புதன், 2 டிசம்பர், 2015

விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு


தந்தை பெரியார் சிலையினை தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்தார். ஆந்திர மாநில அமைச்சர்கள் பஸ்புலேட்டி பாலராஜூ, கொண்ட்ரு முரளிமோகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.
விசாகப்பட்டினம், மார்ச் 5- ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தில் பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா 4.3.2012 அன்று எழுச்சிமிகு நிகழ்ச்சி யாய் கோலாகலமாக நடைபெற்றது. தந்தை பெரியாரின் வெண்கலச் சிலையினை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்தார். ஆந்திர மாநில அரசின் பழங்குடியினர் நல அமைச்சரும், நலவாழ்வுக் கல்வி அமைச்சரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தந்தை பெரியார் ஆற்றிய சமுதாயப் பணியினை நினைவு கூர்ந்தனர். பாராட்டிச் சிறப்பித்தனர். ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களும் கொள்கைப் பூர்வமாக, தமது நன்றிப் பெருக்கினைக் காட்டும் வண்ணம் மிகுந்த ஈடுபாட்டுடன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆந்திர மாநில நாத்திக, சமூக நீதி வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
கடற்கரை சாலையில் பெரியார் சிலை
விசாகப்பட்டினத்தின் கடற்கரைச் சாலையின் (இராமகிருஷ்ணா சாலை) முக்கியப் பகுதியில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிட பாரதிய நாஸ்திக சமாஜம் (ஹவாநளைவ ளுடிஉநைவல டிக ஐனேயை) முயற்சி எடுத்து, சமூகத்தின் பல தரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து பெரியார் ஈ.வெ.ராமசாமி  ஆசைய சாதன சங்கம் எனும் பதிவு செய்யப் பட்ட  அமைப்பின் சார்பாக அதன் திறப்பு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் 4.3.2012 அன்று விசாகப்பட்டி னத்திற்கு வருகை தந்தார். விசாகப்பட்டினத்திற்கு மூன்றாம் முறையாக வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதிய நாஸ்திக சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் தலைமையில் கருஞ்சட்டைப் படையினர் திரளாக வருகை தந்து தமிழர் தலைவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பெரியார் சிலை திறப்பு விழா
தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம், சாலையில் பயணிக்கும் பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெகு பொருத்தமாக நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நண்பகல் 12.30 மணிக்கு துவங்கியது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிலை நிறுவிட முயற்சி எடுத்த பாரதிய நாஸ்திக சமாஜத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் தலைமையேற்று வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். டாக்டர் ஜெயகோபால் தலைமையுரை சிலை திறப்பு விழா நிகழ்ச்சியின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் தமது பேச்சில் குறிப்பிட் டதாவது:
எங்களது இயக்கத்தின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது. தந்தை பெரியாருக்கு விசாகப்பட்டினத்தில் சிலை அமைத்திட வேண்டும் என்று எங்களது வெகு நாள் கனவு (விருப்பம்) இன்று நனவானது குறித்து எங்களுக்கெல் லாம் மட்டற்ற மகிழ்ச்சி. நாங்கள் இந்த நிகழ்ச்சி யின்மூலம் புத்துணர்ச்சி பெறுகிறோம். எனது முதல் தலைவர் தந்தை பெரியார்தான்,  அடுத்த தலைவர், வழிகாட்டும் தலைவர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரி யாரின் சிலையினை திறந்து வைப்பது எங் களுக்கெல்லாம் மிகவும் பெருமையளிப்பதாகும். சமுதாயத்தின் அடித்தள மக்களை முன்னேற்றிட அருந்தொண்டு செய் திட்ட தந்தை பெரியாரின் சிலையினை - அவர்தம் பகுத்தறிவுக் கொள்கை யினை பாரெங்கும் பர விட முழு முயற்சி எடுத்து, வெற்றி கண்டு வரும் பெரியாரின் சீடர் கி. வீரமணி அவர்கள் சிலையினைத் திறந்து வைத்துள்ளது மிகவும் பொருத்தமானது.
தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின்போது, பாரதிய நாத்திக சமாஜத்தின் சார்பாக பெரியாரின் புரட்சி எனும் நூலினை ஆந்திர மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு பஸ்புலேட்டி பாலராஜூ வெளியிட்டார்.
பாரதிய நாஸ்திக சமாஜ அமைப்பு முயற்சி எடுத்து பெரியார்  ஈ.வெ.ராமசாமி ஆசைய சாதன சங்க (பெரியார் ஈ.வெ.ராமசாமி லட்சிய சாதனை இயக்கம்) அமைப்பின் சார்பாக தந்தை பெரியாருக்கு சிலை நிறுவப்பட்ட பொழுதிலும், இந்த
ஆந்திர மாநில அரசில் அங்கம் வகிக்கும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு பஸ்புலேட்டி பால ராஜு மற்றும் மக்கள் நல வாழ்வுக் கல்வித்துறையின் அமைச்சர் மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதன் மூலம் ஒட்டு மொத்த ஆந்திர மக்களின் ஆதரவுடன் தந்தை பெரியாருக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளதாக புலப்படுகிறது. இந்த சிலை திறப்பு, நிகழ்ச்சியின் மூலம் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை, சமூகப்பணி மென்மேலும் வலுப்பட, கொள்கைக் குறிப்பாக, அடுத்த தலைமுறையினருக்கு வரலாறாக அமைந்து விட்டது.
தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின்போது, பாரதிய நாத்திக சமாஜத்தின் சார்பாக  மனிதவள மேம்பாட்டு திங்கள் நாள்காட்டியினை ஆந்திர மாநில மக்கள் நலவாழ்வு கல்வி அமைச்சர் மாண்புமிகு கொண்ட்ரு முரளிமோகன் வெளியிட்டார்.
தந்தை பெரியாரின் சிலை நிறுவிட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பினை, ஆதரவினை நல்கினர். விசாகப்பட்டின பெரு நகராட்சி மன்ற பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் - இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாத்திக உணர்வாளர்கள், படித்து பட்டம் பெற்று  பல்வேறு பொறுப்புகளில் உள்ள சமூகநீதிப் பற்றாளர்கள், பொதுமக்கள் அனை வருக்கும் இந்த சிலை திறப்பு விழாவின் பொழுது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள் கிறோம். ஆந்திர மாநிலத்தில் தந்தை பெரியாருக்கு சிலை திறப்பதில் இது ஒரு தொடக்கம். மாநி லத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில், சிற்றூர் களில் தந்தை பெரியாரின் சிலை திறப்பு தொடரும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ள தலைவர்கள், பெருமக்கள், பொதுமக்கள் வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
தந்தை பெரியார் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
பலத்த கரவொலி மற்றும் ஒலிமுழக்கங்களுக் கிடையே கூடிய எழுச்சியான சூழலில், அமைச்சர் பெருமக்கள் சூழ்ந்திட  கம்பீரத் தோற்றத்துடன் நிறுவப்பட்டுள்ள, பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாரின் வெண்கலச் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட சிலைக்கு முதல் மாலையினை தமிழர் தலைவர் அணிவித்தார். தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் மற்றும் பகுத்தறிவாளர் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து தங்களது மரியாதையினைச் செலுத்தினர்.
தமிழர் தலைவர் உரை
சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
விசாகப்பட்டினத்தில் இன்று  (மார்ச் 4) நடைபெற்றுள்ள தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. தந்தை பெரியா ருக்கு சிலை திறப்பு என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல; சடங்கு நிகழ்ச்சியும் அல்ல. தந்தை பெரியாரின் கருத்துகள் பாரெங்கும் பரவுவதன் அடையாளம்தான் இன்றைய சிலை திறப்பு. இந்த சிலை திறப்பு மற்ற சிலைகளைப் போல மூடநம்பிக்கையினைப் பரப்பிட அல்ல; மூட நம்பிக்கையினை முறியடிக்கவே சிலை அமைப்பு- சிலை திறப்பு நடைபெற்றுள்ளது. சிலை பீடத்தின் அடிப்பீடத்தில், யுனெஸ்கோ அமைப்பு தந்தை பெரியாருக்கு வழங்கிய பாராட்டுப் பத்திரத்தின் ஆங்கில, தெலுங்கு மொழி வடிவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. மூடநம்பிக்கையினை முறியடிக்க வந்த தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீசு, என உலக நாடுகள் அமைப்பான யுனெஸ்கோவின் பாராட்டு வரிகள் மிகவும் பொருத்தமாக பொறிக்கப்பட்டுள்ளன.
திராவிடர் இயக்கத்தின் நூறாம் ஆண்டு தொடங்கியுள்ளது. அந்நாளில் ஆந்திர மாநிலத் தின் பெரும் பகுதியினை உள்ளடக்கிய சென்னை இராஜதானியினை ஆண்ட நீதிக்கட்சியின் தலை வர்கள், பிட்டி தியாகராயர், சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர் மற்றும் நீதிக்கட்சி அரசின் பெருமை மிக்க முதல்வராக பனகல் அரசர் என அழைக்கப் படும் இராம இராய நிங்கர் ஆண்ட பெருமையின் நூற்றாண்டு இது. ஆந்திர மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுக் கல்வி அமைச்சர் வருகை தந்துள்ளார். அந்நாளில் மருத்துவப் படிப்பிற்கு அனுமதி பெற்றிட அந்த மாணவர் சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் எனும் நிலைமை இருந்தது.  இதனால் சமூகத்தின் உயர் ஜாதியினர் - குறிப்பாகப் பார்ப்பனர்களே அதிகமாக மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இந்த நிலையினை மாற்றி மருத் துவப் படிப்பில் சேருவதற்கு சமஸ்கிருத மொழித் தேர்ச்சி தேவையில்லை எனும் உத்தரவினை பிறப் பித்த ஆட்சி - நீதிக்கட்சி ஆட்சி. இதனால் சமூ கத்தில் பிற ஜாதியினர், குறிப்பாக கல்வி மறுக்கப் பட்ட அடித்தள வகுப்பினைச் சார்ந்த மாணவர் களும், மருத்துவப்படிப்பில் சேர முடிந்தது. அப்படிப்பட்ட நீதிக்கட்சியின் தலைவராக இருந்து திராவிடர் கழகத்தினை நிறுவினார் தந்தைபெரியார். மனுதர்மம் வலியுறுத்திய நான்கு வர்ண பிரிவினையை அதனால் விளைந்த சமூக ஏற்றத்தாழ்வினை நீக்கப் போராடிப் பாடுபட்டவர் பெரியார். 95 ஆண்டு வரை வாழ்ந்த தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் மக்களைச் சந்தித்து பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வந்தார். கூட்டத்தில் தனது பேச்சிற்குப் பின், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டவர். ஒருநாள் தனது பேச்சில் - நான்கு வர்ண பிரிவினைப்படி, பிராமணர் பிர்மாவின் முகத்திலும், சத்திரியர் பிர்மாவின் தோளிலும், வைசியன் பிர்மாவின் தொடையிலும், சூத்திரன் பிர்மாவின் காலிலும் பிறந்ததாக வருணாசிரமம் கூறுகிறது எனக் குறிப்பிட்டார். அப்பொழுது கூட்டத்தில் இருந்து, இந்த நான்கு வர்ணத்தில் வராத பஞ்சமர் எனப்படும் அடித்தட்டு மக்கள் எப்படிப் பிறந்தனர் என வினா எழுப்பிய பொழுது தந்தை பெரியார் கூறினார். பஞ்சமர்தான் மனிதருக்கு - தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவர்கள் என எதார்த்தமாக, பளிச்சென்று வர்ணபேத மோசடி யினை தோலுரித்துக்காட்டிடும் வகையில் பிரச்சாரம் செய்தவர் பெரியார். பேசிப் பேசி- பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, செய்து - அறிவுப்புரட்சியை நடத்தியவர் தந்தை பெரியார். பிறப்பால் அனைவரும் சமம் எனும் தத்துவ விளக்கத்தினை எளிமையாகப் பிரச்சாரம் செய்து மக்களைப் பக்குவப்படுத்தியவர் தந்தை பெரியார்.
சமுதாயத்தில் கல்வி மறுக்கப்பட்ட மக்களை, கல்வி கற்பிக்கும் சூழ்நிலையினை உருவாக்கி, பதவி களில் உட்கார வைப்பதற்குப் பாடுபட்டவர் தந்தை பெரியார். சமூகநீதி மறுக்கப்பட்டோரை படித்து, பட்டம் பெற வைத்து நீதிமன்றங்களில் அமர வைத்து, உயர்ஜாதி வழக்குரைஞர்களும், மை லார்ட் (ஆல டுடிசன) என உச்சரிக்க வைத்தவர் தந்தை பெரியார். உயர் நீதிமன்றத்தில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதியை அமர வைத்தவர் பெரியார்.  டில்லி உச்சநீதிமன்றத்திலும், முதல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினைச் சார்ந்த நீதிபதியாய் அவர் அமர காரணமாக இருந்தவர் பெரியார்.
கல்வியில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் சட்ட விதியின் முதல் திருத்தத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வர போராட்டம் கண்டவர் தந்தை பெரியார்; களம் கண்டவர் தந்தை பெரியார். சட்ட அமைச்சராக இருந்து காரியம் ஆற்றியவர் அண்ணல் அம்பேத்கர். சமூகநீதிக்குப்பாடுபட்ட தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.
அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளை பெரும்பாலானவர்கள் அறிவர். அந்த அரசமைப்புச்சட்டம் வழிகாட்டும் அடிப்படைக் கடமைகளும் உண்டு. அப்படிப்பட்ட அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான அறிவியல் மனப்பான்மையினை வலியுறுத்தி எதிலும் பகுத் தறிவுக் கண்ணோட்டம், அறிவியல் கண்ணோட்டம் அவசியம் என கருத்துப் பிரச்சாரம் செய்தவர் பெரியார். இன்று திறக்கப்பட்டுள்ள தந்தை பெரி யாரின் வெண்கல வடிவம், வெறும் சிலை அல்ல. அடக்கப்பட்ட மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆழ்ந்த பற்றுதல், நன்றி வெளிப்பாட்டின் அடை யாளம்தான் இந்த சிலை. தந்தை பெரியாரது லட்சி யங்களை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் அணுகுமுறைக்கு அடையாளமாக இந்த சிலை திகழும். தந்தை பெரியாரது சிலையினை நிறுவ முயற்சி எடுத்த பாரதிய நாஸ்திக சமாஜ சங்கப் பெருந் தலைவர் டாக்டர் ஜெயகோபால் மற்றும் உடன் உழைத்த அமைப்பினர், தோழர்கள், உள்ளாட்சி அமைப்பினர் அனைவருக்கும் பாராட்டுதல்கள். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! தழைத்திடுக சுயமரியாதை!! நன்றி!!
அமைச்சர் பஸ்புலேட்டி பால ராஜு உரை
விழாவில் பங்கேற்ற ஆந்திர மாநில அரசின் மலைவாழ் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு பஸ்புலேட்டி பால ராஜு தனது உரையில் குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவில் பெரியாரின் சீடர், தலைவர் கி.வீரமணி அவர்களுடன் கலந்துகொள்ளுவதில் பெரும் மகிழ்ச்சி அடை கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர் பெரியாரைப் பற்றி மேடையில் அமர்ந்தி ருக்கும் பொழுது தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறிய செய்திகளை அறிந்து மிகுந்த வியப்படைந்தேன். குறிப்பாக 1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறினார். கோவில் நுழைவு என்ற நிலையினைவிட மோசமாக, கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் சமூக அடித்தளமக்கள் நடக்கக் கூடாது எனும் இழிவினை எதிர்த்து மனித உரிமைப் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் மகத்தானவர். வைக்கம் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி மத சம்பந்தமான விசயம் என அனுமதி மறுத்த வேளையிலும், இல்லை; இது மனித உரிமைப் போராட்டம் என துணிவாக காங்கிரசு இயக்கத்தின் தலைவராக இருந்தபொழுதே போராட்டம் நடத்திய தந்தை பெரியாரின் வரலாறு- அவரது கொள்கை உறுதி வியப்படைய வைக்கிறது.
மேலும் காங்கிரசு இயக்கத்திலிருந்து போராடி, அவர் அதைவிட்டு வெளியேறியது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வகுப்புரிமைக்காக என அறிய நேர்ந்த பொழுது கொள்கைக்காக, கட்சியை விட்டு வெளி யேறிய பெரியாரது செயல் போற்றுதற்குரியதாகிறது. பெரியாரின் கொள்கை சார்ந்த வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரும் உணர்ந்து கொண்டு, அதன்படி நடந்துகொண்டால் அவர்களது வாழ்வில் உண்மையான உயர்வினை எட்ட முடியும். தந்தை பெரியாரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் நிலையில் ஆவலாக உள்ளேன். இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டது எங்களுக்குப் பெருமை எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர் கொண்ட்ரூ முரளி மோகன் உரை
சிலை திறப்பில் கலந்துகொண்ட ஆந்திர மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன் உரையாற்றுகையில் கூறியதாவது:
தலைவர் கி.வீரமணி அவர்கள் அந்நாளில் ஆந்திரமாநிலம் சென்னை இராஜதானியில் இருந்தபொழுது நீதிக்கட்சி ஆண்டபொழுது மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் எனும் நிலை நீக்கப்பட்டதான செய்தி எங்களுக்கெல்லாம் புதியதாக இருக்கிறது. சமூகத்தின் அடிநிலையில் வாழ்ந்த, வாழுகின்ற மக்களின் மேம்பாட்டிற்கு, சமூக அரசியல் அரங்கில் அவர்கள் உரிய அங்கீகாரம் பெறுவதற்கு உழைத்த தந்தை பெரியாரின் பணி மகத்தானது. சிறிது நேரமே தலைவர் கி.வீரமணி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும், தந்தை பெரியாரைப் பற்றி நிறைய செய்திகளை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இந்த சிலை திறப்பு விழா இருந்தது. வகுப்புவாரி உரிமைக்கு அடித்தளத்தினை அரசமைப்புச்சட்டத்தில் அமைக்க பெரியார் காரணமாக இருந்தார். அவரது கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒடுக்கப் பட்ட மக்கள் மேன்மேலும் உயர்வடைய முடியும். அத்தகைய உணர்வுகளை மக்கள் பெறுவதற்கு தந்தை பெரியாரின் கொள்கை பயன்படும். நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மனநிறைவு, மகிழ்ச்சி அடைகிறேன். என்று குறிப்பிட்டார்.
பல்வேறு அறிஞர்கள் உரை
சிலை அமைக்க பேருதவி புரிந்த மேனாள் மாநகராட்சி உறுப்பினர் வெங்கல் ராவ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஜி.சுமணா, பாரதிய நாஸ்திக சமாஜத்தின் தலைவர் சைனி நரேந்திரா,  பொதுச்செயலாளர் பேராசிரியர் மருத்துவர் பி.சுப்பராவ், ஆந்திர பல்கலைக் கழகப் பேராசிரி யர்கள், கே.பி.சுப்பராவ், பி.டி.சத்யபால், ராஸ்டிரீய தலித் நாயகலு அமைப்பினைச் சார்ந்த பல்தேட்டி பென்ட ராவ், உத்திர ஆந்திர பிற்படுத்தப்பட்ட வகுப்பு நாயகலு அமைப்பினைச் சார்ந்த, கண்ட பாப்பராவ் ஆகியோர் உரையாற்றினர்.
அறிவியல் மாணவர் அமைப்பினைச் சார்ந்த இளைஞர்கள் இசைவடிவத்துடன் பெரியார் பாடலை மேடையில் பாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியினை சிலை அமைப்புக் குழுவின் செயலாளரான பேராசிரியர் மருத்துவர் ஜி.அர்ஜுன் சிறப்பாக ஒருங்கிணைத்து, திறப்பு விழா பெரு மைக்கு சிறப்பு சேர்த்திட்டார்.
சிலையினை ஒட்டி அமைக்கப்பட்ட நடை மேடை அரங்கில், கடும் வெயிலையும் பொருட் படுத்தாமல், ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பொதுமக்கள், நாத்திகத் தோழர்கள், சமூகநீதிப் பற்றுள்ளவர்கள், திரளாகப் பங்கு கொண்டனர். விழா பிற்பகல் 3 மணி அளவில் நிறைவு பெற்றது.



தமிழர் தலைவர், சிலை அமைப்புக்குழுவினருடன் செய்தியாளர் சந்திப்பு
தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவினையொட்டி, விழாக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தெலுங்கு, ஆங்கில செய்தியாளர் பலர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் போது தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் இயக்கம் பற்றிய வரலாற்றினைச் சுருக்கமாக எடுத்துச்சொல்லி, பெரியாருடைய பணி தமிழ் நாட்டில் - இந்திய அளவில் சமூக வாழ்வில் எத்த கைய ஆக்கரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது என்பதை விளக்கிக் கூறினார்.
பல்வேறு கேள்விகளுக்கு தமிழர் தலைவர் பதிலளித்த பின் ஒரு ஆங்கில நாளிதழின் செய்தியாளர், வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு போன்றவற்றால் ஜாதிய உணர்வு கூடுதலாகிக் கொண்டு வருகிறதே ஜாதியை ஒழிப்பதாகக் கூறும் பெரியார் இயக்கத்திற்கு இத்தகைய போக்கு முரணாக உள்ளதே! என வினா எழுப்பினார்.
வகுப்புரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றால் ஜாதிய உணர்வு (caste consciousness) அதிகமாகவில்லை. ஜாதியக் கண்ணோட்டம் (caste awareness) உருவாகி உள்ளது. எந்த ஜாதிய அடிப்படையில் மக்கள் அடக்கப் பட்டார்களோ அந்த ஜாதிய அடிப்படையில் முன்னேற்றம் காண முயல்வதே வகுப்புவாரித் தத்துவமாகும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். உடலில் கிருமியால் வரும் நோயினைத் தடுத்திட, கிருமியையே தடுப்பு மருந்தாகச் செலுத்துவதைப் போல நீங்கள் கருதுவது போல ஜாதிய உணர்வு இருந்த காலத்தில் தீண்டத் தகாதவர் (Untouchables) பார்க்கக்கூடாதவர் (Unseeable) எனும் நிலைகள்  நிலவின. இன்று பார்க்கக் கூடாதவர் என்ற நிலை கிடையாது.  தீண்டத்தகாதவர் எனும் நிலை சட்ட ரீதியில் கிடையாது. ஜாதிய உணர்வு இன்றும் நீடித்து இருந்தால் நீங்களும் நானும் அமர்ந்து இப்படி பேசிட முடியாதே. ஜாதிய உணர்வு என்பது வேறு. ஜாதியக் கண்ணோட்டம் என்பது வேறு. இடஒதுக்கீடு அனைத்து தளத்திலும் முழுமையாகி சமத்துவம் வரும் நிலையில் ஜாதியக் கண்ணோட்டமும் தேவையில்லாமல் போய்விடும்.
தமிழர் தலைவரின் நச் என்ற பதிலுரையைக் கேட்டபின்பு செய்தியாளர் மறுகேள்வி கேட்கும் நிலை எழவில்லை.
பகுத்தறிவாளர் கழகப் பணி

பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பணிகள், தந்தை பெரியார் 1971ஆம் ஆண்டு அதைத் தோற்றுவித்தது, புரவலராக தமிழர் தலைவர் வழிகாட்டி நடத்திடுவது, மய்ய, மாநில அரசு, மற்றும் இதர அலுவலகப் பணியில் உள்ளோர் பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்து பகுத்தறிவுப் பிரச்சாரம், அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் கண்காட்சி என பல தளங்களில் பணியாற்றுவது பற்றி பொதுச்செயலாளர் வீ.குமரேசன் சுருக்கமாக எடுத்துரைத்தார்ஆந்திர மாநிலம் விசாகப்பட்டின கடற்கரையில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா (4.3.2012)


தந்தை பெரியார் சிலையின் அடிப்பாகத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆந்திர மாநில அமைச்சர்கள் மாண்புமிகு பஸ்புலேட்டி பாலராஜு, மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன் ஆகியோர் திறந்து வைத்தனர். தந்தை பெரியார் சிலைக்கு முன் தமிழர் தலைவர் கி.வீரமணி, பாரதிய நாஸ்திக சமாஜத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் மற்றும் தோழர்கள் உள்ளனர். விசாகப்பட்டினம் நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை திறப்புக்கான விளம்பர பதாகைகள்.
ஆந்திர மாநில அமைச்சர்கள் மாண்புமிகு பஸ்புலேட்டி பாலராஜு, மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன் ஆகியோர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அமைச்சர்கள் மாண்புமிகு பஸ்புலேட்டி பாலராஜு, மாண்புமிகு கொண்ட்ரு முரளி மோகன், மேனாள் விசாகப்பட்டின நகராட்சி மன்ற உறுப்பினர் வெங்கல்ராவ் ஆகியோருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்தோரின் ஒரு பகுதி.
தமிழர் தலைவர் அவர்கள்-டாக்டர் ஜெயகோபால், மருத்துவர் பேராசிரியர் அர்ஜுன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஜி.சுமனா, பத்லேட்டி பெண்டராவ் மற்றும் இதர சிலை அமைப்புக் குழுவினருக்கு  நினைவு பரிசினை வழங்கினார்.
அறிவியல் மாணவர் மன்றத்தினர் பெரியார் பற்றிய சமூக நீதிப் பாடலை மேடையில் பாடினர்.
கண்ட்ட பாப்பராவ், பேராசிரியர் சுப்பாராவ், சைனி நரேந்திரா ஆகியோருக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.

-விடுதலை,5.3.12










.

5000 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்ட ஜாதியை ஒரே இரவில் ஒழித்துக் கட்ட முடியாது


விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கி.வீரமணி
- இந்து நாளிதழ் படப்பிடிப்பு
விசாகப்பட்டினம், மார்ச் 6- பெரியார் ராமசாமி அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவை நனவாக்க விரைந்த  தீர்வுகள் எதுவும் இல்லை என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
கடற்கரை சாலையில் ஒய்.எம்.சி.ஏ.க்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் ராமசாமி அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கும் முன்னர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சிலை திறப்பு விழாவில் பழங்குடியினர் நல அமைச்சர் பி.பாலராஜு, மருத்துவக் கல்வி அமைச்சர் கோண்ட்ரூ முரளி, தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன், ஈ.வெ. ராமசாமி ஆசாய சாதனா சங்கத் தலைவர் ஜெயகோபால் மற்றும் உறுப்பினர்கள் காந்தா பாபா ராவ் மற்றும் பி. பென்டா ராவ்  மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் ராமசாமி ஒரு மாபெரும் மனிதநேயர் என்றும், தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தனது செல்வம் அனைத்தையும் பொது நலனுக்காக விட்டுச் சென்றவர் என்றும், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார்.  பலதுறைகளிலும் மக்களிடையே வேறுபாடு பாராட்டல் ஆகியவற்றுக்கு எதிராகவும், விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாகவும் இறுதி வரை போராடியவர் என்றும் வீரமணி கூறினார்.
கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஜாதி அமைப்பு முறையை ஒரே இரவில் அழித்துவிடுவது என்பது இயலாதது என்றும், அது ஒரு நீண்ட கால போராட்டம் என்றும், மக்களின் மனநிலையை மெல்ல மெல்ல மாற்றும் தங்கள் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
பெண்கள் தங்களுக்குரிய அதிகாரங்களையும், உரிமைகளையும் பெறவேண்டும் என்று போராடிய ஒரு மாபரும் பகுத்தறிவாளர் பெரியார் என்று கூறிய வேந்தர் கி.வீரமணி, பெரியார் எந்த அரசுப் பதவி களுக்கும் ஆசைப்பட்டதே இல்லை என்றும் கூறினார்.
நீதிக்கட்சியின் மூலம் சமூக நீதி இயக்கத்தை வழி நடத்திச் சென்றவர் பெரியார் என்று கூறிய வீரமணி அவர்கள், பெரியாரின் தொண்டர்கள் இது பற்றிய விழிப்புணர்வை தங்களின் செயல்பாடுகள் மூலம்  ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.
சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்று பெரியார் ராமசாமி அவர்கள் நம்பினார் என்று திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து அதை வழி நடத்திச் செல்லும் வீரமணி அவர்கள் கூறினார்.
எனவே, தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களும், ஆதரவாளர்களும், பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களும், இந்திய நாத்திக சங்கத்தினரும் பல்வேறுபட்ட நிலைகளில் காட்டப்படும் வேறுபாடு களுக்கு எதிராக சோர்வின்றி போராடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- இவ்வாறு இந்து நாளிதழ் விஜயவாடா பதிப்பில் செய்தி நேற்று வெளியாகியுள்ளது.
-விடுதலை,6.3.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக