வெள்ளி, 31 அக்டோபர், 2025

மக்கள் – மதத்திற்கும் கடவுளுக்கும் தொண்டு செய்யவா ? பலியாகவா ?

நமக்குக் கடவுள் நம்பிக்கை வேண்டு

மானால்,

  1. பல கடவுள்களை நம்பித் தீர வேண்டும்.
  2. அவற்றுக்கு பல உருவங்களை ஒப்புக் கொள்ள வேண்டும்.
  3. அவ்வுருவங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வணங்க வேண்டும்.
  4. அக்கடவுள்களின் அவதாரங்களையும் அவற்றின் நடவடிக்கைகளையும் தேவைகளையும் நம்ப வேண்டும்.

நமக்கு மத நம்பிக்கை வேண்டுமானால்,

  1. ஜாதிப் பிரிவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
  2. மதச் சின்னங்களை (டிரேட் மார்க்கை) ஒப்புக் கொள்ள வேண்டும்.
  3. ஆத்மாவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
  4. மேல் கீழ் உலகங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
  5. மறுபிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும்

என்பவற்றை விளக்கிக் காட்டி மக்களிடம் கடவுள் – மத மறுப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்கு ஆகவே இக்கட்டுரை எழுதுகிறேன்.

இன்றைய சைவர்களுடைய சைவப் பிரச்சாரம் பெரிதும் பெரிய புராணம் ஒன்றிலேயே அடங்கிவிட்டது. அது அஸ்திவாரம் இல்லாத ஆகாயக்கோட்டை.

அது வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம், பக்த லீலாமிர்தம் என்னும் வைணவ புராணங்களுக்குப் போட்டியாக (அதைப் போல்) ஏற்படுத்தப்பட்டதாகும். அதன் காலம் இராமாயண – பாரதத்திற்குப் பிந்தியதேயாகும்.

அநேகமாக வைணவ பக்தர்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் கதைகள் போலவே, “சரித்திரங்கள்” போலவே சைவ சமய நாயன்மார்கள், பக்தர்கள் கதைகளும் “சரித்திரங்களும்” இருக்கும்.

இரண்டிலும் உள்ள முக்கிய விஷயங்கள், அற்புதங்கள் எல்லாம் விஷ்ணு, சிவன் கடவுள்கள் கழுகுமீதும், மாடுமீதும் நேரில் வந்து வைகுண்டமும் கைலாயமும் ஆகிய பதவிகளுக்கு, பக்தர்களை அழைத்துப் போனதாகவே பெரிதும் முடியும். அவற்றின் கருத்தும், பக்தி செய்தால் அதுவும் பக்தியின் பேரால் எவ்வளவு முட்டாள்தனமும் ஒழுக்கக் கேடும் இழிதன்மையுமான காரியமும் செய்தாலும் பக்தி காரணமாக வைகுண்டம், கைலாயம் பெறலாம் என்பதை வலியுறுத்துவதேயாகும்.

இப்படிப்பட்ட பக்திப் பிரச்சாரங்களேதான் மனித சமுதாயத்தில் பெரிதும் ஒழுக்கக் கேட்டையும் நாணயக் கேட்டையும் உண்டாக்கிற்று என்று சொல்லப்படுமானால் அது மிகையாகாது.

காலத்திற்கு ஏற்றபடி கடவுள்கள் சமயங்கள் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகும். கிறிஸ்து, இஸ்லாம் கடவுள், சமயங்கள் சீர்திருத்தப்பட்ட கடவுள், சமயங்களேயாகும்.

பெரிய புராணக் கதையும் பக்த விஜயக் கதையும் காட்டுமிராண்டித்தனமான காலத்தில், கருத்தில் ஏற்படுத்தப்பட்டவையேயாகும்.

அவற்றில் ஒவ்வொன்றாக காலப் போக்கில் குறிப்பிட இருக்கிறேன். சமயத் தலைவர்கள் சீர்திருத்துவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?

பார்ப்பனர்கள் சிலர் சீர்திருத்தத்திற்குப் பயப்படுகிறார்கள் என்றால் அவர்கள் இன்றைய சீர்கேடான கீழ்த்தரமான கடவுள், சமயக் கொள்கைகளால் உயிர் வாழுகின்றார்கள். உயர்வு பெறுகிறார்கள். அது போய்விடுமே என்று அவர்கள் அலறுகின்றார்கள். குறுக்கே படுக்கின்றார்கள்.

நாம் இன்றைய சீர்கேடான நிலைமையினால் நாசமுறுகிறோம். தலையெடுக்காமல் சேற்றில் அழுந்திக் கிடக்கிறவர்கள் போல் சிக்குண்டு கிடக்கின்றோம். ஆகவே, பார்ப்பானைப் போல் நாம் எதற்காகப் பிடிவாதக்காரர்களாக இருக்க வேண்டும்?

நம் கடவுள்களும் கோயில்களும் ஆகம முறைகளும் நம்மைக் காட்டுமிரண்டியாக ஆக்கி நம் அறிவையும் மானத்தையும் கொள்ளை கொள்ளுவதல்லாமல் நம் பொருள்களை எவ்வளவு நாசப்படுத்தி வருகிறது?

கிறிஸ்துவ, இஸ்லாம் மத பிரச்சாரம் படிப்பு – படிப்பு – படிப்பு என்பதிலேயே இருக்கிறது. அவர்கள் இந்த நாட்டில் பார்ப்பனர்களைப் போலவே மைனாரிட்டி சமுதாயங்களாக இருந்தாலும், பார்ப்பனர்களைப் போலவே நம்நாட்டில் மண்வெட்டி மண்கூடை எடுக்காமல் நல்வாழ்வு வாழ்கிறார்கள். அரசியலில் நம்மைவிட நல்ல உயர் பங்கும், சமுதாயத்தில் நல்ல பாதுகாப்பும் பெற்று வாழ்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு உதவியது அவர்கள் சமயம்தான். நம் கடவுளையும், சமயத்தையும் ஏற்ற மக்கள்தான் 100க்கு 100 மலமெடுக்கிறார்கள், கசுமாலக் குழியில் இறங்கி சேறு எடுக்கிறார்கள். 100க்கு 75 பேர் மண்வெட்டியையும் நம் பெண்கள் மண் சுமக்கும் கூடையையும் சொத்தாக வைத்து வாழ்கிறார்கள்.

படிப்பிலும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நம்மை விட இரண்டு பங்கு மூன்று பங்கு வீதம் அதிகமானவர்கள் படித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நம் மதவாதிகள், மதத் தலைவர்கள், மதப் பிரச்சாரகர்கள் நம் மக்கள் குறைகளையும், இழிநிலையையும், அறியாமையையும் மாற்றுவதற்கு என்ன செய்தார்கள் – செய்கிறார்கள் – செய்யப் போகிறார்கள்? “திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாதாரும்” என்றும், “திருப்பதி மதியாப் பாதம்”, “சிவனடி வணங்காச் சென்னி” என்றும் பாடினால் போதுமா? கூழில்லாமல் கும்பி பாழாவதைப் பற்றிச் சிறிதுகூடச் சிந்தியாமல், “நீறு இல்லாத நெற்றிபாழ்” என்றும் பிரச்சாரம் செய்தால் போதுமா?

நம் நாட்டையும், நம் மனித சமுதாயத்தை
யும் தலையெடுக்கவொட்டாமல் பாழாக்கிய பார்ப்பனர்களைப் போலவே நம் சமயவாதிகள் சிவ, விஷ்ணு சமயாச்சாரியார்கள் என்று சொல்லப்படுமேயானால் அதற்கு யார்தான் மறுப்புக் கூற முடியும்? இன்று தமிழ்நாட்டிலே கோயிலுக்கு அழுது நாட்டை நாசமாக்கியவர்களான நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களில் பலர் துணிந்து மனந்திரும்பி கல்வி அளிக்கும் வள்ளல்களாக இருக்கிறார்கள்.

அண்ணாமலை கல்லூரியே ஏற்படாமலிருந்
தால் நம்மவர்களில் உயர் படிப்புப் படித்தவர்கள் ஆயிரக்கணக்கில் இவ்வளவு பேர் இருக்க முடியுமா? முடியாது, முடியாது, முடியவே முடியாது என்று சொல்லுவேன். மற்றும் அழகப்பா கல்லூரி, தியாகராஜர்
கல்லூரி ஆகியவற்றால் நம் பிள்ளைகள் எவ்வளவு பேர் படித்தவர்களாக
ஆகி இருக்கிறார்கள், ஆகி வருகிறார்கள் என்பதைப் பார்த்தும் நம் சமயாச்சாரியார்களுக்கு நல்லறிவு வரவில்லையானால் அது நம் நாட்டைப் பிடித்த நோய் என்றுதானே சொல்லவேண்டியதாகும்?

திருச்சியில் கிறிஸ்தவக் கல்லூரி கிறிஸ்தவருக்கும், பார்ப்பனருக்கும் தான் பெரிதும் பயன்படுகிறது. பார்ப்பனர் கல்லூரிகள் பார்ப்பனர்களுக்கே பயன்படுகிறது.

இஸ்லாம் கல்லூரியில் இஸ்லாமியர்கள் போக மீதிதான் நமக்குக் கிடைக்கலாம். அப்படியெல்லாம் செய்வதில் அவர்கள் மீது குற்றமென்ன? இவ்வளவு பெரிய பழைமையான தமிழன் நகரத்திலே தமிழனுணர்ச்சி உள்ள தமிழர் இருந்தும் தமிழனுக்குக் கல்லூரி இல்லை. சீரங்கமும், திருவானைக்காவலும், தாயுமானசாமி மலையும், சமயபுரமும் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை இலட்சம் ரூபாய்களை நாசமாக்குகிறது? எவ்வளவு பேரை முட்டாளாக்குகிறது?

இந்தக் கோயில்களை இடித்து அல்லது இந்தக் கோயில்களுக்கு வருபவர்களுக்கு ஆளுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வீதம் “கேட்டில் (வாசலில்) வரி வசூல் செய்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவசக் கல்லூரிப் படிப்பு கொடுத்தால் எந்தச் சாமி கோபித்துக் கொள்ளும்? எந்தப் பக்தன் நாசமாய்ப் போய் விடுவான்?

தருமபுரம் திருவாவடுதுறை, திருப்பனந்தாள் முதலிய நூற்றுக்கணக்கான சைவ மடாதிபதிகளின், ஆண்டொன்றுக்கு சுமார் அய்ம்பது இலட்சத்துக்குக் குறையாது கோடி ரூபாய்வரை வரும்படியும், தஞ்சை மாவட்டத்தில் சுமார் ஆண்டொன்றுக்கு அய்ம்பது இலட்சத்துக்குக் குறையாத வரும்படி உள்ள கோயில்களின் வரும்படியும், தமிழ்நாட்டில் மற்றும் லட்சம் லட்சமாக வரும்படி வரக்கூடி கோயில்களின் வரும்படியும் கல்விக்குச் செலவழித்தால் தமிழ்நாட்டில் பி.ஏ., படிக்காத ஆணையோ, பெண்ணையோ காண முடியுமா? மற்றும் சர்க்கார் கொடுக்கும் பஸ், லாரி பர்மிட்களும், பண்டங்களுக்குக் கொடுக்கும் பர்மிட்களும் ஏன் ஒரு யோக்கியமான அதாவது, சுயநலத்துக்குப் பயன்படுத்தாத தன்மையில் ஒரு கல்வி ஸ்தாபனம் ஏற்படுத்தி அதற்குக் கொடுத்து, அவர்களிடம் கல்வி நிருவாகம் கொடுத்து, சர்க்கார் மேற்பார்வையில் அதன் வரும்படியைக் கொண்டு நடத்தச் செய்யக் கூடாது?

மதமும், கடவுளும் மக்களுக்குத் தொண்டு செய்யவா? அல்லது மக்கள் மதத்திற்கும், கடவுளுக்கும் தொண்டு செய்யவா? பலியாகவா? என்று கேட்டு முடிக்கின்றேன்.

குறிப்பு: இதை நம் கழகத் தோழர்கள் நல்ல வண்ணம் படித்து மக்களுக்குப் பிரச்சாரம் செய்யவேண்டுகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் – விடுதலை– 12.10.1962)

- உண்மை இதழ்,01-10.25

பெரியார் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்….

 

-கவிஞர் கலி.பூங்குன்றன்

தந்தை பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்களாகும். பொது வாழ்வில் அவர் மேற்கொண்ட பயண நாட்கள் 8200 மொத்த தொலைவு 13,19,662 கி.மீ. ஒப்பீட்டளவில் இத்தொலைவு பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு! பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவைப் போல் 343 மடங்கு. பங்கேற்ற பிரச்சாரக் களங்கள் 10,700, கருத்துரை ஆற்றிய காலம் நாள் கணக்கில் 891, மணிக்கணக்கில் 21,400. தந்தை பெரியாரின் உரைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஒலி பரப்பப்பட்டால்

2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

உலகில் இவ்வளவு நீண்ட அளவு பொது வாழ்க்கை என்பது வேறு எவருக்கும் கிட்டியிருக்காது.

இந்தத் திரண்ட பொது வாழ்வில் எத்தனை எத்தனையோ காட்டாறுகள், நெருப்பாறுகள் உண்டு. சுவையான நிகழ்வுகளும் உண்டு. தந்தை பெரியாரின் தனிச் செயலாளராக 15 ஆண்டு அளவில் அரும் பணியாற்றிய புலவர் இமயவரம்பன் அவர்கள் எழுதியுள்ள ஏராள நிகழ்வுகளுள் ஒன்றினை மட்டும், தந்தை பெரியாரின் நினைவு நாளில் நினைவூட்டுகிறோம். தந்தை பெரியார் அவர்களுக்கு ஏற்காடு கடை வீதியில் ஒரு பங்களா உண்டு.

தந்தை பெரியார் அவர்கள் வெய்யில் காலங்களில் ஏற்காடு வருவதானால் சிறு வாடகை வீடு அமர்த்திக்கொண்டுதான் தங்குவது வழக்கம். ஒரு தடவை மின் வசதி கூட இல்லாத வீட்டைப் பிடித்துத் தங்கினார்கள். தங்கி இருந்த வீட்டைச்சுற்றி, மிக்க ஏழ்மையில் உழலும் தாழ்த்தப்பட்ட மக்களே பெரிதும் சிறு, சிறு குடிசைகளில் வசித்தனர். அநேகமாக ஏற்காட்டில் அப்படிப்பட்ட மக்கள்தான் மிகுதியாக அன்று வசித்தார்கள். தந்தை பெரியார் அவர்கள் ஏற்காட்டில் வந்து தங்கி இருக்கின்ற செய்தி நகரில் பரவி விட்டது. தினம் காலை முதல் இரவு வரையில் ஏராளமான மக்கள் தந்தை பெரியார் அவர்களைக் கண்டு வணக்கம் செலுத்தி அளவளாவிச் சென்ற வண்ணம் இருந்தனர்.

இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு சில இளைஞர்கள் அய்யா அவர்களைச் சந்தித்து “இவ்வூர் மக்கள் தங்கள் அறிவுரையினைக் கேட்க மிக்க ஆவல் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். நாங்கள் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கின்றோம். அய்யா அவர்கள் எங்கள் வேண்டுகோளை ஏற்று வந்து பேச வேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.

அய்யா அவர்களுக்கு ஓய்வு என்பதே பிடிக்காத ஒன்றாயிற்றே! மிக்க சலிப்போடு இருந்தவருக்கு இப்படி மக்களை வழக்கம்போல சந்தித்து அறிவுரை வழங்கும் வாய்ப்புக் கிடைத்தால் விடுவாரா? “ஆகா! அப்படியா, மிக்க மகிழ்ச்சி; போய் ஏற்பாடு பண்ணுங்கள்; அவசியம் கலந்து கொள்கின்றேன்’’ என்று கூறினார்கள். கூட்டம் ஏரிக்கரையருகே இருந்த மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்காடு நகர மக்களே ஒருசேர ஓர் இடத்தில் திரண்டு விட்டார்கள்.

தந்தை பெரியார் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டிய அவசியம் பற்றியும், அவற்றால் விளைந்துள்ள கேடுகள் பற்றியும், மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்க உரையாற்றிக் கொண்டே வரலானார்.

கூட்டத்தில் ஒருவர் திடீர் என்று எழுந்து “அய்யா, இப்படி எல்லாம் பேசி மக்களைக் கெடுத்துவிட்டுப் போகவா இங்கு வந்திருக்கின்றீர்கள்? ஜாதி கூடாது, மதம் கூடாது, உயர்வு – தாழ்வு கூடாது என்று கூறுகின்றீர்களே, அது எப்படி முடியும்? கையில் உள்ள அய்ந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா உள்ளன? எனவே, எல்லா ஜாதி மக்களும் எப்படி ஒன்றாக முடியும்? சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வைத்தான் எப்படி ஒழிக்க முடியும்? அது நம்ம கையிலா உள்ளது? ஆண்டவன் கட்டளையினை மாற்ற நீங்கள் யார்? ஜாதி கூடாது, மதம் கூடாது என்று மேடையிலே பேசுகின்றீர்களே, நாளை உங்கள் வீட்டுப் பெண்ணை ஒரு ஒடுக்கப்பட்ட வாலிபனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முன் வருவீர்களா?” என்று கேட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் அந்தத் தோழரைப் பார்த்து, “அய்யா, பெண் விரும்பி இப்படி மணம் செய்துகொள்ள முன்வந்தால் கண்டிப்பாக நான் தடுக்க மாட்டேன். மனமுவந்து செய்து வைப்பேன். ஆனால், எனக்குப் பெண்ணோ, பையனோ இல்லையே! ஆகவே, நான் அந்தக் கருத்துக்கு உடன்பாடு உடையவனே ஒழிய, நான் என்றுமே எதிர்க்க மாட்டேன்” என்று சொன்னார்.

மற்றொருவர் “ஜாதி கூடாது, மதம் கூடாது, எல்லோரும் சமத்துவமாகப் பழக வேண்டும் என்று கூறுகின்றீர்களே! தாழ்த்தப்பட்டவர்களாகிய எங்கள் வீட்டில் நாளைக்கு நீங்கள் சாப்பிட வருவீர்களா?” என்று கேட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். ”அய்யா! மிக்க நன்றி. நான் யார் வீட்டிலே வேண்டுமானாலும் சாப்பிடத் தயாராக இருக்கின்றேன்.

நீங்கள் சொல்லும் வீட்டில் தாராளமாகச் சாப்பிட வருகின்றேன். எப்போது வரவேண்டும்? என்றைக்கு வரவேண்டும்? என்று கேட்டார்கள். கேள்வி கேட்டவரோ திகைத்துப் போய் நின்று விட்டார்.

உடனே. ஏராளமான தோழர்கள் எழுந்து, “அய்யா நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்! எங்கள் வீட்டுக்கு வாருங்கள்!” என்று உணர்ச்சி மேலிட்டவர்களாக பெரியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.

அய்யா அவர்கள் வேடிக்கையாகக் கூறினார்கள். “எல்லார் வீட்டுக்கும் வருவதானா
லும் தினம் ஒரு வீட்டுக்கு வருகின்றேன். எனக்கு சாப்பாட்டுச் செலவு மிச்சமாயிற்று.

ஆனால், நீங்கள் உங்களுக்குள்ளாகவே முடிவு பண்ணிக்கொண்டு யார் வீட்டுக்கு வர வேண்டும். என்றைக்கு வரவேண்டும் என்பதைக் கூறுங்கள், வருகின்றேன்.

இன்னொன்றும் சொல்கின்றேன். நான் வருவதாக இருந்தால் நான் மட்டும் தனியாக வர முடியாது. மணியம்மையார் மற்றும் நான்கைந்து பேர்களாவது கூட வருவார்கள்.

உங்களுடைய நிலைமைக்கு இத்தனைப் பேருக்கும் உணவு போட வசதி இருக்காது. இதற்கு நான் ஓர் வழியும் சொல்கின்றேன். தாராளமாக நீங்கள் இன்னும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யுங்கள். நான் வேண்டுமானால் அரிசி, பருப்பு. செலவுக்கு பணம் ஆகியவைகளும் கொடுக்கின்றேன்.

நீங்களே சமைத்து உங்கள் இடத்திலேயே போடுங்கள். உங்கள் கஷ்ட நிலைமையை நன்றாக உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால் இதைச் சொல்லுகின்றேன்.

நான் கொடுத்துச் செய்யச் சொல்லுகின்றேன் என்பது தங்களுக்கு இழுக்கு என்று தயவு செய்து கருத வேண்டாம். ஆகவேதான் சொல்லுகின்றேன்” என்று கூறிவிட்டு மேடைக்குப் பின் புறத்தில் அமர்ந்து இருந்த அன்னை மணியம்மையார் அவர்களை அழைத்து “அம்மா, நாளைக்கு இவர்கள் வருவார்கள். எத்தனைப் பேருக்கு சாப்பாடு செய்கின்றார்களோ அதற்குத் தேவையான
வைகளை எல்லாம் கொடுத்து விடு” என்
றார்.

அடுத்த நாள் அய்யாவின் இருப்பிடத்திற்கு வந்து, “நாங்கள் சுமார் 20, 25 பேர்களுக்கு சமைக்கலாம்” என்று இருக்கின்றோம்.

இந்த ஊரில் உள்ள பெரியவர்களை எல்லாம் கூப்பிட்டுப் பார்க்கின்றோம். யார் யார் வருகின்றார்கள் என்று பார்த்து விடுவதாக உள்ளோம். தங்களைப்பற்றி எங்களிடம் தவறான கருத்துகளைச் சொல்லி வைத்தவர்களுடைய வண்டவாளமும் இதில் இருந்து விளங்கிவிடும்” என்றனர்.

அம்மா அவர்கள் தயாராக வாங்கி வைத்து இருந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றைய தேவையான பண்டங்களையும் பெற்றுச் சென்றார்கள்.

சாப்பாடு இரவு வேளைக்கு வைத்து இருந்தார்கள். அய்யா அவர்களோடு தந்தை பெரியார் அவர்களிடம் செயலாளராக இருந்த காலஞ்சென்ற அமைச்சர் திரு. என்.வி. நடராசன், சேலம் பிரபல வியாபாரியும் தந்தை பெரியாரிடம் நெருங்கிய நட்பு பூண்டிருந்தவருமான காலஞ்சென்ற திரு. ரோ.சு.அருணாசலம், மணியம்மையார் மற்றும் இரண்டொருவருமாகச் சென்றார்கள். விருந்து நடந்த இடம் சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்கி சந்து வழியாக உள்ளே போக வேண்டும். கீழே மாட்டுக் கொட்டகைகள் நிறைய மாடுகள் கட்டக்கூடிய இடம் அது. ஏற்காடு மலைப் பிரதேசம் ஆனபடியால் குளிர் அதிகம். வெய்யிலும் அதிகம் அடிக்காது. ஆகவே, அங்கு மாட்டுச் சாணங்கள், மூத்திரங்கள் எல்லாம் சீக்கிரத்திலே காயாது. அதனாலே ஈரம் எப்போதும் சொதசொத என்று இருந்துகொண்டே இருக்கும்.

வசதியற்ற சூழ்நிலையில் வசித்த அவர்கள் அன்பின் மிகுதியால் தங்கள் குடிசையிலேயே சாப்பாடு, கோழிக்கறி எல்லாம் செய்து வைத்துவிட்டு, பரிமாறுவதற்கு வசதி இல்லாததினால் பக்கத்தில் இருந்த மாடுகளை எல்லாம் வேறு இடத்துக்குக் கொண்டுபோய்க் கட்டிவிட்டு, மாட்டுக் கொட்டிலில் இருந்த மாட்டுச் சாணம் கும்பிகளை எல்லாம் வழித்து எடுத்துச் சுத்தம் செய்துவிட்டு, அதன் மேலே மணலைத் தூவி அதன் மேல் வைக்கோலைப் போட்டு, அதன்மேலே ஏதோ பரப்பி, அதன்மீது இலைகளைப் போட்டு அவர்களையெல்லாம் உட்கார வைத்தார்கள்.

விருந்தும் பரிமாறப்பட்டு விட்டது. ஒரு பக்கம் துர்நாற்றம். இன்னொரு பக்கம் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஜில் என்று ஈரம் ஏறுகின்றது. இரவுநேரமானபடியால் குளிரோ தாங்க முடியவில்லை.

அந்தக் காலகட்டமோ மணியம்மையார் அவர்கள் அப்போதுதான் அய்யாவிடம் தொண்டு புரிவதற்காக வந்து சேர்ந்த புதிது. அம்மா அவர்கள் மிகத் துடிப்பாகப் பணியாற்றுபவர் என்ற போதிலும், அம்மா அவர்களுக்கே அது ஒரு புதிய அனுபவமாக அமைந்துவிட்டது. “என்னால் அன்று அந்த நாற்றம், ஈரம், குளிர் முதலியவைகளைத் தாங்கிக்கொள்ள முடியாதவளாக ஆகி, குமட்டலும், வாந்தியும் ஏற்படும்படி ஆகிவிட்டது” என்று அம்மா அவர்களே கூறியுள்ளார்கள்.

அம்மா அவர்கள் இலையில் வைக்கப்பட்ட சாப்பாட்டினைச் சாப்பிடுவதுபோல் பாவனை செய்து கொண்டும், யாரும் பார்க்காதபோது கொஞ்சம் கொஞ்சமாக சோற்றினை இலைக்கு அடியிலே எடுத்து வைத்துக் கொண்டும் இருந்தார்கள்.

பெரியார் அவர்கள் “சாப்பிடு அம்மா, சாப்பிடு அம்மா!” என்று சொல்லிக் கொண்டு அம்மா அவர்கள் கீழே வைத்து இருந்த சாப்பாட்டை எல்லாம் அவரது இலையிலேயே அள்ளி அள்ளிப் போட்டார். அம்மா அவர்களோ சாப்பிட்டால் வாந்தி வந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டதால் சாப்பிடாமல் தயங்கித் தயங்கிக் கொண்டு இருந்தார்கள்.

அய்யா அவர்கள் அந்த வீட்டுக்கார அம்மாவைப் பார்த்து, “மங்காணி, கொஞ்சம் குழம்பு கொண்டு வா அம்மா!” என்று கூறினார்கள். அந்த அம்மாவும் வீட்டிற்குள் குழம்பு எடுக்கச் சென்று விட்டார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் அம்மா பக்கம் திரும்பி கன்னத்தில் ஓங்கி ஓர் அடி கொடுத்தார். அவ்வளவுதான், அந்த அம்மா குழம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வருவதற்குள்ளாக இலையில் இருந்த சோறு, கறி எல்லாம் உள்ளே போய்விட்டது.

பக்கத்தில் உள்ள இலையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த திரு. என். வி. நடராசன் அவர்களும், திரு. ரோ.சு.அருணாசலம் மற்றவர்களும் கபக், கபக் என்று அவர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

அம்மா அவர்கள் அந்த நிகழ்ச்சியினைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘பக்குவப்படாத அந்தக் காலத்தில் பட்ட அந்த அடி எனக்கு என்றென்றைக்கும் உதவும்படியான பல படிப்பினைகளை எல்லாம் தந்தது” என்று பல தடவைகள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

சொல்லுவதைச் செய்வார்; செய்வதைச் சொல்லுவார். ஆம், அவர்தாம் பெரியார்! அவரின் கடைசி முழக்கம் இதே நாளில் 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்றாலும், கொள்கையாய் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். வாழ்க பெரியார்!

- உண்மை இதழ்,16-30.09.25

உண்மையான தமிழர்கள் (திராவிடர்கள்) தீபாவளி கொண்டாடக் கூடாது!-தந்தை பெரியார்

 

தீ

பாவளிப் பண்டிகை வரப்போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப் போகின்றீர்களா?  என்பதுதான் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தை களையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலை யும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்ற தான வியாதிக்கு இடங்கொடுத்துக்கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே அல்லாமல், உங்கள் சொந்தப் பகுத்தறிவை, சிறிதுகூடச் செலவழிக்கச் சம்மதிக்க
முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாரா யிருக்கின்றீர்கள்.

சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு
வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாரா
யிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவை, சிறிதுகூடச் செலவழிக்கத் தயங்குகிறீர்கள்.

அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையி லிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது?

புராணக் கதைகளைப் பற்றிப் பேசினால் கோபிக்
கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்தது தானே! அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களா? புராண ஆபாசத்தை வெறுத்த
வர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார, ஏழைச் சகோதரர்களே! அன்பர்களே!

சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று
வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக்களில் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். தீபாவளிப் பண்டிகையைப் பெரிதும்  கொண்டாடப்போகின்றீர்கள்.

பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர் களும், பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாத தானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங்களொருபுற மிருந்தாலும், மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, அறிவியல்(சைன்ஸ்) பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும்  காரணம் (சமாதானம்) சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ
சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக் கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது,
அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண்டிகை
தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங் களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர் களைவிட,  பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும். பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம்.

உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங்களில் அதிக மாகவும். மற்ற நகரங்களைவிட சென்னையில்
அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்
றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடு
கின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்
கின்றார்கள்.

சாதாரணமாக மூடபக்தியாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணை யிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத
இராமாயணக் காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொதுஸ்தாபனங் கள் தோறும் கதாகாலட்சேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த
பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய
மனிதர்கள், பிரபலப் பட்ட பெரிய உத்தியோகஸ்
தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத் தார்கள்தான் ஆரியர் வேறு; தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக்கும் திராவிடர்களுக்
கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல்லாத சமுகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரி
கத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டு
மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள்.

ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள் பணக்காரர்கள் உத்தியோ கஸ்தர்கள்
என்கின்றவர்கள் போன்ற கூட்டத் தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட – பிரச்சாரம் செய்வதைவிட – உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின்றோம்.

(‘குடிஅரசு’ – 16.10.1938)

- உண்மை இதழ், 16-31.10.25

ஜாதி ஒழித்து சமுத்துவம் காண்போம் !

 


சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால், எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய விரும்புபவன் கீழே விழுந்து பல கஷ்டங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான். பின், இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பிரயாணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது; மண்ணெண்ணெய் கூடாது என்று கூறியவர்கள் கூட, இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தி இருக்கிறார்கள். பறவைகளுக்கும் எருமை, புலி, எலி போன்றவைகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. ஆனால், மனிதன் அய்ந்து அறிவைத் தாண்டி, ஆறாவது அறிவைப் (பகுத்தறிவைப்) பெற்றிருக்கிறான். அனுபவத்தைப் பெறுவதும், மற்றவர்கள் செய்வதை, சொல்வதை யோசிக்க சக்தி பெற்றிருப்பதும் மனித இனம். எனவே, மனித இனம் வாழ்வில் வளர்ச்சியடைந்து வருகிறது.

அறிஞர்களின் ஏற்பாட்டால் 1910இல் வெளிவந்த வாகனத்துக்கும் 1951இல் வெளி வந்திருக்கிற வாகனத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. உலகம் நாளுக்கு நாள், மணிக்கு மணி முன்னேறிக் கொண்டு போகும்போது, நமது தமிழர் சமூகம் மட்டிலும் சூத்திரப் பட்டத்துடன் பின்னேறிக் கொண்டு போகிறது. நாம் செய்யும் மாறுதல் சுகபோகிகளுக்குப் பாதகமாக இருந்தால் – அவர்களின் இன்ப வாழ்வு பாதிக்கப்படும் என்று நினைத்தால் – அவர்கள் மாறுதலை மறுப்பார்கள்; எதிர்ப்பார்கள்.

1928 என்று நினைக்கிறேன்; எங்கள் சுயமரியாதை இயக்கத்தில் பல செட்டியார்கள் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் கப்பல் ஏறி வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது. அப்படிப் போனால் ஜாதிக்குப் பாதகம் விளையும் என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று ஜாதி ஆசாரத்தையும் மறந்து, வெளிநாடுகளுக்குக் கடல் கடந்து பிழைப்புக்காகவும், பதவிகள் வகிக்கவும் செல்லுகிறார்கள்.

இதுவும் மாறுதல்தானே! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ரோமத்தைக் கத்தரித்து ‘கிராப்பு’ வைத்திருந்தால் பள்ளிக்கூடத்தில் படிக்க இடம் தரமாட்டார்கள். ஆனால், இப்பொழுது அவர்களே கிராப்பு வைத்துக் கொள்ளுகிறார்கள். நெற்றியில் எதுவுமில்லை என்றால் பள்ளியில் மாணவர்களை நுழைய விடமாட்டார்கள்; ஆனால், இன்று 100க்கு 90 விகிதம் தமிழர்கள் நெற்றியில் எதுவும் வைத்துக் கொள்ளுவதில்லை. 150 ஆண்டுகட்கு முன்பு பெண்கள் ரவிக்கை போட்டுக் கொண்டதில்லை; மலையாளத்தில் மார்பில் துணிகூடப் போடக்கூடாது; இன்று பாட்டியம்மாள்கூட ரவிக்கை போட ஆசைப்படுகிறார்கள். நான் ஈரோடு சேர்மனாக இருந்த பொழுது குழாய்த் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால், என் தாயார் மட்டிலும், குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் யார் பிடித்துவிடுகிறார்களோ  அதில் தீட்டு ஒட்டியிருக்குமே என்பதற்காக! பிறகு திருந்தினார்கள். மாறுதல் வேண்டும் போது பிடிவாதம் இருக்கத்தான் செய்யும்.

அக்கம் பக்கத்தைப் பார்த்து மாறுதல் ஏற்பட்டுவிடும். உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மனித சமுதாய வளர்ச்சி எந்த அளவில் கொண்டு போய் விடுமோ! என்ன ஆகுமோ! யார் கண்டது?

நம் நாட்டு ராஜாக்களெல்லாம் கடவுளாக மதிக்கப்பட்டார்கள்; கடவுள் அவதாரமென எண்ணப்பட்டார்கள். கடவுளுக்குச் செய்வதெல்லாம் ராஜாவுக்கும் செய்தார்கள். ஆனால், அந்த ராஜாக்களெல்லாம் இன்று என்ன ஆனார்கள்? அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் ராஜாவாக ஆக்கப்பட்டார்கள். ஜமீன்தார்களும் இப்படியே ஒழிக்கப் பட்டார்கள். ‘கடவுள் ஒருவனை உயர்ந்தவனாகவும், ஒருவனைத் தாழ்ந்தவனாகவும் படைத்தார்’ என்ற வருணாசிரம வேதாந்தம் எங்கே போயிற்று? இப்படியே சுதந்திர ஜனநாயக எண்ணத்துடன் ஆராய்ந்தால் மாறுதல் கண்டிப்பாய்க் கிடைக்கும்.

2000 ஆண்டுகளாக சூத்திரர்கள் இருக்கிறார்கள்; ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாத குழந்தை பிறந்ததும், நடமாட ஆரம்பித்ததும் ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டிலும், ஏன் புராணத்திலும், சாஸ்திர சம்பிரதாயத்திலும் சூத்திரப் பட்டம் இருக்கவேண்டும் என்று கேட்பது தப்பா? உள்ளதைச் சொல்லி மாறுதல் விரும்பும் எங்களைக் குறை கூறுபவர்கள், தொந்தரவு கொடுப்பவர்கள் ஒரு காலத்தில் அதே மாறுதலுக்காக உழைப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக, விலை கொடுத்து
வாங்கும் அடிமைகளாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார்;
மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம், பிற இனத்தவர்களுடன்
சரிசமமாக வாழும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது.

 

அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக, விலை கொடுத்து வாங்கும் அடிமைகளாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார்; மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம், பிற இனத்தவர்களுடன் சரிசமமாக வாழும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது.

சீனாவில் சன்யாட்சன் தோன்றினார்; மாறுதலை உண்டு பண்ணினார். ‘அய்ரோப்பாவின் நோயாளி’ என்று கூறப்பட்ட துருக்கி நாட்டிலே கமால் பாட்சா தோன்றி மாறுதலை உண்டு பண்ணினார். ஆனால், தமிழ்நாட்டில் சித்தர்களும் வள்ளுவரும் புத்தரும் தோன்றி  ஜாதி ஒழிய வேண்டும், மாறுதல் வேண்டும் என்று கூறியும் மாறுதல் காண முடியவில்லையே! உழைப்பதெல்லாம் நம்மவர்களாக இருந்தும், கீழ் ஜாதியாகத்தானே வாழ்கிறோம்! மலையாள நாட்டில் ஈழவர்கள் வீதியில் நடக்கக்கூடாது என்ற சம்பிரதாயமெல்லாம் மாறி, மாறுதல் ஏற்பட்டு, இன்று வீதியில் நடக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் தீண்டப்படாதவன் இருக்கத்தானே செய்கிறான்! அது போகட்டும். நம் தாய்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்; ஆனால், தமிழுக்கு இடமில்லை. கோயிலில் வடமொழியில் மந்திரம் ஓதப்படுகிறது; ஹிந்தி படித்தால்தான் பதவி கிடைக்கும்; தமிழில் சங்கீதம் வராது; தெலுங்கில்தான் சங்கீதம் வரும்.

சாஸ்திரம், புராணம் எல்லாம் வடமொழியில்! காந்தியார் நம் நாட்டில் என்ன ஆனார்! மகாத்மாவாகி, மகானான அவரே மூன்று குண்டுகளுக்கு இரையானாரே! ‘சூத்திரன் படிக்கக் கூடாது’ என்கிறது மனுதர்மம்; ‘எல்லோரும் படிக்க வேண்டும்’ என்றார் காந்தியார். உடனே பாய்ந்தன மூன்று குண்டுகள்! ‘முஸ்லிம் மதமா, இந்து மதமா! எல்லாம் ஒன்றுதான்’ என்றார் காந்தியார். பாய்ந்தன மூன்று குண்டுகள்! எனவே, மாறுதலுக்கு எதிர்ப்பு இருந்துதான் தீரும்; அதைப்பற்றிக் கவலையில்லை.

நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ளப் பாடுபடுங்கள்! உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள்! இந்நாட்டில் தமிழர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். அதற்காகப் பாடுபடுபவர்களுக்கு உதவியாக இருங்கள். என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் ஜாதி ஒழிப்பேயாகும்.

(மலாயாவில், கோலப்பிறை செயின்ட் மார்க் ஸ்கூல் திடலில் 16.12.1954இல் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு – ஆதாரம் : பினாங்கு, ‘சேவிகா’ 18.12.1954 – ‘விடுதலை’, 23.12.1954)

சரஸ்வதிக்கு பூஜை செய்தால்கல்வி வருமா? தந்தை பெரியார் கேள்வி

 

காகிதத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு


சரஸ்வதிக்கு பூஜை செய்தால்கல்வி வருமா?
தந்தை பெரியார் கேள்வி

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப் பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.  அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.

அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது  ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீ யத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக் குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமு மானதாகும்.

வேடிக்கையான விடயம்

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய் கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால்  வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதார மானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங் களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.

வெள்ளைக்காரன்
முன் மண்டியிட்ட

ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில்  ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து  பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில்  வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது  அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லா மல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.

சரஸ்வதி கல்வியைக்
கொடுத்தது யாருக்கு?

இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக்  கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.

நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும்  சரஸ்வதியாய் கருதி தொட்டுக்  கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர் களில் நூற்றுக்கு  நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித் திருக்கிறார்கள். உண்மையி லேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான் களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

முட்டாள்தனம்

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டு மிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.

யார் வீட்டுப் பணம்?

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு  செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு  தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே  இல்லை.

குடிஅரசு – சொற்பொழிவு – 20-10-1929

-விடுதலை நாளேடு,28.09.25

செவ்வாய், 28 அக்டோபர், 2025

மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற நினைப்பவர்கள் தீபாவளி எனும் கொள்ளை நோய்க்குப் பலியாகலாமா?

 




ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய  உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயானால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத் தத்தையும், செல்வத்தையும், அறிவையும் உறிஞ்சி விடும். கொள்ளை நோய்களுக்கே அதிகமாக அஞ்ச வேண்டும். அத்தகைய கொள்ளை நோய்கள் இந்து மதத்தில் ஏராளமாக இருக்கின்றன. இவைகளில் எல்லாம் மிகவும் பெரியதாகிய கொள்ளை நோய் தான் இவ்வாரத்தில் வருகிறது. அக்கொள்ளை நோய் தீபாவளிப் பண்டிகையேயாகும். ஆகையால் எல்லா மக்களையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்க வேண்டும். என்பதற்காகவே  நாம் அக்கொள்ளை நோயின் கொடுமைகளை எடுத்துக் காட்ட முன் வந்தோம்.

அடிமை மனப்பான்மை

இந்தியர்கள் அவர்களுக்குள்ளும் இந்துக்கள் என்பவர்கள் மற்ற சமூகத்தாரைக் காட்டிலும் செல்வத் திலும், அறிவிலும், வீரத்திலும் தாழ்ந்து அடிமை மனப்பான்மை மிகுந்தவர்களாயிருப்பதற்குக் காரணம் இந்துமதமும்  அதன்மூலம் ஏற்பட்டுள்ள பண்டிகை களுமே என்பதை நமது இயக்கம் நன்றாய் விளக்கி காட்டியிருக்கின்றது. இந்து மதமும், இந்து மதத்தின் பேரால் ஏற்பட்டு வழங்கிவரும் பண்டிகைகளும் இல்லாதிருக்கு மானால், நமது மக்கள் எவ்வளவோ உயர்ந்த நிலையிலும், சுதந்திரமுடையவர்களாகவும் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. இன்று மதத்தையும், மதப் பண்டிகை களையும் லட்சியம் பண்ணாமல் தங்கள் சொந்த புத்தியின் வழியே நடந்து, இவ்வுலகத்தில், சுகமாக வாழ்வதற்கு வழியைக் கண்டு பிடிப்பதில் முனைந்து  நிற்கும் மக்களே பகுத்தறிவு உடையவர்களாகவும், அடிமைத் தன்மை இல்லாதவர்களாகவும், தரித்திரமில் லாதவர்களாகவும் வாழ்வதை நாம் கண்கூடாகக் காணக்கூடிய  நிலைமையிலிருக்கிறோம். இருந்தும் நமது நாட்டு முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதாக ஆர்ப்பாட்டம் புரிந்து கொண்டிருக்கும் எவரும், மற்ற நாட்டு மக்கள் சுதந்திரமடைவதற்குக் கைக்கொண்ட உண்மையான வழிகளைப் பற்றிச் சிந்திக்கவோ அது பற்றி நமது மக்களிடையே  பிரச்சாரம் பண்ணவோ முன் வராமலிருக்கின்றனர். ஆனால் நாம் மாத்திரம் ஆதி முதல், இந்து மதமும், இந்து மதப் பண்டிகைகளும் ஒழிந்தாலொழிய நமது மக்கள், செல்வத்திலோ,  அறிவிலோ, சமத்துவத்திலோ, ஒரு நாளும் முன்னேற முடியாது என்று சொல்லி வருகிறோம்.

இப்பொழுது நமது கண்முன் நிற்கும்  தீபாவளிப் பண்டிகையை எடுத்துக் கொள்ளுவோம். இப் பண்டிகையினால், நமது நாட்டு மக்களுக்கு உண்டாகும் பொருள் நஷ்டம் சரீரத் துன்பம் எவ்வளவு? அன்றியும் சிறுகுழந்தைகள் முதல், வயதானவர்கள் வரையுள்ள எல்லோர் மனத்திலும் பதியும் மூட நம்பிக்கை எவ்வளவு? இவற்றை எல்லாம் ஜன சமூகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களைச் சீர்திருத்த எந்த தேசாபிமானியாவது முயற்சி எடுத்துக் கொள் கின்றானா?

அறிவு மழுங்கடிக்கப்படுகிறது

முதலில் இப்பண்டிகை களால் மக்களுடைய அறிவு எவ்வாறு மழுங்க வைக்கப் படுகிறது என்பதைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். இதை அறிய வேண்டுமானால் இதன் பொருட்டு அதாவது இப்பண்டிகையை ‘தெய்வீக’ மானது என்று மக்கள் நம்ப வைக்கும் பொருட்டு ஏற்பட் டிருக்கும் புராணக் கதையை ஆராய்ந்தாலே இதன் உண்மை விளங்கும் ஆதலால் அக் கதையைக் கீழே குறித்துக் காட்டுகிறோம்.

‘பூமிதேவி’ என்னும் இந்த மண்ணுக்கும், ‘மகாவிஷ்ணு’ என்று சொல்லப்படும் ஒரு தெய்வத்திற்கும் ‘நரகாசுரன்’ என்னும் ஒரு மகன் பிறந் தானாம். அவன் அதிக பல சாலியாக இருந்து கொண்டு பார்ப்பனர்களுக்கு துணைவராகிய ‘தேவர்கள்’ என்பவர்களையெல்லாம் மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தானாம். ஆதலால், தேவர்களெல்லாம், தமிழர்குலமாகிய அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாகச் சொல்லப்பட்ட ‘நரகாசுர’னுடைய கொடுமையைச் சகிக்க முடியாமல் ‘மகாவிஷ்ணு’ என்னும் அந்தத் தெய்வத்தினிடம் சென்று முறையிட்டார்களாம். மகா விஷ்ணு என்பவரும், அந்த நரகாசுரனைக் கொன்று தேவர்களுடைய கஷ்டத்தை நீக்குவதாகக் கூறினா ராம். அப்பொழுது பூமிதேவி, நரகாசுரனைக் கொல் லும் போது தன்னையும் உடன் வைத்துக் கொண்டே தன் மகனைக் கொல்லும் படி வேண்டிக் கொண்டாளாம். அதற்கு மகா விஷ்ணுவும் சம்மதித்தாராம்.

அதன் பிறகு மகாவிஷ்ணு கிருஷ்ணனாகப் பிறந்து, சத்தியபாமையாகப் பிறந்திருந்த பூமிதேவியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய். ஒரு தீவில்  வசித்து வந்த நரகாசுரனைக் கொன்றானாம். கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற போது, அவன், தான் இறந்த நாளை பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டுமென்றும் ‘வரம்’ கேட்டானாம். கிருஷ்ணனும் அவ்வாறே ‘வரம்’ கொடுத்தானாம்.

மக்களுக்கு மதப் புரட்டிலும் பண்டிகை புரட்டிலும், புராணப் புரட்டிலும் அவதாரப் புரட்டிலும் பார்ப்பன வம்சத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள், உயர்ந்தவர்கள், தமிழர் வம்சத்தை சேர்ந்தவர்களாகிய அசுரர்கள் அனைவரும் அயோக்கியர்கள், தாழ்ந்தவர்கள் என்னும்புரட்டிலும் நம்பிக்கையுண்டாகி, அவர்கள் அறிவு குன்றிப் போகின்றது. அன்றியும், மக்கள், பண்டிதர்கள், புரோகிதர்கள், மதவாதிகள் என்னும் புரட்டர் களுக்கு இன்னும் அடிமையாகவே இருக்கக் கூடிய நிலையையும் அடைகிறார்கள் என்பதை யார் மறுக்க முடியும்?

புத்தியுள்ளவர்களா?

இது தான் தீபாவளிப் பண்டிகைக்காகக் கற்பிக்கப் பட்டிருக்கும் கதை. இக்கதையை நம்பித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் மக்கள் சிறிதாவது புத்தியுள்ள வர்களென்று கூறமுடியுமா? என்பதை நன்றாய் யோசனை செய்துப் பாருங்கள்.

முதலில் நமது  கண்ணுக்குமுன் காணப்படும் இந்த மண் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா? இரண்டாவது ‘மகாவிஷ்ணு’ என்று ஒரு தெய்வம் கடைகளில் விற்கும் படங்களில் இருப்பதுபோல, பல பெண்ஜாதிகளுடன், ஒரு குருவியின் மேல் உட்கார்ந்து கொண்டோ, அல்லது பாம்பின் மேல் படுத்துக்கொண்டோ, சமுத்திரத்தில் மிதந்து கொண்டோ இன்று இருப்பதாகக் கூறப்படு வதும், இதற்குமுன் இருந்ததாகச் சொல்லப் படுவதும் அறிவுக்குப் பொருத்தமான செய்தியா?

இப்படிப்பட்ட தெய்வத்திற்கும் மண்ணுக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்று சொல்லுவது எவ்வளவு புரட்டு? ஆரம்பமே புரட்டாயிருக்கும் போது மற்றவை களையெல்லாம் எப்படியிருக்குமென்பதை இன்னும் நாம் விரித்துக் காட்ட வேண்டியதில்லை ஆகவே, இத்தகைய அர்த்தமற்ற கதையைத் ‘தெய்வீக’முள்ளதாக நம்பிக் கொண்டு, இதன் பொருட்டு ஒரு தேசம் கோடிக் கணக்கான பொருளை ஒரே நாளில் செலவு செய்யு மானால், அதை அறிவுடைய தேசமென்று சொல்ல முடியுமா?

இந்தக் கதையை நம்பியே ‘நரக சதுர்த்தி’ என ஒரு நாளை குறிப்பிட்டுக் கொண்டு அன்று விடியற் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து முழுகுவதும், எண்ணெய் பலகாரங்களை வயிறு புடைக்கத் தின்பதும் பட்டாசுக் கட்டுகளைக் கொளுத்துவதுமான செயல் களைச் செய்து பண்டிகை கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு செய்வதனால் மக்களுக்கு மதப் புரட்டி லும் பண்டிகை புரட்டிலும், புராணப் புரட்டிலும் அவ தாரப் புரட்டிலும் பார்ப்பன வம்சத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள், உயர்ந்தவர்கள், தமிழர் வம்சத்தைசேர்ந்தவர்களாகிய அசுரர்கள் அனைவரும் அயோக்கியர்கள், தாழ்ந்தவர்கள் என்னும்புரட்டிலும் நம்பிக்கையுண்டாகி, அவர்கள் அறிவு குன்றிப் போகின்றது. அன்றியும், மக்கள், பண்டிதர்கள், புரோகிதர்கள், மத வாதிகள் என்னும் புரட்டர்களுக்கு இன்னும் அடிமை யாகவே இருக்கக் கூடிய நிலையையும் அடைகிறார்கள் என்பதை யார் மறுக்க முடியும்?

பொருள் நஷ்டம்

இனி இப்பண்டிகையினால் உண்டாகும் பொருள் நஷ்டத்தையும், சுகாதாரக் குறை வையும் கவனிப்போம். ஏழை முதல் பணக்காரன் வரையுள்ள எல்லா இந்துக் களும் இதையொரு ‘தெய்வீக’ மான பண்டிகையென்று கருது வதனால், எப்பாடுபட்டாவது எவ்வளவு பணத்தை செல வழித்தாவது, பணமில்லா விட்டால் கடன் வாங்கியாவது, இதைக் கொண்டாட வேண்டு மென்று தமது அறியாமையால் நினைக்கிறார்கள். இவர்களில் பணக்காரர்கள், இப்பண்டிகை யின் பொருட்டு எக்கேடு கெட்டாலும், எந்த சந்தியில் நின்றாலும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் ஏழை மக்களும், பணக்காரர்களை பார்த்தும், அர்த்தமற்ற தெய்வீ கத்தையும், புராணக் கதை களையும் நம்பியும் வீணாக அறிவின்றி கஷ்டப்படுகின்றார்களே என்றுதான் நாம் பரிதாபப்படுகின்றோம். ஏழை மக்கள், தீபாவளிப் பண்டிகை வர ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, பண்டிகை கொண்டாடுவதற்காக பலகாரம் தயார் செய்வதற்குக் கடைச் சாமான்கள் வாங்குவதற்கும், புது வேட்டிகள் புடவைகள் வாங்குவதற்கும், பட்டாசுக் கட்டுகள் வாங்குவதற்கும், பட்டினிக் கிடந்து பொருள் சேர்க்கின்றார்கள். அவ்வாறுசேர்த்து வைத்தப் பொருளும் போதாமல் கடன் வாங்குகிறார்கள். இவ்வாறு வாங்கிய கடனைக் கொடுப்பதற்கு வேறு வழியில்லாமல் இவர்கள் தேடி வைத்திருக்கும் நகைகளோ பாத்திரங்களோ விற்கப்படுகின்றன. இவ்வாறு ஏழைமக்கள் பொருள் வீண் நஷ்டமாகிறது.

இதற்கு மாறாக முதலாளிகளாக இருக்கும் ஜவுளி வியாபாரிகளும், மளிகைக் கடைக்காரர்களும், இத் தீபாவளியில் நல்ல லாபம் அடைகிறார்கள். அவர்கள் அடையும் லாபம் ஏழைமக்கள்கஷ்டப்பட்டு சம் பாதித்த பொருள் என்பதை யார் மறுக்க முடியும்!? ஆகவே இப்பண்டிகை ஏழைமக்களை இன்னும் பரம ஏழைகளாக்கவும், பணக்காரர்களை இன்னும் கொழுத்த பணக்காரர்களாக்கவும்,  ஒருவகையில் உதவி செய்கிறதென்பதையும் அறியலாம்.

கரியும் புகையும்

அன்றியும் வீணாகக் கொளுத்திச் சுட்டு பொசுக் கப்படும், பட்டாசுகளும், வாணங்களும், எங்கிருந்து வருகின்றன. இவைகள் பெரும்பாலும் அயல் நாடுகளிலிருந்தே தீபாவளிக்கென்று நமது நாட்டிற்கு வியாபாரத்திற்காகக் கொண்டு வரப்படுகின்றன. சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள பட்டாசுக் கட்டுகளும், வாணங்களுமாவது இத் தீபாவளியில் பொசுக்கப்படுமென்பதில் அய்யமில்லை. இந்த இரண்டு கோடியும் கரியும் புகையுமாக போவதைத் தவிர இதனால் வேறு யாருக்கு என்னபலன்? நமது தேசப் பணமாகிய இந்த இரண்டு கோடி ரூபாயும் அந்நிய நாட்டுக்குத் தானே போய்ச் சேருகிறது? இன்னும் அன்னிய நாட்டுத் துணிகள் வியாபாரத்தின் மூலம் அயல் நாடுகளுக்குச் செல்லும் பொருள் நாலைந்து கோடி ரூபாய்க்குக் குறையாது என்பது நிச்சயம். இந்த நாலைந்து கோடியில் நமது தேசத்திற்கு நஷ்டம் தானே.

இன்னும் அடை மழை பெய்து கொண்டிருக்கும் இந்த அய்ப்பசி மாதத்தில் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து முழுகிவிட்டு எண்ணெய் பலகாரங்களைப் போட்டு வயிற்றை நிரப்புவது சாரீர சுகத்திற்கு ஏற்றதா? என்று தீபாவளியை நம்பும் எந்த முட்டாளாவது யோசித்துப் பார்க்கிறானா? சாதாரண மாக நமது நாட்டில் காலரா என்னும் விஷப் பேதி நோய் பரவுவது இந்த தீபாவளி முதல் தான் என்பதை எவரும் அறிவார்கள். எதனால் இந்த விஷப் பேதி உண்டாகிறது என்பதை அறிந்தவர்கள் இந்தத் தீபாவளிப் பண்டிகையினால் நமது ஜன சமுகத்திற்கு உண்டாகும் தீமையை மறுக்க மாட்டார்கள். சாதாரணமான அஜீரணமே இந்த விஷ பேதிக்கு முதற் காரணமாகும். விடியற்காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி எளிதில் ஜீரணமாகாத மாவு பண்டங்களைப் போட்டு வயிற்றை நிரப்பினால் வயிற்றில் உள்ள ஜீரணக் கருவிகள் என்ன நிலை யடையும்? இதனால் பலவிடங்களில் நமது நாட்டில் விஷ பேதி உண்டாகி விடுகின்றது. இன்னும் பல வகையான நோய்களும் உண்டாகி விடுகின்றன. நாம் கூறுவதில் நம்பிக்கை யில்லையானால் தீபாவளியன்று மறுநாள் நமது நாட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று பாருங்கள்! எத்தனை அஜீரண நோயாளிகள் வருகிறார்களென்பதைத் தெரிந்து கொள்ளலாம். இன்னும் சமாச்சாரப் பத்திரிகைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார்களானால் எங்கெங்கே விஷ பேதி உண்டாகியிருக்கிற தென்பதையும் அறியலாம். இதுவு மல்லாமல் பட்டாசுகளிலிருந்து எழும் விஷப்புகையினால் வரும் வியாதிகள் பல. இவ்வாறு தீபாவளி பண்டிகையானது மக்களுடைய மனத்திலும் மூடநம் பிக்கையை உண்டாக்குவதோடு அவர்களுடைய பொருளுக்கும் நஷ்டத்தை உண்டாக்கி சரீர சுகத் தையும் கெடுத்து உயிருக்குத் கூட உலை வைத்து விடுகிறதென்பதையும் அறியலாம்.

முயற்சி செய்கிறார்களா?

ஆனால், இந்தப் பண்டிகையைப் பற்றியும் இது போன்ற மற்ற பண்டிகைகளைப் பற்றியும் நமது நாட்டு தேசிய பத்திரிகைகளாவது, தேசியவாதிகளாவது கண்டித்துக் கூறி அவைகளில் உள்ள சூழ்ச்சிகளையும் புரட்டுகளையும் எடுத்துக் காட்டி, மக்களுடைய செல்வத்தை நஷ்டமாகாமற் செய்யவாவது, அவர் களுடைய மூடநம்பிக்கைகளைப் போக்கவாவது முயற்சி செய்கின்றார்களா என்று பார்த்தால் ஒரு சிறிதும் இவ்வாறு செய்வதாகக் காணோம். இதற்கு மாறாக, இதுபோன்ற பண்டிகைகளைப் பற்றியெல்லாம் விளம்பரப்படுத்துவதும், அவைகளின் ‘பரிசுத்தத் தன்மை’களை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதும், அவைகளைக் கொண்டாடும்படி செய்வதும் ஆகிய காரியங்களையே செய்து வருகின்றார்கள். உதாரண மாக, இத்தீபாவளியைப் பற்றிச் சென்ற இரண்டு மாதங்களாகவே பிரச்சாரஞ் செய்யப்பட்டு வருவதை அறியலாம். அதாவது தீபாவளி பண்டிகை நமது தேசிய பண்டிகையென்றும் தேவர்களுக்கு விரோதியாயிருந்த நரகாசுரணைக்கொன்று அவர்கள் சுகமடையும் படி விடுதலையுண்டாக்கிய விடுதலை நாள் என்றும், ஆகையால் அன்று எல்லோரும் தேசிய விடுதலையைக் கருதி கதர் வாங்கிக் கட்ட வேண்டும் என்றும், கதர் பக்தர்களும், காங்கிரஸ் பக்தர்களும், தேசிய பக்தர் களும், கதரின் பேராலும், காங்கிரசின் பேராலும், தேசியத்தின் பேராலும் தீபாவளிப் பிரச்சாரம் செய்து விடுகின்றனர். இவர்கள் செய்யும் இந்த பிரச்சாரம், மக்களை இன்னும் மூடநம்பிக்கையுடையவர்களாகக் கவும், குருட்டு பழக்க வழக்கங்களையுடைய வர்களாக வும் செய்யப்படும் மதப் பிரச்சாரமா அல்லவா? என்று தான் நாம் கேட்கின்றோம்.

நமது நாட்டுத் தேசியவாதிகளுக்கு, இதுபோன்ற பண்டிகைகளின் பேரில் உள்ள பக்திதான் இன்று எடுத்தவைகளிலெல்லாம் அதாவது, தேசிய ராஜிய காரியங்களைக் கூட பண்டிகையாக்கி அவைகளைத், தேசிய மதம் என்னும் ஒரு புதிய மதத்தின் பேரால் கொண்டாடச் செய்ய வேண்டும் என்னும் எண்ணமுண்டாகி அவ்வாறே செய்தும் வருகிறார்கள். இதற்கு உதாரணமாக, காந்தி ஜெயந்தி, நேரு ஜெயந்தி, திலகர் ஜெயந்தி, தாஸ் ஜெயந்தி, லஜபதி நாள், சத்தியாக்கிரக நாள், தண்டி நாள், பூனா ஒப்பந்த நாள், உண்ணாவிரத நாள் என்பவை போன்ற பல நாட்களைக் குறிப்பிட்ட அவைகளைப் பண்டிகைகள் போலக் கொண்டாடும்படி செய்து வருவதைக் கூறலாம். ஆகவே இத்தகையவர்கள், புராதனமானதென்று சொல்லப்படும் தீபாவளிப் போன்ற பண்டிகைகளைப் பற்றி பிரச்சாரம் பண்ணாமல் விட்டு விடுவார்களா?

நாட்டிற்கு இலாபம் உண்டா?

இன்று தீபாவாளி பண்டிகையின் விசேஷத்தைக் கூறிக் கதர்ப் பிரச்சாரம் பண்ணும் தேசியவாதிகள், உண்மையில், பகுத்தறிவுடைவர்களாயிருந்தால், நமது நாட்டுச் செல்வம் அன்னிய நாட்டுக்குச் செல்லக் கூடாது என்ற எண்ணமுடையவர்களாயிருந்தால், நமது மக்கள் அனைவரும் அறிவுடையவர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் நோக்கமுடை யவர்களாயிருந்தால் தீபாவளிப் பண்டிகையையும் இது போன்ற மற்ற பண்டிகைகளையும் ஒழிப்பதற்கே முயற்சி செய்ய வேண்டும். தீபாவளிப் பண்டிகையை ஒழிப்பதன் மூலம், அந்நிய நாட்டிற்குப் பட்டாசுகளின் மூலம் செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்களையும் துணிகளின் மூலம் செல்லும் கோடிக் கணக்கான ரூபாய்களையும் செல்லாமல் தடுப்பதனால் நமது நாட்டிற்கு லாபமுண்டா? அல்லது தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குக் கதர் விற்பனை புரிவதனால் லாபமுண்டாவென்று கேட்கிறோம்.

ஆகவே உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் நமது நாட்டில் உள்ள தேசிய வாதிகளோ சமயவாதிகளோ, புரோகிதர்களோ, பண்டிதர்களோ, காங்கிரஸ்வாதி களோ, அனைவரும் மக்களை இந்து மதத்தின் பேராலும், பண்டிகையின் பேராலும் ஏமாற்றி இன்னும் அடிமைகளாகவே வைத்திருந்து தங்கள் சுயநலத்தைச் சாதித்துக் கொள்ளவே முயற்சி செய்கிறார்கள் என் பதை அறியலாம்.

ஆதலால், உண்மையில் விடுதலை பெற நினைக் கின்றவர், மூடநம்பிக்கையினின்று நீங்க நினைக்கின்ற வர்கள், மதமும் பண்டிகைகளும் ஒழிந்து மக்களைப் பிடித்த பீடை நீங்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அனைவரும், தீபாவளிப் பண்டிகைகளை அடி யோடு ஒழிக்க வேண்டுகிறோம். தீபாவளிப் பண்டிகைக் கென்று, பணத்தையும் செலவு செய்து புத்தியையும் கெடுத்துக் கொள்ளாமல் அந்த நாளையும் மற்றச் சாதாரணமான நாளைப் போலவே, கழிக்கும் படி வேண்டுகின்றோம். ஆகவே இக்கொள்ளை நோய்க்கு இடங்கொடாமல், அதைத் தடுக்குமாறு எல்லோருக்கும் எச்சரிக்கை செய்கின்றோம்.

‘குடிஅரசு’  – தலையங்கம் – 23.10.1932

-விடுதலை நாளேடு, 12.10.25