புதன், 4 ஏப்ரல், 2018

தீண்டாமை

தந்தை பெரியார்



கனவான்களே!

தீண்டாமை என்பதைப்பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதாக நீங்கள் யாரும் எதிர்பார்க்கமாட்டீர்கள் என்றே கருதுகின்றேன். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின் றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக் காமலோ; எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமுகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அகிம்சைத் தர்மத்தோடும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்பதும், இம்மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா? என்பதும் எனக்கு விளங்கவில்லை.

இம்மாதிரி ஒரு பெரிய மனித சமுகத்தை கொடுமைப்படுத்தி அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரண விடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா? என்று கேட்கின்றேன். சிலர் சுயராஜ்யம் வந்துவிட்டால், பூரண சுயேச்சை வந்துவிட்டால் இவைகள் ஒழிந்து போகும் என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். சுயராஜ்யம் மட்டுமல்ல; தர்மராஜ்யமும், அவதார ராஜ்யமுமாகிய ராமராஜ்யமும், சத்திய சந்தன ராஜ்யமாகிய, அரிச்சந்திர ராஜ்யமும் மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகள் உள்ள காலத்தில்தானே இவைகள் உண்டாக்கப்பட்டதாகவும், இவற்றைச் சரிவர பரிபாலித்து வந்ததாகவும், இவை மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. எனவே மறுபடியும் அந்த ராஜ்யங்கள் வரு மானால் இந்தக் கொடுமைகள் குறையுமா? அதிகமாகுமா? என்று கேட்கின்றேன். ஆதலால் இக்குற்றங்கள் நமது நாட்டை விட்டு ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய சீர்திருத்தக்காரர்கள் கடமை மாத்திரமல்லாமல் அரசியல் சீர்திருத்தக்காரர்களதும் முக்கியமான கடமையேயாகும்.

கல்வி

இனி கல்வி என்பதைப் பற்றியும் சீர்திருத்தக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டியது அதிகமுண்டு. 'கல்' என்பதற்கு 'அறி' என்று பொருள். கல்வி என்றால் அறிவி, தெரிவி என்பதுதான் பொருளாகயிருக்க வேண்டும். எனவே, எதை அறிவிப்பது என்று கவனித்தால் உலக சுபாவத்தையும், மனிதத் தன்மையையும் அறிவிப்பதே கல்வியாகும். மற்றவைகள் வித்தையாகும். இதற்கு உதாரணமாக, 'ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள்' வைக்கப்படும்

உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

என்ற வள்ளுவர் வாக்கே போதுமானது. ஆதலால் உலக நிலையையும், அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளத்தக்க மனிதத் தன்மையுமே முக்கியமாகக் கொண்டு கல்வி என்பது மனிதத் தன்மைக்கும் அறிவுக்கும் சிறிதும் பொறுத்த மானதல்ல. குடிகளிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு பொறுப்பற்ற அரசன் தனது பிரஜைகளை மூடர்களும் தேசத்துரோகிகளுமாக, ஆக்கி தனது காலடியிலேயே அமுக்கி வைத்துக் கொண்டு நிரந்தரமாய் தன் இச்சைப்படி ஆட்சி புரிய வேண்டும் என்று கருதுகிற ஒரு அரசாங்கத்திற்கு அனுகூலமான கல்வியாகவே இருந்து வருகிறது. அது மாத்திரமல்லாமல் ஊரார் உழைப்பில் நோகாமல் வயிறு வளர்க்கக் கருதும் அயோக்கியர்களின் ஆதிக்கத்திற்கு அனுகூலமான கல்வியே அளிக்கப்பட்டு வருகின்றது.

எனவே இது அடியோடு மாற்றப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கடவுள் பக்தி, மதபக்தி இராஜபக்தியாகிய அறிவுத்தடையும், அடிமைப் புத்தியும் கற்பிக்கக்கூடிய விஷயங்கள் கல்விச் சாலைக்குள் தலை காட்டவே கூடாது. ஏனெனில் கடவுளிடத்திலும், மதத்தினிடத்திலும் அரசனிடத் திலும் பக்தியாய் இருக்கும்படி அவ்வவைகளே செய்து கொள்ள வேண்டுமே ஒழிய இதற்காக ஒரு பள்ளிக்கூடம் வைத்து மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அயோக்கியத் தனத்தின் முதல் பாகமாகும். கல்வி கற்பிக்கும் வேலை இது சமயம் முக்கியமாய் பெண்களுக்கும், தீண்டாதார் ஆக்கப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமே செய்ய வேண்டும்.

ஏற்கெனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்கின்ற சமுகத்திற்கும், பாரம்பரியமாகவே கல்வி அறிவோடு இருப்பதாகச் சொல்லப்படுபவர்களுக்கும் பிறவியிலேயே தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்பவர் களுக்கும் இப்போது சிறிதும் கல்வி கற்பிக்க வேண்டியதே யில்லை. எனவே குறைந்தது ஒரு பதினைந்து வருஷத் திற்காவது உயர்தர கலாசாலைகளையும், எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களையும் காலி செய்து, கதவைச் சாத்தி மூடிவிட்டு முன் சொன்ன கல்வியும், அறிவும் இல்லாதவர்கள் என்கிற கூட்டத்திற்கே பள்ளிக் கூடம் வைத்துக் கற்பிக்க வேண்டும். யோக்கியமான அரசாங்கம் இதைத்தான் முதலில் செய்யும். உண்மையான சீர்திருத்தக்காரர்களும் கல்வித் துறையில் இதைத்தான் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

மூடப்பழக்க வழக்கங்களும் சடங்குகளும்

சீர்த்திருத்தக்காரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு, நம்பிக்கைகளையும் ஒழிப்பது என்பது எவ்வளவு முக்கிய மானது என்பதைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இந்த விஷயமே இப்போது எங்கும் பேச்சாயிருக்கின்றது. இந்த மூடப்பழக்க வழக்கங்களால் பிழைக்கின்ற கூட்டம் தவிர மற்றவர்கள் எல்லோரும் இதன் அறியாமையை நன்றாய் உணர்ந்திருக் கின்றார்கள். ஆனாலும் அவர்களுடைய தைரியமற்ற தன்மையினால் அதை மாற்றிக்கொள்ள முடியாதவர்களா யிருக்கிறார்கள்.

கடவுள், மதம், பக்தி, வேதம் முதலியதுகள் மாத்திரம் அல்லாமல் உற்சவம், சுபம், அசுபம் என்பது சம்பந்தமான சடங்குகள், நோன்பு, விரதம், வேண்டுதல், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம், காணிக்கை ஆகியவைகள் போன்ற அநேக விஷயங்களில் நாம் நடந்துகொள்ளும் நடவடிக்கைகள் முழுவதும் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கைகள் ஆகியவைகளின் பாற்பட்டதேயாகும்.

இந்த மூடப்பழக்க வழக்க குருட்டு நம்பிக்கையும் செய்கையும் நம்முடைய அறிவு ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு முதலியவைகளை யெல்லாம் அடியோடு கெடுத்து விடுகின்றது. நல்ல காரியங்களுக்குப் பணமும், அறிவும் இல்லாமல் செய்து விடுகிறது. உலகத்திலுள்ள நாடுகள் எல்லாவற்றை யும் விட, இயற்கையிலேயே எல்லா வளமும் சவுகரியமும் பொருந்தியதான நமது நாடு மட்டும் உலகத்தில் உள்ள மற்றெல்லா நாடுகளையும்விட மிகவும் மோசமான நிலைமையில் என்றுமே விடுதலை அடையமுடியாத அடிமைத் தன்மையிலும், அறியாமையிலும் ஆழ்ந்து கிடப்பதற்குக் காரணமே இந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கு நமது மக்கள் கண்மூடித்தனமாக அடிமையா யிருப்பதுதான்.

நமது நாட்டைவிட மிகவும் பின்ன ணியிலிருந்து மற்ற நாடுகள் இன்றைய தினம் எல்லா நாடுகளையும்விட முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அந்நாட்டார்கள் மூடப்பழக்க வழக்கங் களையும், குருட்டு நம்பிக்கைகளையும் அறவே ஒழித்து அவர்களது பகுத் தறிவுக்கு மதிப்பும் கொடுத்து ஆராய்ச்சிச் துறையில் அவர்களது அறிவையும் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் முயற்சியையும் செலவு செய்வதன் பலனே ஒழிய வேறில்லை.

நாம் மூடப்பழக்க வழக்கம் என்று சந்தேகமற நன்றா யறிந்த ஒரு சிறு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டு மானாலும் நடுங்குகின்றோம்; தைரியமாய் ஏதாவது செய்வதாயிருந்தால் அதை சாமியும், மதமும், ஸ்மிருதியும், புராணமும் வந்து தடைக்கல்லாய் நிறுத்தி விடுகின்றது. இவைகளையெல்லாம்கூட ஒருவிதத்தில் சமாளித்து விடலாம். ஆனாலும் 'பெரியவர்கள் நடந்த வழி' என்கின்ற பொறுப்பற்றதும் அர்த்தமற்றதுமான தடை பெரிய தடை யாய் விடுகின்றது. எனவே இவ்விஷயத்தில் சிறிதும் தாட் சண்ணியமில்லாததும் தயங்காததுமான அழிவு வேலையே மிகவும் தேவையானது என்று மறுபடியும் மறுபடியும் சொல்லுவேன்.

இந்த மூடநம்பிக்கை குருட்டுப் பக்தி என்கின்ற துறையில் நமது மக்கள் பணம் வருஷம் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகின்றது. நமது தென்னாட்டில் மட்டும் வருஷத்தில் ஒரு லட்சம், இரண்டு லட்சம், அய்ந்து லட்சம், பத்து லட்சம், இருபது லட்சம் வரும்படியுள்ள கோயில்கள் பல இருக்கின்றன. வருஷத்தில் பத்து லட்சம், இருபது லட்சம், அய்ம்பது லட்சம் செலவு செய்து கூட்டங்கூடும் யாத்திரை ஸ்தலங்கள் நமது தேசத்தில் அநேகமிருக்கின்றன; இவைகள் யாவும் ஒருசில கூட்டத்தாரின் சுயநலத்திற்காக வஞ்சகக் கருத்துக் கொண்டு உண்டாக்கப்பட்ட மோசடியே அல்லாமல் வேறல்ல. இதற்காக எழுதி வைத்த புராணங்களும், ஆகமங்களும், சமயாச்சாரியார்கள் என்பவர்களின் சரித்திரங்களும், ஸ்தல மான்மியங்கள் தீர்த்த விசேஷங்கள் என்பதுகளும், புண்ணிய தினங்கள், திதி, திவசம் என்பதுகளும் சுயநலம் கொண்ட அயோக்கியர்களாலேயே பாமர மக்களை ஏமாற்றச் செய்த சூழ்ச்சியேயாகும்.

உதாரணமாக இரயில்வேக்காரர்களை எடுத்துக் கொள் ளுங்கள். அவர்களுக்கு நமது தெய்வங்கள் என்பவைகளி னிடத்திலாவது, புண்ணியஸ்தலம், தீர்த்தம், சிரார்த்தம், புண்ணியதின ஸ்நானம், தேர்த்திருவிழா, உற்சவம், தீபம், மேளம் என்பவைகளிடத்திலாவது கடுகளவு நம்பிக்கையா கிலும் இருக்கின்றது என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அல்லது அவர்கள் உண்மையிலேயே நம்மைப்போன்ற அவ்வளவு முட்டாள்களா? ஒருக்காலமும் இல்லை என்றும் அல்லவென்றும் வெகு தைரியமாய்ச் சொல்லுவேன். ஆனால், அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள்.

("துலா ஸ்நானத்திற்குப் போகவில்லையா?" "வைகுண்ட ஏகாதசிக்குப் போகவில்லையா?" "ஆடி அமாவாசைக்குத் தனுஷ்கோடிக்குப் போகவில்லையா?" "பிரயாசைக்குச் சிரார்த்தம் கொடுக்கப் போகவில்லையா?" "கார்த்திகை தீபத்திற்குத் திருவண்ணாமலைக்குப் போகவில்லையா?" "கும்பமேளாவுக்கு அரித்துவாரத்திற்குப் போகவில்லையா?" "மாமாங்கத்திற்குக் கும்பகோணம் போகவில்லையா?" "ஆருத்திராவுக்குச் சிதம்பரம் போகவில்லையா?") என்று விளம்பரம் செய்கின்றார்கள். கூலி கொடுத்துப் பத்திரிகை களில் போடச் செய்கிறார்கள். படம் எழுதி சுவர்களில் ஒட்டுகிறார்கள். நல்ல நல்ல பெண்களின் உருவத்தைப் படத்தில் எழுதி மக்களுக்குக் கவர்ச்சி உண்டாகும்படிச் செய்கின்றார்கள். இவைகளெல்லாம் எதற்காக? நாம் மோட்சமடைவதற்காகவா? நமக்குப் புண்ணியம் சம்பாதித் துக் கொடுப்பதற்காகவா? ஒருக்காலமும் இல்லை என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.

ஆனால், மற்றெதற்கு? நம்மை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதற்காக நம்மிடத்தில் சற்றும் அன்பும் காதலும் இல்லாமல் தங்களை நன்றாய் அலங்கரித்துக் கொண்டு நம்முன் நின்று கண் ஜாடை காட்டும் கீழ்த்தர விபசாரிகளின் மனப் பான்மையை ஒத்ததான ஏமாற்றமல்லவா இது? இதன் மூலம் இரயில்வேக்காரர்களுக்குப் போகும் பணம் எவ்வளவு? இதுபோல் தானே புராணமும் ஆகமமும் ஸ்மிருதிகளும் எழுதியவர்கள் மனப்பான்மையும் இருந் திருக்கும் என்று எண்ண வேண்டியிருக்கின்றது. இல்லா விட்டால் நம்முடைய மோட்சத்தைப் பற்றி இந்த கூட்டத் தாருக்கு இவ்வளவு அக்கறை எதற்கு? எனவே, நமது மூடப்பழக்கம், குருட்டு நம்பிக்கையாகிய தன் மூலமாக நமது பணங்கள் எத்தனை கோடி பாழாய்ப் போகின்றது என்பதைப் பாருங்கள்.

சர்க்கார் நம்மிடம் அரசாட்சியின் பேரால் வசூலிக்கும் வரி என்னும் கொள்ளையை விட இந்த மூடநம்பிக்கையா லும், குருட்டுப் பக்தியாலும் செலவிடும் பணமும் இதன் பேரால் பலர் கொள்ளையடிக்கும் பணமும் குறைந்த தொகை கொண்டதெனக் கருதுகின்றீர்களா? சர்க்கார் அதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லையென்று கத்தும் பொருளாதாரத் திட்ட நிபுணர்கள் இந்தப்பால் வழிப்பறிக் கொள்ளைக்கு ஏதாவது கவலை கொள்ளுகின் றார்களா? இதைப்பற்றி பேசவாவது அனுமதிக்கின்றார்களா? இந்தப் பக்கம் சற்றுதலை வைத்தாவது படுக்கின்றார்களா? அனுகூலமான துறையில் ஒன்றும் செய்யாமலிருப்பதோடு இந்த ஒழுக்கமற்ற கொள்ளைக் கூட்டத்தாருக்குத் தரகர் களாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்துக் குழியில் தள்ளுவதற்கு உடந்தையாய்த் தானே இருக்கின்றார்கள்.

இந்தப் பணங்களும் நேரங்களும் கல்வியிலாவது ஆராய்ச்சித் துறையிலாவது செலவு செய்யப்பட்டிருக்குமா னால் நமது நாட்டில் 100-க்கு 93-ஆண்கள் தற்குறிகளாயி ருப்பார்களா? 1000-க்கு 999 பெண்கள் தற்குறிகளாயிருப் பார்களா? என்பதுகளை யோசித்துப் பாருங்கள். நமது நாடு தரித்திரமாயிருப்பதற்குக் காரணம் விளைவில்லையா? விளைவுக்கு விலையில்லையா? போதிய பணம் புழக்கம் இல்லையா? எல்லாப் பணமும் சாமிக்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் உற்சவத்திற்கும் சடங்குகட்கும் மூடநம்பிக் கைக்கும் சோம்பேறிகளுக்கும் ஏமாற்றகின்றவர்களுக்கும் அழுவதற்கே செலவாகிவிடுகின்றது. சூதாட்டத்தில் எப்படி சீட்டுமேஜை வாங்கினவனுக்கே எல்லாப் பணமும் போய் சேர்ந்து விடுகிறதோ அதுபோல் நம்மை மூடநம்பிக்கையில் அழுத்தி வைத்திருப்பவர்களுக்கே எல்லாப் பணமும் போய்ச் சேர்ந்துவிடுகின்றது.

எனவே, நமக்கு செல்வமே கல்வியோ, அறிவோ, ஆராய்ச்சியோ, வேண்டுமானால் இந்த மூடநம்பிக்கையை அடியோடு ஒழிக்கவேண்டும். இந்தத் துறையும் மற்றெல்லாத் துறைகளைவிட மிகுதியும் அழிவு வேலை செய்யப்பட வேண்டியதாகும். மற்றதை முடிவுரையில் சொல்லுகின்றேன்.

- 'குடிஅரசு' - சொற்பொழிவு - 02.12.1928

- விடுதலை நாளேடு, 1.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக