திங்கள், 19 ஆகஸ்ட், 2024

திராவிடர்கள் – தந்தை பெரியார்




Published August 18, 2024, விடுதலை நாளேடு

திராவிடர் கழகமானது இனத்தின் பேரால், பிறவியின் காரணமாய், நாட்டின் உரிமையின் காரணமாய், ஆரியர்களால் இழிவு செய்யப்பட்டு அடக்கி ஒடுக்கி தாழ்த்தி வைத்திருக்கும் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத் திற்கும் பாடுபடும் ஓர் அமைப்பு (ஸ்தாபனம்) ஆகும். விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்து மத (ஆரிய) தர்மப்படி 4ஆம் வர்ணஸ்தர்களாகவும் அல்லது 5ஆம் அவர்ணஸ்தர்களாகவும் ஆக்கப் பட்டிருக்கும் சூத்திரர்கள் எனப்படுபவர்கள் எல்லாருடைய விடுதலைக் கும் முன்னேற் றத் திற்கும் உழைக்கும் கழகமாகும்.
திராவிடர்களைத்தான் சூத்திரர்கள் என்பதாக இந்து மதத்தின் பேரால் ஆரியர்கள் அழைத்து வரு கிறார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் இருந்து வருகின்றன. உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பின் கீழ் ஜாதி தர்மத்தை அனு சரிக்காதவர்கள், அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர் என்ற பெயர் கொண்டவர் என்றும், சூத்திரன் பிராமண ஸ்தீரியைப் புணர்ந்தால் பெறப்படும் குழந்தைகள் பாக்கிய ஜாதியர் என்றும், அதாவது சமீபத்தில் வரக்கூடாத சண்டாள ஜாதி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றும் பிராமணர்களுக்கு சூத்திர ஸ்தீரிகளிடத்தில் பிறந்த குழந்தைகள் ஆர்யா வர்த்த தேசத்தில் செம்படவன் என்ற ஈன ஜாதியாகச் சொல்லப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றும் ஜாதி தர்மம் தவறிய கலப்பினால் பிறப்பவர்களால்தான் தோல் வேலை செய்யும் (சக்கிலி) ஜாதியும், பிணத்தின் துணியைப் பிடித்துக் கொள்கிறவர்களும், எச்சில் சாப் பிடுகிறவர்களுமான (பறையர்) ஜாதியும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. “திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்களாய் விட்டார்கள்” என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மனு 10ஆம் அத்தியாயம் 44ஆம் ஸ்லோகம் ஆகும். மற்றும் “மிலேச்ச பாஷை பேசுகிறவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள்” என்று தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது. இது 10ஆம் அத்தியாயம் 45ஆம் ஸ்லோகம். தஸ்யூக்கள் என்றால் திருடர்கள் என்ற கருத்தும் அதிலேயே கீழே காட்டப்பட்டிருக்கிறது.

இதில் மற்றொரு விசேஷம் என்ன வென்றால் திராவிடன் என்கிற பெயரைப் போலவே ஆந்திரன் என்ற பெயரும் மனு தர்மத்தில் காணப்படுகிறது. அதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைக் கொன்று நாட்டில் கொண்டு வந்து விற்பவன் ஆந்திரன் என்று கூறப்பட்டிருக்கிறது. (அத்தி யாயம் 10 – ஸ்லோகம் 48) எனவே திராவிடர்கள், ஆந்திரர்கள் என்பது மாத்திரமல்லாமல், கீழான, இழிவான, தீண்டப்படாத திருடர்களான ஜாதியார்கள் என்பதை மனுதர்ம சாஸ்திரம் நன்றாக வலியுறுத்துகிறது என்பது 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.

மற்றும், “இவர்கள் அனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, மயானத்திற்குச் சமீபமான இடம் ஆகிய இடங்களில் இழி தொழிலைச் செய்யும் மக்கள் என்று யாவருக்கும் தெரியும்படியாக வாசம் செய்ய வேண்டியது” என்று 50ஆம் ஸ்லோகத் தில் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட திராவிடர்களான மக்கள் “நாயும் கழுதைகளும்தான் வளர்க்க வேண்டியது “மாடு முதலியன வைத்துக் கொண்டு ஜீவிக்கக் கூடாது” என்று 51ஆம் ஸ்லோகம் கூறுகிறது.

52- முதல் 57ஆம் ஸ்லோகம் வரையில் என்ன கூறப்படுகிறது தெரியுமா? திராவிடத் தோழர்களே! கவனியுங்கள். “இவர்கள் பிணத்தின் துணியையே உடுக்க வேண்டும். உடைந்த சட்டியில் அன்னம் புசிக்க வேண்டும். உலோகப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது. இரும்பு, பித்தளை ஆகியவகைகளால் செய்யப் பட்ட நகைகளையே அணிய வேண்டும். இவர்கள் ஜீவனத்துக்காக எப்போதும் வேலை தேடிக்கொண்டே திரிய வேண்டும். நல்ல காரியம் நடக்கும் போது இவர் களைப் பார்க்கக் கூடாது. இவர்களோடு பேசக்கூடாது. இவர்களைத் தங்கள் ஜாதிக்குள்ளாகவே மணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டும். இவர்களுக்கு நேரே எதுவும் கொடுக்கக் கூடாது. உடைந்த பாத்திரத்தில் அன்னம் போட்டு வைக்க வேண்டியது. ஊருக்குள் இரவில் சஞ்சரிக்க விடக்கூடாது” என்றும் இப்படிப்பட்ட ஈன ஜாதியார்கள் நல்ல வேடம் தரித்திருந்த போதிலும் அவர்களை ஈனர்கள் என்றே கருதவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரே ஒரு விமோசனம், அதென்ன தெரியுமா? அதுதான் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு காந்தியார் இங்கு வந்தபோது சொன்ன மார்க்கம். அதாவது ஒரு சூத்ர ஸ்த்ரீ வயிற்றில் பிராமணனுக்கு விவாக முறைப்படி பிறந்த பெண் மறுபடியும் பிராமணனையே மணந்ததின் மூலம் அவள் வயிற்றில் பிறந்து இப்படியாக 7 பிறவி பிறந்தால் 7ஆம் தலைமுறையில் பிராமண ஜாதி ஆகலாம் என்பதுதான். இதுதான் காந்தியார் தமிழ்நாட்டிற்கு வந்தபோது திருப்பூரில் சொன்னது. மற்றும் கடைசியாகச் “சூத்திரன் பிராமண னுடைய தொழிலைச் செய்வதாலேயே பிராமணன் ஆக மாட்டான். எப்படி ஒரு பிராமணன் எந்த விதமான இழிவான தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணனே ஒழிய சூத்திர ஜாதி ஆகமாட்டானோ அதுபோல ஒரு சூத்திரன் எவ்வளவு மேலான பிராமணன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் ஆகமாட்டான். இது பிரம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட உண்மையாகும், தத்துவமாகும்.” (அத்தியாயம் 10. ஸ்லோகம் 713)

பிராமண தர்மம்
பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும் பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய்ச் செய்யக் கூடாது. அதைச் செய்யாவிட்டால் ஜீவனத்திற்கு மார்க்க மில்லை என்கின்ற காலத்தில் அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். (அத்தியாயம் 10. ஸ்லோகம் 83)
ஏனெனில் அந்தப் பிழைப்பு இரும்புக் கலப்பை யையும் மண் வெட்டியையும் கொண்டு பூமியை வெட்ட வேண்டிய தாகும். ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். (அத்.10.சு.84)
தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக் கொண்டு அவனையும் நாட்டை விட்டு அரசன் உடனே விரட்டிவிடவேண்டும். (அத்.10.சு.96)
சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலிய வைகளுக்கு உரிமை கிடையாது. (அத். 10. சு.126)
சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிகமாக பொருள் சம்பாதிக்கக்கூடாது. அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும் (அத்.10.சு.129)
சூத்திரனுக்கு யாகாதி கர்மங்கள் சம்பந்தமில்லை. ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக வலுவினாலும் கொள்ளலாம். (அத்.11. சு.13)

அசுரர்கள் என்பது சூத்திரர்களைத்தான் என்பதற்கு ஆதாரம். மனு தர்ம சாஸ்திரத்தில் 11ஆம் அத்தியாயம் 20ஆம் சுலோகத்தில் காணப்படுகிறது. அதாவது யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள் – அவர்கள் பொருளைக் கவ்வுவது தர்மமாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திராவிடர்கள் சூத்திரர்கள், சூத்திரர்களுக்கு யாகாதி காரியங்களுக்குள் உரிமையில்லை. யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள். இந்த மாதிரி குறிப்புகள் மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்குமானால் மனுதர்ம சாஸ்திரமே இந்து மதத்திற் கேற்பட்ட தர்மமானால் திராவிடர்கள் இந்துக்களானால் திராவிடர்களின் நிலை என்ன என்பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட இழிவுகளேற்பட்ட தன்மை திராவிட சமுதாயத்திற்கே இருக்கக் கூடாதென்றும், அவை எப்படி யாவது ஒழிக்கப்பட்டே ஆக வேண்டுமென்றும், அதற்கு முக்கிய எல்லையான திராவிட நாட்டை (சென்னை மாகாணத்தை) பரப்பாக வைத்து அதிலுள்ளவர்களை திரா விடர்களாகக் கருதி நடத்தப்படும் திராவிடர் கழக திராவிட நாடு எழுச்சிக்கு தமிழ்நாடு. ஆந்திரநாடு, கேரள நாடு, கருநாடக நாடு என்பதான கிளர்ச்சிகளை இந்த முக்கியக் குறிப்பில்லாமல் குறுக்கே போட்டு மொழியைப் பிரதானமாக வைத்துக் கொண்டு போராடுவதென்றால் மனுதர்ம சாஸ் திரத்தை மெய்ப்படுத்துகிறோம் என்ப தல்லாமல் அதில் வேறு தன்மை என்ன இருக்கிறதாகக் காணமுடியும்?
‘குடிஅரசு’ – கட்டுரை – 20.09.1947



வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

பொது உடைமை

 

பெரியார் பேசுகிறார்…

ஜனவரி 16-31 2019

பொது உடைமை

தந்தை பெரியார்

பொது உடைமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது.

‘பொதுஉடைமை’ என்னும் வார்த்தையானது அது பற்றிய ஆராய்ச்சியே இல்லாத காரணத்தாலும், சுயநலத்தின் காரணமாய் அவ்வார்த்தைக்கு எதிராகவே பிரச்சாரங்கள் நடைபெறுவதாலும், பொதுஜனங்களுக்கு பொது உடைமை என்றால் வெறுப்பாயும், பயமாயும் தப்பிதமாயும் தோன்றலாம். எந்தப் புதிய கொள்கையும், அபிப்பிராயங்களும் ஆரம்பகாலத்தில் பாமர மக்களிடையே வெறுப்பாகவும் கஷ்டமாகவும்தான் தோன்றும். இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஏனெனில் புதிய அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் கொண்டுவந்து புகுத்தியவர்கள் சரித்திரங்கள் என்பவைகளைப் பார்த்தால் இதுதானாகவே விளங்கிவிடும். ஆதலால் பொது உடைமை என்ற வார்த்தையும், கொள்கையும் பொது ஜனங்களால் பாமரமக்களால் சுயநலங்கொண்ட சோம்பேறிக் கூட்டங்களால் ஆதரிக்கப்படுகின்றதா? வரவேற்கப் படுகின்றதா? வெறுக்கப்படாமல் இருக்கின்றதா? என்பவைகளைப் பற்றி கவனிக்காமல் அது விஷயமாய் நமக்குத் தோன்றியதை எழுதலாம் என்றே கருதுகிறோம்.

பொது உடைமை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள சொத்துக்கள், வரும்படிகள், தொழில்கள், லாப நஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போகபோக்கியங்கள், பொறுப்பு கவலைகள் முதலாகியவைகள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்கு பொதுவோ அதுபோல்தான் ஒரு கிராமத்திலோ, ஒரு பட்டணத்திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஒரு உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது என்பதாகும். சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பொதுஉடைமைக் கொள்கையின் கட்சி லட்சியம் உலகம் பூராவும் ஒருகுடும்பம். உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள். உலகத்தில் உள்ள செல்வம் இன்பம் போகபோக்கியம் முதலியவை எல்லாம் அக் குடும்ப சொத்து குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்ப சொத்தில் (உலக சொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாகும். ஆகவே பொதுஉடைமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை  (Mathemetic Problem) ஆகும். ஆகவே இப்படிப்பட்ட கருத்துக்கொண்ட பொதுஉடைமைக் கொள்கையை வெறுக்கவோ, எதிர்க்கவோ நியாயமான முறையில் யாதொரு காரணமும் இருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை.

 பொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும்

ஆனால் சகோதரனுடைய பங்கை மோசம்செய்து சகோதர துரோகத்தின்மூலம் அதிகப் பங்கை ஆசைப்படுகிற மனப்பான்மை உள்ளவனும் குடும்ப வேலைகளில் தனக்குள்ள சரிபாகப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளாமல் மற்ற சகோதரர்களையே அதிகமாய் உழைக்கச் செய்து தான் சோம்பேறியாய் இருந்து அதிகப்பங்கை அடைந்து மற்றவர்களுக்கு போதுமான அளவுகூலி கொடுக்காமல் வஞ்சித்து ஏமாற்றவேண்டும் என்கின்றதான மனப்பான்மை உள்ளவனும்தான் பொதுவுடைமைக் கொள்கையை வெறுக்கவும், எதிர்க்கவும் கூடும்.

நிற்க, மற்றொரு விதத்திலும் பொதுவுடைமைத் தத்துவம் என்பது எல்லா ஜனங்களாலும் மதிக்கத் தக்கது என்கின்றதான வேதாந்த தத்துவம் என்பதும் ஆகும். எப்படியெனில் எல்லா சரீரத்திலும் வசிக்கும் ஆத்மா ஒன்றே என்றும், எப்படி ஒரே சூரியன் பதினாயிரம் குடம் தண்ணீரில் பதினாயிரம் சூரியனாகக் காணப்படுகின்றதோ அதுபோல் கோடானுகோடி ஜீவராசிகளினுள்ளும் கோடானகோடி ஆத்மாவாகக் காணப்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால் ஒவ்வொரு சரீரத்திலும், வெவ்வேறு ஆத்மாவாக இருக்கின்றதென்றோ ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வெவ்வேறுவித சைதன்னிய அதாவது ஞானமோ, வேற்றுமை உணர்ச்சியோ இல்லை என்கின்ற தத்துவமே வேதாந்தமாகும். ஆதலால் அப்படிப்பட்ட வேதாந்தக் கொள்கைக்கு பொதுவுடைமைத் தத்துவம் எவ்விதத்திலும் விரோத மானதல்ல. மதக்கொள்கைகளுக்கும் பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானதாக இல்லை. எப்படியெனில் எல்லா மதமும் மக்கள் யாவரும் சகோதரர்களென்றும், ஒருவருக்கொருவர் சகோதர உணர்ச்சியுடனேயே இருக்கவேண்டும் என்றும், எல்லோரையும் எல்லோருமே சகோதரர்களாகப் பாவிக்கவேண்டும் என்றும், எல்லோருமே ஒரேவித இன்பத்தையும், ஒரேவித செல்வத்தையும் அடைய வேண்டுமென்றே கற்பிக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது.

ஆதலால் பொதுவுடைமைத் தத்துவம் எந்த மதக் கொள்கைக்கும் விரோதமானது என்று சொல்லிவிட முடியாது. மற்றும் பொதுவுடைமைத் தத்துவமானது ஆஸ்திகம் என்பதற்கும் விரோதமானதல்ல. ஏனெனில் ஆஸ்திகமென்பது கடவுள் என்பதாக ஒன்று இருக்கின்ற தென்றும், அது பாரபட்சமற்றது என்றும், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உடையது என்றும் அதுவே உலகத்தையும், உலகத்திலுள்ள வஸ்த்துக்களையும், ஜீவர்களையும் சிருஷ்டித்தாரென்றும், உலகமும் உலக வஸ்த்துக்களும் அந்த ஜீவர்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டவை என்றும், கருதுவதேயாகும். ஆகவே அப்படிப்பட்ட கருத்துக்கு எல்லா  மக்களும் சகோதரர் என்கின்ற கொள்கையும், எல்லாப் பொருள்களும் இன்பதுன்பங்களும், எல்லா மக்களுக்கும் சரிசமமான பொது என்பதையும் எந்த ஆஸ்திகர்களும் ஆட்சேபிக்கவோ, எதிர்க்கவோ முடியாது என்பது விளங்கும்.

மேலும் மகாத்மாக்கள் என்பவர்களுக்கும், பொதுவுடைமைத் தத்துவம் வெறுப்பாகவோ, விரோதமாகவோ இருக்க நியாயமில்லை. ஏனெனில் மகாத்மா தத்துவம் என்பது எல்லா ஜீவன்களையும் சரிசமமாய்ப் பார்ப்பதும், எல்லா ஜீவர்களிடத்திலேயும், ஒரே ஆத்மா பரிணமிக்கின்றது என்பதை உணருகின்ற வர்க்கமாகும் ஆதலால் அப்படிப்பட்ட தத்துவமுடையவர்களுக்கு பொதுவுடைமைத் தத்துவம் என்பது ஆட்சேபிக்கத்தக்கதாவதற்கு இடமில்லை. இவை தவிர கிருஷ்ணன், புத்தர், ஏசு, மகம்மது, குருநானக், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி என்று சொல்லப்படுபவர்களான அங்கீகரிக்கப்பட்ட மதத்தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் என்பவர்களுடைய கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும், எல்லா மக்களும், சகோதரர்கள், எல்லா சொத்தும் பொதுவானது என்னும் படியான கொள்கை கொண்ட பொதுவுடைமைத் தத்துவம் விரோதமாகவோ ஆட்சேபிக்கதக்கதாகவோ இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை.

மற்றும் தேசியம் என்பதற்கோ, தேசியவாதிகள் என்பவர்களுக்கோ, பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானது என்று சொல்லுவதற்கும் இடமிருக்கக் காரணமில்லை. ஏனெனில் தேசியவாதிகளுடைய கொள்கையெல்லாம் தங்கள் தேசத்து செல்வத்தை மற்றொரு தேசத்தார் கொள்ளை கொள்ளக்கூடாது என்பதும் தங்கள் தேச ஆட்சியை மற்றொரு தேசத்தார் ஆளக்கூடாது என்பதுமே முக்கியமானதாகும். ஆதலால் இதே கொள்கை கொண்டதான அதாவது ஒருவருடைய உழைப்பின்பயனை மற்றவர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்பதும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் கொள்ளக்கூடாது என்பதும் எல்லோரும் சமமாய் உழைக்கவேண்டும், எல்லோரும் சமமாய் அடையவேண்டும், எல்லோருக்காக எல்லோரும் ஆட்சி செலுத்த வேண்டும் என்னும் கொள்கைகொண்ட பொதுவுடமை தத்துவத்தை ஆட்சேபிக்க நியாயமே இல்லை. மற்றபடி சமுக சேவைக்காரருக்கோ, பொது நல சேவைக்காரருக்கோ, நீதிக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுவுடமைத் தத்துவம் மாறானதென்றொ, ஆட்சேபிக்கத் தக்கதென்றோ, சொல்வதற்கு எந்தவிதத்திலும் ஆதாரம் இருப்பதாய் தெரியவில்லை.

ஆனால் யாருக்கு விரோதமாகவும், ஆட்சேபிக்கத்தக்கதாகவும் கெடுதி தரத்தக்க தாகவும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் சுயநலம்கொண்ட மக்களாகிய சக்கரவர்த்தி, அரசர், பாதிரி, குரு, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், மேல் ஜாதிக்காரன் (பார்ப்பான்) என்று சொல்லப்படுபவர்களுக்கும் இவர்களுக்கு கூலிகளாய் இருப்பதினாலேயே உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றவர்களுமான மக்களுக்கும் ஆட்சேபனையாய் இருக்கலாம். இவர்களுடைய ஆட்சேபனைகளை நாம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை.

ஏனெனில் இவர்கள் யோக்கியதைகளை நன்றாய் உணர்ந்து இவர்களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும், இழிவுகளையும் அறிந்து இவர்கள் தன்மைகளை ஒழிக்கவேண்டும் என்றும் மாற்றவாவது வேண்டுமென்றும் மக்கள் வெகு நாளாகவே பாடுபட்டு வருகிறார்கள்.

உதாரணமாக ஏகாதிபத்தியத் தன்மை கூடாதென்றும், தனிப்பட்ட நபர்களான அரசர்களுடைய ஆட்சிகள் கூடாதென்றும் கிளர்ச்சிகள் வெகுகாலமாகவே நடந்து வருகின்றன. இதன் பயனாகவே சில ஏகாதிபத்தியங்கள் ஒழிந்து சில அரச ஆட்சிகளும் வீழ்ந்து, பொதுஜன ஆட்சி என்றும், குடிகளுடைய ஆட்சி என்றும், சொல்லும்படியான ஆட்சிகள் ஏற்பட்டும் இருக்கின்றன. இனியும் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆதலால்தான் அவற்றைப்பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றோம். மற்றபடி மேல் ஜாதிக் கொடுமையையும், நன்றாய் உணர்ந்து அதை ஒழிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்ததோடு சில ஒழித்தும் வருகிறோம். மற்றபடி ஜமீன்முதலாளி முதலியவர்களுடைய கொடுமைகளையும் அநீதியான வழியில் அவர்கள் செல்வம் பெருக்குவதையும் நன்றாய் உணர்ந்து அவர்களது கொடுமைகளை ஒழிக்கவும், அவர்களது அநீதிகளில் இருந்து மீளவும் முயற்சிகள் செய்து கொண்டுதான் வருகிறோம். கடைசியாக குருமார்கள், பாதிரிமார்கள் என்று சொல்லுகின்ற கூட்டத்தார்களின் யோக்கியதைகளும் அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். எப்படியெனில் குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள் அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகியவர்களுடைய லைசென்சுபெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர்களுக்கும், செல்வவான்களுக்கும், சோம்பேறி கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாதலால் இவர்களது அதிருப்தியைப் பற்றியோ, அழுகையைப் பற்றியோ, நாம் சிறிதும் கவலைப்படவேண்டியதில்லை. இருந்தபோதிலும் இந்த கூட்டத்தாரும் சாவதானமாய் இருந்து நல்லறிவைக் கொண்டு யோசித்துப் பார்ப்பார்களானால் பொதுவுடைமைத் தத்துவம் என்பது தங்கள் கூட்டத்தாருக்கும் கெடுதி இல்லை என்பது விளங்கும். எப்படியெனில் பொதுவுடைமைத் தத்துவத்தினால் மனித ஜீவனுக்கு ஏற்படப்போகும் முக்கியமான மாறுதலும், அனுகூலமும் என்னவென்றால் மனிதனுக்குக் கவலை என்பது 100க்கு 90 பாகத்துக்கு மேலாகவே குறைந்துபோகும். இதுதவிர அதிருப்தி, பொறாமை என்று சொல்லும்படியான இயற்கை குணங்கள் என்பவைகள் எல்லாம் குறைந்துவிடும். இவைகளில் ஏதாவது ஒரு அளவும், பொதுவுடைமை தத்துவத்திலும் இருக்கும் என்று தர்க்கத்துக்காக சொல்லவந்தாலும் அதுவும் பொது நலத்தை உத்தேசித்து இருக்குமே ஒழிய சுயநலத்தை உத்தேசித்து இருக்க முடியவே முடியாது. அதுபோலவே மனிதனுக்கு துக்கம் என்பதும் பெரும்பாகமும் மறைந்து போகும். இப்போது மேற்குறிப்பிட்டதான கவலை. அதிர்ப்தி, ஆசை, பொறாமை, துக்கம் முதலிய குணங்கள் தனிமனிதனில் ஆகட்டும், மனித சமுகத்தில் ஆகட்டும் எந்த நிலைமையில் இருக்கின்றவர் களுக்கும் இருந்துதான் வருகின்றது.

அரசனுக்கோ, செல்வவானுக்கோ, குருவுக்கோ, பார்ப்பானுக்கோ, மற்றும் பெரும்பதவியில் இருக்கின்றவன் என்பவனுக்கோ இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவர்களுக்கு உள்ள பெருமையெல்லாம் அன்னியர்கள் இவர்களைப் பெருமையாய் நினைக்கிறார்கள் என்பதைத் தவிர தங்கள் தங்களுக்கு சொந்தத்தில் துக்கமும், கவலையும் இல்லாதவர்கள் இல்லவே இல்லை.

மத சம்பந்தமான ஆதாரங்களில் காணப்படும், மோட்சத்திற்கும், முத்திக்கும் சொல்லப்படும் கருத்தெல்லாம் கவலையும், துக்கமும் அற்றதன்மை என்றுதான் சொல்லப்படுகின்றதே ஒழிய மற்றபடி வேறு ஒரு லோகத்தில் போய் வெல்வெட் மெத்தையில் சதாதூங்கிக் கொண்டிருப்பது என்று சொல்லப்படவில்லை. ஆனால் இப்படி எங்காவது ஒன்று இரண்டு இடத்தில் சொல்லப்படுவதாய் சொல்லப் பட்டாலும் அது புரோகிதர்களுடையவும், முல்லாக்களுடையவும், பாதிரிகளுடையவும் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கற்பித்துக் கொண்ட புராணப்பிடுங்கல் கற்பனை என்பதை எல்லா தத்துவ ஜன அறிஞர்களும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆகையால் பகுத்தறிவுள்ள மனித ஜீவர்கள் வாழ்க்கையில் கவலையும் துக்கமும் இல்லாத ஒரு நிலையை ஒருநாளும் வெறுக்கவோ, மறுக்கவோ முடியவே முடியாது.

ஆகவே பொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும் என்றும் ஒருவாறு சுருக்கமாய் விளக்கிக் காட்டியிருக்கிறோம், இனி பொது உடைமை தத்துவம் சாத்தியமா? என்பதும், எப்படி ஏற்படுத்துவது என்பதும் எந்த எந்த அளவில் இன்று நமது நாட்டிலும் இருந்துவருகின்றது என்பதும் முதலாகிய விஷயங்களைப் பற்றி மற்றொரு சமயம் சாவகாசமாய் எழுத எண்ணியுள்ளோம். அல்லது யாராவது இவ்விஷயத்தில் ஆராய்ச்சியுள்ள தோழர்கள் வியாசரூபமாக எழுதினாலும் பொருத்தமானதை மகிழச்சியுடன் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 10.09.1933

 

பொங்கல் தமிழர் விழா!

 


ஜனவரி 16-31 2019

தந்தை பெரியார்

பொங்கல் விழா எதற்குக் கொண்டாடப்படுகிறது என்பது இன்னமும் பலருக்கு தெரியாது. உண்மையில் தமிழர்களுக்கு என்று தமிழர்களின் நாகரிகம் பண்பு இவைகளுக்குப் பொருத்தமான பண்டிகை ஒன்று கூடக் கிடையாது.

அப்படி இருந்தும் நம் மக்களுக்கு பண்டிகைகளுக்கு அளவே இல்லாது பல பண்டிகைகள் இருந்து வருகின்றன.

முதலில் அப்பண்டிகைகளின் பெயர்களைப் பார்த்தால் அவை அத்தனையும் சமஸ்கிருத பெயராகவே இருக்கும். தமிழர்களுக்கென்றும் தமிழர்களின் பண்பு நாகரீகம் கலாச்சார பழக்கவழக்கம் இவைகளைக் கொண்டதாகவும் ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்கு தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால், வட மொழியில் இருக்குமானால் எப்படி தமிழர்களுக்குண்டான பண்டிகையென்று கூறமுடியும்?

பொங்கல் பண்டிகை

ஏதோ ‘பொங்கல் பண்டிகை’ என்று கூறும் முறையில் தமிழ்ப் பெயராக இருப்பதும் அன்றி நம் மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் இருக்கிறது. மேலும் இதற்கு கூட பார்ப்பனர்கள் சங்கராந்தி என்று பெயர் கொடுத்து அப்பண்டிகைக்காக கட்டுக்கதைகளை இயற்றிவிட்டு அது இந்திரனுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாக மாற்றிவிட்டார்கள். பண்டிகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் இப்பண்டிகையை மட்டும்தான் பார்ப்பனப் பண்டிகையிலிருந்து தமிழர் பண்டிகையாக மாற்றம் செய்ய முடிந்தது. தமிழர்களின் பண்புக்கேற்றவண்ணம் அதன் அவசியத்தையும், கொண்டாடும் முறையையும் விளக்கி வருகிறோம்.

உழவர் திருநாள்

இப்பண்டிகை நம் மக்களில் பெரும்பான்மையானவர்களாகிய விவசாயி களுக்குண்டான பண்டிகையாகும். அவர்கள் இந்த ஆண்டு முழுதும் விவசாயம் செய்து தானியங்களைத் தங்கள் இல்லத்தில் கொண்டு வந்து அத்தானியத்தை முதன்முதலாக சமைத்து உண்ணும்பொழுது தாங்கள் சந்தோஷமாக இருக்கும் அறிகுறியைக் காட்டும் முறையில் இப்படிக் கொண்டாடுகிறோம். இதுவரைப் பார்ப்பனர்களின் முறைப்படி கொண்டாடப்பட்ட முறைகள் அறிவுக்கும் பண்புக்கும் பொருத்தமற்றதாகும் என்பதை விளக்கி நம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவண்ணம் கொண்டாடும் முறையை பின்பற்றுகிறோம்.

உறவைக் கூட்டும் விழா

இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்ள தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். இப்பண்டிகை மட்டும்தான் தமிழர்களுக்கென்று உள்ள பண்டிகை.

இதைத் தவிர மற்றவை யாவும் பார்ப்பனப்பண்டிகைகள். அப்பண்டிகைகள் அத்தனைக்கும் கூறப்படும் கதைகள் அறிவுக்குப் பொருத்தமற்றவைகள். நாகரீக காலத்திற்கு ஏற்றவை அல்ல. அப்போது காட்டுமிராண்டித்தனம் மலிந்த காலத்தில் அதற்கேற்றவண்ணம் பார்ப்பனர்கள் கதைகளைக் கட்டிவிட்டார்கள்.

அறிவுக்கு அளவுகோல்

இப்போது விஞ்ஞானம் மலிந்த காலம்; ஆராய்ச்சியாளர்கள் மிகுந்து அதிசய _- அற்புதங்கள் பலவற்றை சாதித்துக்காட்டும் காலம். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் புராணக்கதைகள் இருப்பது சிறிதும் அறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.

அவைகள் இன்னமும் நிலைத்து நிற்பதன் காரணம் நம்முடைய முட்டாள்தனம் எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறதே அன்றி அறிவின் தரத்தைக் காட்டுவதில்லை…

(சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரி விழாவில் ஆற்றிய உரையிலிருந்து)

– ‘விடுதலை’, 26.01.1954

கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்

 



தந்தை பெரியார்

இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்றுச் சொல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குத் தானாகவே ஒருவித குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை உணர்கின்றோ மாதலினாலேயாம். அதோடுகூட பார்ப் பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல், தேசியம் ஆகி யவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர் களும், சமயம் புராணப் பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப் புக்காரர்களும், இவ்வி யக்கத்தை எதிர்க்கக் கடவுளையும் மதத்தையும் பற்றிய பொதுமக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக் கொண்டும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதானாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக் கொண்ட உண்மை நண்பர்களில் சிலர் இவ்விஷமப் பிரச்சாரத்தைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சிலர் பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத் துடிப்புக் கொள்வதாலும் நமது நிலையையும், கடவுள் மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கி விட வேண்டுமென்பதாகக் கருதி இத்தலைப்புக் கொடுத்து எழுதப் புகுந்தோம். இவைகளைப் பற்றி இதற்கு முன்னும் பலதடவை எழுதியுள்ளோம் ஆயினும் அவை களையும்விட இது சற்றுத் தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம். வாசகர்கள் தயவு செய்து இதைச் சற்று நிதானமாகவும் கவனமாகவும் படித்துப்பார்க்கும் படி வேண்டுகின்றோம். இக் கட்டுரை யானது இதே தலைப்பின் கீழ் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரை யின்போது நம்மால் எடுத்துச் சொல்லப் பட்டதை அனு சரித்தும் சில நண்பர்கள் அதை விளக்கித் தலையங்கமாக எழுதும் படி சொன்னதை அனுசரித்தும் எழுதப்பட்டதாகும்.

கவலை இல்லை

முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்க அவர்களுக்கு அறிவு, ஆற்றல் இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம். அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும் மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால் தான் நாம் அதைப் பற்றி கவலையில்லை என்று சொல்ல வேண்டிய தாயிற்றே யொழிய உண்மையில் கடவுளை யும் மதத்தையும் பற்றி பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை. அதுபோலவேதான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம். எப்படி எனில், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் நமக்கு எதிராக தம்மால் கூடிய சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்தும் ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும், சமயப் பெரியார் என்றும் கூறிக் கொண்டு அவ்வார்த் தைகளையே தமது ஆயுதமாகவும், சமய சம்பந்தமான சில பைத்தியக்காரர்களைத் தமக்குப் படையாகவும் வைத்துக் கொண்டு அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப் போர் தொடுக்க ஆரம்பித்ததன் பலனாய் சைவசமயம் என்பதும் சமயாச்சாரியார்கள் என்பவர்களும் சந்திக்கு வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டது. எனவே இன்றைய தினம் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், ராமாயணம், பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம், பூஜை, உற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும் சமயப் பற்றும் கொண்டவன் என்றும் மற்றவர்கள் நாத்திகர்கள், சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டது. இது எப்படி இருந்தபோதிலும், கடவுள் மதம் என்பது என்னவென்பது பற்றியும், இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும் இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது அறியாமையினா லுண்டாக்கினார்களா? என்பவைகளைப் பற்றியும் இவற்றில் நமது அதாவது மக்கள் கடமை என்ன என்பது பற்றியும் சற்று ஆலோசித்து பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நிலை நிறுத்தவில்லை

முதலாவதாக, இங்கு, குணம், உருவம் பெயரற்ற தன்மையுடைய கடவுள் என்பதைப் பற்றியும் மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமே, இங்கு விவரிக்கக் கருதியுள்ளோமே தவிர மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும், மதப்பிரிவுகளான கிறிஸ்து, மகமதியம், ஜைனம், பௌத்த சீக்கிய, சைவ, வைணவ, நிரீச் சுரவாத, உலகாயுத, சாக்கிய, வாம முதலிய பல உள் மதங் களைப் பற்றியும் நாம் இங்கு தனித்தனியாக பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை ஏனெனில் அவற்றிற்கு ஏற்கனவே மறுப்புகள் தாராளமாய் வெளிப்பட்டு ஒருவருக் கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்ததும் நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்பந்தத்திற்குள் புகுந்துமே தான் ஒவ்வொரு வர்களும் அவரவர்கள் கடவுளையோ, கடவுள் தூதர் களையோ, அவதாரங் களையோ, சமயங்களையோ சமயாச் சாரியார்களையோ காப்பாற்றிக் கொள்ள முடிந்ததே ஒழிய அறிவின் மீதோ ஆராய்ச்சியின் மீதோ, நியாயத்தின் மீதோ, நிலை நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலக மறிந்ததாகும். ஆதலால் இத்தலையங்கத்தில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.

கடவுள் நினைப்பு

முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவ தில்லை. எப்படி எனில் சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ வஸ்துவையோ காட்டி, சாமி! என்றும் அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்கவேண்டும். அது எப்படி என்றும் எப்போ தென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ் சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படுமானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன் – அல்லா, காட் என்று சொல்லப்படு கின்றதென்று சொல்வதானாலும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாயிருக் கின்றது.

இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவைகளுக்கே கடவுள் சக்தி என்று சொல்லிவிடுகின்றான். உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக் காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.

அறிவு வளர்ச்சி

எனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டு பிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங் கிருந்து எப்படி தண்ணீர் வருகின்ற தென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன. அது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார, உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டு பிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயலென் றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம்.

பக்குவம் தேவை

இப்போது நம் மனத்திற்கு எட்டாத, காரியங்களை மேனாட்டார் செய்யும் போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோமென்றாலும் நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும், வாழ்க்கையின் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயுமிருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும் ஈடு செய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும், கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான். ஆறுதலையும் திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்ய முடியாத இடத் திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டு, தான் திருப்தி அடைகின்றார்கள். அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித் தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள் எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும் தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதி திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே சாதாரண மக்கள் கடவுளுக்கும் சற்று அறிவுடைய மக்கள் கடவுளுக்கும் ஆராய்ச்சிக்காரர்கள் கடவுளுக்கும் பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாசமுண்டு. ஒருவொருக்கொருவர் கடவுள் வணக்கத்திலும், கடவுள்மீது சுமத்தும் பொறுப்பிலும் அநேக வித்தியாச முண்டு.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 28.07.1929