வியாழன், 1 மார்ச், 2018

பெரியார் பேசுகிறார்: என்னைப்பற்றி நான் சொல்கிறேன்



என்னைப்பற்றி உங்கள் எல்லோ ருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க் காரர்களை விட உள்ளுர்க்காரர் களாகிய உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.

எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும், அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை என் பதும் நீங்கள் அறிந்ததே. அதனா லேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடை யாது. சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அநேக வீடுகளுக்கு நான் வரா விட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட  கால் மணி, அரை மணி காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளி யேறாமல் காத்திருக்கும். அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்த வனாகிய நான், இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும் இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்பந்தமான நட்பு தவிர, மற்றபடி உலக வழக்கமான பொது ஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக் குத் தெரியும். ஏன் அப்படி சொல் லுகிறேன் என்றால் அனேக துறைகளில் பொது ஜன அபிப்பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக்கதிதான். ஆனால், இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனேகருக்கு இதுகூட சாத்தியப் படாமல் அடிக்கடி கரணம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல் லுவேன்.

சாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லு வதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா? நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத சாதியா? என்றால், அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ் தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும், தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர் களும் செய்திருக்கிறார்கள். இதோ எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில், நான் முன்னின்று கட்டி வைத் ததல்லவா? மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக்கிறதல் லவா? அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்.

கோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தானக் கமிட்டியில் நான்தான் - என் தலைமையில்தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமலுக்குக் கொண்டு வந்ததில் கோவில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும், தோழர் ஈஸ்வரன் அவர்களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை யாயிற்று என்றாலும், அந்தத் தீர்மானம் கேன்சல் செய்யவே வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்தேன். அதற்கப்புறமே சாமியையும், கோவிலையும், மதத்தை யும், அடியோடு அழிக்கத் துணிந்தேன்.

(15.11.1936, ஈரோடு பார்ப்பனரல்லாதார் வாலிப சங்க பொதுக்கூட்ட சொற்பொழிவு)

‘குடிஅரசு’, சொற்பொழிவு - 06.12.1936

ராஜரிஷி என்று அழைக்கப்பட்டவன் நான்!

நானும் ஒரு காலத்தில் சட்ட மறுப்பு மறியலும், சத்தியாகிரகமும் செய்து பார்த்து அதற்காக பல தடவை சிறை சென்றுமிருக்கிறேன். இந்நாட்டில் எல்லாரையும் விட பெரிய தேசப் பக்தனாகயிருந்து பார்த்துமிருக்கிறேன். வருணாசிரம தருமிகளெல்லாம் என்னை ராஜரிஷி என்றும் பிரமரிஷி என்றும் சொன்னதோடு உற்சவங்களில் தேர்களில் கூட எனது படத்தை இழுத்திருக்கிறார்கள்.

ஆகவே ஒரு மாசமோ, மூன்று மாசமோ, ஆறு மாசமோ  ஜெயிலுக்கு போவதால் எனக்கொன்றும் ஆபத்து வந்து விடாது. சத்தியாகிரகத்தில் சேர்ந்து கொள்வதால் எனக்கொன்றும் மரியாதையுங் குறைந்து விடாது. ஆதலால் நான் எவ்வித சத்தியா கிரகத்திற்கும் எந்த ஜெயிலுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பின்னேயேன் அதை  ஆதரிக்க வில்லை என்றால் அதன் உண்மையும் அனுபவமும் எனக்குச் சிறிதாவது தெரியும். சுமார் பத்து வருடத்திற்கு முன் ஏற்பட்ட ஒத்துழையாமையின்போது முப்பதினாயிரம் பேர்கள் சிறை சென்றோம். ஒரு கோடி ரூபாய் செல வுஞ் செய்தோம். ஒரு வளைந்துபோன பின் (றிவீஸீ) ஊசிக்கும் பயன்படவில்லை. நான் அவ்வளவு பாடுபட்டும், எவ் வளவோ தேசியப்பிரசாரம் செய்தும் இன்றும் திருவிசலூர் அக்கிரகாரத்தில் தடியும் கையுமாய் பார்ப்பனர்கள் நின்று கொண்டிருப்பதை மாற்ற முடியவில்லையென்றால் யோக்கி யனுக்கு வேலை அங்கா? இங்கா? என்று பாருங்கள். உண்மையில் எந்த வைதீகர்களும் வருணாசிரம தருமி களும் என்னைப் பெரிய ராஜரிஷி என்றும், பிரமரிஷி என்றும், தேசப் பக்தன் என்றும், தேசிய வீரனென்றும் அழைத்தார்களோ அவர்களேதான் இன்றைய தினம் என்னைத் தேசத் துரோகி என்றும், மதத் துவேஷி என் றும் அழைக்கப்படுவதை நான் பார்க்கிறேன்.

ஆகவே, இதிலிருந்தே நான் முன் செய்த தொண்டு வைதீகர்கட்கும், வருணாசிரமிகட்கும் அனுகூலமான தென்றும் இப்போது நான் செய்வது அவர்களுக்கு விரோதமானதென்றும் நன்றாய் விளங்கவில்லையா? இவற் றிலிருந்து தான் எனது தொண்டில் எனது அபிப்பிராயத்தில் நாளுக்கு நாள் உறுதிப்பட்டுக் கொண்டு வருகின்றது.

- ‘குடிஅரசு’ , சொற்பொழிவு -  10.08.1930

எனது குடும்பம்

எனக்கு அரைவயிற்றுக்காவது சோற்றுக்கு மார்க்கமிருக்கிறது.  காங் கிரசுக்கு வரும்போதே பல பதவிகளும் இருந்தன.  ஆதலால் தேசியத் தொண் டினாலோ, அல்லது பொது வாழ்வி னாலோதான் வயிற்றைக் கழுவ வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ எப்போதுமில்லை. கவுரவத்தை உத்தேசித்தோமென்றால் அதுவும் காங்கிரசின் பொது வாழ்விற்கு முன்னரே மக்களால் எவை, எவை உயர்ந்த கவுரவமான ஸ்தானங்களாக கருதப்பட்டனவோ, அவைகளிலேயும் ஓரளவு அங்கம் வகித்தும், தலைமை வகித்தும் பதவி பெருமைகள் அனு பவித்து வந்திருக்கிறேன். நான் காங் கிரஸ் பாரத்தில் கையெழுத்துப் போடும்போது 1). எனது இன்கம்டாக்ஸ் வருஷம் 900 ரூபாய்.  2). எனது வீட்டு வரி வருஷம் 2500 ரூபாய்; எனது பொதுநல கவுரவப் பதவியோ முனிசி பல் சேர்மென் பதவியை ராஜினாமா செய்த பின்பும் சர்க்கார் எனக்கு ஆனரரி இன்கம்டாக்ஸ் கமிஷனர் வேலை கொடுத்தார்கள். அதற்கு தினம் 100 ரூபாய் அலவன்சும் இரட்டை முதல் வகுப்பு ரயிலில் படியும் உண்டு. இவைகளுக்கு எல்லாம் இப்போதும் சர்க்காரில் ரிகார்டு இருக்கிறது. இவை யெல்லாம் பொய்யாக இருக்க முடியாது. ஏன் இவைகளைச் சொல்லுகிறேன் என்றால், என்னைப் பற்றிய விஷமத் தனமாக இங்கு விஷயங்கள் விவகா ரத்திற்கு வந்ததினால்தான். ஏதோ என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமலிருப் பதற்கே ஒரு பயனுள்ள தொண்டைச் செய்யலாமென்று கருதி இதில் ஈடுபட்டிருக்கின்றேனேயன்றி பதவிக்கோ பணத்துக்கோ எதற்காக வுமல்ல!

‘குடிஅரசு’, சொற்பொழிவு - 23.01.1938

- விடுதலை ஞாயிறு மலர், 16.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக