வெள்ளி, 30 அக்டோபர், 2015

இராமாயண ஆராய்ச்சி வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்

இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.
தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.
அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:
மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.
இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.
என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;
இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.
நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.
இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.
இதைப்பற்றி சிந்திப்போம்
வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?
மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது.
மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக ஆகிவிட்டது.
- தந்தை பெரியார்
-விடுதலை,19.6.15


ஜாதி காரணமாகவே ஒருவன் உழைக்காதிருக்கவும் மற்றொருவன் உழைக்கவும் ஏற்படுகிறது



- தந்தை பெரியார்

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப் பானும் இல்லை; பறையனும் இல்லை. அவர்களுக்கு இந்த வார்த்தை வாயில் நுழைய மாட்டேன் என்கிறது. அந்த நாடுகளிலே என்னதான் அடக்கு முறைகள் இருந்ததாகச் சொல்லப் பட்டாலும் அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது; இந்த நாட்டைப்போல் அதை நினைத்தாலே கடவுள் கண் ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.
இங்கத்திய மகன் அறிவு பெற்ற வனாக இல்லை; கிணற்றுத் தவளை களாகத்தான் அவன் வளருகிறான். இந்த  நாட்டு மக்களிலே 100க்கு 85 பேர்கள் கல்வியறிவில்லாத தற்குறி மக்கள். இந்த நிலைமைகள் எல்லாம் மாற்றம் அடையும்படியாக ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டால் தான் முடியுமே தவிர, அதை  விட்டு விட்டு இதெல்லாம் பிற்போக்கு  சக்தி என்ற பல்லவி பாடிக் கொண்டு திரிவதில் எந்தவித பலனும் இல்லை; ஏற்படவும் ஏற்படாது.
மார்க்ஸ் லெனின், ஏஞ்செல்ஸ் முதலியவர்கள் இந்தப்படி தான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்முடைய வாதம் என்ன வென்றால் இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏஞ்சல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், இருக்கிற சமுதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது தெரியாது. அவர்கள்தங்களுடைய நாட்டிலே இருக்கிற சமுதாய அமைப்புகளுக்கும், அவற்றின் குறைகளுக்குப் பரிகாரம் ஏற்படுகிற மாதிரியில் கொள்கைகள், திட்டங்கள் ஏற்படுத்தினார்களே தவிர, இந்த நாட்டைப் பற்றி அவர்கள் நினைக்கவுமில்லை; தெரியவும் தெரி யாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைமுறையோ இச்த நாட் டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.
ஸ்டாலின் இறப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஒருமுறை சொன்னார், அதாவது, நாம் நினைக்க முடியாத, அறிந்திருக்க முடியாத சமுதாயக் கஷ் டங்கள் இந்தியாவிலே இருக்கின்றன. எனவே அந்தச் சமுதாயக் கஷ்டங்களை ஒழிக்காமல் வெறும் பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டும் முன்னிறுத்திப் போராடுவதால் இந்தியாவில் கம்யூனி சத்தைக் கொண்டுவந்து விடமுடியாது, என்பதாகச் சொல்லியிருக்கிறார். இது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. அப்படி அவர்களுக்கு இந்த நாட்டின் நிலைமை, கஷ்டம் அமைப்புகள் தெரியாது. அவர்களுக்கு  இந்த மாதிரியான ஒரு அமைப்பு ஒரு நாட்டிலே இருக்கும் என் பதே அதிசயமாக இருக்கிறது. அறிந்த பிற் பாடுதான் அவர்களும் சொல்லுகிறார்கள் நம்மைப்போலவே.
உண்மையாக இந்த நாட்டுக் கம்யூனிஸ் டுகள் நினைக்க வேண்டும்: அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும்; முதன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரசாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான் என்பதை. 30 வருடமாக இந்த அடிப் படையில் தானே  நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொரு ளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லு கிறார்கள். நாங்கள் பொருளாதாரத் துறை யிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியது தான். ஆனால் சமுதாயத் துறையிலே இருக்கிறபேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேத மொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல; ஆனால் சமுதாயத் துறை பேத ஒழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக்கொள்வதில்லை. இதைப் பற்றிப் பேசுவதே பாபம் என்று கருதுகிறார்கள். பிற்போக்குச் சக்தி என்று கருதுகிறார்கள். பிற்போக்குச்சக்தி என்று சொல்லுகிறார்கள்.
மற்றும் சொல்லுகிறேன்; தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்குச் சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றி யமைத்தாக வேண்டும்; ஆனால் சமுதாயப் புரட்சியைச் சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும், மக்கள் உள்ளத்திலே. இன்றைய சமுதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி பிரத்தியட்ச நிலையை மக்களுக்கு உணர்த் தினால் போதும்.  நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமுதாய அமைப்பை, இன்றைய அமைப்பு சர்க்கார் இருக்கும் போதே மாற்றிவிட முடியும், மக்கள் பகுத்தறிவு பெறும்படி செய்வதன் மூலமாக. 30 வருடங்களுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம் திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவமும், திமிரும்? 30 வருடங்களுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! 30 வருடங் களுக்கு  முன் எவ்வளவு தேர், திருவிழா நடைபெறும்! சாமிக்கு எவ்வளவு கூட்டம் சேரும்! இன்றைய தினம் சாமி ஊர்வலத் தின் போது பார்ப்பான், தூக்குகிறவர்கள், தீவட்டி பிடிப்போரைத் தவிர வேறு யாரும் காணுவ தில்லையே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத் தறிவு உணர்ச்சி ஏற்படும் படியாகச் செய்த தன் காரணமாக நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. எதற்குச் சொல் லுகிறேன், சர்க்காரைக் கவிழ்க்காமலேயே ஒழிக்காமலேயே மக்கள் உள்ளத்திலே உணர்ச்சியை அறிவை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த சமுதாயப் புரட்சியைச் செய்யமுடியும் என்பதற்கு  ஆகவே சொல்லுகிறேன்.
முதலில் இந்தக் காரியத்தைச் செய் வோம்; பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட  முடியும்; பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவராமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போ மானால், தானாகவே பொருளாதார உரிமை வந்து விடும். ஆகவே இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.
இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே (மாவட்டத்தையே) எடுத்துக் கொள்ளுங்களேன்; யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன்  பார்ப்பான்; அதற்கடுத்த படியாக பணக்காரன், நிலைமுடையோன் - சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படு கிறவர்கள். அதற்கடுத்த படி தூக்கியவன் தர்பார் என்பது போல  இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லை யென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிற வனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே யில்லை. இப்போது சொல்லுங்கள்: பணக் காரன் - ஏழை என்கிற பாகுபாடு உயர்ஜாதி தாழ்ந்தஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா இல்லையா?......... என்று.
இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின்  எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத் திலும், பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி இந்த அமைப்பின் மூலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால் தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம்.
இன்னமும் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன் னேற்றம் காண முடியாது என்று உறுதி யாகக் கூறுவேன்.
(மன்னார்குடியை அடுத்த வல்லூரில் 27-4-1953 -ல் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: விடுதலை  5-5-1953)

  -விடுதலை,7.6.15
.

கோர்ட்டில் பிரமாணம் - பெரியார்-சித்திரபுத்திரன்-


மேஜிஸ்ட்ரேட்: (சாட்சியைப் பார்த்து) உன் பேரன்ன?
சாட்சி: என் பேர் சின்னசாமிங்கோ.
மே: உன் தகப்பன் பேர் என்ன?
சா: என் தகப்பன் பேர் பெரியசாமிங்கோ.
மே: உன் வயது என்ன?
சா: என் வயசு 36ங்கோ.
மே: உன் மதம் என்ன?
சா: இந்து மதமுங்கோ.
மே: உன் ஜாதி என்ன?
சா: சாதியா?
மே: ஆமா.
சா: சாமி குடியான சாதிதாங்கோ.
மே: சரி, சத்தியமாய்ச் சொல்கிறேன் என்று சொல்லு.
சா: சத்தியமாச் சொல்றேனுங்கோ.
மே: நீ இப்ப சத்தியம் செய்திருக்கிறே, உண்மையைச் சொல்ல வேணும், எது உனக்கு நல்லா தெரியுமோ எதை நீ கண்ணில் பார்த்தாயோ அதைத்தான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை கிடைக்கும் தெரியுமா?
சா: சாமி அப்படியே ஆகட்டுங்கோ. நான் நேர்லே பார்த்ததைத்தான் சொல்லணுமே? காதுலே கேட்டதைக்கூட பெரியவங்க சொன்னதைக்கூட சொல்லக் கூடாதா சாமி?
மே: நேரில் பார்த்ததை மாத்திரம் சொல்லு தெரிந்ததா?
சா: தெரிஞ்சிகிட்டேஞ் சாமி. அப்பளையே (அப்பொழுதே) நாஞ் சொன்னதெயெல்லாம் அடிச்சுப் போடுங்கோ.
மே: எதை அடிக்கிறதுடா?
சா: சாமி பின்னே நாஞ் சொல்லல்லே, எம்பேரு எங்கப்பம் பேரு எம்பட வயசு அதல்லாந்தா.
மே: அதையெல்லாம் நான் எதற்காக அடிப்பது?
சா: எசமாங்கோ "நேர்லே பார்த்ததுதான் சொல்லணு, காதுலே கேட்டது சொல்லக் கூடாது, சத்தியம் பண்ணி இருக்கிறே, பாக்காதது சொன்னா தெண்டிச்சிப் போடுவே" எண்ணு சொன்ணீங்களே. நம்முளுக்கு எனத்துக்குங்கோ அந்த வம்பெல்லாம்.
எங்கப்பெ என்னைப் பெக்க பாடுபட்டதெ பாத்தனா? எங்கம்மாதா என்னைப் பெத்ததெ பாத்தனா? எம்பட வயசைத்தான் நானு எண்ணிகிட்டு வந்தெனா? நமக்கு நேர்லெ ஒணுந் தெரியாது சாமி. நானும் ஒரு எளவையும் பாக்கில்லை. அடீங்கோ! அடீங்கோ!! எளிதினதை எல்லாம் அடிங்கோ. அல்லாத்தையும் அடிங்கோ.
மே: அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் இல்லை. கேசைப் பற்றித்தான் கேட்கப் போகிறேன். அதைப் பற்றி நீ பார்த்ததைச் சொல்லு.
சா: அந்த எளவே நமக்கு வாண்டாம். நம்மொ பாக்காத சங்கதி நம்மாலெ ஒண்ணுஞ் சொல்ல முடியாது. அப்பறம் நாளைக்கு ஒருத்தெ கேப்பானுங்கோ, எதிரி வக்கீலு உனக் கெப்படி தெரியும் எம்பான். அப்பரம் கடசீலே எல்லாம் தகராரா வந்து சேரும். அடீங்கோ! அடீங்கோ!! நாஞ் சொன்னதை யெல்லாம் அடீங்கோ!!! இல்லாவிட்டா நாம் போறே வெளியிலே.
மே: டேய் என்ன? ரம்ப குறும்பு பண்ணுகிறாய். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, இல்லாவிட்டால் உன்னை தண்டித்து விடுவேன். நீ யென்ன பலே போக்கிரியாய் இருக்கிறயே.
சா: இல்லைங்க சாமி! நீங்கத்தானே பாத்ததெச் சொல்லூண்ணு சொன்னீங்கோ!
மே: உஸ். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.
சா: சரி கேளுங்க சாமி. நாம் பாத்ததையும் கேட்டதையும் சொல்லிப்புட்டு போறேன்.
மே: இந்தக் கேசில் உனக்கு என்ன தெரியும்?.
சா: நான் கடவீதிக்குப் போனே, போனனா? கருப்பன் சுப்பனெ அடிக்கப் போனான். அப்போ கருப்பந் தம்பி "அடிடா சுப்பனை வந்தது வரட்டும். மேசத்திரட்டு சுப்பய்யனுக்கு 100 ரூ கொடுத்தா பேசாத உட்டுடுறான்" எண்ணு சொன்னான். கருப்பந் தம்பி ரங்கன் "அடிடா பார்க்கலாம் மேசத்திரட்டு பொண்டாட்டி பாகிரதிகிட்டே 200 ரூ கொடுத்து உன்னை ஆறு மாசம் தண்டிக்கச் சொல்லி மண்ணு செமக்க வைக்கிறேம் பாரு. மின்ன எத்தனையோ தடவை கொடுத்து இருக்கிறேன்" எண்ணு சொன்னா.
பெரிய காத்தடிச்சது கண்ணுலெ மண்ணை ரப்ராப்லெ இருந்ததுங்கோ. கண்ணெ இருக்கி மூடிக்கிட்டே. அப்பறம் என்ன நடந்ததுண்ணு தெரியாதுங்கோ. இப்ப இரண்டு பேரும் பணத்தை வச்சிகிட்டு எசமாங்க ஊட்டுலே காத்து கிடக்கிறாங்களாம்! அம்புட்டுத்தா எனக்குத் தெரியுஞ் சாமி. இதை எளுதிக்கிங்கோ அப்பறம் என்னமோ பண்ணிக்கிங்கோ.
மே: என்ன உளறுகிறாய்?
சா: நானா உளர்ரே. ஊர்லெ சாமி அல்லாரும் அப்படித்தா பேசிக்கிறாங்கோ. என்ன பண்ணுனாலும் மேசத்திரட்டுக்கு பணம் கொடுத்தா உட்டுடுவாங்கோண்ணு கொஞ்சம் பேறா பேசராங்கோ. மேசத்திரட்டு பொண்டாட்டிகிட்டே பணங் கொடுத்தா ஆரையும் தண்டிக்கப் பண்ணலாமுண்ணு பேசராங்க. அம்புட்டுத்தான் நம்முளுக்குத் தெரியும். நா ஒண்ணும் ஔரலே.
கடைசியாக மேஜிஸ்ட்ரேட்டு ஒன்றையும் எழுதிக் கொள்ளாமல் சாட்சியை அதட்டினதற்கு ஆகவும் மரியாதை இல்லாமல் பேசினதற்கு ஆகவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கேசை ராஜி செய்துவிடும்படி கெஞ்சி சாட்சியை வீட்டிற்கு வரச் சொன்னார்.
(1.9.1935 குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய  சுவையான உரையாடல்)
-விடுதலை,29.5.15

வெள்ளி, 2 அக்டோபர், 2015

சித்திரகுப்தன் -வினா விடை-2


வினா: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?
விடை: நமது மதமும் ஜாதியும்.
வினா: நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள், இதற்கு காரணம் என்ன?
விடை: மதமும், ஜாதியும்
வினா: நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராகிக் கொண்டே வருவதற்குக் காரணமென்ன?
விடை: வினையின் பயன், அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்கு பணமும் கொடுத்துவந்த “பாவமானது” அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜிகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பராக்குகிறார்கள் அதற்கு யார் என்ன செய்யலாம்.
வினா: எந்த விதமான விபச்சாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?
விடை: வெளியார்க்கு தெரியும் படியாகச் செய்த விபச்சாரம் குற்றம் சொல்லத்தகுந்ததாகும்.
வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா: மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.
வினா: உண்மையான கற்பு எது?
விடை: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு
வினா: போலி கற்பு என்றால் எது?
விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ, பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாத வனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.
வினா: மதம் என்றால் என்ன?
விடை: இயற்கையுடன் போராடுவதும் அதைக்கட்டுப் படுத்துவதும் தான் மதம்.
-விடுதலை,4.9.15

விபச்சாரமும் ஜாதியும்



பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர் களுக்குள் ஆரியக்கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் களுக்குள் மாத்திரம் தான் கடவுளால் கிருஷ்டிக்கப்பட்டது என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இவை முறையே ஒன்றுக்கொன்று, தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பதுமிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாக குறிக்கப்பட்டிருக்கின்ற விபரம் யாவரும் அறிந்ததேயாகும்.
இப்படி இருந்தாலும் இப்போது அநேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போமானால் அதற்குக்கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணரலாம்.
அதாவது ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத் தாரும் தங்களில் ஜாதிமுறைதவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும் கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவுகளென்றும் அப்படிப்பட்ட பிரிவுகளுக்கு பஞ்சம ஜாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்ற தென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.
அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய், இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சமஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன. அந்த விபரத்தை தமிழ் அகராதியில் உள்ளபடி மற்றொரு பக்கம் பிரசுரித்திருக் கின்றோம்.
ஆகவே அதில், உதாரணமாக, இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும், என்று சொல்லில் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் என்னப்படுபவர்களே பஞ்சம் ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும் பிராமணன் சத்திரிய குலப்பெண்ணை சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இவர்களில் இந்தப் படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தால் அவர்களுக்கு காணியாளர் என்று பெயர் என்றும், மற்றபடி சிற்றரசு, மந்திரித்துவம் முதலிய பதவிகளில்  இருப்பவர்களாயிருந்தால்  அவர்களுக்கு வேளான் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும், குறிக்கப்பட்டிருப்பதுடன் இவற்றிற்காகாதாம், சுப்ரபோதகம், பிரம்ம புராணம் வைகாநசம், மாதவியம், சாதிவிளக்கம், என்கின்ற நூல்கள் என்றும், குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தவிர மேல்கண்ட பிராமாணஜாதி ஆண், சத்திரிய ஜாதி பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும் தெலுங்கர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவனேவரையும் குறிப்பிடத் தக்கதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும்  சோரத்தால் பிறந்த பிள்ளைகள்  குயவர் என்றும், நாவிதர் என்றும், குறிக்கப்பட்டிருக்கின்றது. அது போலவே பிராமணன். சூக்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை பரசவர், அதாவது செம் படவர் என்றும் சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக்காரர் அதாவது வேடுகர், என்றும், குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிராமணப்பெண்ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடபட்டி ருக்கின்றன.
பிராமண குலப்பெண்களுடன் சண்டாளர் கூடிப்பிறந்த பிள்ளைகள் சருமகாரர். அதாவது சக்கிலிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சத்திரியகுலப் பெண்ணுடன் சண்டாளர் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர், (அதாவது வேணுகானம் செய்பவர்களும்) கனகர் (அதாவது தங்கவேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய்வோர்களும்) ஆவார்கள் என்றும்  கூறப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரி கீழ்மேல் ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில், அயோவகச் சாதிப் பெண் இடம் நிடாதனுக்குப் பிறந்த, பிள்ளைகள் பார்த்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த படியே இப்போது உள்ள சாதிகளையெல்லாம குறிக்கும்படியாகவே இன்றும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.
இதுபோலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி அதாவது அபிதான கோசம் அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர்களாலும் ஆதாரமாய் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகயும் குறிக்கப்பட்டிருக்கின்றதோடு 4 ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல்கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும்,
விபச்சாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டடவர்கள் என்றே கூறப்பட்டிருக் கின்றன. செட்டியார் மார்களையும், ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது.
ஆகவே ஜாதியை கட்டிக்கொண்டு அழுவது இவ் விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.
உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொற்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவை கற்பித்து அதை நம்மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப்பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.
(குடிஅரசு, 1930)

மனிதன் தன் வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே. புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன்கூட இருக்க மாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சி செய்து புகழடைய விரும்புகிறான்... ஆனால், மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின்பற்றுகையில் மிகவும் தவறான முறையைப் பின்பற்றுகிறான்.
மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத் தேடுவதற்கு முயற்சிக்கும் அத்த னையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்துக்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவனுடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.

-விடுதலை-12.9.15

    வெட்கம், புத்தி இல்லையோ?


    குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழி யில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந் தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷ மாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளை களும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப்பிள்ளை களாகவா இருந்திருப்பார்கள்?
    20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா? - தந்தை பெரியார்
    -விடுதலை21.8.15