புதன், 19 ஜூன், 2019

சுயராஜ்யம் (முதல் அத்தியாயம்) - சித்திரபுத்திரன்

3.4.1948  - குடிஅரசிலிருந்து

சென்ற வாரத் தொடர்ச்சி

என்ன கண்டு பிடித்தார் என்றால் இவ் வளவு அக்கிரமத்துக்கும், அநீதிக்கும், கொலைக்கும், கொள்ளைக்கும், நாசத்துக்கும், கற்பழிப்புக்கும், கொலை பாதகத்துக்கும் காந்தியார்தான் காரணம் என்று கண்டு பிடித்தார். சரியான கண்டுபிடிப்புத்தானே இது? சரியோ தப்போ ஆண்டவன் கண்டு பிடித்த முடிவு என்றால் அப்புறம் அப்பீல் ஏது?

தீர்ப்பு

முடிவுக்கு ஏற்ற தண்டனை வேண்டாமா? வேண்டும். யோசித்தார் யோசித்தார். நிரம்பவும் குறைந்த தண்டனை கொடுக்க வேண்டுமென்று கருதி ஒரு சிறு தண்டனை கொடுத்தார். எப்படிக் கொடுத்தார்? தன்னடிச் சோதிக்கு அழைத்துக் கொள்வது என்ற மோட்சப் பிராப்த (மரண) தண்டனை கொடுத்தார். அதை எப்படி நிறைவேற்றினார் என்று கேட்பீர்கள். தானே கொலையாளியாய் இருந்து கொல்லுகிற மரண தண்டனை கொடுத்தார். கடவுள் பார்ப்பன ரூபம் தானே, ஆதலால் பார்ப்பனனாக, கோட்சேயாக, பி.ஏ.படித்த பார்ப்பனனாக வந்தார். ஒன், டூ, திரி என்று மூன்று வேட்டுகள் போட்டார். சரி காந்தி முடிந்தார். மோட்சமடைந்தார்.

இந்தப் பிராதை கடவுளே அல்லாமல் ஒரு சர்வதேச சங்கம் விசாரித்தாலும் இந்தத் தண்டனைதானே கொடுக்கும். இதற்குக் கடவுள் எதற்கு? என்று சிலர் கேட்கலாம்.

அதற்கும் இதற்கும் வெகு வித்தியாசம் உண்டு.

சர்வதேச சங்கம் தண்டனை கொடுத்தால் காந்தியாருக்கு அது தெரியும். தண்டனை நிறைவேற்றப்படும்வரை அவர் மனம் பதறும். அப்பீல் அல்லது கருணை மனு போடச் சொல்லும். பிறகு என்ன ஆகுமோ? கடைசி காலத்தில் அவர் மனம் வருந்தலாமா? ஆகை யால் ஆண்டவன் அந்தப் பிராதைத் தன் பைலிலேயே வைத்துக் கொண்டு காந்தியா ருக்கும் மனம் நோகாமல் பிராதுக்காரருக்கும் திருப்தி ஏற்படும்படி பார்ப்பனனாகவே ஆண்டவன் வந்து கேசையும் தண்டனை யையும் முடித்துத் தள்ளிவிட்டார்.

கடவுளே கொலைகாரனாக வந்து காந்தியைக் கொன்று விட்டதால், கொலை செய்யப்பட்ட விஷயமும் கிணற்றில் விழுந்த கல்லுப்போல் அடியில் போய் அமர்ந்து விட்டது.

அடுத்தபடி நேரு கேஸ் விசாரணையில் இருக்கிறது. பிரசாரத்துக்கு வாரண்டு வந்து தேடுகிறது. அகிம்சா தர்ம சுயராஜ்யத்தின் முதல் அத்தியாயம் முடிந்தது.

-  விடுதலை நாளேடு, 14.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக