வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்

 



தந்தை பெரியார்

இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்றுச் சொல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குத் தானாகவே ஒருவித குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை உணர்கின்றோ மாதலினாலேயாம். அதோடுகூட பார்ப் பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல், தேசியம் ஆகி யவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர் களும், சமயம் புராணப் பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப் புக்காரர்களும், இவ்வி யக்கத்தை எதிர்க்கக் கடவுளையும் மதத்தையும் பற்றிய பொதுமக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக் கொண்டும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதானாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக் கொண்ட உண்மை நண்பர்களில் சிலர் இவ்விஷமப் பிரச்சாரத்தைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சிலர் பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத் துடிப்புக் கொள்வதாலும் நமது நிலையையும், கடவுள் மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கி விட வேண்டுமென்பதாகக் கருதி இத்தலைப்புக் கொடுத்து எழுதப் புகுந்தோம். இவைகளைப் பற்றி இதற்கு முன்னும் பலதடவை எழுதியுள்ளோம் ஆயினும் அவை களையும்விட இது சற்றுத் தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம். வாசகர்கள் தயவு செய்து இதைச் சற்று நிதானமாகவும் கவனமாகவும் படித்துப்பார்க்கும் படி வேண்டுகின்றோம். இக் கட்டுரை யானது இதே தலைப்பின் கீழ் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரை யின்போது நம்மால் எடுத்துச் சொல்லப் பட்டதை அனு சரித்தும் சில நண்பர்கள் அதை விளக்கித் தலையங்கமாக எழுதும் படி சொன்னதை அனுசரித்தும் எழுதப்பட்டதாகும்.

கவலை இல்லை

முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்க அவர்களுக்கு அறிவு, ஆற்றல் இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம். அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும் மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால் தான் நாம் அதைப் பற்றி கவலையில்லை என்று சொல்ல வேண்டிய தாயிற்றே யொழிய உண்மையில் கடவுளை யும் மதத்தையும் பற்றி பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை. அதுபோலவேதான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம். எப்படி எனில், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் நமக்கு எதிராக தம்மால் கூடிய சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்தும் ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும், சமயப் பெரியார் என்றும் கூறிக் கொண்டு அவ்வார்த் தைகளையே தமது ஆயுதமாகவும், சமய சம்பந்தமான சில பைத்தியக்காரர்களைத் தமக்குப் படையாகவும் வைத்துக் கொண்டு அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப் போர் தொடுக்க ஆரம்பித்ததன் பலனாய் சைவசமயம் என்பதும் சமயாச்சாரியார்கள் என்பவர்களும் சந்திக்கு வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டது. எனவே இன்றைய தினம் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், ராமாயணம், பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம், பூஜை, உற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும் சமயப் பற்றும் கொண்டவன் என்றும் மற்றவர்கள் நாத்திகர்கள், சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டது. இது எப்படி இருந்தபோதிலும், கடவுள் மதம் என்பது என்னவென்பது பற்றியும், இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும் இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது அறியாமையினா லுண்டாக்கினார்களா? என்பவைகளைப் பற்றியும் இவற்றில் நமது அதாவது மக்கள் கடமை என்ன என்பது பற்றியும் சற்று ஆலோசித்து பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நிலை நிறுத்தவில்லை

முதலாவதாக, இங்கு, குணம், உருவம் பெயரற்ற தன்மையுடைய கடவுள் என்பதைப் பற்றியும் மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமே, இங்கு விவரிக்கக் கருதியுள்ளோமே தவிர மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும், மதப்பிரிவுகளான கிறிஸ்து, மகமதியம், ஜைனம், பௌத்த சீக்கிய, சைவ, வைணவ, நிரீச் சுரவாத, உலகாயுத, சாக்கிய, வாம முதலிய பல உள் மதங் களைப் பற்றியும் நாம் இங்கு தனித்தனியாக பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை ஏனெனில் அவற்றிற்கு ஏற்கனவே மறுப்புகள் தாராளமாய் வெளிப்பட்டு ஒருவருக் கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்ததும் நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்பந்தத்திற்குள் புகுந்துமே தான் ஒவ்வொரு வர்களும் அவரவர்கள் கடவுளையோ, கடவுள் தூதர் களையோ, அவதாரங் களையோ, சமயங்களையோ சமயாச் சாரியார்களையோ காப்பாற்றிக் கொள்ள முடிந்ததே ஒழிய அறிவின் மீதோ ஆராய்ச்சியின் மீதோ, நியாயத்தின் மீதோ, நிலை நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலக மறிந்ததாகும். ஆதலால் இத்தலையங்கத்தில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.

கடவுள் நினைப்பு

முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவ தில்லை. எப்படி எனில் சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ வஸ்துவையோ காட்டி, சாமி! என்றும் அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்கவேண்டும். அது எப்படி என்றும் எப்போ தென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ் சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படுமானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன் – அல்லா, காட் என்று சொல்லப்படு கின்றதென்று சொல்வதானாலும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாயிருக் கின்றது.

இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவைகளுக்கே கடவுள் சக்தி என்று சொல்லிவிடுகின்றான். உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக் காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.

அறிவு வளர்ச்சி

எனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டு பிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங் கிருந்து எப்படி தண்ணீர் வருகின்ற தென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன. அது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார, உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டு பிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயலென் றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம்.

பக்குவம் தேவை

இப்போது நம் மனத்திற்கு எட்டாத, காரியங்களை மேனாட்டார் செய்யும் போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோமென்றாலும் நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும், வாழ்க்கையின் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயுமிருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும் ஈடு செய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும், கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான். ஆறுதலையும் திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்ய முடியாத இடத் திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டு, தான் திருப்தி அடைகின்றார்கள். அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித் தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள் எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும் தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதி திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே சாதாரண மக்கள் கடவுளுக்கும் சற்று அறிவுடைய மக்கள் கடவுளுக்கும் ஆராய்ச்சிக்காரர்கள் கடவுளுக்கும் பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாசமுண்டு. ஒருவொருக்கொருவர் கடவுள் வணக்கத்திலும், கடவுள்மீது சுமத்தும் பொறுப்பிலும் அநேக வித்தியாச முண்டு.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 28.07.1929

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக