டும் என்று சொல்கிறேன். எதில் என்றால், பெண்கள் கோயிலுக்குப் போவதை ஆண்கள் கண்டிக்க வேண்டும். அவர்கள் கோயிலுக்குப் போகவிடாமல் தடுக்க வேண்டும். சினிமாவிற்கும் அப்படித்தான், கண்டிப்பாய் சாம்பல், மண் பூசக் கூடாது. மத சம்பந்தமான விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடக்கூடாது.

நம் இயக்கத்தைப் பொறுத்தவரை நாம் அனைவரும் பகுத்தறிவு வாதிகள்; பகுத்தறிவுவாதிகள் என்பது அறிவுக்கு மட்டுமல்ல, மனித சமுதாயத் தொண்டிற்கும், முன்னேற்றத் திற்குமே ஆகும். நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவது அதன் மூலம் மனிதனை முன்னேற்றமடையச் செய்யவும், மனிதனின் மூட நம்பிக்கையை ஒழித்து அவனை அறிவைக் கொண்டு சிந்திக்கச் செய்து, அறிவின்படி நடக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே ஆகும்.

நம்மைச் சுற்றிலும் நம் எதிரிகள் இருக்கின்றார்கள்; எதிர் கருத்து உடையவர்கள் இருக்கின்றார்கள். நமக்கிருக்கிற மத சம்பந்தமான - அரசியல் சம்பந்தமான - ஜாதி சம்பந்தமான - கடவுள் சம்பந்தமான - பழைமை - வைதிக சம்பந்தமான எதிரிகளோடு பத்திரிகைகள் யாவுமே நம் கருத்துக்கு நேர்மாறான கருத்துகளைப் பரப்புவதாக, இருக்கின்றன என்றாலும், இவற்றை எல்லாம் எதிர்த்து நம் கருத்துகளைப் பரப்பிக்கொண்டு வருகின்றோம். இந்தப் பகுத்தறிவு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்கள் ஆகின்றன. என்றாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நமது கொள்கைகளை விட்டுவிடவும் இல்லை, மாற்றவும் இல்லை. அடிக்கடி நம் திட்டங்களை மாற்றியமைத்து இருக் கின்றோமே ஒழிய, கொள்கையில் ஒரு சிறு மாற்றமும் செய்யவில்லை என்பதோடு, நம் கொள்கைகள் வளர்ச்சி யடைந்தே வந்திருக்கின்றன.

("விடுதலை", 02.08.1969)

-விடுதலை நாளேடு,26.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக