சனி, 1 செப்டம்பர், 2018

சுயமரியாதை வீரய்யச் செட்டியாருக்கும் சுய ஆட்சி சுப்பையருக்கும் சம்பாஷனை - சித்திரபுத்திரன் -

26.07.1931 - குடியரசிலிருந்து...

சு.ம. வீரையச்செட்டியார்: என்ன ஓய்! சு.ஆ.சுப் பைய்யரே நேற்றெல்லாம் சீமை வேட்டி கட்டிக்கொண்டிருந்தீர். இன்று திடீரென்று கதர் வேஷ்டியும், கதர் குல்லாயும், தடபுடலாயிருக் கின்றதே? 

சு.ஆ.சுப்பைய்யர்: ஒன்றும் விசேஷ மில்லை. இன்றுமுதல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். 

சு.ம.வீ: அதென்ன திடீரென்று சேர்த்து விட்டாய்? காங்கிரசைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாயே? சு.ஆ.சு.: நான் பி.ஏ. பாஸ்செய்து எத்தனை நாள் ஆச்சுது?

சு.ம.வீ: 3 வருஷமாச்சுது.

சு.ஆ.சு.: உத்தியோகத்திற்கு எத்தனை விண் ணப்பம் போட்டேன். உனக்குத் தெரியாதா? 

சு.ம.வீ: ஆம். சுமார் 50, 60 விண்ணப்பம் போட்டாய். அதற்கென்ன இப்போது? 

சு.ஆ.சு:  ஒரு விண்ணப்பத்திற்காவது பதில் கிடைத்ததா? சொல் பார்ப்போம்? 

சு.ம.வீ.: அது சரி, அதற்கு யார் என்ன செய்வார்கள்? உத்தியோகம் இருந்தால்தானே கிடைக்கும்.

சு.ஆ.சு.: உத்தியோகம் காலியாக இல் லையா? எனக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. பாசு பண்ணி அப்துல் ரஹ்மான், பறக்கருப்பன், ஜோசப், இரங்கசாமி நாய்க்கன், இராமசாமி நாடான் இவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துக்  காலமாகி ஒன்று இரண்டு பிர மோஷன்கூட ஆகிவிட்டது. நான் பி.ஏ. பிரசி டென்சி முதலாவதாக பாசு பண்ணி இருக்கின் றேன். என் விண்ணப்பத்திற்குப்  பதில் கூட இல்லை. இந்த கவர்ன்மெண்டை என்ன பண் ணுவது? 

சு.ம.வீ.: அது ஏன் எப்படி? உன் விண்ணப் பங்கள் போய்ச் சேருகிறதில்லையா? 

சு.ஆ,சு.: இல்லையப்பா, உங்கள் எழவுதான்.

சு.ம.வீ: என்ன சங்கதி?

சு.ஆ.சு: சுயமரியாதை என்று ஒரு கலகத்தை உண்டாக்கி அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று கூச்சல் போட்டுக் கடைசியாக அது எங்கள் தலையில்  வந்து விடிந்தது.

சு.ம.வீ: அடப்பாவி அதற்கு நாங்களா ஜவாப்தாரி? ஜஸ்டிஸ் கட்சிக்காரரல்லவா? அந்தப்படி கேட்டது.

சு.ஆ.சு.: அது எனக்கு தெரியும்,  ஜஸ்டிஸ் கட்சிக்காரர் முக்கி முக்கிப் பார்த்தும் ஒன்றும் முடியாமல் போய்க் கடைசியாக அவர்களே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்கின்றபோது உங்கள் எழவு சுயமரியாதை கலகம்  வந்து அதற்கு உயிர்  உண்டாக்கி எங்கள் தலையில் கையை  வைத்து விட்டது.

சு.ம.வீ: சரி, அதற்கும்-கதருக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்? 

சு.ஆ.சு.: அதனால்தான் காங்கிரசில் சேர்ந்தேன்.

சு.ம.வீ.: ஏன்?

சு.ஆ.சு.: இந்தக் கவர்ன்மெண்டை ஒழித்து விட்டு வேறு வேலை  பார்ப்பது என்றுதான்.

சு.ம.வீ.: உங்களால் ஒழித்து விட முடியுமா? 

சு.ஆ.சு.: ஏன் முடியாது ? மாளவியாவே சொல்லி விட்டாரே. ஒரு மாதத்தில் சுயராஜ்ஜியம் வரப்போகின்றது என்று சொல்லிவிட்டாரே. ஒரு சமயம் காந்தி சொன்னாலும்  சந்தேகப்படலாம். அவர் இப்படியே 5, 6 தரம்சொல்லி சொல்லி ஏமாற்றிவிட்டார்.  மாளவியா வாக்குத் தவறாது. 

சு.ம,வீ.: அப்படியே சுயராஜ்ஜியம் வந்து விட்டதாகவே வைத்துக்கொள். அப்போது மாத் திரம் உனக்கு உத்தியோகம் கிடைத்துவிடுமா?

சு.ஆ.சு.: ஏன் கிடைக்காது? இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவமெல்லாம் தவுடு பொடி யாகிவிடாதா? அதற்காகத்தானே சுயராஜ்ஜியம்  கேட்பது. இந்த வெள்ளைக்கார ஆட்சி கூட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்று சொன்னால் அதனிடம்  எங்களுக்கு என்ன சண்டை? 

சு.ம.வீ.: வகுப்புகள் இருக்கும் வரை வகுப்பு வாரி உரிமை வேண்டாமா?

சு.ஆ.சு.: வகுப்புவாதம் கூடாது என்றுதானே காங்கிரஸ் சொல்லுது.

சு.ம.வீ.: வகுப்புவாதம்  கூடாது என்பது சரிதான். வகுப்புப் போக வேண்டும் என்றும் காங்கிரஸ்  சொல்ல வேண்டாமா? 
சு.ஆ.சு.: அதுவும் போகத்தான் வேண்டும்.

சு.ம.வீ.: அப்படியானால் உங்கள் சுயராஜ்ஜியத்தில் மகமதியன், கிறிஸ்தவன் முதலாகிய வகுப்பெல்லாம் போய் விடுமா? 
சு.ஆ.சு.: இவைகளை  எப்படி போக்க முடியும்? 

சு.ம.சு.: அப்படியானால் அவரவர்களுக்குள்ள உரிமை கொடுக்கத்தானே வேண்டும்.?

சு.ஆ.சு.: ஒவ்வொருவருக்கும் தனித்தனித் உரிமை கேட்டால் அது வகுப்புவாத மில்லையா? 

சு.ம.வீ.: வகுப்பு போகாத சுயராஜ்ஜியத்தில் வகுப்புரிமை வேண்டாமா?

சு.ஆ.சு.: அது எப்படியோ போகட்டும்.  இந்துக்களுக்குள் கூட வகுப்புவாதம் எதுக்கு?

சு.ம.வீ.: உங்கள் சுயராஜ்ஜியத்தில் இந்துக் களுக்குள் சூத்திரன், பஞ்சமன் என்கின்ற தாகிய வகுப்புகளாவது இல்லாமல் போய்விடுமா? 

சு.ஆ.சு.: இப்படி பேசுவதுதான் வகுப்பு வாதம் என்பது?

சு.ம.வீ.: எப்படி?

சு.ஆ.சு.: வெகுகாலமாக பெரியவாள் காலம் தொட்டு  இருக்கின்ற வழக்கத்தைக் கேவலம் இந்த சுயராஜ்ஜியத்திற்காக ஒழிக்கவேண்டும் என்று சொல்வது நியாயமாகுமா? இதனால்தான் உங்களை தேசிய பத்திரிகைகள் வகுப்புத்து வேஷிகள் என்று கூப்பிடுகின்றார்கள். சுயராஜ்ஜியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சூத்திரன், பஞ்சமன் ஆகிய வகுப்புகள் இல்லாமல் செய்ய நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.

சு.ம.வீ.: ஏனப்பா அது என்னஅவ்வளவு கஷ்டம்?

சு.ஆ.சு.: இன்றைக்கு சூத்திரன் என்கின்ற வகுப்பு வேண்டாம். நாளைக்கு பஞ்சமன் என்கின்ற வகுப்பு வேண்டாம். நாளாண்ணைக்கு பிராமணன் என்கின்ற வகுப்பு வேண்டாம் என்பதாக வரிசையாய் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

சு.ம.வீ.: சொன்னால் என்னப்பா முழுகிப் போகும்?

சு.ஆ.சு.: குதிரையும். கழுதையும் ஒன்று என்றால் நீ ஒப்புக்கொள்வாயா?  

சு.ம.வீ.: அப்படியானால் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என்கின்றவர்களில் யார் குதிரை? யார் கழுதை? அதற்கு என்ன  அடை யாளம்? சொல் பார்ப்போம் (என்று சட்டையை முழங்கைக்குமேல் ஏற்றிச் சுருட்டினார் வீரையன்.)

சு.ஆ.சு.: அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா.  சங்கராச்சாரி சுவாமிகளிடமிருந்து பிராமணாள் எல்லோரும் காங்கிரசில் சேருங்கள் என்று ஒரு ரகசிய  ஸ்ரீமுகம் வந்ததாக எங்கப்பா சொன்னார். அதனால் சேர்ந்தேன்.  எங்கப்பாவும் எங்கமாமாவும் பேசிக் கொண்டிருந்ததை நான் சொன்னேன். என்மேல் கோபித்துக் கொள்ள வேண்டாம்.  என்னமோ என் வேலையை நான் பார்க்கிறேன். உன் வேலையைப் நீ பார். நமக்குள் சண்டையெதற்கு? என் அபிப்பிராய மெல்லாம் உனக்குத் தெரிந்ததுதானே? நான் போகிறேன், நேரமாச்சுது (என்று சொல்லிக்கொண்டே நழுவிவிட்டார்.)
- விடுதலை நாளேடு, 01.09.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக