வியாழன், 27 டிசம்பர், 2018

மதங்கள் எல்லாம் செத்துப்போனவைகளே! (1)

கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை


- சித்திரபுத்திரன் -


21-12-1930 - குடிஅரசிலிருந்து....

அர்ஜுனன் : ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி, வஞ்சித்து வசப்படுத்தினதாகவே காணப்படுகின்றனவே; அதுமாத்திரமல்லாமல் அந்த பெண் வேஷத் தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன் : ஓ! அர்ஜுனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒருநாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு நான் பெண் வேஷம் எப்படிப் போடமுடியும். அப்படிப் போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும். ஒரு சமயம் திரு அ. இராகவன் சொல்லுவது போல் ஆண், ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படி பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்ப்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்பவனுக்குப் புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல்லப்பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.

அர்ஜுனன் : அந்த தத்துவார்த்தம் என்ன? எனக்குச் சற்று சொல்லு பார்ப்போம்.

கிருஷ்ணன் : அந்தமாதிரி எழுதின தத்துவார்த்தம் என்னவென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும் எதிரியை ஜெயிக்க போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் இந்த வழி மிக சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணைக் கூட்டிப்போய் காட்டியோ, அல்லது அவனுக்கு கூட்டி விட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த்தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் இரகசியங்களில் ஒன்று என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்பவும் உலக வழக்கில் சகதியில்லாதவன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந்திருந்தால் அதற்குப் பொதுஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது சக்கரத்தின் மகிமையினால் சம்பாதித்துதான் வெற்றிப் பெற்றான்; பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்கள் கூடச் சொல்லுவதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என்(விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர். பெண்கள். . . . க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்தத் தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம். ஆதலால் வெற்றி பெறுவதற்கு ஒருவழி என்பதைக்காட்டும் தத்துவப் பொரு ளுக்காகவே பெரியோர்கள் இப்படி எழுதி வைத்தார்கள். புராணங்களில் உள்ள ஒவ்வொரு வரிக்கும், எழுத்துக்கும் இது போலவே தத்து வார்த்தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றைப் பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்த பழக்கமும் வழக்கமும் தத்துவார்த்தத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமு மாகியவைகளெல்லாம் சுயமரியாதைக்காரருக்கு அல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.

அர்ஜுனன் : சரி சரி. இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம். சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு புண்ணியம் உண்டு.

கிருஷ்ணன் : அதென்ன சொல்லு பார்ப்போம்

அர்ஜுனன் : அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்யாசி ரூபமாக, பக்தன் ரூபமாக வந்து ஒருவனின் பெண்ஜாதியை கேட்டான் என்றும் அந்தப் படியே அவன் கொடுத்தானென்றும் சொல்லப்படுகின்றதே அதன் ரகசியம் என்ன?

கிருஷ்ணன் : இது தெரியவில்லையா?

அர்ஜுனன் : தெரியவில்லையே

கிருஷ்ணன் : சன்யாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகதன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்ய வேண்டியதும் கிரகதன் கடமையாகத்தானே இருக்க வேண்டும். அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்தப்படி சன்யாசிக்குப் பெண் களைக் கொடுக்கும்போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்யாசி ரூபமாய், ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்யாசியாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டிற்கு வந்தால், அவன் கேட்டவுடனேயே கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. அதாவது இந்த சன்யாசி சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்துவிடட்டும் என்றும், அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப் பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக்காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.

தவிரவும், குரு, சாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப் பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்துக் கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்த அந்த வீட்டுக்காரருக்கு இந்த புண்ணியமும் கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன். சிலர் தெரிந்தே விட்டுக்கொண்டிருக் கின்றார்கள். சிலர் தெரியாதது போலவே காட்டிக் கொண்டுமிருக்கிறார்கள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.

- தொடரும்

 - விடுதலை நாளேடு, 21.12.18

 


திங்கள், 17 டிசம்பர், 2018

கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்



10 & 17.08.1930 - குடிஅரசிலிருந்து...

உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட் டொழிந்தாகவே வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல வரவில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. ராமசாமி கடவுள் இல்லை என்கிறான்.

பூசை வேண்டாம் என்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும் பஞ்சாமிர்தத் தையும் குளிப்பாட்டுதலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சியையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப் படுத்து.

உன் செல்வத்தை வீணாக கடவுளுக்கென்று அழிக்காதே என்றே சுயமரியாதை இயக்கம் சொல்லு கிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய்வங்களது நிலைமையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்க வேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும்.

நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத்தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.

- விடுதலை நாளேடு, 14.12.18

ஆலயங் கட்டியவர்கள் கதி

10 & 17.08.1930 - குடிஅரசிலிருந்து...

தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன் னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்தி ரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக் கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக்காரன் தான் சொத்துக்கு கொடுக்கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?

பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டு கிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தைகள்பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக் கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்கு கிறார்கள். அந்த குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட்டாதே என்று தான் யோக் கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித்துக் கொள்ளாது. அப்படி கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்? (சிரிப்பு) இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண் யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்? கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது. முதல் மனிதன் அயோக்கி யனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக்காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று.

இந்த மோட்ச நம்பிக் கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனுபவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப் பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதி னோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில் லாமற் போய் விட்டது.

தான் மோட்ச மார்க்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்ப வனாகவும் இருக்க வேண்டியதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.

- விடுதலை நாளேடு, 14.12.18

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (1)

28.09.1930- குடிஅரசிலிருந்து...  சகோதரிகளே! சகோதரர்களே!!


இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களில் ஓர் அம்சமாகிய மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதி தாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென்பதற்கு முக்கியமாய் வேண்டியது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்துவமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ, அது போலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் படவேண்டிய தில்லை. ஒரு பெண் ணையோ, பல பெண்களையோ மனைவி யாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண் ணையோ, பல பெண்களையோ வைப் பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனு பவித்துக் கொண்டிருக் கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வருகின் றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லு கின்றோமே தவிர மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும் பான்மையான மக்களின் நடப்புக்கு விரோமான தத்துவங்கள் எதுவும் அதி லில்லை.

நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங் களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கமாகும். மற்றொருவர் அனுபவித்த பெண்ணை அல்லது அனுபவித்துக் கொண்டி ருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசைப்படுகிறான். அவற்றில் சிலது அனுப விக்க கிடைத்துவிட்டால் சிலசமயங்களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுபவித்ததாக மகிழ்ச்சிய டைவதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமையையும் உற்சாகத்தையும் அடை கின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு அளவே இல்லை. ஆகவே இம்மாதிரி தற்கால அவசிய மாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத்தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான்மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை. ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திரு மண விஷயத்தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண் ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய் தோன்றாது.

பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவைத் தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்பட்டுவிட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய் விடும். உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை அவர்களுக்குள்ள சுதந்திரத்தினால் தங்களின் அப்படிப்பட்ட ஒரு நிலையைக் காட்ட ஒரு பெயரை பழக்கத்தில் கொண்டு வருவதற்கில் லாமல் செய்து விட்டார்கள்.

சாதாரணமாக, கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடு கின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புரு ஷனை விதவன் என்று கூப்பிட வேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் என்கின்ற பதங்கள் இருக்கின்றன. இந்த விடோ என் பதும் விதவை என்பதும் ஒரு சொல் மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வட மொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தைகளுக்குள்ள சம்பந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமது புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாததால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூழ்ச்சிதான் விதவைத் தன் மைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம் பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமையோ ஒன்றுமில்லை.

அன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக் கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ளவர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன்றும். தவிரவும் பெண்ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச்சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000ரூ பெறுமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும். தவிரவும் இம் மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.

சாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திரமல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம்கூட சில வகுப்புகளில் இருந்து வருகிறது. எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம் படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டி மார்கள் சில வகுப்புப் பண்டாரங்கள் என்ப வர்கள் சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங்கர்கள், செங்குந்தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத்தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய வகுப்புகளில் சில வற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருது கின்றார்கள் என்று தெரிந்து விசனிக்கிறேன். சில இடங்களில் அனுபவத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜ நாயுடு என்பது போன்ற வைகளில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதை கவனியாமல் இப் போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கிறது. எனது தங்கைப் பெண்ணுக்கு விதவை மணம் செய்யப்பட்டிருக்கின்றது.

- விடுதலை நாளேடு, 15.12.18

வெள்ளி, 14 டிசம்பர், 2018

குசேலருக்கு வெட்கமாக இருந்திருக்காதா??

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து,குடும்பம் பெருத்து விட்டதாம்,அதனால் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் திண்டாடினாராம்..

குசேலரின் பெண்ஜாதி வருசத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும், கைக்குழந்தைக்கு ஒரு வருஷமாகும் போது, மூத்த பிள்ளைக்கு 27 வருசம் ஆகி இருக்க வேண்டும்..

ஆகவே,

20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேர் இருந்திருப்பார்கள்..

இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிகளா??

20 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சை எடுக்கப் போக குசேலருக்கு வெட்கமாக இருந்திருக்காதா??

அல்லது இந்த 7 பிள்ளைகளுக்காவது மான அவமானம் இருந்திருக்காதா??

அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, தடிப்பயல்களை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிறாயே, வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா???

--பகுத்தறிவு இதழில், 1935 ல் பெரியார்
- இசையின்பன் முக நூல் பதிவிலிருந்து

திங்கள், 10 டிசம்பர், 2018

பெரியாரை பற்றி தெரியாத தற்குறிகளுக்கு சில செய்திகள்

#கட்செவியிலிருந்து
பெரியாரை பற்றி தெரியாத தற்குறிகளுக்கு சில செய்திகள்
************************************
தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்.

தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்! அந்த பெரிய மனிதருக்கு இருந்த நேர்மை பணிவு கூட இங்கே விசத்தை கக்க வரும் நபர்களுக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது

95 வது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று கேட்கும் நன்றி மறந்த பார்ப்பன தமிழ் அடிமையே
நன்றாகக் கேள்  கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இட ஒதுக்கீடு, அதை பெற்றுத்தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம்.

அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும் மருத்துவராகவோ பொறியாளராகவோ உயரயதிகாரியாகவோ வாய்ப்பு இருந்திருக்காது. பெரியாரின் உழைப்பை மறந்த நன்றிகெட்ட பார்ப்பன அடிமை தமிழர்களே இனியாவது உணர்ந்துகொள்

அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும் அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார், எங்கள் சுயமரியாதைக்காகவும், இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதம் ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார், அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள், ஏ நன்றி கெட்ட பார்ப்பன அடிமை தமிழனே அவரால் உயர்வடைந்துவிட்டு  இன்று கேட்பாய் பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று

நால்வர்ணத்தைக் கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள் திருக்குறளை வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார். அந்த பெரியாரை மறந்த பார்ப்பன அடிமை தமிழர்ககே இன்று தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று வஞ்சமாக கூக்குரலிடும் அயோக்கியர்களே
உன் வேதம் காட்டுமிராண்டி தனமானது
அதை தவிர தமிழில் வேறு என்ன இலக்கியம் உள்ளது தமிழை காட்டுமிராண்டி மொழியாக்கியதே உன் வேதங்கள் தானே இதை என்று உணர போகிறாய்?

பதில் கிடைக்குமா... பார்ப்பன அடிமைகளே...?

'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.
அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது? என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்? "
- அய்யா பெரியார் .

பெரியார் என்னும் சகாப்தம்

90-வது வயதில்  _  180 கூட்டம்.
91-வது வயதில்  _  150 கூட்டம்.
93-வது வயதில்  _  249 கூட்டம்.
94-வது வயதில்  _  229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ?

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ?

நான் சொல்வதை கேட்டால் தான்
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம்
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்............

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில், 

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே

பெரியாருக்கு நிகராக  எவானவது  உண்டா?

பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று கேட்கும் தற்குறிகளுக்கு

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...........
1.ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.
2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.
3.தங்க நகைகள் அணியக் கூடாது.
4.மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.
5.ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.
6.சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
7.திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
8.பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.
9.குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.
10.பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.
11.மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.
12.உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.
13.பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
14.நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.

இன்னும் பல...

இதை எல்லாம் மாற்றியது யார்
நீ அடிமையாக இருக்கும் பார்ப்பன தலைமையா?

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

வருணங்களின் அமைப்பு முறை

தந்தை பெரியார்
பஞ்சமர் - பெயர்ச்சொல்!
அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத அய்ந்தாவது ஜாதியினர்.
சூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்த வர்களா?
தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும், சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன வென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நமக்கு இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமே, மனுஸ்மிருதியே என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டி னருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பெழுது ஆராயத் தேவையில்லை.
சூத்திரர் என்பது என்ன ? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டி ருக்கிறது. அப்பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.
அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப்படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி சூத்திரர் என்பதற்கு ஆதாரப்படி தாசிமகன் என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.
இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும், ஸ்நானம் செய்வதற்கே, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கே, வீதியில் நடப்பதற்கே, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேல்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர்களேடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர் களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்து கொள்ளுவதையும், சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்து கொள்ளுவதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்கள்.
நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரியனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் பேகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கெண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டாதவராகவும், இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம். பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல், அவர் களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.
இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப்பட்டு விடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாள னாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத் தனையோ உயர்குணங்களும், எவ்வித இழிவுமற்ற நம்மையா தேவடியாள் மகன், வைப்பாட்டி மகன், அடிமையென்று அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றனர்.
இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்து கொண்டு நம்மை ஒருவன் வைப்பாட்டி மகனெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட் டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. இது எதைப் போலிருக்கிற தென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு இந்துக்கள் என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும், நாமும் இந்துக்களாகவும், இந்தியாவின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை அல்லாதார் என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு மகமதியரல்லாதார் பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.
ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப் பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும், இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.
பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக் கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாமிசம் சாப் பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் கள் உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்க மாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும், இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கோ, தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ, வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய் கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார் களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா ? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்து விட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக் கிறோம்.
மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாத வனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க் காதார் என்று சொல்லக்கூடுமா? அப்படியே சொல்வ தானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை  - மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?
கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்றும் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக்கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக் கூடியவர்களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறேம். இந்தப் பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக் கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப் படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடு தலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள்.
இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கெண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டி ருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 - வது வருஷத்து ஆக்ட்டும், ரௌலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது? மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோ தரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்த வர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்துபோகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரவுலட் சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன்? இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா? தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...
- குடிஅரசு - 7.6.1925, 21.6.1925, 28.6.1925 நூல்:- பெரியார் களஞ்சியம், குடிஅரசு தொகுதி -1
- விடுதலை நாளேடு, 9.12.18