புதன், 3 ஜூலை, 2024

தோழர் வீரமணியின் சேவை

 

தோழர் வீரமணியின் சேவை – தந்தை பெரியார்

டிசம்பர் 1-15 2018

வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர். எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்-கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளா-விட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது ‘விடுதலை’ ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து, அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைத்து விட்டேன்.

‘விடுதலை’ பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!

இனி. ‘விடுதலை’க்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார்.

எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்த பொறுப்பை ஏற்கிறார் என்றால் ‘விடுதலை’யை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் ‘விடுதலை’ பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் 1க்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்கு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அதை வாடகைக்கு கொடுப்பதைவிட நிறுத்திவிடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன்வந்தார்.

ஆகவே, விடுதலையின் 25வது ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை ‘விடுதலை’ நடப்புக்கு ஆக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி ‘விடுதலை’யை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதற்கு பொது மக்கள் இல்லாவிட்டாலும், ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், நம் மக்களிடம் எந்தக் குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது; கிடையவே கிடையாது. அது இல்லாவிட்டாலும் நம்பிக்கைத் துரோகம், செய்யாமலாவது இருப்பது என்பது அரிது. மிக மிக அரிது. ஆதலால் விடுதலைக்குப் பொதுமக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு, பல தொல்லைகள் ஏற்பட்டும் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. இது எனக்கு அனுபவம்.

இயக்கத் தோழர்கட்கு வேண்டுகோள்

ஆனால் இயக்கத் தோழர்களை, எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கும் இயக்கத்துக்கும் கத்தி தீட்டும், தீட்டி வெளியேறிய தோழர்களைத் தவிர்த்து, மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் தங்கள் நலனுக்கு எந்தவிதப் பலனும் அடையாமல் அவர்களது பணத்தி-லேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தைச் செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்கத் தோழர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.

‘விடுதலை’ பத்திரிகை, நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வரவேண்டுமானால், இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆக-வேண்டும். இதற்குப் பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன்.

ஓர் ஆண்டுக்குள் மேலும் 5,000 சந்தா பெருகி ஆக வேண்டும். அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது உடனடியாக 2 மாதத்தில் 2,500 சந்தா அதிகமாகச் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும்.

இன்று நமது இயக்கம் இதுவரை இருந்த அளவை விட உச்ச நிலையில் இருக்கிறது. இது உண்மை என்பது மெய்ப்பிக்க வேண்டுமானால் இது தான் பரிட்சை. ஆதலால் நான் வீரமணி அவர்களைப் பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசையோடு, விடுதலையின் 25வது ஆண்டில் அதை மறுபிறவி எடுக்கும்படி அவரிடம் ஒப்புவிக்கிறேன்.

இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை நிறைவேற்றி, எங்களைப் பெருமைப்படுத்தி விடுதலையை வாழவைத்து வீரமணி அவர்-களையும் உற்சாகப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நாளை முதலே தோழர்கள் இந்தக் காரியத்தில் இறங்கிச் செயல்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு ஆக, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தா சேர்த்துத் தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

‘விடுதலை’யின் சேவையை எடுத்து விளம்புங்கள்!

நமது இயக்கம், நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள். இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக்குங்கள்.

அதிகாரிகளை, அரசாங்க சிறிய உத்யோகஸ்தர்களை, வியாபாரிகளை விவசாயப் பொது மக்களை தைரியமாய் அணுகுங்கள்; வெட்கப்படாதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் இன உணர்ச்சியையும் சமுதாய நலன் உணர்ச்சியையும் பரீட்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக் குறைவு நேர்ந்து விடாது.

ஆண்டு மாத காலம் 60 நாட்களில் 2500 சந்தா, தினம் 42 சந்தா, 13 மாவட்டங்களில் 13 மாவட்டத்தில் 100 வட்டங்கள் (தாலுக்காக்கள்) பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தாவீதமாகும். இதுகூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறுபிறப்புக்கு கைகூடவில்லை என்றால், நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று வேண்டி, இந்த வேண்டுகோளை விண்ணப்பமாகத் தமிழ்நாட்டு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

–  விடுதலை, 6.6.1964

செவ்வாய், 2 ஜூலை, 2024

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பக்தர்களைப் புண்படுத்தவா?

 

ஏடுகளில் வந்தவை எடை மேடையில் : தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பக்தர்களைப் புண்படுத்தவா?

ஆகஸ்ட் 01-15 2019

மஞ்சை வசந்தன்

அறிவுடையவனை அறிவாளி, கொள்ளை அடிப்பவனை கொள்ளையன், போராடு கின்றவனைப் போராளி என்பது போல,  தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்களும் காரணத்துடன் கூடிய தத்துவ வரிகளே!

காரணமின்றி ஒரு செயல் செய்கிறவனை பைத்தியக்காரன் என்றுதானே அழைப்போம்! சர்வசக்தியுள்ள கடவுள் என்றால் அதைக் காப்பாற்ற பூட்டு போடுவதேன்? அதைக் கடத்திச் செல்கிறான் என்றால் அதற்குச் சக்தியில்லையென்றுதானே பொருள்? அப்படிச் சக்தியில்லாத ஒன்றைக் கடவுளாகக் கற்பித்தவன் முட்டாள்தானே?

இப்படிப்பட்ட மூடத்தனத்தை சுயநலத்திற்காக ஒருவன் பரப்புகிறான் என்றால் அவன் அயோக்கியன்தானே?

கடவுளுக்காக பெற்ற பிள்ளையை பலி கொடுக்கிறான்; கடவுள் பெயரால் மோதிக்கொண்டு, வெட்டிக் கொண்டு சாகிறான் என்றால் அவன் காட்டுமிராண்டிதானே! இவையெல்லாம் சரியென்றால், பெரியார் சொல்வதும் சரிதானே?

ஆனால், ஒரு பார்ப்பன ஏடு, பக்தர்களை பெரியார் புண்படுத்துகிறார் என்று எழுதியுள்ளது.

பிராமணன் என்று ஒருவன் தன்னைக் கூறிக் கொண்டு பூணூல் போட்டுக் கொள்கிறான் என்றால், மற்றவர்களை அவன் சூத்திரன் என்று இழிவுபடுத்தும்போது மற்றவர்கள் மனம் புண்படாதா? மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் பூணூலை அவன் அகற்றாமல் அணிவது சரி; உள்ளதை உள்ளபடி கூறினால் அது தப்பா? சிந்திக்க வேண்டாமா?

நீதிமன்றத் தீர்ப்பு

பெரியார் சிலையின் அடியில் உள்ள கடவுள் பற்றிய வாசகங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன தெரியுமா?

தந்தை பெரியார் சிலையின் அடிபீடத்தில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை எதிர்த்து, துணை மேயராக இருந்த டி.ஜி.கிருஷ்ணசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போட்டிருந்தார்.

11.10.1973 பகல் 1:30 மணியளவில் ‘ரிட்’ மனுவை அனுமதிப்பதா இல்லையா என்பது பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது-.

நீதிபதி மனுதாரர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டபடி இவ்வாசகங்கள் பொது ஒழுக்கத்தைப் பாதிப்பதாகக் கருத இடமில்லை என்றும் இ.பி.கோ 295-25(1) பிரிவின் கீழ் இது வராது என்று சுட்டிக்காட்டி ரிட் மனுவை தள்ளுபடி செய்தார்.

பெரியார் தந்த விளக்கம்:

‘‘கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள்; துள்ளிக் குதிக்கிறார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள். பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகப் பூச்சண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரச்சார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான்.

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே, நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டும்? “உண்டாக்கியவன் முட்டாள்’’ என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே, நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா?

கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்? ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு; அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். “அன்பும் கருணையும், ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்’ யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான மக்களை, ஆண்களை, பெண்களைக் கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும், விபசாரம் செய்ததாகவும், நடப்பில் நடத்திக்காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர்கள் அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு, இதற்கு இரையாகிறவர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்குகிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன்.

இப்படி நான் எழுதுவதில் “சிலர் மனம் புண்படாதா? என்று கேட்கலாம். அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்!

ஏனெனில், எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத்தைத்தான், மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிக மிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, அய்ந்து தலை, ஆறு தலை, ஆயிரம் தலையும் அவை போன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை_மனிதன், உடல்_மிருகம் முதலிய உருவங்கள் கொண்ட சிலைகளையும் வணங்குகின்றான் என்றால் இது முட்டாள் _ காட்டுமிராண்டித்தனமானது அல்லவா என்றுதான் கேட்கிறேன்.

கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான். மற்றவனைக் கொன்றான். மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான். பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன் என்று விளக்கினார் பெரியார்.

சுப்பிரமணியனது பிறப்பு

 

பெரியார் பேசுகிறார் : சுப்பிரமணியனது பிறப்பு

நவம்பர் 01-15 2019

விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக் கூறியது:-

1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும் என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார்.

பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரமதேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி  ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற, அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக் குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

இவ்வரலாறு வால்மீகி ராமாயணத்தில் “சிவன் பார்வதியை புணர்ந்தது’’ என்று தலைப்பெயர் கொண்ட 36ஆவது சருக்கத்திலும் “குமாரசாமி உற்பத்தி’’ என்கின்ற 37ஆவது சருக்கத்திலும் காணப்படுகின்றது.

இரண்டாவது வரலாறு, தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை அழிப்பதற்கு தகுந்த சக்தி கொண்ட ஒரு குழந்தையைப் பெற்றுத்தர வேண்டுமென்று வேண்ட, சிவன் அருள்கூர்ந்து தனது அய்ந்து முகங்களுடன் மற்றும் ஒரு முகத்தையும் சேர்த்துக் கொண்டு தோன்ற அவ்வாறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் ஆறிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் வெளியாக, அப் பொறிகளைக் கண்டு தேவர்களும் மனிதர்களும் நடுங்கி பரமனை வேண்ட, பரமன் அப் பொறிகளை கங்கையில் விடும்படி சொல்ல அவர்கள் அப்படியே செய்ய, கங்கை அது தாங்க மாட்டாமல் அவற்றைக்கொண்டு சரவணத்தில் செலுத்த, அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகைப் பெண்கள் அறுவரும் பால் கொடுத்து வளர்த்து வந்தார்கள்.

பிறகு சிவன் பெண்ஜாதி பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்துக் கட்டி அணைத்து முத்தமிட்டு பாலூட்டுகையில் அவ்வாறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆகிவிட்டது. இதற்கு ஆறுமுகமுடையதால் ஆறுமுகன் என்றும் கங்கையாறு ஏந்திச் சென்றதால் காங்கேயன் என்றும் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இது கந்தபுராணத்திலும் முருகன் கதையிலும் உள்ளது.

குறிப்பு:-சுப்பிரமணியன் பிறப்புக்கு மேல்கண்டபடி இரண்டு கதைகள் காணப்பட்டாலும் கந்த புராணத்தின் கதைப்படி பார்த்தாலுமே, வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமருக்குச் சொன்னதாகச் சொல்லப்படும் மேற்கண்ட கதைதான் உறுதியாகின்றது. ஏனெனில், கந்தபுராணத்திலும் பார்வதியானவள் தன் மூலியமாய் பிள்ளை பெறுவதை தடுத்ததற்காக தேவர்கள் மீது கோபித்து தேவர்களை “பிள்ளையில்லாமல் போகக் கடவது’’ என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது. சிவனது நெற்றிக் கண்ணி லிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும் பட்சத்தில் பார்வதிக்கு தேவர்களிடத்தில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட நியாயம் இல்லை.

இந்தக் கோபம் உண்டாவதற்குக் காரணம், வால்மீகி ராமாயணத்தில் சொல்வது போல், அதாவது 100 தேவ வருஷம் சிவன் பார்வதியைப் புணர்ந்து கடைசியாக வீரியம் வெளிப்பட்டு கருதரிக்கும் சமயத்தில் தேவர்கள் குறுக்கிட்டு சிவனை தனது வீரியத்தை பார்வதி கர்பத்துக்குள் விடாமல் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டினதால் சிவன் அதை எடுத்துக் கொண்டதற்கு பார்வதி கோபித்து வீரியம் ஸ்கலிதமாக்கும் சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்தது, அதாவது தன்னைப் போலவே தேவர்களுடைய பெண்சாதிகள் எல்லோரும் பிள்ளையில்லாமல் மலடிகளாக வேண்டுமென்று சபித்ததாகக் காணப்படுவது நியாயமாக இருக்கின்றது.

அன்றியும் பார்வதி தனது கர்ப்பத்தில் விழ வேண்டிய வீரியத்தை பூமி பெற்றுக் கொண்டதால் பூமியையும் பார்வதி தனது சக்களத்திபோல் பாவித்து அவளையும் (பூமியையும்) பலபேர் ஆளவேண்டுமென்று சபித்ததாகவும் அதனாலேயே பூமிக்கு அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும் வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமாயிருக்கின்றது.

கந்தப்புராணமோ, மேல்கண்ட சிவன் 100 வருஷம் புணர்ந்த விஷயம் ஒன்றைத் தவிர மற்றவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளுகின்றது.

ஆகவே சுப்பிரமணியன் என்றும், சண்முகன் என்றும், கார்த்திகேயன் என்றும், ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேல்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உள்பட்டது என்பது வைணவப் புராணங்களிலும் சைவப் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

( தந்தை பெரியார் – ‘குடிஅரசு’ – 2.9.1928)

கருணாநிதி தன்னலம் மறுத்த தியாகி!

 

பெரியார் பேசுகிறார் : கருணாநிதி தன்னலம் மறுத்த தியாகி!

ஆகஸ்ட் 01-15 2019

தந்தை பெரியார்

 கருணாநிதி அவர்களுக்கு எதற்காக பிறந்த நாள் கொண்டாடுகிறோம்? பலர் பிறக்கிறார்கள்; சாகிறார்கள்; அவர்களுக் கெல்லாம் கொண்டாடுவதில்லையே என்று கருதலாம். பிறப்பதும் இறப்பதும் இயற்கை. பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றால், அவரால் நாட்டிற்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட காரியம் – அவர் தொண்டால் ஏற்பட்ட நன்மை – பலன், ஆட்சிப் பொறுப்பேற்றதும் செய்த நன்மைக்காக நன்றி செலுத்திக் கொண்டாடுகின்றோமே என்றாலும் இவருக்குக் கொண்டாடுவதில் மேலும் பல சிறப்புகள் இருக்கின்றன. இவருடைய தொண்டின் காரணமாக இன்று தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் நிலை அடைந்திருக்கிறது. கருணாநிதி அவர்கள் உண்மையிலேயே அரசியலில் ஈடுபட்டிருப்பவர். அவரைப் பார்த்து நடந்து கொள்ளும்படியாக அவர் தொண்டிருக்கிறது. என்னுடன் சேர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருந்தார். மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வார். பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் என்னோடு சேர்ந்து பல இன்னல்களையெல்லாம் ஏற்றார்.

மற்றவர்களால் செய்ய முடியாத – செய்யத் துணியாத காரியத்தை அவர் செய்திருக்கிறார் என்றால், தன் பதவியை விட்டு வெளியேறி பதவியை அளித்த ஸ்தாபனத்திற்கு தொண்டாற்றப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். யாரும் இதுபோல் துணிவாகச் சொல்ல மாட்டார்கள். மற்றவர்கள் சொன்னாலும் வேறு அதைவிட மேலான ஒன்றை அடைவதற்காகவே இருக்கும். பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கத்தான் விரும்புவார்களே தவிர, இவரைப் போல பொதுத் தொண்டு செய்வதற்காக அமைச்சர் பதவியை விட்டுப் போகிறேன் என்று எவரும் சொல்ல மாட்டார்கள். நாம் பதவிக்கு வந்தபின் கட்சிப் பணி செய்ய ஆளில்லாமல் போய்விட்டது. கட்சி தளர்ந்து விட்டது. அதை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பதவியை விட்டு கட்சிப் பணி செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். இதைப் பாராட்டுகிறேன்.

இவர் போனால் கொஞ்சம் கஷ்டம் தானே, அண்ணாவுக்குப் பக்க பலமாக இருந்தார் என்று நானும் கருதியவன்தான் என்றாலும், அவர் சொல்கிற காரணம் அதைவிட முக்கியமாக இருப்பதால் அவர் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. பதவியிலே போய் உட்கார்ந்து கொண்டதால் கட்சியைக் கவனிக்க யாரும் இல்லை. எதிரிகளின் பிரச்சாரம் மிகக் கேவலமாகப் போய் விட்டது. அதற்கெல்லாம் பதில் சொல்லி அவர்கள் பிரச்சாரத்தை முறியடித்து உண்மையை மக்களுக்கு உணர்த்தவேண்டும். அதோடு கட்சியிலே இருக்கிற தோழர்களையெல்லாம் சரிப்படுத்த வேண்டும். பலர் கட்சிக்குள்ளேயே மாறுபட்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சரி செய்ய வேண்டியிருக்கிறது.

காமராஜர் பதவியை விட்டுப் போனார்; அதன் மூலம் தொண்டு செய்ய வேண்டுமென்று கட்சித் தலைமையை ஏற்றுப் பாடுபட்டார்; அதன் பயனாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் பலமிழந்து செல்வாக்கற்றுப் போய் விட்டது; இவர் போவது அது போலல்ல. கட்சியின் செல்வாக்கைப் பெருக்கவே செல்கின்றார். அவர் செல்லாமலிருந்தால்தான் எதிரியாக இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் போகும். அதற்கெல்லாம் பயந்து இருந்துவிடக் கூடாது.  அது வீரனுக்கு அழகாகாது. இக்காரியத்தை அவர் செய்வது மூலம் இது சரித்திரத்திலேயே வரக்கூடிய காரியமாகும். அது மட்டுமல்ல; அவருக்குச் சிலை வைப்பதற்காக எல்லா காரியமும் முடிந்தும் சில பார்ப்பான்கள் எதிர்த்தான்கள் என்பதால் எனக்கு வேண்டாமென்று சொல்லிவிட்டார். அதுபோல் சொல்லக் கூடியவர் வேறு எவராவது இருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.

அமைச்சர் கருணாநிதி அவர்கள் பள்ளியை விட்டு வாலிபப் பருவத்திலேயே என்னோடு தொண்டு செய்ய வந்துவிட்டார். என்னை விட்டுப் பிரிந்ததும் புதிய கட்சியைத் துவக்க மிகவும் பாடுபட்டார்.

அந்தக் கட்சியானது இன்றைக்கு ஆளும் கட்சியாக இருப்பதற்கு அண்ணாவைப் போலவே, இவருக்கும் பெரும் பங்குண்டு. அண்ணா மட்டும் தனியாக இருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. அவர் ஒரு துறையில் தொண்டாற்றினார்; இவர் ஒரு துறையை எடுத்துக் கொண்டு தொண்டாற்றினார்.

இதையெல்லாம் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது; ஏனென்றால் இவர்கள் வெற்றியைப் பெறுகிற வரை இவர்களைக் கடுமையாக எதிர்த்தேன். இவர்கள் தோல்வியடைய வேண்டுமென்று தீவிரமாக வேலை செய்தேன். காரணம், இவர்கள் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு, பார்ப்பான் சொல்வதைத்தான் கேட்போம் என்றதால், இவர்கள் வந்தாலும் பார்ப்பான் தானே ஆளுவான் என்று எதிர்த்தோம். பார்ப்பான் நம்முடைய ஸ்தாபனத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்பதற்காக இவர்களை ஆதரித்தான்.

அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நாங்கள் எண்ணியது போல இல்லாமல் பார்ப்பனர்கள் எண்ணியதற்கு மாறாக நமக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகக் கூறியதோடு காரியமும் செய்ய ஆரம்பித்தனர்.

நீங்கள் பதவி இல்லாமல் பிரச்சாரம் செய்வதை, நாங்கள் பதவி மூலம் செய்கிறோம் என்று முன் வந்தார்கள். அவர்களை ஆதரிக்காமல் என்ன செய்வது? நமக்கு எப்படியோ காரியம் நடக்க வேண்டும். நாம் ஆதரிக்காமல் இருந்தால் அவர்கள் பார்ப்பானிடமே போய் விடுவார்கள். பிறகு நம் காரியம்தான் கெடும். பார்ப்பானே சொல்லிவிட்டானே தேர்தல்வரை தான் எங்கள் உறவு. நாங்கள் அவர்களை (திமுகவை) ஆதரித்ததே காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதற்குத்தான்; அதுபோல அவர்களும் பதவிக்காகத்தான் எங்களுடன் சேர்ந்திருந்தார்கள். இரண்டு பேரின் காரியமும் முடிந்து விட்டது. இனி அவரவர்கள் தங்கள் காரியத்தைப் பார்க்க வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டார்கள். இவர்களும் மந்திரி சபையில் ஒரு பார்ப்பானுக்குக்கூட இடம் கொடுக்கவில்லை. பதவியேற்கும்போது கடவுள் பெயரைச் சொல்லி பதவி ஏற்கவில்லை. இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்களின் ஆட்சியானது போய்விட்டால் நடக்க வேண்டிய காரியம் குறைந்துவிடுமே! இன்னும் சமுதாயத் துறையில் இவர்களைக் கொண்டு செய்ய நடக்க வேண்டிய காரியம் நிறைய இருக்கின்றது. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இவர்களும் மிகுந்த ஜாக்கிரதையாக – நாணயமாக – மக்களுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து வருகிறார்கள். ஒரு குறை சொல்கிற மாதிரி ஒருவர்கூட நடந்து கொள்ளவில்லை. கடவுள் மேல் நம்பிக்கையில்லாதவனுக்குத்தான் தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்கும். கடவுள் நம்பிக்கையுள்ளவனுக்கு தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்காது என்பதோடு, அவனால் எந்தக் காரியத்தையும் துணிவாகச் செய்யவும் முடியாது. இவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களானதால் துணிந்து காரியம் செய்கிறார்கள். சரித்திரத்திலேயே இதுபோன்ற பகுத்தறிவாளர் ஆட்சி – சுத்தத் தமிழர்கள் ஆட்சி ஏற்பட்டது கிடையாது. இதுதான் முதன்முதல் ஏற்பட்ட ஆட்சியாகும்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் இவ்வளவு பெருமளவு மக்களின் ஆதரவைப் பெற்று வந்திருப்பது நமக்கு பெரும் வெற்றியாகும். இவர்கள் வந்ததும் பல்லாண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான மக்களால் நடத்தப்பட்டு வந்தும் சட்டப் பூர்வமாகச் செல்லா தென்றிருந்த சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப் பூர்வமாக்கி இருக்கிறார்கள்.

முக்கியமாக – கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்ணாவுக்கு ஆதரவாக இருந்து தி.மு.க. பதவிக்கு வருவதற்காகப் பெரும் தொண்டாற்றி இருக்கிறார்.

கிடைத்தற்கரிய பதவி கிடைத்ததையும் பெரிது என்று கருதாமல் அதை விட்டு வெளியேறி கழகத் தொண்டு – பொதுத் தொண்டு செய்ய முன்வருவது பாராட்டுக்குரியதாகும்.

பதவி என்றால் சட்டென்று கழற்றி எறியக் கூடிய துணிவு இருப்பவர்கள்தான் பொதுத் தொண்டு செய்ய முடியும். அதைக் கருதி தனது பதவியை விட்டுவரும் இவரை ‘தன்னலமறுத்த தியாகி’ என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுக் கொள்வதற்காக பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இப்போது நடைபெறும் இந்த ஆட்சியானது உங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் ஆட்சியாகக் கருதி ஆதரிக்க வேண்டும். இது சுத்தமான தமிழனின் கடமையாகும். எதிர்ப்பவன் அரைப் பார்ப்பான் அரைத்தமிழனாகத் தானிருப்பான். தமிழன் என்கிற முறையில் தனித் தமிழன் ஆட்சியை எவனும் எதிர்க்க முன் வரமாட்டான். ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இப்பதவியின் மூலம் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று கருதுபவர்கள்; இதன்மூலம் இதில் ஒட்டிக் கொண்டு வயிறு வளர்க்க வேண்டுமென்று கருதுபவரல்ல. இது எனக்கு நன்றாய்த் தெரியும்.

(சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி 45ஆம் ஆண்டு பிறந்த நாள் (13.6.1968) விழாவில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து…)


திங்கள், 1 ஜூலை, 2024

விழாவும் நாமும் … தந்தை பெரியார் …

 

விழாவும் நாமும் … தந்தை பெரியார் …


 பெரியார் பேசுகிறார் ஜுலை1-15-2024

நம் நாட்டு விழாக்கள் இன்று பெரும்பாலும் அர்த்தமற்ற சடங்குகளாகவே இருந்து வருகின்றன. மேலும், இவைகள் பெரும்பாலும் எந்தக் காலத்திலோ, யாருடைய நன்மையைக் கருதியோ, யாராலோ, எதனாலோ ஏற்படுத்தப்பட்டவைகளாக இருக்கின்றனவே ஒழிய, பெரிதும் நம்முடைய முன்னேற்றத்திற்கு ஏற்றனவாக அமைந்திருக்கவில்லை. உதாரணமாக, ஒவ்வொரு விழாவும் மதச் சம்பந்தமானதாகவும், அவை பெரிதும் பார்ப்பான் மேன்மைக்கும் பிழைப்புக்கும் பயன்படத்தக்க ஒரே தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவுமே நாம் காண்கிறோம். அந்தந்த விழாவையொட்டிய சடங்குகளும் பெரும்பாலும் துவக்ககாலம் தொட்டு ஒரே மாதிரியாக இருந்து வருகின்றனவே யொழிய, நாளுக்கு நாள் எவ்வித முன்னேற்ற மாறுதலும் அடைந்து வரக் காணோம். மக்களுடைய அறிவு வளர்ச்சிக்கும், விழாச் சடங்குகளுக்கும் எவ்வித முன்னேற்ற மாறுதலும் அடைந்துவரக் காணோம். முன்பு விளக்கெண்ணெய் விளக்கு என்றால், இன்று காஸ்லைட், எலக்ட்ரிக் லைட்- இதுதான் மாறுதல்.

மேல்நாடுகளில் விழாக்கள்

நான் இதுபற்றிக் கவலை எடுத்துக்கொண்டு, மேல் நாடுகளில் நடக்கும் விழாக்களைப் பற்றியும், அவைகளின் முறைகளைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறேன். அவர்களது விழாக்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது புதிய படிப்பினை இருக்கும். முற்போக்கு உணர்ச்சிப் பெருக்கத்திற்கான வசதியிருக்கும்.

மற்ற நாடுகளில் இம்மாதிரியான விழா நாட்களைக் கண்காட்சி மாதிரி நடத்துவார்கள். அக்கண்காட்சிச் சாலைகளில் பல புதிய கற்பனைகள் மலிந்திருக்கும். வாழ்க்கை வசதிக்கான பல புதிய கண்டுபிடிப்புக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். சுருங்கக் கூறின், கலாசாலை சென்று பல ஆண்டுகள் படித்துப் பெறவேண்டிய அறிவு வளர்ச்சியை அவன் அந்தக் கண்காட்சி மூலம் ஒரு சிலமணி நேரத்திலேயே பெற்றுவிடுகிறான். கண்காட்சி மூலம் புதிய புதிய பொருள்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். தமது வாழ்க்கையையே பொதுமக்களின் நன்மைக்காக அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

விழாக் கண்டு நாம் பெற்ற பயன் என்ன?

அம்மாதிரி பொதுநல உணர்ச்சியே நம்மிடம் இருப்பதில்லை. நம் நாட்டிலும், பெரிய பெரிய பண்டிகைகளும் விழாக்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பழையபடி பல சாமான் கடைகளையும் பல சில்லறை வேடிக்கைகளையும்தான் பார்க்கிறோமே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை. “என்னப்பா விழாவில் விசேஷம்?” என்று கேட்டால், அவன் என்ன கூறுவான்? நிறையக் கூட்டம் இருந்தது; அலங்காரம் அழகாயிருந்தது; கூட்டத்தில் பலர் நசுக்கப்பட்டார்கள்; புதுவாத்தியக்காரன் நன்றாக வாசித்தான்; வாத்தியத்திற்கு மட்டும் ஆயிரம் ரூபாயாம்” என்று இப்படித்தான் கூறுவார்களே அல்லாது, இந்த விழாவுக்குச் சென்றதால் நான் இன்ன பலன் பெற்றேன். அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட ஆகாய விமானத்தையும், அரைமணி நேரத்திற்குள் 50 கஜம் ஆடை நெய்யும் அதிசயக் கருவியையும் கண்டேன்” என்று கூறமாட்டானல்லவா?

அழகிய அலங்காரத்தாலும், அற்புத வாத்தியத்தாலும் அவனுக்கு ஏதாவது பயன் உண்டா? நம் பெருமை எல்லாம், “நான் ஒரு வருஷத்தில் புரட்டாசி சனிக்கிழமை கூட திருப்பதி செல்லத் தவறியதில்லை.” “ஒரு வருட மேனும் திருவண்ணாமலைத் தீபச் சேவைக்குச் செல்லாமல் இருந்தது இல்லை” என்பதோடு அடங்கிவிடுகிறதேயல்லாது வேறு என்ன இருக்கிறது நாம் பெருமைப்பட? பாடுபட்டுத் தேடிய பணத்தை ரயில்வேக்காரருக்கும், பார்ப்பன அர்ச்சகர், ஓட்டல்காரர் முதலியோருக்கும் அழுவதைத் தவிர, வேறு என்ன பயன் கண்டோம்? தலைமுறை தலைமுறையாக நமது சமுதாய வாழ்க்கை முறை ஒரே அளவில்தானே இருந்து வருகிறது?

“ஒவ்வொரு விழாவும்
மதச் சம்பந்தமானதாகவும்,
அவை பெரிதும்
பார்ப்பான் மேன்மைக்கும்
பிழைப்புக்கும்
பயன்படத்தக்க ஒரே
தத்துவத்தை அடிப்படையாக
வைத்து ஏற்பாடு
செய்யப்பட்டிருப்பதாகவுமே
நாம் காண்கிறோம்”. 

மனிதனும் மிருகமும்

மனிதன் ஒரு காரியத்தை எப்போதும் ஒரே மாதிரி செய்துகொண்டு வருபவன் அல்லவே! மனிதன் பகுத்தறிவு சிந்தனை உடையவனாதலால், அவன் ஓர் வளர்ச்சிப் பிராணி. அதனால்தானே அவன் மிருகங்களுக்கு மாறுபட்டவனாக இருக்கிறான். இருந்தும், நாம் எத்தகைய முன்னேற்றமும் அடையாமல் இருக்கக் காரணம் என்ன? நமது அறிவு வளர்ச்சி, அத்தகைய துறைகளில் செல்லாமல் தடைபடுத்தப்பட்டிருப்பதே காரணமாகும்.
மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கச் சிந்திக்க அவனுடைய ஆசாபாசங்களும் வளர்ச்சி அடைகிறது. அதற்கேற்ப அவனது முயற்சியும் வலுக்கிறது. வெற்றியும் பெறுகிறான். இதற்கு அடிப்படைச் சிந்தனையும், அறிவும்தான் காரணம். Progress என்பதும், வளர்ச்சி என்பதும், பரிணாம முன்னேற்றம் என்பதும் இதுதான். எனவே, அறிவுக்கு நாம் சுதந்திரம் கொடுத்தாக வேண்டும். அந்தப் போக்கில் நம்முடைய விழாக்கள் இருக்கவேண்டும்.

( நூல் ஆதாரம் : 1974இல்  பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடான ‘நவமணிகள்’ எனும் நூல் )

தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி

 


பெரியார் பேசுகிறார் ஜுன் 16-30 2024

“ஆதிதிராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
உங்களுக்குள் சிலர் ராவ்பகதூர்களாயும், ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயும் இருக்கலாம்.

மற்றும் உள்ளூர் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எல்லாவற்றிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையேயாகும்.

ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக்கூடாதென்கிறார்கள். இப்பொழுது ஒரு சில இடங்களில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்றால், அது அரசாங்கத்தாரின் சட்ட பலத்தைக் கொண்டு. ஆனால், பொதுவாகத் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படுகிறார்களா என்பதையும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதை ஆதரிக்கிறார்களா என்பதையும் இது சமயம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆம், ஆதிதிராவிடர்களும் இந்துக்கள்தாமென ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின்வாங்குவதில்லை. பிறவியில் மிருகமாய்ப் பிறந்தும் ஜாதியில் நாய்

என்றழைக்கப்படுவதுமான, மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் வீட்டுக்குள் தாராளமாக விட்டுவிடும்போது, ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக்கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் ஒரு முனிசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும்விட மறுக்கப்படுவது என்ன கொடுமை?

இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய்ப் பிறந்துவிட்டார்கள். அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரம் இப்படிச் சொல்லுகிறது. வேதத்தின் கர்மகாண்டங்கள் அப்படிச் சொல்லுகின்றன என்று சாஸ்திரக் குப்பைகளின் மீது பழியைப் போடுவதோடு மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதரவாக்கிக் கொள்ளுகின்றார்கள்.

இவ்வாறு மதத்தின் பேராலும், சமய நூல்கள், சாஸ்திரங்கள், புராணங்களின் பேராலும் செய்யப்படும் கொடுமைகளுக்கு அளவில்லை.

ஆயிரக்கணக்கான வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திரப் புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமூகம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆதிதிராவிடர்களாகிய உங்களைவிட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப்படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை.

உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டுமென்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப்பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்களென்ற இழிபெயர்களும் இட்டழைக்கிறார்கள்.

இக்கேவலச் செயல்களுக்குக் கடவுளால் எழுதிவைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரம் என்கிறார்கள்.
நம் மக்களுக்குள் அநேகர் எவர் எப்படிச் செய்தாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக்கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்ப்போமென்று இழிவுக்கு இடங்கொடுத்துக் கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்கம் ஏற்படாது என்பது திண்ணம், கேளுங்கள்!

ஜாதிக் கொடுமைகளை ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.

உலகத்தில் அவன் உயர்ந்தவன்; இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக்கொண்டு, ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி, சமூக முன்னேற்றத்துக்கும் விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர, புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக்காரர்கள் தயாராகயிருக்கிறோம்.

கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும், கடவுளையும் ஒழிப்பதற்குப் பயந்தோமானால் நாம் நிரந்தரமாய் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்கு உட்பட்டுக் கேவலமாகத் தான் இருந்தாக வேண்டும்.

சம உரிமையில்லாது இருப்பதைவிட சாவதே மேலென்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாய் இருக்கமுடியாது. அதற்குத் தடையாயிருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கறையில்லை.

ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க நம் பெரியோர்கள் எவ்வளவோ பாடுபட்டு வந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கபிலர் காலத்திலும், திருவள்ளுவர் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஜாதியில்லை.
ஒழுக்கத்தினால்தான் உயர்வு தாழ்வு என்று எவ்வளவோ வற்புறுத்தப்பட்டு வந்தும் ஜாதிக் கொடுமைப் பேய்கள் ஒழிந்தபாடில்லை.

நம் பெரியார்கள் சொல்லியவை ஆயிரக்கணக்காகப் பிறரால் வாயளவில் பாராயணம் செய்யப்படுகின்றனவேயன்றி செய்கையில் அதனால் ஒரு பலனும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை.

இன்றைக்கும் ஜாதிக் கொடுமையினால் இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப்பட்டுவிடும். அவன் அந்தத் தெருவில் போனால் சாமி செத்துவிடுமென்ற அநியாயங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன.
இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கும் ஜாதி வித்தியாசம் இழிவுக்கு உட்பட்டு கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சமடைவதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானமென்று சொல்லுவேன்.

ஜாதிக் கொடுமையை ஒழித்து இங்கு சமத்துவத்தைக் கொடுக்காத சாமி அங்கு மோட்சத்தையும், ரம்பை, ஊர்வசி நடனத்தையும், தங்க மெத்தையையும், சுகபோகத்தையும் கொடுக்கிறதென்றும் அதை நம்புகிறவன் மடையனா என்று கேட்கிறேன்.

நம்முடைய உதவி வேண்டும்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நமது சுதந்திரத்தையும் உரிமையையும், கேட்டால் சாமி செத்துப் போகுமென்பதும் என்ன அயோக்கியத்தனமென்றுதான் கேட்கிறேன்.

தீண்டப்படாதார், தாழ்ந்தவர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டுத் துன்புறும் மக்களுக்கும் உயர்ந்த ஜாதியார் கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் குணத்தினாலும், உருவத்தினாலும், அறிவினாலும் ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா என்று கேட்கிறேன்.

இவ்வாறிருக்க, மக்களின் பெரும்பான்மையோரை ஜாதிக் கொடுமைகளுக்கும் இழிவுக்கும் உட்படுத்திவைக்க மதப் புரட்டுகளும், புராணப் புரட்டுகளும்தான் ஆதாரமாக இருக்கின்றன.

மக்கள் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாயிருக்கும் இந்த இந்து மதத்தையும் புராணங்களையும் ஒழிக்காமல் பின் என்ன செய்வது என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.”
சென்னை – ராயபுரத்தில் வாசகசாலை திறப்பு விழாவில்
ஈ.வெ.ரா. சொற்பொழிவு – (‘குடிஅரசு’ 06-01-1945)

பிறப்புரிமை சுயராஜ்யமா ? சுயமரியாதையா ?

 

பிறப்புரிமை சுயராஜ்யமா ? சுயமரியாதையா ? – … தந்தை பெரியார் …

2024 பெரியார் பேசுகிறார் மே16-31,2024

நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும் தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தியும் அடிமைப்படுத்தியும் கொடுமை செய்து வருவதன் பலனாய், அந்நிய அரசாங்கத்தின் கீழ் ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழிய வேண்டுமானால் நாம் பிறரைச் செய்யும் துன்பம் ஒழிய வேண்டும். அந்நிய அரசாங்கத்தார் நம்மைச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, நம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும் நம்மைக் கொண்டு மற்றவர்களைச் செய்யச் செய்யும் கொடுமையையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப் பார்த்தால் அரசாங்கத்தின் கொடுமையை விட நம்மவர்களின் கொடுமையே பெரிய பளுவானதாயிருக்கும்.

நமது நாட்டில் சில வேஷக்காரர்கள் சுயராஜ்யம் என்கிற பதமும், சுதந்திரம் என்கிற பதமும், உரிமை என்கிற பதமும், வாழ்க்கையை உத்தேசித்து வாயளவில் பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில் அழுக்குப்படாமல் காலங்கழிக்கப் பார்க்கின்றார்களேயல்லாமல், அதற்காகச் செய்ய வேண்டிய காரியங்களில் தங்களுக்குச் செய்ய யோக்கியதை இல்லாவிட்டாலும் வேறு யாராவது செய்தாலும் தங்களுக்கு யோக்கியதை குறைந்து போகுமே யென்கிற பயத்தால் அதற்கு வேண்டிய முட்டுக்கட்டைகளைப் போட்டு தாங்களே முன்னணியிலிருக்க வேண்டிய மாதிரியில் ராஜீயவாதிகளென்னும் பேரால் வாழ்ந்து வருகின்றார்கள். நமது நாட்டுக்கு முக்கியமாக வேண்டியது சுயராஜ்யமா?

சுயமரியாதையா?

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அநேகர், சுயராஜ்யம் இன்னதென்பதைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொன்னவர்களல்ல. அதை ஜனங்கள் அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள்.
மகாத்மா காந்தி அவர்கள் சுமார் அய்ந்து வருஷங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருந்த சமயம் ஓர் கூட்டத்தில் பேசும்போது, “என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கியதை இல்லாமல் இருக்குமானால், நான் சுயராஜ்யத்தை விரும்புவதில் அர்த்தமே இல்லை”யென்று சொல்லியிருக்கிறார். மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதுதான் பிறப்புரிமையே யல்லாமல், அரசியலான ராஜீயமென்னும் சுயராஜ்யம் ஒருக்காலும் பிறப்புரிமை ஆகமாட்டாது. ராஜீய பாரமானது ஒரு தொண்டு. வீதி கூட்டுவதும், விளக்கு போடுவதும், காவல் காப்பதும் எப்படி சேவையாயிருக்கின்றதோ, அதுபோலவே, ராஜீய பாரமென்பதும் ஒரு சேவைதான். தேசத்தில் அவனவனது வாழ்க்கைக்கும் அல்லது பொது நன்மைக்கும் எப்படிப் பல தொழில்கள் இருக்கின்றனவோ, அதுபோல ராஜீய பாரமென்பதும் ஒரு தொழில்தான். இத்தொழிலை இன்னார்தான் செய்ய வேண்டுமென்றாவது, இன்னார்க்குத் தான் உரிமை என்றாவது ‘கடவுள் என்பவரால்’ யாருக்கும் பிரித்துக் கொடுக்கப்படவே இல்லை.

மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் ஊமை, கூன், குருடு, செவிடு உட்பட இதற்கு அருகர்கள் தான். ஆதலால், இவ்வுரிமையை எல்லோரும் சமமாய் அடைய வேண்டியதுதான். ஆனபோதிலும், மனித ஜென்மத்திற்கு இக்கேவல ஆட்சி பிறப்புரிமை என்று சொல்ல முடியாது. மனிதனுக்கு உண்மையான பிறப்புரிமை என்று சொல்வது அவனது சுயமரியாதையும் பரோபகார மென்பதுமேதான்.

சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும் கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதை அற்றவனைப் பிணமென்று தான் சொல்லவேண்டும். அப்படிப் பார்க்கின்றபோது நமது தேசத்தில் சுயமரியாதை அற்று பூச்சி புழுக்கள் போலும், நாய்கள் பன்றிகள் போலும், பிசாசுகள் அரக்கர்கள் போலும் வாழும் ஜனங்கள் கோடிக்கணக்காய் இருக்கின்றனர். லட்சக்கணக்காய் தினம் பிறக்கின்றனர். இச்சமூகத்திற்குச் சுயராஜ்யம் எதற்கு?
உதாரணமாக, மனித உடல் தாங்கிய ஒருவன் அவனுடைய தெய்வத்தைக் காண, தரிசிக்க உரிமையற்ற ஒருவன் எப்படி சுயமரியாதையுள்ளவனாவான்? அந்தச் சமூகத்திற்குச் சுயராஜ்யம் எதற்கு? எந்த ராஜ்யமிருந்தால்தான் அவர்களுக்குக் கவலையென்ன? இம்மாதிரி ஒரு சமூகத்தாரைச் சுயமரியாதை அற்று ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு ராட்சச சமூகத்தார் சுயராஜ்யமடைவது மற்ற சமூகங்களுக்கு நன்மையைத் தருமா? அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும் சேர்ந்துதான் சுயராஜ்யம் தேடுவது என்று சொல்லுவோமானால் அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும், தரிசிக்கவும் முடியாத படியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாத படியும்வைத்து இருப்பதற்கு காரணம் சுயராஜ்யம் இல்லாமைதானா? அந்நிய ராஜ்யம் நமது ஜனங்களை இம்மாதிரி கொடுமையாக நடத்தும்படி நமக்குச் சொல்லவேயில்லை.

எந்தக் காரணத்தைக் கொண்டோ அந்நிய ராஜீய பாரங்கள் நமது நாட்டிற்கு ஏற்படாமலிருக்குமேயானால், இந்தச் சுயமரியாதை இன்னதென்று உணர்வதற்குக் கூட நமக்குச் சவுகரியம் கிடைத்திருக்காது. நமது நாட்டு மக்களின் சுயமரியாதைக்கு விரோதமாயிருப்பது, நம் நாட்டார் சிலரின் ஆதிக்கத்தினாலேயல்லாமல், அந்நிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தினாலல்ல. ஆனால், நமது நாட்டில் பெரும்பாலோர் சுயமரியாதை அற்றிருக்கும் தன்மை அந்நிய அரசாங்கத்தாருக்கு அனுகூலமாயிருப்பதனால் இக்கொடுமைகளைப் போக்க அவர்களுக்கு அதிகக் கவலையில்லை.

ஆனபோதிலும், அவர்களுடைய தத்துவம் ஒரு நாளும் இவ்வித சுயமரியாதைக் கேடுக்கு அனுகூலமாய் இருப்பதில்லை. ஒரு தேசம் சுதந்திரமடைய வேண்டும் என்று உண்மையான கவலை இருக்குமானால், அக்கவலைக்கு அவர்கள் அருகர்களா? அவர்கள் சுயமரியாதை உள்ளவர்களா? இல்லையா வென்பதிலிருந்துதான் அவர்களுடைய அருகதை வெளிப்படும். அஃதில்லாமல் சுதந்திரத்திற்காகச் செய்யப்படும் எவ்வித முயற்சிகளும் தனிப்பட்டவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்க்கை நலத்திற்கும், சுயமரியாதை இல்லாத நிலைமையைப் பலப்படுத்தவும் தான் ஆகுமேயல்லாமல் வேறொன்றுக்கும் உதவாது. அதை உத்தேசித்தேதான் மகாத்மா காந்தியும், சுதந்திரம் பெறுவதற்காக ஏற்பட்ட திட்டங்களே சுயமரியாதை அடைவதற்கான திட்டங்களாகப் போட்டுவிட்டார்.

தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதும் கதர் அணிய வேண்டும் என்று சொல்லுவதும் நம் நாட்டு மக்களின் சுயமரியாதையின் ஜீவ நாடிகள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தெருவில் நடக்கவும், பக்கத்தில் வரவும், கண்ணில் தென்படவும், அவனது தெய்வத்தைக் கண்டு தரிசிக்கவும் முடியாமற்படி வைத்திருக்கிற வரையில் சுயமரியாதை இல்லையென்றும், அப்படிப்பட்டவனுக்கு சக சுதந்திரமென்பது அர்த்தமில்லாத வார்த்தை என்றும், ஒரு மனிதன் தன் உடலில் போதிய சக்தியிருந்தாலும், ஜீவனத்துக்கு வேண்டிய அளவு தொழிலில்லாமல் வைத்திருப்பதனால், அவன் எந்த விதத்திலும் சுயமரியாதையோடு வாழ முடியாதென்றும், ஜீவனத்திற்காக எப்படியாவது தன்னுடைய சுயமரியாதையை இழக்கத்தான் நேரிடுமென்றும் கருதியே, பெரும்பான்மையான ஏழைகளுக்கு ஜீவனோபாயத்திற்கு ஆதாரமான கதரையும் வற்புறுத்தி வந்தார். மற்றவர்களை அடிமைப்படுத்தி வைப்பதனாலேயே வாழ முடியும் என்கிற நிலைமையடைந்து நமது நாட்டில் உள்ள ஒரு சமூகத்தார், இத்திட்டத்தை அடியோடு ஒழிக்க பழையபடி தங்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ளத்தகுந்த மாதிரியில் ஜெயம் பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் ‘சுதந்திரம்’ ‘சுயராஜ்யம்’ ‘உரிமை’ என்கிற வார்த்தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும் கொடுமைக்கும், ஆதாரமானதுதான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடைய
பாடுபட வேண்டுமானால் மக்களின் சுயமரியாதைக் காகத்தான் முதலில் பாடுபட வேண்டும்.

-_ -‘குடிஅரசு’- _ தலையங்கம் 24.01.1926