ஞாயிறு, 24 நவம்பர், 2024

எச்சரிக்கை – பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிகளுக்கும் பார்ப்பனரல்லாதோர் ஆளாகாமல் இருக்க வேண்டும்

 தந்தை பெரியார்

விடுதலை நாளேடு

இந்நாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக் கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகின்றன.

சுயநலக் கூட்டம்
இது எவ்வளவுதான் இன்று ஒரு சுயநலக் கூட்டத்தினரின் பிரச்சாரங்களால் மறைக்கப்பட்டாலும், எவ்வளவுதான் இப்பிரிவினைக் கூடாது என்று இதோபதேசம் செய்யப்பட்டாலும் இந்தப் பிரிவு மற்றெல்லாப் பிரிவுகளைவிட சரித்திர சம்பந்தமான தாகவும், முன்பின் பழிவாங்கித் தீரவேண்டிய உணர்ச்சி யுடையதாகவும் இருந்து வளர்ந்து கொண்டே வருகிறது.

இப்பிரிவைப்பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமா னால், இன்று மனித சமுகத்தில் உள்ள சகலவித பிரிவிலும் இந்த ஆரியர், (தமிழர் அல்லது) திராவிடர் என்கின்ற பிரிவே மிகக் கொடுமை யுள்ளதாகவும், இவ்விரு பிரிவினரும் எந்தக் காலத்திலும் ஒன்றுபடுவதற்கில்லாத வேற்றுமையுடையதாகவும் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டி யிருக்கிறது.

ஏனெனில், பல்வேறு மதங்களின் பேரால் இந்திய மனித சமுகம் பிரிக்கப்பட்டோ, பிரிவினைப்பட்டோ இருந்தாலும், அவைகளையெல்லாம்விட இந்து மதத்தினர் என்பவர்களுக்குள்ளாகவே இருந்து வரும் இந்த ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவானது, எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒன்று படுத்தப்பட முடியாத மாதிரியாய் அமைந்தும் இருந்தும் வருவதேயாகும்.

பிறவியே காரணமா?
உதாரணமாக இந்து சமுகம், முஸ்லிம் சமுகம், கிறித்தவ சமுகம் என்பவைகளுக்குள் ஒன்றுக்கொன்று இருந்து வரும் பிரிவுகள் எவ்வளவு பிரதானமாகவும், பெரியதாகவும் காணப்பட்டாலும் கூட, அவை ஒரு சிறு மனமாறுதலால் அடியோடு மறைந்து, ஒழிந்து போகும்படியானதாக இருக்கின்றன. ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஆரியர், திராவிடர் என்றோ-பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்றோ இருந்துவரும் சமூகங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிரிவினை, எப்படிப்பட்ட மனமாற்றத்தாலும் மாறுவதற்கோ, மறைவதற்கோ வழியில்லாமல் பிறவி முதல் சாவுவரை இருந்தே தீரும்படியானதாக இருந்து வருகிறது. காரணம் என்னவென்றால், மற்ற மதப் பிரிவு, மதபேதம் ஆகியவைகளுக்கு மனிதனுடைய உணர்ச்சிகள் அல்லது எண்ணங்கள் மாத்திரமே ஆதாரமாய் இருப்பதும், ஆரியர், திராவிடர் அல்லது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவுக்குப் பிறவியே காரணமாய் கற்பிக்கப்பட்டிருப்பதும்தான் முக்கிய காரணமாகும்.

மற்றும், மேல்கண்ட மத சம்பந்தமான பிரிவு களுக்கு மக்களின் வேஷத்தில் ஏதோ சில வித்தி யாசங்கள் மாத்திரம் கற்பிக்கப்பட்டிருக்கின்றதே அல்லாமல், ஒரு மதத்துக்கும் மற்றொரு மதத்துக்கும் புழங்கிக்கொள்வதில் எவ்வித வித்தியாசமும், ஆட்சேபனையும் இருப்பதில்லை. ஆனால், இந்து மதத்தில் உள்ள ஜாதி சம்பந்தமான பிரிவுகளில் பார்ப்பானுக்கும், பார்ப்பான் அல்லாதவனுக்கும் குறிப்பாக பார்ப்பானுக்கும், தீண்டப்படா தவன் என்பவனுக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் – இருந்துவரும் பேதங்கள் அறிவும், ரோஷமும் உள்ள எந்த மனிதனும் சகிக்க முடியாத தன்மையில் இருந்து வருகின்றன என்பதுடன், அதை மாற்றுவது அல்லது தணிப்பது என்பது கூட மகா பாதகமானக் காரியமாய் கருதப்படுவதும் மாத்திரமல்லாமல், இப்பேதங்களுக்கும் நடப்புகளுக்கும் ‘கடவுள்’ வாக்குகளாகவே ஆதாரங்களும் இருப்பதாகவும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவானது மாற முடியாததும், மாற்ற முடியாததுமாக இருந்து வருகையில் அதை எப்படி ஒருவன் மறக்கவோ, மறைக்கவோ முடியும் என்று கேட்கிறோம். இதை நன்றாய் உணர்ந்து இந்தப் பிரிவின் பயனாய் பலனை அனுபவிக்கும் கூட்டத்தாராகிய ஆரியர்களே இந்த பிரிவினைக்காகத் துக்கப்படுவதாகவும், இந்தப் பிரிவினையைப் பற்றி யாரும் இனி பேசக்கூடாதென்றும், அதைப் பற்றி பேசுவது தேச நன்மைக்கும், மனித சமுக நன்மைக்கும் கேடு என்றும் மாய அழுகை அழுது மக்களை ஏய்க்கிறார்கள்.

மனப்பூர்வமாக…
உண்மையாகவே பார்ப்போமானால், இன்று இந்த ஆரியர், திராவிடர் அல்லது பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரிவினை கூடாதென்றும், அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மனப்பூர்வமாக பாடுபடுபவர்கள் திராவிட மக்கள் என்னும் பார்ப்பனர் அல்லாதாரே ஆகும். இந்தப் பிரிவினை இருந்துதான் ஆகவேண்டும் என்று பாடுபடுபவர்கள் ஆரியர் என்னும் பார்ப்பனர்களேயாகும்.

உதாரணம் வேண்டுமானால், சுலபத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதாவது, வருஷம்தோறும் பார்ப்பனர்கள் பிராமண மகாநாடு, ஸநாதன மகாநாடு, வருணாசிரம தர்ம மகாநாடு, ஆரியர் தர்ம பரிபாலன மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளை ஆங்காங்கு கூட்டுவித்து வேதங்களையும், மனுதர்மம் முதலிய சாஸ்திரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும், மனுதர்ம சாஸ்திரப்படி, நடக்க வேண்டும் என்றும், வருணாசிரமங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் செய்து வருவதுடன், மடாதிபதிகள், சங்கராச்சாரிகள், குருமார்கள் முதலியவர்களைக் கொண்டு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவை மாத்திரமல்லாமல், இந்த பிரிவினைகளை அதாவது பார்ப்பனர், பார்ப்பனரல்லா தார் என்கின்ற பிரிவினையை காட்டுவதற்கு ஆகவும், காப்பாற்றுவதற்காகவும் கோவில், குளம், சத்திரம், காப்பிக்கடை, ஓட்டல் முதலிய ஜனங்கள் அவசியமாயும், அடிக்கடியும் கூடும்படியாயும் உள்ள இடங்களில் பார்ப்பனர்களுக்கு என்று வேறு இடமும், பார்ப்பனர் அல்லாதார்க்கு என்று வேறு இடமும் ஒதுக்கப்பட்டு விளம்பரப் பலகை போட்டு பாதுகாத்து வரப்படுகிறது.

நேர் விரோதமாய்…
பார்ப்பனரல்லாதார்களோ இதற்கு நேர்விரோதமாக பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரிவு இருக்கக்கூடாதென்றும், அம்மாதிரி வித்தியாசமும், பிரிவும் இருப்பது நாட்டுக்கு மாத்திரம் கெடுதி அல்லாமல், மனித சமூகத்தின் சுயமரியாதைக்கே கேடானதென்றும் சொல்லி வருகிறார்கள். பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியும், அவர்களது கூட்டத் தீர்மானங்களும் இதை அனுசரித்து வருகின்றன.

இந்தப்படி பார்ப்பனர் அல்லாதார் செய்து வருவதில் இந்தப் பிரிவு அடியோடு ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில், குறிப்பாக எந்தெந்த காரியமும், எந்த எந்த பழக்க வழக்கம் ஒழிய வேண்டும் என்று சொல்லி, அவைகளை எடுத்துக்காட்டி வருவதையே நமது பார்ப்பனர்கள், ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவினை எது எதில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டுவதே கூடாது என்றும், அப்படிக் காட்டுவதையே ஆரியர், திராவிடர் என்று பிரிக்கிறதாக ஆகின்றது என்று அதற்கு பெயர் கொடுத்து அதை ஒரு பழியாகச் சொல்லி விஷமப் பிரசாரம் செய்தும் அம்முயற்சியையே அடக்கி ஒழிக்கப்பார்க்கிறார்கள். இன்று இத்தென்னாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரச்சினையால் தென்னாட்டு மக்கள் இரண்டு துறையில் துன்பம் அனுபவிப்பதாகக் கருதி, அத்துன்பத் தில் இருந்து விடுபடவே ஆரியர்-திராவிடர் அல்லது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆதிக்கம் செலுத்த தேசியமா?
ஒன்று, சமுதாய வாழ்க்கையில் மதம் என்பதை ஆதாரமாய் வைத்து பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லா தார்களை இழிவும், கீழ்மையும் படுத்துதல். இரண்டு, அரசியல் வாழ்க்கையில் தேசியம் என்பதை ஆதரவாய் வைத்துக்கொண்டு பார்ப்பனர், பார்ப்பனரல்லாத மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்துதல்.

இந்த இரண்டு துறையிலும் பார்ப்பனரல்லாத மக்கள் தாழ்த்தப்பட்டு இழிவடைந்திருப்பது மாற்றப்பட்டால் ஒழிய, இந்த நாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவு உணர்ச்சியோ அல்லது ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவு உணர்ச்சியோ ஒரு நாளும் மாறாது. மாறுவதற்கு அனுமதிப்பதும் ஒரு நாளும் நியாயமாகாது. ஏனெனில், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவை ஆதியில் உண்டாக்கிக் கொண்டதின் பயனாய் பார்ப்பனர்கள் (ஜன சமுகத்தில் 100-க்கு 3 பேர்களாய் உள்ளவர்கள்) தங்களைக் கடவுளுக்குச் சமமாய் மதிக்கப்படும்படியாய் செய்துகொண்டு, உலகவழக்கிலும் சாமி என்று தங்களை மற்றவர்கள் அழைக்கும்படியும் செய்து கொண்டு, பொருளாதாரத் துறையில் எல்லோருக்கும் மேலாகவே சுகபோகமாயும் இருந்துகொண்டு வருகிறார்கள். மற்ற 100க்கு 97 மக்களாய் உள்ள பார்ப்பனர் அல்லாதார் என்பவர்களோ, பெரும்பாலும் 100-க்கு 75 பேர்களுக்கு மேலாகவே சமூக வாழ்வில் இழிவான மிருகத்திலும் கடையாயும், பொருளாதாரத் துறையில் சரீரப் பிரயாசைப் படும்படியாகவும், பெரும்பான்மை மக்கள் பட்டினியினால் வாடி உலக சுக போகத்தை நினைக்கவும் அருகதை அற்றவர்களாகவும் செய்யப்பட்டிருக்கும்போது, இந்த கொடுமையும் இழிவும் ஒழிக்கப்படாமல் பேத உணர்ச்சியை மாத்திரம் மறந்திருக்கும்படி எப்படித்தான் அனுமதிக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

ஆரியர் – திராவிடர் பிரிவு வேண்டாம் என்றும், பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கின்ற பேத உணர்ச்சி வேண்டாம் என்றும் இந்த 10, 20 ஆண்டு காலமாக பார்ப்பனர்கள் அதாவது சமூக இயலில் பிரதானப்பட்ட பார்ப்பனரும், அரசியலில் புகழும், தலைமையும் பெற்ற பார்ப்பனரும் கூப்பாடு போட்டு குறைகூறியும் வந்திருக்கிறார்களே ஒழிய, ஒரு பார்ப்பனராவது அப்பேத உணர்ச்சிக்கு ஆதாரமான காரியங்களில் ஒரு கடுகளவை யாவது ஒழிக்கவோ, மறைந்து போகும்படி செய்யவோ முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்களா? என்று கேட்கின்றோம்.

கிளர்ச்சியின் பயனாய்…
பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியின் பயனாய்-அதுவும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவில் கஷ்டமும், இழிவும் அடைந்து வருவதை விளக்கிக்காட்டி, கூப்பாடு போட்டு வந்ததின் பயனாய் ஏதாவது ஒரு சிறிதாவது அப்பேதக் கொடுமையில் இருந்து மீள வகை கண்டிருக்கக்கூடுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் வழியில்லாமலே கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இன்னமும், இன்றும் பொதுஸ்தாபனங்களில் அதாவது ரயில்வே, கோவில், சத்திரம், குளம் முதலிய இடங்களில் கூட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரிவு பார்ப்பனர் களாலேயே ஏற்படுத்தப்பட்டு, பார்ப்பனராலேயே காப்பாற்றப்பட்டு வருகிறது. இன்னமும் – நாளையும் பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆணும், பெண்ணும் பார்ப்பனரல்லாதார்களில் இருந்து பிரித்துக் காட்டும் படியான வேஷத்தையும், வேஷச் சின்னத்தையும் அணிந்து தங்களை பிரித்துக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இருந்து கொண்டு இருக்கும் பார்ப்பனர்கள், மற்றவர்களைப் பார்த்து அதுவும் கஷ்டமும், இழிவும் அடைந்து கொண்டிருக்கின்றவர்களைப் பார்த்து பேத உணர்ச்சியை விட்டுவிடுங்கள் என்று சொன்னால் அதில் நாணயமோ, யோக்கியமோ இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.

சமீப காலத்தில் பார்ப்பனர்களால் கூட்டப்பட்ட பல பிராமண மகாநாடுகளிலும், வருணாசிரம தர்ம பாதுகாப்பு மகா நாடுகளிலும் செய்யப்பட்ட தீர்மானங்களில் முக்கிய தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் முன் குறிப் பிட்டது போல் ‘‘ஸநாதன தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றும், ‘‘வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றும், “மனுதர்ம சாஸ்திரத் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வரும்படி ஒவ்வொரு பார்ப்பனரும் நடந்து கொள்ள வேண்டும்” என்றுமே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

பேத உணர்ச்சி வேண்டாம்
ஸநாதனதர்மம், வருணாசிரம தர்மம், மனுதர்மம் என்றால் என்ன என்பது தெரியாதா? என்று கேட்கின்றோம். இந்த மாதிரி நிலையில் பார்ப்பனர்கள் இருந்துகொண்டு ‘‘பேத உணர்ச்சி வேண்டாம்’’ என்று நமக்கு புத்தி சொல்ல வருவதென்றால் இது ‘‘நான் அப்படித்தான் அடிப்பேன் நீ அழக்கூடாது, உடலைக்கூட அசைக்கக்கூடாது’’ என்பது போன்ற நீதியாக இருக்கிறதா இல்லையா என்று கேட்கின்றோம்.
ஆகவே, வரப்போகும் அரசியல் போட்டிகளில் பார்ப்ப னரல்லாதார் ஒரு சமயம் தோல்வியடைந்து விட்டாலும்கூட, இந்த மேல் கண்ட பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவினையை சகல துறைகளிலும் அழிந்து, ஒழிந்து போகும்படி செய்ய வேண்டிய வேலைகளையாவது தக்கபடி கவனித்து வந்தால் அரசியல் துறை போட்டியில் வெற்றி ஏற்படுவதின் மூலம் கிடைக்கும் நன்மையைவிட கூடுதலான நன்மை கிடைக்கும் என்றே கருதுகிறோம்.

ஆகையால், பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சி போதனைக்கும் ஆளாகாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டுகிறோம்.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 05.04.1936


சனி, 23 நவம்பர், 2024

சுயமரியாதைக்காரரும் மதமும்


சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!

விடுதலை நாளேடு










சுயமரியாதைக்காரரும் மதமும்

மதம் என்பது கடவுளாலும் கடவுள்களால் அனுப்பப்பட்டவர் களாலும் கடவுளை அடைவதற்கும், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்மந்தத்தை விளக்குவதற்கும் ஏற்பட்டவைகள் என்பது ஒரு சாராரின் அபிப்பிராயம்.

மனிதன் நடந்து கொள்ள வேண்டியதற்கு ஆக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் விதிகள் திட்டங்கள் என்பதுதான் மதம் என்பது மற்றொரு சாராரின் அபிப்பிராயம்.
எப்படி இருந்தாலும் சுயமரியாதைக்காரர்கள் மதம் என்பதைப் பற்றி கொண்டுள்ள அதப்பிராயம் பலர் அறிந்ததேயாகும். நிர்ப்பந்தமான அல்லது மூடநம்பிக்கையானதும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் சாத்தியத்துக்கும், மாறானதும் பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சி அல்லது விஞ்ஞானத்திற்கும் எதிரானதுமான காரியங்களையோ கருத்துக்களையோ ஆதாரங்களையோ ஏற்றுக்கொண்டு இருப்பதே மதம் என்றும், அது எதுவானாலும் அப்படிப் பட்ட மதங்களையே சுயமரியாதைக்காரர்கள் மறுக்கிறார்கள் என்பதோடு அம்மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

சாதாரணமாக இன்று இந்தியாவில் பெரும்பான்மையான அதாவது 100க்கு 95 பேர்களுக்கு மேலாகவே உள்ள மக்களை ஆவாகனம் செய்து கொண்டிருக்கும் மதங்களாகிய இந்து மதமும் மற்றும் சீர்திருத்த மதங்கள் என்பவையாகிய இஸ்லாம், கிறிஸ்து, ஆரிய சமாஜம், பிர்மசமாஜம், முதலிய பல மதங்களும் நிர்பந்தமான நம்பிக்கை (அதாவது நம்பித்தான் தீரவேண்டும் என்பது) அல்லது மூடநம்பிக்கை அல்லது கொள்ள முடியாததும் ஆதார மில்லாததுமான விஷயங்களில் நம்பிக்கை வைத்தல் ஆகியவைகளையோ அல்லது இவற்றில் சிலவற்றையோ கொண்டதாகத் தான் காணப்படுகின்றன.

சரீரம் வேறு, ஆத்மா வேறு என்றும், கடவுள் வேறு ஆத்மாவேறு என்றும், அது மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்புடையது என்றும் மனிதனையும் கடவுளையும் ஒன்று சேர்ப்பது என்றும், சரீரத்தின் கூட்டுறவால், அதன் தூண்டுதலால் ஆத்மா செய்த குற்றத்துக்கு கடவுளுடைய தண்டனைகள் ஆத்மாவுக்கு மாத்திரம் தான் கிடைக்கும் என்றும், இறந்த பிறகு அதாவது சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்த பிறகு தீர்ப்பு நாளில் மறுபடியும் ஒரு சரீரத்தைப் பெற்று சித்திரபுத்திரன் கணக்குப்படி தண்டனைகள் கண்டனைகள் அடையும் என்றும், செத்தவர்கள் மறுபடியும் பிறப்பார்கள் என்றும், ஒரு ஆத்மாவுக்கு பல ஜன்மங்கள் உண்டு என்றும், அந்த ஜன்மங்கள் எல்லாம் ஆத்மாவும், சரீரமும் கலந்து இருந்த காலத்தில் செய்த காரியத்துக்கு ஏற்ற விதமாகக் கிடைக்கும் என்றும், இப்படி இன்னும் எவ்வளவோ விஷயங்களைக் கொண்டவைகளே இன்று செல்வாக்குள்ளதும் இந்நாட்டில் 100க்கு 95 பேர்களுடையதுமான மதங்களாய் இருக்கின்றன.

இப்படிப்பட்ட மதங்களைத் தான் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஒப்புக் கொள்ளவும் முடியாது என்பதோடு இந்த மதங்களிலிருந்து மக்கள் விடுபட்டு அறிவுச் சுதந்திரவாதிகளாக பகுத்தறிவுவாதிகளாக ஆக வேண்டும் என்பது சுயமரியாதைக்காரர்களின் முக்கிய லக்ஷ்யமாகும்.

அது போலவே உலக நடப்புக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக கடவுள் என்கின்ற ஒரு வஸ்து இருக்கிறது என்பதையும், அது மக்கள் தீண்டப்படாதவர்கள் ஆவதற்கும், மக்களை மேல் ஜாதிக்காரர்கள், முதலாளிகள், அரசர்கள் என்பவர்கள் கொடுமைப்படுத்துவதற்கும் காரணமாயும் மனிதனுக்கு ஆக உலகில் உள்ள ஜீவராசிகள் ஆடு, மாடு, பன்றி, கோழி, பக்ஷிகள், மச்சங்கள் முதலாகியவைகள் சிருஷ்டிக்கப்பட்டது என்பதற்கும் காரண கர்த்தாவாயும் இருக்கிறது என்பதையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

மற்றும், அக்கடவுளே எரிமலை, பூகம்பம், புயல்காற்று, வெள்ளக் கொடுமை ஆகியவைகளுக்கு கர்த்தாவாகவும் விஷஜுரம், தொத்து நோய், கொள்ளை நோய், குறை நோய், உளைமாந்தை ஆகிய வியாதிகளுக்கும், தேள், பாம்பு முதலிய விஷக்கிருமிகளுக்கும் புலி, சிங்கம், ஓநாய், நரி முதலிய துஷ்ட ஜெந்துக்களுக்கும், சிருஷ்டி கர்த்தாவாகவும் எலியைப் பூனை தின்பதற்கும், ஆட்டைப் புலி தின்பதற்கும், புழுப்பூச்சிகளை பட்சிகள் தின்பதற்கும், பட்சிகளை வேடர்கள் வேட்டையாடுவதற்கும் காரணகர்த்தாவாயும் இருக்கிற கடவுளையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கர்த்தாவையும் ஒழிக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

மேலும் வேறு எப்படிப்பட்ட கடவுளானாலும் அதை வணங்கினால், அதற்கு ஆகாரம், நகை, துணி, பெண்ஜாதி, வைப்பாட்டி முதலியவை வைத்து பூஜைசெய்தால், உயிர்பலிகொடுத்தால், இன்ன இன்ன மாதிரி தொழுதால், ஸ்தோத்திரித்தால் ஜபித்தால் மனிதன் செய்த எல்லா கெட்ட காரியங்களின் பாபங்களையும் மன்னித்துவிடுவார் என்கின்ற கடவுளையும் ஒப்புக் கொள்ளாததோடு அப்படிப்பட்ட கடவுளுணர்ச்சியையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.
கடவுளைப்பற்றிய மற்ற விஷயத்தை மற்றொரு சமயம் விவரிப்போம்.

மதம் என்னும் விஷயத்தில் மேலே குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட மதங்கள் இருக்கக்கூடாது என்பது தான் சுயமரியாதைக்காரர்களின் மத சம்பந்தமான அபிப்பிராயமாகும்.

ஏன் இதை முதலில் குறிப்பிடுகிறோம் என்றால் விவகாரங்களுக்கு வரும்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள் தங்கள் மதங்களுக்கு வெவ்வேறு தத்துவம் இருப்பதாகவும், சகலவிதமான பகுத்தறிவு பரீக்ஷைகளுக்கும் தங்கள் மதம் நிற்கும் என்றும் சொல்லி வாதாடும் போது சமயத்துக்குத் தகுந்தபடி பேசுவதால் நிலைமை கஷ்டத்திற்கு உள்ளாகிறது. ஆகையால் மதங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பல மதங்களுக்கும் உள்ள பொதுக் கொள்கைகளையே குறிப்பிட்டோம்.
மற்றும் மதம் என்னும் வார்த்தைக்கு பலவித அருத்தங்களும், கருத்துக்களும் சொல்லப்படுகின்றன.

உதாரணமாக ஒருவர் “என்னுடைய மதம் யார் மனதையும் புண்படுத்தாமலும் யாருக்கும் என்னால் கூடிய நன்மை செய்வது தான்” என்று சொல்லுகிறார்.மற்றொருவர் “என்னுடைய மதம் கடவுளைப்பற்றி கவலைப்படாத நாஸ்திக மதம் தான்” என்கின்றார்.

மற்றொருவர் “என்னுடைய மதம் கடவுள் இல்லை; ஆத்மா இல்லை. ஆனால் கர்மத்துக்குத் தகுந்த பலன் உண்டு” என்பது தான் என்கிறார்.
மற்றொருவர் “நான் கருதியிருக்கும் மதம் திமிர் அல்லது கொழுப்பு” என்கிறார்.

மற்றொருவர் “மதம் என்னும் வார்த்தைக்கு கொள்கை அல்லது கடமை” என்பது தான் அர்த்தம் என்கிறார்.
மற்றொருவர் “என்னுடைய மதம் விஞ்ஞானம்” என்கிறார்.

மற்றொருவர் “என்னுடைய மதம் மனித ஜீவ அபிமானம்தான்” என்கிறார். மற்றொருவர் “என்னுடைய மதம் பொதுவுடமை கொள்கை” என்கிறார். இப்படியே இன்னும் பலவிதமாய் மதம் என்னும் வார்த்தைக்கு தனித்தனி கருத்துக்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் அவைகளைப்பற்றி யெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம்.

ஆனால் முகப்பில் கூறிய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதங்களின் அஸ்திவாரம் ஒன்றுபோலவே இருந்தாலும் அதன் மேல் கட்டப்பட்ட கட்டடங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம்.

ஒருவன் உண்மையாகவே மதம் இல்லாமல் இருப்பது நாஸ்திகம் என்று கருதிக்கொண்டு ஏதாவது ஒரு மதத்தின் பேரால் உயிர் வாழ வேண்டியவனாய் இருக்கிறான்; ஆதலால் எப்படியாவது தான் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க வேண்டும். மற்றப்படி மதக்கொள்கைகள் எது எப்படி இருந்தாலும் தான் லக்ஷியம் செய்வதில்லை என்கின்ற கருத்தின் மீதே தனக்குள் எவ்விதக் கொள்கையும் இல்லாமல் ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு மத வேஷத்தைப் போட்டுக்கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.

மற்றும் பலரும் அதுபோலவே மதங்களுக்கு உள்ள செல்வாக்குக்கு பயந்து கொண்டு மத வேஷக்காரர்களாய் இருக்கிறார்கள். பரத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருப்பது போலவே இகத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருக்கிறார்கள்.
விளக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பணத்துக்கு ஆகவும், பெண்ணுக்கு ஆகவும், வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவும், உத்தியோகத்துக் காகவும் எத்தனையோ பேர் மதவாதிகளாகவும், மதமாற்றக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

பொதுவாக பார்க்கப்போனால் கடவுள் ஏற்பட்ட வெகு காலத்துக்கு பிறகுதான் மதம் ஏற்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய கடவுளும் மதமும் இரட்டைப்பிள்ளைகள் போல் பிறந்தவைகள் அல்ல.

எப்படி இருந்தாலும் மதங்களானவை இன்று சடங்காகவும் வேஷமாகவும் இருக்கின்றனவே ஒழிய கொள்கையாகக் கூட எந்த மதமும் அனுபவத்தில் இருக்கவில்லை. புஸ்தகங்களில் பல கொள்கைகள் இருந்திருக்கலாம்; இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். காரியத்தில் அக் கொள்கைகள் பெரிதும் அமுலில் இல்லை.

ஆகவே அமுலில் இல்லாத கொள்கைகளைக் கொண்ட மதங்களில் எந்த மதம் மேலானது என்றோ, எந்த மதக் கொள்கை மேலானது என்றோ வாதிப்பதானது ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோட்டைகளில் எது பலமான கட்டடம் என்றும், எது வசிப்பதற்கு சவுகரியமானது என்றும் கேட்பதுபோல் தான் ஆகும்.

முதலாவதாக ஒரு மதத்துக்கு கொள்கைகள் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால் அதற்கு இரண்டு சக்தி இருக்க வேண்டும்.

அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்கவேண்டும். அதோடு கூடவே அக்கொள்கைகள் எல்லா மக்களாலும் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் தானாகவே பின்பற்றித் தீரவேண்டியதாகவும் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தத்துவங்களைக் கொண்ட கொள்கையை இதுவரை எந்த பெரியவரும் கண்டுபிடிக்கவுமில்லை. எந்த மதமும் கொண்டிருக்கவும் இல்லை.

அது செய்தால் பாவம் இது செய்தால் மோக்ஷம் என்றும், அது செய்தால் லாபம் இது செய்தால் நஷ்டம் என்றும், அது செய்தால் தண்டனை இது செய்தால் தூக்கு என்றும், இப்படியாக பல நிர்ப்பந்தங்கள், பயம், தண்டனை கண்டனை ஆகியவைகளின் பாதுகாப்பால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளாகவும் அமுலில் கொண்டுவர எப்போதுமே முடியாததாகவும் அமுலில் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட வேண்டியதாகவும் மனிதனால் சாதாரணமாக செய்யக்கூடியதும் செய்வதற்கு ஆசையுண்டாக்கக் கூடியதும் அல்லாததாகவும் இருக்கக்கூடிய கொள்கைகளையேதான் எந்த மதமும் கொண்டிருக்கிறது.

எந்தக் கொள்கையாவது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகவோ அல்லது கடவுளுக்கு இஷ்டமானதாகவோ இருந்திருக்குமானால் அது மக்களுக்கு மிகவும் இஷ்டமானதாகவும், செய்வதற்கு மிகவும் ஆசையுடையதாகவும், சுலபத்தில் செய்து முடிக்கக்கூடியதாகவும் இருந்திருக்க வேண்டாமா? கடவுளுக்கு இஷ்டமான கொள்கை மனிதனுக்கு கசப்பானதாகவும், பெரும்பான்மையோருக்கு செய்வதற்கு முடியாததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

ஆகவே கடவுளின் பேரால் மதத்தின் மூலம் மத கர்த்தாக்களால் சொல்லப்பட்ட கொள்கைகள் என்பவை சொன்னவர்களுக்கு அவர்களது புத்தித்திறமையும், அக்காலத்துக்கு சரி என்று பட்ட கருத்துக்களையும் கொண்டவைகளே தவிர எந்தக் கொள்கையும் எந்தக் கடவுளாலும் சிருஷ்டிக்கப்பட்டதல்லவென்றே சுயமரியாதைக்காரர்கள் கருதுகிறார்கள்.

இன்றும் மதமானது மக்களின் கூட்டு வாழ்க்கையின் அவசியத்துக்கு ஏற்ற கொள்கைகளைக் கொண்டது என்பதுடன் அவை பகுத்தறிவுக்கு ஒத்ததாகவும், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திருத்திக் கொள்ளக் கூடியதாகவும், சகல மக்களுக்கும் பலன் ஒன்றுபோல் உண்டாகக்கூடிய தாகவும் இருக்கத்தக்க கொள்கைகள் கொண்டது என்றால் அதை சுயமரியாதைக்காரர்கள் மறுப்பதற்கு முன்வரமாட்டார்கள்.

– தந்தை பெரியார் – ‘பகுத்தறிவு’ – மார்ச்சு 1936

புராணப் பிழைப்புக்காரர்களின் ஏமாற்றே உழைப்பும், பணமும் சுரண்டப்படுவதே-(கார்த்திகை தீபம்)

 


கார்த்திகை தீபம்

தந்தை பெரியார்

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம்.
எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப் பண்டிகைகளில் உள்ள அபி மானமும், மூட நம்பிக்கையும் ஒழிந்தபாடில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல், அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்படுத்தி வருவ தனால், நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம்.

சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியிருந்தோம்.

பயன் என்ன?

அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டி கையால் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுங்கிப் புகையும் கரியுமாக ஆகிய வகையிலும் செலவாகியிருக்கும் என்பது மட்டுமல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி, ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூடநம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடி புகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.
இவ்வளவு மாத்திரம் அல்ல, தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்களின் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்மடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதனால் தடைப்பட்ட

காரியங்கள் எவ்வளவு!

தீபாவளிக்கு முன் சில நாட்களும் தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட் டுகளிலும் வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத் தால், அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால்

தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.

இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது.இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த் திகைத் தீபம் என்பதுதான்.

இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்தி கைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வீண் செலவு

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன் கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?
இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!
கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப் பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண் ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணம் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!

இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக் கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதை இரண்டு. அவைகளில் ஒன்று:

மூட நம்பிக்கை

ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதையறிந்த அவன் மனைவி சுவாகா தேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப் படுவான் என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைதான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவ தாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதை யெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை.

இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள். பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபச்சாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்வீகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று. ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.

இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:

புராணப் புரட்டு

ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம். உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம். அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டி ருக்கிறாய்? என்று கேட்க, அது, நான் பரம சிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங் களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.

உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல் லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.
அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம். பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ் வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம்.
இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை. இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாச கங்களும், தோத்திரங்களும் இல்லை.

இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக் கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக் குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறிய லாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அநேக செய்திகள் அமைந்திருப் பதைக் காணலாம்.

இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகை யினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?

இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண் டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்க வில்லை.

வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப் பார்களா?
குருட்டு எண்ணம்

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாது – தானே கடவுள் என்னும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும் போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள்,அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடா விட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டி ருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர் களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சி யெடுத்துக் கொண்டார்களா?

இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங் களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங் களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

“குடிஅரசு” 22-11-1931