சனி, 19 செப்டம்பர், 2015

சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்?


- தந்தை பெரியார்


அக்கிராசனரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!
எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும் எங்கள் வரவைப்பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய் திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம்மகா நாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரி கின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க் கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும்.
உதாரணமாக இவ்வளவு கிளர்ச்சியா வது இங்கு நடத்திருக்கா விட்டால் அதிசய மாகத் தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள்.  அநேகமாக நாங்கள் போகின்ற ஊர்களில் எல்லாம் எதிர்க் கிளர்ச்சியே எங்கள் பிரச்சாரத்திற்கு மொத்த அனுகூலமளித்து வருகின்றது.  நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக்காக செய்யப்படும் மரியா தைகளில் முதலாவது அங்குள்ள கோவில் களை, அடைத்துப் போலீஸ் காவல் போடு வதும் நாஸ்திகர்கள் வருகிறார்கள் என்று ஊருக்குள் பிரச்சாரம் செய்து  எங்கள் கூட்டத்தை நடத்த விடக்கூடாதென்று அரசாங்கத்திற்கு மனுச் செய்து கொள்ளு வதுமேயாகும்.  இந்தக் காரியங்கள் செய்யப் படுவதால் நாங்கள் வரும் விஷயங்கள் தானாகவே பரவி பொது ஜனங்கள் அப்ப டிப்பட்ட ஆட்கள் அதாவது நாஸ்திகர்கள்  என்பவர்கள் எப்படியிருப்பார்கள்? அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பார்க்கலாம், கேட்கலாம் என்பதாகவே அநேகர் வந்து எங்களைப் பார்க்கவும் நாங்கள் சொல்வதைக் கேட்கவும் ஏற்பட்டு விடுகின்றது.  இந்தக் காரணங்களால் எதிர்க்கிளர்ச்சிக்காரர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
உதாரணமாக, மலேயா நாட்டுக்கு நாங்கள் எவ்வளவோ இரகசியமாகப் போயும் அங்குள்ள எதிர்க்கிளர்ச்சிக்காரர் களின் செய்கைகளின் பயனாய் மலே யாவில் இதுவரை பிரச்சாரம் செய்ய எந்த இந்தியருக்கும் ஏற்பட்டிராத பெரிய சௌ கரியங்கள் எங்களுக்கு ஏற்பட்டது.  அங்கு சுமார் 150 பேர்கள் ஒரு மகஜருடன் போலீஸ் இலாகா தலைமை அதிகாரியைப் போய்ப் பார்த்து ஈரோடு இராமசாமியையும் அவர்கள் கோஷ்டியாரையும், மலாய் நாட்டுக்குள் விட்டால் பெரிய கலகங்கள் நடந்து விடுமென்று தெரிவித்தார்களாம்.  அதற்கவ்வதிகாரியானவர் அவ்வளவு பெரிய கலகங்கள் நடக்கும் படியாக அவர்கள் என்ன விதத்தில் அவ்வளவு கெட்டகாரியம் செய்வார்கள்? என்று கேட்டாராம்.  அதற்கவர்கள் எங்கள் சீதையைக் குற்றம் சொல்லுகிறார்கள் என்று சொன்னார்களாம், அதற்கவ்வதிகாரி சீதை என்றால் என்ன? என்று கேட்டாராம், அதற்கவர்கள் சீதையென்றால் எங்கள் கடவுளின் மனைவி என்று சொன்னார் களாம். அதற்கு அவ்வதிகாரி எங்களிலும் சிலர் இயேசுநாதரின் தாயாராகிய மரியம் மாளைச் குறித்துப் பேசுவதில் சிலர் பலவித சந்தேகத்தைக் கிளப்பி விடுகின்றார்கள்.  அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? வரு பவர்கள் சீதையைக் குற்றம் சொன்னால் நீங்கள் ஒரு கூட்டம் போட்டு அவர்கள் சொல்லுகிறபடி சீதை குற்றவாளி அல்ல வென்று சொல்லுங்கள்.  அதற்கு தைரிய மும் ஆதாரமும் இருந்தால் பயப்படத் தேவையில்லை என்று சொல்லி வருகின்ற வர்களின் சுற்றுப்பிரயாணத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய வேலை தங்களு டையது என்றுச் சொல்லி மகஜர்காரர்களை எச்சரிக்கை செய்தனுப்பினாராம்.  ஆகவே, அதுபோலவே இங்கும் எங்கள் பிரச் சாரத்திற்கு சில மக்கள் பயந்து விட்டது  ஆச்சரியமாக இருக்கின்றது.
நிற்க, சகோ தரர்களே, என் வார்த்தைகளையெல்லாம் நிராகரித்து விட உங்களுக்குப் பூரண சுதந்திரமுண்டு. அதை மறுத்துப் பேசவும் உங்களுக்குச் சுதந்திரமுண்டு.  ஒருவரு டைய அபிப்பிராயத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது நியாய மாகாது.  என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு சுதந்திரமுண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.  அதைத் தடுப்பது என்பது ஒருக்காலும் மனித தர்மத்தில் சேர்ந்ததா காது.  நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள். சுதந்திரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்.  இந்த மனப் பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதா காது.  எங்களுக்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும்? நாங்களும் மனிதர்கள்தானே? எந்த மனிதனுடைய, எந்த அரசாங்கத்தினு டைய தனிப்பட்ட காரியங்கள் எதிலும் நாங்கள் பிரவேசிப்பதில்லையே. பொதுப்பட்ட காரியங் களில், பொது ஜனங்கள், நன்மை தீமைகளில் மற்ற எல்லோருக்கும் உள்ளது போன்ற உரிமை எங்களுக்கும் உண்டு என்பதில் நாங்கள் சிறிதும் விட்டுக்கொடுக்க இசையோம்.  எங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட வர்கள் தக்கப் பதிலையும், ஆதாரத்தையும் உடையவர்களானால் நாங்கள் பேசுவதைத் தடுக்கவோ, எங்கள் மீது ஆத்திரப்படவோ சற்றும் அவசியம் ஏற்படாது.  ஆதாரமற்ற வர்கள் தந்திரத்தில் வாழ்பவர்கள். அமட்ட லிலும் மிரட்டலிலும் மக்களை ஏமாற்றி காலம் கழிப்பவர்கள் முதலானவர்களுக்குத்தான் எங்களைப்பற்றிய பயம் ஏற்படக்கூடும். கோபமும் ஆத்திரமும் வரக்கூடும். ஆனால் அதற்காக நாங்கள் என்ன செய்வது? அஸ்திவாரமற்றவைகளும் புரட்டுகளும் என்றைக்கும் இருந்தாலும் ஒரு நாளைக்குச் சாய்ந்து விழுந்துதான் தீரும்.
அன்றியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கும் நாளெல்லாம் வீண் நாளாகத்தான் முடியும். வெகு நாளைப்புரட்டு என்பதாலேயே அல்லது அதிகக் கோபக்காரர்கள், முரடர்கள், தந்திர சாலிகள் ஆதரிக்கிற அபிப்பிராயங்கள் என்பதாலேயே எதுவும் நிலைத்திருக்க முடியாது.  அவையெல்லாம் இனிப் பலிக்கவும் பலிக்காது.  சுதந்திர உணர்ச்சி என்பது இந்த தேசத்தில் இல்லையானாலும் சுற்றுப் பக்க தேசங்களில் இருந்து வந்து புகுந்து விட்டது. இனி அதை வெளியில் தள்ளி விடமுடியாது.  ஆதலால் தடைப்படுத்த முயற்சிப் பதிலோ, கோபிப்பதிலோ பயனில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
சகோதரர்களே, நாங்கள் இங்கு எந்த விதமான மதப்பிரச்சாரம் செய்யவோ, ஏதாவது ஒரு மதத்தைச் குற்றம் சொல்லவோ ஒரு தனி மதத்தை ஸ்தாபிக்கவோ வர வில்லை. அதுபோலே கடவுள் விஷயத்திலும் கடவுள் உண்டு.  இல்லை என்று சொல்லவோ அதன் குணத்தில், சக்தியில், விவகாரம் செய்யவோ, அதற்கும், மக்களுக்கும் மதக் காரர்களுக்கு முள்ள சம்பந்தத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் விவாதிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை. மக்களுக்கு அறிவு என்பது உண்டு அல்லவா அதன் பயன் என்ன? சக்தி என்ன? வாழ்க்கையின் சம்பவங் களையும் உலகத் தோற்றங்களையும் அந்நியர் உபதேசங்களையும் பற்றி உங்கள் அனுப வமும் அறிவும் என்ன சொல்லுகின்றது? உங்கள் சொந்த பகுத்தறிவைக்கொண்டு நன்றாய் ஆராய்ந்து எதையும் பரீட்சித்துப் பாருங்கள் என்று சொல்லத்தான் வந்திருக் கின்றோம்.  இதில் என்ன பிசகு ஏற்பட்டு விடக் கூடும் என்பதும் எங்களுக்கு விளங்கவில்லை.  இதற்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும் என்பதும் விளங்கவில்லை.  உங்கள் சொந்த அறிவுக்கு மதிப்புக் கொடுக்கவும். அதற்கு சுதந்திரம் கொடுக்கவும் பயந்தால் மிருக ராசிகளை விட மனிதராசி உயர்ந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? மக் களை முட்டாள்தனமும், முரட்டுப் பலமும் ஆட்சி செய்ய  வேண்டுமா? அல்லது அறிவு நியாயமும் ஆட்சி செய்ய வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி.
மனிதனின் அறிவுக்கு மேற்பட்டதொன்று உண்டு என்று ஒன்றைக் கற்பித்து மக்களுக் குள் புகுத்தி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க இடம் கொடுக்காமல் நம்பித் தானாக வேண்டும் என்று வலியுறுத்தி அறிவைக் கட்டிப் போட்டு நாசமாக்கி, மனித சமுகம் முழுவதையுமே அடிமைப்படுத்திவிட்டதா லேயே இன்று மனித சமுகம் இவ்வளவு தொல் லைக்கும், கவலைக்கும் ஆளாகி ஆகாரத் திற்கே திண்டாட வேண்டிய நிலைமையேற் பட்டு விட்டது.
சகோதரர்களே! அசரீரி சொல்லிற்று, அருள் சொல்லிற்று ஆகாய வாணி சொன் னாள், ஆண்டவன் சொன்னான் என்று ஏதோ ஒன்றைக் கற்பித்து எழுதி வைத்துக் கொண்டு அதன்படி நடந்தாக வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்திக் கொண்டு இருப்பதும் அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது சந்தேகப்பட்டு விவரம் கேட்டால் அவர் மீது கோபிப்பதும், வைவதும், பழி சுமத் துவதும், கலகமாகி விடுமென்று மிரட்டுவது மான காரியங்கள் எப்படி மனிதத் தன்மை யானதும் நியாயமானதுமானவை ஆகும்.
ஆண்டவன் சொன்னதானால், அருள் சொன்னதானால், அசரீரி சொன்னதானால். ஆகாய வாணி சொன்னதானால் அதற்குப் புஸ்தகம் எதற்கு? ஒருவருக்கு மற்றொருவர் சொல்லுவதெதற்கு? காதில் உபதேசிப்ப தெதற்கு? தத்துவார்த்தங்கள் எதற்கு? அறி முகப்படுத்துவதெதற்கு? என்பவைகளை மக்கள் சிறிதும் யோசிப்பதில்லை.  ஏதாவது ஒன்றை ஒருவன் ஆண்டவன் சொன்னான் என்று சொல்லி விட்டால், ஆண்டவன் எப்படி சொன்னான். ஆண்டவன் சொன்னதாக யார் சொன்னார் என்று கூடக் கேட்கப்படாதென் கிறார்கள்.
தப்பித்தவறி யாராவது கேட்டு விட்டால், வசவும், பழியும், மிரட்டலும்தான் பதிலாகயிருக்கின்றனவேயொழிய சமாதான மான திருப்தியான பதிலென்பதே கிடையாது. ஆகவே மனிதர்கள் முதலாவதாக இந்த இடத்தில் தங்களது அறிவைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றாலல்லது ஒரு நாளும் மனித சமுகம் முற்போக்கடைவற்கே இடமில்லாது போய்விடும். ஏனெனில் உலகத்தில் பலரைச் சிலர் ஏமாற்றஆதிக்கம் செலுத்த தங்கள் தங்கள் புரட்டுகளையும், பித்தலாட்டங்களை யும் ஆரம்பித்த இடமே இந்த இடம்தான் என்று நாம் காணுவதால் அந்தப் புரட்டை முதலில் வெளியாக்கி விட வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம். ஆதலால் தான் அந்த இடத்தை நன்றாய் பரீட்சிக்க வேண்டு மென்று மேலும் மேலும் வலியுறுத்துகின் றோம்.  இன்று உலகத்திலுள்ள பெரும் பான்மை மதக்காரர்கள் தங்கள் தங்களுக்குத் தனித்தனியாக பற்பல விதமான கொள்கை களையும், வாசகங்களையும் வைத்துக் கொண்டு அவர்கள் அத்தனைப் பேரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும், வாசகங் களையும் ஆண்டவன் சொன்னான் என்றே சொல்லி சாதித்துக்கொண்டு அவற்றை பாமர மக்களுக்குள் பலவந்தமாக செலுத்திவிட் டார்கள். அதனாலேயே மக்களுக்குள்  பற்பல பிரிவுகளும், மனப்பான்மைகளும், அபிப் பிராயங்களும் காணப்படுகின்றன. இவ்வ பிப்பிராய பேதங்கள் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதோடு ஒருவரையொருவர் சந்தே கிக்கவும், வெறுக்கவும் அலட்சியமாய்க் கருதவும், எதிர்க்கவும், வஞ்சிக்கவும், அடக்கி ஆளவும் பயன்படுகின்றன.  எந்த மார்க்கமாக என்றுப் பார்த்தால் ஒவ்வொரு மதக்காரனும் தன்தன் மதத்தைச் சேர்ந்த அவதாரத்தின் மூலம், தூதனின் மூலம், ஜோதியின் மூலம் தங்கள் ஆண்டவன் சொல்லியது தான் மேலானதென்றும், சத்தியமான தென்றும் சொல்லிக்  கொண்டு அதை நிலை நிறுத்த மற்றவர்களை நம்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதன் மூலமேயாகும்.  இந்த உணர்ச்சியையும் செய்கையையும் உலகத்தில் செல்வாக்குப் பெற்றிருக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை மனித சமுகத்திற்குள் ஒரு வித பொதுவான  ஒற்றுமையும் ஓய்வும் ஏற்படுவதற்கு இடமே இல்லை.  ஆகையால் தான் இந்த இடத்திலேயே மனிதன் முதன் முதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.
நாம் இப்போது எந்த மதக்காரர்களுடைய கொள்கைகளையும் உபதேச வாசகங் களையும் எடுத்துக் கொண்டு அவை சரியா? தப்பா? என்பதாகவோ ஆண்டவன் சொல்லா என்பதாகவோ வாதாட வரவில்லை. நம் முடைய வேலையும் கவலையும் அவையல்ல, மற்றென்னவெனில் எல்லா மதக்காரர்களும் பெரிதும் ஒரே ஆண்டவன்தான் உண்டென்று ஒப்புக்கொள்ளுகின்றவர்களானதால்  ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கை களையும், உபதேச வாசகங்களையும் அந்த ஆண்டவனே சொன்னான் என்று சொல்லுவ தால் இவர்களுக்குள் எந்த மதக்காரர்கள் சொல்லுவது உண்மையென்றும், எந்த அவ தாரப் புருஷர்கள் எந்த தூதர்கள் முதலான வர்கள்  சொன்னது உண்மையாகியிருக்கக் கூடியது என்றும் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கு என்ன பரீட்சை என்பவையேயாகும்.
மேலும் இவைகளை எல்லாம் ஆண் டவன் சொன்னான் என்று நம்பும்படி கட்டாயப் படுத்துவதால் ஆண்டவன் எந்த ரூபத்தில் எந்த நிலையில் எங்கு இருந்து கொண்டு என்ன பாஷையில் சொன்னார் என்பதில் எந்த மதக்காரர் உண்மை சொல்லுகின்றார்கள் என்று கண்டுபிடிப்ப தற்குமே யாகும்.  மேலும் ஒரு ஆண்டவன் என்பவர் தான் சொல்ல வேண்டுமென் கின்ற கொள்கையையோ, உபதேசத் தையோ மற்றும் ஏதோ ஒன்றையோ தானே ஒருவர் மூலம் சொல்லி பிறகு மற்றவர்களால் எடுத்துக் சொல்லும்படி செய்த பிறகு அவை விவாதத்திற்கும் உள்ளாயிருப் பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவை ஆண்டவனால், சொல்லப்பட்டி ருந்தால் அவைகள் ஒவ்வொரு மனித னுடைய காதிலும் விழும்படியாகவோ அல்லது மனதிலும் பதியும் படியாகவோ அல்லது இப்பொழுதாவது அவைகளை ஆண்ட வன் தான் சொன்னான் என்று கருதும் படியாகவோ அல்லது குறைந்தளவு விவாத மாவதில்லாதபடியாகவோ ஏன் அந்த ஆண்டவனால் செய்யமுடிய வில்லை? என்று இது ஆண்டவனால் முடியாத காரியமா என்றும் யோசிக்கப் புகுந்தால் அதிலிருந்தே அவைகள் எல்லாம் ஆண்டவனால் சொல்லப் பட்டது என்று சொல்லப்படுவது உண்மையா யிருக்க முடியுமா என்னும் சந்தேகங்கள் தோன்று வதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்பதேயாகும். அன்றியும் இவற்றையெல்லாம் ஆண்டவன் சொன் னார் என்று கண்மூடித் தனமாய் நம்புவது அவசியமா? அல்லது ஆண்டவன் சொல்லி இருந்தால் நமக்கு ஏன் தெரிந்தி ருக்கக் கூடாது என்று எண்ணி ஆராய்ந்து பார்ப்பது அவசியமா என்பதுமாகும்.
நிற்க. இப்படிப்பட்ட ஒரு ஆண்டவன் ஏன் மனிதனின் அறிவுக்கு எட்டாதவனாகி விட்டான்? என்பதற்கு இதுவரை யார் என்ன சமாதானம் சொன்னார்கள்? சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள ஆண்டவன் ஒரு மனிதனின் அறிவுக்கும், மனதிற்கும், கண்ணிற்கும் தென்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யார் யோசித்துப் பார்த்து சமாதானம் கூறுகிறார்கள்? ஏதோ ஒரு ஆண்டவன் இருக்கின்றான் என்று மக்களை நம்பச் செய்ய வேண்டுமென்பதற்காகவோ, ஒரு வாசகத்தை ஆண்டவன் சொன்னான் என்று நம்பச் செய்வதற்காகவோ உலகத் திலுள்ள மக்களின் அறிவையும், ஆராய்ச் சியையும், சுதந்திரத்தையும், இம்மாதிரி தடைப்படுத்தி விடுவதா? என்று கேட் கின்றோம்.  இதற்காக மனிதனின் இயற்கை ஞானத்தை தலை எடுக்க வொட்டாமல் அழுத்திவைத்து விடுவதா? என்றும் கேட்கின்றோம்.
மனிதர்கள் சுதந்திரமுடையவர்களாக வேண்டுமானால் அவரவர்களுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.  பிறகு அவரவர்கள் அபிப்பிராயத்தைத் தாராள மாய் வெளியிலெடுத்துச் சொல்ல இடம ளிக்க வேண்டும்.  தனக்கே விளங்காததை யும், மற்றொருவனுக்கு விளங்கவைக்க முடியாத தையும் நம்பும்படியோ, ஒப்புக் கொள்ளும் படியோ எதிர்ப்பார்ப்பதும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்துவதும் கண்டிப் பாய் கூடவே கூடாத  காரியமாகும்.  அது போலவே உலக மனிதர்கள் ஒற்றுமைப் பட்டு சகோதரப் பாவம் அடைய வேண்டுமானால் முதலில் ஆண்டவர்கள் தொல்லையும், மதக்காரர்களின் தொல்லை யும் அவர்களின் உபதேசங்களின் தொல் லையும் ஒழிந்தாக வேண்டும் .  இதற்கு ஒரு மார்க்கம் செய்தாக வேண்டும்.  இது செய் யப்படாத வரை மனிதன் காட்டுமிராண் டித் தனத்திலிருந்து மனிதத் தன்மைக்கு ஒருக்காலமும் திரும்ப மாட்டான்.
(01.03.1931 புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 08.03.1931
-விடுதலை,13.9.15

சித்திரகுப்தன் -வினா விடை


வினா: இந்தியா அடிமையானதற்கு காரணம் என்ன?

விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுளும் ஆகும்.
வினா: கிருஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தாலும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
விடை: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்த போதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள் தனமுமாகும்.
வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?
விடை: மதவிஷயத்தில் அவர்களுக்கு கிடைத்துள்ள உயர்ந்த நிலையில் அவர்கள் (பாப்பார்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க முடிந்தது. மதவிஷயத்தில் பார்ப்பனர் களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடையவேண்டிய வர்களாவார்கள்.
வினா: ஆண் விபசாரகர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் வியபாசாரத்திற்கு என்ன செய்வார்கள்?
விடை: அதற்காக எந்த விபசாரகனும் விபூதிபூசுபவரும் பயப்பட வேண்டியத்தில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக்கென்றே ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய தேவரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலை கூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும்.
(குடிஅரசு, 16-11-1930)
விடுதலை,18.9.15

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தற்காலக் கல்வி வயிற்றுப் பிழைப்பு கல்வியே




- தந்தை பெரியார்

திரு. ரெட்டியார் அவர்களே! உபாத்தியாயர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் சகோதர சகோதரிகளே! இந்த ஆசிரியர் மகாநாட்டுக்கு இந்த ஜில்லா போர்டார் என்னைத் தலைவ னாக இருக்க வேணுமாய் கேட்டுக் கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரிய மாயிருக்கிறது. ஏனென்றால் இது கல்வி என்பது சம்பந்தமான ஆசிரியர் மகா நாடாயிருப்பதால், அந்தக் கல்வி என்பது ஒரு சிறிதும் இல்லாதவனும், ஆசிரியர் என்பவர்களிடத்தில் கொஞ்ச மாவது பயிற்சி பெறாதவனுமான நான் இம் மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க எவ்விதத்தில் தகுதியுடையவன் ஆவேன் என்பதுதான். நான் என்னுடைய ஒன்பதாவது, பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக் கூடத்திலேயும் வாசித் தவனும் அல்ல. அந்த ஒன்பது வயதிற்கு உட்பட்ட காலத்திலும் என்னைப் பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம், நான் வீட்டில் உள்ளவர்களுக்குத் தொல்லை விளைவிக்காமலிருக்க வேண்டுமென்ற கருத்துக்கொண்டு ஓர் இடத்தில் காவலில் வைப்பதற்காகவே, அதுவும் ஒரு திண்ணைப் பள்ளி உபாத் தியாயர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தேன்.
அந்தப் பள்ளியில் இருந்த காலமும், உபாத்தியாயர்களுக்கும், பிள்ளை களுக்கும் தொல்லை விளைவிப்பதும், அவர்களிடம் அடிபடுவதுமான காலந் தான். நான் ஏதாவது இரண்டொரு எழுத்தை கற்றக் காலமாயிருக்கும். இதை நான் அநேக சந்தர்ப்பங்களில் பல பொதுக் கூட்டங்களில் சொல்லியி ருக்கின்றேன். இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டே தான் ஒரு சிலர் அதாவது என்னுடைய கொள்கை களுக்கு முரண்பட்டவர்களோ, அத னால் நஷ்டப்பட நேரிடுகிறவர்களோ என்னைக் கண்டிப்பதற்கு இதை உப யோகித்துக் கொள்கிறார்கள். என்ன வென்றால், நான் கல்வி அறிவு அற்றவ னென்றும், அதனால் எனது கொள் கைகள் அறிவு அற்றதென்றும் சொல் லியும், எழுதியும் வருவதைப் பார்க் கின்றேன். ஆனாலும், உங்கள் ஜில்லா போர்டு தலைவர் திரு. எம். கே. ரெட் டியார் அவர்களுக்கு என்மீதுள்ள அன் பும் நம்பிக்கையும், நான் எவ்வளவோ மறுத்தும் என்னையே மகாநாட்டுக்கு தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியதால் வேறு வழி யில்லாமல் நான் ஒப்புக்கொள்ள வேண் டியதாயிற்று. நீங்கள் எந்தவிதமான சிறந்த உபந்நியாசத்தையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் ஜில்லா போர்டு தலைவர் இந்த மகாநாட்டை திறந்து வைக்கும்போது செய்த வரவேற்புப் பிரசங்கமானது மிகவும் அற்புதமாக வும், ஆணித்தரமானதாகவும், பெரிய அநுபோகமும், ஆராய்ச்சியும் பொருந் தியதாகவும் இருந்தது. அது உங்கள் நிலையை விளக்கியதுடன் நீங்கள் செய்ய வேண்டியதையும் நன்றாய் எடுத்துக் காட்டி இருக்கின்றது. அவ்வு பந்நியாசம் உங்களுக்கு மாத்திரமல் லாமல் உங்கள் மாணாக்கர்களுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் கிராமவாசிகளுக்கும் பொதுநல சேவைக்காரர்களுக்கும் மிகுதியும் பயன்படக்கூடியது.
அதுபோல நான் எதையும் எடுத்துச் சொல்ல முடியாது. தவிர,  அக்கிராசனம் வகித்தவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் அதுபோல் ஆராய்ச்சியோடு ஒன்றும் சொல்ல முடியாது என்றும், ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய விஷயம் எதை யாவது என் சொந்த முறையில்தான் சொல்லக் கூடும் என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ஆசிரியர்களே! நான் அறிந்த வரையில் தற்கால ஆசிரியர்கள் என் கின்றவர்கள் ஒருவித தொழிலாளி களே.  அதாவது ஜீவனத்திற்காக வேலையோ, கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக் காரர்களே அல்லாமல் உண்மையான ஆசிரியத் தன்மையுடையவர்கள் அல்ல என்பதே எனது அபிப்பிராயம். எப்படி ஒரு மனிதன் தன் ஜீவனத்திற்கு மூட்டை தூக்குகிறானோ, மாடு மேய்க் கின்றானோ, வண்டி ஓட்டுகிறானோ, வக்கீல் வேலை செய்கிறானோ, குமாஸ் தாவாக இருக்கிறானோ அப்படியே உபாத்தியாயர் வேலை என்பதும் ஒரு தொழிலாகவே ஏற்பட்டு விட்டது. ஒவ் வொரு உபாத்தியாயரும் தங்கள் தங் களை உபாத்தியாயர் வேலைக்குத் தகுதி ஆக்கிக் கொண்டதின் கருத்தே அவர் களின் ஜீவனத்திற்கு ஏதாவது தொழில் வேண்டாமா என்கின்ற கருத்து கொண்டுதானேயல்லாமல் ஏதாவது ஆசிரியத் தன்மையில் ஆசை இருந்து ஏற்பட்டதாக எனக்குத் தோன்றுவ தில்லை. ஆதலால் இம்மாதிரி மகாநாட் டுக்கு உபாத்திமைத் தொழிலாளர் மகாநாடு என்று சொல்லுவதுதான் பொருத்தமான பெயராகும். அது போலவே உங்களிடம் தங்கள் பிள்ளை களை படிக்கவிடும் பெற்றோர்களும், பிள்ளைகளின் வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது வழி ஏற்பட சற்றுப் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் தமது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களேயொழிய, அவர்களும் படிப்பை வயிற்றுப் பிழைப்பைத் தவிர,  வேறு காரியத்திற்குக் கருதுவதில்லை. உங்கள் ஜில்லா தாலுகா போர்டுகளும், முனிசிபாலிட்டிகளும் கூட அந்த கருத்துடன்தான் பள்ளிக்கூட நிர்வாகம் செய்து வருகின்றார்கள். கடைசியாக சர்க்காரும் கூட இவ்வளவு வரிப் பணத்தைப் படிப்புக்காக செலவு செய் தும், படிப்பு இலாகா விஷயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தியும் வந்தாலும் தங்கள் அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி நடைபெற கூலிகளைத் தயார் செய்யும் கருத்தோடுதான் செய் கின்றார்கள். அதனால்தான் பலவழி களிலும் தற்கால கல்விக்கு வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும் அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுகிறது. மனி தனுக்குக் கல்வியின் அவசியமெல்லாம் மனிதன் தன் அறிவை வளர்க்கவும், அவ்வறிவால் தான் இன்புறவும், மக்கள் இன்புறவுமான தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க வேண்டும் என்பதற்கே. இப்போதைய கல்வி எவ்வளவு அதிகமாக கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதும் சம்பந்தமில்லாததாகவே இருக்கின்றது. எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு கலை யாகவும், தொழிலாகவும் போய்விட் டதே அல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை. ஒரு நிமிஷத்திற்கு 100 கவிபாடக் கூடிய வித்வானானாலும் அவன் அக்கவி பாடுவதில் அதாவது ஒரு நிமிடத்திற்கு நூறு அச்செழுத்தைக் கோர்க்கும் ஒரு கம்பாசிட்டருக்குச் சமானமான தொழிலாளிதானே ஒழிய, அவனை ஒரு பெரிய அறிவாளி என்று சொல்லி விட முடியாது. அதுபோலவே ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லக் கூடிய ஒரு பண்டிதனோ ஒரு பாஷ்யக் காரனோ என்பவன், ஒரே தோலில் நூறு விதமான செருப்புத் தைக்கக் கற்றுக் கொண்ட ஒரு சக்கிலிக்கு மேலான வனென்று சொல்லிவிட முடியாது.
ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லும் பண்டிதனுக்கு எப்படி செருப்பு தைக்க தெரியாதோ அது போலவே சக்கிலிக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாது. ஆனால், இருவரும் இரு தொழிலில் இரு வித்தையில் சிறந்தவர்களே ஒழிய, அறிவாளிகள் என்று சொல்லி விட முடியாது. உதாரணமாக சில பெரிய சட்டம் படித்த வக்கீல்களை விட சிறிய சட்டம் படித்த வக்கீல்கள் கெட்டிக் காரர்களாய் இருக்கின்றார்கள். சிலருக் குப் படிப்பெல்லாம், நெட்டுருப்போட்டு ஒப்புவிக்க முடிகிற தல்லாமல் தங் களுக்கு ஒரு காரியத்திற்கும் உப யோகப்படுவதில்லை.
உதாரணமாக, ஒரு பெரிய விஞ் ஞான சாஸ்திரி அதாவது சைன்ஸ் படித்த பண்டிதன் ஒரு புளியமரத் தடியில் பேய் இருப்பதாக யாராவது சொல்லிவிட்டால் அந்தப் புளிய மரத் தடியில் நடக்க நேரும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுக்கத் துடன் நடக்கின்றான். தன் பெண் ஜாதியைப் பேயோட்ட கோயிலுக்கு அனுப்பிக் கொடுக்கிறான், உடற்கூறும் அதன் சிகிச்சையும் படித்த பெரிய பண்டிதனான டாக்டர் கூட தன் பெண்ஜாதியோ, மகளோ வீட்டிற்கு தூரம் என்றால் உடனே வெளியில் உட்கார வைத்து விடுகிறான்; அல்லது கோழிக்கூடு போன்ற சிறு அறைக்குள் இருக்கச் செய்துவிடுகின்றான், அல்லது நிழல் மேலே பட்டால் தீட்டு என்று சொல்லிவிடுகின்றான். இரவில் வெளி யில் தள்ளி கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே படுத்துத் தூங்குகிறான். தனது குழந்தை நொண்டியாய்ப் பிறந்தால், தான் முன் ஜென்மத்தில் செய்த வினை என்று வருத்தப்படுகின்றான்.
பெரிய வான சாஸ்திர பண்டிதன் கிரகணத்தின் போது ஊறுகாய்ச் சட்டியில் அருகம்புல்லைப் போட்டு விட்டு கிரகணம் ஆரம்பிக்கும்போது ஒரு முழுக்கும், நீங்கும்போது ஒரு முழுக்கும் போடுகிறான். பெரிய ஞான சாஸ்திர பண்டிதன் என்பவனும் குறிப் பிட்ட நாளில் குறிப்பிட்ட ஊருக்குப் போனால் மோட்சம் என்றும், குறிப் பிட்ட குளத்துத் தண்ணீரில் (அது எவ்வளவு அழுக்காயிருந்தாலும்) முழு கினால் தான் செய்த அக்கிரமங்களின் பலன் எல்லாம் தீர்ந்து விடும் என்றும் நினைத்துக் கொண்டு முழுகி விட்டு இதுவரையில் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று தன்னை தைரி யப்படுத்திக் கொண்டு புதுக்கணக்கு போட்டு மறுபடியும் அக்கிரமங்களைச் செய்ய தைரியவானாகி விடுகிறான். பெரிய தாவர சாஸ்திரமும், ஜீவ ஜந்து சாஸ்திரமும் படித்தவன் நாயைக் கொன்றால் பாவம் இல்லை, நரியைக் கொன்றால் பாவம் இல்லை, கரு டனைக் கொன்றால், குரங்கைக் கொன் றால் பாவம் என்கிறான். பால் சாப் பிட்டால் மாமிச பட்சணமல்ல, ஆடு, கோழி சாப்பிட்டால் மாமிச பட்சணம் என்கின்றான்.
இம்மாதிரி எத்தனையோ காரியங் களில் படித்தவர்கள் என்பவர்களின் நிலைமை அறிவுக்கும், படிப்புக்கும் சம்பந்தமில்லாமலே இருக்கின்றது. எப்படிப் பல புஸ்தகங்கள் நிறைந்த அலமாரிக்கு ஒரு சிறிதும் புஸ்தகங் களின் தன்மை தெரியாதோ அது போலவே பல புஸ்தகங்களையும் அலமாரிக்கு பதிலாக அவைகளை உள்ளத்தில் வைத்து இருக்கிறதாகக் காணப்படும் நகரும் அலமாரிகளான பண்டிதர்கள் கடுகளவு பகுத்தறிவும், புஸ்தகத்தின் தன்மையும் அறியாத வர்கள் அனேகர்கள் இருப்பது எனக்குத் தெரியும். எனவே கல்வி என்று பெயர் வைத்துக் கொண்டு நாம் செய்யும் இம்மாதிரியான அநேக பிரயத்தனங்கள் மக்களின் ஒரு சிறு பகுத்தறிவிற்கும் உபயோகப்படாமலே இருந்து வருகின்றது. உதாரணமாக நமது நாட்டின் சரித்திரம் என்பதாக சொல்லப்படும் எந்தப் பழஞ்சரித் திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மற்ற நாட்டார் எல்லோரையும் விட நாம் மேல் நிலையில் இருந்த தாகவே காணப்படுகின்றது. ஆனால்,  இன்று நாம் இருக்கும் நிலையானது மற்ற எல்லா நாட்டாரின் நிலைமையை விட தாழ்மையாகவே இருக்கின்றது. இந்த, நம் தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன என்றால் தெய்வ எத்தனம் என்று வெகு சுலபமாகப் பதில் சொல்லிவிடுகின்றார்கள். இப்படிப் பதில் சொல்லுபவர்களேதான் பெரும் பாலும் தங்களை ஆஸ்திகர்கள் என்றும், தெய்வ நம்பிக்கை உடைய வர்கள் என்றும் சொல்லிக் கொள்ளு கின்றார்கள். இம்மாதிரி தொட்டதற்கெல் லாம் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்காமலும், கண்டுபிடிக்க ஒரு சிறிதாவது முயற்சிக்காமலும் சோம்பேறி ஞானம் பேசுவதுதான் நமது மத இயல்பாகவும், பெரியோரின் ஞானமாகவும், ஆஸ்திகமாகவும் போய்விட்டது. இப்போது முன்னுக்கு வந்திருக்கும் மற்ற நாட்டார் எல்லோ ரும் தங்கள் புத்திக்கும், முயற்சிக்கும் மதிப்புக் கொடுத்தே மேல்நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையை முதலில் உபாத்தி யாயர்கள் உணர வேண்டும். இந்த நிலைக்கு பிள்ளை களையும் கொண்டு வரவேண்டும். இம்மாதிரி நிலைமை பெற்ற மக்கள் உள்ள தேசம் எந்த விதத்திலும் முன்னேற்றம் அடைந்தே தீரும்.
இன்று இவ்விடம் பல அறிஞர்கள் பலவிஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்தார்கள். அவைகளில் கிராம சீர்திருத்தம், இயற்கைப் பாடம், சாரணர் இயக்கம் முதலிய விஷயங்கள் முக்கிய மானவை. அவைகளைப் பற்றி எனது அபிப் பிராயங்களையும் சிறிது சொல்கிறேன். கிராம சீர்திருத்தம்
உபந்யாசகர் தமிழ்நாட்டில் மட்டும் 27 இலட்சம் கிராமங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். அவை உண்மையா கவே இருக்கலாம். அக்கிராமத்தின் நன்மைக்கும், கிராமவாசிகள் முன்னேற் றத்திற்கும் இதுவரை அரசாங்கமோ, அரசியல் இயக்கமோ, கிராம சீர்திருத் தக்காரர்களோ, அரசியல் ஜனப் பிரதி நிதிகளோ ஏதாவது ஒரு சிறிது நன்மை செய்திருக்கிறார்களா? ஆனால்,  ஒவ் வொருவரும் தத்தம் நலனுக்காக வேண்டி கிராமத்தார்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லியே மக்களை ஏமாற்றிப் பிழைப்பை வலுப்படுத் தியோ, தாங்கள் ஓட்டுப் பெற்றோ, மக் களின் நம்பிக்கை பெற்றோ சுயநல மடைந்து வருகிறார்கள். கிராமத்தின் நிலைமைகள் மாத்திரம் நாளுக்கு நாள் கீழ் நோக்கிக் கொண்டே போகின்றது.
கிராம சீர்திருத்தம் என்பது வீதி கூட்டுவதும், பள்ளிக் கூடம் கட்டு வதும், பஜனை மடம் உண்டாக்குவதும், உற்சவங்கள் செய்விப்பதும், அதிக வெள்ளாமை விளையச் செய்வதுமான காரியங்களைச் செய்து விட்டால் போதும் என்று பலர் நினைக் கிறார்கள். இக்காரியங்களினால் எந்தக் கிராமமும் முற்போக்கடைந்துவிடாது. கிராமக் குடித்தனக்காரருக்கு பகுத்தறி வையும், சிக்கனத்தையும், ஏழை மக்கள் நிலை மையையும் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும்.
கிராமவாசிகள் கள்ளுக்கடையை ஒப்பந்தத்தில் குத்தகைக்கு எடுத்து சுவாமி கோவில் கட்டுகிறார்கள். பரம்பரையாய் திருடுகின்ற ஜாதியார் என்கின்றவர்களுக்குத் திருட அனுமதி கொடுத்து, அவர்களைப் போலீசார் கண்டுபிடித்துத் தண்டிக்க இடம் கொடுக்காமல் இருப்பதாக வாக் களித்து அபயம் கொடுத்து அவர் களிடம் திருட்டில் பங்குவாங்கி உற்சவம் செய்கிறார்கள். வெறும் புராணப் படிப்பைச் சொல்லிக் கொடுத்து தங்கள் பணங் காசையெல்லாம் பஜனைக்கும், உற்சவத்திற்கும் கல்யாணத்துக்கும், கருமாதிக்கும், கும்பாபிஷேகம் முதலிய காரியங்களுக்கும் செலவு செய்யச் செய்வதும், யாத்திரைக்கும், உற்சவத்திற்கும், சமராதனைக்கும் செலவு செய்து அவற்றில் போட்டி போட்டு தங்கள் வரும்படியையும், மேற்கொண்டு கடன் வாங்கியும் செலவு செய்யப் பழகிவிடுகிறார்கள். மற்றும் பக்தி என்றும், மதம் என்றும் முட்டாள்தனமாக கிரகித்துக் கொண்டு பட்டை நாமங்கள் போட்டுக் கொண்டும், சாம்பலைப் பூசிக் கொண் டும் குடும்பத்தைக் கவனிக்காமல் பாஷாண்டிகளாய் திரிவதும், புது நாகரிகம் என்னும் பேரால் தங்கள் தங்கள் வாழ்க்கைச் செலவை அதிகப் படுத்திக் கொண்டு மோட்டார் வண்டி என்றும், அனுபவிக்க உயர்ந்த சாமான் கள் என்றும், உயர்ந்த ஆடைகள் என்றும் பல வழிகளில் தங்கள் தேவை களுக்கு மேலும் தாங்கள் அனுபவிக்க வேண்டிய சுகத்திற்கு மேலும் போட்டி போட்டுக் கொண்டு முட்டாள்தனமாக தங்கள் பணங்களைச் செலவு செய்து விடுகின்றார்கள்.
போதாக் குறைக்கு அரசியல் புரட்டால் ஏற்பட்ட தொல்லையாகிய ஜனப் பிரதிநிதித்துவம் என்று சொல் லப்படும் ஸ்தானங்களாகிய யூனியன், பஞ்சாயத்து, தாலுகா ஜில்லா போர்டு, முனிசிபாலிடி சட்டசபை முதலிய ஸ்தானங்களின் தேர்தல்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு 1000, 5000, 10000, 50000 ரூபாய் வரை தேர்தல்கள் செலவும், அவைகளினால் தங்கள் வாழ்க்கை கவனிப்பு கெடுதலும் ஏற்படுகின்றன. மற்றபடி ஒழுக்கங் களிலும் மிராசுதாரர்களாயிருக்கிற வர்கள் தாசி, வேசி, வைப்பு முதலிய விஷயங்களில் ஈடுபட்டு தங்கள் வீட்டு பெண்களைக் கவனியாமலும், அவர் களுக்கு வாழ்க்கையில் இன்பமில்லா மல் கொடுமைப்படுத்துவதும் அத னால் இம்மாதிரி மிராசுதாரர்கள் வீட்டுப் பெண்கள் பெரிதும் தங்கள் இயற்கை உணர்ச்சியை கட்டுப்படுத்த சக்தியற்றவர்களாகி தங்கள் வேலை யாட்கள், வெளியாட்கள் முதலானவர் களுடன் இன்பம் அனுபவிக்கத் துணிவு கொள்ள வேண்டி ஏற்படுவதும், இதனால் குடும்ப கவனம் குறைந்து அவரவர்கள் இஷ்டம் போல் அவர வர்கள் கையில் சிக்கின பணத்தைப் பாழாக்குவதுமான வழிகளால் அநேக குடும்பங்கள் கெடுவதும், மற்றும் விவகார வியாஜியங்கள் முதலிய காரி யங்களில் வக்கீல்களுக்கும், அதிகாரி களுக்குமாக தங்கள் பொருள்களை அள்ளிக் கொடுத்து பாப்பராவதும், அதிகாரிகள் சினேகத்திற்காகவும், பட்டம், பெருமை, முதலியவைகளுக் காகவும் பொருள்களைக் கவலையின்றி வாரி இறைத்துக் கடன்காரர்களாவதும் ஆகிய எத்தனையோ விதங்களில் கிராமங்களும், கிராம மிராசுதாரர் களும் 100க்கு 80 பேருக்கு மேலாகக் கடன்காரர்களாகவும், ஒழுக்கமில்லாத வர்களாகவும், குடும்பங்களில் கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வரு வதை நாம் தினமும் பார்த்து வருகின் றோம். இக்குறைகள் நீங்கினாலன்றி வேறு எந்தக் காரணத்தாலாவது நமது கிராமங்கள் முற்போக்கடைந்து விட முடியுமா என்று கேட்கின்றேன். எனவே, இக்குறைகள் நீங்க எந்த அரசியலோ, மத இயலோ, கிராம சீர்திருத்த இயலோ இதுவரையில் ஏதாவது செய்து வந்திருக்கிறதா என்று கேட்கின்றேன்.
உண்மையாய் ஏதாவது ஒரு கிராமம் சீர்திருத்தமடைய வேண்டு மானால் மேற்கண்ட குற்றங்கள் நீங்கத் தகுந்த கொள்கை கொண்டதாக கிராம சீர்திருத்தத் தன்மை ஏற்பட்டாலொழிய வேறு எந்த விதத்திலும் சீர்திருத்தம் ஏற்படாது. இவைகள் எல்லாம் என்னு டைய 35 வருஷ கிராமவாசிகளுடைய வும், மிராசுதாரர்களுடையவும் சினேக அனுபவத்தினாலேயே சொல்லுகிறேன். இந்த மேற்கண்ட காரணங்களால் வருஷம் பத்தாயிரம், இருபதாயிரம், அய்ம்பதாயிரம் ரூபாய் வரும்படி உள்ள பெரிய பெரிய குடும்பங்கள் கடனுக்கும் சொத்துக்கும் சரி என்றும், சொத்துக்கு மேற்பட்ட கடன் என்றும் சொல்லும்படியான நிலையில் இருந்து வருகின்றது.
இயற்கைப் பாடம் இனி, இயற்கைப் பாடம் என்பதைப்பற்றி சில வார்த் தைகள் சொல்ல ஆசைப்படுகின்றேன். இந்த இயற்கைப் பாடம் என்பதை நமது சிறு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் பற்றி உபாத்தியாயர்கள் மிகவும் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது மக்களின் அறிவு வளர்ச் சிக்கு மிக்க அவசியமானதாகும். ஆனால், அநேக உபாத்தியாயர் களுக்கு இயற்கைத் தத்துவம் இன்ன தென்றே தெரியாது என்பது எனது அபிப்பிராயமாகும். நமது மக்கள் அறிவு வளர்ச்சி பெறாமலிருப்பதற்குக் காரணம், இயற்கையின் தத்துவம் இன்னதென்று அறிய முடியாமல் போனதேயாகும். மேல் நாட்டார்கள் குறிப்பாக வெள்ளைக்காரர்கள், நம் மால் தெய்வத் தன்மையென்றும், அதிசயம் என்றும், அற்புதம் என்றும், சொல்லத்தக்கதான அநேக ஆச்சரியப் படத்தக்க காரியங்களை செய்து கொண்டும், இனியும் அநேக ஆச்சரி யங்களைக் கண்டுபிடித்துக் கொண்டும் வருவதற்கு அவர்கள் இயற்கையின் தத்துவத்தை அறிவதில் பெரிதும் கவலை எடுத்துக் கொண்டதே காரண மாகும்.
நமது பிள்ளைகளுக்கு நாம் இயற்கையின் தத்துவம் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும், மேல் நாட்டார் தங்கள் பிள்ளைகளுக்கு இயற்கையின் தத்துவத்தைச் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் ஒன்றுக்கொன்று நேர் விரோதமானது. நாம் நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் போதே, எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓர் அணுவும் அசையாது; கடவுள் சம் மதமில்லாமல் நம்மால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆகையால் இதில் நம்பிக்கை வைத்து எல்லா பொறுப் பையும் கடவுள் மீது போட்டுவிட்டு பக்தியாய் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்றோம். மேல் நாட்டாரோ அப்படி இல்லாமல், மனிதனால் செய்யக் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. முயற்சி செய்; பலன டைவாய்; உனது சக்தியில் நீ சந்தேகம் கொள்ளாதே; உன்னால் ஆகுமோ ஆகாதோ என்று பயப்படாதே; சகல அற்புதங்களும், அதிசயங்களும், உனது நம்பிக்கைக்குள்ளும், உனது முயற்சிக்குள்ளும், சிக்கிக் கிடக்கின்றது என்று சொல்லிக் கொடுக்கின்றார்.
மழை பெய்யாவிட்டால் பார்ப் பானுக்குப் பணம் கொடுத்து வருண ஜெபம் செய்ய வேண்டும் என்று நாம் சொல்லிக் கொடுக்கின்றோம்.
மேல் நாட்டார் மழை பெய்யாத தற்கு மேகத்தில் உள்ள கோளாறு என்ன என்று கண்டுபிடித்து, மேகத் தைக் கலக்கிவிட்டு மழை பெய்யச் செய்யும்படி சொல்லிக் கொடுக் கிறார்கள். இயற்கைத் தத்துவம் அறியத் தக்க அறிவுப் பெட்டகத்திற்கு நாம் குழந்தைகளைப் பழக்குவதில்லை.
குழந்தைகள் இயற்கை விசார ணையில் இறங்கினால் நம்மவர்கள் மிரட்டி நாஸ்திகம் என்றும், அதிகப் பிரசங்கம் என்றும் பயப்படுத்தி அடக்கி விடுகின்றோம்.
இவ்விதம் அடக்கும் தன்மையைப் பெரும்பாலும் நாம் மதத்தின் பேரால் செய்கின்றோம். நமது நாட்டின் அடி மைத் தன்மைக்கு இம்மாதிரி மதத்தின் பேரால் கடவுள் தண்டிப்பாரென்றும், பாவம் வரும் என்றும், நாஸ்திகம் ஆகும் என்றும் சொல்லிப் பயப்படுத்தி மக்களை முட்டாள்களாக்கிய கொடு மையேதான் முக்கியக் காரணமாகும்.
மதத்தையும், கடவுளையும் நினைத் ததற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம், தொட்டதற்கெல்லாம், சம்பந்தப்படுத்தி எல்லாம் கடவுள் செயல்; எல்லாம் கடவுள் செயல் என்பதையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிள்ளை களுக்குச் சொல்லிக் கொடுக்கும் தன்மையை அடியோடு நிறுத்திவிட வேண்டும். 19.05.1928 இல் செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர்  மகாநாடு தலைமைச் சொற்பொழிவு
(குடிஅரசு (27.05.1928, 03.06.1928)
-விடுதலை,6.9.15

காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான்



டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள், பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல் லுகின்றேன் என்றால் நெருப்பு வைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமு தாயத் தலைவர்கள் டில்லியில் இருந்து இருக்கின்றார்கள்; தவிரவும் சன்னி யாசிகள் (சாதுக்கள்) என்னும் பேரால் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சன்னியாசிகளை பார்ப்பனர்கள் என் கின்றேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) ஜாதிக்கு சன்னியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனை சாது வென்றோ, சன்னியாசி என்றோ சொல்ல மாட்டார்கள்.
ஆகவே அன்றைய கலவரத்துக்கு, காலித்தனத்துக்கு நேரடியாக சம்பந்தப் பட்டவர்களும், தூண்டிவிட்டவர்களும், ஆதாரமாக இருந்தவர்களும், தலைமை வகித்தவர்களும் பார்ப்பனர்கள் தவிர, மததர்ம சம்பிரதாயங்களில் பார்ப்பனர் களுக்கு சீடர்களாக இருந்தவர்களும் தான் காரணஸ்தர்கள் ஆவார்கள் என்ற உறுதியால்தான் சொல்லுகின்றேன். மற்றும் இராஜாஜி எலெக்ஷனுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்தாக வேண் டும் என்றும், எந்த அதர்மத்தைச் செய் தாவது ஒழித்தாக வேண்டும் என்பதாகச் சொன்னதும், அகிம்சையைக் கடை பிடிக்க வேண்டியதில்லை என்பதாகப் பேசியதும் எனது உறுதிக்கு ஆதாரம் ஆகும்.
வருணாசிரம தர்மத்தை ஒழித்ததை எதிர்க்கவே இக்கலவரம்
பசுவதைத் தடுத்தல் என்பது ஒரு பொய்யான காரணமேயாகும். உண்மைக் காரணம் பார்ப்பனருடைய வருணாசிரம தர்மத்துக்குக் கேடுவந்து விட்டது என்பது ஒன்றேதான். அந்தக் கேட்டை உண்டாக் கினது. காமராஜர் என்கின்ற ஒரே காரணம் தான் காமராஜர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கியமான காரணமாகும். பார்ப்பானுக்கு மாட்டுக் கொலையைப் பற்றி அக்கறை இருக்கின்றது என்பது அப்துல்காதர் ஆடி அமாவாசை அன்று தன் தகப்பனாருக்கு தர்ப்பணம் கொடுத் தார் என்பது போன்ற கதையேயாகும். இந்த சாதுக்கள், சங்க ராச்சாரியார்கள், மற்றும் சர்வ பார்ப் பனர்களுக்கும் முன் னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், தேவர்கள், இராமன், கிருஷ் ணன் முதலிய எல்லா ஆரியர்களுக்கும் மாடு தான் முக்கிய ஆகாரமாய் இருந் திருக்கின்றது! இவ்வுண்மை இன்றும் மனுதர்ம சாஸ்திரத்தில், பார்ப்பன தர்மமாய் இருந்து வருகின்றது.
உலகில் உள்ள மக்கள் 100-க்கு 100 பேர் மாட்டின் பாலைக் குடிப்பதும், மாட்டு உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதும் 100-க்கு 50 பேருக்கு மேலாக மாட்டு மாமிசம் உண்பதும், 100-க்கு 90 பேர் வேறு பல மாமிசம் உண்பர்களாகவே இருந்து வருகின் றார்கள்.
இப்படிப்பட்ட மக்களுக்கு பசுவதைத் தடுப்பு உணர்ச்சி ஏற்பட்டது என்றால், இதை எந்த மடையன் தான் உண்மை என்று நம்புவான்? எப்படி அது யோக் கியமான காரியமாய் இருக்க முடியும்? காமராசர் பார்ப்பனரை வதை செய்யும் காரியத்தை உண்டாக்கியவர் அதுதான் சமதர்மம் என்பது. காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான் தத்துவார்த்தமாகும்.
காமராஜர் சமதர்மத்தில் எல்லோ ருக்கும் படிப்பு, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் சம அந்தஸ்து ஏற்பட்டுவிடும் பிறகு இதில் மனித பேதம் எப்படி இருக்க முடியும்? மனித பேதம் தானே பார்ப்பனியம் என்பது.
முற்றிலும் பார்ப்பனர் - ஆதரவாளர் செய்த சதியே!
ஆகவே இதனால்தான் இந்த பார்ப் பனியக் கலவரத்துக்கும், காலித் தனத் திற்கும் பார்ப்பன குருமார்கள், பார்ப்பன சாதுக்கள், பார்ப்பன அதிகாரிகள், பார்ப் பனர்கள், பார்ப்பனப் பத்திரிகைக்காரர்கள், பார்ப்பன தர்மிகள் காரணமாக, காரிய சித்தர்களாக இருந்திருக்கின்றார்கள் என்ப தோடு, பிர்லா, பஜாஜ், டாட்டா முதலிய செல்வர்கள் பலபேர்கள் கூட்டமும், மற்றும் சொல்ல வேண்டுமானால் நந்தாக்கள் முதலிய மந்திரிகள் கூட்டமும் உடந்தை யாயும் ஆதரவாளர்களாகவும் இருந்திருக் கின்றார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
நேரு தங்கைக்கும், மற்றும் நேரு ஜாதிக் கும் இந்த சமதர்மம் எதிர்க்கப்பட வேண்டி யதாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் நந்தாக்கூட்டம் பெரிய அழுக்கு மூட்டைக் கூட்டமாகும். இந்திய பிரதமர் தேர்தலுக்கு நடந்த போட்டியில் ஒருவராக நிற்க முனைந்தவர் நந்தா! அது வும் ஒரு பிரபல ஜோசியர் கட்டளைப்படி நின்றவர். தேதி மாற்றத்தால் விலகிக் கெண்டவர்! இப்படிப் பட்ட அவர் எப்படி சமதர்மத்துக்கு உடந் தையாக இருக்க முடியும்? எனவே, டெல்லி கலவரமும் காலித் தனமும் பார்ப்பனரின் மனுதர்மத் துக்கும் காமராஜரின் மனித(சம) தர்மத்திற்கும் ஏற்பட்டு நடந்துவரும் பலாத்காரப் போராட்டங்களில் ஒன்றேயாகும். எல்லாப் போராட்டங்களையும், கலவரத் தையும், காலித்தனங்களையும் விட நேற்று நடந்த டில்லி போராட்டத்தின் குறிப்பிடத் தகுந்த முக்கியம் என்னவென்றால்; காமராஜர் தங்கி இருந்த வீட்டை காமராஜர் உள்ளே இருந்து தூங்கிக் கெண்டு இருக்கும்போது நாலுபுறமும் சூழ்ந்து கொண்டு நாலு புறத்திலிருந்தும் நெருப்பு வைத்துக் கொளுத்தினதுதான் முக்கியமாக குறித்துக் கொள்ளதக்கதான சம்பவமாகும். இந்தச் செய்கை காலிக்கூட்டத்தினரால் இலக்கு வைத்துத் திட்டமிட்டு நடத்திய செய்கையாக இருக்க முடியாது, பார்ப்பன சங்கராச் சாரியார்கள் பலரும், சாதுக்களும், ஆனந்தாக்களும், பிர்லாக்களும், பஜாஜ், டாட்டாக்களும் அழுக்கு மூட்டை நந்தாக் களும் கூடி, கலகம் நடத்திட திட்டமிட்டு, பல லட்ச ரூபாய் உதவி, பல அதிகாரி களைச் சரிப்படுத்திக் கொண்டு நடத்திய சதித் திட்டமேயாகும்.
போலீஸ் 7-8 பேர்களை சுட்டது என் றால், ஏதோ அனாமதேயக் காலிகளைத் தான் சுட்டு இருக்குமே ஒழிய மேற்கண்ட கூட்டத்தினரில் ஒரு வரைக்கூட சுட வில்லை. சுட நினைக்கவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் 3ஆம் தேதி எழுதி 4ஆம் தேதி சென்னைக்கு பதிப்பிக்க அனுப்பிய, விடுதலை பெயர்போட்டு 6ஆம் தேதி எழுதிய சாதிப்பிரிவுகள் என்ற தலையங்கத்தின் நல்லவண்ணம் விளக்கிக் கூறி இருக்கின்றேன்.
அதில் இனி நடக்க வேண்டியது மந்திரி களைக் கொல்ல வேண்டியது தான் என்று எழுதி இருக்கின்றேன், ஆனால் டில்லி செய்கை மந்திரி களைக் கொல்லுவதாய் இல்லை.
மந்திரிகள் பல மாகாணங்களில் இச் செய்கைகளுக்கு ஆதரவானவர் களாக இருக்க நேர்ந்து விட்டதால் (காங்கிரஸ்) தலைவரையே கொல்லத் திட்டமிட்டு அவர் இருந்த வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது வீட்டைச் சுற்றி 4 புறத் திலும் நெருப்பு வைக்கச் செய்து விட் டார்கள், காமராஜர் தங்கியிருந்த வீட்டிற்கு புழக்கடைப்பக்கம் வெளியேற ஒரு வழி இல்லாதிருந்தால் காமராஜரின் கதி அன்று என்ன ஆகி இருக்கும்?
நாடெங்கும் கலவரம் பரவும் ஆபத்து
இனி இது தேசத் தலைநகரில் மாத்திரம் அல்லாமல் மாகாணங்கள் முழுவதிலும் இக்கொலை, நெருப்பு வைத்தல் காரியங்கள் பரவும் என்பதிலும் ஆட்சேபணை இல்லை. இன்று பல மாகாண ஆட்சித் தலைவர்கள், பார்ப்பன அடிமைகள் வருணாசிரமக் காவலர்கள், சமதர்ம விரோதிகள் என்று சொல்லும்படியாகவே அமைந்து விட் டார்கள்! ஆதலால் இந்த மாடல் டில்லிக் காலித்தனங்கள் இனி எல்லா மாகாணங் களிலும் ஏற்பட்டே தீரும் பலவற்றில் ஏற்பட்டே விட்டதே!
அதாவது பார்ப்பன எதிரிகள், பார்ப் பனரின் எதிரிக் கட்சித் தலைவர்கள் என்பவர்களைக் கொல்லவும் அவர்கள் வீட்டையும் நெருப்பு வைத்துக் கொளுத்த வுமான நிலை ஏற்படலாம். அவற்றிற்கு அரசாங்கம் பாதுகாப்பும் அதற்கு ஏற்ற அளவில் தான் இருந்து வரும். எதிர்க் கட்சிக்காரர்கள் (பார்ப்பன அடிமைக்கட்சிக் காரர்கள்) இப்போதே அடிக்கல் நாட்டிக் கொண்டு விட்டார்கள். அதுதான் அண்ணா துரையைத் தாக்கினார்கள் என்பது போன்ற கற்பனைகளாகும்.
தமிழ்நாட்டு ஆட்சி அமைப்பை மாற்றாவிட்டால் காமராஜருக்கு பாதுகாப்பு ஏற்பட்டுவிடுமே என்றுதான் கருதுகின்றனர். என்னைப் பற்றி கவலை இல்லை, எனக்கு ஒரு கால் நாட்டிலும், ஒரு கால் சுடு காட்டிலும் என்ற பருவத்தில் இருக் கின்றேன். ஆதலால் என்னைப் பற்றிக் கவலை இல்லை.
நாட்டின் ரட்சகர் காமராசர் இன்றேல், நாதியற்ற நிலைதானே?
காமராசர் இன்று இந்த நாட்டுக்கு இரட்சகராக இருக்கின்றார். அதனால் தான் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் காமராசர் மீது கண் வைத்து இருக்கின்றார்கள் - அவர் வீட்டைக் கொளுத்தினார்கள்.
காமராசருக்கு ஏதாவது ஏற்பட்டால் அவருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. அவரது தாயார்கூட மயக்கம் வரும்வரை அழுவார்கள் அவ்வளவுதான். பிறகு நம்நாடு வருணாசிரம தர்ம நாடாகி விடும்!
அதுமாத்திரம் அல்ல, இன்றைய பார்ப்பனக் கூலிகளான காங்கிரஸ் எதிர்கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு, பலர்களுக்கும் நாதியற்ற நிலை ஏற்பட்டு விடும். பழைய கருப்பர்களாக ஆகி விடு வார்கள், பிறகு நாடு என்ன ஆகுமோ? எப்படி ஆகுமோ? எப்படியோ இருக் கட்டும்; இனி காமராஜர் தக்க பாது காப்புடன் இருக்க வேண்டும். பார்ப்பன எதிர்ப்புக் கட்சித் தோழர்கள் ஒவ்வொரு வருக்கும் 6 அங்குல நீளத்திற்குக் குறையாத கத்தி ஒன்றை தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக சீக்கியர்களது மததர்மம் போல், கத்தி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த காரியம் காமராஜரைப் பாது காக்க அல்ல. நம்நாட்டில் உள்ள 3 கோடி கீழ்ச்சாதி (சூத்திரனை) மக்களை இழி வில் இருந்தும், அடிமை நிலையில் இருந் தும், படுகுழிப்பள்ளத்தில், இருந்தும் வெளியாக்கிப் பாதுகாக்கவே ஆகும்.
நமது சரித்திரம் தெரிய, இந்த நாட்டில் காமராஜரைப் போல ஓர் இரட்சகர் இது வரை தோன்றியதே இல்லை. புராணங் களில் இரண்யர்கள், இராவணர்கள் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள், அவர்கள் எல்லாம் கொல்லப்பட்டதாக - பிரகலாதன், அனுமார், விபீடணன்களைக் கொன்று அழிக்கப்பட்டதாக எழுதி புராணங்களை முடித்திருக்கின்றார்கள்.
அந்தக்காலம் அப்படி; ஆனால் இந்தக் காலம் அதுபோன்ற புராண - சரித்திர காலம் அல்ல; உண்மை பிரத் யேக நடப்புக்காலம். இதில் அந்த வித் தைகளைப் பலிக்க விடக்கூடாது.
கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காம ராஜரை பாதுகாருங்கள்! மறுபடியும் எழுத இடம் வைத்துக்கொள்ளாதீர்கள்.
கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள் ளுங்கள்! - காமராசர் கொலை முயற்சி சரித்திரம்  என்ற நூலிலிருந்து...
-viduthalai,26.7.15

சனி, 5 செப்டம்பர், 2015

மதுவிலக்கு அரசியல் ஆதாயத்துக்கல்ல மக்களை அழிவிலிருந்து மீட்கவே!

சட்டசபைத் தேர்தல் சமீபிக்கும் போதெல்லாம் காங்கிரசு பேய்க்கு திரு.ராஜகோபாலாச்சாரியாரால், திரு.காந்தியின் மூலம் உச்சாடனம் செய்யப் பட்டு, அது கண்கொண்டபடி நமது நாட்டில் தலைவிரித்து ஆடுவது வழக்கம். இதை நாம் கொஞ்சகாலம் கூடவே இருந்து பார்த்தவர்களில் ஒருவராதலால் இந்தப் பேயாட்ட உபத்திரவத்தை ஒழிப்பது நமக்கு அதிகக் கஷ்டமான வேலையல்ல.
இந்தப் பேய் உச்சாடனத்திற்காக 27.03.1929 தேதியில் டில்லியில் காங்கிரசு காரியக்கமிட்டி என்பது கூடி சில தீர்மானங்கள் செய்திருப்பதாகப் பத்திரிகையில் தெரிய வருகிறது.
அதாவது, மறுபடியும் முன்போல் (ஒத்துழையாமைக் காலம்) போல கள்ளுக்கடை மறியலும் மரத்தின் பாளைகளை வெட்டுதல் போன்ற காலித்தனத்திற்கு மக்களைத் தூண்டும் படியான தன்மையுடையதான தென்னை மரத்துக்காரர்களை மரம் கள்ளுக்கு விடாமல் செய்யும் பிரசாரமும், பொதுஜன அமைதிக்குப் பங்கம் உண்டாகும்படியானதாகிய குத்தகைக் காரர்களை ஏலத்தில் கோராமல் இருக்கும்படி செய்யும் பிரசாரமும் செய்வதற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றி அவற்றை நடத்துவதற்கும் திரு.ராஜ கோபாலாச்சாரியார் தம்மையே நியமித்துக் கொண்டும், அதற்காகச் செலவுக்கும் மாதம் 500 ரூபாய் வீதம் கிடைக்கும்படி செய்து கொண்டிருப்பதாய்த் தெரிகின்றது.
இதை ஒன்பது மாதத்திற்கு (அதாவது தேர்தல் வரை) செய்ய வேண்டுமாம். அதோடு தீண்டாமை விலக்குப் பிரசாரமும் அனுமதித்து அதை நடத்த பண்டித மதன் மோகன் மாளவியா நியமனம் பெற்று
அந்த செலவுக்கும் மாதம் 200 ரூபா அனுமதி பெற்றுக் கொண்டிருக்கிறார்.
எனவே இந்தப் பிரசாரங்களை இப்போது அதுவும் சட்டசபையைக் கலைத்து மறுதேர்தல் ஏற்படுத்துவது உறுதி என்று ஏற்பட்டவுடன் இவ்வளவு அவசரமாய் இதை நடத்தக் காரணம் என்ன? என்பதை யோசித்தால் ஒரு முழு மூடனுக்கும் இதன் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் யோக்கியப் பொறுப்பற்ற சூழ்ச்சிகளும் விளங்காமற் போகாது. சென்ற தேர்தலின்போது இதே மாதிரிதான் திரு.ராஜகோபாலாச்சாரியார் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடைய அடிமைகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க வேண்டி 1000கணக்கான தென்னை மரங்களைக் கள்ளுக்கு விட்டு வருஷம் பதினாயிரக்கணக்கான ரூபாய்களைக் கள்ளினால் சம்பாதிக்கும் திரு. வெங்கட்ரமண அய்யங்கார் போன்றவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு, இந்த இரண்டரை வருஷ காலம் உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனியைப் போல் மதுவிலக்கில் மவுனம் சாதித்துவிட்டு, கதரின் பேரால் லட்சக்கணக்கான ரூபாய்களையும் மூடமக்களிடமிருந்து கொள்ளையும் அடித்துவிட்டு இப்போது தேர்தல் வருகின்றது என்று தெரிந்தவுடன் மறுபடியும் பழைய பல்லவியை பாடத்தொடங்கி இருப்பதில் ஏதாவது நாணயமிருக்குமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
நிற்க. இந்த இரண்டு வருஷகாலம் இந்தக் காங்கிரசு என்ன செய்தது? என்பதைப் பற்றியும், அது ஏன் மதுவிலக்குப் பிரசாரம் செய்யவில்லை என்பதைப் பற்றியும், சென்ற தேர்தலில் காங்கிரசு கட்சியின் பேரால் மதுவிலக்குத் திட்டத்தை ஒப்புக் கொண்டவர் கள் சட்டசபையில் 50 அங்கத்தினர்களுக்கு மேல் தெரிந்தெடுக்கப்பட்டிருந்த காலத்திலும், தங்கள் இஷ்டப்படியே மந்திரிகளை நியமித்து அவர்களைத் தங்கள் இஷ்டப்படி ஆதரித்து ஆட்டிக் கொண்டு வந்த காலத்தில் இந்த மதுவிலக்குப் பிரசாரமும், சட்டசபையில் சட்டத்தின் மூலம் சாதிப்பதும் ஆகிய காரியங்கள் எங்குப் போய்விட்டன?
தவிர, 1927-ம் வருஷத்தில் காங்கிரசினால் ஆதரிக்கப்பட்டு வந்த மதுமந்திரிகள் முதலாவதாக ஜனங்கள் மதுவை வெறுக்கின்றார்களா? இல்லையா? என்பதே தமக்குச் சரியாகத் தெரியவில்லை என்றும், மதுபானம் மக்களுக்கு நன்மையா? கெடுதியா? என்பதைத் தாம் இன்னமும் பூரணமாய் அறிந்து கொள்ளவில்லை என்றும், சொல்லிக் கொண்டிருந்தது உலகமறியும். அப்பேர்ப்பட்ட மந்திரிகளை ஆதரித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மறுபடியும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப் போகிறோம்; மதுவிலக்கு ஒப்புக் கொண்டவர்களை சட்டசபைக்கு அனுப்பப்போகிறோம் என்பதில் ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்கமுடியுமா? என்று கேட்கின்றோம்.
மது இலாக்கா மந்திரி கனம் திரு.முத்தையா அவர்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த பிறகும் தமிழ் நாட்டில் மதுவிலக்குக்காக ஒரு கமிட்டி நியமித்து அதன் மூலம் மதுவிலக்குப் பிரசார ஏற்பாடு செய்ய உத்தேசித்த பிறகும், வேண்டுமென்றே சூழ்ச்சிக்காக தேர்தலை உத்தேசித்து அதுவும் பார்ப்பனர்களுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்ய இந்தக் குயுத்தி செய்து காங்கிரசு பெயரைச் சொல்லிக் கொண்டு பொதுப்பணத்தில் மாதம் 500 ரூபாய் திரு. ராஜகோபாலாச்சாரியாருக்கும் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏய்க்க முடிவு செய்துவிட்டார்கள்.
காங்கிரசுகாரர்களின் மதுவிலக்குப் பிரசாரத்தின் யோக்கியதையையும், நல்ல எண்ணத்தையும் பொது ஜனங்கள் உணரவேண்டுமானால் ஒரு உதாரணம் எடுத்துக்காட்டுகின்றோம். சட்டசபையில் மதுவிலக்குப் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்ய மந்திரிகள் திட்டம் கொண்டு வந்த காலத்தில் காங்கிரசு மெம்பரானவரும் கோயமுத்தூர் ஜில்லா பிரதிநிதியானவரும் 9 வருஷம் தொடர்ந்து சட்டசபையில் இருப்பவரும் கோயமுத்தூர் ஜில்லா காங்கிரசு கமிட்டித் தலைவருமான திரு.சி.வி.வெங்கட்ரமணய் யங்கார் பிரசார திட்டத்தை எதிர்த்துப் பேசுகையில் என்ன காரணம் சொன்னாரென்றால்.
மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் ஜனங்களுக்குள் மதுக்குடி அதிகமாய்விடும். ஏனெனில் இவர்கள் ஏன் நம்மை கள்ளுக் குடிக்கக் கூடாது என்று சொல்லுகின்றார்கள் என்று நினைத்து ஒவ்வொருவனும் அதைக் குடித்துத்தான் பார்ப்போமே என்பதாகக் கருதி குடிக்க ஆரம்பித்து விடுவான் ஆதலால் பிரசாரம் செய்யக் கூடாது என்பதாகச் சொன்னாராம்.
இதிலிருந்து காங்கிரசாரின் மதுவிலக்கு யோக்கியதையை உணர்ந்து கொள்ளலாம். காங்கிரசுகாரர்கள் மந்திரிகளின் மதுவிலக்குப் பிரசாரத் திட்டத்தை ஒப்புக் கொள்ளாததற்காக இப்படிச் சொன்னார்கள் என்று யாராவது சமாதானம் சொல்லக் கூடுமானால் அதை நாம் மற்றொரு புரட்டும் நாணயக் குறைவுமான காரியம் என்று சொல்லுவோம். ஏனெனில் காங்கிரசுகாரருக்கு உண்மையிலேயே திட்டத்தில் ஆட்சேபணை இருந்தால் அதைத் தாராளமாய் வெளியிலெடுத்துச் சொல்லி அதற்காக ஏதாவது திருத்தம் கொண்டு வந்து பேசுவதோடு திட்டத்தில் உள்ள குறைகளைக் கண்டிப்பதற்குத் தாராளமாய் முயற்சித்திருக்கலாம். அதைவிட்டு விட்டு குடிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்தால் குடி அதிகரிக்கும் என்று சொல்லுவதின் கருத்து என்ன? என்றுதான் கேட்கின்றோம். இதன் உண்மை தெரிய வேண்டியவர்கள் மேற்படி சட்டசபை நடவடிக்கைகளை வரவழைத்துப் பார்த்தால் விளங்கும்.
இனி மதுவிலக்கு விஷயமாய் காங்கிரசுகாரர்கள் செய்யும் பிரசாரத்தில் ஏதாவது நாணயமிருக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். காங்கிரசு ஏற்கனவே செய்து பார்த்தாய்விட்டது. அதோடு மாத்திரமல்லாமல் அந்த முறை தப்பென்றும் உணர்ந்து நடுவேளையில் திடீரென்று நிறுத்தும்படியும் செய்து அதில் ஈடுபட்ட உண்மைத் தொண்டர்களையும் காட்டிக் கொடுத்துவிட்டது. இப்படியிருக்க இப்போதும் அதே முறையில் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப் போகின்றோம் என்று அதுவும் தேர்தல் சமயத்தில் அதுவும் கள்ளினால் வருஷம் பதினாயிரக்கணக்காக ரூபாய் வரும்படி சம்பாதிக்கும் அங்கத்தினர்களும் மதுவில் முழுகி எழுந்திருக்கும் நபர்களும் சேர்ந்து கொண்டு முன்போலவே மறுபடியும் சுயராஜ்ஜியத்திற்கு ஒரு வருஷம் 6 மாதம் 3 மாதம், ஒரு மாதம் ஆகிய வாய்தாக்களையும் அதோ தெரிகின்றது! இதோ தெரிகின்றது! என்கின்ற செப்பிடுவித்தைகளையும் செய்துகொண்டு புறப்பட்டிருப்பதன் இரகசியத்தை உணர்ந்து காங்கிரசுப் பேயையும், மதுவிலக்குப் பிரசாரப் புரட்டையும் தமிழ்நாட்டுக்குள் அண்டவிடாமல் தலையிலடித்துத் திருப்பி அனுப்பி விடும்படியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உண்மையிலேயே மதுவிலக்குப் பிரசாரத்திற்கு தமிழ்நாடு மதுவிலக்குப் பிரசாரம் செய்வதற்கென்று சமீபத்தில் ஈரோட்டில் ஒரு பெரிய கூட்டம் கூட்டுவித்துத் தமிழ்நாடு மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி என்பதாக ஒரு பொதுக் கமிட்டி தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கமிட்டியில் உள்ள அந்தந்த ஜில்லாக் கனவான்கள் முயற்சியால் அந்தந்த ஜில்லாவில் ஒரு ஜில்லாக் கமிட்டி ஏற்பாடு செய்யப்படும். அதன் மூலம் ஜில்லா முழுவதும் பிரசாரம் செய்யப்படும். இந்தப் பிரசாரத்தில் பலாத்காரம் செய்வதோ, பலாத்கார மறியல் செய்வதோ, பாளைகளை வெட்டுவதோ, ஏலத்தின் போது காலித்தனம் செய்வதோ முதலாகிய காரியங்கள் ஒரு சிறிதும் இல்லாமல், மதுவிலக்கின் தோஷங்களை எடுத்துச் சொல்லுவதன் மூலமும் பெண்களால் புருஷர்களின் குணங்களைத் திருத்தப்பாடு செய்வதன் மூலமும்  மற்றும் ஓட்டர்களுக்கு மதுவிலக்கு எப்படி சட்டத்தின் மூலம் செய்யப்படும் எப்படிப்பட்டவர்கள் மதுவிலக்குச் சட்டம் செய்யச் சவுகரியம் உடையவர்கள் என்பது போன்றவைகளை எடுத்துச் சொல்லுவதின் மூலமும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப்படும், எனவே பொதுமக்கள் காங்கிரசு தேர்தலுக்காகச் செய்யும் சூழ்ச்சியில் விழுந்து விடாமலும் தேர்தலில் மோசம் போகாமலும் இருக்க வேண்டுமாய் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடிஅரசு, செய்தி விளக்கக்குறிப்பு, 07.04.1929
குறிப்பு: அன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு கூறியதை, இன்றைக்கு மதுவிலக்கு அரசியல் நடத்துவோருக்குப் பொருத்திப் பாருங்கள் சரியாக இருக்கும்.
-உண்மை,1-15.8.15

கொழும்புவில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா

அய்யாவின் அடிச்சுவட்டில் ... 136

பகலவன் பாருக்கே சொந்தம்
கொழும்புவில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள என்னை அழைக்கப்பெற்று அதில் நான் கலந்துகொண்டேன், விழாவானது.
கொழும்பு, பம்பலப்பட்டி சரஸ்வதி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த டாக்டர் கோவூர் அரங்கில் 24.9.1978 மாலையில் தந்தை பெரியாருக்கு, நூற்றாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனது முதல் பயணமும் (இன்றுவரை) இலங்கைக்குச் சென்ற இறுதிப் பயணமும் இதுதான்! முன்னதாகவே விமானம் மூலமாக கொழும்பு விமானநிலையம் வந்தடைந்த என்னை பெரியார் நூற்றாண்டு விழா குழுவினராகிய கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்களான தோழர்கள் நவசோதி எம்.ஏ., சந்திரசேகரன் பி.எஸ்.சி., எஸ்.பி. பாண்டியன், காசிநாதன், கவிஞர் சிவராசன், கம்பளைதாசன் மற்றும் தோழர்கள் வேலணை வீரசிங்கம், அழகுராசா, தியாகராசா உள்ளிட்ட தோழர்களும் மன்ற அமைப்பாளர் ப. சந்திரசேகரன் பி.எஸ்.சி., அவர்களும் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
மாலையில், இலங்கையின் பிரபல தினசரி இதழான வீரகேசரி நிருபர் பேட்டி கண்டார். திராவிடர் கழக பகுத்தறிவு மன்றத்தின் பொறுப்பாளரும் சங்கம் ஏட்டின் ஆசிரியருமான தோழர் மா.செ. அருள் என்னுடன் வந்தார். இலங்கை திராவிடர் கழகத்தலைவர் ஆ.பெ. முனுசாமி அவர்களும், ஆரம்ப கால இயக்க தோழர் இளஞ்செழியனும், அ.தி.மு.க இலங்கை அமைப்பாளர் தோழர் வித்தகன் ஆகியோரும் என்னைச் சந்தித்தனர்.
முதல் நாள் இரவு, திராவிடர் கழகத்தை இலங்கையில் வளர்த்து நிலைநிறுத்திய பெரியார் பெருந்தொண்டர் கு.யா.திராவிடக்கழல் அவர்கள் பல மாதங்களுக்கு முன் மறைந்தார். அவர் இல்லம் தேடிச்சென்று, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி திரும்பினோம். (வசதியற்ற எளிய சூழ்நிலையில் வாழ்ந்த பெருமகன்) பின்பு, கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் சார்பில் மிகச் சிறப்பாக தயாரித்து அச்சிட்ட பெரியார் நூற்றாண்டு விழா மலரை நான் வெளியிட்டு முதல் பிரதியை சுயமரியாதை வீராங்கனை ஞான செபஸ்தியான் (தற்போது இந்த 94 வயது இளைஞர், நமது பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர்), சீதக்காதி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். அடுத்தது, இந்தியப் பேரரசு வெளியிட்ட நூற்றாண்டு விழா அஞ்சல் தலை, மற்றும் குறிப்புகளை நான் வழங்க, மன்றத்தின் அமைப்பாளர் திரு.சந்திரசேகரன், வீரசிங்கம், அழகுராசா உள்ளிட்டத் தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.
பிறகு, விழாவில் உரையாற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள் தொண்டினை நினைவு கூர்ந்து நன்றிப் பெருக்குடன் அய்யாவுக்கு நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்புடன் நடத்தும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி, பாராட்டுத் தெரிவித்து, 1932ஆம் ஆண்டில் அக்டோபர் 17ஆம் தேதி பெரியார் அவர்கள் இலங்கையில் ஆற்றிய பேருரை குறித்தும், அய்யா அவர்கள் எப்படி ஒரு பகுத்தறிவுப் பகலவன் என்பதை விளக்கியும், பகலவன் பாருக்கே சொந்தம் ஒரு ஊருக்கல்ல, நாட்டுக்கு மட்டுமல்ல என்பதையும் பல ஆதாரங்களுடன் விளக்கி உரையாற்றினேன். அய்யா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறவிருப்பது பற்றி அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறு தொழில் அமைச்சரும் பிரபல தொழிற்சங்கத் தலைவருமான திரு. எஸ். கருணாகரத் தொண்டைமான் அவர்களை நான் சந்தித்து உரையாற்றினேன். அவர்களுக்கு அய்யா அஞ்சல் தலை, அய்யா வாழ்க்கை வரலாறு, இலங்கை பேருரை, வைக்கம் போராட்டம் பற்றிய நூல்களை வழங்கினேன்.
யாழ்ப்பாணம் பகுதிகளில் ஜாதிக்கொடுமைகள் உள்ளது. அங்கு உங்கள் பிரச்சாரம் மிகவும் அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். பிறகு நான் பத்திரிகையாளர்களுடன் கொழும்புவில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஒன்றான ஹாலிடே இன் (Holiday Inn) என்ற ஓட்டலின் முதல் மாடியில் இலங்கை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பிரபல வணிக வியாபாரியான வேலணை வீரசிங்கம் செய்த இந்த ஏற்பாட்டில், இலங்கையின் பிரபல நாளேடுகளான வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஈழநாடு, சுதந்திரன், சிந்தாமணி, கலாவல்லி ஆகிய நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அய்யா விழாவன்று, சுயமரியாதை காப்போம், ஜாதியைத் தகர்ப்போம் என மக்கள் கடல் உறுதி பூண்டனர். இந்நிகழ்ச்சியில் எனக்கு ஈடு இணையற்ற வரவேற்பையும் அனைத்து தரப்பும் உள்ள தமிழ்ப் பெருங்குடியினர் நல்கினர். பெருநகரில் நடந்த அந்த நூற்றாண்டு விழாவில் மக்கள் கடல் ஆர்வப் பெருக்குடன் பங்கேற்றது நினைவில் நீங்கா வடுவாக உள்ளது என்பதனை நினைவுப்படுத்துகிறேன்.
-உண்மை,16-.8.15

சமஸ்கிருத “சனியனை” ஒழிப்போம்!


- தந்தை பெரியார்
நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்குப் பயன்படாத பழைய காரியங்களில் ஆசையுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப்பற்றி அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப்படுவது கிடையாது. ஆகவே, இப்பொழுது ஒரு தேசியத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.

சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனைகளில் சென்னைப் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும் என்பதும் ஒரு யோசனையாகும்.
உண்மையிலேயே, தேசமக்கள் கல்வியினால் அறிவு பெறவேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெறவேண்டும் என்று விரும்புகின்றவர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ, வருத்தமோ அடையமாட்டார்கள்.
ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும், இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த ஜாதிக்கொடுமை, சடங்குக்கொள்ளை, கடவுள் முட்டாள்தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாதவர்கள் கூட்டத்திலும், தலைவிரித்தாடி அவர்கள் உழைப்பையும், அறிவையும், சுதந்திரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமேயாகும்.
இன்று வருணா சிரமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும், சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாசிரம தருமமும் காப்பற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும். தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களே யாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்தச் சட்டங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டுவதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் கட்டுபடுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறித் தடுப்பதற்கும் திரு. சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் கூடிய சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அங்கத் தினராகச் சேர்த்துக்கொள்ள மறுத்ததற்கும் காரண மாயிருப்பவை சமஸ்கிருத நூல்களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குரைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வர்ணாசிரமக் கூட்டத்தார்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத, வேத, புராண, இதிகாச, ஸ்மிருதிகளையே பிராமாணங் களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லுகின்றன வென்று கவனிக்கின்றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லுகின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக் கின்றார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல்லாதபடி அவர்கள் மூளையை அந்தச் சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ் திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறை யாகும்.
ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச் செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும், குடிகொண்டிருக்கும் மூட நம்பிக்கைகள் போதாதென தேசிய ஆடைகளைப் புனைந்து இந்தி என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப்படுவதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாசிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழைய கௌரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரியாதைக்காரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த இந்தி பாஷை முதலானவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத்தைக் கைவிட சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார்கள்.
ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியர் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபாரிசு செய்ததைக் கண்டிக்கிறார்கள். பொருளாதார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமாய் இருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. காப்பிகிளப்பு பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள்கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங் கூச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியில் சிபாரிசைக் கைவிட்டு விடக்கூடாதென எச்சரிக்கை செய்யவேண்டும். சில பார்ப்பனரல்லாதவர் வாலிபர் சங்கங்களிலும், சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக்காகக் கொடுக் கும் உபகாரத் தொகையை நிறுத்தும்படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறே நாடெங்கும் பலத் தீர்மானங்கள் செய்து அரசாங்கத் தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சமஸ்கிருதச் சனியன் ஒழியும்.
- குடிஅரசு - கட்டுரை - 17.01.1932
-உண்மை,16-31.8.15