புதன், 30 ஜூலை, 2025

கடவுளும் மனிதனும்- தந்தை பெரியார்

 உண்மை இதழ் மாதமிருமுறை >> ஜூலை 16-30,> 2025 > 

உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, மற்ற ஜீவராசிகளுக்கும், புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால், அவையெல்லாம் மனிதர்களைப் போலவே தோன்றி வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகின்றன.

தோன்றி, வாழ்ந்து, அழிந்து, மாய்ந்து போவதில் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசி, புல் பூண்டு தாவரங்களுக்கும் மற்ற பொருள்
களுக்கும் எவ்வித மாறுதலும் காண முடிவதில்லை .

பிறவியில் இயற்கையாய் உள்ள பேதங்
களால் சில மாறுதல்களைக் காண்கிறோம். அம்மாறுதல்களின் அடிப்படையில் பேதம் எதுவும் காண்பதற்கில்லை.

ஜீவநூல் ஜீவ ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆதியில் அதாவது உலகம் ஏற்பட்ட – தோன்றிய காலத்தில் மனிதனும் மற்ற மிருகாதி ஜீவப்பிராணிகளும் ஒன்று போலவேதான் நடந்து வாழ்ந்து வந்தன என்று குறிப்பிடுகிறார்கள்.

மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளைவிட அறிவுத் துறையில் சிறிது மாற்றம் இயற்கையில் இருந்துவருகிற காரணத்தால், மனிதனுக்கு ஆசை பெருக்கெடுத்து, வாழ்க்கையில் பெரும் கவலைக்கு ஆளாகி, அதனால் துக்க சுகத்திற்கு ஆளாகி உழலுகின்றான். ஆசையும் மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக் கடவுள் கற்பிக்கப்பட்டு புகுத்தப்பட்டு அறிவின் பயனைக் கொடுத்துக்கொண்டு கவலைக்கும் துக்க சுகத்திற்கும் ஆளாகி அழிகிறான்.

மனித சமுதாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப்படாமல் இருந்தால், மனிதர் நிலையே இன்று வேறாக இருக்கும்.

அதாவது கவலையற்ற, துக்கமற்ற வாழ்வு வாழும்படியான நிலையை எய்தியிருப்பான்.

இன்று கவலையும் துக்கமும் இல்லாத மனிதனைக் காண்பதே அரிதாயிருக்கிறது. எந்த உயர்நிலையில் இருப்பவனுக்கும் கவலையும் துக்கமும் குடி கொண்டிருக்கிறது. கடவுள் எண்ணத்தை ஒழித்தவர்களுக்குக் கடவுள் இல்லை. எல்லாம் இயற்கை என்று எண்ணி இருப்பவர்களுக்குத் துக்கம் – கவலை இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களைத்தான் ஞானிகள் – முற்றும் துறந்த மெய்ஞ்ஞானிகள் என்று சொல்லுவார்கள். அந்த நிலையை மனிதன் எய்துவதும் எளிதன்று! ஞானம் தோன்றும், துறவு தோன்றும். தோன்றியவன் உலகில் மக்களிடையில் வாழ்வதால், அடிக்கடி சறுக்கி விழுந்து கவலைக்கும் துக்கத்திற்கும் ஆளாகிவிடுகிறான் என்றாலும், நாம் அறியாமல் நமக்குத் தெரியாமல் யாராவது இருந்தாலும் இருக்கலாம்.

மோட்சம் என்ற சொல்லுக்கும், முக்தி என்ற சொல்லுக்கும் உண்மையான கருத்து (அர்த்தம்) கவலையற்ற தன்மை – துக்கமற்ற தன்மை என்றுதான் பொருள். மோட்சம் (அல்லது முக்தி) – துக்க நாசம்; இந்த நிலை கடவுள் (ஒருவர் அல்லது பலர்) இருக்கிறார் என்கின்ற எண்ணமுடையவனுக்கு என்றுமே தோன்றாது.

எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் படிகிறதோ – உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தம் துக்கமும் கவலையும் கொண்டவனாகத்தான் இருப்பான். பேராசைக்காரனாகத்தான் இருப்பான். பொதுவாக இன்று பார்ப்போம் – கடவுள் பக்தன், கடவுளை வணங்குகிறவன் அவன் முட்டாளானாலும் “அறிவாளி” ஆனாலும் வணங்குகிறான்? என்ன எண்ணத்தில் வணங்குகிறான்? ஏதோ வேண்டுகோளின் மீதுதானே! எதையோ எதிர்பார்த்து ஆசைப்பட்டுத்தானே வணங்குகிறான்?

“எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்று சொல்பவனாய் இருந்தாலும், “பாதாரவிந்தம் வேண்டும்” என்றாவது சொல்லித்தானே கும்பிடுவான்? அவன் யாருக்குச் சமம் என்றால், எனக்குப் பின்புறம் பிடரியில் ஒரு கண் இருக்கவேண்டும் என்று கடவுளை வணங்குகிறவனுக்குச் சமமானவன் தானே!

ஏதாவது ஒன்றை வேண்டித்தானே பக்தி,
வணக்கம், பூசை, தொழுகை, பிரார்த்தனை முதலியவையெல்லாம்? ஒன்றும் வேண்டாத
வனுக்குக் கடவுளிடம் என்ன வேலை?

அதிலும் தவறு செய்தவன், மோசடி செய்தவன் – செய்கிறவன், பேராசைக்காரன் ஆகியவர்களுக்குத்தான் கடவுள், பக்தி, பூசை முதலியவை அதிகமாக இருப்பதைக் காண்கிறோம்.

எனக்குச் சுமார் பத்து ஜெயில்களில் இருந்த அனுபவம் உண்டு. கொலைக் கைதி முதல் ஒவ்வொரு கைதிகளும் அவனவன் அறைகளில் ஏதாவது ஒரு சாமிபடம்; சிலர் ஏதாவது ஒரு புராணம், பக்தி நூல் வைத்துப் பூசை – பிரார்த்தனை செய்துகொண்டு இருப்பதைத்தான் பார்த்தேன். ராஜமுந்திரி (கோதாவரி) ஜெயிலில் ஒரு கைதி – கொலை செய்தவன் – ஆயுள் தண்டனை அடைந்தவன். அவன் காலை 10:00 மணிக்குக் குளித்து விட்டு அரைமணி நேரம் ஒற்றைக்காலில் நின்றுகொண்டு கைகளைத் தலைக்குமேல் தூக்கிக் கூப்பிக் கும்பிட்டுக்கொண்டு எதையாவது சொல்லிக்கொண்டே நிற்பான். அவன் படித்தவன், கொஞ்சம் பணக்காரனும் கூட! எதற்காக இவ்வளவு பக்தி, பூஜை என்று கேட்டதற்குச் “சீக்கிரம் விடுதலையாவதற்கு” என்று சொன்னான். இப்படி எத்தனையோ கைதிகள் குளித்தவுடன் சாம்பலைப் பூசிக்கொண்டு சாமி கும்பிடுவதைப் பார்த்தேன்.

லஞ்சம் வாங்கும் சைவன்; லஞ்சம் வாங்கும் வைணவன், லஞ்சம் வாங்கும் முஸ்லிம், லஞ்சம் வாங்கும் கிறித்துவன் முக்கியமாய் இவர்கள் பெரிதும் பூசை, வணக்கம், தொழுகை, பிரார்த்தனை இவைகளில் மிகக் கண்டிப்பாக – தவறாமல் நடந்துகொள்கிறார்கள்.

அதிக பக்தி, பூசை, தானம், தர்மம், உபயம், கட்டளை உள்ள வியாபாரிகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆகவே, மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஆசை காரணந்தானே ஒழிய, மனிதனை ஒழுக்கமுடையவனாக்கவோ, மற்றவர்களுக்குப் பயன்படும்படி செய்யவோ அல்ல என்பதை ஒவ்வொருவரும் நம்ப வேண்டுமாய் வேண்டுகிறேன். l

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக