புதன், 2 டிசம்பர், 2015

விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு


தந்தை பெரியார் சிலையினை தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்தார். ஆந்திர மாநில அமைச்சர்கள் பஸ்புலேட்டி பாலராஜூ, கொண்ட்ரு முரளிமோகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.
விசாகப்பட்டினம், மார்ச் 5- ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தில் பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா 4.3.2012 அன்று எழுச்சிமிகு நிகழ்ச்சி யாய் கோலாகலமாக நடைபெற்றது. தந்தை பெரியாரின் வெண்கலச் சிலையினை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்தார். ஆந்திர மாநில அரசின் பழங்குடியினர் நல அமைச்சரும், நலவாழ்வுக் கல்வி அமைச்சரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தந்தை பெரியார் ஆற்றிய சமுதாயப் பணியினை நினைவு கூர்ந்தனர். பாராட்டிச் சிறப்பித்தனர். ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களும் கொள்கைப் பூர்வமாக, தமது நன்றிப் பெருக்கினைக் காட்டும் வண்ணம் மிகுந்த ஈடுபாட்டுடன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆந்திர மாநில நாத்திக, சமூக நீதி வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
கடற்கரை சாலையில் பெரியார் சிலை
விசாகப்பட்டினத்தின் கடற்கரைச் சாலையின் (இராமகிருஷ்ணா சாலை) முக்கியப் பகுதியில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிட பாரதிய நாஸ்திக சமாஜம் (ஹவாநளைவ ளுடிஉநைவல டிக ஐனேயை) முயற்சி எடுத்து, சமூகத்தின் பல தரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து பெரியார் ஈ.வெ.ராமசாமி  ஆசைய சாதன சங்கம் எனும் பதிவு செய்யப் பட்ட  அமைப்பின் சார்பாக அதன் திறப்பு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் 4.3.2012 அன்று விசாகப்பட்டி னத்திற்கு வருகை தந்தார். விசாகப்பட்டினத்திற்கு மூன்றாம் முறையாக வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதிய நாஸ்திக சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் தலைமையில் கருஞ்சட்டைப் படையினர் திரளாக வருகை தந்து தமிழர் தலைவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பெரியார் சிலை திறப்பு விழா
தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம், சாலையில் பயணிக்கும் பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெகு பொருத்தமாக நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நண்பகல் 12.30 மணிக்கு துவங்கியது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிலை நிறுவிட முயற்சி எடுத்த பாரதிய நாஸ்திக சமாஜத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் தலைமையேற்று வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். டாக்டர் ஜெயகோபால் தலைமையுரை சிலை திறப்பு விழா நிகழ்ச்சியின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் தமது பேச்சில் குறிப்பிட் டதாவது:
எங்களது இயக்கத்தின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது. தந்தை பெரியாருக்கு விசாகப்பட்டினத்தில் சிலை அமைத்திட வேண்டும் என்று எங்களது வெகு நாள் கனவு (விருப்பம்) இன்று நனவானது குறித்து எங்களுக்கெல் லாம் மட்டற்ற மகிழ்ச்சி. நாங்கள் இந்த நிகழ்ச்சி யின்மூலம் புத்துணர்ச்சி பெறுகிறோம். எனது முதல் தலைவர் தந்தை பெரியார்தான்,  அடுத்த தலைவர், வழிகாட்டும் தலைவர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரி யாரின் சிலையினை திறந்து வைப்பது எங் களுக்கெல்லாம் மிகவும் பெருமையளிப்பதாகும். சமுதாயத்தின் அடித்தள மக்களை முன்னேற்றிட அருந்தொண்டு செய் திட்ட தந்தை பெரியாரின் சிலையினை - அவர்தம் பகுத்தறிவுக் கொள்கை யினை பாரெங்கும் பர விட முழு முயற்சி எடுத்து, வெற்றி கண்டு வரும் பெரியாரின் சீடர் கி. வீரமணி அவர்கள் சிலையினைத் திறந்து வைத்துள்ளது மிகவும் பொருத்தமானது.
தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின்போது, பாரதிய நாத்திக சமாஜத்தின் சார்பாக பெரியாரின் புரட்சி எனும் நூலினை ஆந்திர மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு பஸ்புலேட்டி பாலராஜூ வெளியிட்டார்.
பாரதிய நாஸ்திக சமாஜ அமைப்பு முயற்சி எடுத்து பெரியார்  ஈ.வெ.ராமசாமி ஆசைய சாதன சங்க (பெரியார் ஈ.வெ.ராமசாமி லட்சிய சாதனை இயக்கம்) அமைப்பின் சார்பாக தந்தை பெரியாருக்கு சிலை நிறுவப்பட்ட பொழுதிலும், இந்த
ஆந்திர மாநில அரசில் அங்கம் வகிக்கும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு பஸ்புலேட்டி பால ராஜு மற்றும் மக்கள் நல வாழ்வுக் கல்வித்துறையின் அமைச்சர் மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதன் மூலம் ஒட்டு மொத்த ஆந்திர மக்களின் ஆதரவுடன் தந்தை பெரியாருக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளதாக புலப்படுகிறது. இந்த சிலை திறப்பு, நிகழ்ச்சியின் மூலம் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை, சமூகப்பணி மென்மேலும் வலுப்பட, கொள்கைக் குறிப்பாக, அடுத்த தலைமுறையினருக்கு வரலாறாக அமைந்து விட்டது.
தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின்போது, பாரதிய நாத்திக சமாஜத்தின் சார்பாக  மனிதவள மேம்பாட்டு திங்கள் நாள்காட்டியினை ஆந்திர மாநில மக்கள் நலவாழ்வு கல்வி அமைச்சர் மாண்புமிகு கொண்ட்ரு முரளிமோகன் வெளியிட்டார்.
தந்தை பெரியாரின் சிலை நிறுவிட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பினை, ஆதரவினை நல்கினர். விசாகப்பட்டின பெரு நகராட்சி மன்ற பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் - இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாத்திக உணர்வாளர்கள், படித்து பட்டம் பெற்று  பல்வேறு பொறுப்புகளில் உள்ள சமூகநீதிப் பற்றாளர்கள், பொதுமக்கள் அனை வருக்கும் இந்த சிலை திறப்பு விழாவின் பொழுது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள் கிறோம். ஆந்திர மாநிலத்தில் தந்தை பெரியாருக்கு சிலை திறப்பதில் இது ஒரு தொடக்கம். மாநி லத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில், சிற்றூர் களில் தந்தை பெரியாரின் சிலை திறப்பு தொடரும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ள தலைவர்கள், பெருமக்கள், பொதுமக்கள் வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
தந்தை பெரியார் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
பலத்த கரவொலி மற்றும் ஒலிமுழக்கங்களுக் கிடையே கூடிய எழுச்சியான சூழலில், அமைச்சர் பெருமக்கள் சூழ்ந்திட  கம்பீரத் தோற்றத்துடன் நிறுவப்பட்டுள்ள, பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாரின் வெண்கலச் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட சிலைக்கு முதல் மாலையினை தமிழர் தலைவர் அணிவித்தார். தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் மற்றும் பகுத்தறிவாளர் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து தங்களது மரியாதையினைச் செலுத்தினர்.
தமிழர் தலைவர் உரை
சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
விசாகப்பட்டினத்தில் இன்று  (மார்ச் 4) நடைபெற்றுள்ள தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. தந்தை பெரியா ருக்கு சிலை திறப்பு என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல; சடங்கு நிகழ்ச்சியும் அல்ல. தந்தை பெரியாரின் கருத்துகள் பாரெங்கும் பரவுவதன் அடையாளம்தான் இன்றைய சிலை திறப்பு. இந்த சிலை திறப்பு மற்ற சிலைகளைப் போல மூடநம்பிக்கையினைப் பரப்பிட அல்ல; மூட நம்பிக்கையினை முறியடிக்கவே சிலை அமைப்பு- சிலை திறப்பு நடைபெற்றுள்ளது. சிலை பீடத்தின் அடிப்பீடத்தில், யுனெஸ்கோ அமைப்பு தந்தை பெரியாருக்கு வழங்கிய பாராட்டுப் பத்திரத்தின் ஆங்கில, தெலுங்கு மொழி வடிவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. மூடநம்பிக்கையினை முறியடிக்க வந்த தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீசு, என உலக நாடுகள் அமைப்பான யுனெஸ்கோவின் பாராட்டு வரிகள் மிகவும் பொருத்தமாக பொறிக்கப்பட்டுள்ளன.
திராவிடர் இயக்கத்தின் நூறாம் ஆண்டு தொடங்கியுள்ளது. அந்நாளில் ஆந்திர மாநிலத் தின் பெரும் பகுதியினை உள்ளடக்கிய சென்னை இராஜதானியினை ஆண்ட நீதிக்கட்சியின் தலை வர்கள், பிட்டி தியாகராயர், சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர் மற்றும் நீதிக்கட்சி அரசின் பெருமை மிக்க முதல்வராக பனகல் அரசர் என அழைக்கப் படும் இராம இராய நிங்கர் ஆண்ட பெருமையின் நூற்றாண்டு இது. ஆந்திர மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுக் கல்வி அமைச்சர் வருகை தந்துள்ளார். அந்நாளில் மருத்துவப் படிப்பிற்கு அனுமதி பெற்றிட அந்த மாணவர் சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் எனும் நிலைமை இருந்தது.  இதனால் சமூகத்தின் உயர் ஜாதியினர் - குறிப்பாகப் பார்ப்பனர்களே அதிகமாக மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இந்த நிலையினை மாற்றி மருத் துவப் படிப்பில் சேருவதற்கு சமஸ்கிருத மொழித் தேர்ச்சி தேவையில்லை எனும் உத்தரவினை பிறப் பித்த ஆட்சி - நீதிக்கட்சி ஆட்சி. இதனால் சமூ கத்தில் பிற ஜாதியினர், குறிப்பாக கல்வி மறுக்கப் பட்ட அடித்தள வகுப்பினைச் சார்ந்த மாணவர் களும், மருத்துவப்படிப்பில் சேர முடிந்தது. அப்படிப்பட்ட நீதிக்கட்சியின் தலைவராக இருந்து திராவிடர் கழகத்தினை நிறுவினார் தந்தைபெரியார். மனுதர்மம் வலியுறுத்திய நான்கு வர்ண பிரிவினையை அதனால் விளைந்த சமூக ஏற்றத்தாழ்வினை நீக்கப் போராடிப் பாடுபட்டவர் பெரியார். 95 ஆண்டு வரை வாழ்ந்த தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் மக்களைச் சந்தித்து பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வந்தார். கூட்டத்தில் தனது பேச்சிற்குப் பின், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டவர். ஒருநாள் தனது பேச்சில் - நான்கு வர்ண பிரிவினைப்படி, பிராமணர் பிர்மாவின் முகத்திலும், சத்திரியர் பிர்மாவின் தோளிலும், வைசியன் பிர்மாவின் தொடையிலும், சூத்திரன் பிர்மாவின் காலிலும் பிறந்ததாக வருணாசிரமம் கூறுகிறது எனக் குறிப்பிட்டார். அப்பொழுது கூட்டத்தில் இருந்து, இந்த நான்கு வர்ணத்தில் வராத பஞ்சமர் எனப்படும் அடித்தட்டு மக்கள் எப்படிப் பிறந்தனர் என வினா எழுப்பிய பொழுது தந்தை பெரியார் கூறினார். பஞ்சமர்தான் மனிதருக்கு - தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவர்கள் என எதார்த்தமாக, பளிச்சென்று வர்ணபேத மோசடி யினை தோலுரித்துக்காட்டிடும் வகையில் பிரச்சாரம் செய்தவர் பெரியார். பேசிப் பேசி- பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, செய்து - அறிவுப்புரட்சியை நடத்தியவர் தந்தை பெரியார். பிறப்பால் அனைவரும் சமம் எனும் தத்துவ விளக்கத்தினை எளிமையாகப் பிரச்சாரம் செய்து மக்களைப் பக்குவப்படுத்தியவர் தந்தை பெரியார்.
சமுதாயத்தில் கல்வி மறுக்கப்பட்ட மக்களை, கல்வி கற்பிக்கும் சூழ்நிலையினை உருவாக்கி, பதவி களில் உட்கார வைப்பதற்குப் பாடுபட்டவர் தந்தை பெரியார். சமூகநீதி மறுக்கப்பட்டோரை படித்து, பட்டம் பெற வைத்து நீதிமன்றங்களில் அமர வைத்து, உயர்ஜாதி வழக்குரைஞர்களும், மை லார்ட் (ஆல டுடிசன) என உச்சரிக்க வைத்தவர் தந்தை பெரியார். உயர் நீதிமன்றத்தில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதியை அமர வைத்தவர் பெரியார்.  டில்லி உச்சநீதிமன்றத்திலும், முதல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினைச் சார்ந்த நீதிபதியாய் அவர் அமர காரணமாக இருந்தவர் பெரியார்.
கல்வியில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் சட்ட விதியின் முதல் திருத்தத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வர போராட்டம் கண்டவர் தந்தை பெரியார்; களம் கண்டவர் தந்தை பெரியார். சட்ட அமைச்சராக இருந்து காரியம் ஆற்றியவர் அண்ணல் அம்பேத்கர். சமூகநீதிக்குப்பாடுபட்ட தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.
அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளை பெரும்பாலானவர்கள் அறிவர். அந்த அரசமைப்புச்சட்டம் வழிகாட்டும் அடிப்படைக் கடமைகளும் உண்டு. அப்படிப்பட்ட அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான அறிவியல் மனப்பான்மையினை வலியுறுத்தி எதிலும் பகுத் தறிவுக் கண்ணோட்டம், அறிவியல் கண்ணோட்டம் அவசியம் என கருத்துப் பிரச்சாரம் செய்தவர் பெரியார். இன்று திறக்கப்பட்டுள்ள தந்தை பெரி யாரின் வெண்கல வடிவம், வெறும் சிலை அல்ல. அடக்கப்பட்ட மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆழ்ந்த பற்றுதல், நன்றி வெளிப்பாட்டின் அடை யாளம்தான் இந்த சிலை. தந்தை பெரியாரது லட்சி யங்களை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் அணுகுமுறைக்கு அடையாளமாக இந்த சிலை திகழும். தந்தை பெரியாரது சிலையினை நிறுவ முயற்சி எடுத்த பாரதிய நாஸ்திக சமாஜ சங்கப் பெருந் தலைவர் டாக்டர் ஜெயகோபால் மற்றும் உடன் உழைத்த அமைப்பினர், தோழர்கள், உள்ளாட்சி அமைப்பினர் அனைவருக்கும் பாராட்டுதல்கள். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! தழைத்திடுக சுயமரியாதை!! நன்றி!!
அமைச்சர் பஸ்புலேட்டி பால ராஜு உரை
விழாவில் பங்கேற்ற ஆந்திர மாநில அரசின் மலைவாழ் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு பஸ்புலேட்டி பால ராஜு தனது உரையில் குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவில் பெரியாரின் சீடர், தலைவர் கி.வீரமணி அவர்களுடன் கலந்துகொள்ளுவதில் பெரும் மகிழ்ச்சி அடை கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர் பெரியாரைப் பற்றி மேடையில் அமர்ந்தி ருக்கும் பொழுது தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறிய செய்திகளை அறிந்து மிகுந்த வியப்படைந்தேன். குறிப்பாக 1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறினார். கோவில் நுழைவு என்ற நிலையினைவிட மோசமாக, கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் சமூக அடித்தளமக்கள் நடக்கக் கூடாது எனும் இழிவினை எதிர்த்து மனித உரிமைப் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் மகத்தானவர். வைக்கம் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி மத சம்பந்தமான விசயம் என அனுமதி மறுத்த வேளையிலும், இல்லை; இது மனித உரிமைப் போராட்டம் என துணிவாக காங்கிரசு இயக்கத்தின் தலைவராக இருந்தபொழுதே போராட்டம் நடத்திய தந்தை பெரியாரின் வரலாறு- அவரது கொள்கை உறுதி வியப்படைய வைக்கிறது.
மேலும் காங்கிரசு இயக்கத்திலிருந்து போராடி, அவர் அதைவிட்டு வெளியேறியது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வகுப்புரிமைக்காக என அறிய நேர்ந்த பொழுது கொள்கைக்காக, கட்சியை விட்டு வெளி யேறிய பெரியாரது செயல் போற்றுதற்குரியதாகிறது. பெரியாரின் கொள்கை சார்ந்த வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரும் உணர்ந்து கொண்டு, அதன்படி நடந்துகொண்டால் அவர்களது வாழ்வில் உண்மையான உயர்வினை எட்ட முடியும். தந்தை பெரியாரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் நிலையில் ஆவலாக உள்ளேன். இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டது எங்களுக்குப் பெருமை எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர் கொண்ட்ரூ முரளி மோகன் உரை
சிலை திறப்பில் கலந்துகொண்ட ஆந்திர மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன் உரையாற்றுகையில் கூறியதாவது:
தலைவர் கி.வீரமணி அவர்கள் அந்நாளில் ஆந்திரமாநிலம் சென்னை இராஜதானியில் இருந்தபொழுது நீதிக்கட்சி ஆண்டபொழுது மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் எனும் நிலை நீக்கப்பட்டதான செய்தி எங்களுக்கெல்லாம் புதியதாக இருக்கிறது. சமூகத்தின் அடிநிலையில் வாழ்ந்த, வாழுகின்ற மக்களின் மேம்பாட்டிற்கு, சமூக அரசியல் அரங்கில் அவர்கள் உரிய அங்கீகாரம் பெறுவதற்கு உழைத்த தந்தை பெரியாரின் பணி மகத்தானது. சிறிது நேரமே தலைவர் கி.வீரமணி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும், தந்தை பெரியாரைப் பற்றி நிறைய செய்திகளை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இந்த சிலை திறப்பு விழா இருந்தது. வகுப்புவாரி உரிமைக்கு அடித்தளத்தினை அரசமைப்புச்சட்டத்தில் அமைக்க பெரியார் காரணமாக இருந்தார். அவரது கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒடுக்கப் பட்ட மக்கள் மேன்மேலும் உயர்வடைய முடியும். அத்தகைய உணர்வுகளை மக்கள் பெறுவதற்கு தந்தை பெரியாரின் கொள்கை பயன்படும். நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மனநிறைவு, மகிழ்ச்சி அடைகிறேன். என்று குறிப்பிட்டார்.
பல்வேறு அறிஞர்கள் உரை
சிலை அமைக்க பேருதவி புரிந்த மேனாள் மாநகராட்சி உறுப்பினர் வெங்கல் ராவ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஜி.சுமணா, பாரதிய நாஸ்திக சமாஜத்தின் தலைவர் சைனி நரேந்திரா,  பொதுச்செயலாளர் பேராசிரியர் மருத்துவர் பி.சுப்பராவ், ஆந்திர பல்கலைக் கழகப் பேராசிரி யர்கள், கே.பி.சுப்பராவ், பி.டி.சத்யபால், ராஸ்டிரீய தலித் நாயகலு அமைப்பினைச் சார்ந்த பல்தேட்டி பென்ட ராவ், உத்திர ஆந்திர பிற்படுத்தப்பட்ட வகுப்பு நாயகலு அமைப்பினைச் சார்ந்த, கண்ட பாப்பராவ் ஆகியோர் உரையாற்றினர்.
அறிவியல் மாணவர் அமைப்பினைச் சார்ந்த இளைஞர்கள் இசைவடிவத்துடன் பெரியார் பாடலை மேடையில் பாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியினை சிலை அமைப்புக் குழுவின் செயலாளரான பேராசிரியர் மருத்துவர் ஜி.அர்ஜுன் சிறப்பாக ஒருங்கிணைத்து, திறப்பு விழா பெரு மைக்கு சிறப்பு சேர்த்திட்டார்.
சிலையினை ஒட்டி அமைக்கப்பட்ட நடை மேடை அரங்கில், கடும் வெயிலையும் பொருட் படுத்தாமல், ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பொதுமக்கள், நாத்திகத் தோழர்கள், சமூகநீதிப் பற்றுள்ளவர்கள், திரளாகப் பங்கு கொண்டனர். விழா பிற்பகல் 3 மணி அளவில் நிறைவு பெற்றது.



தமிழர் தலைவர், சிலை அமைப்புக்குழுவினருடன் செய்தியாளர் சந்திப்பு
தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவினையொட்டி, விழாக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தெலுங்கு, ஆங்கில செய்தியாளர் பலர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் போது தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் இயக்கம் பற்றிய வரலாற்றினைச் சுருக்கமாக எடுத்துச்சொல்லி, பெரியாருடைய பணி தமிழ் நாட்டில் - இந்திய அளவில் சமூக வாழ்வில் எத்த கைய ஆக்கரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது என்பதை விளக்கிக் கூறினார்.
பல்வேறு கேள்விகளுக்கு தமிழர் தலைவர் பதிலளித்த பின் ஒரு ஆங்கில நாளிதழின் செய்தியாளர், வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு போன்றவற்றால் ஜாதிய உணர்வு கூடுதலாகிக் கொண்டு வருகிறதே ஜாதியை ஒழிப்பதாகக் கூறும் பெரியார் இயக்கத்திற்கு இத்தகைய போக்கு முரணாக உள்ளதே! என வினா எழுப்பினார்.
வகுப்புரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றால் ஜாதிய உணர்வு (caste consciousness) அதிகமாகவில்லை. ஜாதியக் கண்ணோட்டம் (caste awareness) உருவாகி உள்ளது. எந்த ஜாதிய அடிப்படையில் மக்கள் அடக்கப் பட்டார்களோ அந்த ஜாதிய அடிப்படையில் முன்னேற்றம் காண முயல்வதே வகுப்புவாரித் தத்துவமாகும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். உடலில் கிருமியால் வரும் நோயினைத் தடுத்திட, கிருமியையே தடுப்பு மருந்தாகச் செலுத்துவதைப் போல நீங்கள் கருதுவது போல ஜாதிய உணர்வு இருந்த காலத்தில் தீண்டத் தகாதவர் (Untouchables) பார்க்கக்கூடாதவர் (Unseeable) எனும் நிலைகள்  நிலவின. இன்று பார்க்கக் கூடாதவர் என்ற நிலை கிடையாது.  தீண்டத்தகாதவர் எனும் நிலை சட்ட ரீதியில் கிடையாது. ஜாதிய உணர்வு இன்றும் நீடித்து இருந்தால் நீங்களும் நானும் அமர்ந்து இப்படி பேசிட முடியாதே. ஜாதிய உணர்வு என்பது வேறு. ஜாதியக் கண்ணோட்டம் என்பது வேறு. இடஒதுக்கீடு அனைத்து தளத்திலும் முழுமையாகி சமத்துவம் வரும் நிலையில் ஜாதியக் கண்ணோட்டமும் தேவையில்லாமல் போய்விடும்.
தமிழர் தலைவரின் நச் என்ற பதிலுரையைக் கேட்டபின்பு செய்தியாளர் மறுகேள்வி கேட்கும் நிலை எழவில்லை.
பகுத்தறிவாளர் கழகப் பணி

பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பணிகள், தந்தை பெரியார் 1971ஆம் ஆண்டு அதைத் தோற்றுவித்தது, புரவலராக தமிழர் தலைவர் வழிகாட்டி நடத்திடுவது, மய்ய, மாநில அரசு, மற்றும் இதர அலுவலகப் பணியில் உள்ளோர் பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்து பகுத்தறிவுப் பிரச்சாரம், அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் கண்காட்சி என பல தளங்களில் பணியாற்றுவது பற்றி பொதுச்செயலாளர் வீ.குமரேசன் சுருக்கமாக எடுத்துரைத்தார்ஆந்திர மாநிலம் விசாகப்பட்டின கடற்கரையில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா (4.3.2012)


தந்தை பெரியார் சிலையின் அடிப்பாகத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆந்திர மாநில அமைச்சர்கள் மாண்புமிகு பஸ்புலேட்டி பாலராஜு, மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன் ஆகியோர் திறந்து வைத்தனர். தந்தை பெரியார் சிலைக்கு முன் தமிழர் தலைவர் கி.வீரமணி, பாரதிய நாஸ்திக சமாஜத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் மற்றும் தோழர்கள் உள்ளனர். விசாகப்பட்டினம் நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை திறப்புக்கான விளம்பர பதாகைகள்.
ஆந்திர மாநில அமைச்சர்கள் மாண்புமிகு பஸ்புலேட்டி பாலராஜு, மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன் ஆகியோர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அமைச்சர்கள் மாண்புமிகு பஸ்புலேட்டி பாலராஜு, மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன், மேனாள் விசாகப்பட்டின நகராட்சி மன்ற உறுப்பினர் வெங்கல்ராவ் ஆகியோருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்தோரின் ஒரு பகுதி.
தமிழர் தலைவர் அவர்கள்-டாக்டர் ஜெயகோபால், மருத்துவர் பேராசிரியர் அர்ஜுன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஜி.சுமனா, பத்லேட்டி பெண்டராவ் மற்றும் இதர சிலை அமைப்புக் குழுவினருக்கு  நினைவு பரிசினை வழங்கினார்.
அறிவியல் மாணவர் மன்றத்தினர் பெரியார் பற்றிய சமூக நீதிப் பாடலை மேடையில் பாடினர்.
கண்ட்ட பாப்பராவ், பேராசிரியர் சுப்பாராவ், சைனி நரேந்திரா ஆகியோருக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.

-விடுதலை,5.3.12










.

5000 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்ட ஜாதியை ஒரே இரவில் ஒழித்துக் கட்ட முடியாது


விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கி.வீரமணி
- இந்து நாளிதழ் படப்பிடிப்பு
விசாகப்பட்டினம், மார்ச் 6- பெரியார் ராமசாமி அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவை நனவாக்க விரைந்த  தீர்வுகள் எதுவும் இல்லை என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
கடற்கரை சாலையில் ஒய்.எம்.சி.ஏ.க்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் ராமசாமி அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கும் முன்னர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சிலை திறப்பு விழாவில் பழங்குடியினர் நல அமைச்சர் பி.பாலராஜு, மருத்துவக் கல்வி அமைச்சர் கோண்ட்ரூ முரளி, தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன், ஈ.வெ. ராமசாமி ஆசாய சாதனா சங்கத் தலைவர் ஜெயகோபால் மற்றும் உறுப்பினர்கள் காந்தா பாபா ராவ் மற்றும் பி. பென்டா ராவ்  மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் ராமசாமி ஒரு மாபெரும் மனிதநேயர் என்றும், தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தனது செல்வம் அனைத்தையும் பொது நலனுக்காக விட்டுச் சென்றவர் என்றும், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார்.  பலதுறைகளிலும் மக்களிடையே வேறுபாடு பாராட்டல் ஆகியவற்றுக்கு எதிராகவும், விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாகவும் இறுதி வரை போராடியவர் என்றும் வீரமணி கூறினார்.
கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஜாதி அமைப்பு முறையை ஒரே இரவில் அழித்துவிடுவது என்பது இயலாதது என்றும், அது ஒரு நீண்ட கால போராட்டம் என்றும், மக்களின் மனநிலையை மெல்ல மெல்ல மாற்றும் தங்கள் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
பெண்கள் தங்களுக்குரிய அதிகாரங்களையும், உரிமைகளையும் பெறவேண்டும் என்று போராடிய ஒரு மாபரும் பகுத்தறிவாளர் பெரியார் என்று கூறிய வேந்தர் கி.வீரமணி, பெரியார் எந்த அரசுப் பதவி களுக்கும் ஆசைப்பட்டதே இல்லை என்றும் கூறினார்.
நீதிக்கட்சியின் மூலம் சமூக நீதி இயக்கத்தை வழி நடத்திச் சென்றவர் பெரியார் என்று கூறிய வீரமணி அவர்கள், பெரியாரின் தொண்டர்கள் இது பற்றிய விழிப்புணர்வை தங்களின் செயல்பாடுகள் மூலம்  ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.
சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்று பெரியார் ராமசாமி அவர்கள் நம்பினார் என்று திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து அதை வழி நடத்திச் செல்லும் வீரமணி அவர்கள் கூறினார்.
எனவே, தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களும், ஆதரவாளர்களும், பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களும், இந்திய நாத்திக சங்கத்தினரும் பல்வேறுபட்ட நிலைகளில் காட்டப்படும் வேறுபாடு களுக்கு எதிராக சோர்வின்றி போராடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- இவ்வாறு இந்து நாளிதழ் விஜயவாடா பதிப்பில் செய்தி நேற்று வெளியாகியுள்ளது.
-விடுதலை,6.3.12

மதமும் பண்டிகைகளும்


- தந்தை பெரியார்
தலைவரவர்களே! சகோதரர்களே! இன்று மூன்று விஷயங்களைப் பற்றி பேச நான் தலைவரால் கட்டளை இடப்பட்டிருக் கின்றேன். 1. சீலையம்பட்டியில் 69 பேர்கள் மகம்மதியரானது. 2. சரஸ்வதி பூஜை. 3. நெல்லூர் மகாநாடு.
முதலாவது விஷயமாகிய ஆதிதிராவி டர்கள் மதம் மாறி மகம்மதியரான விஷ யத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றேன்.
முதலில் மத சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், எந்த மதமானாலும் அதன் கொள்கைகள் எவ் வளவு மாறுபட்ட அபிப்பிராயமுடையவை யானாலும் அந்த மதமும் கொள்கைகளும் மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கைக்கு அவனுடைய பிரத்தியட்ச அனுபவத் திற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளு டையன என்றால் அதைப் பற்றியோசிக்க நான் எப்போதும் தயாராயிருக்கின்றேன்.
அப்படிக்கின்றி மதமும் அதன் கொள்கை களும் மேல் லோகத்திலோ அல்லது கீழ் லோகத்திலோ அல்லது செத்த பிறகு சூட்சும சரீரத்துடனேயோ அனுப விக்கும் அனுபவத்திற்காகவே ஏற்படுத்தப் பட்டது என்றால் அது எப்படிப்பட்ட மதமானாலும் யார் செய்ததானாலும் அதற்கு என்ன ஆதாரம் சொல்லுவதா னாலும் நான் அதைக் கண நேரம் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டேன்.
இது விஷயத் தில் என்னைப் பற்றி யார் எப்படி நினைத் துக் கொண்டாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்லை- ஏனெனில் இந்தப்படி நினைப்பதற்கு எனக்குப் பூரண சுதந்திரம் இருக்கின்றது என்று நினைக்கின்றேன். அதோடு எந்த லோகத்திலானாலும் இந்த உலக வாழ்க்கை அனுபவத்திற்கு விபரீத மான பலன் இருக்க முடியுமாவென்றுங் கருதுகின்றேன்.
இதை அனுசரித்தே தான் இவ்வாரத்தில் சீலையம்பட்டியில் 69 பேர்கள் மகமதியரான விஷயத்தைப் பற்றி எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க சில வார்த்தைகள் பேசப்போகின்றேன், சகோ தரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் மகம் மதியர்களாகிவிட்டதால் அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ அவர்களுக்கு மோட்ச லோகம் கூப்பிடும் தூரத்திற்கு வந்து விட்டதென்றோ கடவுளோடு கலந்து விட்டார்கள் என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை.
இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்கள் நம்பும்படி சொல்வதும் இல்லை. அன்றியும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும் எண்ணத் திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டென்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை. எந்த மதக்காரனாயிருந் தாலும் தனது செய்கைக்குத் தகுந்த பலன் ஒன்றாகவேதான் இருக்கும்.
இந்துவா யிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும் மகம்மதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும் மதத்தின் காரணமாகக் கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய இரண்டுவித அபிப்பிராயத் திலும் அர்த்தமே இல்லை.
உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூடநம்பிக்கையின் மீதே கட்டப்பட்டி ருகின்றது. ஆகையால் பாவபுண்ணியத் தையும் மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சி யடையவில்லை மற்றென்னவென்று கேட்பீர்களேயானால் இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறின தாக சொல்லப்படும் 69 - ஆதிதிராவி டர்களும் பிறவியின் காரணமாக அவர் களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகக் பிராயத்திலிருந்தும் அறியாமையிலிருந் தும் சிறிது விடுதலை அடைந்தவர் களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.
அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக் கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூறமுடியாது. அவர்களும் மற்றவர்களை சாமி சாமி புத்தி என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டிய தில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டிய தில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல் குடிக்க தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை. வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும் கரடி போல் மயிர் வளர்த்துக் கொண்டும் பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன் றும்படி வாழ வேண்டியதில்லை.
இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மதசம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போகத் தாராள உரிமை உண்டு. வேதம் படிக்க உரிமையுண்டு. இவ்வளவையும் விட, இனி அவர்கள் கல்லையும், செம்பையும், கூடையையும், முறத்தையும், விளக்கு மாற்றையும் கடவுள் என்று வணங்க வேண்டியதில்லை.
மற்றும், அவர்கள் பாடுபட்டுச் சம்பாதித்த சிறிது பணத்தையும் கடவுளுக்கென்றும், கல்லுக் கென்றும் கருமாதிக் கென்றும் செலவு செய்யவேண்டியதில்லை. எனவே, இவர்கள் பொருளா தாரக் கஷ்டத்திலும் அறிவு வளர்ச்சித் தடையிலும் சமுக இழிவிலும் சுயமரியாதைக் குறை விலும், அரசியல் பங்கு குறைவி லிருந்து ஒருவாறு விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும் போது மகிழ்ச்சியடையாமலி ருக்க முடியவில்லை.
ஏனெனில், தீண்டாமை நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலா கிய சகிக்க முடியாத கொடுமை கள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவை எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது. இம்மாதிரி சுமார் ஆயிரம் வருஷங்களாக நினைத்துக் காரியத்தில் நடந்த பெரிய வர்கள் தான் இன்றைய தினம் இந்தி யாவில் 8 கோடி மகமதியர்களாகவும் ஒரு கோடி கிறிஸ்தவர் களாகவும் இருக்கின் றார்கள்.
இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு மகம்மதியர்களும் கிறிஸ்தவர் களும் எங்கிருந்து வந்தார்கள்? இந்த எண்ணிக்கையை பார்த்து பயந்தே நானும் திருவாளர்கள், தங்கபெருமாள், ஈஸ்வரன், மாரியப்பன் முதலியவர்களும் கோயம் புத்தூர் ஜெயிலிலிருக்கும் போதே ஜெயி லில் இருந்து விடுதலையானதும் தீண் டாமையை அடியோடு ஒழித்து விடுவ துடன் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்குப் போனவர்களை எல்லாம் திரும்பவும் இந்துக்களாக்கும் முயற்சியில் வேலை செய்வது என்று முடிவுகட்டிக் கொண்டு வந்தோம்.
நாங்கள் வெளிவந்ததும் திரு.காந்தி கைது செய்யப்பட்டு சிறைசென்று விட்ட தால் இந்த சமயத்தில் ஒத்துழையாமை விட்டுப் போகக் கூடாது என்று சில பார்ப் பனத் தலைவர்கள் கேட்டுக் கொண்ட தால் மறுபடியும் காங்கிரஸ் வேலையை செய்தோம். பிறகு குருகுல நடவடிக் கையும் அது சம்பந்தமாக பார்ப்பனத் தலைவர்கள் மனப்பான்மையும் அவர்களது உள் எண்ணத்தையும் தெரிந்த பிறகு இந்து மதமே அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்துவிட நேர்ந்தது.
அதன் பேரில் இந்து மதத்தை விட்டாலும் பிறகு தங்களுக்கு ஏதாவது ஒரு மதம் இருந்துதான் தீர வேண்டு மென்று கருதும் மக்களுக்குக் கிறிஸ்துவ மதத்தை சிபாரிசு செய்யலாமா? மகம்மதிய மதத்தைச் சிபாரிசு செய்யலாமா? என்று கருதியோசித்து பார்த்தேன்.
கடைசியாக கிறிஸ்தவ மதமும் நமது நாட்டில் நான் பார்த்தவரை அதுவும் மற்றொரு பார்ப்பனிய மதமாகவே காணப்பட்டது கிறிஸ்துவ மதப் பிரச்சாரத்தின் கருத்தெல்லாம் அரசியல் விஷயத்தை அடிப்படையாகவும், அந்தரங்க லட்சியமாகவும் கொண்டு செய்யப்படுகின்றதே ஒழிய மக்கள் சமத்துவத்தையோ ஒற்றுமையையோ கொண்டதாகத் தெரிய வில்லை என்கின்ற முடிவிற்கு வரவேண்டியதாயிற்று.
எப்படியென்றால் இன்றைய தினமும் கிறிஸ்துவ மதத்தில், பறக் கிறிஸ்தவன், சக்கிலிக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், உடையார் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன், பார்ப்பனக் கிறிஸ்தவன் என்கின்ற பாகுபாடுகளும் குடியிருப்பு வசதி வித்தியாசங்களும் சர்ச்சு முதலிய பிரார்த்தனை இடங்கள் வித்தி யாசம் காணப்படுவதைப் பார்ப்பதால் நன்றாய் தெரியவரும். ஆகையால் மகம்மதிய மதத்தைத் தழுவுவதினால்தான் தீண்டாதவர்களுக்கு இதுசமயம் சீக்கிரத்தில் உடனேயே சமுக சமத் துவத்தை அளிக்க முடியும் என்று கருது கிறேன். இந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் எவ்வளவோ பாடுபட்டு பார்த்தேன்.
ஈரோடு தேவஸ்தானத்தில் சகல இந்துக்களுக்கும் கோயில் நுழைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதின் பேரில் சில மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களும், வெள்ளைக்கார அதிகாரிகளும் பார்ப்பன அதிகாரிகளும், நடந்து கொண்ட மாதிரியானது எனக்குத் தீண்டப்படாத மக்களுக்குச் சமத்துவம் கொடுப்பதற்கு அவசரமாய் இதைவிட வேறு வழியில்லை என்கின்ற முடிவு ஏற்படுத்தச் செய்து விட்டது. நமது நாட்டில் ஜாதி வித்தியாசம் ஒழியவும் சமத்துவம் ஏற்படவும் வெள்ளைக் காரர்களும் சிறப்பாக பாதிரிமார்களும் சுலபத்தில் சம்மதிக்கமாட்டார்கள்.
ஆகையால் தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்து உள்ளவர்களுக்கும் ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்து உள்ளவர்களுக்கும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்து உள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை முதலில் தீண்டப்படாதவர்கள் மகமதியாராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது எனது தாழ்மையானதும் கண்ணியமானது மான அபிப்பிராயம். நிற்க, சிலர் மகமதிய மதம் முரட்டுச் சுபாவத்தை உண்டாக் குகின்றது என்று எனக்கு எழுதியிருக் கிறார்கள். அது வாஸ்தவமானால் தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய மகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்று கருதுகிறேன்.
இப்பொழுது நமது தீண்டப்படாதார்கள் தங்கள் தீண்டாமை நிலை நிற்கும்படி தாங்களாகவே அளவுக்கு மீறி ஒடுங் குகிறார்கள். காலில் விழுந்து கும்பிடு கிறார்கள். அடிக்க அடிக்க ஓடுகிறார்கள். கீழ்ப் படியவே  தங்களைக் கடவுள் பிறப் பித்திருப்பதாய் கருதுகிறார்கள்; எவ்வளவு திட்டினாலும் ரோஷப் படுவதே இல்லை; கோபிப்பதேயில்லை; முரட்டு சுபாவம் இல்லாத இந்துமதம் இவர்களை இப்படிச் செய்துவிட்டதால் தங்களைப் பிறர் இழிவு படுத்துவது தங்களுக்குத் தெரிவதில்லை.
ஆதலால், மகம்மதிய மதம் முரட்டு சுபா வத்தை உண்டாக்குவது உண்மையானால் அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்துகொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா? அன்றி யும், மகமதியர்களைப் பற்றி இந்து மதத்தின் சார்பாய் இந்துக்கள் நினைத்துக் கொண்டிருந்ததென்னவென்றால், துருக்கியர் மிலேச் சரென்று மிக்க தாழ்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டிருந் தார்கள்.
அதற்கு ஆதாரமாய் இப்போதும் இந்து சாஸ்திரமும் நிகண்டும் இருக்கிறது. ஆனால், தீண்டப்படாதவர்களைப் போலவே மகம்மதியர்களும் ஒடுங்கி இருந்திருப்பார்களானால் இந்தியாவில் இந்து தீண் டப்படாதார் 6 கோடியும், மகம் மதியர் தீண்டப்படாதார் 8 கோடி யும், என்று சொல்ல வேண்டிய தாய் இருந்திருக்கும். இப்போது அந்த நிலை மாறியிருப்பதற்கு மகிம்மதியர்களின் முரட்டு சுபாவம் என்று சொல்லக் கூடாதா னாலும், ஒடுங்க முடியாத தாழ்மையையும் இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம் என்றாவது சொல்லியாக வேண்டும்.
அந்த சுபாவம் இப்போதுள்ள தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வந்துவிட்டால் கூடப் போது மானது என்றும், மதம் மாற வேண்டிய அவசிய மில்லை என் றும் சொல்லலாம். ஆனால் அவர்கள் இந்துக்களாக இருக் கும் வரை சுலபத்தில் அவர் களுக்கு அந்தச் சுபாவம் வராது என்பதோடு மேல் வகுப்பார்கள் என்பவர்கள் சுலபத்தில் வர விடமாட் டார்கள் என்றே சொல்லுவேன்.
ஆகையால் இந்து சமுகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்று மையும் ஏற்படும் வரை தீண்டப் படாதவர்கள் கும்பல் கும்பலாய் மகம்மதியர் ஆவதை தவிர வேறு மார்க்கமில்லையாதலால் நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர் களாய் இருக்கிறோம் தவிரவும், மதத்தினிடத் திலோ, இந்து சமுகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால் அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கிருக்கும் கொடு மையையும் இழிவையும் நீக்க முன் வரட்டும்: அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றேன். மற்றபடி வீண் சோம்பேறி ஞானம் பேசிக் கொண்டிருப்பதனால், இனி யாதொரு நன்மையும் அடைய முடியாது.
அந்த காலம் மலையேறிவிட்டது. ஆதலால் உண்மை நாடுவோர் சங்கத்தின் இன்றைய கூட்ட மானது சீலையம்பட்டியில் இந்துக்களில் உயர்ந்த வகுப்பார் என்பவர்களின் கொடுமையைச் சகிக்க மாட்டாமல், மகம்மதிய மதத்தை தழுவினதின் மூலம் தங்கள் இழிவிலிருந்து விலகிய 69 ஆதி திராவிடர்களை மனமாரப் பாராட்டுகின்றது என்கின்ற தீர்மா னத்தை நான் பிரேரேபிக்கின்றேன்
மத்தியில் ஒருவர் மகம்மதிய மதத்தில் உள்ள கோஷா முறையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று ஒருசீட்டு எழுதி அனுப்பினார்கள். அதற்கு திரு.ஈ.வெ.ராமசாமி தான் பதில் அளிப்பதாக முன் வந்து பேசியதாவது:- கோஷா முறையை தான் ஒப்புக் கொள்ளுவதில்லை. சில படித்த மகம்மதிய கனவான்கள் கோஷா முறை குரானில் இல்லை என்று சொன்னார்கள் என்றும், தான் இங்கு குரானைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவரவில்லை என்றும் இந்த நாட்டில் கோஷா இல்லாத மகம்மதிய பெண்கள் அநேகர் இருக்கிறார்கள் என்றும், மலையாளத்தில் 100-க்கு 75 மகம்மதிய பெண்களுக்குக் கோஷா இல்லை என்றும், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி,
ராமநாதபுரம் இந்த பக்கங்களில் காடுகளில் வேலை செய்வதைப் பார்த்ததாகவும் எனக்குத் தெரிந்தவரை கோஷா ஒரு அந்தஸ்தாக கருதப்படுகின்றதே தவிர முழுவதும் மதக் கட்டளையாகக் கருதுவதாகச் சொல்ல முடியாது என்றும், இப்பொழுது அந்த மதத்தில் சேர்ந்த பெண்கள் கோஷாவாயில்லாவிட்டால் தள்ளிவிட மாட்டார்கள் என்றும், விதவா விவாகம், கல்யாணரத்து, பெண்கள் படிப்பு, சொத் துரிமை ஆகியவை பெண்களுக்கு அந்த மதத்தில் இருப்பதால் கோஷா ஒரு சமயம் இருந்தாலும் அந்த கஷ்டத்தைவிட பல பங்கு மேல்பட்ட அதிக லாபமிருக் கின்றது. அன்றியும், துருக்கியைப் போலும் ஆப்கானிஸ் தானத்தைப் போலும் இங்கும் சமீபத்தில் சீர்திருத்தம் ஏற்படலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது என்று சொன்னார்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 20.10.1929
(தொடரும்)
-விடுதலை,7.10.12
சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்த மற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதை களின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவா லேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக் கையில், அவள் பிரம்மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.
அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது- மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகின்றது அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைபட்டபோது, வெளியான இந்திரி யத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத் திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மாவுக்குச் சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள், எனவே சரஸ் வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக் கையும் கூடி பார்ப்பனப் புராணப்படி மொத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமான தாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதார மானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடு முறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங் களையும் வைத்து பூஜை செய்கிறார்கள்.
இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், தராசு,படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந் திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களை யும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் வாத் தியக்கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவரும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள்.
இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும் படிகளும் போய் பூஜை ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும் போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல் லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரச னுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜைகள் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர் களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரி களில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக் குப் பயந்து பொய்க்கணக்கு எழுதா மலோ, தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங் களிடத்தில் வெகு பக்தியாய் அவை களைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவை போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக் கிறார்கள்.
அதுபோலவே புஸ்தகங் களையும் பென் சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூஜை செய்கின்றார்களே அல் லாமல் காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடு கின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள் ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித் திருக்கின்றார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத் திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்த மில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க்கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 20.10.1929
(தொடரும்)


வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என் கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும், ஒழுக்கத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மை யிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வ மிருக்குமானால் பூஜை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்வி வான்களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகி யவை உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபார மற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள், அரசாட்சியுடனும் தொழி லாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின் றது பாருங்கள்!
ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல்வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜு ஆகிய இவை எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப்பாருங்கள். இவை எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவை களின் மூலம் செல வாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர் களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
புரட்டாசி சனிக்கிழமை
இனி அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக் கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போறாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன். புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு செம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப்பூவையும் அந்த செம்புக்கு சுத்திக் கொண்டு வெங் கிடாசலபதி கோவிந்தா என்றும் நாராயணா கோவிந்தா என்றும் கூப் பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பல னுண்டா? என்றுதான் கேட்கின்றேன்.
மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டு பிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ் வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியா பாரத்திலோ வேறு வரும் படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக் கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக் கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக்குறைக்குத் தெருவில் கூட்டமாய் கோவிந்தா கோவிந்தா- கோவிந்தா! என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைகடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்தமலைச் சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டுபோன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும் ஆண் களும் பெண்களும் நெருக்கடியில் இடிபடு வதும் பிடிபடுவதும் வெந்ததும் வேகாதது மான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேகவியாதிக்காரர் களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டை யிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்வதும். மலைக் காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூஜை பிராமண சமார்த்தனை செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக் களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத் திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.
திருப்பதிக்குப் போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க் குணங்களையோ கெட்ட செய்கை களையோ விட்டுவிட்டதாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா? என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருஷத் திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவா கின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்கு போட்டார்களா என்று கேட்கின்றேன்.

தீபாவளி
இனி அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா? என்று கேட் கின்றேன் தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழி வானதும், காட்டுமிராண்டித்தனமானது மாகும், அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப்பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவ தாரத்தில் கொன்றாராம். அந்தத் தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாம்.
சகோதரி சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ மனிதத் தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள்! விஷ்ணு என்னும் கடவுள் பூமியை புணருவது என்றால் என்ன என்றாவது அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? வருணன் குடை என்றால் என்ன? என்ப தாவது, அப்படி ஒன்று இருக்க முடியுமா என்றாவது,  இவை உண்மையா என்றாவது கருதிப் பாருங்கள்! இப்படி பொய்யானதும் அர்த்தமற்றதுமான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு ரூபா நஷ்டம்? எவ்வளவு கடன்? எவ்வளவு மனஸ்தாபம்? எவ் வளவு பிரயாணச் செலவு? என்பவை களை ஒரு சிறிது கூட நமது மக்கள் கவனிப்பதில்லையே! அப் பண்டிகையை உத்தேசித்து ஒவ்வொருவரும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணி வாங்க ஆசைப்படுகிறான்; தன்னிடம் ரூபாய் இல்லா விட்டாலும் கடன் வாங்கு கின்றான்.
கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டு விடுகின்றன. இதுதவிர மாமனார் வீட்டு செலவு எவ்வளவு? தவிர சுத்த முட்டாள்தனமான பட்டாசு கொளுத்துவது எவ்வளவு? மற்றும், இதனால் பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்பு பிடித்து உயிர் போதலும், பட்டாசு சுடுவதாலும் செய்வதாலும் மருந்து வெடித்து உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமையாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது? இவ்வளவும் அல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடு வதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு, சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு, மானம் கெடுவது எவ்வளவு? மேலும் இதற்காக இனாம் இனாம் என்று எத்தனைப் பாமர மக்கள் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், செலவாகின்றது என்று கணக்குப்பாருங்கள். இவை களை எல்லாம் எந்த இந்திய பொரு ளாதார தேசிய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா? என்று கேட்கின் றேன்.
துலாஸ்தானம் தவிரவும் இந்து மதத்திலேயே அய்ப்பசி துலாஸ்தான மென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் கஷ்டப் படுவதும் இதற்காக ஊரைவிட்டு விட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும். ஒன்று இரண்டு தண்ணீர் இழுத்து கொண்டு போகப் படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர் களுக்கு அரிசிப் பருப்பு பணம் காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவிரிப்புராணம் படிக்க கேட்பதும் அதற்காக அந்த பொய்யையும் கேட்டுவிட்டு பார்ப்பானுக்குச் சீலை, வேஷ்டி, சாமான், பணம் கொடுத்து காலில் விழுவதுமான காரியம் செய் கின்றோம். காவேரியைப் பெண் தெய்வ மென்பதும் அதில் ஆண்கள் குளிப்பது மான காரியம் ஆபாசமல்லவா?
கார்த்திகை தீபம்
இனி அதற்கு அடுத்த மாதமாகிய கார்த்திகை மாதம் வந்தால் கார்த்திகைப் பண்டிகை என்று வீணாக ஆயிரக்கணக் கான தீபம் கொளுத்துவதின் மூலம் எண்ணெயையும், நெய்யையும் பாழாக்கி புகைப்பதும், மலைகளின் பேரில் கட்டை களையும் விறகுகளையும் போராய் குவித்து அதில் நெய்யையும் வெண் ணெயையும் டின்னு டின்னாய், குடம் குடமாய் கொட்டி கொளுத்துவதும், இந்த வேடிக்கை பார்க்க திருவண்ணாமலை, திருச்செங்கோடு முதலிய மலைக்கோயில் உள்ள ஊர்களுக்கு ஜனங்கள் லட்ச லட்சமாய் பணம் செலவுசெய்து ரயில் சார்ஜ் கொடுத்து நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்பட்டு கண்ட ஆகாரத்தைப் புசித்து வயிற்றைக் கெடுத்துக் கொண்டு ஊர் வந்து சேருவதும் விளக்கு நெருப்பில் பல பெண் குழந்தைகள் துணியில் நெருப்புப் பிடித்து உடல் வெந்து சாவதும், ஆகிய காரியங்கள் இல்லாமல் அவைகளால் வேறு ஏதாவது பலன் உண்டா என்று கேட்கின்றேன். முன் போலவே இந்தப் பண்டிகை மூலமும் வருஷம் ஒன்றுக்கு இந்த நாட்டில் எவ்வளவு ரூபாய்கள் செலவாகிறது என்றும் எவ்வளவு நேரமும் அதிலும் செலவாகின்றது என்றும் எந்த இந்திய தேசிய பொருளாதார நிபுணர் களாவது கணக்கு பார்த்தார்களா? என்று கேட்கின்றேன்.
இருக்கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத் திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வ முள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.
இவை களை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங்களை யெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடிமையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.
- குடிஅரசு - சொற்பொழிவு - 20-10-1929
(தொடரும்)
வைகுண்ட ஏகாதசி பூசம்
இனி அதற்கு அடுத்த மார்கழி மாதம் வந்தால் வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணம் செலவு செய்து கொண்டு போவதும் தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் தூக்கிக் கொண்டு பழனி முதலிய மலைகளுக்கு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்து சமைத்த பாம்பும் மீனும் கோழியும் உயிர் பெற்றுவிட்டன என்பதும், மண்ணும் சர்க்கரையாகி விட்டது என்பதும், வெட் டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று எழுந்துவிட்டதென்பதும், இன்னும் இதுபோல பல பொய்களை வெட்கமில் லாமல் சொல்வதும், அழுக்குக் குளங் களில் குளித்து அழுக்குத் தண்ணீரை சாப்பிட பஞ்சாமிர்தம் என்னும் ஒரு அசிங்கமான வஸ்துவை கண்டபடி சாப் பிட்டு வயிற்றுப் போக்கெடுத்து காலரா ஏற்பட்டு திரும்பிப் போகும் போது வழியில் சாவதும் சிலர் அந்த காலராவைத் தங்கள் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய் பரவவிட்டு அங்குள்ளவர்களைக் கொல் லுவதும் அவர்கள் நதி வாய்க்கால் ஓரங்களில் குடி இருந்தால் அந்த காலரா அசிங்கம் வாய்க்கால்களில் கலந்து கரை ஓரங்களில் இருக்கும் ஊர்களிலெல்லாம் பரவி மக்கள் நூற்றுக்கணக்காக சாவது மான காரியங்கள் வருஷந்தோறும் நடை பெறுகின்றன. சாதாரணமாக சீரங்கம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திலும் பழனி தைப்பூச உற்சவத்திலுமே ஏற்பட்ட சுகா தாரக் கெடுதியால் ஒவ்வொரு வருஷமும் முதல் முதல் அங்கு காலரா உற்பத்தியாகி பிறகு இரண்டு மூன்று மாதம் தென்னா டெல்லாம் பரவி மாதம் 1க்கு இரண்டு, மூன்று ஆயிரம் பேருக்குக் குறைவில் லாமல் கொள்ளை கொண்டு போகின் றது. இதன் உண்மையை ஒருவரும் அறியாமல் பேதியாயி மாரியாயி ஓங் காளியாயி ஊருக்கு ஒருகுடம் எண் ணெய் கொண்டு வந்து ஆளுக்கு அரை கரண்டி கொடுத்துவிட்டாள் என்று சொல்லி ஊரிலுள்ள மக்களில் சில பாகம் செத்து காலரா தானாக ஒடுங்கியபின் ஓங்காளியின் பொங்கலும் காளி பூஜையும் செய்து பேதியை நிறுத்திவிட்டதாக வெட் கமில்லாமல் பேசிக் கொள்வதும் அன்றியும்,
கிராம தேவதை
கிராமங்களிலெல்லாம் மார்கழி, தை மாதங்களிலேயே மாரியம்மன் பண்டிகை கொண்டாடி வெந்தும் வேகாத பொங் கலும், பச்சைமாவும், சரியாய் சுத்தம் செய்யாத வேகாத மாமிசமும் கண்டபடி புசிப்பதால் அஜீரணம் காலரா முதலிய வியாதிகள் உண்டாவதையும் பார்க்கின் றோம். பொதுவாகவே நமது நாட்டில் கூட்டம் சேர்ந்தாலே அசுத்தம் உண் டாக்கி வியாதிகள் ஏற்படுவதை அனு பவத்தில் பார்த்து வருகின்றோம்.
சிவராத்திரி
இனி அதற்கடுத்த மாசி மாதம் வந் தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானியவகை களையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தை யும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இப்படியே ஒவ் வொரு மாதமும் உற்சவமும், பண்டிகை களும், விரதங்களும், சடங்குகளும் ஏற் பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின் றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழைத் தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழி லில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்ப லாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டு பிள்ளை குழந்தைகளுடன் வெளிநாட்டிற் குக் கூலியாக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத் தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங்களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக்கும் உதவாததான நமக்கு இழிவையும் அவ மானத்தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக் குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின் றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்தி இல் லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.
இது யார் சூழ்ச்சி?
எனவே, இப்படிக்கெல்லாம் சொல் வதைப்பார்த்தால் இந்த பண்டிகை களையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில் லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்க லாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்ற படியோ, என்றால் பெரும்பாலும் அவர் களைச் சுயநலக்காரர்களும், தந்திரக் காரர்களும் அதிகார ஆசை உடையவர் களுமாயிருக்க வேண்டுமென்றே சொல் வேன்.  என்புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவை எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர் களும் ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திர மென்பதே எனது அபிப்பிராயம். உலகத் தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறி யாமைக்கும் கொடுமைக்கும் புரோகிதர் களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள். சாதாரண மாக உலக சரித்திரத்தில் கொடுமைக் காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்த வர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக் காரர்களும் மூர்க்கர்களுமாயிருந்தவர் களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக் கிறார்கள். இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்க வேண்டிய அவசியமுடையவர்கள்.
அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினா லும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடை யவனா யிருப்பானானால் புரோகிதர் களுக்கு ஏமாற மாட்டான். செல்வமிருக் குமானால் அரசனுக்குப் பயப்பட மாட் டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத் திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வ முள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங்களை யெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப் பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடி மையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.
- குடிஅரசு-சொற்பொழிவு-20.10.1929
(நிறைவு)
-விடுதலை,7-11.10.12

நம் இயக்க முதற்கொள்கையும், முடிவான கொள்கையும் சாதி ஒழிப்பே! - தந்தை பெரியார்


இன்றையத் தினம் இந்த ஊரிலே திராவிடர் கழகக் கட்டடம் கட்டப் பட்டதைத் திறப்பதன் காரணமாக இக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.  இக்கட்ட டத்தைக் கட்டுவதற்கு சுமார் 10, 12 வருஷ மாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு இப் போது கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.  இக்கட்டடத்திற்கு சுமார் ரூ 2000க்கு மேல் செலவாகி இருக்கிறது.  நமக்கும் பங்கு இருக்கட்டுமே, என்று ஒரு சிறு தொகையை நானும் கொடுத்திருக் கின்றேன். நம் கழகத்திற்கு இது போன்று 5000, 10,000 50,000 பெறும்படியான கட்டடங்கள் பலவும், ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை உள்ள கட்டடங்கள் சிலவும் இருக்கின்றன. இவற்றில் பல வாடகைக்கு விடப்பட்டு இருக்கின்றன. சிலவற்றில் கழகக் காரியங்கள், படிப் பகங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இவ்வளவு பெருகுவ தற்குக் காரணம் இது சர்வாதிகாரக் கழகமானதால் முடிந்தது; ஜனநாயகக் கழகமாக இருந்தால் ஆளுக்கு ஆள் பங்கு போட்டுக் கொண்டு போய் இருப்பார்கள். நம் இயக்கமானது, இந்நாட்டில் 100க்கு 99 மக்கள் நம்பிக் கடைபிடித்துக் கொண்டிருக்கும் காரியங் களுக்கு எதிராகக் கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம், தருமம் ஆகியன இல்லை என்று, 40 ஆண்டு காலமாகச்  சொல்லிக் கொண்டு வருவதாகும். இப்படிப் பிரசாரம் செய்து வருகின்ற இதன் தலைவர்கள் இதுவரை கொல்லப் படாமல் இருப்பது அதிசயமேயாகும். நமக்குத் தெரிய நம் கண்முன் நடந்ததைச் சொல்கிறேன். இந்த ஆட்சி மத சம்பந்தமற்றதாக இருக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை சொன்னதற்காகவே காந்தி கொல்லப்பட்டார். பொதுவாக சீர்திருத்தக் காரியம் செய்ய வந்த அனைவரும் கொலை செய்யப்பட்டே வந்திருக்கின் றனர்.
புராண காலம் தொட்டு, சரித்திர காலம் தொட்டு, இன்றும் கூட சீர் திருத்தவாதிகள் கொல்லப்பட்டே வந்திருக்கின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டில் புத்தரும், சமணரும் அறிவுப் பிரச்சாரம் செய்து, மக்களை அறிவுவாதிகளாக்கப் பாடுபட்டனர் மக்கள் தங்கள் அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். அவர் சொன்னார், இவர் சொன்னார், மிக நீண்டகாலமாக இருந்து வருகின்றது என்பதற்காக, எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்துச் சரியென்று பட்டால் அதன் பின் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். இதன் காரண மாகவே அவர்கள் பார்ப்பனரால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்றனர், கழுவேற் றப்பட்டு இருக்கின்றனர். இன்றைக்கும் கூட மதுரை, காஞ்சீபுரம், போன்ற பெரிய கோயில்களில் சமணர்களைக் கழுவேற்றி யதைத் திருவிழாக்களாகக் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில் மட்டும் தான் சீர்திருத்தவாதிகளுக்கு  இந்த நிலை என்பது கிடையாது.
பெரும் அறிவுள்ள நாடான அமெரிக்க நாட்டில், அய்ந்து கோடி மக்களின் ஓட்டு களைப் பெற்று ஜனாதிபதியான கென்னடி- சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று பாடுபட்டதற்காக சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாம் ஒருவர் தான்- நம் இயக்கம் ஒன்று தான்- சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு 40 ஆண்டு காலம் எந்த ஒரு சிறு பலாத்காரமும் இன்றி வளர்ந்து கொண்டு வருகின்றது என்றாலும், இன்னமும் நாம் செய்ய வேண்டிய காரி யங்கள் நிறைய இருக்கின்றன. நாம் முதன் முதல் பார்ப்பன வெறுப்பை மக்களிடையே ஏற்படுத்தினோம். நம் இயக்கப் பிரசாரத் திற்குப் பிறகு சகலமும் பார்ப்பன ஆதிக்கத் திலிருந்து போய் மிகக் குறைந்து போய் விட்டதோடு, சமுதாயத்தில் அவர்களுக் கிருந்த பெரும் அந்தஸ்து போனதோடு, இன்று பார்ப்பான் இந்நாட்டை விட்டுத் தானே போனால் போதும் என்றாகி விட்டது.  இன்று சமுதாயத்தில் பார்ப்பான் தனியாக நின்று, எதிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படி எல்லாத் துறை களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கமானது இன்று ஒழிக்கப்பட்டு விட்டது.
சரித்திரம் தோன்றிய காலம் முதல், அரசாங்கம் தோன்றிய காலம் முதல், சூத்திரன், பார்ப்பானுக்குத் தொண்டு செய்ய வேண்டியது; படிக்கக்கூடாது, பணம் சேர்க்கக் கூடாது, வீடுகட்டக் கூடாது சாஸ்திரத்தைக் காதால் கூட கேட்கக் கூடாது என்றிருந்தது. இது நேற்று வரை- இந்த ஆட்சி வருகிறவரை இருந்து வந்த ஆட்சி முறையாக இருந்தது. இவர்கள் ஆட்சி ஏற்பட்ட பின்தான் அது அடியோடு மாறிற்று.
நம்முடைய இயக்கத்தின் முதல் கொள்கையும், முடிவான கொள்கையும், ஜாதி ஒழிய வேண்டும் என்பதேயாகும்.  அதற்காக எந்தப் பாதகமான செயலையும் செய்யலாம்; கொலை கூடச் செய்யலாம்; எப்படி என்றால் பார்ப்பான் எப்படித் தன் தருமத்தைக் காப்பாற்றிக் கொள்ள, எந்த அதருமத்தையும் செய்யலாம் என்கின் றானோ, அதுபோல நம்முடைய இழிவை கீழ் சாதித்தன்மையை, மாற்றிக் கொள்ள நாம் எந்த அதருமத்தையும் செய்வது தவறு கிடையாது.
நேற்று, பத்திரிகையில் பார்த்தேன்; பஞ்சாலையைத் திறக்க வேண்டும் என்ப தற்காக நூற்றுக்கணக்கான பேர்கள் ரயி லைக் கவிழ்க்கச் சென்று கைது செய்யப் பட்டு இருக்கின்றனர். நாளைக்கு  இவர் களை விடுதலை செய்து விடுவார்கள். ஆந்திராவில் மொழி வழி பிரிய வேண்டும் என்பதற்காகப் பல அரசாங்க அலுவலகங் களுக்குத் தீயிட்டுக் கொளுத்தி இருக்கின் றனர், பல பஸ்களுக்குத் தீவைத்து இருக் கின்றனர்.  சாதாரணக் காரியங்களுக்கு இப்படிக் கிளர்ச்சிகள் செய்யும் போது, நாம் நம் இழிவை, மானமற்றத் தன்மையைப் போக்கிக் கொள்ள கிளர்ச்சி செய்வது, பலாத்காரத்தில் ஈடுபடுவது பெரிய தவறு ஒன்றுமில்லை. அவை எல்லாவற்றையும் விட மனிதனின் மானம் மிக உயர்ந்தது; அதற்காக உயிரைக்கூடக் கொடுப்பது தவறாகாது.
இந்த நாட்டில் மனிதன் தாழ்ந்தவனாக, சூத்திரனாக, பார்ப்பானுக்கு எதனால் இருக்கிறான் என்றால், கடவுளால், மதத்தால் தான். மத ஆதாரங்களைப் பார்த்தால் கடவுள் தான் சூத்திரனை உண்டாக்கி இருக்கிறான், தீண்டத்தகாதவனை உண் டாக்கி இருக்கிறான், பார்ப்பானை உண் டாக்கி இருக்கின்றான். அதோடு மட்டுமல்ல. பின்பற்றுகின்ற மதப்படியும் நீ பறையன், சூத்திரன், பார்ப்பானாக்கி இருக்கின்றான்.  கிறிஸ்துவன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது, நீ வணங்குகின்ற கடவுளை வணங்குவது கிடையாது. துலுக்கன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது, நீ வணங்கும் கடவுளை வணங்குவது கிடை யாது.  ஆனதால், அவனிடம் பறையன். சூத்திரன், பார்ப்பான், இல்லை. இந்து மதத்தைப் பின்பற்றுவதால் தான் இந்துக் கடவுள்களை வழிபடுவதால் தான் நீ சூத்திரனாகின்றாய். அவற்றை விட்டுவிட்டு என்று நீ வெளியேறுகின்றாயோ, அன்று தான் மனிதனாக முடியும்.
மதிப்பிற்குரிய கணேசன் அவர்கள் சாதி ஒழிய சில வழிகளைச் சொன்னார். அவர் சொன்ன அதுமட்டும் போதாது, அது சாதியை ஒழிக்காது. வேண்டுமானால், சமுதாயத்தை ஒன்றாக்கலாம்; முதலியார், ரெட்டியார், கவுண்டர், அகமுடையார், கள்ளர் என்பதில் கலப்பு மணம் செய்து கொள்வதால் நம் சூத்திரத்தன்மை நீங்கிவிடாது. நாம் முதலியாரை, செட்டியாரைப் பார்த்தால் குளிப்பது கிடையாது. அவர்கள் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடாமல் இருப்பது கிடையாது. அந்தஸ்தில்  பேதம் பாராட்டப் படுவது கிடையாது. சமமாகவே பாவித்துப் பழகி வருகின்றனர்.
சிலர் சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டு சாதி ஒழிய வேண்டும் என்றால், எப்படி ஒழியும்? இந்தக் கோயில்களைக் கட்டியதே சாதிகளைக் காப்பாற்ற வேண் டும்  என்பதற்காகத் தான். சட்டத்திலே மாறவேண்டும். தீண்டாமை கிடையாது; கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம் யார் வேண்டுமானாலும் சாமி சிலையைத் தொடலாம்; பூசை செய்யலாம் என்றாக வேண்டும். அப்போது தான் சாதி ஒழியும்- தீண்டாமை ஒழியும்.
நாம் பல ஆண்டுகாலம் மக்களிடையே இருக்கிற இழிவு மானமற்றத் தன்மை ஆகியவற்றை எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்து பார்த்தாகி விட்டது. இன்னமும் மனிதன் மாறவில்லை. நம் பிரசாரத்திற்கு இருக்கிற விளம்பரத்தை விட சாதியைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற பிரசாரத்திற்கு விளம்பரமும், பணக்காரர், பத்திரிகைக்காரர் ஆதரவும் இருப்பதால், நம் பிரசாரம் பரவ முடியா மல்- மக்களிடையே சொல்ல முடியாமல் இருக்கின்றது.
இனிக் காரியத்தில் இறங்க வேண்டும்; கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். அப் போது தான் நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடியும். அதற்கு நம் மக்கள் தயாராக இருக்க வேண்டும். நம்மைத் தவிர இதை எடுத்துச் சொல்லவோ, இதற்காக கிளர்ச்சியில் ஈடுபடவோ, வேறு எவருமே கிடையாது. நம் இழிவைப் பற்றிக் கவலை காங்கிரசுக்கு இல்லை; ஜனசங்கத்துக்கு இல்லை; சுதந்திராவுக்கு இல்லை; இங் கிருக்கிற கம்யூனிஸ்ட்டுக்கும் இல்லை. நம் இயக்கம் ஒன்றுதான் இதற்காக உயிருக்குத் துணிந்து, எதிர்ப்புகளுக்கிடையே தொண் டாற்றிக் கொண்டு வருகின்றது. 27.5.1969 அன்று ஒரத்தநாடு வட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு.
(விடுதலை, 18.6.1969)
(விடுதலை, 15.11.2015)

செவ்வாய், 1 டிசம்பர், 2015

தமிழர்களும் தீபாவளியும்

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலை-யென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.
சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்கு காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.
அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம்.
மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்குவதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்-பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்.
அந்த சமயத்தில் அந்த பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசூரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.
விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்.
நரகாசூரன் விஷ்ணுவைத் தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?
சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?
கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசூரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?
அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?
அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்-களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்-களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்களாக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லு-வார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.
ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களுக்குச் சுரணை இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்-களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.
இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும், மனவேதனையும் படுவது உண்மையானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?
(விடுதலை)
(குடிஅரசு - கட்டுரை மறுவெளியீடு - 31.10.1937)
-உண்மை,1-15.15

சைவரும் - வைணவரும்!-சித்திரபுத்திரன்


வைணவதாசன்: என்ன தேசிகர்வாள்! உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல்? விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?
சைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது? ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந் தாலும் மோட்சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை?
வைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.
சைவர்: என்ன சந்தேகம்?
வைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே! மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே!
அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்!
-சித்திரபுத்திரன் 

எலி ஒழிப்பிலும் மதம்!
நிருபர்: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள் அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்துக்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?
நிருபர்: ஆம்; பம்பாயில் தான்.
பிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?
நிருபர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.
பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?
நிருபர்: ஆமாம்; எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது ; இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.
பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன; இவர்கள் இப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதினால்தான் எந்தப் பிரச்சினைகளையும் வெல்லமுடியவில்லை.
- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் இந்திராகாந்தி, அளித்த பேட்டி, 26.2.1977 இதழிலிருந்து
-விடுதலை,13.11.15