செவ்வாய், 1 டிசம்பர், 2015

சைவரும் - வைணவரும்!-சித்திரபுத்திரன்


வைணவதாசன்: என்ன தேசிகர்வாள்! உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல்? விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?
சைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது? ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந் தாலும் மோட்சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை?
வைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.
சைவர்: என்ன சந்தேகம்?
வைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே! மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே!
அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்!
-சித்திரபுத்திரன் 

எலி ஒழிப்பிலும் மதம்!
நிருபர்: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள் அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்துக்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?
நிருபர்: ஆம்; பம்பாயில் தான்.
பிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?
நிருபர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.
பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?
நிருபர்: ஆமாம்; எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது ; இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.
பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன; இவர்கள் இப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதினால்தான் எந்தப் பிரச்சினைகளையும் வெல்லமுடியவில்லை.
- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் இந்திராகாந்தி, அளித்த பேட்டி, 26.2.1977 இதழிலிருந்து
-விடுதலை,13.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக