திங்கள், 27 மே, 2024

வைதிகப் பொய் மூட்டைகள் சுயமரியாதைப் பிரச்சாரத்தால் சிதறட்டும் – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு
Published May 19, 2024

உலகமெங்கும், ‘சுதந்திரம்’, ‘சமத்துவம்’, ‘சகோதரத் துவம்’, விடுதலை என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத் திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து ஒழித்து தரைமட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் படை எழுச்சியினால், மதக் கோட்டை களும், சாஸ்திரக் கோட்டைகளும், வருணா சிரமத் தருமக் கோட்டைகளும், சுய நலக் கோட்டைகளும், பகுத்தறிவு குண்டுகளால் அடியோடு பெயர்த்தெறியப் படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் உள்ள உலக நிலையறியாத, பரந்த நோக்கமில்லாத வைதிகப் பிடுங்கல்கள் தர்ப்பைப் புல்லுகளையும், பழைய பஞ்சாங்க கட்டுகளையும், சாஸ்திரக் குப்பைகளையும் காட்டி மேற்படி கோட்டைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவர்களின் முயற்சி வீணென்று பள்ளிப் பிள்ளைகளும் அறிந்து பரிகசிக் கின்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த வைதிகப் பிடுங்கல்களின் போக்கையும், மனப் பாங்கையும், முட்டாள் தனத்தையும் சென்ற 20-06-1932ல் தஞ்சை ஜில்லா திருவிடை மருதூரில் கூடிய பிராமணர் மகாநாட்டின் தீர்மானங்களைக் கொண்டு உணரலாம். இனி அம்மகாநாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்களையும் அவைகளின் மூலம் அந்த மிரட்சியடைந்த மூளையையுடைய வைதிக மக்களின் போக்கையும் கவனிப்போம்.

பெண்ணடிமைத்தனம்

பெண்கள் விஷயமாக அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில், பெண்கள் மகாநாடுகளை யெல்லாம் கண்டித்தும், பெண்கள் மகாநாடுகளெல்லாம் மேல்நாட்டு கல்விகற்ற பெண்களால் கூட்டப்படுகின்ற தென்றும் அவர்கள் விரும்பும் சுதந்திரங்கள் மதத்திற்கும் சமுக பழக்க வழக்கங்களுக்கும் விரோதமானவை என்றும், ஆகவே, அவர்களுடைய அபிப்பிராயங்கள் இந்திய பெண்களின் அபிப்பிராயம் அல்லவென்றும், ஜன சமுகத்திற்கும் அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். வைதிகர்களின் புத்தியற்ற தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இன்று பெண்கள் விரும்பும் சுதந்திரமும், சொத்துரிமையும் கல்வியறிவும், சுகாதார வாழ்க்கையும் ஆண்களைப் போல் வயது வந்தபின் தங்கள் விருப்பப்படி மணஞ்செய்து கொள்ளும் உரிமையும் விதவைகளாகிவிட்டால் மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமையும், கணவனுடைய கொடு மையோ நடத்தையையோ சகிக்கமுடியாதபோது மண விடுதலை செய்து கொள்ளும் சுதந்திரமும், தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள சட்ட சபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங் களிலும் இடம் பெறும் உரிமையும் கேட்கின்றார்கள். இவ்வுரிமைக ளெல்லாம் இன்று ஆண்களுக்கு எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறு பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இளம் வயதில் மாடு, கன்றுகளை விற்பனை புரிவது போல பெண்களை மணம் செய் வித்து தாலியறுத்த பின் வீட்டின் மூலையில் உட்கார வைத்து, அவர்கள் தங்கள் இயற்கை உணர்ச் சியை அடக்கிக் கொள்ள முடியாமல் திருட்டுத்தனமாக அந்நிய புருஷ ருடன் இன்பம் அனுபவித்து கர்ப்ப மாகி குழந்தை பிறந்த பின் அதை கழுத்தை முறித்து கள்ளிக் காட் டிலோ, சாக்கடையிலோ, கிணற் றிலோ, ஆற்றிலோ, குளத்திலோ எறியும்படி செய்வது மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம் மதமா? கணவனால் வெறுக்கப்பட்ட சொத்துரிமையும், கல்வியறிவும், ஆதரவும் அற்ற பரிதாபகரமான நிலைக்குரிய பெண்கள் விபசார வாழ்க்கையில் ஈடுபட்டு மானத்தை விற்று ஜீவனஞ் செய்யும் காரியந் தான் மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? மதம், பழக்கவழக்கம் என்று கண்மூடிக்கதறிக் கொண்டிருக் கும் அறிவிலிகளால் தான் பெண் மக்கள் மேற்கூறிய கொடிய வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருக்கிற தென்பதைப் பகுத்தறிவாளர் மறுக்க முடியுமா? இவற்றையுணராத வைதிகர்கள் பெண்கள் விரும்பும் சுதந்திரத்தால் மதமும், பழக்க வழக்கங்களும் போய் விடும் என்று ஏன் பாழும் குரலெடுத்துக் கத்துகிறார்கள்?

ஆலயப் பிரவேசம்

அடுத்தப்படியாக ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தீர் மானத்தில் குருவாயூர் முதலிய இடங்களில் நடை பெறும் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகங்களைக் கண்டித்தும், தீண்டாதார் ஆலயங்களில் நுழைந்தால் ஸநாதன தர்மமும் இந்துமத சம்பிரதாயமும் அழிந்து விடுவதுடன் இந்து சமுகத்தில் கலகமும் வேற்று மைகளும் உண்டாகுமென்றும் ஆகையால் காங்கிரஸ் இவ்வியக்கத்தை ஆதரிக்கக் கூடாதெனவும் எச் சரிக்கை செய்வதாகவும் குறிப்பிடுகின்றார்கள். கோயில் பிரவேசத்திற்காகச் சத்தியாக்கிரகம் பண்ண வேண்டும் என்கின்றவர்கள் இதைக் கவனிக்க வேண்டுகின்றோம். கோயிலுக்குள் நுழையும் உரிமை பெறச் சத்தியாக்கிரகம் பண்ணுகின்ற கஷ்டத்தையும் கோயில் பிரவேச உரிமை கிடைத்தபின், அந்தக் கல்லுச் சாமிகளுக்காகத் தாங்கள் பாடுபட்டுத் தேடும் செல்வங்களைப் பாழாக்கும் முட்டாள்தனத்தை போக்க பாடுபடவேண்டிய கஷ்டத்தையும் ஆலோ சித்துப் பார்த்தால், இப்பொழுதே இக்கஷ்டங்களுக்கு இடம் இல்லாமல் தடுத்து விடலாமல்லவா? கோயில் பிர வேசத்திற்காகப் பாடுபடுவதைவிட, கோயில்களின் பயனற்ற தன்மைகளையும் அவைகளால் உண்டாகும் கஷ்டநஷ்டங்களையும் எடுத்துக்கூறி எவரையும் கோயிலுக்குப் போகாமலும், அதற்காக செலவு செய்யாமலும் தடுக்க முயற்சிப்பது எவ்வளவோ பயன்தரக் கூடிய தென்பதே நமது அபிப்பிராயமாகும். ஜனங்கள் கோயில் களுக்குப் போவதையும் அங்கே கொண்டு போய் பணத்தைப் பார்ப்பனர்கள் வயிற்றில் போடுவதையும் நிறுத்தி விடுவார்களானால் கோயில் களும் அழிந்து போகும்; அவைகளைக் கட்டிக் கொண்டு அழும் வைதிகர்களும், பார்ப்பனர்களும் கொட்டம் அடங்கி மூலையில் உட்கார்ந்து விடுவார்கள். இதைவிட்டு, கோயில் பிரவேசத்திற்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் கோயில் களுக்கு மதிப்பும், பாமர மக்களின் செல்வங்களுக் குக் கேடும், சோம்பேறி வைதிகர்களுக்கும், பார்ப்பனர் களுக்கும் பிழைப்பும் இருந்து கொண்டுதானிருக்கும் ஆகையால் கோயில்களை ஒழிப்பதற்கு வழி தேடுவதே சாலச் சிறந்ததென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம். இந்த வகையில் பார்ப்பனர்களே கோயில்களைக் கட்டிக் கொண்டு அழுவதில் நமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், கோயில்களாகட்டும், குளங்களாகட்டும்; மற்ற எந்த பொது ஸ்தலங்களா கட்டும்; அவைகளில் எல்லோரும் பிரவேசிக்கக் கூடிய உரிமையை நிலை நாட்டும் பொருட்டுச் செய்யப்படும் எந்த முயற்சியையும் நாம் முழு மனத்துடன் ஆதரிக் கின்றோம் பார்ப்பனர்கள் எதையும் தங்களுடைய ஏகபோக உரிமையாக அனுபவிக்கச் சுதந்திரம் பெற் றிருந்த காலம் மலையேறி விட்டதென்று எச்சரிக் கின்றோம்.

சோம்பேறிகளின் ஆதிக்கம்

அடுத்தப்படியாக, ‘மத உரிமை’ பற்றி நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் மத உரிமைகளுக்கு விரோதமாகச் சட்டங்கள் ஏற்படுத்த கூடாதென சர்க்காருக்கும் சட்டசபைகளுக்கும் தடையேற்படுத்த வேண்டும் என்றும் மதச் சம்பந்தமான பழக்க வழக்கங்களில் அரசாங்கமும் சட்டசபைகளும் தலையிடக் கூடாதென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த வைதிகர்களின் மனப்போக்கின்படி பார்த்தால், அரசாங்கம் என்று ஒன்று இருக்க வேண்டிய தேவையே இல்லை என்று கூறலாம். தேசமக்களின் கொடிய பழக்க வழக்கங்களைப் போக்கி அவர்களை நலமுடன் வாழச் செய்ய வேண்டியதே அரசாங்கத்தின் முக்கிய கடமை யாகும். இக்கடமையைச் செய்யாத அரசாங்கம் இருந்தும் பயனில்லை; இறந்தும் பயனில்லை. தன் மதத்தினர் தவிர அந்நிய மதத்தினரை யெல்லாம் அழிக்க வேண்டும் என்று கூறும் ஒரு மத உரிமைக்கு அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? புருஷன் இறந்த பின் அவன் மனைவி யையும் கஷ்டத்தில் ஏற்றிக் கொலை செய்யும் மத உரிமையை அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? பெண்களை பொட்டுக்கட்டி விட்டு விப சாரத் தொழில் நடத்தச் செய்யும் மதவுரிமையை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரமும் நெற்றி வேர்வை நிலத்தில் வரும்படி உழைப்போர் உணவின்றி வருந்திச் சாகவும் நகத்தில் அழுக்குப்படாமல் வெல்வெட்டு மெத்தையிட்ட சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கும் சோம்பேறிகள் ஆதிக்கம் செலுத்தும் மதவுரிமைக்கு, அக்கிரமத்திற்கு அரசாங்கம் எப்பொழுதும் இடங்கொடுத்துக் கொண்டிருக்க முடி யுமா? ஆகையால் தேசம் நன்மையடைய வேண்டு மானால், மதவுரிமை, ஜாதிஉரிமை, பழக்க வழக்கம் என்பவற்றையெல் லாம் மூட்டைக்கட்டி அட்லாண்டிக் பெருங்கடலில் போட்டு விட்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்ற வேண்டியதே முறையாகும். இத்தகைய அரசியல் சீர்திருத்தம் வருவ தாயிருந்தால்தான் சுயமரியாதைக்காரர்கள், அரசியல் சீர்திருத்தத்தை ஆதரிப்பார்கள். இவ்வாறில்லாமல் இந்த வைதிகர்கள் விரும்புகின்றபடியும் காங்கிரஸ் காரர்கள் கேட்கின்ற படியும், மதபாதுகாப்புள்ள சீர் திருத்தம் எது வந்தாலும் அதைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரிக்கப் போவதில்லை. ஒரு சமயம் ஆதரிக்கும் படியான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், மதப்பாதுகாப்பை ஒழித்துச் சமுக சீர்திருத்தச் சட் டங்களை ஏற்படுத்தவே முன்வருவார்கள் என்பதில் அய்யமில்லை. ஆதலால், வைதிகர்கள் வேண்டும் மதப் பாதுகாப்புப் பூச்சாண்டி இனிப் பலிக்காதென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

பால்ய விவாகம்

அடுத்தப்படியாக சாரதா சட்டத்தைக் கண்டித்தும், இச்சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆதரிப்பதைக் கண்டித்தும் பால்ய விவாகத்தைத் தடை செய்வது மதத்திற்கு விரோத மென்றும் ஆதலால், சாரதா சட்டத்தைத் திருத்தவோ, ரத்து செய் யவோ, ஆதரவளிக்க வேண்டும் என்றும் தீர்மானித் திருக்கின்றார்கள். இவர்கள் தீர்மானத் திலேயே சாரதா சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆதரிப்பதாக குறிப்பிட்டிருக்கும் போது சிலராகிய வைதிகர்கள் ஏன் கூச்சலிட வேண்டும்? இச் சட்டம் உண்மையிலேயே ஜனசமுகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதென்பதை அறிந்துதானே பலரும் ஆதரிக்கின் றார்கள், அப்படி இருக்க ஏன் இவ்வைதிகர்கள் இதை எதிர்க்க வேண்டும்? மதம் என்ற குருட்டுத்தனம் தானே இவர் களுடைய அறிவை நன்மைதீமைகளை ஆராய்ந்து பார்க்க முடியாமல் தடை செய்கின்றது? ஆகையால் இந்த வகையிலும் இவர்களுடையத்தீர்மானம் ஒரு செல்லாக் காசு என்றுதான் நாம் கூறுவோம்.

புரோகிதப் புரட்டு

கடைசியாக மற்றொருத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதாவது வேதம் ஆகமம் முதலிய வைகளை பிரசாரம் பண்ணுவதற்கும், புரோகிதர் கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வைதிகக் காரியங்களுக்கு அழிவுவராமல் காப்பாற்றுவ தற்கும் வருணாசிரம தருமசபைகள் ஏற்படுத்துவதற்கும் இந்துமத தத்துவங்களைப் பிரசாரம் பண்ணுவதற்கும் மாணாக்கர்களிடம் வைதிக ஒழுக்கங்கள் உண்டாவதற்காக சிறு விடுதிகளை ஏற்படுத்தவும் தர்ம ஊழியர் சங்கம் என்னும் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சமுகத்தினரும் வேதாகமப் புரட்டுகளையும், புரோகிதப் புரட்டுக் களையும், அர்ச்சகர்களின் அயோக்கியத் தனங்களை யும், வருணாசிரம தர்ம அக்கிரமங்களையும், பழைய குருட்டுப் பழக்கங்களையும் ஒழிக்க முயற்சி செய்யும் இக்காலத்தில் நமது பார்ப்பனர்கள் இவற்றை வளர்க்க முயற்சி செய்வது எவ்வளவு புத்திசாலித்தனமென்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். உண்மையில் இவர்களுக்குத் தேசத்தின் மீது கவனமோ, ஏழைகளின் மேல் அனுதாபமோ மற்ற தேசங்களைப்போல் நமது தேசமும் சிறந்து விளங்க வேண்டுமென்ற ஆசையோ இருந்தால் இவ்வாறு மகாநாடுகள் கூட்டி பிற்போக் கானத் தீர்மானங்களைச் செய்வார்களா? என்றுதான் கேட்கிறோம்.

பணபலமும், பத்திரிகை பலமும், செல்வாக்குப் பலமும் படைத்த வைதிகப் பார்ப்பனர்கள் இப்போழுது தீர்மானிக் கிறபடி, பலதுறைகளிலும் நுழைந்து பிரசாரம் பண்ணவும் பார்ப்பனர்களை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் பாமர மக்களில் பலர் இவர்கள் பிரசாரத்தினால் ஏமாறவும் கூடும்.

சுயமரியாதைப் பிரச்சாரம்

ஆனால் இது எப்பொழுதும் நிலைத்து நிற்க முடியாது என்பது மாத்திரம் நிச்சயம். காலச்சக்கரம் வெகுவேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந் நிலையில் பார்ப்பனர்களின் வைதிகப் பிரசாரம் ஒரே முறையில் செய்யப்படும் சுயமரியாதைப் பிரசார சண்டமாருதத்தால் சிதறிப் போய்விடும் என்பது நிச்சயம். ஆகையால் எங்கும் பகுத்தறிவும், விடு தலையும், சுதந்திரமும் உதயமாகிவரும் இக்காலத்தில் பார்ப்பனர்கள் மாத்திரம் இவ்வாறு இன்னும் ஏமாற்றி கொண்டிருக்க நினைப்பதும் அதற்காக மகாநாடு கூட்டுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் வீண்! வீண்! வீண்! என்று எச்சரிக்கை செய்கின்றோம். இத் தகைய அழுக்குமூட்டை வைதிகர்களைக் கண்டித் ததைத் தேசியப் புலிகள் நம்மைத் ‘தேசியத்துரோகிகள்’ என்றும் ‘சுயராஜ்ய விரோதிகள்’ என்றும் கூறுவது வடிகட்டின அயோக்கியத்தன மல்லவா? இனியேனும் யார் உண்மையான சுதந்திரத்திற்குப் பாடுபடுவர் களென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

– ‘குடிஅரசு’ – துணைத்தலையங்ம் – 26. 06. 1932

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக