ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

இந்துமத தத்துவம் 19.08.1928 - குடிஅரசிலிருந்து...

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.

மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப் பனர்களே காரணம் என்று தமது இந்தியத்தாய் என்ற புத்தகத்தில் எழுதிய தற்குத் தேசிய தலைவர்களான திரு. சத்தியமூர்த்தி பனகல் ராஜாவைச் சமுகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகி என்ற பொருள்பட கூறினார். மற்றொரு தேசியத் தலைவர் மிஸ். மேயோவைக் குப்பைக்காரி என்று கூறினார்.

இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேட்கின்றோம்.

சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று கேட்கின்றோம்.

செத்த பாம்பை ஆட்டுவது போல், செத்துச் சுட்டு சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கரு மாதிரியும் நடந்து விட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்பும் மார்க்கமும் நிறைந்த தேசிய திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா என்று கேட்கின்றோம்.

வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.

எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப் படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம்.

இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன என்று விழிப் பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா வாதிகளுக்கு இதிலிருந்தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.

சாமியும், சமயமும், சமயாச்சாரிகளும்
01.07.1928- குடிஅரசிலிருந்து... 

தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும், அவதார மென்றும் ரூபமென்றும், அதற்காக மதமென் றும், சமயமென்றும், அதற்காக மதாச்சாரியார்கள் என்றும் அதற்குச் சமயாச்சாரியர்கள் என்றும்  கட்டியழுப வர்கள் ஒன்று வயிற்றுப் பிழைப்புப் புரட்டர்களாயிருக்க வேண்டும் அல்லது பகுத்தறிவில்லாதவர் களாகவாவது இருக்கவேணடும் என்பதே நமது அபிப்பிராயம் என்பதாகப் பல தடவைகளில் வெளிப் படுத்தி இருக்கின்றோம்.

அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ பிரம்மா என்றோ, சொல்லப்படுவதையும் ஒரு சாமி என்றோ அல்லது ஒரு ஆசாமி என்றோ அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் ஞானமற்றவர்களின் கொள்கை யென்றே சொல்லுவோம்.

உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்வு, அழிவு என்பவைகளான மூவகைத் தன்மை களையும், மேற்படி சாமிகளோ ஆசாமிகளோ ஒவ் வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்து கின்றான் என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு ஆசாமி பொறுப் பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் விசார ஞான மற்றவர்கள் என்றே சொல்லுவோம்.
மற்றபடி மேல் கண்ட ஒவ்வொரு தன்மைக்கு மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவ மல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மை யையும் அத் தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத் தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று. தானாக வாழ்ந்தது; தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும், அவ்வியற்கைக்குத்தான், கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின்றோம் என்பதாகவும் மற்றும் இவ்வியற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்க வேண்டுமே என்றும், அந்த காரணத்திற்கோ சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என்கின்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதாக வும் சொல்லிக் கொண்டு மாத்திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது அவ்வளவாக தகராறு இல்லை என்று சொல்லிக் கொள்ளுகின்றோம்.

ஆனால், அந்தக் கடவுளுக்குக் கண், மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண்-பெண் தன்மை, பெண் ஜாதி புருஷன், குழந்தை குட்டி, தாய் தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அதனிடத்தில் பக்தி செய்ய வேண்டும் எனறும், அதற்குக் கோவில்கட்டி கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பூசை செய்ய வேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல் யாணம் முதலியவைகள் செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார். இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளையாடல்கள் முதலியவைகள் செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும்  என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல் களைப்பற்றியும் பாட வேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக திருமுறையாக பிரபந்தமாக கடவுள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல் களைப் பாடினவர்களைச் சமயாச்சாரியார்களாக, ஆழ்வார்களாக, சமயக்குரவர்களாக, நாயன்மார் களாக பல அற்புதங்கள் செய்தவர்களாகக் கொள்ள வேண்டும் என்றும், இது போன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறை வேற்று வார்கள் என்றும், மற்றும் நாம் செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்களையும் கொடுமை களையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவைகளான மூட நம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்புச் சுயநலப்பிரச் சாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை; ஏனெனில் இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும் மற்ற நாட்டார்கள்போல நம்நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்பட்டு மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்ற மடையாமல் இருப்பதற்கும், அன்னிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியாமல் வைத்தப் பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூடநம்பிக்கையும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவைகளினால் ஏற்பட்டக் கண்மூடி வழக்கங்களும் செலவுகளுமேதான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கிறோம்.

நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் ஒருவரை ஒருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப் படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய்திருப் பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவ தற்கும், மக்களின் அறிவு வளர்ச்சிக் கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும் சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் மேல் கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும் அதன் சமயமும் சமயாச் சாரியார்கள் என்பவர்களும் அவர்களது பாடல்களும் நெறிகளுமே முக்கியக் கார ணம் என்பதைத் தூக்கு மேடையிலிருந்தும் சொல்லத் தயாராய் இருக்கின்றோம்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம்நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திதற்கும், அவற்றின் கல் யாணம் முதலிய உற்சவத்திற்கும் பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங் களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக்கும், இக்கடவுள்களின் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள்களைப் பற்றிப் பாடின பாட்டுகளையும், அச்சடித்து விற்கும் புத்தகங் களை வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களிலும், நேரங்களிலும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக் கொண்டு வருகின்றது என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல் மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ, செலவாக்கப்பட்டு வருமானால் நம் நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அன்னிய நாட்டுக்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பது ஏற்படுமா? தீண்டக்கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக்கூடாத மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் பூச்சி, புழு, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடியுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களை சண்டாளர், மிலேச்சர் சூத்திரர் வேசி மக்கள், தாசிமக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் உறிஞ்சிக் கொண்டும் நம்மையும், நம் நாட்டையும் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்துகொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். நமக்குக் கல்வி இல்லாததற்குக் சர்க்கார் மீது குற்றம் சொல்லுவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும் சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றியாராவது கவலை கொண்டிருக்கின்றோமோ என்று கேட்கின்றோம்.

சீர்திருத்தமும், சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து, ஓட்டு வாங்கி நிறைவேற்றிப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். 
-தந்தை பெரியார்
- விடுதலை நாளேடு, 20.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக