3.4.1948 - குடிஅரசிலிருந்து
கத்தி இன்றி இரத்தமின்றி இந்திய சுதந் திரம் பெற நடத்திய அகிம்சைப் போ ராட்டத்தில் 945 தபால் ஆபீசுகள், 332 ரயில்வே ஸ்டேஷன்கள் கொளுத்தப்பட்டன, இடிக்கப்பட்டன. 60 இடங்களில் ரயில் கவிழ்க்கப்பட்டன.
இவை தவிர, கொளுத்தப்பட்ட சர்க்கார் கச்சேரிகள் பல. கொளுத்தப்பட்ட கோர்ட்டு ரிகார்டுகள் ஏராளம். கத்தரித்த தந்திக் கம்பிகள் பல மைல் நீளம்.
பெயர்த்த தண்டவாளங்கள் பல மைல்கள் தூரம், கொல்லப்பட்ட அதிகாரிகள் பலர் ஆகிய இவை யாவும் உங்களுக்குத் தெரிந்தது தானே.
சுதந்திரம் கிடைத்த பின்பு
இவைதாம் போகட்டும் என்றால் சுதந் திரம் கிடைத்த பின்பும் அகிம்சா, சுயராஜ்யத்தில் இடிக்கப்பட்ட வீடுகள் பல, கொளுத்தப்பட்ட கட்டடங்கள், கடைகள் பல, கொல்லப்பட்ட மக்களோ பலப்பல. கற்பழிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பலபல என்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே.
இந்து முஸ்லிம் ஒற்றுமை
சுயராஜ்யம் கிடைத்து விட்டால் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டு விடும் என்றார் காந்தியார். ஆனால் சுயராஜ்யம் கிடைத்த பிறகு நூற்றுக்கணக்கான ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் கொள்ளை இடப்பட்டன. முஸ்லிம் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம் தொழில் ஸ்தாபனங்கள் கொளுத்தப் பட்டன. இவையும் உங்களுக்குத் தெரிந் ததுதான்.
இவ்வளவு தானா?
இவ்வளவும் தவிர இன்னமும் என்ன நடந்தது என்று பாருங்கள். ஏராளமான எதிர்க்கட்சியார் கூட்டங்கள் குழப்பத்தால், காலித்தனத்தால் கலைக்கப்பட்டன. அவர் களது மகாநாட்டுக் கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. மகாநாட்டு மக்களை அடித்துக் கண், கால் ஊனமாக்கி அவர்களது சாமான்கள், பணங்கள் வழிப்பறி செய்யப்பட்டன.
என்ன நடந்தது?
இவ்வளவு காரியம் சுயராஜ்யம் கிடைத்த பிறகு செய்வதற்கு அகிம்சா ஆட்சிக்கு உரிமை ஏற்பட்டும், இவ்வளவும் போதாமல் இந்தத் தர்மராஜ்யத்தில் அடக்குமுறைச் சட்டங்கள் ஏராளமாக ஒவ்வொரு மாகாணத்திலும் செய்யப்பட்டன.
இவ்வளவோடு நிற்கவில்லை
எங்கு பார்த்தாலும் ஸ்ட்ரைக்கு, ஸ்ட் ரைக்கு! வேலை நிறுத்தம், வேலை நிறுத்தம்! என்பதாகவே கக்கூசு எடுப்பவர்கள் முதல் செக்ரட்டெரியேட் அதிகாரிகள் வரை நடந்தவண்ணமாயிருக்கின்றன.
பஞ்ச தேவதை திருவிளையாடல்
சோத்துப் பஞ்சம், துணிப் பஞ்சம் தாண்ட வமாடின.
வியாபாரிகள் கள்ள மார்க்கெட்டும், சட்டசபை மெம்பர்கள் கொள்ளையும், அதி காரிகள் லஞ்சமும், மந்திரிகளின் பாரபட்ச அநீதியும் ஆனந்தக் கூத்தாடின.
சந்தடி சாக்கில் கந்தப்பொடிக்கு கால் பணம் என்பதுபோல் வருணாசிரமம் வரம்பு கடந்து ஆட்சி புரிந்தது.
ஆண்டவனிடம் பிராது
இவ்வளவு நடந்தால் பிறகு மக்கள் என்ன செய்வார்கள். அழுதார்கள், ஆத்திரப்பட் டார்கள், ஆண்டவனிடம் முறையிட்டார்கள். ஆண்டவன்தான் என்ன செய்வான்? ஆண் டவனும் பார்ப்பன ரூபமாக இருந்துதானே உலகை நடத்துகிறார்.
இவை எல்லாம் ஆண்டவன் செயல்தானே?
ஆண்டவன் காரணம் என்றால் என்ன? பார்ப்பனர் காரணமென்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே?
எனவே, ஆண்டவன் பிராதை வாங்கிக் கொண்டு யோசித்தார் யோசித்தார், வெகுதூரம் யோசித்தார். எவ்வளவு தூரம்? யோசனை தூரம் யோசித்தார்.
யோசித்து என்ன முடிவுக்கு வந்தார்? வந்தார் ஒரு முடிவுக்கு. கண்டுபிடித்தார் ஒரு சங்கதியை, அதாவது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததுபோல் கண்டுபிடித்தார்!
தொடரும்
-விடுதலை நாளேடு, 7.6.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக