வெள்ளி, 17 அக்டோபர், 2025

சுயமரியாதை இயக்கம்


 சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் 1925இல்  என்னால் துவக்கப்பட்டது.  யாவரும் அறிந்ததேயாகும்.  அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன?  அது ஏன் துவக்கப்பட்டது?  என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக் கூறவேண்டியது அவசியமல்லவா?  அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா என்பது விளங்கும்.

எனக்குச் சிறுவயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது.  அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது.  ஆனால், நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை.  நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன்.  கடவுள் மகிழ்ச்சியடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவுமாட்டேன்.

எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதிமதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன்.  இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன்.  எப்பொழுதிருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லையென்றும் யோசித்து, யோசித்துப் பார்த்திருக்கிறேன்.  கண்டுபிடிக்க முடியவே இல்லை.

எங்கள் வீட்டில் சந்நியாசிகளுக்கும் பாகவதர்களுக்கும் சமயப் பிச்சைக்காரர்களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்ததினாலும், அவர்களைக் கண்டு எனக்குப் பிடிக்காததாலும் அவர்கள் சொல்வதைப் பரிகாசம் செய்ய ஆரம்பித்து, மறுத்துச் சொல்ல ஆரம்பித்து ‘விதண்டாவாதமாக’ கேள்விகள் கேட்க ஆரம்பித்து, மெல்ல மெல்ல அதுவே ஒழிந்த நேரவேலையாகவும் அதுவே இளைப்பாறுவதற்கு ஒரு துணைக் கருவியாகவும் எனக்கு உண்மையிலேயே உற்சாகமுள்ள வேலையாகவும்  நேர்ந்துவிட்டது.

நான் புராணங்களையோ வேறு எந்தத் தனிப்பட்ட புஸ்தகங்களையோ படித்ததில்லையென்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்மந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதா சர்வ காலம் எங்கள் வீட்டில் இரு சமய “பக்தர்” களாலும், பண்டிதர்களாலும் காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது.  ஏன்?  பணம் வந்து குவியும்போது தர்மம் செய்து தர்மப் பிரபு பட்டம் வாங்க வேண்டாமா?  இவர்களைத் தானே தான பாத்திரங்களாகப் பேசப்படும்.  ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்து கிடப்பார்கள்.  என் தாயார் இவர்கள் அளப்புகளை அதிக “பக்தி சிரத்தை” யுடன் கேட்டுக் கொண்டிருப்பார்.  தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும்.  இதனால் எனக்கு சமய சம்மந்தமான – புராண சம்மந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும்.  அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும் அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பல கேள்விகளுக்குப் பதில் தாறுமாறாகவும், ஆளுக்கு ஒரு விதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு, என்னை ஒரு “கெட்டிக்காரப் பேச்சுக்காரன்” என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது.

என் தகப்பனார் நான் இப்படி “விதண்டாவாதமான” கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும் உள்ளுக்குள் தனது மகன் இப்படி புத்தியாய்ப் பேசுகிறானே என்கிற மகிழ்ச்சி உண்டு. இந்தச் சம்பவங்கள் தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும் கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்தும் நம்பிக்கையில்லாமல்  போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன்.

“சுற்றுச் சார்புதான் (Association and Surrounding) ஒரு மனிதனின் வாழ்க்கை லட்சியம், கொள்கை ஆகியவைகளுக்குக் காரணமானது என்று சொல்லப்படுகிறது. அனுபவத்தில் பெரிதும் அப்படித்தான் இருந்தும் வருகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்லுவதற்கு இடமே கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு தன்மையிலும் என்னைச் சுற்றி இருந்த சுற்றுச்சார்பு சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன்.

ஜாதி மதக்கொடுமை ஒழிக்கப்பட வேண்டு மென்பதிலும் கடவுள் என்ற மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும் மாத்திரம் எனக்கு உண்மையான நம்பிக்கையும் உணர்ச்சியுள்ள சிரத்தையும் உண்டு. அதுவும் நான் தான் செய்யவேண்டுமென்றோ அதற்காகத் தான் இருக்கிறேன் என்றோ கருதுவது இல்லை.

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதேயாகும். என்னவென்றால், காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும் காரண காரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும், தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது. இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய்விட்டது. விவரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது.
சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான்.

என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம் எப்படியோ உயிர்வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து  ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் அதாவது சோம்பேறித்தனமும், கழிப்பினித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை முடிவுகளைத் தனது வாழ்க்கைக்காக வாழ்க்கை நலத்துக்காக மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத  சாகும் வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலே எதுவோ அதுவே மேல்கண்ட உயர்ந்த சம்பத்தாகும்.   அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால்) அந்த நிலையைப் பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்வாதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.

நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்பட மாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆக வேண்டும்? ஏதாவது ஒரு வேலையில்லாமல் உயிர் வாழ முடியாதேஎன்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை -அதாவது ஜாதி, மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்யவேண்டும் என்று கருது கிறேனோ – அந்த வேலையைச்

செய்கிறேன்.  இந்த உணர்ச்சி வலுத்துத் தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கிவிட்டேன்.  இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன்.

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதேயாகும். என்னவென்றால், காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும் காரண காரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும், தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது.  இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய்விட்டது. விவரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று  கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான்.

எந்தக் காரியமானாலும் காரண காரியமறிந்து, செய்தது சரியா, தப்பா என்பதை அந்தக் காரண காரிய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கின்றது. அது தான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.

- உண்மை இதழ், 1-15.09.225

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக