பெரியார் பேசுகிறார்…
பொது உடைமை
தந்தை பெரியார்
பொது உடைமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது.
‘பொதுஉடைமை’ என்னும் வார்த்தையானது அது பற்றிய ஆராய்ச்சியே இல்லாத காரணத்தாலும், சுயநலத்தின் காரணமாய் அவ்வார்த்தைக்கு எதிராகவே பிரச்சாரங்கள் நடைபெறுவதாலும், பொதுஜனங்களுக்கு பொது உடைமை என்றால் வெறுப்பாயும், பயமாயும் தப்பிதமாயும் தோன்றலாம். எந்தப் புதிய கொள்கையும், அபிப்பிராயங்களும் ஆரம்பகாலத்தில் பாமர மக்களிடையே வெறுப்பாகவும் கஷ்டமாகவும்தான் தோன்றும். இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஏனெனில் புதிய அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் கொண்டுவந்து புகுத்தியவர்கள் சரித்திரங்கள் என்பவைகளைப் பார்த்தால் இதுதானாகவே விளங்கிவிடும். ஆதலால் பொது உடைமை என்ற வார்த்தையும், கொள்கையும் பொது ஜனங்களால் பாமரமக்களால் சுயநலங்கொண்ட சோம்பேறிக் கூட்டங்களால் ஆதரிக்கப்படுகின்றதா? வரவேற்கப் படுகின்றதா? வெறுக்கப்படாமல் இருக்கின்றதா? என்பவைகளைப் பற்றி கவனிக்காமல் அது விஷயமாய் நமக்குத் தோன்றியதை எழுதலாம் என்றே கருதுகிறோம்.
பொது உடைமை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள சொத்துக்கள், வரும்படிகள், தொழில்கள், லாப நஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போகபோக்கியங்கள், பொறுப்பு கவலைகள் முதலாகியவைகள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்கு பொதுவோ அதுபோல்தான் ஒரு கிராமத்திலோ, ஒரு பட்டணத்திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஒரு உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது என்பதாகும். சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பொதுஉடைமைக் கொள்கையின் கட்சி லட்சியம் உலகம் பூராவும் ஒருகுடும்பம். உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள். உலகத்தில் உள்ள செல்வம் இன்பம் போகபோக்கியம் முதலியவை எல்லாம் அக் குடும்ப சொத்து குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்ப சொத்தில் (உலக சொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாகும். ஆகவே பொதுஉடைமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை (Mathemetic Problem) ஆகும். ஆகவே இப்படிப்பட்ட கருத்துக்கொண்ட பொதுஉடைமைக் கொள்கையை வெறுக்கவோ, எதிர்க்கவோ நியாயமான முறையில் யாதொரு காரணமும் இருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை.
பொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும்
ஆனால் சகோதரனுடைய பங்கை மோசம்செய்து சகோதர துரோகத்தின்மூலம் அதிகப் பங்கை ஆசைப்படுகிற மனப்பான்மை உள்ளவனும் குடும்ப வேலைகளில் தனக்குள்ள சரிபாகப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளாமல் மற்ற சகோதரர்களையே அதிகமாய் உழைக்கச் செய்து தான் சோம்பேறியாய் இருந்து அதிகப்பங்கை அடைந்து மற்றவர்களுக்கு போதுமான அளவுகூலி கொடுக்காமல் வஞ்சித்து ஏமாற்றவேண்டும் என்கின்றதான மனப்பான்மை உள்ளவனும்தான் பொதுவுடைமைக் கொள்கையை வெறுக்கவும், எதிர்க்கவும் கூடும்.
நிற்க, மற்றொரு விதத்திலும் பொதுவுடைமைத் தத்துவம் என்பது எல்லா ஜனங்களாலும் மதிக்கத் தக்கது என்கின்றதான வேதாந்த தத்துவம் என்பதும் ஆகும். எப்படியெனில் எல்லா சரீரத்திலும் வசிக்கும் ஆத்மா ஒன்றே என்றும், எப்படி ஒரே சூரியன் பதினாயிரம் குடம் தண்ணீரில் பதினாயிரம் சூரியனாகக் காணப்படுகின்றதோ அதுபோல் கோடானுகோடி ஜீவராசிகளினுள்ளும் கோடானகோடி ஆத்மாவாகக் காணப்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால் ஒவ்வொரு சரீரத்திலும், வெவ்வேறு ஆத்மாவாக இருக்கின்றதென்றோ ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வெவ்வேறுவித சைதன்னிய அதாவது ஞானமோ, வேற்றுமை உணர்ச்சியோ இல்லை என்கின்ற தத்துவமே வேதாந்தமாகும். ஆதலால் அப்படிப்பட்ட வேதாந்தக் கொள்கைக்கு பொதுவுடைமைத் தத்துவம் எவ்விதத்திலும் விரோத மானதல்ல. மதக்கொள்கைகளுக்கும் பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானதாக இல்லை. எப்படியெனில் எல்லா மதமும் மக்கள் யாவரும் சகோதரர்களென்றும், ஒருவருக்கொருவர் சகோதர உணர்ச்சியுடனேயே இருக்கவேண்டும் என்றும், எல்லோரையும் எல்லோருமே சகோதரர்களாகப் பாவிக்கவேண்டும் என்றும், எல்லோருமே ஒரேவித இன்பத்தையும், ஒரேவித செல்வத்தையும் அடைய வேண்டுமென்றே கற்பிக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது.
ஆதலால் பொதுவுடைமைத் தத்துவம் எந்த மதக் கொள்கைக்கும் விரோதமானது என்று சொல்லிவிட முடியாது. மற்றும் பொதுவுடைமைத் தத்துவமானது ஆஸ்திகம் என்பதற்கும் விரோதமானதல்ல. ஏனெனில் ஆஸ்திகமென்பது கடவுள் என்பதாக ஒன்று இருக்கின்ற தென்றும், அது பாரபட்சமற்றது என்றும், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உடையது என்றும் அதுவே உலகத்தையும், உலகத்திலுள்ள வஸ்த்துக்களையும், ஜீவர்களையும் சிருஷ்டித்தாரென்றும், உலகமும் உலக வஸ்த்துக்களும் அந்த ஜீவர்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டவை என்றும், கருதுவதேயாகும். ஆகவே அப்படிப்பட்ட கருத்துக்கு எல்லா மக்களும் சகோதரர் என்கின்ற கொள்கையும், எல்லாப் பொருள்களும் இன்பதுன்பங்களும், எல்லா மக்களுக்கும் சரிசமமான பொது என்பதையும் எந்த ஆஸ்திகர்களும் ஆட்சேபிக்கவோ, எதிர்க்கவோ முடியாது என்பது விளங்கும்.
மேலும் மகாத்மாக்கள் என்பவர்களுக்கும், பொதுவுடைமைத் தத்துவம் வெறுப்பாகவோ, விரோதமாகவோ இருக்க நியாயமில்லை. ஏனெனில் மகாத்மா தத்துவம் என்பது எல்லா ஜீவன்களையும் சரிசமமாய்ப் பார்ப்பதும், எல்லா ஜீவர்களிடத்திலேயும், ஒரே ஆத்மா பரிணமிக்கின்றது என்பதை உணருகின்ற வர்க்கமாகும் ஆதலால் அப்படிப்பட்ட தத்துவமுடையவர்களுக்கு பொதுவுடைமைத் தத்துவம் என்பது ஆட்சேபிக்கத்தக்கதாவதற்கு இடமில்லை. இவை தவிர கிருஷ்ணன், புத்தர், ஏசு, மகம்மது, குருநானக், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி என்று சொல்லப்படுபவர்களான அங்கீகரிக்கப்பட்ட மதத்தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் என்பவர்களுடைய கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும், எல்லா மக்களும், சகோதரர்கள், எல்லா சொத்தும் பொதுவானது என்னும் படியான கொள்கை கொண்ட பொதுவுடைமைத் தத்துவம் விரோதமாகவோ ஆட்சேபிக்கதக்கதாகவோ இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை.
மற்றும் தேசியம் என்பதற்கோ, தேசியவாதிகள் என்பவர்களுக்கோ, பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானது என்று சொல்லுவதற்கும் இடமிருக்கக் காரணமில்லை. ஏனெனில் தேசியவாதிகளுடைய கொள்கையெல்லாம் தங்கள் தேசத்து செல்வத்தை மற்றொரு தேசத்தார் கொள்ளை கொள்ளக்கூடாது என்பதும் தங்கள் தேச ஆட்சியை மற்றொரு தேசத்தார் ஆளக்கூடாது என்பதுமே முக்கியமானதாகும். ஆதலால் இதே கொள்கை கொண்டதான அதாவது ஒருவருடைய உழைப்பின்பயனை மற்றவர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்பதும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் கொள்ளக்கூடாது என்பதும் எல்லோரும் சமமாய் உழைக்கவேண்டும், எல்லோரும் சமமாய் அடையவேண்டும், எல்லோருக்காக எல்லோரும் ஆட்சி செலுத்த வேண்டும் என்னும் கொள்கைகொண்ட பொதுவுடமை தத்துவத்தை ஆட்சேபிக்க நியாயமே இல்லை. மற்றபடி சமுக சேவைக்காரருக்கோ, பொது நல சேவைக்காரருக்கோ, நீதிக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுவுடமைத் தத்துவம் மாறானதென்றொ, ஆட்சேபிக்கத் தக்கதென்றோ, சொல்வதற்கு எந்தவிதத்திலும் ஆதாரம் இருப்பதாய் தெரியவில்லை.
ஆனால் யாருக்கு விரோதமாகவும், ஆட்சேபிக்கத்தக்கதாகவும் கெடுதி தரத்தக்க தாகவும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் சுயநலம்கொண்ட மக்களாகிய சக்கரவர்த்தி, அரசர், பாதிரி, குரு, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், மேல் ஜாதிக்காரன் (பார்ப்பான்) என்று சொல்லப்படுபவர்களுக்கும் இவர்களுக்கு கூலிகளாய் இருப்பதினாலேயே உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றவர்களுமான மக்களுக்கும் ஆட்சேபனையாய் இருக்கலாம். இவர்களுடைய ஆட்சேபனைகளை நாம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை.
ஏனெனில் இவர்கள் யோக்கியதைகளை நன்றாய் உணர்ந்து இவர்களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும், இழிவுகளையும் அறிந்து இவர்கள் தன்மைகளை ஒழிக்கவேண்டும் என்றும் மாற்றவாவது வேண்டுமென்றும் மக்கள் வெகு நாளாகவே பாடுபட்டு வருகிறார்கள்.
உதாரணமாக ஏகாதிபத்தியத் தன்மை கூடாதென்றும், தனிப்பட்ட நபர்களான அரசர்களுடைய ஆட்சிகள் கூடாதென்றும் கிளர்ச்சிகள் வெகுகாலமாகவே நடந்து வருகின்றன. இதன் பயனாகவே சில ஏகாதிபத்தியங்கள் ஒழிந்து சில அரச ஆட்சிகளும் வீழ்ந்து, பொதுஜன ஆட்சி என்றும், குடிகளுடைய ஆட்சி என்றும், சொல்லும்படியான ஆட்சிகள் ஏற்பட்டும் இருக்கின்றன. இனியும் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆதலால்தான் அவற்றைப்பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றோம். மற்றபடி மேல் ஜாதிக் கொடுமையையும், நன்றாய் உணர்ந்து அதை ஒழிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்ததோடு சில ஒழித்தும் வருகிறோம். மற்றபடி ஜமீன்முதலாளி முதலியவர்களுடைய கொடுமைகளையும் அநீதியான வழியில் அவர்கள் செல்வம் பெருக்குவதையும் நன்றாய் உணர்ந்து அவர்களது கொடுமைகளை ஒழிக்கவும், அவர்களது அநீதிகளில் இருந்து மீளவும் முயற்சிகள் செய்து கொண்டுதான் வருகிறோம். கடைசியாக குருமார்கள், பாதிரிமார்கள் என்று சொல்லுகின்ற கூட்டத்தார்களின் யோக்கியதைகளும் அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். எப்படியெனில் குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள் அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகியவர்களுடைய லைசென்சுபெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர்களுக்கும், செல்வவான்களுக்கும், சோம்பேறி கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாதலால் இவர்களது அதிருப்தியைப் பற்றியோ, அழுகையைப் பற்றியோ, நாம் சிறிதும் கவலைப்படவேண்டியதில்லை. இருந்தபோதிலும் இந்த கூட்டத்தாரும் சாவதானமாய் இருந்து நல்லறிவைக் கொண்டு யோசித்துப் பார்ப்பார்களானால் பொதுவுடைமைத் தத்துவம் என்பது தங்கள் கூட்டத்தாருக்கும் கெடுதி இல்லை என்பது விளங்கும். எப்படியெனில் பொதுவுடைமைத் தத்துவத்தினால் மனித ஜீவனுக்கு ஏற்படப்போகும் முக்கியமான மாறுதலும், அனுகூலமும் என்னவென்றால் மனிதனுக்குக் கவலை என்பது 100க்கு 90 பாகத்துக்கு மேலாகவே குறைந்துபோகும். இதுதவிர அதிருப்தி, பொறாமை என்று சொல்லும்படியான இயற்கை குணங்கள் என்பவைகள் எல்லாம் குறைந்துவிடும். இவைகளில் ஏதாவது ஒரு அளவும், பொதுவுடைமை தத்துவத்திலும் இருக்கும் என்று தர்க்கத்துக்காக சொல்லவந்தாலும் அதுவும் பொது நலத்தை உத்தேசித்து இருக்குமே ஒழிய சுயநலத்தை உத்தேசித்து இருக்க முடியவே முடியாது. அதுபோலவே மனிதனுக்கு துக்கம் என்பதும் பெரும்பாகமும் மறைந்து போகும். இப்போது மேற்குறிப்பிட்டதான கவலை. அதிர்ப்தி, ஆசை, பொறாமை, துக்கம் முதலிய குணங்கள் தனிமனிதனில் ஆகட்டும், மனித சமுகத்தில் ஆகட்டும் எந்த நிலைமையில் இருக்கின்றவர் களுக்கும் இருந்துதான் வருகின்றது.
அரசனுக்கோ, செல்வவானுக்கோ, குருவுக்கோ, பார்ப்பானுக்கோ, மற்றும் பெரும்பதவியில் இருக்கின்றவன் என்பவனுக்கோ இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவர்களுக்கு உள்ள பெருமையெல்லாம் அன்னியர்கள் இவர்களைப் பெருமையாய் நினைக்கிறார்கள் என்பதைத் தவிர தங்கள் தங்களுக்கு சொந்தத்தில் துக்கமும், கவலையும் இல்லாதவர்கள் இல்லவே இல்லை.
மத சம்பந்தமான ஆதாரங்களில் காணப்படும், மோட்சத்திற்கும், முத்திக்கும் சொல்லப்படும் கருத்தெல்லாம் கவலையும், துக்கமும் அற்றதன்மை என்றுதான் சொல்லப்படுகின்றதே ஒழிய மற்றபடி வேறு ஒரு லோகத்தில் போய் வெல்வெட் மெத்தையில் சதாதூங்கிக் கொண்டிருப்பது என்று சொல்லப்படவில்லை. ஆனால் இப்படி எங்காவது ஒன்று இரண்டு இடத்தில் சொல்லப்படுவதாய் சொல்லப் பட்டாலும் அது புரோகிதர்களுடையவும், முல்லாக்களுடையவும், பாதிரிகளுடையவும் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கற்பித்துக் கொண்ட புராணப்பிடுங்கல் கற்பனை என்பதை எல்லா தத்துவ ஜன அறிஞர்களும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆகையால் பகுத்தறிவுள்ள மனித ஜீவர்கள் வாழ்க்கையில் கவலையும் துக்கமும் இல்லாத ஒரு நிலையை ஒருநாளும் வெறுக்கவோ, மறுக்கவோ முடியவே முடியாது.
ஆகவே பொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும் என்றும் ஒருவாறு சுருக்கமாய் விளக்கிக் காட்டியிருக்கிறோம், இனி பொது உடைமை தத்துவம் சாத்தியமா? என்பதும், எப்படி ஏற்படுத்துவது என்பதும் எந்த எந்த அளவில் இன்று நமது நாட்டிலும் இருந்துவருகின்றது என்பதும் முதலாகிய விஷயங்களைப் பற்றி மற்றொரு சமயம் சாவகாசமாய் எழுத எண்ணியுள்ளோம். அல்லது யாராவது இவ்விஷயத்தில் ஆராய்ச்சியுள்ள தோழர்கள் வியாசரூபமாக எழுதினாலும் பொருத்தமானதை மகிழச்சியுடன் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்.
– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 10.09.1933
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக