சனி, 11 செப்டம்பர், 2021

சித்தோடு சீர்திருத்த சங்கம்

 

தந்தை பெரியார்

தலைவர் அவர்களே!  சகோதரிகளே!! சகோதரர்களே!!!

இன்று இந்து சமுகம் என்பதற்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.  ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரி கூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும்அதைக் கொண்டாடினால் மோட்சம் அடையலாம் என்றும்பிரசங்கம் செய்யக் கூட்டு வார்கள்.  ஆனால் நீங்கள் இம்மாதிரி பண்டிகையை இனி வெறுக்கும்படி எடுத்துச் சொல்லும் உணர்ச்சி உள்ளவனை கூப்பிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.

இக்கூட்டத்திற்கு நீங்கள் ஒரு அருமையான தலை வரைக்கண்டுபிடித்தது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.  தலைவர் திரு.வி.எஸ்.செங்கோட்டையார் அவர்கள் பெரும்செல்வவான்பொது ஜனங்களுக்குப் பெரிதும் உபகாரியாய் இருந்து வருபவர்அநேக நல்ல பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள்அதுபோலவே மத விஷயங்களிலும் பெரிதும் ஈடுபட்டு மத சம்பந்தமான விஷயங்களில் அநேக காரியங்கள் செய்து வருபவர்.  ஆதலால் அவரை இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஏற்பாடு செய்த உங்களைப் பாராட்ட வேண்டியதே.  எனது உபன்யாசம் பயன்படுமானால் சீர்திருத்தத் துறைக்குத் தலைவரால் அநேக லாபம் ஏற்படும்.  அவர்கள் என்னை குருவென்றும் மற்றும் பிரமாதமாய் புகழ்ந்து பேசினார்.  நான் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை.  நானும் அவரும் மற்றும் இந்த ஊர்க்காரர்களும் ஒன்றேயாவோம்.  30,40 வருஷங்களாகவே தாய்பிள்ளைகள்போல் நெருங்கி பழ கினவர்கள்.  ஒரே துறையில் வியாபாரம் செய்துவந்தவர்கள்.  அநேகர் எனக்கு வரவு செலவுகாரர்களாய் இருந்தவர்கள்.  அக்கிராசனர் வியாபாரத்துறையில் மேலோங்கிவிட்டார்.  நான்  வேறு துறையில்  இறங்கிவிட்டேன்.  இவ்வளவு தான் வித்தியாசம்.  தலைவரும் இந்தத் துறையில் இறங்கி இருந்தால் அபாரமான காரியங்களைச் சாதித்து இருப்பார்.  ஆதலால் அவரை விட நான் ஒன்றும் சிறந்தவனல்ல.  அவர் போன்றவர்கள் இவ்வித உபன்யாசங்களுக்குத் தலைவராகக்கிடைத்துமனமாறுதல் அடைந்தால் நாட்டில் எவ்வளவோ திருத்துப்பாடு ஏற்படும்தவிரவும் வயதில் மூத்தவன் என்கின்ற காரணத்திற்காக மரியாதை செய்வது என்கின்ற மூடப்பழக்க வழக்கத்தை ஒழிப்பது சீர்திருத் தத்தில் பட்டது என்று தலைவர் திருசெங்கோட்டையா அவர்கள் கருதாததால் தன்னை வயதில் சிறியவன் என்று பல தடவை சொல்லி விட்டார்.  அது சரியல்ல.  அறிவுள்ள வர்களும் , அரும் பெரும் காரியங்களைத் தன்னலமற்று தியாகபுத்தியுடன் செய்கின்றவர்களும்தான் பெரியவர்களே யொழியவெறும் வயதைப்பார்த்துநரையைப்பார்த்துநடுக்கத்தைப்பார்த்து பெரியவர்கள் என்று மயங்குவது தவறுதலாகும்.  ஆகையால் இன்று நமக்குக்கிடைத்த தலைவர் சரியானதலைவரேயாவர்.  பெரியவரேயாவர்மற்றும் எனக்குப் பல வரவேற்புப் பத்திரங்கள் கொடுத் தீர்கள்.  அதில் நீங்கள் எனது கொள்கைகளை நன்றாய் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் அந்தக் கொள்கை களுக்கு என்னை ஊக்கமாய் உழைக்கும்படி எதிர்பார்க் கீன்றீர்கள்தூண்டுகின்றீர்கள் என்றுமேதான் கருதி அவற்றை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.

சீர்திருத்தம்

தவிர 'சீர்திருத்தம்என்பதைப்பற்றிப் பேசுவதில் யாருக் குச் சீர்திருத்தம்?  எப்படிப்பட்ட சீர்திருத்தம்?  எதற்காகச் சீர்திருத்தம்?  எது சீர்திருத்தம்?  அவற்றை எப்படி நிர்ண யிப்பது?  அதற்கு முட்டுக்கட்டை எது?  பிறகு அவற்றை எப்படி அமலுக்கு கொண்டு வருவது?  என்பவைபோன்ற விஷயங்கள் சீர்திருத்தத்தலைப்பில் பேச வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.  அப்படிப்பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும் அறிவுக்குட்பட்ட சீர்திருத்தம் என்றும்மனிதத் தன்மையும் சுதந்திரமும் அடைவதற்கு என்றும்உலக அக்கம் பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமையுடன் போராடி சீர் திருத்தமடைய வேண்டுமென்றும்தான் சொல்லக்கூடும்.  எவ்வித சீர்திருத்தத்திற்கும் பலவிரோதிகள் உண்டு.  அவை பழைமைமுன்னோர்வாக்குமகான்வாக்குவேதத்தின் கட்டளைசாஸ்திரசம்மதம்வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம்நம்பியே ஒப்புக்கொண்டாக வேண்டியது என்பவைபோன்ற நிர்ப்பந்தம் முதலியவைகள் எல்லாம் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவை களுமாகும்.

தன்னைச் சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக் கொள் ளுகின்றவர்கள் மேற்கண்ட அவ்வளவையும் தங்கள் அறிவால் பிரதிட்சயக் கண்களால் அலசிப் பார்க்க உரிமையும் தைரியமும் உடையவர்களாக இருக்கவேண்டும்.  அதைவிட்டு விட்டு 'மற்றதெல்லாம் சரிஆனால் 'மதத்தைப் பற்றி பேசலாமா?  கடவுளைப்பற்றி பேசலாமா?  தேசியத் தைப்பற்றி பேசலாமா?  புராணங்களைப்பற்றி பேசலாமா?  மகான்களைப்பற்றி பேசலாமா?  மகான்கள் அபிப்பிரா யத்தைப்பற்றி பேசலாமா?  நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டாஎன்பது போன்ற பிடிவாதகுணங்களும்தன்னம் பிக்கையற்ற குணங்களும், 'ஆனால்'களும் உடைய வர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது.  ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும்தனது அறிவில் நம்பிக்கையும்பரீட்சிக்கும் தாராள தன்மையும் வேண்டும்.  இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்த மடைந்துவிட்டது.  நாம் மாத்திரம் யாரைத் தொடலாம்?  யார் வீட்டில் சாப் பிடலாம்?  எதைச் சாப்பிடலாம்?  என்பது போன்றவைகளில் இப்பொழுது , இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம்.

உலக மக்கள் ஆகாயத்தில் பறக்கின்றார்கள்.  நம் மகான்கள் பிணங்கள்போல் மக்கள் தோள்களின் மீது சுமந்து செல்லப்படு கின்றார்கள்.  மற்ற நாட்டு மக்கள் புதியபுதிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சீர்திருத்தமடை கின்றார்கள்.  நமது நாட்டு மக்கள் நம்பாட்டன் காலத்தில் இருந்த சாதனத்தைத் தேடிப் பிடித்து அட்டாலியில் இருந்து இறக்கி அமலுக்குக் கொண்டு வருகின்றார்கள்.

முன்னேற்றம்சீர்திருத்தம் என்கின்ற துறையே நமது நாட்டு மக்களுக்குத் தடைப் படுத்தப்பட்டு விட்டது.  அந்தப் பக்கம் திரும்புவதென் றால் "உயிரை விடுகின்றேன்என்கின்றார்கள்.  ஏனெனில் இன்றைய இந்திய நிலைமை நமது பாட்டன் காலத்து நிலைமை.  ஆகிய எல்லாம் சோம்பேறிகள் வயிற்றுப் பிழைப்புக்கும் ஒருவர் பிழைக்க ஒருவர் உழைக்கும் முறைமைக்கும் அனுகூல மாய் கற்பிக் கப்பட்டிருப்பதால் அதிலிருந்து மாறுவதற்கு சோம்பேறி களும்ஊரார் உழைப்பில் சாப்பிடுகின்றவர் களும் ஒரு நாளும் ஒப்ப மாட்டார்கள் ஆதலால் நம் நாட்டுமக்களே நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின் றார்கள்.  இந்தக் கூட்டம் ஒரு நாளும் இந்தியாவை - இந்து மக்களை முன்னேற விடவே விடாது.  சுதந்திரமாய் வாழவும் சம்மதிக்க மாட்டார்கள்.  அதனாலேயேதான் அவர்கள் பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும்அவர்களுக்குச் செல்வம் சேராமல் இருக்கும் படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால்கடவுள் பெயரால் தேசியத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90-மக்களை 100-க்கு 10 மக்கள் ஏமாற்றி வருகின்றார்கள்.  இந்த சூழ்ச்சி மாறுதலடைய வேண்டுமானால் கடவுள்மதம்தெய்வீகம்தேசியம் முதலாகிய எல்லா புரட்டுகளையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும் அதற்கு மக்கள் சம்மதிப்ப தென்பது மிகக் கஷ்டமான காரியமாகும்ஏனெனில் இவை சம்பந்தமான மூட நம்பிக்கையும்பிடிவாதமும் நம் மக்களது இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது.  அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத்தையும்வயிற்றுப் பிழைப்பாய்க்கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டுவருகின்றார்கள்.  அவர்களது தொல்லை அடி யோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோமுன்னேற்றமோ சுலபமான காரியமல்ல.

உதாரணமாகமதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதிவித்தியாசம் தப்புபழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள் ளுவானா?  என்று பாருங்கள்.  அன்றியும் அவனது மதம்ஜாதிஉயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பானா?  அல்லது இருக்கமாட்டானா?  என்று பாருங்கள்அன்றியும் மதப் பிரசாரம் செய்யவும் வெளி கிளம்பமாட்டானா?  என்றும் பாருங்கள்.  இதுபோலவே கடவுள்தேசியம் என்பதின் பயனாய் வயிறுவளர்க்கும் சோம்பேறிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா?  என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம்தேசிய பிரசாரம் செய்ய மாட்டார்களா?  என்றும் யோசித்துப் பாருங்கள்.

இந்த முட்டுக்கட்டையும் எதிர்பிரசாரக்கூட்டமும் இயற்கையே யானாலும் அவை யொழிந்தாகவேண்டும்.  நமது மக்கள் படித்தவர்கள் என்றாலும்பாமர மக்கள் என்றாலும் இவ்விஷயங்களில் ஒரே மாதிரி மூடர்களாகவே இருக்கின்றார்கள்.

உதாரணமாகஒரு 'வடுகனோஒரு 'கைக்கோளனோ', 'ஒரு செட்டியோ',  எவ்வளவு தான் சுத்தமாய் இருந்து கொண்டு ஒருபடி அரிசிக்கு 30 இட்லி போட்டு இட்லி 1-க்கு கால் அணாவுக்கு விற்றாலும் நமது அறிவாளிகள் என்ப வர்கள் வாங்குவதில்லை.  ஆனால் பார்ப்பனன் என்கின்ற ஒருவன் எவ்வளவு அழுக்குத்துணியுடனும்சொரிசிரங் குடனும்வேர்வை நாற்றத்துடனும்வெள்ளைப் படையு டனுமிருந்தாலும் ஒரு படிக்கு 60 இட்லி வீதம் போட்டாலும்இட்லி ஒன்று 0-0-6 பைசா வீதம் முன் பணம் கொடுத்து 'சாமிசாமிஎன்று 'சொர்க்கவாசல் பிரசாதம்போல் கேட்டு வாங்கிச் சாப்பிடத் தயாராயிருக்கின்றோம்.  இது பாமர மக்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.  பண்டிதர்களிடமும்நாகரிக செல்வவான்களிடமுமே இந்தக் குணத்தை பார்க்கின்றேன்.

ஆகவே சீர்திருத்தத்திற்கு யார் முட்டுக்கட்டை என்று பாருங்கள்.  இதுபோலவே கடவுள் விஷயத்திலும்கடவுள் என்பதை மனிதன் தனது அக்கிரமங்களுக்குப் பரிகாரம் என்று நினைத்துக் கொண்டுமற்றவர்களை இம்சித்துத் தப்பித்துக் கொள்வதற்கும்ஏமாற்றுவதற்கும்தான் மற்றமக்களை  விட அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தி அதனால் அடைந்த பயனை நிலை நிறுத்திக்கொள்ள கடவுளை ஒரு சாக்காய் வைத்து அதற்குக் கோவில் கட்டவும்கும்பாபிஷேகம் செய்யவும்விளக்குப் போடவும்அதன் தலையில் பால்நெய்தயிர்பஞ்சாமிர்தம்தேன் ஆகிய வஸ்துக்களைக் கொட்டிப் பாழாக்கவும்அதை ஆதாரமாய்க் கொண்டு இந்தக்காரியம் செய்து வயிறு பிழைப்பதையே ஒரு தொழிலாய்க் கொண்டு அநேக சோம்பேறிகள் பிழைக்கவுமான காரியத்தில் அமர்ந் திருக்கும் கூட்டத்தார்கடவுள் புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா?  மேலும் முட்டுக் கட்டையாய் இருக்க மாட்டார்களா?  மற்றும் கடவுள் பிரசாரமும் செய்ய மாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப்புரட்டில் ஏமாறுகின்றவர்களும்இதற்கு அனு கூலமாய் இருப்பவர்களும் எல்லோரும் முழு மூடமக்கள் என்றே சொல்லிவிடலாமா?  என்றும் பாருங்கள்.

அப்படியும் இல்லையேநல்ல சாமர்த்தியக்காரர்கள்வெகு தந்திரமாய்ப் பணம் சம்பாதிப்பவர்கள்ஜால வித்தைபோல் கெட்டிக்காரத்தனம் செய்து மற்ற மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் யுக்தி சாலிகள் ஆகிய மக்களே இவ்வளவு புத்தி நுட்பத்துடனும்தந்திரத்துடனும்கஷ்டத்துடனும் எத்தனையோ மக்கள் வயிறெரிய-எரிய அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் கல்மனதுடனும்பசியுடன் குழந்தைகளும்.  பெண்களும்மொண்டி முடங் களும்கிழடுகளும் பசியால் பதறப் பதற அதைச் சற்றும் லட்சியம் செய்யாத உலுத்த சிகாமணிகளும் ஆயிரம் ஆயிரமாய்லட்சம் லட்சமாய் இம்மாதிரி கடவுள் புரட்டு காரியங்களில்செலவு செய்து பாழாக்குவதென்றால் இதை முட்டாள்தனமென்றும்அறியாத்தனமென்றும்சுலபத்தில் அசட்டுத்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா?  என்று யோசித்துப்பாருங்கள்.  ஆகவே இந்த மக்கள் கடவுள் புரட்டை வெளியாக்க முட்டுக்கட்டையாயிருக்க மாட் டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இந்த மாதிரி ஆட்களின் காரியங்களால் பிழைக்க விருக்கும் கோயிலைக்காத்துப்பிழைக்கும் மக்கள் கடவுள் பிரசாரம் செய்யமாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இதுபோலவே தேசியமென்பதும்ஏழைகளுக்குத் துன்பம் விளைவித்து வருவதும் குடியானவர்களுக்குத் தொல்லை விளைவித்துவருவதும்தொழிலாளிகளுக்கும்சரீரத்தால் பாடுபடுகின்றவர்களுக்கும் அரைபட்டினியையே அளித்து வருவதும் சோம்பேறிகள் மூன்றுவேஷ்டியுடன் வாழவும் சரீரத்தில் வேர்வை ஏற்படாமல் மினுக்காக வெள்ளைவேஷ்டியுடன் திரியவும்பதவிஓட்டுக்கும்உத்தியோகத்திற்கும் அலையும் கூட்டத்தார் இத் தேசி யத்தை நம்பியே முன்னுக்கு வர வேண்டுமென்று கருதி யிருக்கும் கூட்டத்தார்கண்மூடித்தனமாய் வியாபாரத்திற்கு முன்முதல் போடுவதுபோல் தேசிய அர்ச்சகர் களுக்கு - தரகர்களுக்கு அள்ளி அளித்துக் கொண்டிருக்கும் போது தேசியப்புரட்டை வெளியாக்குவது சுலபமா?  அல்லது சாத்தியமா?  என்றும் யோசித்துப்பாருங்கள்இவர்கள் முட்டுக் கட்டையாயிருக்க மாட்டார்களா?  என்றும் யோசித் துப் பாருங்கள்.  அதுமாத்திரமல்லாமல் ஒரு கூட்டம் சீர்திருத்தத்திற்கு எதிர்ப் பிரசாரமும் செய்யமாட்டார்களா?  என்றும் கருதிப் பாருங்கள்ஆகவேஎந்தப் புரட்டை யொழிக்க வேண்டுமானாலும் அதனால் லாபமடை கின்றவர்கள் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள்.  பேசிப் பேசிஎழுதியெழுதி இந்தக் கூட்டத் தார்களால் வசவும் தொல்லையும் பட்டுப்பட்டு பிறகு ஏதாவது சிறிது கண் விழிப்பை உண்டாக்க முடியுமே யொழிய மற்றபடி உண்மை சீர்திருத்தம் என்பது திடீரென்றாகக்கூடிய சுலபமான காரியமல்ல.

ஆனபோதிலும் விடாமுயற்சியுடன் சுயநலப்பற்றற்ற வாலிபர்களும்.  நம்பிக்கையுள்ள பெரியவர்களும் பாடு பட்டால் சீர்திருத்தம் சீக்கிரம் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை உலகம் சீர்திருத்தப் பக்கம் திரும்பி விட்டது.  இந்தியாவைப் பார்த்து உலகத்தில் எல்லா நாடும் பரிகாசம் செய்கின்றது.  ஆதலால் தானாகவே சீர்திருத் தத்திற்குப் பல நற்குறிகள் காணப்படுகின்றனநான் உங்களைக் கேட்பதெல்லாம் அதைத் தடுக்கவராதீர்கள் என்பதேயாகும்.  சீர்திருத்தக்காரியங்களில் வேறு காரி யத்தைப் போட்டு குழப்பாதீர்கள்.  சீர்திருத்தவாதிகள் முதலில் ஜாதிப் பிரிவை அழிக்க முன்வாருங்கள்பெண் களுக்கும் ஆண்களுக்கும் சிறிதும் வித்தியாசமில்லாமல் ஒன்று போலாக்குங்கள்.  பிறகு உங்களால் என்ன காரிய மாகாது என்று நினைக்கிறீர்கள்?  சுயராஜ்யம் பரராஜ்யம் என்பதெல்லாம் உங்கள் காலடியில் தானாகவே வந்துவிடும்.  அதில்லாமல் வெறும் கூப்பாடு உண்மைப்பயனளிக்காது.  இந்த ஊரில் சுயராஜ்யக்காரர் 100க்கு 75 பேர்கள் இருப்ப தாகக் கத்தலாம்கதர் கட்டலாம்கொடி பிடிக்கலாம்காந்திக்குல்லாய் போடலாம்தீண்டாமை விலக்குவதுதான் சுயராஜ்யத்தின் முதல் கொள்கை என்றுசொல்லலாம்மகாத்மாவுக்கு ஜேஎன்றுகத்தலாம்.  சுயமரியாதை இயக்கம் தேசியத்திற்கு விரோதம் என்றும் சொல்லலாம்.  ஆனால் இந்த ஊர் தண்ணீர் கிணற்றில் ஒரு பறையன் வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் மெள்ள ஒரு நான்கு பெயர்கள் சம்மதிப்பார்களா?  தண்ணீர் மொண்டவனை உதைக்காமல் இருப்பார்களா?  பாருங்கள்.  சுயராஜ்யம் என்பது வந்தால் மாத்திரம் இந்த ஊர் ஜனங்களுக்குப் புத்தி மாறிவிடுமா?  யோசித்துப்பாருங்கள்.

ஆகவே ஒருவன் "கங்காதரா மாண்டாயோவென்றால் எல்லாரும் விபரம் தெரியாமல் அழுகாதீர்கள்.  இந்தப் பலக் குறைவேதான் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டைஆகை யால் கவனித்து உங்களுக்குக் தோன்றுகிறபடி நடவுங்கள்.  நான் சொன்னதை யோசித்து ஆராய்ந்து பார்க்காமல் நம்பிவிடாதீர்கள்.

(02-08-1931-ஆம் தேதி மாலை 5 மணிக்கு செங்குந்தர் சாவடியில் கூடிய கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 09.08.1931

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக