தோழர்களே! இந்தக் காலம் ஒரு பெரிய மாறுதலான காலம்; மாறுதலிலேயும் ஒரு பெரிய புரட்சிகரமான கொள்கையைக் கொண்ட மாறுதலான காலமாகும். இங்குள்ள அய்ந்து (5000) ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களில் 10 பேர்களுக்குக்கூட குடுமியில்லை. எல்லோரும் தலையைக் கத்தரித்துக் கொண்டு இருக்கிறார்கள். 60, 70 வயதுள்ளவர்கள் கூட 91 வயதான நான் கூடக் கத்தரித்துக் கொண்டிருக்கிறேன். மதப்படி, சாஸ்திரப்படி குடுமி வைத்திருக்க வேண்டும். ஆனால், யாரும் சொல்லாமல், சட்டம் போடாமல் மக்கள் மதத்திற்கு, சாஸ்திரத்திற்கு விரோதமாக முடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், காலத்தின் மாறுதலான வேகத்தாலேயே ஆகும். அது போன்று தான் – நெற்றியில் சாம்பலில்லா விட்டால் நீறில்லா நெற்றி பாழ் என்பான்; நாமம் இல்லா நெற்றி நாசமென்பான். இன்று ஒரு சில ஏமாற்றுக்காரர்களைத் தவிர வேறு யார் நெற்றியிலும் சாம்பலுமில்லை – நாமமுமில்லை. யார் போட வேண்டாம் என்றார்கள்? அதற்கு முன் ஆதிதிராவிடர் மக்களைப் பக்கத்தில் அழைத்தால் அவர்கள் வரமாட்டார்கள். தூரவே நின்று கையைக் கட்டிக் கொண்டு பேசுவார்கள். இன்று நாம் அழைக்காமலே நம் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறான். நான் மட்டும் என்ன தாழ்ந்தவன்? உன் இரத்தத்தையும், என் இரத்தத்தையும் பார்? இரண்டும் ஒன்றாகத் தானே இருக்கிறது என்கின்றார்கள்.
இதற்கெல்லாம் ஒன்றும் சட்டம் செய்யவில்லை. காலம் நம்மைத் தள்ளிக் கொண்டு போகிறது. முதன் முதல் சுயமரியாதை இயக்கம் 1925இல் ஆரம்பித்த போது கடவுள் ஒழிக, மதம் ஒழிக, காந்தி ஒழிக, காங்கிரஸ் ஒழிக, பார்ப்பான் ஒழிக, ஜாதி ஒழிக என்று கொள்கை வைத்து ஆரம்பித்தது. பல பேர் இது ஒன்றும் ஆகாது என்று சொன்னார்கள். இதெல்லாம் முடியுமா என்று கேலி செய்தார்கள். ஆனால், இன்று ஒவ்வொன்றாக ஒழிந்து கொண்டு வருவதைக் காண்கின்றோம். கடவுள் ஒழிக என்றோம் இன்று ஒழிந்து விட்டது. இந்தக் கூட்டத்தில் எவன் கடவுளை நம்புகின்றான். கடவுள் செயல் என்று எவன் தன் காரியத்தைச் செய்யாமலிருக்கின்றான், அவனவன் காரியத்தை அவனவன் செய்கின்றானே தவிர, எவனும் கடவுளை நம்பிக் கொண்டு தன் காரியத்தைக் கடவுளிடம் ஒப்புவிப்பது கிடையாது. முட்டாள்தனத்திற்குத் தான் கடவுள் என்கின்றானே தவிர, எவனும் கடவுளை உண்மையில் நம்புவது கிடையாது.
காங்கிரஸ் ஒழிக என்றோம்! எப்போது என்றால், காங்கிரஸ் பூராவும் பார்ப்பானாக இருந்த போது! இப்போது அந்தக் காங்கிரஸ் ஒழிந்துவிட்டது. இப்போது காங்கிரசில் நம்மவர்கள் தான் இருக்கிறார்கள். பார்ப்பான் ஒழிக என்றோம்! இன்று அரசியல், பதவி, உத்தியோகங்களில் பெரும்பாலும் பார்ப்பான் ஒழிந்து விட்டான். பொதுவாழ்விலும் பார்ப்பானுக்குச் செல்வாக்கு இல்லாமல் போய் விட்டது.
பணக்காரன் ஒழிக என்கிறோம்; இன்று பணக்காரன் ஒழிந்து விட்டானே! பணம் இருக்கலாம், ஆனால் திருட்டுத்தனமாகத் தான் வைத்துக் கொண்டிருக்கலாம்; என் யோக்கியதைக்கு 30 ஆயிரம் வைத்துக் கொண்டு நான் வியாபாரியாக இருந்த போது – நான் எங்கள் ஊரில் ஒரு பணக்காரனாக இருந்த போது – நான் தெருவில் சென்றால் யாவரும் எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்வார்கள். என்னைப் போன்று இன்றைக்குப் பல மடங்கு இலட்சக்கணக்கான பணமுள்ள பணக்காரர்கள் எங்கள் ஊரில் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களை இப்போது மக்கள் முன்போல் மதிப்பது கிடையாது!
கடவுள் அடியோடு ஒழிந்தால், நீ என்னடா பணக்காரன் – நான் ஏன் ஏழை என்று பணக்காரனிடம் சென்று அடித்துப் பறித்து விடுவானே என்பதால் தான், பணக்காரன் இன்று கடவுளைக் காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளான். பார்ப்பான் தான் சாமியைப் பூசை பண்ண வேண்டும் என்று வைத்திருந்தான். இன்று தாழ்த்தப்பட்ட மக்களும் பூசை செய்யலாம் என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த சட்டசபையில் சட்டமாக்கி விடுவார்கள்.
(15.5.1970 அன்று கண்கொடுத்தவனிதம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு) – ‘விடுதலை’, 23.5.1970
••
ஜாதியில் ஈனஜாதி என்பதோடு படிக்கக் கூடாதவன், புழங்கக் கூடாதவன், நல்ல துணி உடுத்தக் கூடாதவன் என்றெல்லாம் இருந்ததே!
நம் பிரச்சாரத்தின் காரணமாகத்தானே அவை அழிந்து கொண்டு வருகின்றன? இந்த நாட்டு மக்களுக்கு அறிவு உணர்ச்சியூட்ட எங்களைத் தவிர யாரும் தோன்றவே இல்லையே!
தோழர்களே! இந்தக் காஞ்சிதான், பகுத்தறிவு மார்க்கமாக – புத்தக் கொள்கைகள் நிறைந்த இடமாக ஒரு காலத்தில் இருந்தது.
அந்த அறிவு மார்க்கத்தைப் பார்ப்பனர் அடியோடு அழித்து விட்டார்கள். பவுத்தர்களை எல்லாம் கொலை செய்து தீர்த்து விட்டார்கள். மடங்களையும், பள்ளிகளையும் இடித்துத் தள்ளி விட்டார்கள். அதன் காரணமாக இன்றைக்கு, இந்தக் காஞ்சி மூட நம்பிக்கை நிறைந்த நகரமாக, கோயில் குளங்கள் நிறைந்த நகரமாகக் காட்சி அளிக்கின்றது.
கடவுளும், மதமும் காரணமாகத்தானே பார்ப்பான், பறையன், சூத்திரன் ஆக இருக்கின்றோம்.
கடவுளும், மதமும் இல்லாவிட்டால் பறையனாக, சூத்திரனாக நாம் இருப்போமா? பார்ப்பானுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்காதே! கடவுளும், மதமும் காரணமாகத்
தானே நாம் படிக்கக் கூடாதவர்கள்? கடவுளும், மதமும் இல்லாவிட்டால் நாமும் பார்ப்பானைப் போல எல்லோருமே படித்து இருப்போமே!
கடவுளும், மதமும் ஒழிந்து கொண்டு வருவது காரணமாகத் தானே இன்றைக்கு ஜாதி ஆணவம் குறைந்து கொண்டு வருகின்றது; எல்லோரும் படிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது? போலீஸ்காரர்களாகத் தாழ்ந்த உத்தியோகத்தில் இருந்த நாம் இன்றைக்கு பாதிக்கு மேல் எல்லா உத்தியோகங்களிலும், பதவிகளிலும் வந்து விட்டோமே!
முழு அளவுக்கு முன்னேறாவிட்டாலும் இன்றைக்கு வளர்ச்சித் திசையில் இருக்கிறோம்.
(28.5.1972 அன்று காஞ்சி அய்யம்பேட்டையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)
– ‘விடுதலை’, 3.6.1972
சமுதாயத்தில் தமிழன் (திராவிடன்) அந்நியனாகிய ஆரியனின் ஆதிக்கத்தினால் 2, 3 ஆயிரம் ஆண்டுகளாக – அதாவது ஆரிய வேதகாலத்தில் இருந்தே, தஸ்யூ, அசுரர், இராக்கதர் என்பவைகளான இழிவு புதைந்த பெயர்களால் அழைக்கப்பட்டு, மனுகாலத்திலிருந்து நாலாம் பிறவி – ஆண்கள் சூத்திரர்கள், பெண்கள் பார்ப்பனருக்குத் தாசிகள் (வைப்பாட்டி மக்கள்) என்றும் பெயர் சூட்டி இழிவாய், தீண்டப்படாதவர்களாய் நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். 1922, 1923ஆம் ஆண்டில்கூடப் பார்ப்பனர்கள், சூத்திரர்கள் எனப்படுபவர்களாகிய நம்மிடம் பேசிவிட்டால் குளித்து (ஸ்நானம் செய்த) பிறகுதான் சாப்பிடுவார்கள். ஸ்நானம் செய்தபிறகு எவ்வளவு அவசர, அவசியமான காரியமாயிருந்தாலும் நம்மிடம் (சூத்திரர்களிடம்) பேசமாட்டார்கள். மற்றும், வைதிகப் பார்ப்பனர் வேலைக்காரப் பெண்ணையும், ஆணையும் அக்காலப் பஞ்சமரை நடத்துவது போல்தான் நடத்துவார்கள். பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றிய பிறகும்கூட, காந்தியாரின் இயக்க காலத்தில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிப் பள்ளிக்கூடம், தனிக்கிணறு என்பதாக ஏற்படுத்தியதுடன் சமபந்திபோஜனத்தை எதிர்த்து வந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் தஞ்சை, திருநெல்வேலி ஜில்லாக்களில் பல நகரங்களிலும், கிராமங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களை (5ஆம் ஜாதியாரை) வீதியில் நடக்கவோ, கக்கூசு எடுக்கவோ, கழுவவோ அனுமதிக்கப்படாமல் 4ஆம் ஜாதியாரைக் கொண்டே பார்ப்பனர் நடத்தி வந்தார்கள்.
1940இல்கூடப் பொது உணவு விடுதிகளில், ஆலயங்களில், இரயில் நிலையங்களில், சத்திரங்களில் சாப்பிட, தங்கியிருக்கப் பார்ப்பனருக்கு வேறு, மற்றவர்களுக்கு வேறு இடம் என்பதாகப் பிரிவினை இருந்து வந்திருக்கிறது. இவை யாவும் இப்போது மறைந்துவிட்டன என்று சொல்லலாம். ஆனாலும், இதற்குக் காந்தியோ, காங்கிரசோ, தேசியத் தலைவர்களோ காரணம் என்று சொல்லமுடியாது. சுயமரியாதை இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.
(‘விடுதலை’ தலையங்கம் – 23.10.1973)
- உண்மை இதழ், 16-30.6.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக