திங்கள், 3 செப்டம்பர், 2018

வகுப்புரிமை மீட்புப் போராட்டமும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பும்

தந்தை பெரியார்




"கட்டாய இந்தி ஒழிந்ததுபற்றி நாம் மகிழ்ச்சி கொண் டாடுகிற நேரத்திலேயே மற்றொரு துக்ககரமான சம்பவம் அதாவது வகுப்புவாரி உரிமை இந்திய அரசியல் சட்டத் திற்கு விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஏற்பட்டுவிட்டதால், மற்றொரு கிளர்ச்சி துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இயற்கை நமக்கு ஓய்வு தருவதில்லை.

வகுப்புவாரி உரிமைக்கு ஆகவேதான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. அதாவது பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக் காக, அவர்களுக்கும் உத்தியோகத் துறையிலும், கல்வித் துறையிலும் அவர்களுக்கான விகிதாசாரம் கொடுத்து நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. நானும் காங்கிரசில் இருந்த காலம் முதற்கொண்டே வகுப்புவாரி உரிமைக்கு ஆகவே பாடு பட்டு, அதன் காரணமாகவே, அதாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானத்தை நான் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிற்குக் கொண்டு போனபோது, அந்தத் தீர்மான மானது காங்கிரசின் கொள்கைகளுக்கு விரோதமாய் இருக்கிறது என்று கூறப்பட்டு என்னுடைய தீர்மானம் தள் ளப்பட்டு விட்டதால் நான் காங்கிரசிலிருந்து அதற்காகவே விலகினேன்.

பின்னர் சுயேச்சை அமைச்சர்கள் பதவிக்கு வந்தபோது வகுப்புவாரி உரிமைத் திட்டம் சட்டமாக்கப்பட்டு, எவ் வளவோ எதிர்ப்புகளுக்கு இடையில் அமல் நடத்தப்பட்டு வந்தது. அந்த சட்டமும் சரியானபடி, மக்களின் விகிதாசாரக் கணக்குப்படி அவர்களுக்குப் பங்கு அளித்தது என்று கூற முடியாது. ஆனாலும், நம்மவர்கள் - பல தொல்லைகள், சங்கடங்கள் இருந்தபோதிலும், வகுப்புவாரி உரிமையின் பயனாய் ஓரளவுக்கு முன்னுக்கு வந்தார்கள். குறிப்பாக போலீஸ் இலாகாவிலும், டிப்டி கலெக்டர்களிலும் நம்ம வர்கள் கணிசமான அளவில் முன்னேறினார்கள். நம்மவர் களுக்கு மேல் உத்யோகஸ்தர்களாய் பார்ப்பன அதிகாரிகள் இருந்ததால் அவர்கள் நம் உத்தியோகஸ்தர்கள் மேலுக்குவர முடியாமல் அழுத்தி தங்கள் வர்க்கத்தாருக்கே சலுகை காட்டி, அவர்களின் கொள்ளைக்கும் வழி செய்து கொடுத்து வந்தார்கள்.

நமது முன்னாள் முதல் மந்திரி ஓ.பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள் காலத்திலேதான்  வகுப்பு வாரி உரிமையின்படி, கல்லூரிகளில் மாணவர் களைச் சேர்ப்பது என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

அதிலும், அடுத்த ஆண்டில் அப்போது கல்வி மந்திரியாய் இருந்த தோழர் அவினாசிலிங்கம் அவர்கள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது தகுதி, திறமை என்பவை களின் பேரால் 20, 30 சதவிகிதம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், அந்தப்படி 'தகுதி', 'திறமை' என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்குப் போக மீதி இருக்கும் இடத்திற்குத்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை கையாளப்படும் என்றும் ஆக்கி வைத்தார்கள்.

இந்தப்படியாக சரியானபடி விகிதாசாரம் கொடுக்கப்படாமலும், பார்ப்பனர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு மேற்பட்டு 8, 10 மடங்கு என்று கொடுக்கப்பட்டு, நமக்கு மிகக் குறைந்த அளவுக்கே பங்கு கொடுக்கப்பட்ட வகுப்புவாரி உத்தரவும் இனிமேல் செல்லுபடி யாகாது என்று தீர்ப்பு கூறப்பட்டு விட்டது.

ஆகவே, இனிமேல் இதுவரை அனுஷ்டிக் கப்பட்டு வந்த வகுப்புவாரி திட்டமானது 1950இல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒழிக் கப்பட்டுவிட்டது. நாமும் இந்த வகுப்புவாரி திட்டம் போதாததாய் இருப்பதால், இது ஒழிக்கப்படவேண்டும் என்கிறோம். ஏன்? இது சரியானபடி மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாசாரத்தை பிரதிபலிக்க வில்லை, எனவே, இந்தத் திட்டம் ஒழிக்கப்பட்டு அந்த மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த ரீதியில், அதாவது இந்த நாட்டு ஜனசமுதா யத்தில் 100-க்கு 3 பேராக இருக்கும் பார்ப் பனர்களுக்கு 3 ஸ்தானமும், அதேபோல் மற்ற வகுப்பார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மாதிரியில் அவரவர்களுக்கு விகிதாசாரப்படி பங்கு வழங்கும் புதிய திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறோம்.

இன்றைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இனிமேல் தகுதி, திறமை என்பவைகளின் பேரால்தான் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இப்போது கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதி, திறமையாக வைத்திருப்பது மார்க் ஒன்றுதான் ஆகும். இந்த மார்க்கை பார்ப்பனப் பிள்ளைகள்தான் அதிகமாக வாங்கத் தக்கபடி கல்வியில் சூழ்ச்சி இருக்கிறது. அதிக மார்க் எப்படி வாங்குவது என்ற வழியைப் பார்ப்பனர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்பதோடு, மார்க் அவர்கள் காலடியிலேயே போய் விழுகிற மாதிரியில் இன்று கல்வித் துறையில் அவர்களுக்கு வாய்க்கால் வெட்டிவிடப் பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, அவர்கள் பரம்பரையாக விஷயங் களின் கருத்தைப்பற்றி கவலை இல்லாமல் சொற்களை உருப்போட்டு படிக்கப்பட்ட பரம்பரையில் உதித்தவர்கள். ஆகவே, படித்ததை நெட்டுருப் பண்ணி பரீட்சையில் வாந்தி எடுப்பது அவர்களுக்கு சுலபமான காரியமாகும்.

நம்மவர்களுக்கு இரண்டுமே கிடையாது. கருத்தை உட்கொண்டு அறிவு பெறுவது வழக்கம். அந்தப்படி இருக்கும்போது நம் பிள்ளைகள் எப்படி இன்று கல்லூரியில் சேருவதற்கு 'தர்மாமீட்டராய்' இருக்கும் தகுதியையும், திறமையையும் பெற முடியும்? எனவே, இவர்கள் சொல்லுகிற தகுதியையும், திறமையையும் பெற்று நம்முடைய பிள்ளைகள் படிக்க முடியாது. படிக்காத காரணத்தினால் உத்தியோகமும் வகிக்க முடியாது. பழைய வேலைக்குத்தான், அதாவது மனு (அ) தர்ம காலத்துக்குத்தான், பார்ப்பானுக்கு சேவை - பூஜை செய்து அவன் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பதால் நற்பதவி கிட்டும் என்ற தன்மைக்குப் போகவேண்டும். இதைத்தான் பார்ப்பனர்களும் விரும்புகிறார்கள்.

ஏனென்றால், நாமும் படித்து உத்தி யோகம் வகித்து பார்ப்பனர்களோடு சரிசம மாகப் போட்டியிட தலைப்பட்டால், 'சூத் திரர்கள்' செய்யவேண்டிய வேலைகள் என்று தர்ம சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டு 'ரிசர்வ்' செய்யப்பட்டிருக்கிறதே, ஏர் உழுவது, துணி வெளுப்பது, சிரைப்பது, செருப்புத் தைப்பது, வண்டி இழுப்பது, மூட்டை தூக்குவது, கக்கூஸ் எடுப்பது போன்ற காரியங்களுக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். பார்ப்பனர் களுக்கும் முகத்தில் பிறந்தவர்கள் என்ற மரியாதையோ, உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்ற பெருமையும் இல்லாமல் அவர்களும் சாதாரண மனிதர்களாவதுடன், எல்லா வேலை களையும் அவர்களும் சேர்ந்து செய்யவேண்டிய நிலைமை வந்துவிடுமே என்பதற்காகத்தான் அடிப்படையிலேயே, அதாவது நம் மக்கள் படித்து, மான உணர்ச்சியோ, மனிதத் தன் மையோ அடைந்துவிடக் கூடாது என்பதற்காக நம்மை படிக்கவொட்டாமலேயே அடிப்பது என்ற முயற்சி செய்து தற்காலிகமான வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

இந்தக் காரியத்தில் நாம் சற்று அலட்சிய மாகவோ, அஜாக்கிரதையாகவோ, கவலை யற்றோ இருந்தோமேயானால், நிச்சயமாய் இன்று பார்ப்பனர்கள் பெற்றிருக்கிற இந்த தற்காலிக வெற்றியானது சாசுவத வெற்றியாகி நாமெல்லாம் என்றும் மீளா அடிமையில், படுகுழியிலேதான் அழுந்திக் கிடக்க நேரிடும்.

எனவே, இதை இப்படியே விட்டுவிடாமல் நம்முடைய இன நலத்தைக் கருதி, நம்முடைய பிற்கால சந்ததிகளின் நன்மையைக் கருதி, நம்முடைய பிள்ளைகள் மாடு மேய்ப்பதற்கே தகுதியுடையவர்களாக ஆகாமல், மனிதத் தன்மை யுடையவர்களாக வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டு இதிலே நாம் பெருத்த கிளர்ச்சி செய்யவேண்டும்.

இந்தக் காரியத்திலே ஏமாந்துவிட்டுவிட்டோமானால், நம்முடைய வாழ்வு மனுக்காலத் தன்மைக்குத்தான் போய்விடும். எனவே, இதில் முழு மூச்சோடு 'இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது' என்ற முடிவோடு நீங்கள் இருக்கவேண்டும்.

இந்தக் காரியத்தில் கிளர்ச்சி துவக்குவதற்காக அடுத்த மாதத்தில் சென்னையிலாவது, திருச்சியிலாவது ஒரு பொது மாநாடு கூட்ட இருக்கிறேன். அதற்காக முன்னேற்பாடு கூட்டம் ஒன்று அடுத்தவாரம் கூட்டுவேன். மாநாட்டில் இனிமேல் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்வது என்பதுபற்றி யோசித்துக் கூறுகிறேன். அதற்குப் பின்னர் நாம் பெருத்த முறையில் கிளர்ச்சி செய்யவேண்டும். அத்தகைய கிளர்ச்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, பெருவாரியாக மக்கள் அனைவரும் வரப் போகும் வகுப்புரிமைக் கிளர்ச்சியிலே பங்குகொண்டு, நம் உரிமைக்காகப் போராட வேண்டும்".

(24.8.1950 அன்று ஈரோட்டில் நடைபெற்ற

பொதுக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை)

(உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி - 3)

- விடுதலை நாளேடு, 26.8.18

மலேசியாவில் அய்ந்து அரசு தமிழ்ப் பள்ளிகளில் பெரியார் நூலகங்கள் திறப்பு!

மலேசியாவில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டுஅய்ந்து அரசு தமிழ்ப் பள்ளிகளில் பெரியார் நூலகங்கள் திறப்பு!




மலேசியா, செப்.3 செலங்கூர் மாநிலம், காப்பர் அருகில் அமைந்துள்ள ஜாலான் ஆக்கோப் தோட்ட அரசு தமிழ்பள்ளியில் பெரியார் நூலகம் அமைக்கப்பட்டது.  சுமார் இருநூறு மாணவர்கள் இந்த பள்ளியில் பயில்கிறார்கள்.

தலைமை ஆசிரியர் திருமதி சாந்த குமாரி முன்னிலை வகித்தார். திராவிட இயக்க பணியாளரும், விவசாயிகள் நிர்வாகிகள் சங்க தலைவருமான மானமிகு மு.கோவிந்தசாமி நூலகத்தை திறந்து வைத்து உரைநிகழ்த்தினார்.



இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் அய்ந்து ஊர்களில் உள்ள அரசு தமிழ்ப் பள்ளிகளில் பெரியார் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார். அந்நூலகங்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் துணையுடன் அமைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் செலுத்தப்பட்டது.

திராவிடர் கழகத் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், இரா.பெரியசாமி, கு.க. இராமன், பெற்றோர்கள், ஆசிரியைகள் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.

- விடுதலை நாளேடு, 3.9.18

பிள்ளையார் பிறப்புக்கு நான்கு வகைக் காரணம்: எது உண்மை? எல்லாமே பித்தலாட்டம்! - தந்தை பெரியார் விளக்குகிறார்



இக்கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல் லோராலும் ஒப்புக்கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது இதனை கணபதி என்றும், விநாயகர் என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக் கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.

நிற்க, இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக் கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப் போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது.

ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக் கொள்ளக்கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.

1. ஒருநாள் சிவனின் பெண் சாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகி விட்டதாகவும், அந்த ஆண் குழந்தை யைப் பார்த்து - “நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்த பரம சிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக் கூடாது” என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளை யார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற் குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, “காவல் வைத்திருந் தும் எப்படி உள்ளே வந்தாய்?’’ என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானை யின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந் தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்த தாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதா ரங்களும் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்த தால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில்  கருவுற்றிருக் கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச் சிசுவின் தலையை வெட்டி விட்டு வந்த தாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டி விட்ட தாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப் பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டிவைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப் படுகின்றது. இது தக்கயாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷய மாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண் டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவது மான தாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கட வுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்ட தற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருக்கிறது).

கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான் ; அவர் நாம, ரூப,



குணமற்றவர்; ஆதி அந்த மற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய் வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரம் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை (வல்லப கணபதி) செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சியை யாவருக்கும் தெரியும் படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப் படி பூஜையும் நடந்து வருகிறது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின் றார்கள்.

சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட் டிருக்கின்றது.

இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப் படுகின்றது.

அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்தக் கடவுள் கொன்று கொண்டே வந்ததும், தன்னால் முடியாத அளவு அசுரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.  இதையறிந்த அந்தக் கடவுள் பிள்ளை யார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல், தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்து அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங்களுக்கு கண்ட வைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் “ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.

“எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக்கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றி யும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால், இவைகளுக் குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவை களைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளு கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள், “அப்படி இருக்கவேண்டும்”, “இப்படி இருக்க வேண்டும்” என்றும், “மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து”, "கடவுளுக்கு ஆபத்து" என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும், கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் “வக்காலத்து” பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங் களை விலக்க முன் வந்தார்களா? என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம்பற்றி எந்த ஆஸ்திக சிகாமணி களுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும், ஆராய்ச்சிக்கும், குறை வில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களை யெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்து விட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுளையும், எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்று சொல்லுவோம்.

(சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் 26.8.1928 “குடிஅரசு’ இதழில் எழுதியது)
- விடுதலை நாளேடு, 2.9.18

சனி, 1 செப்டம்பர், 2018

பகுத்தறிவு 09.08.1931 - குடிஅரசிலிருந்து...


நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும் துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியும்.  நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்துகொண்டு இதுதான் நபிகள் சொன்னது என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா?  நமது சொந்தக் கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்கவேண்டும்.  சாளேசரம் இருந்தால் சரியாய்த்தெரியாது.

பக்கப் பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது.  இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும்.  மஞ்சள் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான்தெரியும்.  சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாக வுந்தான் தெரியும்.  நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்.  அதுபோலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்லவேண்டும்.  அப்படிக் கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிப்பேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகிவிடும்.

நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய்கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள், உங்களைப் போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார்கள்?  நினைக்கின்றார்கள் என்று பாருங்கள்.

- விடுதலை நாளேடு, 01.09.18

சுயமரியாதை வீரய்யச் செட்டியாருக்கும் சுய ஆட்சி சுப்பையருக்கும் சம்பாஷனை - சித்திரபுத்திரன் -

26.07.1931 - குடியரசிலிருந்து...

சு.ம. வீரையச்செட்டியார்: என்ன ஓய்! சு.ஆ.சுப் பைய்யரே நேற்றெல்லாம் சீமை வேட்டி கட்டிக்கொண்டிருந்தீர். இன்று திடீரென்று கதர் வேஷ்டியும், கதர் குல்லாயும், தடபுடலாயிருக் கின்றதே? 

சு.ஆ.சுப்பைய்யர்: ஒன்றும் விசேஷ மில்லை. இன்றுமுதல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். 

சு.ம.வீ: அதென்ன திடீரென்று சேர்த்து விட்டாய்? காங்கிரசைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாயே? சு.ஆ.சு.: நான் பி.ஏ. பாஸ்செய்து எத்தனை நாள் ஆச்சுது?

சு.ம.வீ: 3 வருஷமாச்சுது.

சு.ஆ.சு.: உத்தியோகத்திற்கு எத்தனை விண் ணப்பம் போட்டேன். உனக்குத் தெரியாதா? 

சு.ம.வீ: ஆம். சுமார் 50, 60 விண்ணப்பம் போட்டாய். அதற்கென்ன இப்போது? 

சு.ஆ.சு:  ஒரு விண்ணப்பத்திற்காவது பதில் கிடைத்ததா? சொல் பார்ப்போம்? 

சு.ம.வீ.: அது சரி, அதற்கு யார் என்ன செய்வார்கள்? உத்தியோகம் இருந்தால்தானே கிடைக்கும்.

சு.ஆ.சு.: உத்தியோகம் காலியாக இல் லையா? எனக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. பாசு பண்ணி அப்துல் ரஹ்மான், பறக்கருப்பன், ஜோசப், இரங்கசாமி நாய்க்கன், இராமசாமி நாடான் இவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துக்  காலமாகி ஒன்று இரண்டு பிர மோஷன்கூட ஆகிவிட்டது. நான் பி.ஏ. பிரசி டென்சி முதலாவதாக பாசு பண்ணி இருக்கின் றேன். என் விண்ணப்பத்திற்குப்  பதில் கூட இல்லை. இந்த கவர்ன்மெண்டை என்ன பண் ணுவது? 

சு.ம.வீ.: அது ஏன் எப்படி? உன் விண்ணப் பங்கள் போய்ச் சேருகிறதில்லையா? 

சு.ஆ,சு.: இல்லையப்பா, உங்கள் எழவுதான்.

சு.ம.வீ: என்ன சங்கதி?

சு.ஆ.சு: சுயமரியாதை என்று ஒரு கலகத்தை உண்டாக்கி அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று கூச்சல் போட்டுக் கடைசியாக அது எங்கள் தலையில்  வந்து விடிந்தது.

சு.ம.வீ: அடப்பாவி அதற்கு நாங்களா ஜவாப்தாரி? ஜஸ்டிஸ் கட்சிக்காரரல்லவா? அந்தப்படி கேட்டது.

சு.ஆ.சு.: அது எனக்கு தெரியும்,  ஜஸ்டிஸ் கட்சிக்காரர் முக்கி முக்கிப் பார்த்தும் ஒன்றும் முடியாமல் போய்க் கடைசியாக அவர்களே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்கின்றபோது உங்கள் எழவு சுயமரியாதை கலகம்  வந்து அதற்கு உயிர்  உண்டாக்கி எங்கள் தலையில் கையை  வைத்து விட்டது.

சு.ம.வீ: சரி, அதற்கும்-கதருக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்? 

சு.ஆ.சு.: அதனால்தான் காங்கிரசில் சேர்ந்தேன்.

சு.ம.வீ.: ஏன்?

சு.ஆ.சு.: இந்தக் கவர்ன்மெண்டை ஒழித்து விட்டு வேறு வேலை  பார்ப்பது என்றுதான்.

சு.ம.வீ.: உங்களால் ஒழித்து விட முடியுமா? 

சு.ஆ.சு.: ஏன் முடியாது ? மாளவியாவே சொல்லி விட்டாரே. ஒரு மாதத்தில் சுயராஜ்ஜியம் வரப்போகின்றது என்று சொல்லிவிட்டாரே. ஒரு சமயம் காந்தி சொன்னாலும்  சந்தேகப்படலாம். அவர் இப்படியே 5, 6 தரம்சொல்லி சொல்லி ஏமாற்றிவிட்டார்.  மாளவியா வாக்குத் தவறாது. 

சு.ம,வீ.: அப்படியே சுயராஜ்ஜியம் வந்து விட்டதாகவே வைத்துக்கொள். அப்போது மாத் திரம் உனக்கு உத்தியோகம் கிடைத்துவிடுமா?

சு.ஆ.சு.: ஏன் கிடைக்காது? இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவமெல்லாம் தவுடு பொடி யாகிவிடாதா? அதற்காகத்தானே சுயராஜ்ஜியம்  கேட்பது. இந்த வெள்ளைக்கார ஆட்சி கூட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்று சொன்னால் அதனிடம்  எங்களுக்கு என்ன சண்டை? 

சு.ம.வீ.: வகுப்புகள் இருக்கும் வரை வகுப்பு வாரி உரிமை வேண்டாமா?

சு.ஆ.சு.: வகுப்புவாதம் கூடாது என்றுதானே காங்கிரஸ் சொல்லுது.

சு.ம.வீ.: வகுப்புவாதம்  கூடாது என்பது சரிதான். வகுப்புப் போக வேண்டும் என்றும் காங்கிரஸ்  சொல்ல வேண்டாமா? 
சு.ஆ.சு.: அதுவும் போகத்தான் வேண்டும்.

சு.ம.வீ.: அப்படியானால் உங்கள் சுயராஜ்ஜியத்தில் மகமதியன், கிறிஸ்தவன் முதலாகிய வகுப்பெல்லாம் போய் விடுமா? 
சு.ஆ.சு.: இவைகளை  எப்படி போக்க முடியும்? 

சு.ம.சு.: அப்படியானால் அவரவர்களுக்குள்ள உரிமை கொடுக்கத்தானே வேண்டும்.?

சு.ஆ.சு.: ஒவ்வொருவருக்கும் தனித்தனித் உரிமை கேட்டால் அது வகுப்புவாத மில்லையா? 

சு.ம.வீ.: வகுப்பு போகாத சுயராஜ்ஜியத்தில் வகுப்புரிமை வேண்டாமா?

சு.ஆ.சு.: அது எப்படியோ போகட்டும்.  இந்துக்களுக்குள் கூட வகுப்புவாதம் எதுக்கு?

சு.ம.வீ.: உங்கள் சுயராஜ்ஜியத்தில் இந்துக் களுக்குள் சூத்திரன், பஞ்சமன் என்கின்ற தாகிய வகுப்புகளாவது இல்லாமல் போய்விடுமா? 

சு.ஆ.சு.: இப்படி பேசுவதுதான் வகுப்பு வாதம் என்பது?

சு.ம.வீ.: எப்படி?

சு.ஆ.சு.: வெகுகாலமாக பெரியவாள் காலம் தொட்டு  இருக்கின்ற வழக்கத்தைக் கேவலம் இந்த சுயராஜ்ஜியத்திற்காக ஒழிக்கவேண்டும் என்று சொல்வது நியாயமாகுமா? இதனால்தான் உங்களை தேசிய பத்திரிகைகள் வகுப்புத்து வேஷிகள் என்று கூப்பிடுகின்றார்கள். சுயராஜ்ஜியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சூத்திரன், பஞ்சமன் ஆகிய வகுப்புகள் இல்லாமல் செய்ய நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.

சு.ம.வீ.: ஏனப்பா அது என்னஅவ்வளவு கஷ்டம்?

சு.ஆ.சு.: இன்றைக்கு சூத்திரன் என்கின்ற வகுப்பு வேண்டாம். நாளைக்கு பஞ்சமன் என்கின்ற வகுப்பு வேண்டாம். நாளாண்ணைக்கு பிராமணன் என்கின்ற வகுப்பு வேண்டாம் என்பதாக வரிசையாய் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

சு.ம.வீ.: சொன்னால் என்னப்பா முழுகிப் போகும்?

சு.ஆ.சு.: குதிரையும். கழுதையும் ஒன்று என்றால் நீ ஒப்புக்கொள்வாயா?  

சு.ம.வீ.: அப்படியானால் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என்கின்றவர்களில் யார் குதிரை? யார் கழுதை? அதற்கு என்ன  அடை யாளம்? சொல் பார்ப்போம் (என்று சட்டையை முழங்கைக்குமேல் ஏற்றிச் சுருட்டினார் வீரையன்.)

சு.ஆ.சு.: அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா.  சங்கராச்சாரி சுவாமிகளிடமிருந்து பிராமணாள் எல்லோரும் காங்கிரசில் சேருங்கள் என்று ஒரு ரகசிய  ஸ்ரீமுகம் வந்ததாக எங்கப்பா சொன்னார். அதனால் சேர்ந்தேன்.  எங்கப்பாவும் எங்கமாமாவும் பேசிக் கொண்டிருந்ததை நான் சொன்னேன். என்மேல் கோபித்துக் கொள்ள வேண்டாம்.  என்னமோ என் வேலையை நான் பார்க்கிறேன். உன் வேலையைப் நீ பார். நமக்குள் சண்டையெதற்கு? என் அபிப்பிராய மெல்லாம் உனக்குத் தெரிந்ததுதானே? நான் போகிறேன், நேரமாச்சுது (என்று சொல்லிக்கொண்டே நழுவிவிட்டார்.)
- விடுதலை நாளேடு, 01.09.18