வெள்ளி, 26 ஜனவரி, 2018

அந்நிய நாடுகளைப் பாருங்கள்!

27.12.1931, குடி அரசிலிருந்து..
நமது மக்களுக்கு தன்னம்பிக்கை சிறிதும் உண்டாகாதபடி “ஆண்டவன்” என்பவனை நம்புவ தானாலும், பிரார்த்தனைகளை நடத்துவதாலுமே காரியங்களை முடிக்கலா மென்னும் மூடத்தனத்தைப் பரவச் செய்கின்றனர்.
எதையும் ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவை உண் டாக்காமல், “மதக்கட்டளை”, “கடவுள் மொழி”, “பெரியோர் சொல்”, “மகாத்மா வாசகம்“ என்று சொல்லி அவற்றைச் சரியோ, தப்போ அப்படியே நம்பும்படியான மனப்பான் மையை உண்டாக்கு கின்றனர். காலத்திற்கும் பொருந்தாத பழைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் எண்ணத்தை உண்டாக்காமல் பழைமை யான நடவடிக்கைகள் பரிசுத்தமானவை, அவற்றை மாற்றிக் கொண்டால் நமது மதத்திற்கு  அழிவு வந்துவிடும்.
நமது புராதன நாகரிகத்திற்குச் சிதைவு வந்து விடும்; ஆகையால் பழைமையை விட்டுவிடக் கூடாது என்ற எண் ணத்தை உறுதியாக நிலைக்கச் செய்யக்கூடிய வேலையையே செய்கின்றனர்.
நாகரிக தேசத்தார்கள், தம்முடைய நாட்டு மக்களை உலக நாகரிகத்திற்கு வேண்டிய சிறந்த கல்விகளைக் கற்கும்படி செய்கின்றனர்.
அதாவது; கைத்தொழில் சம்பந்தமான கல்வி, வியாபார சம்பந்தமான கல்வி, விவசாயம் சம்பந்த மான கல்வி, விஞ்ஞான சாஸ்திரம் சம்பந்தமான கல்வி, சுகாதார சம்பந்தமான கல்வி, அரசியல் சம்பந்தமான கல்வி முதலிய உலக வாழ்க்கைக்குப் பயன்படத்தகுந்த கல்வியை வளர்க்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால் நமது நாட்டுத் தலைவர்கள் என்ப வர்களோ, மேற்கூறிய பலவகைப்பட்ட வசதியுள்ள நூல்கள் நிரம்பிய பாஷையையே நமது நாட்டை விட்டு ஒழித்துவிட வேண்டுமென்று வேலை செய்கின்றனர்.
மக்களுக்கு உலக நாகரிகத்தைப் போதிக்காமல், சோம்  பேறித் தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் உண்டாக்கக் கூடிய சில புராணங்கள் மாத்திரம் உள்ளதும், சிறந்த இலக்கியங்கள் கூட இல்லாதது மாகிய இந்தி பாஷையையே எல்லா மக்களும் படிக்க வேண்டும் என்று பிரச்சாரம் பண்ணுகின்றனர்.
மற்ற நாட்டுத் தலைவர்கள் எல்லோரும், மக்க ளுடைய கஷ்டமான உழைப்பைக் குறைத்து, எல்லாத் தொழில்களையும் இயந்திரங்களைக் கொண்டு விருத்தி செய்து, நாட்டின் விவசாயம், கைத்தொழிலும், அந்நிய நாட்டு விவசாயத்துடனும், கைத்தொழில்களுடனும் போட்டி போடவும், வியாபாரத்தின் மூலம் தங்கள் நாட்டில் செல்வத்தைப் பெருக்கவும் முயற்சி செய்து வெற்றி பெறுகின்றனர்.
நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ இயந்திரங்களோ இயந்திரங்களின் மூலம் தொழில் களை விருத்தி செய்ய வேண்டும் என்னும் எண்ணமே மக்களிடம் தோன்றாம லிருக்கும்படியும், எல்லாத் தொழில்களையும், பிறர் உதவியில்லாமல் தாமே கையினால் செய்து கொள்ள வேண்டு மென்னும் குறுகிய மனப்பான்மையும் தேசியம் என்னும் பெயரால் உண்டாக்குகின்றனர்.
இதனால் நாட்டின் விவசாயம், கைத்தொழில்கள் முதலியன வளர்ச்சியடைய ஒட்டாமலும், எந்த வகையிலும் அந்நிய நாடுகளுடன் வியாபாரம் செய்து போட்டி போட முடியாமலும், நாட்டின் செல்வ நிலை வளர முடியாமலும் பாழ்படுத்து கின்றனர்.
-விடுதலை, 26.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக