04.01.1931, குடிஅரசிலிருந்து.... -
மூடர்களே! மூடர்களே! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும், கலசங்கள் திருட்டு போகின்றன. அம்மன்கள் விக்ரகங் களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்ரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங் களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்பு பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவை களின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே! இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ர கங்களில், அந்தத் தேர் வாகனங்களில் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள் தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக் கின்றதாக நினைக்கின்றீர்கள்? உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல்லுங்கள்.
இன்னும் ஒரே குட்டி சங்கதி, வட்டி வாங்குகிறவர்கள் கோடீசுவரனாகிறான், வட்டி கொடுப்பவன் நாசமாய்ப் பாப்ப ராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருது கின் றீர்கள்? இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக்கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்..
மூடர் : சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.
பதில் : சரி, அப்படியானால் அந்தக் காரணத்தைக் கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அது தான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)
மூடர் : கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள் தனமாகும்.
பதில் : அப்படியானால், உலகப்படைப்புக் குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.
மூடர் : உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில் : சரி நல்ல காரியமாச்சுது. சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.
- சித்திரபுத்திரன்
- விடுதலை நாளேடு 18 1 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக