சனி, 23 நவம்பர், 2024

சுயமரியாதைச் சூட்டுக்கோல்! 1971இல் தினமணியார் கேட்ட கேள்விக்கு 1946 – ‘குடி அரசி’ல் பெரியாரின் பதில்!


விடுதலை நாளேடு

 


“தினமணி கதிர் பத்திரிகை சார்பாக மிகவும் குறும்புத்தனமாக விஷமத் தனமாக என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. மிகுந்த பொறுமையோடு பதில் அளித்தேன். அதில் ஒரு கேள்வி-

“பெரியார் ஈ.வெ.ரா. துவேஷித்து அதனால் கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் ஆளான பிராமணர்கள், படிக்க வேண்டா மென்று சொல்லுகிறார்களே என்று வேறு முடிவெடுத்து, தொழில் அதிபர்களாகி – பிராமணர்கள் எல்லாம் தொழில் அதிபர்களாக-சிறந்து விளங்குகிறார்கள். அதற்காக பிராமணர்கள் பெரியாருக்கு நன்றி செலுத்துகிறார்களே, உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு நான், “பிராமணர்கள் நன்றி சொல்கிறார்கள் என்பதை உங்கள் மூலம்தான் கேள்விப்படுகிறேன்” என்று பதில் கூறினேன். அந்தக் கேள்வியும் பதிலும் பத்திரிகையில் இடம் பெறவில்லை”
என்று 14-8-1971இல் பகுத்தறிவாளர் கழக பாராட்டு விழாவில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் பேசினார்.

ஏதோ சொல்லிவைத்தாற்போல தினமணி அய்யரின் கேள்விக்குத் தந்தை பெரியார் அவர்கள் அவரது “குடி அரசு ” வார ஏட்டில் 9-11-1946இல் – அதாவது இந்தக் கேள்வி கலைஞரிடம் கேட்கப்படுவதற்கு 25 ஆண்டுகட்கு முன்பே அளித்த சுவையான பதில் கீழே தரப்படுகிறது:-

“இந்த நாட்டில் பார்ப்பனர்மீது பாமரர்களுக்கு வெறுப்பு உண்டாகும் படிச் செய்துவரும் (என்னால் தோற்று விக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச்சாரத் தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதீக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு, பாங்கி, வியாபாரம், இயந்திர முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு, ஏராளமான பணம் சம்பாதித்து, அவர்களில் அநேகர் செல்வவான்களாகவும், இலட்சாதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள். இதுதான் துவேஷப் பிரச்சாரத்தால் ஏற்பட்ட பயன் என்று பார்ப்பனர்கள்மீது வெறுப்புக்கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகிறார்கள்.

இது உண்மையானால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும்.

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து, ஒரு பார்ப்பான் கூட “மேல் ஜாதி”யான் என்பதாக இருக்கக்கூடாது; என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரன் ஆகக்கூடாது; அவன் நல்வாழ்வு வாழக்கூடாது; அவன் ஏழையாகவே இருக்கவேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர். அண்ணாமலை செட்டியார், பொப்ளிராஜா. சர். ஷண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோடீஸ்வரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உட்பட எவரும் சிறிதுகூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக்கூடாது என்பது தான். பணக்காரத்தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல. அந்த முறை தொல்லையானது, சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல்லையைக் கொடுக்கக்கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடியதும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியது மாகும்.

ஆனால், இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்கு, பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையது மாகும். அது முன்னே ற்றத்தையும், மனிதத் தன்மையையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும். ஒரு பெரிய மோசடியும் கிரிமினலுமாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

– ஈ.வெ.ரா.

இது வெறுப்பு இயக்கமல்ல; மனித சமத்துவத்தின் மீதான விருப்புகொண்ட இயக்கம் என்பதையும் எவ்வளவு தெளிவாகத் தந்துள்ளார் தந்தை பெரியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக