புதன், 1 ஜனவரி, 2020

நான் யார்?


நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அரு வருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.

(விடுதலை, 15.7.1968)

எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.

(விடுதலை, 8.9.1939)

மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்கவேண்டுமென்பதிலும் எனக்கு 1925-ஆம் ஆண்டு முதலே உறுதியான எண் ணமும் ஆசையும் உண்டு.

(விடுதலை, 12.10.1967)

நான் மறைந்துநின்று சிலரைத் தூண்டி விட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒருசமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்தச் சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயேதான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீர வேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க  வேண்டியவனாகவும் இருக்க வேண்டி யிருக்கிறது.

(குடிஅரசு 24.11.1940)

என்னைப் பொறுத்தவரையிலும் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்.

(விடுதலை, 1.6.1954)

எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லாதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை

(விடுதலை, 2.10.1967)

நான் என் ஆயுள்வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர் பார்க்கமாட்டேன்.

(விடுதலை, 15.10.1967)

நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக்களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டு மென்றுதான் நான் தொண்டாற்றுகிறேன். ஆன தாலே நம் மக்களுக்கு நன்மை செய்யக் கூடியவர் களையும், நம் சமுதாய முன்னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக்கூடிய ஆட்சியாளரையும் சமுதாயத்தின் நலனைக் கருதியே ஆதரிக்கிறேன்.

(விடுதலை, 18.7.1968)

நான் அரசியல், மதத்துறையின்பேரால் யோக் கியமற்ற - மூட- சுயநல மக்களால் வெறுக்கப்பட் டவன்; துன்பப்பட்டவன்; நட்டப்பட்டவன்; மானத் தையும் பறி கொடுத்தவன்; மந்திரிப் பதவியை உதறித் தள்ளியவன்.

(விடுதலை, 14.11.1967)

இன்றையச் சுதந்திரத்திற்கு, முதன் முதல் நானாகவே சிறைக்குப் போகிறேன் என்று இந்த நாட்டில்,  ஏன் இந்தியாவிலேயே சிறைக்குப் போனது  நானும் என் குடும்பமும் தானே.

(விடுதலை, 29.1.1968)

எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த்துமே வந்திருக்கின் றேன். ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித்தது கிடையாது.

(விடுதலை, 4.3.1968)

ஒரு சமயம் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தும் படி சமாதான மாநாடு கூட்டி, காந்தியாரிடம் சங்கர நாயர், கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிட்டுப் பிறகு சமாதானம் பேசலாம் என்று கேட்டபோது, காந்தியார் சொன்னார்: கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, அது தமிழ் நாட்டிலே ஈ.வெ.ராமசாமி அவர்களின் மனைவி, தங்கை ஆகியவர்கள் கையில் உள்ளது என்று. அந்த அளவுக்கு நானும் எங்கள் குடும்பமும் காந்தியாரின் லட்சியங்களுக்காகச் சிறை சென்றவர்கள்.

(விடுதலை, 28.10.1968)

என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அத னாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங் களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படு கிறேன்.

(குடிஅரசு 25.8.1940)

நான் நிரந்தரமாக ஒருத்தனை ஆதரித்து வயிறு வளர்க்க வேண்டுமென்கின்ற அவசியமில் லாதவன். எவன் நமக்கு நன்மை செய்கின்றானோ, நமது சமுதாய இழிவு  நீங்கப் பாடுபடுகின்றானோ அவன் அயல்நாட்டுக்காரனாக இருந்தாலும் சரி, அவனை ஆதரிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுபவன் நான்.

(விடுதலை, 20.1.1969)

நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும், அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ் வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிடப் பல கொடிய துன்பங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ்வாழ்வே இந்த இழிசாதி வாழ்வைவிடச் சுகமான வாழ்வு என்று கருதுவேன்.

(குடிஅரசு 1.5.1948)

தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக் கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக்கொடு என்றார் காந்தியார். அப்போதுநான், கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப்படுத்தும் இழிவுக்குப் பரிகார மில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென் பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல என்றேன்.

(விடுதலை, 9.10.1957)

இன்னும் எத்தனைக் காலத்துக்கு நாம் இந்த உலகத்தில் சூத்திரர்களாக இருப்பது? நம் பின் சந்ததிகளையும் சூத்திரர்களாக இருக்க விடுவது? இந்தத் தலைமுறையிலாவது, இந்த விஞ்ஞான சுதந்திர காலத்திலாவது நமது இழிவு நீங்கி, நாம் மனிதத் தன்மை பெற ஏதாவது செய்ய வேண் டாமா? இதைவிட மேலான காரியம் நமக்கு இருக்க முடியுமா? அதனால்தான் எனது வாழ்நாள் முழுவதையும் இதற்கென்றே நான் அர்ப்பணித்து வந்திருக்கிறேனே ஒழிய முட்டாள் தனமல்ல; துவேசமுமல்ல.

(விடுதலை, 17.11.1957)

ஜாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல் ஜாதிக்காரன் மேல் துவேசம் என்றும், வகுப்புவாதம் என்றும் சொல்கிறான். நாங்கள் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு அக்கிரகாரத்துக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனருக்காவது தீங்கு விளைத்திருக் கிறோமா? ஜாதி இருக்கக்கூடாது என்று கூறினால் வகுப்புத் துவேசமா?

(விடுதலை, 25.10.1961)

இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.

(விடுதலை, 4.11.1961)

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்குக் கண்வலியாய் இருப்ப வர்கள், அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவது தான் எனது கண்ணோய்க்குப் பரிகாரம்.

(விடுதலை, 15.10.1967)

எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத் தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்று பட்டபடி நடவுங்கள் என்பதேயாகும்.

(குடிஅரசு 24.11.1940)

எனக்கு 60 வயதுக்குமேல் ஆகியும் இளைஞர் சகவாசத்தாலேயே எனது உணர்ச்சி முதுமையை அடையவில்லை. ஏதாவது ஒரு காரியம் செய்யாமலிருக்க, எப்பொழுதும் மனம் வருவதில்லை. ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே நான் கருதுகிறேன்.

(குடிஅரசு 19.1.1936)

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.

(குடிஅரசு 7.8.1938)

என் தொண்டெல்லாம் நம் மக்கள் உலக மக் களைப் போல் சரிசமமாக வாழவேண்டும்-அறி விலே முன்னேற வேண்டும் என்பதற்குத் தான்.

(விடுதலை, 24.7.1968)

எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிடர் சமுதாய நலனையே என் சொந்த நலமாக எண்ணி இருக்கி றேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன்.

(விடுதலை, 15.1.1955)

நீதிதான் சாட்சி; எனக்கு வேறு சாட்சி இல்லை.

(விடுதலை, 20.11.1957)

யாவரும் கடைசியில் சாகத்தான் செய்வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா? எனக்கு உயிர் வாழ்வதற்குச் சிறிதளவு பொருளி ருந்தால் போதும். மற்றப் பொருளையெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன்.

(விடுதலை, 27.7.1958)

என் கருத்துக்கள் பாராட்டப்படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிதாகக் கருதப்படு கிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துக்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மையை எடுத்துரைப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம்.

(விடுதலை, 28.9.1958)

நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னுடைய  10-ஆவது வயதிலிருந்தே நாத்திகன். ஜாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில் லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்புக் கொடுத்த வனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவை களில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தை யாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்கமாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட் டேன். வியாபாரத் துறையில் பொய் பேசியிருந் தாலும் பொதுவாழ்வுத் துறையில் பொய்யையோ, மனமறிந்து மாற்றுக் கருத்தையோ வெளியிட்டி ருக்கமாட்டேன். இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ளவேண்டும். நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டுவரவேண்டும் என் கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக்கட்டை யாகப் பார்ப்பனச் சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

அப்படி இல்லை என்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால், நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டுவர என்னால் முடிந்திருக்கும்.

(விடுதலை, 1.1.1962)

நான் உலகமே நாத்திக (பகுத்தறிவு) மயமாக வேண்டும் என்பதற்காகவே உயிர் வாழ்பவன்.

(விடுதலை, 2.9.1967)

எனக்கு மக்கள் நலம்தான் இலட்சியம்.

(விடுதலை, 15.10.1967)

நான் பதவிவேட்டை உணர்ச்சிக்காரன் அல்ல. சமுதாய வெறி உணர்ச்சி கொண்டவன் ஆவேன்; நாளைக்கும் சமுதாய நலத்தை முன்னிட்டு எதை யும் துறக்கவும், எதையும் செய்யவும் காத்திருக் கிறேன்.

(விடுதலை, 2.5.1968)

எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்தபோது என்னிடமிருந்த பணத்தை-சொத்தையெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்து விட்ட தால், இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். நீங்கள் கொடுத்த பணத் தைத்தான் கல்லூரிக்கும்-மருத்துவமனைக்கும் வழங்கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. எது பொது நன்மைக்கானது என்று பார்த்து, (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.

(விடுதலை, 8.8.1968)

என்னைப் பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும் தமிழர்பற்று உடையவர் என்று கருதினால், நான் அவருக்கு அடிமையே ஆவேன். குணம் குடிகொண்டால் உயிர்க்கு உயிர்தான். இல்லாவிடில் அவர் யாரோ என்று கருதுகிறவனாவேன்.

(விடுதலை, 15.9.1968)

பழைமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாகக் காணப்படுகிறது. நானோ பழமைப் பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன். அதனாலேயே நான் வெகுபேர்களால் வெறுக்கப் படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

(குடிஅரசு 2.8.1936)

நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று கருதிக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவுக்கு ஒத்த எதுவும் எனக்கு விரோதம் அல்ல. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் எனக்கு நட்பும் அல்ல.  இதுதான் எனது நிலை.

(குடிஅரசு 25.3.1944)

என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச்சக்தி உண்டு என்று நம்புகிறவன்.

(விடுதலை, 9.3.1956)

நான் எனது கொள்கைக்கு-பேச்சுக்கு எந்த மேற்கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமை யாகாது. ஆனால், நான் கூறிய கருத்துக்கு ஆதர வாக இன்ன இன்னாரும் கூறியுள்ளார் என்று எடுத்துக்காட்ட வேண்டுமே அல்லாது இன்ன இன் னார் இன்ன இன்ன கூறியுள்ளார். ஆகவே நானும் கூறுகிறேன் என்று எடுத்துக்காட்டக் கூடாது.

(விடுதலை, 26.2.1961)

ஒரு பகுத்தறிவுவாதி என்கின்ற எனக்கு மதப்பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப் பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுவேன்.

(விடுதலை, 20.4.1965)

விடுதலை நாளேடு, 24.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக