திங்கள், 17 டிசம்பர், 2018

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (1)

28.09.1930- குடிஅரசிலிருந்து...  சகோதரிகளே! சகோதரர்களே!!


இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களில் ஓர் அம்சமாகிய மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதி தாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென்பதற்கு முக்கியமாய் வேண்டியது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்துவமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ, அது போலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் படவேண்டிய தில்லை. ஒரு பெண் ணையோ, பல பெண்களையோ மனைவி யாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண் ணையோ, பல பெண்களையோ வைப் பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனு பவித்துக் கொண்டிருக் கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வருகின் றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லு கின்றோமே தவிர மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும் பான்மையான மக்களின் நடப்புக்கு விரோமான தத்துவங்கள் எதுவும் அதி லில்லை.

நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங் களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கமாகும். மற்றொருவர் அனுபவித்த பெண்ணை அல்லது அனுபவித்துக் கொண்டி ருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசைப்படுகிறான். அவற்றில் சிலது அனுப விக்க கிடைத்துவிட்டால் சிலசமயங்களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுபவித்ததாக மகிழ்ச்சிய டைவதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமையையும் உற்சாகத்தையும் அடை கின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு அளவே இல்லை. ஆகவே இம்மாதிரி தற்கால அவசிய மாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத்தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான்மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை. ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திரு மண விஷயத்தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண் ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய் தோன்றாது.

பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவைத் தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்பட்டுவிட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய் விடும். உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை அவர்களுக்குள்ள சுதந்திரத்தினால் தங்களின் அப்படிப்பட்ட ஒரு நிலையைக் காட்ட ஒரு பெயரை பழக்கத்தில் கொண்டு வருவதற்கில் லாமல் செய்து விட்டார்கள்.

சாதாரணமாக, கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடு கின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புரு ஷனை விதவன் என்று கூப்பிட வேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் என்கின்ற பதங்கள் இருக்கின்றன. இந்த விடோ என் பதும் விதவை என்பதும் ஒரு சொல் மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வட மொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தைகளுக்குள்ள சம்பந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமது புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாததால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூழ்ச்சிதான் விதவைத் தன் மைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம் பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமையோ ஒன்றுமில்லை.

அன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக் கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ளவர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன்றும். தவிரவும் பெண்ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச்சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000ரூ பெறுமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும். தவிரவும் இம் மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.

சாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திரமல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம்கூட சில வகுப்புகளில் இருந்து வருகிறது. எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம் படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டி மார்கள் சில வகுப்புப் பண்டாரங்கள் என்ப வர்கள் சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங்கர்கள், செங்குந்தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத்தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய வகுப்புகளில் சில வற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருது கின்றார்கள் என்று தெரிந்து விசனிக்கிறேன். சில இடங்களில் அனுபவத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜ நாயுடு என்பது போன்ற வைகளில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதை கவனியாமல் இப் போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கிறது. எனது தங்கைப் பெண்ணுக்கு விதவை மணம் செய்யப்பட்டிருக்கின்றது.

- விடுதலை நாளேடு, 15.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக